• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தழலில் தகர்ந்த நீதி

Balaji

✍️
Writer
அந்த அரங்கம் முழுவதும் கைதட்டல்கள் எழ மேடையில் பேச வந்தாள் மஹிமா,தேசிய பெண்கள் நலகூட்டமைப்பின் செயலாளர், அனைவருக்கும் தன் வணக்கத்தை கூறியவள் இன்று அந்த மேடையில் பேசுபொருளான சமூக மாற்றம் குறித்து தனது கருத்தை கூற ஒரு சிறிய கதையை கூறினாள்.

அந்த பகலவனின் வெளிச்சம் உலகெங்கும் இருளை நீக்கி ஒளியை பரப்ப, இருண்டு போன மனித மனம் அதில் ஞான ஒளியை கொடுக்க தான் ஆள் இல்லாமல் போயிற்று.

கூட்டம் பெரிதும் இல்லாத அந்த பேருந்தின் இடப்பக்கம் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள்.தன் ஊரை பத்து வருடம் கிட்ட தட்ட
கழித்து பார்க்க வரும் பெண்ணவள்.

தன் நாடும் ஊரும் பெரிதும் மாறிவிட்டதை அவள் செல்லும் அந்த பாதையில் இருக்கும் பெரிய கட்டிடங்களே அவளுக்கு உணர்த்தியது.

தன் இணையவன் அருகில் அமர்ந்திருக்க அவளின் இந்த குழந்தை தனமான ஏக்கத்தை பார்த்து அவனும் ரசித்து கொண்டே வந்தான்.
அவளோ அவனை கவனியாது அந்த வெயிலிலும் குளிர்ந்த காற்றை தரும் அந்த வயல்களையும் நதியையும் அந்த சாளரம் வழியே கண்டவாறே வந்தாள்.

ஆனால் இங்கு அவள் ஊரிலோ நிகழ்வது வேறாக இருந்தது.
நதியில் பெரியதாக நீர் இல்லை.செயற்கையான இயற்கையையே சூடியிருந்தது அந்த சின்ன கிராமம்.

எப்போதும் அந்த ஊரில் என்றும் அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து தீர்ப்பு வழங்கும் அந்த நீதிமான் இன்றும் அதே போல் தன்னிடம் வந்த பிரச்சனைக்கு இரண்டு குடும்பங்கள் தரப்பிலும் கூற பட்ட நியாயத்தை கேட்டு விட்டு தீர்ப்பு வழங்கினார்.

அதன் பின் ஊரில் உள்ள அனைத்து கிராம மக்களும் இங்கு எதுவுமே நடக்காதது போன்று தங்கள் அன்றாட வேலையை கவனிக்க சென்றனர்.
இங்கோ தன் வாழ்வில் எத்தனை ஏமாற்றங்கள் கொடுமைகள் அநீதிகள் நிகழ்ந்தாலும் தன் இரு குழந்தைகளின் நலன் தான் வாழ்க்கை என்று எண்ணிய தாய் அவளோ எதுவுமே நடக்காதது போன்று தன் அன்றாட வேலைகளை தொடர்ந்தாள்.

தவறு செய்தவர் மட்டும் தண்டனைக்கு உரியவர் இல்லை தன் கண்ணுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டி கேற்க துணியாதவரும் தண்டனைக்கு உரியவர் தான்.அந்த அநீதி தனக்கே நடக்கும் பொழுது கூட அமைதி காத்தாள் சீமா அதனாலே தன் முடிவு நிகழும் என்று அறியாதவளாய்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு.....

கல்லூரி படிப்பை முடித்த கையோடு சீமாவிற்கு திருமணம் செய்துவிட முடிவு செய்தனர் அவள் பெற்றோர்.இவ்வளவு விரைவாக தன் பெண்ணின் திருமணத்தை நடத்த காரணம் சீமாவின் அக்கா மஹிமா அவள் வாழ்க்கைக்காக அவள் எடுத்த முடிவு தான்.

அந்த திருமண மேடையில் தன் திருமணம் நிகழ போவதை எண்ணி புன்னகை அரும்பிய பாவை அவள்,தன் மன்னவன் அவன் தான் தன் தலைவன் அவன் தான் ஏன் தன் வாழ்க்கையே அவன் தான் என்று முடிவுக்கு வந்தவளாய் அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் ஐயர் மந்திரங்களைக் கூறிக் கொண்டிருக்க இவளும் அதை அவரோடு சேர்ந்து உச்சரித்தாலும் மனமோ அவன் புறமே இருந்தது.

இங்கோ அவள் பெற்றோர்களோ தங்கள் மூத்த மகள் போல் அன்றி தங்களுடைய இளைய மகளின் கல்யாணம் தங்கள் விருப்பப்படியே உறவுகள் சூழ நடைபெறுவதை நினைத்து உவகை கொண்டனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரிடமும் மங்கள நாணை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வந்து ஐயரிடம் தாம்பூலத்தை கொடுக்க அதை வாங்கியவர் மணமகனிடம் அதை கொடுத்து மணமகளுக்கு அணிவிக்க சொன்னார்.

அனைவரும் அவர்களை ஆசீர்வதிக்க அக்ஷதையோடு எழுந்திருக்க மாப்பிள்ளையின் தாய் மீனா "ஒரு நிமிஷம் பொறுங்க ஐயரே,எனக்கு இருக்கிற ஒரு மனக்குறையை நான் தீர்த்ததுக்கு அப்ரோம் இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தலாம்....." என்று கூறி நின்றவரை பார்த்து சீமாவின் தாய் தந்தையர் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.அங்கே மண்டபத்தில் வீற்றிருந்த அனைவரது நிலையும் அதுவே.

சீமாவின் தந்தை இந்திரன் மீனாவை பார்த்து "என்னம்மா ஆச்சு..... இப்போ உங்களுக்கு மனக்குறை வர அளவுக்கு என்ன நடந்துச்சு நாங்க எதுவும் தப்பா செய்யலையே செய்ய வேண்டிய முறையெல்லாம் கூட சரியா தானே செய்தோம்....."என்று அவர் கேற்க
மீனாவோ"என்ன எல்லாம் சரியா செய்தய்யா நீ.......நான் ஒத்த ஆளா இருக்கவே என்னைய ஏமாத்திட்டு போயிடலாம் பார்த்தியா யா நீ......நீ கொடுக்க வேண்டிய நகை சீரு லாம் கிடக்குது ஆனா இந்த கல்யாணம் நடக்குறதுக்கு நீ எங்களுக்கு கொடுக்கிறேன் சொன்ன இருபத்து ஐந்து லட்ச ரூபா பணம் என்னய்யா ஆச்சு..... அதை கொடுக்காம அப்படியே நீ மட்டும் உன் பொண்ணை என் பையனோட தலையில கட்டிட்டு போயிடலாம் பார்க்கிறியா.....உன் பொண்ணை என் பையன் கல்யாணம் செய்துகிட்டா ஆயுசுக்கும் அவன் தானே அவளை பார்த்துக்கணும்......அதுக்காகவாச்சு நீ இந்த பணத்தை சரியா கொடுத்திருக்க வேணாமா......"என்று கூறி அங்கே சீமா குழுமியிருந்த அவர்களது உறவினர்கள் அனைவரது தலையிலும் இடியை இறக்கினார்.ஆனால் சீமாவின் மனநிலையும் அங்கே குழுமி இருந்த உறவினர்களின் மனநிலையும் வேறாக இருந்தது.

சீமாவிற்கோ தன் வாழ்க்கை என்று நினைத்திருந்த அவன் தன் தாய் கூறிய வார்த்தையை ஏற்று இன்னமும் அந்த வெற்று பணத்திற்காக தன் கழுத்தில் தாலி கட்டாமல் இருப்பதை பார்த்ததும் அவள் வாழ்க்கை மீது அவளுக்கே பயம் வந்தது.

ஆனால் சீமாவின் உறவினர்களோ மீனா கூறியதை கேட்டு இந்திரனிடம் "ஏன்யா இந்திரா என்னய்யா இது பொண்ணு கட்டிக்கொடுக்கிற முன்னாடி இதெல்லாம் சரியா செய்திருக்க வேணாமா.....இவ்வளவு காசு கொடுக்கிறேன் வாக்கு கொடுத்தா அதை கல்யாணத்துக்கு முன்னாடியே கொடுக்கிறது தானையா கவுரவம்..... இப்படி கல்யாணத்துல தாலி கட்டுற சமயத்துல இப்படி கல்யானத்தை பையன் வீட்டுல தடுக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே யா.......சீக்கிரம் இதை பேசி சரி பண்ணுயா இது உன் பொண்ணு வாழ்க்கை இன்னைக்கு மட்டும் இவங்க கல்யணத்தை நிறுத்திட்டா உன் பொண்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க வர மாட்டாங்க......தோ உட்கார்ந்திருக்கானே அந்த பையன் மனசு வைத்தா மட்டும் தான் உன் பொண்ணு நல்லா வாழ முடியும்......அதுக்கு நீ இவங்க கேற்க்குறதை செய்து தான் ஆகனும்யா......"என்று உறவினர்களுக்கே உரியதான அதிபுத்திசாலித்தனத்தோடு அறிவுரை என்ற பெயரில் அதே இருண்ட எண்ணத்தை அவர் மனதிலும் விதைத்தனர்.

இத்தனை நாள் ஊர் சொல்வதே சரி என்று வாழ்ந்த அவருக்கு இது மட்டும் தவறாக தெரியுமா என்ன?அவர்கள் சொல்வதை ஏற்று மணமகன் சந்திரனின் தாய் மீனாவிடம் பணத்தை ஐந்து மாதத்தில் தந்து விடுவதாக அவகாசத்தோடு உறுதி அளித்தார்.

மீனாவும் அதன் பின் கல்யாணத்தை நடத்த அனுமதிக்க தாயின் சொல் மீறா மணமகன் சந்திரனோ சீமாவின் கழுத்தில் அந்த தாலியை கட்டி அவளை தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான்.

இவ்வளவு நடந்திருக்க அந்த ஊர் மக்களுக்கும் இங்கே மீனா செய்வது தவறு என்று புரியவில்லை மாறாக அது நியாயம் என்று நம்பினர்.அங்கு இருந்த சந்திரனுக்கு கூட தன் தாய் கேட்டது தவறாக தெரியவில்லை.

சீமாவின் பெற்றோர் கூட அவர் கேட்பதை தர முடியவில்லை என்று வருந்தினார்களே தவிர அவர் கேட்டது தவறு என்று எண்ணவில்லை.

இவ்வளவு ஏன் சீமாவே இவை யாவும் தவறு என்று தெரிந்தால் கூட தன் பெற்றோர் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதுவுமே பேசாமல் தன் வாழ்க்கை போக போக சரியாகிவிடும் என்ற சிறிய நம்பிக்கையோடு சந்திரனை தன் கணவனாக ஏற்றாள்.

இதன் விளைவோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போலவே அவள் வாழ்க்கையும் மாறியது.

திருமணம் ஆன சிறிது நாள் வாழ்க்கை நன்றாகவே போனது சந்திரன் கூட அவளிடத்தில் இனிமையாக கனிவாக நடந்து கொள்ளாவிடினும் அவளை எந்த விஷயத்திற்கும் துன்புறித்தியது இல்லை.

சீமாவின் பெற்றோர்கள் கூட ஐந்து மாதத்தில் ஐந்து லட்ச ரூபாய் வரதட்சனையை கொடுத்து விட மீதியை கொடுக்க மீனாவிடம் அவகாசம் வேண்டினர்.

அவரும் இப்போதைக்கு கிடைத்ததை வைத்து கொள்வோம் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எண்ணியவர் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு சீமாவும் கருவுற்று இருப்பது தெரியவர வீடே விழாக்கோலம் பூண்டது.சீமாவே தங்கள் குடும்பத்திற்கு ராஜகுமாரனை கொடுக்க போவதாக எண்ணிய மீனாவும் சந்திரனும் அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் ராணி போல் பார்த்துக்கொண்டனர்.ஆனால் அது கூட நிலைக்கவில்லை பத்து மாதங்கள் கழித்து சீமாவிற்கு பிரசவம் நடக்க அவளுக்கு பிறந்தது பெண் குழந்தையே.இதனால் மீனாவிற்கும் சந்திரனிற்கும் பெரும் ஏமாற்றம்.

இதன் பிறகு சந்திரன் வெறுப்போடே சீமாவிடமும் அவனுடைய குழந்தையிடமும் நடந்துக்கொள்ள சீமாவின் பெற்றோர் அவர்களின் மகள் இங்கே இருப்பதற்கான பணத்தின் அடுத்த தவனையாக நினைத்து மேலும் ஐந்து லட்சத்தை கொடுத்து விட்டு செல்ல மீண்டும் அவளிடம் சற்று கருணை பிறந்தது.

பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவள் கருவுற்றாள்.

இம்முறை கண்டிப்பாக தங்கள் வம்சத்தை தழைவிக்க ஆண் குழந்தையே பிறக்கும் என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றம் தர சீமாவிற்கு இம்முறையும் பிறந்தது என்னமோ பெண் குழந்தையே.
மீனாவும் சந்திரனும் சீமாவையும் அந்த இரண்டு குழந்தைகளையும் முழுவதுமாக வெறுப்பது மட்டும் அன்றி அவளை கொடுமை படுத்தவும் ஆரம்பித்தனர்.

இத்தோடு சீமாவின் பெற்றோரும் கூறியிருந்த இருபத்தைந்து லட்சத்தில் மேலும் பதினைந்து லட்சத்தை கொடுக்க முடியா சூழ்நிலை உருவானதால் அவளால் கிடைக்கும் பணத்தால் அவள் மேல் இருந்த சிறு கருணையும் போயிற்று.

இதற்கு மேல் இவளால் எந்த பயனும் இல்லை என்று அவளை காலாவதியான பழைய பொருளாக எண்ணி ஒதுக்கிய மீனா தன் மகனுக்கு அந்த ஊரிலையே இன்னொரு பெண்ணை பார்த்து சந்திரனுக்கு திருட்டு தனமாக மனம் முடித்து வைத்தார்.

இது நாள் வரை தன் பெற்றோருக்காகவே இந்த கொடுமைகளை சகித்து கொண்டிருந்த சீமாவிற்கு இது தெரிய வர மனமுடைந்து போனவள் கோபம் கொண்டு தன் பெற்றோரிடம் இதை சொன்னாள் அவர்களே தன்னை ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தோடு அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள்.

ஆனால் அங்கோ இந்திரனும் அவளுடைய அம்மாவும் புகுந்த வீட்டை விட்டு வந்த பெண்ணை யாருமே மதிக்க மாட்டார்கள் அவன் இரண்டாவது முறையாக வேறொரு பெண்ணை மணம் புரிந்தது தவறு என்றாலும் அவன் ஆண் அவனை இந்த ஊர் ஒன்னும் சொல்லாது என்றும் கூறியவர்கள் உன்னை எங்களாலும் வைத்து கொள்ள முடியாது உன் வாழ்க்கை அவனை நம்பி மட்டுமே உள்ளது உனக்காக இல்லாவிடினும் உன் குழந்தைகளுக்காகவாவது நீ அங்கே இருந்து தான் ஆக வேண்டும் என்றனர்.

அவளோ அனைத்தும் இருண்டு போய் தன் வாழ்க்கை எங்கு போகிறது என்று தெரியாமல் அந்த இரு குழந்தைகளை தன் கையில் ஏந்தியபடி நடந்தவள்.சிறிது நேரம் சிந்தித்த பின் தன் பெற்றோர் சொல்வதே சரி என்ற முடிவிற்கு வந்தாள்.

மீண்டும் அவன் வீட்டிலையே என்ன கொடுமை நடந்தாலும் குழந்தைகளுக்காக என்று எண்ணிக்கொண்டு அங்கே சென்றிருக்க அங்கே அவன் புதிதாக மணமுடித்து வந்த ஷீலாவோ இவளை கொடுமை படுத்தி இவளையும் இவளின் குழந்தைகளையும் இவ்வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டாள்.ஏற்கனவே அவள் மீதும் குழந்தைகள் மீதும் வெறுப்பில் இருக்கும் சந்திரனிடமும் மீனாவிடமும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல மேலும் அவளை பற்றி தவறாக கூறியும் அவள் பெற்றோர் கொடுக்க வேண்டிய வரதட்சணை பற்றியும் கூறியே அவளை இவ்வீட்டை விட்டு துரத்த அடிமேல் அடிவைத்தாள் ஷீலா.

இன்று.....

அதுபோலவே இந்த வரதட்சணை கொடுக்காமல் இருப்பதையே பிரச்சனையாக பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்த சந்திரனும் மீனாவும் அவர்கள் தரப்பினருடனும் சீமாவின் பெற்றோர் அவர்கள் தரப்பினருடனும் வாதத்திற்கு வந்து சேர்ந்தனர்.ஆனால் இதை ஏதும் சீமா அறிந்திடாத வண்ணம் அனைத்தையும் அவள் கவனத்திற்கு கொண்டு வராமல் பார்த்து கொண்டாள் ஷீலா.அவளிடம் தாங்கள் வெளியே செல்வதாக கூறி சீமாவையும் குழந்தைகளையும் மட்டும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு இவர்கள் மட்டும் அங்கு ஊர் தலைவர் முன் நடக்கும் வாதத்திற்கு சென்றனர்.
அந்த பஞ்சாயத்து தலைவர் இருவர் பக்கத்து நியாயத்தையும் கூற சொல்ல சந்திரன் சீமாவின் பெற்றோர் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையை தங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் அதனால் அவளை இதற்கு மேல் என் மனைவியாக தன்னால் வைத்து கொள்ள முடியாது என்றும் அந்த குழந்தையை இதற்கு தங்களால் பார்த்து கொள்ள முடியாது என்றும் கூறினான்.

சீமாவின் பெற்றோரோ எங்களால் தற்போது அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை என்றும் சீக்கிரம் அதை கொடுப்பதாகவும் அவர்கள் கூற அதை ஏற்க மறுத்தனர் மீனாவும் சந்திரனும். தங்களுக்கு உடனடியாக பணம் வேண்டும் என்பதில் விடா பிடியாக இருந்திட இந்திரனோ அவர்கள் காலில் விழுந்து தங்கள் பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டி அழுதார்!

அதை துச்ச மென்று ஒதுக்கிய சந்திரனும் மீனாவும் தங்கள் முடிவில் விடாப்பிடியாக இருந்தனர்.

இந்திரனோ என்ன செய்வதென்று அறியாமல் இருக்க அவரின் உறவினர்களோ இனி சீமாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தாள் நமது குடும்ப மானமே போய் விடுமென்றும் அதனால் அவளை எக்காரணம் கொண்டும் நமது வீட்டிற்கு மீண்டும் அழைத்து செல்ல கூடாது என்றும் கூறி அவர் மனதில் மீண்டும் அதே இருண்ட எண்ணத்தை விதைத்தனர்.

தவறியும் அங்கிருந்த யாரும் சந்திரன் முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை தவறு என்று கூறவில்லை.

அவரும் அதற்கு ஏற்றவாறே தன் வாதம் புரிய இறுதியாக என்ன நடந்தாலும் தன் பெண்ணை தான் தனது வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டேன் என்னால் இப்போது பணமும் கொடுக்க முடியும் சூழ்நிலை இல்லை இதற்கு மேல் ஊர் தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறி முடித்தார். சந்திரனோ அவர்கள் பெண்ணை தன்னால் இதற்கு மேல் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவளின் குழந்தைகளையும் தன்னால் பார்த்து கொள்ள முடியாது என்றும் கூறியவன் அதோடு தங்களிடம் வரதட்சணை கொடுப்பதாக ஏமாற்றிய இவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் கூறி முடித்தான்.

இதனை எல்லாம் யோசித்த பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பை கூற மீனாவின் முகத்திலும் சந்திரனின் முகத்திலும் சிரிப்பு தோன்றியது.இதை கேட்ட சீமாவின் பெற்றோர் தங்களால் தங்கள் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நினைத்து கதறி அழுக இப்போதும் கூட இதை தடுக்க விருப்பப்பட்டும் இந்த சமூகம் தடுப்பதால் அதற்கு கட்டுப்பட்டு ஒன்றுமே செய்யாமல் இருந்தனர்.
இங்கோ எதையுமே அறியாமல் இருந்த சீமாவை எதுவுமே கூறாமல் குழந்தைகளோடு கூட்டி சென்ற சந்திரன் அவளை அந்த மேடையின் முன் நிறுத்தினான்.

அவளோ அங்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் இருக்க ஊர் தலைவரின் வேலையாட்கள் சிலர் மட்டும் அங்கே நின்றனர்.
அந்த மேடையில் அவளை கூட்டி சென்று இல்லை இழுத்து சென்று அமர வைத்தான் சந்திரன்.

அங்கு அவள் மேல் எதோ ஊற்றப்பட என்ன என்று அறியாமல் இருந்த அவளுக்கு சிறிது நேரத்தில் புரிந்தது அது மண்னெண்ணெய் என்று தனக்கு என்ன நடக்கிறது என்று ஒருவாறு புரிந்தவள் அங்கிருந்து எழுந்திருக்க முயல அவள் அருகில் வந்த சந்திரனோ அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "இப்போ நீ இதை ஏத்துகிட்டு உட்கார்ந்தா இது உன்னோட முடியும் இல்ல நான் எந்திரிக்க தான் போறேன்னு நீ முடிவு பண்ணிட்டா உனக்கு பதிலா அந்த ரெண்டு குழந்தைகளையும் நாங்க தீயுக்கு கொடுத்திடுவோம்......" என்று கூறிவிட்டு அவன் செல்ல இவளோ எதுவும் கூற முடியாது அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அப்போது சரியாக மஹிமா வந்த பேருந்தோ அந்த ஊர் எல்லையில் வந்து சேர அவளும் அவன் கணவன் மாதவனும் ஊருக்குள் சென்றனர்.
அங்கே ஊரில் ஒரு இடத்தில் பத்து பேர் கிட்ட தட்ட ஒரு மேடையை சுற்றி நிற்க என்ன நடக்கிறது என்று பார்க்க கூட்ட அங்கே போயினர் மஹிமாவும் மாதவனும் அங்கே சென்றவர்கள் அங்கே நடந்ததை பார்த்ததும் உறைந்து போயினர்.

மணமகள் எரிப்புக்கு(bride burning) உரிய அனைத்து தேவைகளும் அங்கே நடந்தது. சீமாவை அமரவைத்த சந்திரன் அவளை உயிரோடு தீயிற்கு இரையாக்க கையில் எரியும் கட்டையுடன் காத்திருந்தான்.

இதை பார்த்த மஹிமா தன் தங்கை இப்படி பட்ட நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்து கதறி அழுதவள் அவளை காப்பாற்ற ஓடி சென்றாள்.

அவளை மீனாவும் ஊர் தலைவரின் அடியாட்களும் தடுத்து நிறுத்த மாதவனையும் அங்கேயே நிறுத்தினர்.அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடக்கூடும் என்று எண்ணியவர்கள் அவர்களிடம் இருந்த அலைபேசிகளை வலுக்கட்டாயமாக பிடுங்கினர்.

சீமாவின் பெற்றோரோ எதுவுமே கூறாமல் அழுதுக்கொண்டிருக்க அவர்களை பார்த்த மஹிமாவோ"நான் விரும்புனவரை தான் நான் திருமணம் செய்துக்கணும் உங்க கிட்ட அன்னைக்கு கேட்ட போது நீங்க இந்த கல்யாணத்தை நீ பண்ணிக்கிட்டா நீ இந்த வீட்டு பக்கமே வர கூடாதுன்னு சொன்னீங்க...... அதுவும் நீங்களா அதை சொல்லல......தோ இங்க இருக்காங்களே உறவினர்கள் ஊர் மக்கள் அதுக்கு ஒரு தலைவருன்னு இவங்க எல்லாரும் நம்ம பொண்ணு காதலிச்சிட்டு வந்து அந்த பையனை கல்யாணம் செய்துகொடுக்க சொல்லுறாளே நாம அப்படி செய்தா ஊருல நம்ம குடும்பத்தை பற்றி என்ன சொல்லுவங்களோன்னு பயந்து தான் நீங்க அப்படி சொன்னீங்க......ஆனா அப்போ என்னால யாருமே இல்லாம தனி மரமா நின்ன மாதவனை விட்டு வர முடியல......ஆனாலும் நான் நீங்க சொன்னதுக்கு மதிப்பு கொடுத்து உங்க கிட்ட சொன்ன பிறகு தான் மாதவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்கு போனேன்......ம்நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக என்ன தான் தங்கச்சியை அம்மாவ உங்களை பார்க்கணுங்கிற ஏக்கம் இருந்தாலும் பத்து வருஷம் அதை கட்டுப்படுத்தி இந்த ஊர் பக்கம் வராம என்னன்னே தெரியாத ஒரு நாட்டுல அநாதை மாதிரி இருந்தேன்......அன்னைக்கு நான் அப்படி போனதுக்கு அப்ரோம் இங்க வராம இருக்க காரணம் நீங்க அம்மாவையும் தங்கச்சியையும் நல்லா பார்த்துப்பீங்கன்னு நம்பி தான் ஆனா இன்னைக்கு என்னோட த.....த தங்கச்சியை உயிரோட அந்த தீக்கு பலிக்கொடுக்க பார்க்கிறாங்க இதை கூட நீங்க பார்த்துகிட்டு சும்மா இருந்தீங்கனா நீங்களாம் மனுஷங்களா.......ச்சீ......எனக்கு வெட்கமா இருக்கு உங்களை என்னோட அப்பா அம்மான்னு சொல்ல நாக்கு கூசுது......உங்க ரெண்டு பேரையும் இந்த கேடு கெட்ட ஊரையும் பார்க்கவா நான் அவ்வளவு தூரம் இருந்து வந்தேன்......எனக்கு என்னோட தங்கச்சி போதும் அவளையும் அவளோட குழந்தைகளையும் மட்டும் என்னோட அனுப்பிடுங்க நாங்க திருப்பி இந்த ஊர் பக்கம் தல கூட காட்ட மாட்டோம்......தயவு செய்து அவளை மட்டும் விட சொல்லுங்க......"என்று அவள் தரையில் விழுந்து கதற அதை கேற்க தான் அங்கு ஆள் இல்லை.இந்திரனும் ஸ்ரீஜாவும் கூட அவளுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தன் பொண்ணை காப்பாற்ற எண்ணம் தோன்றியும் இந்த ஊர் கொடுத்த பயத்தாலும் பழமை சிந்தனையாலும் அதை தற்போது கூட சொல்ல உரமில்லாமல் நின்றனர்.

அனைவரும் அதை கண்டுக்கொள்ளாது தங்கள் பணியை செய்ய சீமா மட்டும் தன் உடன் பிறந்த தன் ரத்தத்தை பத்து வருடம் கழித்து இந்த நிலையில் பார்க்க வேண்டுமா என்று நினைத்து இருக்கும் வேதனை கடலில் மேலும் சூழலில் சிக்கி தவிக்க தற்போது அவளின் இறுதி கூட அவளை நெருங்கி வந்தது.

மஹிமா செயலற்று இருக்க அனைத்தும் வேலைகளும் நடக்க சீமாவோ தன் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணியவள் மஹிமாவை பார்த்து "அ....அ.....அக்கா நான் போயிட்டு வரேன் அக்கா தயவு செய்து நீ.....நீ......நீ என்னோட குழந்தைகளை இங்க இருந்து கூட்டிட்டு போயிடு அக்கா அவங்களை பத்திரமா பார்.....பார்த்துக்கோ அக்கா ரெண்டு பேரும் ரொம்ப நல்ல குழந்தைகள் உங்களை எதுவும் தொல்லை கொடுக்க மாட்டாங்க அக்.....அக்கா நீ போனதுக்கு அப்ரோம் உன்னை பார்த்தா என்னென்னமோ பேசணும் யோசிச்சேன் ஆனா இப்போ உன்கிட்ட இந்த பிச்சை மட்டும் தான் அக்கா கேற்கிறேன் தயவு செய்து இதை மட்டும் செய்திடு அக்கா"என்று கைகூப்பி வேண்டியவள் "குழந்தைகளை இங்க இருந்து கூட்டிட்டு போயிடு அக்கா அவங்க இதெல்லாம் பார்க்க வேண்டாம் அக்கா போ அக்கா போ........எ.....என்.....எனக்கு ஆனா ரொம்ப ப.....பயமா......இருக்கு அக்கா ரொம்ப வலிக்குமா......எனக்கு வாழனும் ஆசை இருக்கு அக்கா ஆனா இப்போ நான் இங்க இதுக்கு சம்மதிக்காம வந்தா எதுவுமே தெரியாத அந்த ரெண்டு குழந்தைகளையும் தீக்கு இரையாக்கிடுவேன்னு என்னை மிரட்டுறாங்க அக்கா என்னால எதுவுமே செய்ய முடியல.......இந்த வாழ்க்கை வேண்டாமுன்னு நான் முதலையே இந்த ஊரை விட்டு என்னோட குழந்தைகளோட போயிருந்தா நானும் உயிரோட இருந்திருக்கலாம் என்னோட குழந்தைகளும் எந்த கொடுமையும் அனுபவிச்சு இப்படி அவங்க வாழ்க்கை கேள்விக்குறியா ஆகுற வரைக்கும் வந்திருக்க வேண்டாம்.....ஆனா இப்போ எதுவுமே பண்ண முடியாதுல நீ போ அக்கா இங்க இருந்து போ அக்கா......."என்று தன் இறுதி வேண்டுதலை தன் உடன்பிறந்தவளிடம் வைக்க அவளும் அதை ஏற்றுக்கொண்டு அந்த ஊர் தலைவரிடம் கெஞ்சி கேட்டு அந்த குழந்தைகளை தன்னுடன் அழைத்து கொண்டாள்.

தன் தாய் தந்தையரை பார்த்து கண்ணீரோடு வெறுமையான பார்வையை வீசியவள் தன் தங்கையை பார்த்து மீண்டும் அழ தொடங்கினாள்.மாதவனோ அவளின் தோளில் கைவைத்து தேற்ற முயல அவளோ சீமாவையே பார்த்தவாறு நின்றாள்.

சீமாவோ "நான் போறேன் அக்கா......நீயும் கிள கிள கிளம்பு அக்கா......அம்மாக்கு பாய் சொல்லுங்க செல்லம் இனிமே இவங்க தான் உங்க அம்மா......" என்று குழந்தைகளை பார்த்து கூற தற்போதே பேச தொடங்கி அம்மா என்று அழைக்க தொடங்கிய அந்த குழந்தைகள் தன் தாயை பார்த்து அவளிடம் செல்ல அழுதது ஆனால் மஹிமாவோ அவர்களை அவர்களுடைய தாயோடு அனுப்ப மணமில்லாதவளாய் அவர்களை அந்த அழுகையையும் தாண்டி கனத்த மனதோடு அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றாள்.

சிறிது தூரம் நடந்து சென்ற பின் ஊர் எல்லை வர இவளுக்கோ தன் தங்கை அந்த தீயில் தேகம் வெந்து கதறும் ஒலியே கேட்டது குழந்தைகள் இரண்டையும் மாதவன் கையில் கொடுத்துவிட்டு சீமா இருந்த இடத்தை நோக்கி செல்ல அந்த இடத்தில் இருந்த யாருமே இல்லை வெறுமையாக இருந்த அந்த இடத்தில் சீமாவின் நினைவுகள் மட்டுமே படர்ந்திருந்தது.

அன்றைய நாளே மஹிமா சீமாவை கொன்ற காரணத்திற்காக சந்திரன் மேலும் மீனா மேலும் வழக்கு தொடுக்க அவர்கள் வழக்கு விசாரணைக்கு வர நீதிமன்றம் அவர்கள் மேல் உள்ள குற்றம் நிரூபிக்க பட்டதால் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்வை கூறியவளின் விழிகளை கண்ணீர் நிரப்ப அதை கட்டுப்படுத்திய மஹிமா அங்கே திரண்ட மக்களை பார்த்து "இந்த நாடு அடைந்த வளர்ச்சியாலோ,பெண்கள் பெற்ற கல்வியாலோ,இல்லை அரசு கொண்டு வர சட்டங்களால கூட இன்னமும் பல பெண்களின் வாழ்க்கையை சீரமைக்க முடியல நம்ம மக்களோட மனநிலையையும் மாத்த முடியல.இன்னமும் இந்த நாட்டுல பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு எந்த முடிவும் எடுக்க முடியுறது இல்ல,பெண்கள் இரவில் தனியா வெளிய போக முடியல,ஏன் பெண் அவ வாழ்க்கையை பற்றின விருப்பத்தை கூட தெரிவிக்க முடியல.இதுலாம் ஏன்?கேள்விகேட்டா இது ஆண்கள் பெண்களிடம் காட்டும் ஏற்றதாழ்வுன்னு சுலபமா சொல்லலாம்.ஆனா இதை இன்னும் கவனமா பார்க்கும் இதுல பெண்களே பெண்களை வாழவிடாம செய்யுறதும்,ஏன் ஒரு சராசரி பெண்ணே ஒரு விஷயம் தப்பா நடக்குதுன்னு தெரிஞ்சும் அந்த இடத்துல கேள்வி எழுப்பாம இருக்கிறதும் கூட காரணமா தெரியுது.இது எல்லாம் மாறனும்-னா முதல்ல நாம தனி மனிதனா மாறனும் பெண்ணோ ஆணோ இந்த சமூகத்தில் எது சரியோ அதை செய்யணும் எது தப்பா தெரிந்தாலும் அதை இந்த உலகமே சரின்னு சொன்னாலும் தட்டி கேற்கணும்,தனக்கே ஒரு தப்பு நடக்கும் போது அதை தட்டி கேற்கணும்.இந்த நாட்டை வளர்ச்சி,கல்வி,சட்டங்கள் மட்டும் மாத்திட முடியாது.இந்த நாட்டை மாத்த தனிமனிதனின் மனமாற்றமும் தன் மேல் இருக்கிற நம்பிக்கையும் மட்டும் தான் ஒரே வழி.ஒன்னை மட்டும் நல்லா யோசிச்சு பாருங்க வாழ்க்கையில் சாதித்த எல்லா பெண்களுக்குமே மத்தவங்க துணையா இருக்கிறதுக்கு முன்னாடி முதல்ல அவங்க செய்யுறது சரின்னு அவங்க நம்புனாங்க தனக்கு சரின்னு தோணுனதை யார் என்ன சொன்னாலும் செய்தாங்க......"என்று கூறியவள்."வாய்ப்புக்கு நன்றி......."என்று கூறி தன் உரையை நிறைவு செய்ய அரங்கமே கரகோஷத்தில் நிறைந்தது.அதோடு அங்கே வந்த சிலர் மனதிலும் எது சரி எது தவறு என்பதை தனிமனிதனாக யோசிக்கும் எண்ணம் சமூகத்தில் தோன்றியது.
முற்றும்......
--------------------------------------------------------------------
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom