• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் - 2

Umanathan

✍️
Writer
தேடிக் கிடைத்த செல்வம் - 2

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஷர்விகா, வெங்கட்டின் அறைக்கதவை தட்டி தன் வரவை தெரிவித்தாள்.

"ஸாரி வெங்கட். இன்னைக்கு மீட்டிங்க்ல.." என்று ஆரம்பித்து என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி நின்றாள்.

"லெட் இட் பி ஷர்விகா." என்று மென்மையுடன் கூறிவிட்டு, "ஆனா இது திரும்ப நடக்காதுன்னு நம்பறேன்." என்று சிறிது அழுத்தம் கொடுத்து கூறினார்.

ஷர்விகா தலையாட்டவும், "அப்போ கவனிச்சீங்களான்னு தெரியலை. இவர் தான் வித்யுத். உங்களோட புது மேனேஜர். ப்ராஜெக்ட் இப்போ முக்கியமான கட்டத்தில் இருக்கு. அதனால நீங்களும் வித்யுத்தும் கொஞ்சம் அதிகமான கவனத்தை இதில் செலுத்தனும்.” என்றார்.

ஷர்விகா புரிகிறது என்பது போல தலையாட்டினாள். மறந்தும் அவாள் வித்யுத்தின் பக்கம் திரும்பவில்லை. அதை கவனித்தாலும் ஒன்றும் சொல்லாத வெங்கட் மேலும் கூறினார். “அதனால உங்கள வித்யுத்தோட கேபினுக்கு பக்கத்துல மாத்த போறேன். ரெண்டு பேரும் ப்ரொஜெக்ட்டை சக்ஸஸ்ஃபுல்லா முடிப்பீங்கன்னு நம்பறேன்." என்று கூறினார்.

அதை கேட்டு திகைத்த ஷர்விகா அவசரமாக இடை மறித்தாள் "அதுக்காக எதுக்கு இடம் மாறனும் வெங்கட்? இப்போஅ இருக்கற இடத்திலேயே என்னால நல்லபடியாக வேலை பண்ண முடியும்" என்று பதில் அளித்தாள். ஒரு முறை பார்த்த அதிர்ச்சியே இன்னும் தீரவில்லை, இன்னும் தினம் தினம் இவனை பார்த்தாக வேண்டுமா என்கிற தவிப்பு அவளுக்கு.

இம்முறை வெங்கட்டின் குரலுக்கு பதிலாக, அவள் கேட்டது வித்யுதின் குரலை. "உன்னை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன். இப்போ இந்த ப்ராஜக்ட் முக்கியமான கட்டத்தில் இருக்கு. இப்போ இருக்கற கட்டத்தில், இந்த ப்ராஜக்ட்டுக்காக நாம அடிக்கடி நமது க்ளையன்ட் கிட்ட பேசனும். கிடைக்கற ஒவ்வொரு விஷயத்தையும் அலசிஆராய்ந்து அடுத்த அடி எடுத்து வைக்கனும். அதுக்காக ஒவ்வொரு முறையும் முன்னும் பின்னும் நாம அலைஞ்சிட்டே இருக்க முடியுமா? உன்னை பத்தி தெரியாது. ஆனா நான் இங்க வேலை பாக்கத் தான் வர்றேன். வெங்கட் என்னவோ நீ ரொம்ப புத்திசாலி, நல்லா வேலை பாப்பேன்னு சொன்னார். நீ பேசறதை பாத்தா அப்படி தெரியலியே?" என்று கேலியுடன் முடிக்கவும் ஷர்விகாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

யார் மீது அவளுக்கு அதிக கோபம் என்று அவளுக்கு புரியவில்லை. நியாமான காரணம் என்றாலும் தன்னை ஏளனம் செய்த அவன் மீதா அல்லது, அவன் பேசும் வார்த்தைகளால் இன்னமும் பாதிக்கப்படும் அவளின் மீதேவா இந்த கோபம் என்று குழம்பினாள். அவளின் மூளை அவன் கூறிய யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டாலும், அவளின் மனம் தினம் தினம் அவனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று தவித்தது.

அன்று நண்பகலுக்குள் அவளது உடமைகள் அனைத்தும் வித்யுத்தின் அறைக்கு மாற்றப்பட்டன. அவனைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்கும், வேலையில் கவனம் செலுத்துவதற்கும் அவள் தன்னால் முடிந்தவரை முயன்று, பரிதாபமாக தோல்வியடைந்தாள்.

வித்யுத் ஒவ்வொரு ஆவணத்தையும் படித்து, கூடவே சில குறிப்புகளையும் எடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய கூர்மையான அறிவுத்திறன் பற்றி அவளுக்குத் தெரியும், ஓரிரு நாட்களில் அவன் திட்டத்தை முழுமையாக அறிந்து கொள்வான் என்பதில் சந்தேகமில்லை.

"வேலை செய்யாம அடுத்தவங்கள அப்பாவியா பத்துட்டு இருக்கத்தான் உனக்கு தெரியுமா? இப்படித்தான் நீ வெங்கட் பாராட்டர ஆளா மாறினியா? அவர் சொன்னதைக் கேட்டு நான் கூட நீ ஏதோ சுமாராவாச்சும் வேலை செய்வன்னு நினைச்சேன்" வித்யுத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஏளனத்துடன் அவளை நோக்கி பாய்ந்ததில் அவளின் கன்னங்கள் கோபத்தில் சிவந்தன.

அவனுக்கு சரியான பதில் கொடுக்க யத்தனித்த போது, அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது. அங்கே ரித்வி புன்னகையுடன் நின்றிருந்தாள். "மணி ஒன்னாச்சி ஷர்வி. லன்ச் சாப்பிட போகலாமா?"

இம்முறையும் வித்யுத் அவளை பேச விடவில்லை. "ஸாரி மிஸ். இன்னும் 15 நிமிஷத்தில எங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு." என்று கூறினான்.

"பரவாயில்லை சார். நான் காத்திருக்கேன். எங்கள்ல யாருக்காச்சும் வேலை இருந்தா இன்னொருத்தர் காத்திருக்கறது சகஜம் தான். அப்புறம், நீங்க என்னை ரித்வின்னே கூபிடலாம்." என்று பதில் அளித்தாள்.

"ரித்வி, இந்த மீட்டிங் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியாது. ஆனால் உங்கள் ப்ரெண்ட் லன்ச் சாப்பிறது என்னோட பொறுப்பு. இல்லைன்னா நான் நிறைய பேருக்கு பதில் சொல்லனும் போலிருக்கே. உங்களை போல் அழகும் அறிவும் இருக்கற ப்ரெண்ட் கிடைக்க என்னோட பார்ட்னர் கொடுத்து வெச்சிருக்கனும். அதாவது ப்ராஜெக்ட் பார்ட்னர்." என்று இலகுவான குரலில் கூறினான்.

அவன் கூறக் கூற ஷர்விக்கு முகம் மாறாமல் காப்பது பெரும் கஷ்டமாக இருந்தது. அவளை வெறுப்பேற்றவே இப்படி பேசுகிறான் போலும். ரித்வி அங்கிருந்து வெளியே செல்லும் வரை காத்திருந்தாள்.

"எனக்குத் தெரிஞ்சு இப்போ எந்த மீட்டிங்கும் இல்லை. என்ன நினைச்சிகிட்டு இப்படி நடந்துக்கறீங்க. ரித்விக்கு கல்யாணம் ஆயாச்சு. அவ உங்களோட வலையில் விழுவான்னு தப்பு கணக்கு போட்டு விளையாட வேண்டாம்." என்று கூறிக்கொண்டிருந்தவள், அவனின் எரிக்கும் பார்வையை பார்த்து நிறுத்தினாள்.

"உன்னோட ஈமெயிலை பார்த்திருந்தா, இப்போ ஒரு மீட்டிங்குக்கு, உன்னையும், வெங்கட்டையும் அழைச்சிருக்கறது உனக்குத் தெரிஞ்சிருக்கும். இன்னைக்கு காலை நடந்த மீட்டிங்கில நீ ஒழுங்காக நடந்திருந்த, இது தேவைப்பட்டிருக்காது. அதோடு அடுத்தரோட வாழ்க்கைல விளையாடறதுக்கு, என்னையும் உன்ன போல நினைச்சிட்டியா?" என்று உணர்ச்சி துடைத்த குரலில் கூறினான்.

"நம்மோட தனிப்பட்ட பிரச்சினைகளை அலுவலகத்தில கொண்டு வர பாக்கறீங்களா? ஆமான்னா, நான் கவலைப்படப் போறதில்லை" என்று ஆரம்பித்த ஷர்விகாவை கையை உயர்த்தி நிறுத்தினான்.

"நான் எந்த தனிப்பட்ட பிரச்சினையையும் இங்கு கொண்டு வரலை. அத்தோடு, தனிப்பட்ட முறையில் நான் பேசனும்னா அதுக்கு ஒரு தராதரம் வேண்டும்." அவனின் வார்த்தைகள் ஒன்றொன்றும், அவளை அறைந்தது போல் இருந்தது. அவனிடம் என்ன பேசினாலும், அவளை குத்தி கிளறாமல் விடமாட்டான் என்று அவளுக்கு புரிந்தது. அப்போதைக்கு அமைதியாக இருக்க முடிவு செய்தாள்.

வித்யுத் மீது என்ன கோபம் இருந்தாலும், ஷர்விகாவால் அவனின் திறமையை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. கற்பூரம் போன்று எல்லாவற்றையும் டக்கென்று புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், உடனுக்குடன் அதற்கான புதிய யோசனைகளை கூறிய போது, இந்த ப்ராஜெக்ட் ஒரு நல்ல மேனேஜரின் கையில் சென்றிருப்பதை உணர்ந்தாள்.

மீட்டிங் முடிந்து மணியைப் பார்த்தால், உணவு இடைவெளி நேரம் முடிந்து விட்டது புரிந்தது. இப்போது கேன்டீனில் உணவு எதுவும் இருக்காது. காலையில் குடித்த காபி மட்டும் போதுமானதாக தோன்றாததால் எதாவது சாண்டவிச் மாதிரி கிடைக்குமா என்று பார்க்க முடிவு செய்து, வெளியே நகர்ந்தாள் ஷர்விகா. ஆனால் அவளை நிறுத்தி, "நீ லஞ்ச் சாப்பிடறது என்னைட பொறுப்புன்னு உன் ப்ரெண்ட் கிட்ட சொல்லி இருக்கேன். அதனால வா, வெளியே போய் சாப்பிட்டு வருவோம்." என்று கூறினான்.

"எது? உங்களோடவா? வேண்டாம். நான் இங்கேயே பார்த்துக்கறேன்." என்றவளை உச்சு கொட்டி சலிப்புடன் பார்த்தான்.

"ஒன்னை மனசுல வெச்சிக்கோ. உனக்காக நான் இதை செய்யலை. சொல்லப்போனா, இந்த உலகத்தில் நான் செய்யற கடைசி விஷயமாக இருந்தா கூட அது உனக்காக நான் செய்யும் காரியமாக இருக்காது. அத்னால தேவை இல்லாத கற்பனைகளை வளர்த்துக்காம, கிளம்பி வா." என்று கூறிவிட்டு, அவளின் பதிலை எதிர்பார்க்காலம் விடு விடுவென்று வெளியே சென்றான்.

ஷர்விகாவிற்கு வரும் கோபத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள். எல்லா வாதங்களிலும் அவனின் வார்த்தைகள் தான் கடைசியாக இருக்கிறதே, சே!

அந்த ஹோட்டலில் அமைதியான ஒரு இடத்தை தேடி இருவரும் அமர்ந்தனர். ஆர்டர் எடுக்க வந்தவரிடம், இருவருக்கும் ஸ்வீட் கார்ன் சூப் மற்றும் பிரைட் ரைஸ் வேண்டுமென்று சொன்னான்.

"எனக்கு இது தான் பிடிக்கும்னு நீங்க எப்படி முடிவு செய்யலாம்? என்னுடைய விருப்பங்கள் மாறி இருக்கலாம்ல?" என்று சற்று கோபமாக கேட்டாள் ஷர்விகா.

"உனக்கு வேண்டாம்ன்னா ஆர்டர் செய்யறப்பவே நீ சொல்லியிருக்கலாம். இப்போ சின்னபுள்ளத்தனமா சண்டை போட வேண்டாம். என்னை மட்டம் தட்டறதுக்காக புத்திசாலித்தனமாக பேசுறதாக நினைப்போ. அது உனக்கு பொருந்தலை." என்றவன் ஒரு சிறிய மௌனத்தின் பின், "இல்லை. அப்படிசொல்லக்கூடாது. உன்னோட தந்திரமும், புத்திசாலித்தனமும் உன் அப்பாவியான முகத்தோட பொருந்தலைன்னு தான் சொல்லனும்" என்று முடித்தான்.

அதற்க்கு மேல் அவனுடைய குற்றச்சாட்டுகளை பொறுக்க முடியாமல் "உங்களுக்கு என்னோட இருக்க முடியாலைன்னா, இந்த ப்ரொஜெக்ட்ல நீங்கள் ஏன் சேரனும்?" என்று கேட்டாள்.

"உனக்காக இதுமாதிரி நல்ல ப்ராஜக்ட்டை இழக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை. இது என்னோட எதிர்காலத்துக்கு நல்லது, அதை இழக்க நான் விரும்பலை. இதோ பார், நமக்குள் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம், குறைந்தபட்சம் அலுவலகத்தில் அதை காட்டிக்காம வேலை செய்ய முடியும்னு நான் நினைக்கறேன். எப்படியும், நீ ஆன்சைட் போயிட்டா நாம ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்க தேவையில்லை. என்ன சொல்ற? "

ஷர்விகாவிற்கு வேறு வழி தெரியவில்லை. அவனை தினம் தினம் பார்ப்பது வேதனை என்றாலும் இப்போதைக்கு வேறு வழி இல்லை. இனி இழக்கப்போகும் மன அமைதியை நினைத்த போது, அவளின் பசி அவளை விட்டு போய்விட்டது. சாப்பிடவில்லை என்றால் அதற்கும் ஏதாவது சொல்லி அவள் மனதை காயப்படுத்துவானோ என்று பயந்து அமைதியாக உண்ணலானாள்.

இரு கட்டத்தில் மெதுவாக "ஆன்ட்டி அங்கிள் எப்படி இருக்காங்க?" என்று கேட்டான். ஷர்விகா ஆச்சர்யத்துடன் "நீங்க இன்னும் அவங்கள ஆன்ட்டி அங்கிள்ன்னு கூப்பிடறீங்களா? அவங்க இப்போ உங்களுக்கு வில்லன்களா இல்ல தெரிவாங்க" என்று பதிலுரைத்தாள்.

வித்யுத் அவள் கண்களை நேராக சந்தித்து, "உன் அம்மா அப்பா நல்லவங்கன்னு எனக்குத் தெரியும். அவங்காளோட பொண்ணு கெட்டவங்கறதால நான் அவங்களை மரியாதை இல்லாம நினைக்க மாட்டேன். அதோட நீ இந்த கேள்வியை எங்கிட்ட கேக்க மாட்டன்னு தெரியும். நீ இன்னும் என் அம்மா அப்பாவோட ட்ச்ல தான் இருக்கன்னும் தெரியும். எல்லோரும் நான் தான் சரியில்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்க. உண்மைல உன்னைப்போல அப்பாவியாய் முகத்தை வெச்சிகிட்டு எல்லாரையும் ஏமாத்தறது நான் இல்லைன்னு யாருக்கும் தெரியாது." என்று கடுமையுடன் பேசினான்.

தாங்கமாட்டாமல் ஷர்விகா அவனைக் கேட்டாள் "தயவு செஞ்சு சொல்லுங்க விது. நீங்க இப்படி நினைக்கற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்..." அவளை சொல்லி முடிக்கும் முன் வித்யுத் இடை மறித்தான்.

"என்ன விதுன்னு கூப்பிடாத. எனக்கு நெருக்கமானவங்க தான் என்னை அப்படி கூப்பிட முடியும். அதோடு நான் ஏன் இப்படி சொல்றேன்னு உனக்கு தெரியும், நீ நல்லவன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். சாப்பாடு இது போதுமா இல்லை இன்னும் ஏதேனும் சொல்லவா?"

ஷர்விகா அயர்ந்து போனாள். இவ்வளது கடுமையாக பேசிவிட்டு அவனால் எப்படி உணவை பற்றி சாதாரணமாக பேச முடிகிறது. வேண்டாம் என்று அவள் தலையசைத்தவுடன் பில் கொண்டுவருமாறு பணித்தான். அவளின் உணவிற்கு ஷர்விகா பணம் கொடுத்த போதும், அவன் ஒன்றும் சொல்லவில்லை.

இவனுடன் இன்னும் 2 மாதங்கள் எப்படி போக்குவது? கடவுளே அதற்குறிய மன பலத்தை நீ தான் தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே அவனுடன் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பினாள்.
 

Rajam

Well-known member
Member
காதலர்களா பிரிந்தார்களா.
கல்யாணமாகி பிரிந்தார்களா.
அவளிடம் குற்றம் காணமளவுக்கு
என்ன நடந்தது.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom