பருவமழை

Nithya Mariappan

✍️
Writer
பருவமழை

1996ஆம் வருடம்...

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கால்வாய்களில் ஒன்றின் கரையில் அமைந்திருந்த அந்தக் குக்கிராமத்தில் இரவு தனது வண்ணத்தை பூசி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரம். பருவமழைக்காலம் என்பதால் விடாது தூறிக் கொண்டிருந்த மழையை உற்சாகத்துடன் கோஷ்டி கானம் பாடி அனுபவித்துக்கொண்டிருந்தன கால்வாய் கரையில் தேங்கியிருந்த நீரில் கிடந்த தவளைகள்.

இத்தோடு ஒரு வாரமாக மழை விடாது பெய்கிறது. பெருமழையாகவும் பெய்யாது தூறலாகவும் நின்று விடாது பொறுமையும் நிதானமுமாக ஏழுநாட்கள் பெய்த அந்தப் பருவமழையின் விளைவாக அணை எப்போதோ நிரம்பி உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்தது. அதனால் தானோ என்னவோ கால்வாயின் இரு கரைகளையும் முத்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தாள் நதிப்பெண்ணவள்.

“சனியன் பிடிச்ச மழை, சோஓஓனு பெஞ்சும் தொலைக்க மாட்டிக்கு, நின்னும் தொலைக்க மாட்டிக்கு... மலை மேல இன்னும் பெய்யுதாமே... அப்போ இந்தத் தடவையும் தொண்ணூத்திரெண்டு மாதிரி வீடு, கரைய விட்டுட்டு முகாமுக்குப் போகணுமாவே?”

குடையைப் பிடித்தபடி கால்வாய் கரையைச் சோதித்துக் கொண்டிருந்த தலையாரியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் அந்த ஊர்க்காரர் ஒருவர்.

“பயப்படாதிய... அந்தளவுக்கு வெள்ளம் வராதுனு நினைக்கேன்... இருந்தாலும் ஊர்க்காரங்களை உஷார் படுத்தணும்... ஊர்ல முக்காவாசி மண் வீடா இருக்கு... ஒரு ராத்திரி மழைத்தண்ணில நின்னா சுவரு இடிஞ்சு விழுந்துடும்வே... ஒரேயடியா போய் சேர்றதுக்கு முகாமுக்குப் போறது பரவால்லயே” என்று சொன்ன தலையாரியின் குரலிலும் சோர்வு.

கிராம மக்களை அப்புறப்படுத்துவது அத்துணை சுலபமில்லை. கிழடு கட்டைகள் வாழ்ந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என அடம்பிடிக்கும். ஆடு மாடுகளை விட்டு எப்படி வருவது என விவாசயப்பெருங்குடியினர் யோசிப்பர். ஆனால் இதையெல்லாம் பார்த்தால் ஊர்மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதை வேடிக்கை பார்த்ததற்காக அவர் அல்லவா மேலே உள்ளவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டும்!

அவர் மனதில் என்னவோ வெள்ளம் இந்தக் கரையைத் தாண்டாது என்ற நம்பிக்கை. கூடவே இந்த மழை நிற்குமானால் அணைக்கு நீர்வரத்து குறையும். உபரிநீர் திறப்பும் குறையும். ஆனால் மாரி பொழிவதும் மகவு பிறப்பதும் மகாதேவன் சித்தம் அல்லவா!

எனவே கடவுள் கருணை காட்டினால் மட்டுமே இந்த மழை நிற்கும். இல்லையெனில் வெள்ளம் தான்.

அந்தக் கிராமத்தின் எத்தனையோ வீடுகளில் ஒன்றாக சுற்றிலும் மழைநீரால் தேங்கி நிற்க இப்போது பெய்த தூரலில் குளித்துக் கொண்டிருந்தது ஒரு ஓட்டுவீடு.

அதை இருள் ஆக்கிரமித்திருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உண்டான இருள் அல்ல அது. அந்தக் கிராமத்தின் பெருங்குடி மக்களைத் தவிர மற்றவர்களின் இல்லங்களில் மின்சாரம் தன் காலைப் பதித்திடாத காலகட்டம் அது என்பதால் அங்கிருந்த இருளை வழக்கம் போல விரட்ட முயன்று கொண்டிருந்தது மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று.

அதன் கண்ணாடிக்குடுவையின் மீது சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது மழைநீர். போதாக்குறைக்கு சுவர் இடுக்குகளின் வழியேயும் மழைநீர் வீட்டுக்குள் கசிந்து கொண்டிருந்தது. எங்கும் ஈரமயம். ஓடுகளின் இடுக்குகளினூடே மழைத்துளிகள் அத்துமீறி நுழைந்து வீட்டுக்குள் ஒழுகிக் கொண்டிருந்தன.

தரையெங்கும் ஈரம் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்துக்கொண்டே வர அந்த ஓட்டுவீட்டின் ஒரு மூலை மட்டும் ஒழுகாமல் இருந்தது. ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்த பனைமரக்கட்டையில் ஒரு தொட்டில் கிடக்க அதனுள் கண்களை இறுக மூடிக்கிடந்தது ஆறு மாதக் குழந்தை ஒன்று. அந்த தொட்டிலை பற்றியபடி அந்த மூலையிலேயே முடங்கிக் கிடந்தாள் ஒரு பெண்.

பிள்ளைக்குக் குளிர் எடுக்குமோ என்ற யோசனையிலேயே அவளுக்கு உறக்கம் பறந்து போயிருந்தது. வேலை விசயமாக வெளியூர் சென்ற கணவனும் மழை காரணமாக வீட்டுக்கு வராமல் போய்விட அந்த ஏழு நாட்களும் ஒழுகும் வீட்டில் விளக்கின் மண்ணெண்ணெய் வாசத்தில்யே சமைத்துச் சாப்பிட்டு முடங்கிக் கிடந்தாள் அவள். அது செல்போன்களோ தொலைகாட்சியோ கிராமங்களில் பிரபலமாகாத நேரம் வேறு.

இந்த மழை அவளுக்குள் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தது என்னவோ உண்மை! வீட்டை எண்ணித் தான் அவளுக்குக் கவலை. அவளது காலஞ்சென்ற மாமனார் கட்டிய மண்வீடு. சுற்றிலும் தேங்கி நின்ற மழைநீரின் ஈரம் சுவரில் ஏறுவது அந்த மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் தெளிவாகத் தெரிந்தது.

“இன்னைக்கு சாயங்காலம் நாங்க வீட்டைக் காலி பண்ணிட்டு பள்ளிக்கூடத்துல ஒதுங்க போறோம்... நீயும் வாத்தா... உன் வீடு இப்போவோ அப்போவோனு இருக்கு.. பச்சைப்பிள்ளைய வச்சிட்டு ஈரத்துல இருந்தேனா ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப்போகு... தெருவுக்குள்ள இருந்த முருகையா வீட்டுச்சுவர் இடிஞ்சதுல இருந்து எனக்கு ஈரக்குலை நடுங்குது... நீ எப்பிடி தான் இம்புட்டு தைரியமா இருக்கியோ”

பக்கத்துவீட்டுக்கிழவி சொன்னது தான். ஆனால் அவள் வெளியேற மறுத்துவிட்டாள்.

“நான் தொண்ணூத்திரெண்டு வெள்ளத்திலயே இந்த வீட்டுல தான் அடஞ்சு கிடந்தேன் ஆச்சி.... இது சாதாரண மழை தானே”

அப்போது சாதாரண மழை தானே என்றவளுக்கு இப்போது பயம் பீடித்தது. தொண்ணூத்திரெண்டு வெள்ளம் வந்த சமயத்திலும் அவள் கணவன் வேலை விசயமாக வெளியூர் தான் சென்றிருந்தான். ஆனால் அப்போது அவள் தனிமனுஷி. ஆனால் இப்போதோ அவளை நம்பி குழந்தை இருக்கிறது. அவளால் இந்நேரத்தில் வெளியேறவும் முடியாது. ஏனெனில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தண்ணீர்பாம்புகள் கிடக்கும் வாய்ப்பு அதிகம்.

என்ன வாழ்க்கை இது? ஒரு இடம் விடாது ஜல்லடையாய் ஒழுகும் வீடு! ஈரத்தில் விரைத்தே இறந்துவிடுவோமோ!

தேவையற்ற எண்ணங்கள் மனதில் சூழ ஆரம்பிக்கவுமே கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“சுடலமாடச்சாமி இந்த மழை மட்டும் நின்னுச்சுனா உனக்கு குடும்பத்தோட வந்து பொங்கல் வைக்கேன்... என் வீட்டை காப்பாத்துய்யா... எங்களை மாதிரி மக்களுக்கு நீ சொத்து சுகத்தை குடுக்க வேண்டாம்... ஒழுகுனாலும் தலைக்கு மேல ஒரு கூரை இருக்குற நிம்மதில தான் எங்க ஜீவனம் நடக்குது... இதை பறிச்சிடாத... இதுவும் போச்சுனா ஒத்தை மனுசன் சம்பாத்தியத்துல நான் என்ன செய்வேன்? இரக்கம் காட்டு சாமி... மழையை நிறுத்திடுய்யா!”

மழை, பஜ்ஜி, இளையராஜா இசை இதெல்லாம் ஒழுகாத வீடு படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்! அன்றாட வருவாயை நம்பி இவ்வாறான இல்லங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மழை என்றால் பீதி மட்டுமே சூழும்! அந்தப்பெண்ணுக்கும் பயமும் வேண்டுதலுமாய் இரவு கடந்தது

விடியலில் எழுந்த போது தவளைகளின் கானமும் மழையின் மெல்லிய இரைச்சலும் நின்றிருந்தது. தரையில் ஆங்காங்கே பரப்பியிருந்த பாத்திரங்களில் சொட்சொட்டென்ற சத்தத்துடன் விழுந்து கொண்டிருந்த மழைத்துளியின் சத்தமும் நின்று போயிருந்தது.

அவள் மனம் மழை நின்றதில் நிம்மதியுற்றிருந்தது. வீட்டிலிருந்த கிராதி வழியே கால்வாயை எட்டிப் பார்த்தாள். இரவில் முக்கால்வாசி கரையைத் தொட்டு ஓடிய தாமிரபரணி அன்னை தன்னைப் போல ஒரு அன்னை வைத்த வேண்டுதலுக்கு இரங்கி தனது அளவைக் குறைத்துக்கொண்டாள்.

இப்போது நீர்வரத்து குறைத்திருந்தது.

“மலையில மழை நின்னுடுச்சுவே... இனிமே கவலை இல்ல” என்ற தலையாரியின் குரல் அவளுக்குள் நிம்மதியைக் கொடுக்க பெருமூச்சுவிட்டபடி சுடலை மாடச்சாமிக்கு பொங்கல் வைத்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் அவள்.

ஊர்மக்கள் பள்ளிக்கூடத்தில் இருந்த தற்காலிக முகாமிலிருந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு இப்போது தான் கிராமத்துக்குப் போன களை திரும்பியது போல இருந்தது.

அந்நேரத்தில் தான் குழந்தை பசித்து அழ ஆரம்பித்தது. அதனிடம் கவனத்தைத் திருப்பியவள் அதை தொட்டிலில் இருந்து எடுத்து பசியாற்றத் தொடங்கினாள்.

“என்னய்யா பசிக்குதா என் தங்கத்துக்கு... உங்கப்பா வரட்டும்.... இந்தத் தடவை உத்திரத்துக்குக் கோயிலுக்குப் போய் சுடலைமாடச்சாமிக்கு பொங்கல் வச்சிடணும்... அவரால தான் மழை நின்னுச்சு”

அவள் தன் போக்கில் பேசியபடியே குழந்தைக்குப் பசியாற்ற வெளியே வானம் மழையை நிறுத்திவிட்டு கருமை நிறத்தைத் தொலைத்து வெண்மைக்கு மெதுவாகத் திரும்ப ஆரம்பித்திருந்தது.

**********
என்றோ எழுதிய ஒரு பக்க கதை😜
 

Latest profile posts

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பன்னிரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஓம் சாயிராம்.
Sorry for posting it late.
படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... ☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom