• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 01

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே….. 01

கண்ணனுக்கு பிறந்தநாள்! குழலூதும் அந்த மாயக்கண்ணனுக்கு பிறந்தநாள்! கிருஷ்ண ஜெயந்தி.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்


பூஜையறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டு சட்டென விழித்துக்கொண்டான் அவன். கண்ணனுடனான கோதையின் நேசத்தை, அவளது திருமண கனவை கண் முன்னே கொண்டு வந்த அந்த பாடலின் வரிகளில் கொஞ்சம் லயித்து தான் போனான் அவன். கோகுல கண்ணன்.

கோகுல கண்ணன். அவனுடைய தனித்தன்மை அவனுடைய புன்னகை. அது எப்படியோ? அவனை பார்க்கும், அவனிடம் பேசும் அனைவருக்கும் அவனை பிடித்துப்போகும்.

அமெரிக்காவில் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு கடந்த வாரம் தான் ஊர் திரும்பி இருக்கிறான் கோகுல். ஜி.கே கல்வி நிறுவனங்களின் ஏகபோக வாரிசு. அன்பான தந்தை தாய்க்கு ஒரே மகன்.

பல் தேய்த்து, முகம் கழுவி, அவன் தனது அறையை விட்டு வெளியே வருவதற்குள் காலை பூஜையை முடித்துவிட்டு சமையலறையை அடைந்திருந்தார் அம்மா தேவகி.

“அம்மா” என்றபடியே சமையலறையினுள் நுழைந்தான் கோகுல்.

“வாடா கண்ணா .காபி சாப்பிடறியா?” என்றார் அம்மா. எல்லாரும் அவனை கோகுல் என்று அழைத்தாலும் அம்மாவுக்கு அவன் எப்போதுமே கண்ணன் தான்.

“அப்பா காலேஜ் போயிருக்காரா? “ கேட்டான் கோகுல்.

“ஆமாம் டா ”

அம்மாவின் அருகில் வந்து சமையலறை மேடை மேலே ஏறி அமர்ந்தான் கோகுல்

“டேய்! மேலே கீலே பட்டு வைக்காதே. சாயங்காலம் பெருமாள் சேவிக்கற வரைக்கும் நான் மடிடா.” என்றபடியே அவனுக்காக ரெடியாக இருந்த மணக்கும் பில்ட்டர் காபியை நீட்டினார் அம்மா. “எச்சில் பண்ணாமே டம்பளரை உசத்தி சாப்பிடு”

“ஓ! ஆசாரம்?” என்றான் கோகுல்

“முதல்லே இது ஹைஜீன்” பட்டென பதில் வந்தது அம்மாவிடமிருந்து.

புன்னகைத்தபடியே டம்பளரை உயர்த்தி காபியை சுவைக்க துவங்கினான் கோகுல்.

“அம்மா உன் காபிக்கு ஈடு இணையே கிடையாது. சூப்பர்'”

“எல்லாம் இப்போ அப்படிதான் சொல்லுவே. நாளைக்கு நோக்கு ஒரு ஆத்துக்காரி வந்து அவ காபி கலந்து குடுத்தான்னா, அம்மா காபி மறந்து போயிடும்.” சிரித்தார் அம்மா.

“எங்கே? 29 வயசாச்சு. இன்னும் நோக்கு பிடிச்சா மாதிரி பொண்ணு கிடைக்க மட்டேங்கறதேடா. நானும் கண்ணனை வேண்டிண்டே தான் இருக்கேன் என் கண்ணணுக்கு ஏத்த கோதையை அவன் கண்ணிலே காட்டுடாப்பான்னு. எப்போ காட்றானோ?”

“கோதையா?” மனமெங்கும் மயிலிறகால் வருடும் ஒரு இதம் பரவ, அவன் இதழோரத்தில் புன்னகை தவழ்ந்தது.

'கோதை!’ அந்தப் பெயரின் மீது ஒரு தீராத காதல் கோகுலுக்கு. அந்த கண்ணனின் கோதையை பற்றி அம்மா சொன்ன கதைகளினாலோ என்னவோ அந்த பெயரை கேட்கும் போதே அவனுக்குள் சின்னதாய் ஒரு பரவசம் தோன்றும்.

'எத்தனை அழகான காதல் அவளுடையது! இப்படி ஒரு காதலி கிடைக்க அந்த மாயக்கண்ணன் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?'

சின்னதான புன்னகையுடன் ஏதேதோ எண்ணங்களில் நீந்தியபடியே கேட்டான் கோகுல்

“அம்மா....கோதை ரொம்ப அழகான பேர் இல்லையாமா? இந்த காலத்திலே யாராவது அந்த பேரெல்லாம் வெச்சுக்கறாளா மா?”

மெல்ல திரும்பிய அம்மாவின் கண்கள், மகன் மனதில் ஒளிந்திருக்கும் ஆசையை படிக்க முயன்றன. “ஏன்டா? அந்த பேர் நோக்கு ரொம்ப பிடிக்குமா?”

அம்மாவின் குரலில் கலைந்தவன் “அம்மா, இப்போ சொல்றேன். கோதைங்கிற பேரிலே ஒரு பொண்ணை என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்து பார்க்கலாம். அவ யாரா இருந்தாலும் சரி. அவளை நான் கண்ணை மூடிண்டு கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்றான் சட்டென

அம்மாவின் முகமெங்கும் வியப்பு மின்னியது.

எது செலுத்தியதோ? எப்படி வந்ததோ?

“நம்மாத்து வைதீக காரியத்துக்கெல்லாம் வருவாரே வாத்தியார் மாமா (சாஸ்த்ரிகள்) ஸ்ரீதர் , அவர் சின்ன பொண்ணு பேர் கோதை தாண்டா. இன்னைக்கு சாயங்காலம் பெருமாளுக்கு திருவாராதனை பண்ண நம்மாத்துக்கு அவரை வர சொல்லி இருக்கேன். என்ன சொல்றே? பேசி முடிச்சிடுவோமா?” அம்மாவின் உதடுகள் தாண்டி வந்தே விட்டிருந்தன அந்த வார்த்தைகள்.

“ம்? “புருவங்கள் உயர நிமிர்ந்தான் கோகுல்.

நினைவு ஏட்டை மெல்ல புரட்டியவனின் கண்களுக்குள் ஒரு கனவு உருவம் போலே வந்து போனாள் அந்த கோதை. எப்போதோ பார்த்த ஞாபகம்.

பெரிய தேவதை எல்லாம் இல்லை அவள். மிக சாதாரண தோற்றமும், நிறமும் கொண்ட பெண்ணாகத்தான் அவன் நினைவில் இருக்கிறாள் அவள். அவன் அவளை சந்தித்தது ஒரே ஒரு முறை தான்.

சட்டென சில்லென்ற பனிக்காற்றின் வருடலாய் அவளை பற்றி ஒரே ஒரு ஞாபகம் அவனுக்குள்ளே.

அது கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு முன்னால் நடந்த வீட்டு கிரஹப்ரவேசத்தின் போது நடந்த நிகழ்வு.

அப்போது ஒரு பதினெட்டு, பத்தொன்பது வயதிருந்திருக்குமா அவளுக்கு? ஹோமம் செய்து வைக்க அவளது அப்பா வந்த போது அவளையும் அழைத்து வந்திருந்தார் அவர்.

வீட்டில் நிறைய விருந்தினர்கள். இவனுக்கு எப்போதுமே கூட்டம் பிடிப்பதில்லை. உள்ளே ஹோமம் நடந்துக்கொண்டிருக்க தன்னுடைய நாயுடன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் கோகுல்.

அப்போது அந்த பெரிய தோட்டத்தின் ஒரு ஓரத்தில் பூக்களை ரசித்தபடி தனியாக நின்றிருந்தாள் அவள். அவனுடைய நாய் திடீரென்று அவளை நோக்கி ஓட, பயந்து பின் வாங்கினாள் அவள்.

ஏனோ அவள் முகத்தை பார்த்த போதே அவளை சீண்டிப்பார்க்க வேண்டுமென சின்னதாய் ஒரு ஆசை அவன் மனதில்.

அவள் பயந்து பயந்து விலக ,கையில் நாயுடன் அவள் பின்னாலேயே சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவளை சீண்டி விளையாடிக்கொண்டே இருந்தான் கோகுல்.

கண்களில் தவிப்பும், கெஞ்சலும், கொஞ்சமான பயமுமாய் அவனை விட்டு விலகி விலகி ஓடியவளின் நினைவில் இப்போதும் அவன் இதழ்களில் புன்முறுவல் எட்டிப்பார்த்தது.

கடைசியில் அவனிடமிருந்து தப்பித்து வீட்டினுள் சென்று ஹோமம் செய்வித்துக்கொண்டிருந்த அவளது அப்பாவின் பின்னால் அமர்ந்துக்கொண்டாள் அவள்.

ஒரு ஓரத்தில் நின்றுக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவள் கண்களுக்கு அவன் தென்படவில்லை. தவிப்புடன் அவனையே தேடிக்கொண்டிருந்தன அவள் கண்கள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் முன்னால் சென்று அவன் நிற்க, மெல்ல விழி நிமிர்த்தி அவனைப் பார்த்து புன்னைகைத்தாள் அவள். அப்பாவின் பின்னால் சென்று ஒளிந்துக்கொண்டு சிரிக்கும் குழந்தையின் புன்னகை. ஜெயித்துவிட்டாளாம்.

அதன் பின்னர் அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இவனுக்கு. இப்போது எப்படி இருப்பாள் அவள்.? அந்த குழந்தைத்தனம் இன்னும் மிச்சமிருக்குமா? இல்லை வயதுக்கேற்ற முதிர்ச்சி வந்திருக்ககூடுமா. யோசித்தபடியே காபியை ருசித்துக்கொண்டிருந்தான் கோகுல்.

கையில் காபி டம்பளருடன், ஏதோ நினைவில் புன்னகைத்துக்கொண்டிருந்த மகனின் முகபாவம் அம்மாவுக்கு எதையோ புரியவைத்தது. தான் சொல்லிவிட்ட வார்த்தைகளின் ஆழம் மெல்ல புரிந்தது.

'சட்டென என்ன சொல்லிவிட்டேன் நான்? இது சரியாக நடக்குமா? தாயின் மனம் கொஞ்சம் பதறியது.

பொருளாதார நிலையில் இவர்கள் குடும்பத்திற்கும், அவர்கள் குடும்பத்திற்கும் இமாலய வித்தியாசம். இருந்தாலும் அது பெரிய பிரச்சனையாக தோன்றவில்லை. இறைவன் தேவைக்கும் அதிகமாக அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் போது, வீட்டுக்கு வரும் மகாலக்ஷ்மியிடமிருந்து பெரிதாக எதுவும் எதிர்ப்பார்க்க போவதில்லை. ஆனால் மற்றவை எல்லாம்?

கோதையின் அக்கா ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக ஞாபகம். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவருக்கு தெரிந்தவரை இந்த கோதை பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கவில்லை. இவன் பி.எச்.டி முடித்துவிட்ட நிலையில் இருவருக்கும் எப்படி முடிச்சு போடுவது?

முகத்தில் சிந்தனை கோடுகள் பரவ மெல்ல “ஆனா“ என்றார் அம்மா.

“ம்? “ அம்மாவின் பக்கம் திரும்பினான் கோகுல்.

“இல்லைடா கண்ணா . அந்த பொண்ணு பிளஸ் டூ கூட பாஸ் பண்ணலைடா”

“அப்படியா?” என்றபடியே காபியை முடித்து விட்டு டம்பளரை சிங்கினுள் வைத்தான் கோகுல். அவளைப் பற்றிய ஒரு கூடுதல் தகவலாகத்தான் அம்மா சொன்னதை அவன் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். முன்பிருந்த அவனது முக பாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அம்மாவினுள்ளே சின்னதாய் ஒரு தவிப்பு. “அவ கோவில், தியானம், பாட்டு அப்படின்னு இருக்கிற பொண்ணுடா. ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு நீ சரியா வர மாட்டேடா”

ஒரு அழகான புன்னகையுடன் அம்மாவை நோக்கி திரும்பியவன், மலர்ந்து சிரித்தான். உள்ளம் கொள்ளை கொள்ளும் அழாகான சிரிப்பு.

வேறெதுவும் சொல்லாமல் சிரித்தபடியே சமையலறையை விட்டு வெளியேறினான் கோகுல். அந்த சிரிப்பின் அர்த்தம் என்னவாம்? புரியாமலே நின்றிருந்தார் அம்மா.

நேரம் மாலை ஐந்து மணி.

தனது இரு சக்கர வாகனத்தில் பறந்துக்கொண்டிருந்தான் கோகுல். வீட்டில் பல கார்கள் இருந்தும், எப்போதுமே பைக்கில் பறப்பதையே விரும்புவான் அவன். பின் சீட்டில் அமர்ந்திருந்தான் அவனது நண்பன் சரவணன்

சரவணனின் தந்தையும், தாயும் கிராமத்தில் இருக்க, இங்கே சென்னையில் கோகுலுக்கு சொந்தமான கல்லூரியில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறான் சரவணன். .இங்கே ஒரு சின்ன வீட்டில் தங்கி இருக்கிறான்.

ஏதாவது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்பது சரவணனின் இப்போதைய லட்சியம். அந்த லட்சியத்தில் இந்த நிமிடம் வரை படு தோல்வி.

அந்த வேலைக்கு தேவையான மதிப்பெண்களோ, திறமைகளோ அவனிடம் இல்லை. தோல்விகள் அவனை நிறையவே காயப்படுத்தி இருந்தன.

“ஏன்டா சைலெண்டா வரே. ஏதாவது பேசு” கேட்டான் கோகுல்.

“பச். ஒண்ணுமில்லைடா”

அவன் குரலில் படிந்திருந்த வெறுமையை உள்வாங்கிய படியே சொன்னான் கோகுல்

“விடுடா. வருத்தப்படாதே இந்த கம்பெனி இல்லையானா இன்னொண்ணு. நான் நாலஞ்சு வருஷமா நாட்டிலே இல்லையா, இங்க இருந்த டச்செல்லாம் விட்டு போயிடுத்து. அப்பாவுக்கு யாரையானும் தெரியுமான்னு கேட்கிறேன். கவலைப்படாதேடா ஏதாவது பண்ணுவோம்'.

“கவலைப் படலைடா. வெறுத்தே போயிட்டேன். இந்த நாட்டிலே ஜெயிக்கறவன் மட்டும் தான் ஆம்பிளைன்னு ஒரு கணக்கு. ஹீரோன்னா நிறைய படிச்சு இருக்கணும், ஸ்மார்ட்டா இருக்கணும், நிறைய பணம் இருக்கணும், எப்பவும் ஜெயிச்சிட்டே இருக்கணும். இது எதுவுமே என்கிட்டே இல்லையே. நானெல்லாம் ஜீரோதான்டா”

“டேய்... நான் எத்தனை தடவை உன்கிட்டே சொல்லி இருக்கேன்” கோகுல் ஏதோ சொல்லத்துவங்க,

“நீ சொல்லுவேடா. உனக்கென்ன? நீ மகாராஜா. பிறக்கும் போதிலிருந்தே ஜெயிச்சிட்டே இருக்கே. என்னை மாதிரியா?” என்றான் முகத்தை சுருக்கிக்கொண்டு.

அவனுடைய கல்லூரி கால நண்பன் சரவணன் . இந்த நொடி வரை அவன் முன்னால் ஒரு பணக்காரனாக நடந்துக்கொண்டதே இல்லை கோகுல். அவன் பேசிய வார்த்தைகளில் ஒரு நொடி தன்னையும் அறியாமல் கோகுலினுள்ளே கொஞ்சம் கசப்பு பரவத்தான் செய்தது.

அதன் பிறகு எதுவுமே பேசவில்லை அவன்.

சரவணனின் சின்ன வீட்டின் முன்னால் அவனை இறக்கி விட்டான் கோகுல். நண்பனின் முகத்தை பார்த்த மாத்திரத்தில் மனதில் இருந்த இறுக்கமெல்லாம் தளர்ந்து போக புன்னகைதான் கோகுல்.

இறங்கியவன் கோகுலை கண்களால் அளந்தான். பளபளக்கும் செயின், மோதிரம், ப்ரேஸ்லெட், கண்களில் தைரியம், பேச்சில் தன்னம்பிக்கை. பணம் இருந்தால் எல்லாமே தன்னால் வந்துவிடுமோ?

“சரி. நான் கிளம்பட்டாடா? “ பைக்கில் அமர்ந்தபடியே கேட்டான் கோகுல்.

எதுவுமே பேசவில்லை சரவணன். பைக்கின் மீதிருந்த கோகுலின் கையில் இருந்த ப்ரேஸ்லெட்டை மெல்ல வருடின சரவணனின் விரல்கள். “தங்கமாடா?”

விழி நிமிர்த்தி அவன் முகம் பார்த்தான் கோகுல்.

“ பிடிச்சிருக்கா உனக்கு?”

“இல்லை. அதுக்கில்லை”

அடுத்த நொடி தனது கையிலிருந்து அதை கழட்டியே விட்டிருந்தான் கோகுல்.

“இந்தா போட்டுக்கோ”

“டேய்... அதெல்லாம் வேண்டாம்டா”

“போட்டுக்கோடா”

அவன் கையை பிடித்து அதை அணிவித்தான் கோகுல்.

“டேய்... எதுக்குடா?”

“பிடிச்சிருக்கு இல்லையா? வெச்சுக்கோ” புன்னகைத்தான் அழகாக

“கவலைப் படாம தைரியமா இரு. இனிமே நீ நினைக்கறது எல்லாம் நடக்கும். எல்லாம் கிடைக்கும். நான் இருக்கேன் சரியா.? நான் கிளம்பட்டுமா?” வண்டியை கிளப்பிக்கொண்டு தனது வீட்டை நோக்கி பறந்தான் கோகுல்.

அதே நேரத்தில், தனது வீட்டு வாசலில், கோலம் போட்டுக்கொண்டிருந்தன அந்த வளைக்கரங்கள். காலையில் கோகுலின் மனக்கதவை லேசாக தட்டிப்பார்த்த அந்த வளைக்கரங்கள்.

கோலத்தை முடித்துவிட்டு, அந்த மாயக்கண்ணன் வரவை நோக்கி, அவன் பாதங்களை வரைய துவங்கின அந்த கரங்கள்.

இன்று ஏனோ அப்படி ஒரு சந்தோஷம், பரவசம் அந்த வளைக்கரங்களுக்குரியவளின் உள்ளத்தில். சின்ன புன்னகையுடனே சின்ன சின்னதாய், அழகழகாய் ரசித்து ரசித்து வரைந்துக்கொண்டிருந்தாள் அந்த கண்ணனின் பாதங்களை.
கீதம் தொடரும்

இந்த கதைக்கு கருத்துக்களை இங்கே தளத்தில் பகிர்ந்து கொண்டு புத்தக பரிசை வெல்லலாம் தோழமைகளே.

விவரங்கள் இங்கே



 
Last edited:

amirthababu

Active member
Member
பேஷ் பேஷ் படிச்சு இருக்கேன். இதை முடிச்ச பிறகு விவேக் ஸ்ரீனிவாசன் கொண்டு வாங்க
 

Baby

Active member
Member
வந்தாச்சா அந்த கோகுல கண்ணன்... படிச்சிருக்கேன்.. இருந்தாலும் எப்பி ஃபாலோ செஞ்சு அதில படிக்கிற சுகமே தனி தான்😍😍😍😍😍😍
 

Rajam

Well-known member
Member
கோதை.
அழகான பெயர்
என்அம்மா பெயரும் அதுதான்.
வசீகரிக்கும் உங்கள் எழுத்தை
திரும்ப ரசிக்க வந்துட்டேன்.
 

Sumathi mathi

Member
Member
Really we should appreciate gokul.he immediately he gave his bracelet to his friend when he admires it.wow excellent.
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom