யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 11 | Ezhilanbu Novels/Nandhavanam

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 11

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 11

கைப்பேசியை அணைத்திருந்தாள் கவிதா. அவளெங்கே அறிந்தாள் வேதாவுக்கும் திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது என! நாளை அவளுக்கு நிச்சியதார்த்தம் என! தோழியிடமாவது எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருக்க வேண்டாமா வேதா?

இது எதையும் அறியாதவளாக கைப்பேசியை அணைத்துவிட்டிருந்தாள் கவிதா.

“எவன்டா அவன்? என் பேரை சொல்லி அவளை ஏமாத்தறவன்?” கோகுல் குழப்பத்துடன் கேட்க எதுவும் புரியாமல் தோற்று போனவர்களாக சில நிமிடங்கள் இருவரும் அமர்ந்திருக்க,

“ஒண்ணு பண்ணுவோம். அவ ஆஃபிஸ்க்கே நேரா போய் கவிதாவை பார்த்து பேசிட்டு, வருவோம்” கோகுல் சொல்ல வேதாவின் அலுவலகம் நோக்கி கிளம்பினர் இருவரும்.

அதே நேரத்தில் அங்கே வேதா இருந்த இடத்தில்....

சென்னை பெங்களுர் நெடுஞ்சாலையில் இருந்த அந்த கெஸ்ட் ஹௌசில்..

பலமாக கேட்டது அருகில் இருந்த அந்த கோவிலின் மணி சத்தம். திடுக்கென விழித்துக்கொண்டாள் அவள். கைக் கடிகாரத்தை பார்க்க நேரம் காலை ஒன்பதை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது அது?

“எப்படி இத்தனை நேரம் உறங்கிப்போனேன்? அவளுக்கேத் தெரியவில்லை. இரவு முழுதும் தனியே படுத்து அப்பாவை நினைத்து அழுதுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“தெரிந்திருக்குமா? இப்போது அவருக்கு விஷயம் தெரிந்திருக்குமா?” நினைக்கும் போதே உடல் நடுங்கத்தான் செய்தது.

“அதை எல்லாம் யோசித்து இப்போது என்ன ஆகப்போகிறதாம்?” ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள் வேதா. தலை பாரமாக இருப்பது போல் இருந்தது.. அப்போது அறையின் கதவு தட்டப்பட்டது.

''ஒரு வேளை கோகுலாக இருக்குமோ?” நினைத்தபடியே, ஒரு முறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக்கொண்டு கதவின் அருகில் சென்றாள் அவள். அந்த கெஸ்ட் ஹவுஸின் இன்னொரு அறையில் தான் இரவு படுக்க சென்றான் அவன்.

அவள் கதவைத் திறக்க வாசலில் நின்றிருந்தது விக்கி. ஒரு முறை திடுக்கென்றது அவளுக்கு. அவனை அங்கே எதிர் பார்க்கவில்லை அவள்.

“ஹாய்... குட் மார்னிங்” புன்னகைத்தான் அவன். எரிச்சல் மண்டியது அவளுக்குள்ளே. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பெயருக்கு புன்னகைத்து விட்டு மெல்ல கேட்டாள் அவள்.

“கோகுல் எங்கே?”

“அவனா அவன் கொஞ்சம் வெளியே போயிருக்கான். இப்போ வந்திடுவான். உன்னை இந்த புது புடவை கட்டிட்டு ரெடி ஆக சொன்னான். நான் இங்கே எங்கே வந்தேன்னு பார்க்கறியா. என் ஃப்ரெண்ட் கல்யாணத்திலே நான் இல்லாம எப்படி?” கண்ணடித்தான் அவன்.

அவன் சிரிப்பு அவளுக்குள்ளே கொஞ்சம் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. பேசாமல் அந்த புது புடவையை வாங்கிக்கொண்டு கதவை மூடினாள் வேதா. மனம் முழுவதும் குழப்பம் மட்டுமே. சில நிமிடங்கள் யோசனையுடனே நின்றிருந்தாள் வேதா.

அதே நேரத்தில்

அங்கே கோகுலும், முரளியும் வேதாவின் அலுவலகத்தை அடைந்தனர். கான்டீனில் தனியாக அமர்ந்திருந்த கவிதாவை தேடிப் பிடித்து அவள் முன்னால் சென்று அமர்ந்தனர் இருவரும். அவள் திகைப்புடன் நிமிர இதமாக புன்னகைத்தான் கோகுல்

“ஐ யாம் கோகுல்” முகத்தில் குழப்ப ரேகைகள் ஓட, அவள் புருவங்கள் முடிச்சிட, புன்னகை மாறமால் மறுபடியும் சொன்னான் கோகுல்

“ஐ யாம் கோகுல்... ஜி. கே. க்ரூப்ஸ்...” கொஞ்சம் திடுக்கிடல் அவளிடத்தில்.

ஏதேதோ யோசனைகள் மனதில் ஓட

“ஒன் செகண்ட்” என்றவள் சற்று விலகிச் சென்று தனது மொபைலை உயிர்பித்து துழாவி, அவள் அன்று பார்த்த அதே புகைப்படத்தை ஒரு முறை பார்த்து, இவன் நிஜமான கோகுல்தான், என்பதை உறுதி செய்துகொண்டு சின்ன புன்னகையுடன் அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தாள்.

“நான் தான் கோகுல் அப்படின்னு நெட்லே போட்டோ பார்த்து கன்ஃபார்ம் பண்ணிண்டாச்சா?” அவனது பழைய புன்னகையில் கொஞ்சமும் மாற்றம் இல்லை.

“இல்லை... அது வந்து...”

“நோ.. நோ... தட்ஸ் குட். வெரி குட். பட் இது கொஞ்ச நாள் முன்னாடி நடந்திருந்தா வேதாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்திருக்கும்” என்றான் மெதுவாக.

“வேதாவுக்கு என்னாச்சு?” கவிதா பதற

“சொல்றேன்... வேதாவுக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி இருக்கு. இவன் தான் மாப்பிள்ளை. முரளி! என்னோட பெரியப்பா பையன்”

“கல்யாணமா அவ என்கிட்டே எதுவுமே சொல்லலை.. நீங்க தான் கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் பண்ணீங்களா? சாரி எனக்குத் தெரியலை...” என்றாள் சற்று தழைந்து போன குரலில்..

“இப்போ அது முக்கியம் இல்லை கவிதா” என்றான் முரளி. “நேத்து வேதா ஆத்தை விட்டு போயிட்டா... அவ எங்கே போயிருப்பான்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்க தான் வந்தோம்”

“வீட்டை விட்டு போயிட்டாளா? எங்கே போயிருப்பான்னு எனக்கும் தெரியலையே... இவர் பேரை சொல்லி அவளை ஒருத்தன் ஏமாத்திட்டு இருக்கான்னு மட்டும் எனக்கு புரிஞ்சது. நான் உடனே இவரோட போட்டோ, டீடைல்ஸ் எல்லாம் அவளுக்கு அனுப்பிட்டேன். இன்னும் அவ எதையுமே பார்க்கலையா? தெரியலையே. போன் கூட சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் வேதாவின் எண்ணை முயன்றாள் கவிதா. அணைக்க பட்டே இருந்தது அது.

“சரி அவனைப் பத்தி உங்களுக்கு ஏதானும் தெரியுமா? அடையாளம் ஏதானும் சொல்ல முடியுமா?”

“பார்த்தா என்னாலே அடையாளம் காட்ட முடியும். மத்தபடி போட்டோ எதுவும் இல்லையே. ஆனா ஒரு விஷயம் எங்க ஆபீஸ்லே விக்கின்னு ஒருத்தன் வொர்க் பண்றான் அவன் தான் அவனை கோகுல்ன்னு அறிமுகப் படுத்தி வெச்சான். அந்த விக்கியும் ரெண்டு நாளா ஆபீஸ் வரலை”

“விக்கி” யோசனையுடன் உச்சரித்தான் கோகுல். “அவன் மொபைல் நம்பர் இருக்கா?”

“இருக்கே” என்றபடி அதை அவர்களிடம் தந்தாள் கவிதா. உடனே தனது கைப்பேசியின் மூலம் முரளி அந்த எண்ணை முயல அதுவும் அணைக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் அங்கே குளித்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள் வேதா. உள்ளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு இருந்துக்கொண்டே இருந்தது அவளுக்கு. முகத்தை துடைத்தபடியே தனது பையை தேடியவளுக்கு ஏனோ சுருக்கென்றது.

அவளது பையை இரவு உறங்கும் போது அங்கே இருந்த அந்த அலமாறியினுள் வைத்ததாகத்தான் ஞாபகம். இப்போது அது எப்படி மேஜையின் மீது வந்தது? யார் எடுத்தார்கள் என் பையை.?

குழப்பும் சந்தேகமுமாக பையை எடுத்து உள்ளிருந்த பொருட்களை எல்லாம் சரி பார்க்க மற்றவை எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்க, பை முழுதும் துழாவிய பிறகும் அவளது கைப்பேசி மட்டும் கிடைக்கவில்லை.

“என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? கோகுல் எங்கே ?” அவர் உயிர் வரை பரவியது அதிர்ச்சியும் பயமும்

“யார் உள்ளே வந்தார்கள்?” என்ற யோசனையுடனே அறைக்கதவை பார்க்க அது தாழிடப்படவில்லை. ஒரு முறை குலுங்கியது அவள் உடல். விக்கியை இங்கே பார்த்த அதிர்ச்சியில் கதவின் தாழ்ப்பாளை போடாமலே குளிக்க சென்று விட்டேனா என்ன? மறுபடி மறுபடி தவறு செய்கிறேனோ?.

இதில் கோகுலும் உடந்தையா? நேற்றே வீட்டை விட்டு கிளம்பும் போதே கைப்பேசியை அணைத்துவிட சொன்னானே? நேற்று கோதையுடன் பேசுவதற்காக அழைத்த போது கூட கைப்பேசியிலிருந்து அழைக்க விட வில்லையே அவன்?

யோசிக்க யோசிக்க உடல் நடுங்குவது போல் ஒரு உணர்வு. மனதின் ஓரத்தில் சின்னதாக ஒரு சந்தேகக் கோடு உடனேயே ஏதோ ஒரு நம்பிக்கை சட்டென இடைப் புகுந்தது.

“இல்லை. என் கோகுலிடம் பொய்யில்லை. தனது வீடு வரைக்கும் என்னை தைரியமாக கூட்டி சென்றானே. அவன் எதற்கு என்னை ஏமாற்ற வேண்டும்? இருக்காது அப்படி எல்லாம் இருக்காது.”

அதே நேரத்தில்...

இங்கே அவர்களது வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றிக்கொண்டிருந்தாள் கோதை.

“கண்ணா... வேதா எங்கே இருந்தாலும் அவளுக்கு துணையாக இரு. அவளுக்கு சரியான வழிக்காட்டு”

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்த வேதா சுதாரித்து நிமிர்ந்தாள்.

“மாட்டேன். நான் அப்படி எல்லாம் யாரிடமும் ஏமாந்து விட மாட்டேன்.”

திடீரென எங்கிருந்தோ வந்து சேர்ந்தது ஒரு மன உறுதி. உடையை திருத்திக்கொண்டு தயாராகி வெளியே வந்தாள் வேதா.

“என்ன செய்வது இப்பொது. உண்மைகளை எப்படி தெரிந்துக்கொள்வது? சட்டென பிடிபடவில்லை தான்.” அப்போது மறுபடியும் கேட்டது அந்த கோவிலின் மணி ஓசை. அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று ஏதோ ஒரு உந்துதல் மனதிற்குள்...

அந்த கெஸ்ட் ஹௌசை விட்டு வெளியே வந்தாள் வேதா. தெருவில் இறங்கி அங்கிருத்து சிறிது தூரத்தில் இருந்த அந்த கோவிலை நோக்கி நடந்தாள் அவள். அக்கம் பக்கம் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மரங்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில் இருந்தது அந்த கோவில். விக்கி அவள் கண்ணில் தென் படவில்லை. செருப்பை வெளியே விட்டு கோவிலுக்குள் நுழைந்தாள் அவள்.

அத்தனை அழகும் அமைதியும் நிறைந்திருந்து அந்த கோவிலில். கூட்டம் அதிகம் இல்லை. சன்னதியின் உள்ளே மலர் மாலைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தான் கண்ணன். கூப்பிய கரங்களுடன் வேதா அப்படியே நின்றுக்க திடீரென பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“வாம்மா... வேதா...” திடுக்கிட்டு திரும்பினாள் அவள். புன்னைகயுடன் நின்றிருந்தார் அவர். அந்த கோவில் அர்ச்சகர்.

“என்னடிமா... திருதிருன்னு முழிக்கறே. என்னைத் தெரியலையா நோக்கு? நான் உங்காத்துக்கு எத்தனை வாட்டி வந்திருக்கேன். ராஜகோபாலன்”

“ஓ... சாரி மாமா.... நேக்கு ஞாபகம் இல்லை” என்றாள் மெதுவாக.

“அப்பா சௌக்கியமா? ரெண்டு நாள் முன்னாடித்தான் அவரெண்ட பேசினேன். கும்பகோணம் போக போறதா சொன்னார்”

“ம்... ஆங் ... ஆமாம் மாமா... கும்பகோணம் போயிருக்கார் அப்பா”' தடுமாறி வெளிவந்தது வேதாவின் குரல்.

“அது சரி..... நீ எங்கே இங்கே?” வந்தது அடுத்த கேள்வி.

“அது நான் ஃபிரண்ட்ஸோட... சும்மா பிக்னிக் வந்தேன். இங்கே... அதான் இங்கே பெருமாள் சேவிக்கலாம்ன்னு” எப்படியோ சமாளித்தாள் அவள்.

“வா வா நன்னா சேவிச்சுக்கோ பெருமாளை” என்றபடி கண்ணனுக்கு கற்பூர ஆரத்தியை காட்டிவிட்டு தட்டுடன் வெளியே வந்தார் ராஜகோபாலன். அதன் பின் அவர் கொடுத்த தீர்த்தத்தை வாங்கிக்கொண்ட படியே

“கோவில் ரொம்ப அழகா இருக்கு மாமா” என்றாள் வேதா. அவள் இருந்த மனநிலையும் தாண்டி அந்த கோவிலின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

“பழைய காலத்து கோவில்தாம்மா இதுவும். சில வருஷம் முன்னாடி வரைக்கும் ரொம்ப பாழடைஞ்சு போயிருந்தது. பெருமாளுக்கு தினமும் பூ கூட சாத்த முடியலை. நீ ஜி.கே க்ரூப்ஸ் வாசுதேவன் கேள்விப்பட்டிருக்கியோ? நோக்கு தெரிஞ்சிருக்குமே... உங்க அப்பா தானே அவாத்து வாத்தியார்” அவர் சொல்ல ஆச்சரியத்துடன் விரிந்தன வேதாவின் விழிகள்.

“அவா தான் ஹெல்ப் பண்ணி இந்த கோவிலை இப்படி மாத்தினா. இது மாதிரி நிறைய கோவில்களுக்கு ஹெல்ப் பண்றா மா.. அவா” அவர் சொல்ல முகம் மலர்ந்து போனது வேதாவுக்கு.

“ஜி.கே க்ரூப்ஸா? என் கோகுலின் குடும்பமா? இத்தனை பக்தி நிறைந்த குடும்பத்தில் வந்தவன் என்னை ஏமாற்றுவானா? மாட்டான். நிச்சியமாக மாட்டான்.” சன்னதியில் சிரித்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தாள் அவள்.

“காலையில் என் மனதில் இருந்த குழப்பத்தை தீர்த்து வைத்து விட்டாய் கண்ணா”

“நான் கிளம்பறேன் மாமா” அவள் மகிழ்ச்சியுடன் கிளம்பத் தயாராக..

“இரும்மா.. பிரசாதம் சாப்பிட்டு போ... கோவிலுக்கு வந்தா சித்த நாழி உட்காரணும்... உட்கார்ந்து கண்ணனோட பேசிட்டு போ... இரு இதோ வரேன்” உள்ளே சென்றார் ராஜகோபாலன். கண்ணனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வேதா.

சில நிமிடங்கள் கழித்து பிரசாதத்துடன் வெளியில் வந்தார் அவர். அதை அவள் வாங்கிக்கொள்ள, அவளது இன்னொரு கையில் இருந்த குங்குமத்தை பார்த்து விட்டு....

“குங்குமம் மடிச்சுக்க பேப்பர் வேணுமா... இரு தரேன் இரு...” என்றபடியே அங்கே ஓரமாக இருந்த ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்தார் ராஜகோபாலன். அவர் அதை திறக்க அதிலிருந்து நழுவி அங்கே அமர்ந்திருந்தவளின் மடியில் வந்து விழுந்தது அது!

அந்தப் புகைப்படம்! அதை எடுத்துப் பார்த்தாள் வேதா!

இங்கே கெஸ்ட் ஹௌசில் வேதா தங்கி இருந்த அறைக்கதவு திறந்து இருக்க, கொஞ்சம் அதிர்ந்து போனான் உள்ளே எட்டிப்பார்த்த விக்கி.

“எங்கே போனாள் இவள்?” கெஸ்ட் ஹவுஸ் முழுவதும் தேடி விட்டு கேட் அருகில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வந்தான் அவன்.

அதற்குள் அங்கே கோவிலில்... திகைப்புடன் அந்த புகைப்படத்தையே பார்த்திருந்தாள் வேதா. சன்னதியிலிருந்து அவளையே புன்னகையுடன் பார்த்திருந்தான் அந்த மாயக்கண்ணன்.

அந்த புகைப்படத்தில் இருந்த அந்த வாலிபனை மட்டும் அவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. அன்று கோவிலில் இந்த கோகுல் அவளை சந்தித்த நிகழ்வு கூட மனதிலாடியது.

'இது கோகுல் ஆயிற்றே! நம் கோதைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஆயிற்றே!”

அவனுடன் அந்த புகைப்படத்தில் இருந்த அந்த மற்றவர்களின் முகமும் எங்கோ பார்த்தது போலே தோன்றியது அவளுக்கு..' ராஜகோபாலன் கையில் துண்டு காகிதத்துடன் திரும்ப மெல்ல எழுந்தவள் கேட்டாள்

“இவா யாரு மாமா?”

“என்னமா இப்படி கேக்கறே? இவாதான் நான் அப்போ சொன்னேனே ஜி.கே க்ரூப்ஸ் வாசுதேவன், அவா குடும்பம் தான்மா. இவர் வாசுதேவன், இது அவாத்து மாமி தேவகி ... இது அவா பையன் கோகுல்.... “

“வாசுதேவன் குடும்பமா? இவன்தான் கோகுலா? அப்படி என்றால் என்னுடன் பழகியது? அவள் தலைக்குள்ளே பூகம்பம்..

“மா ... மா இவர் தான் கோ... கோகுலா? இவாளை எல்லாம் நீங்க நேர்லே பார்த்திருக்கேளா?” அவளது இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது.

“ஏம்மா? நிறைய வாட்டி பார்த்திருக்கேனே. அவாத்துக்கு கூட போயிருக்கேன். சென்னை மாம்பலத்திலே இருக்கா அவா” இதயம் வெடித்து போகாதது ஒன்றுதான் குறை வேதாவுக்கு.

“இவ்வளவு தூரம் கோவிலை நன்னா சரி பண்ணி குடுத்திருக்காளே, அதனாலே இந்த போட்டோவை பெரிசு பண்ணி கோவில்லே எங்கேயாவது ஓரமாவானும் மாட்டி வைக்கலாம்ன்னு அவாத்திலே வேலை பாக்கறவா கிட்டே கேட்டு இதை வாங்கிண்டு வந்தேன். ஆனா அந்த மாமா கூடவே கூடாதுன்னுட்டார்”

கோவில்லே பெருமாள் மட்டும் தான் இருக்கணும்னுட்டார் அவர் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக. எதுவுமே அவள் காதில் ஏறவில்லை. புகைப்படத்திலிருந்து அவள் விழிகள் அகலவில்லை.

“வாசுதேவன் – தேவகி” இவர்களது முகமும் அவள் நினைவுக்கு வந்தது. அன்று அந்த வீட்டில் பார்த்தேனே இவர்கள் இருவரும் இருந்த புகைப்படத்தை? அப்படி என்றால் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறானா என்னுடன் பழகிய அந்த கிராதகன்?”

“ஏன் மாமா அவாளுக்கு ஒரே பையன் தானா மாமா?” சில நொடிகள் கழித்து வெளியே வந்த அவள் குரல் வற்றிப்போய் கிடந்தது. உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தலைக்குள் இறங்கி இருந்தது..

“ஆமாம்மா ஒரே பையன் தான்.” அவர் சொல்லிக்கொண்டிருக்க சரியாக அந்த நொடியில் கோவிலுக்குள் நுழைந்தான் விக்கி. அவன் அவள் அருகில் வர சட்டென சுதாரித்துக்கொண்டாள் வேதா.

“என்னைச் சுற்றி வலை பின்னப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனால் அது எனக்கு தெரியும் என நான் வெளிக்காட்டிகொள்வது புத்திசாலித்தனம் இல்லை”

'ஹேய்.... இங்கே என்ன பண்றே நீ...' அதட்டலாக வெளிவந்தது விக்கியின் குரல். கொஞ்சமாக மாறியது ராஜகோபாலனின் முகம்.

“இல்லை சும்மா கோவிலுக்கு வந்தேன்.” என்று சொன்னவள் வேறே எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்

“நான் கிளம்பறேன் மாமா.” என்று அந்த புகைப்படத்தை அவரிடம் கொடுத்து விட்டிருந்தாள்.

“யாரும்மா இது?” விக்கியை அளந்த படியே கேட்டார் ராஜகோபாலன்.

“இது... இது ஃப்ரெண்ட் மாமா... நான் வரேன்” என்றவள் சன்னிதியில் இருந்த கண்ணனை ஒரு முறை திரும்பி பார்த்து கைகூப்பி விட்டு விக்கியுடன் நடந்தாள் தைரியமாக.

சில மணி நேரங்கள் கடக்க.... நேரம் மதியம் ஒன்றை தாண்டிக்கொண்டிருந்தது.

நிறையவே படபடப்புடன் தனது கைப்பேசியிலிருந்து கோதையின் அப்பா ஸ்ரீதரின் எண்ணை அழைத்தார் ராஜகோபாலன்!

ஸ்ரீதரன் தனது கைப்பேசியை தொலைத்ததை இவர் அறிந்திருக்கவில்லையே. திரும்பத் திரும்ப முயல அது அணைக்கப்பட்டே இருந்தது.

“எப்படியாவது ஸ்ரீதரனை தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்து விட்ட உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டுமே? என்ன செய்வது இப்போது?” தலை சுற்றியது அவருக்கு. கண்கள் இருட்டிக்கொண்டே வர....

“கண்ணா ... ஏதாவது பண்ணுப்பா” வாய்விட்டு சொல்லிவிட்டு அப்படியே மயங்கி விழுந்தார் ராஜகோபாலன். அங்கே கும்பகோணம் கோவிலில் ஸ்ரத்தையாக ஹோமம் செய்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன்.

தொடரும்
 

Rajam

Well-known member
Member
எப்படியோ தன்னை ஏமாற்றியது தெரிஞ்சுண்டா.
கண்ணன் காத்து விட்டான் அவளை.
தைரியமான பெண் வேதா.
நிதானமாகத் தான் அவர்கள் வலையிலிருந்து
வெளி வரணும்.
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom