• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணீர் - அத்தியாயம் 17

Nuha Maryam

✍️
Writer
"அப்பா... வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? அந்த வக்கீல் நம்ம டீலுக்கு சம்மதிச்சாரா?" என பிரதாப் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அவனின் தந்தை, "எங்கடா மகனே அந்த ஆளு சம்மதிக்கிறது? ஒரே நீதி, நேர்மை, விசுவாசம்னு கதை அளந்துட்டு இருக்கான்... மெய்ன் டாக்கிமன்ட் நம்ம கைக்கு வராம நம்மளாலயும் எதுவும் பண்ண முடியல..." என்றார் சலிப்பாக.

பிரதாப்,"நீங்க கவலைப்படாதீங்கப்பா... அந்த ஓடுகாலி கழுதையை என் வழிக்கு சீக்கிரமா கொண்டு வரேன்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன் உடனே அவன் தீட்டிய திட்டத்தை செயற்படுத்த ஆயத்தமானான்.

************************************

"ஏங்க... நம்ம இன்னைக்கு பெங்களூர் போகலாமா? எனக்கு பிரணவ்வை பார்க்கணும் போல இருக்குங்க..." என ஆஃபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த மூர்த்தியிடம் அவர் மனையாள் லக்ஷ்மி கேட்கவும் அவரைக் கேலிப் பார்வை பார்த்த மூர்த்தி, "என்ன லக்ஷ்மி? புதுசா பையன் மேல அக்கறை?" எனக் கேட்டார்.

லக்ஷ்மி, "எனக்கு எப்பவும் என் பையன் மேல அக்கறை இருக்குங்க... அது உங்களுக்கும் உங்க பையனுக்கும் தான் புரியல... அவன் தகுதி தராதரம் பார்த்து யார் கூடவும் பழக மாட்டேங்குறான்னு தான் எனக்கு கோவமே..." என்றார் முறைப்புடன்.

மூர்த்தி, "சரி அதை விடு லக்ஷ்மி... எதுக்கு இப்போ திடீர்னு அவனைப் பார்க்க போகணும்னு சொல்ற... முன்னாடி கூட அவன் தனியா தானே இருப்பான் அதிகமா..." என்க, "தெரியலங்க... ப்ளீஸ் நாம இப்பவே கிளம்பலாம்... காலைல இருந்து என் மனசுக்கு என்னவோ போல இருக்குங்க..." என்ற லக்ஷ்மி அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனுடன் சேர்ந்து விமானத்தில் பெங்களூர் பறந்தார்.

************************************

அன்று அனைவருக்கும் முன்னதாகவே ஆஃபீஸ் வந்து விட்டாள் அனுபல்லவி.

வழமையாகவே பிரணவ் அனைவருக்கும் முன்னதாக ஆஃபீஸ் வந்து விடுவான். அதனால் இன்று சாருமதியிடம் அனுபல்லவி ஏதேதோ கூறி சமாளித்து விட்டு பிரணவ்வை சந்திக்க வந்து விட்டாள்.

தன் மேசையில் இருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தவன் கதவு தட்டும் சத்தத்தில் ஆகாஷ் தான் வந்து விட்டதாக எண்ணி, "உள்ள வாங்க ஆகாஷ்... நான் சொன்ன வர்க்ஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" எனக் கேட்டான் தலையை நிமிர்த்தாமலே.

பல நிமிடங்கள் கழித்தும் பதில் வராததால் தலையை நிமிர்த்திப் பார்த்த பிரணவ் தன் முன் மௌனமே உருவாய் தலை குனிந்து நின்றிருந்த அனுபல்லவியைக் கண்டு அதிர்ந்தான்.

"பல்லவி... என்னாச்சு? ஏன் பேசாம நின்னுட்டு இருக்க?" எனக் கேட்டவாறு எழுந்து அவளிடம் சென்று அவளின் தாடையைப் பற்றி தன் முகம் பார்க்க வைத்தான் பிரணவ்.

அனுபல்லவியின் கலங்கியிருந்த கண்களைக் கண்டு பதட்டம் அடைந்த பிரணவ், "ஏன் பல்லவி கண் கலங்கி இருக்கு? அந்த பிரதாப் திரும்ப உன்ன தொந்தரவு பண்ணானா? அன்னைக்கே அவனுக்கு நான் ஒரு வழி பண்ணி இருப்பேன்... நீ தான் வேணாம்னு சொன்ன..." என ஆத்திரப்படவும் சட்டென அவனை அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

புன்முறுவலுடன் தன்னவளை ஒரு கரத்தால் அணைத்துக்கொண்டு மறு கரத்தால் அவளின் தலையை வருடி விட்ட பிரணவ், "ஷ்ஷ்ஷ்... அழாதேடா... என்னாச்சு?" எனக் கேட்கவும் அவன் நெஞ்சில் இன்னும் அழுத்தமாக முகத்தைப் புதைத்த அனுபல்லவி, "நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க என்னை வெறுக்க மாட்டீங்களே..." எனக் கேட்டாள்.

பிரணவ், "நீ எனக்கு கிடைச்ச வரம்... உன்ன எப்படி நான் வெறுப்பேன்..." என்க, "என்னை விட்டு போயிட மாட்டீங்களே..." என அழுதவாறே பல்லவி கேட்கவும் அவளைத் தன்னை விட்டுப் பிரித்து அனுபல்லவியின் கன்னங்களைத் தாங்கி விழியோடு விழி நோக்கிய பிரணவ், "உன்னைப் பிரியும் ஒரு சூழ்நிலை வந்தா அது என் கடைசி மூச்சு நின்னு போற நேரமா இருக்கும்..." என்கவும் பட்டென அவன் வாயில் அடித்தாள் அனுபல்லவி.

"ஹேய்... எதுக்கு டி அடிக்கிற? நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்..." என்றான் பிரணவ் மென்னகையுடன்.

அனுபல்லவி, "அதுக்காக அப்படி சொல்லுவீங்களா நீங்க?" என முறைக்க, அவளின் கோபத்தை ரசித்த பிரணவ், "சரி சரி சாரி டா... சொல்லு என்ன விஷயம்? என்னைப் பார்க்க தான் இவ்வளவு ஏர்லியா வந்தியா?" எனக் கேட்டான்.

"ஹ்ம்ம்... உங்க கிட்ட... அது... என்னைப் பத்தி முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்..." என பிரணவ்விடமிருந்து விலகி அனுபல்லவி தயங்கியவாறு கூறவும் பிரணவ் அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்துக்கொண்டே, "என்ன சொல்றதா இருந்தாலும் இப்படியே இருந்துட்டு சொல்லு... நமக்குள்ள எந்த டிஸ்டான்ஸும் இருக்க கூடாது..." என்றவன் அனுபல்லவியின் கழுத்தில் முகம் புதைத்தான்.

பிரணவ்வின் நெருக்கம் அனுபல்லவியை ஏதோ செய்ய, நெளிந்து கொண்டே, "நான்..." என ஏதோ கூற வர, அதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பட்டென பிரணவ்வை விட்டு விலகினாள்.

பிரணவ், "கம் இன்..." என அனுமதி அளிக்கவும் உள்ளே வந்த ஆகாஷ் அனுபல்லவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "பாஸ்...மேடமும் சாரும் வந்து இருக்காங்க..." என்கவும், "வாட்?" என அதிர்ந்தான் பிரணவ்.

அனுபல்லவிக்கு தான் கூற வந்ததை பிரணவ்விடம் கூறிய முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் தன் அத்தை, மாமாவைக் காணும் ஆவல் ஏற்பட்டது.

பிரணவ், "அவங்க எதுக்கு இங்க வந்தாங்க? என் கிட்ட கூட சொல்லாம..." எனக் கோபப்படும் போதே அவ் அறைக்குள் நுழைந்த லக்ஷ்மி, "எங்க பையனை பார்க்க வர எங்களுக்கு உரிமை இல்லயா? எவ்வளவு ஆசையா வந்தோம் உன்ன பார்க்க... நீ என்னன்னா நாங்க ஏன் வந்தோம்னு கேட்குற?" எனக் கேட்டார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த பிரணவ், "இது என்ன புதுக் கதையா இருக்கு? நான் எப்படி இருக்கேன் என்ன பண்ணுறேன்னு சின்ன வயசுல இருந்தே என்னைக் கண்டுக்காம பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடினவங்களுக்கு இப்போ மட்டும் என்ன பாசம்?" எனக் கேட்கவும், "பிரணவ்..." எனச் சத்தமாக அழைத்தார் மூர்த்தி.

மூர்த்தி, "இப்படி தான் பெத்தவங்க கூட பேசுவியா? அதுவும் இல்லாம நீ இந்தக் கம்பனி எம்.டி மட்டும் தான்... எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் என்னோடது. எங்களுக்கு இங்க வர உரிமை இல்லயா?" என்கவும் பிரணவ்வின் முகம் இறுக, அனுபல்லவிக்கு தன்னவனைக் காணக் கவலையாக இருந்தது.

மூர்த்தியின் பேச்சில், "வாவ்... ரொம்ப நல்லா இருக்கு டேட்... உங்க கம்பனி... ஹ்ம்ம்..." எனக் கை தட்ட, "பிரணவ்... அப்பா அந்த அர்த்தத்துல சொல்ல வரலப்பா... இந்த மொத்த சொத்துக்கும் நீ தான் வாரிசு..." என்றார் லக்ஷ்மி.

இன்னும் ஏதோ பேச வந்த லக்ஷ்மி அங்கு நின்ற அனுபல்லவியை ஒரு பார்வை பார்க்க, "சார்... நான்... நான் அப்புறம் வரேன்..." எனப் பிரணவ்விடம் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள்.

பிரணவ் கோபமாக தன் இருக்கையில் அமர்ந்தவன், "ஆகாஷ்... என்ன விஷயமா இங்க வந்து இருக்காங்கன்னு கேளுங்க..." என்க, பிரணவ் தம்மை யாரோ போல் நடத்துவது மூர்த்தியையும் லக்ஷ்மியையும் குத்திக் கிழித்தது.

லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... அப்பாவும் அம்மாவும் உனக்காக தானே டா ஓடியோடி சம்பாதிக்கிறோம்..." என பிரணவ்வின் தலையை வருடவும், "நான் கேட்டேனா?" என ஆவேசமாகக் கேட்டான் பிரணவ்.

பிரணவ்வின் கோபக் குரல் மூடி இருந்த அறையைத் தாண்டி வெளியே கேட்க, அப்போது தான் ஆஃபீஸ் வந்தவர்கள் அனைவரும் என்னவோ ஏதோ என அவ் அறைக்கு வெளியே கூடினர்.

அனுபல்லவியும் சாருமதியுடன் அங்கு பதட்டமாக நின்றிருந்தாள். பிரணவ்வை இது வரை இவ்வளவு ஆத்திரப்பட்டு காணாதவளுக்கு அவனின் இந்தக் கோபம் அதிர்ச்சியாக இருந்தது.

"பாஸ்..." என உடனே ஆகாஷ் அவனை அமைதிப்படுத்த முயல, "நான் கேட்டேனா உங்க பணம் எனக்கு வேணும்னு? சொல்லுங்க... நான் கேட்டேனா எனக்கு பணம் தான் முக்கியம்னு... சின்ன வயசுல இருந்தே நான் உங்க கிட்ட கேட்டது எனக்கான பாசத்தை... அதைத் தந்தீங்களா ரெண்டு பேரும்?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

அவனின் ஒவ்வொரு கேள்வியும் மூர்த்தியையும் லக்ஷ்மியையும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது.

பிரணவ், "நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு தேவையான எல்லாம் பண்ணினது நீங்க சம்பளம் கொடுத்து வெச்சிருந்த வேலைக்காரங்க தான்... எனக்கு சின்னதா காய்ச்சல் வந்தா கூட உங்க மடில படுக்க ஆசைப்பட்டு எத்தனை தடவை உங்களைத் தேடி இருக்கேன்னு தெரியுமாம்மா?" எனக் கேட்டான் லக்ஷ்மியிடம்.

மூர்த்தி, "பிரணவ்..." என அவனை நெருங்க, "இருங்க... நான் இன்னைக்கு பேசியே ஆகணும்... எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளே வெச்சி நான் அவஸ்தைப்படுறது? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்பா அம்மா கூட ஸ்கூல் வருவாங்க... நான் மட்டும் டெய்லி ட்ரைவர் கூட போவேன்... பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு கூட வர மாட்டீங்க... எல்லாம் கால்ல பேசி முடிச்சிடுவீங்க... அப்பா அம்மா இருந்தும் அநாதையா இருக்குறது எவ்வளவு கொடுமை தெரியுமா?" என்றவனின் கண்கள் கலங்கின.

மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் அப்போது தான் தம் தவறு புரிந்தது.

பிரணவ்வின் நலனுக்காக என எண்ணி செய்தவை அனைத்தும் தம் மகனுக்கு இவ்வளவு அநீதி இழைத்துள்ளதா எனப் புரிந்து குற்றவுணர்ச்சியில் நின்றனர்.

சரியாக ஆகாஷின் கைப்பேசி ஒலி எழுப்ப, ஒரு ஓரமாகச் சென்று அழைப்பை ஏற்றவன் மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்தான்.

ஆகாஷ், "பாஸ்..." எனப் பிரணவ்விடம் வந்தவன் அறை சுவற்றில் மாட்டி இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் காட்டிய செய்தியில் அனைவரும் அதிர்ந்தனர்.

அறைக்கு வெளியே நின்றிருந்த ஊழியர்கள் கூட அச் செய்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவருக்குமே அதில் கூறப்பட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

அனுபல்லவிக்கு தன்னவனின் மனநிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. இப்போதே உள்ளே நுழைந்து அவனை அணைத்து ஆறுதல் அளிக்க அவளின் மனம் உந்தியது.

"பிரபல தொழிலதிபர் மற்றும் எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் ஸ்தாபகர் மூர்த்தி ராஜின் மகனான இளம் தொழிலதிபர் பிரணவ் ராஜ் அவரின் சொந்த மகன் இல்லை என சற்று முன்னர் வெளிவந்த செய்தியில் மக்கள் மத்தியில் பரபரப்பு."

"தொழிலதிபர் மூர்த்தி ராஜின் மனைவியின் சகோதரரான எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் பங்குதாரரான ராமலிங்கத்தின் பேட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது."

"இளம் தொழிலதிபர் பிரணவ்விற்கு ஆண்மைக் குறைபாடு."

"ஆண்மையற்ற ஒருவர் நிறுவனத்தைப் பொறுப்பெடுத்து நடத்துவதா? எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் ஊழியர்கள் எதிர்ப்பு"

"ஆம்பளையே இல்லாதவன்லாம் எப்படி கம்பனி நடத்துவான்?"

"ஒரு அநாதைக்கு இவ்வளவு சொத்தா? கொடுத்து வெச்சவன் தான்..."


இவை அனைத்தும் சில மணி நேரத்துக்குள் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில் வந்த செய்திகள்.

தொலைக்காட்சியில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டதும் பிரணவ்விற்கு அன்று பார்ட்டியின் போது ராமலிங்கம் கூறியவை மாத்திரம் தான் செவிகளில் ஒலித்தன.

லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... அவனுங்க ஏதோ பொய் சொல்றாங்க... நீ அதெல்லாம் கண்டுக்காதேப்பா... நீ எங்க பையன்டா..." என அவனை நெருங்க, "கிட்ட வராதீங்க..." என்றான் பிரணவ் அழுத்தமாக.

அவனின் இறுகி இருந்த தோற்றம் ஆகாஷிற்கே வருத்தமாக இருந்தது.

மூர்த்தி, "பிரணவ்... என்ன நடந்ததுன்னு அப்பா சொல்றேன் டா..." என்கவும் அவரின் முகத்தை ஏளனமாக நோக்கிய பிரணவ், "அப்பாவா? யாருக்கு? அதான் உங்க மச்சினர், அம்மாவோட தம்பி, என்னோட பாசமான தாய் மாமன் மிஸ்டர் ராமலிங்கம் எல்லா நியூஸ்லயும் பேட்டி கொடுத்து இருக்காரே... இன்னுமா மறைக்க நினைக்கிறீங்க?" எனக் கேட்டவனின் குரலில் இனம் காண முடியாத ஒரு உணர்வு.

லக்ஷ்மி, "பெத்தா மட்டும் தான் உனக்கு நாங்க அப்பா அம்மாவா? உன்ன வளர்த்த எங்களுக்கு அந்தத் தகுதி இல்லயா?" எனக் கேட்டார் கண்ணீருடன்.

இவ்வளவு நேரமும் தான் கேட்டவை அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என அவனின் உள் மனம் பிரார்த்திக்க, லக்ஷ்மி கூறியதைக் கேட்டதும் மொத்தமாகவே உடைந்து விட்டான் பிரணவ்.

அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவனின் அருகில், "கண்ணா..." என அழைத்தவாறு மூர்த்தியும் லக்ஷ்மியும் நெருங்க, "இதனால தான் இவ்வளவு வருஷமா என்னை உங்க கிட்ட இருந்து தள்ளியே வெச்சி இருந்தீங்களாம்மா? அப்படியாப்பா?" என உடைந்த குரலில் கேட்க, "இல்லப்பா... நீ எங்க புள்ள..." எனக் கண்ணீர் விட்டார் லக்ஷ்மி.

கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த பிரணவ், "வளர்த்தா அப்பா அம்மா இல்லயான்னு கேட்டீங்க... நீங்க எங்கம்மா என்னை வளர்த்தீங்க? நானா தானே வளர்ந்தேன்..." என்கவும், "பிரணவ்..." என்றார் மூர்த்தி கண்ணீருடன்.

பிரணவ் திடீரென தலையை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள, "பிரணவ் கண்ணா... என்னப்பா ஆச்சு?" என லக்ஷ்மி பதற, அவர் முன் கை நீட்டி தடுத்த பிரணவ், "இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி இல்ல... இப்பவாவது உண்மைய சொல்லுங்கம்மா..." என்றான் கெஞ்சலுடன்.

"அதை சொல்லத் தான் மருமகனே நான் வந்து இருக்கேன்..." என்றவாறு உள்ளே நுழைந்தார் ராமலிங்கம்.

அவரைக் கண்டு பிரணவ் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதிருக்க, ராமலிங்கத்தின் சட்டையௌ ஆவேசமாகப் பற்றிய மூர்த்தி, "ஏன் டா இப்படி பண்ண? நாங்க உனக்கு என்னடா பண்ணோம்?" எனக் கேட்டார்.

தன் தம்பியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த லக்ஷ்மி, "ஏன் லிங்கா இப்படி பண்ண? நான் உன்ன தம்பியாவா டா நடத்தின? உன்னையும் என் பையன் போல தானே டா நடத்தினேன்... பாவி... பாவி..." எனக் கதறினார்.

அவரின் கரத்தைத் தட்டி விட்ட ராமலிங்கம், "ஆமா... யார் இல்லன்னு சொன்னாங்க? நீயும் மாமாவும் என்னை உங்க பையனா தான் பார்த்துக்கிட்டீங்க... ஆனா இந்த அநாதை வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சு?" என்கவும் மூர்த்தியும் லக்ஷ்மியும் அதிர்ந்தனர்.

பிரணவ்வோ ராமலிங்கத்தையே கேள்வியாக நோக்கினான்.

வெளியே நின்றிருந்த ஊழியர்களும் செய்தியில் காட்டியதைப் பற்றியே தமக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, "என்ன டி அனு நடக்குது இங்க? ஏதேதோ சொல்றாங்க..." எனக் கேட்டாள் சாருமதி குழப்பமாக.

அனுபல்லவியோ தோழிக்கு பதிலளிக்காது பதட்டமாக இருந்தாள்.

"என்ன இங்க கூட்டமா இருக்கு? உங்களுக்கு வேலை எதுவும் இல்லயா? போங்க எல்லாரும் இங்க இருந்து..." என மேனேஜர் மோகன் சத்தமிடவும் கூட்டம் கலைந்தது.
 

New Episodes Thread

Top Bottom