• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 20 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 20

ஆதி நார்வே சென்று சேர்ந்து பதினைந்து நாட்கள் முடிந்தது. சென்ற முறை அவன் இங்கே வரும்போது மனதில் ஒரு எதிர்பார்ப்பும், சாதிக்கும் ஆர்வமும் இருந்தது.

ஆனால் இந்த முறை அவன் மனதில் தான் பார்க்கும் வேலை மீதான விருப்பம் இருந்தாலும், ஒரு உற்சாகமில்லா மனநிலையே இருந்தது. அதற்கு காரணம் பிரயுவிற்கும் அவனுக்குமான இடைவெளி.

அவன் ஊருக்கு சென்றபோது பிரயுவிடம் மனம் விட்டு பேசமுடியாமல் போனது அவனுக்கு வேதனையாக இருந்தது. தன் வீட்டில் பிரயுவிற்கு சரியான அங்கீகாரம் இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்தது.

இதுவரை பிரச்சினைகள் வந்து அதை ஒரு மாதிரி சமாளித்து இருந்தாலும், அது பெரிதாக்க படமால் இருந்தது பிரயுவால் மட்டுமே என்று புரிந்தது. சூழ்நிலை அவர்களை கட்டுபடுத்தினாலும், அவனுக்கு அந்த சூழ்நிலை உருவான விதம் மட்டும் பிடிக்கவில்லை. தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள் தன் அன்னை மூலம் சங்கடங்களாக மாறி விட்டு இருந்ததோ என்று தோன்றியது. ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளவும் முடியவில்லை.

நார்வேயின் கிளைமேட் என்பது அங்கே வாழ்கின்ற மக்களுக்கு பழக்கமே. அதற்கு அவர்கள் ஏற்ற முன்னேற்பாடும் செய்திருப்பார்கள். அந்த கலாச்சாரமும் அவர்களை அதற்கு வழி நடத்தும். ஆனால் இந்திய கிளைமேட்டிலிருந்து வருபவர்களுக்கு அது மிகவும் மன உளைச்சலை உண்டாக்க கூடியது. குளிர் காலத்தில் உறைய வைக்கும் பனியும், கோடை காலத்தில் சூரியன் மறையாத நிலையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். அதற்கேற்ற உணவு முறையும் ஆதியால் கடைபிடிக்க முடியாது. அதனால் உடல் சோர்வு, மனசோர்வு மிகுதியாக இருக்கும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக அவன் தனியாக இருப்பது தான் என்றாலும், இந்த முறை எல்லோரோடும் இருந்து விட்டு வந்தவனுக்கு இங்கே அவன் தனிமை அவனை கொன்றது. வித்யா மாமியார் சொந்த ஊருக்கு செல்லும்போது, வேனில் பிரயுவிடம் அவன் செய்த சில்மிஷங்களும், அதற்கு பிரயுவின் வெட்கமும் அந்த அனுபவம் ஆதிக்கு பிரயுவை தேடியது. அவன் அங்கே பிரயுவோடு எடுத்துக் கொண்ட போடோக்கள் மட்டுமே அவனுக்கு ஆறுதல்.

இங்கே வந்து சேர்ந்த அன்று பிரயுவிடம் பேசினான். அவனுடைய நலத்தை கேட்டறிந்தவள் , அதன் பின் அவன் கேட்ட கேள்விக்கு பதில் என்ற அளவில் பேசினாள்.

அவளாக அவனுக்கு கூப்பிடுவது இல்லை. அவன் கூப்பிடும் போதும் வெறும் நல விசாரிப்பு மட்டுமே. அந்த நல விசாரிப்பும் ஒரு விலகல் தன்மையோடு இருந்தது.

இதை எல்லாம் எண்ணியவன் இன்னும் இரண்டரை வருடம் எப்படி போக்குவது என்று கவலை கொள்ள ஆரம்பித்தான். நான்கு வருடம் கழித்து அவன் இந்தியா செல்லும் போது பிரயுவின் மன நிலை என்னவாக இருக்கும்? அவர்களுக்கு இடையே ஆன இடைவெளி மிகபெரிய பள்ளமாகிவிடும் என்று பயம் வந்தது.

அவன் பதினைந்து நாட்களாக யோசித்து ஒரு முடிவு எடுத்தான். அதன் பலாபலன்கள் பற்றி மேலும் தீவிரமாக சிந்தித்து தன் கம்பெனியோடும், நண்பர்களோடும் பேசி தேவையான வேலைகளை செய்தான். அவன் செயல்களின் முடிவு தெரியாத நிலையில் அதை பற்றி அவன் யாருக்கும் சொல்லவில்லை.

ஆதியின் முடிவு அவனுக்கு சாதகமாக மாற ஆரம்பித்து இருந்தது. அதனால் அவனுக்கு காலம் வேகமாக நகர்ந்தது.

ஆனால் பிரயுவிற்கோ காலம் தள்ளுவது பெரும் பாடாகியது. அவளுக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் பிரச்சினை வர ஆரம்பித்தது.

ஆதி நார்வே சென்ற அடுத்த நாள், பிரயுவின் தங்கைகள் போனில் பேசினார்கள்.

“அக்கா. நீங்க கூட இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல. என்னதான் அத்தான் வழி உறவுகள் முக்கியம் என்றாலும், நாங்க உன் கூட பிறந்தவங்க, எங்களையும் நீங்க நினைக்க வேண்டாமா? அத்தானுக்கு லீவ் குறைவுதான். அதுக்காக ஒரு டீ சாப்பிடும் நேரமாவது எங்களை வந்து பார்த்திருக்கலாம் இல்லியா? அவருக்கு அதுக்கு விருப்பம் இல்லைனாலும் நீங்களாவது சொல்லிக் கூட்டி வந்திருக்கலாம் இல்லை?”

“ஹே. அப்படி எல்லாம் இல்லை. நாங்களும் கிளம்பினோம். அப்போ தீடிர் என்று அவங்க சொந்தகாரங்க அதுவும் ஊரில் இருந்து வந்துட்டாங்க. ஒன்னும் பண்ண முடியல . உங்களுக்கு கிப்ட்ஸ் எல்லாம் வாங்கி வந்தவர், உங்களை எப்படி நினைக்காம இருப்பார்?”

“நீ என்னதான் சொல்லு. அவர் வந்து பார்க்காதபோது அந்த கிப்ட்ஸ் எங்களுக்கு எதுக்கு ? உனக்கே தெரியும் . உங்கள வரக்கூடாதுன்னு சொன்னதுக்காக நாங்க அந்த கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னோம். அப்புறம் எப்படியோ நடந்தது. எங்க மாமியார் உங்க நாத்தனார் குழந்தை பேர் வைக்கிற ஃபங்சன்க்கு அனுப்பி வைச்சாங்க. அத்தான் கல்யாணத்திற்கு தான் வரல. இப்போ அட்லீஸ்ட் எங்கள வந்து பார்துட்டாவது போய் இருக்கலாம் . இப்போ எங்க மாமியார் எங்கள கேள்வி மேல கேள்வி கேட்கறாங்க.. இது எல்லாம் தேவையா? “ என்று முடித்தவர்கள் அதற்கு பின் போன் வைத்து விட்டார்கள்.

பிரயுவிற்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் கேட்பது சரிதான் என்றாலும், அவர்கள் கேள்வி தன் கணவனை நோக்கி எனும்போது அவளின் வேதனை அதிகம். அவளால் தன் தங்கைகளிடம் கூட ஆதியை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

இதை பற்றி அவள் யாரிடமும் பேசவோ , திட்டி ஆறுதல் பட்டுக் கொள்ளவோ முடியாது. ஆதியிடம் சொன்னால் அவள் தங்கைகளை தவறாக நினைப்பான். தன் பெற்றோரிடம் சொன்னாலும் அவர்களும் தங்கைகளுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். என்ன அவர்கள் போல் கோபமாக இல்லாமல், வருத்தமாக சொல்லுவார்கள்.

அவள் தோழி ப்ரியாவிடம் பேசினால் ரெண்டு பேரையும் திட்டினாலும், இவளுக்கு ஆறுதல் சொல்லுவாள்.

ஆனால் அவளும் கல்யாணம் முடிந்து பெங்களூர் சென்று விட்டாள். அங்கே அவள் வேலைக்கு போவதால் அதிகம் பேச முடியாது.

ஆதி வந்து சென்ற பின்பு, அவனை பிரிந்த அழுத்தம், தங்கைகளின் பேச்சு , ஆதி இங்கே வந்தபோது நடந்த விஷயங்கள் என்று அவளின் மன அழுத்தம் அதிகமாகியது. மேலும் அவளின் பற்றற்ற உணவுமுறை அவளின் உடல் நிலையை பாதித்தது.

அந்த வாரத்தில் ஒருநாள் தான் வேலை பார்க்கும் இடத்தில் மயங்கி விழுந்து விட்டாள். உடனே அவளை மருத்துவர்கள் பார்த்து விட்டாலும், அவளை எச்சரித்தனர். இது இரண்டாவது தடவை. மன அழுத்தம் நீங்க எதாவது விஷயத்தில் அவள் கவனத்தை திசை திருப்ப சொன்னார்கள். ஆனால் ப்ரயு அதில் அலட்சியம் காட்டி விட்டாள்.

இப்பொழுது எல்லாம் அவள் மாமியாரும், அவளும் அதிகமாக பேசிகொள்வது இல்லை, அதே சமயம் சண்டையும் இல்லை.

ஆதியிடம் ப்ரயு சரியாக பேசுவது இல்லை என்பதால் அவனும் வாரத்திற்கு இருமுறை என்றுதான் போன் செய்கிறான்.

என்னதான் தான் கோபமாக இருந்தாலும் , அவன் தன்னிடம் பேச வேண்டும் என்று அவள் மனம் எதிர்பார்த்தது.

தான் பதில் பேசாமால் அவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அவனால் எவ்வாறு பேச முடியும்? இதை அவள் எண்ணவில்லை.

அவள் மனதில் ஆதிக்கு தான் தேவை இல்லையோ? தன்னுடைய அருகாமை அவனுக்கு பிடிக்கவில்லையோ? என்று மனம் குழம்ப ஆரம்பித்து இருந்தது.

இந்நிலையில் பிரயுவின் தங்கைகளுக்கு வளைகாப்பு வைத்தார்கள். அதற்கு சென்ற பிரயு மற்றும் அவள் மாமியார் இருவரிடம் ஆதி தங்கள் வீட்டிற்கு வராதது தவறு என்று அவள் தங்கை மாமியார் முகத்துக்கு நேராகவே சொன்னார்.

பிரயுவின் மாமியாருக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. அன்று தன்னால்தான் ஆதி வரவில்லை என்றும் சொல்ல முடியவில்லை,

இருவரும் ஏதோ சொல்லி சமாளித்தனர். ஆனால் அவரை கேள்வி கேட்ட கோபம் பிரயுவின் மேல் பாய்ந்தது.

பிரயுவிடம் “இதோ பார் . ப்ரத்யா உன் தங்கை வீட்டு விஷேஷங்களுக்கு எல்லாம் இனிமேல் என்னை கூப்பிடாதே. ஆதி வராதது பற்றி நேரிலேயே கேட்கிறார்கள். ஏதோ சூழ்நிலை என்று எண்ணாமல் அதையே எல்லோர் முன்னிலையிலும் கேட்டு சங்கடபடுத்துகிரர்கள். ஏன் அவர்கள் நிச்சயத்தின் போது பேசியதை நானும் எல்லோர் முன்னிலையிலும் கேட்டால் எங்கே கொண்டு முகத்தை வைத்துகே கொள்வார்கள், ஏதோ உன் அப்பா, அம்மா முகத்திற்காக பார்த்தேன்.” என்று பொரிந்து தள்ளி விட்டார்,

இவர்கள் எல்லோர் ஈகோவிலும் , சுயநலத்திலும் பாதிக்கப்பட்டது ப்ரயு மட்டுமே. ஆதி தனிமையில் கஷ்டபட்டாலும், இது போன்ற பேச்சுக்கள் அவன் கேட்கவில்லை.

இதற்கு இடையில் பிரயுவின் தங்கைகள் இருவருக்கும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் குழந்தை பிறந்தது.

ப்ரயு தன் தாய்க்கு உதவியாக தன் வீட்டிற்கு செல்ல மாமியாரிடம் கேட்ட போது அவர் சரி எனவே அவள் முதலில் ஹாஸ்பிடல் சென்றாள்.

முதல் தங்கை குழந்தை டெலிவெரி முடிந்து , அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்றவள், தாயையும் சேயையும் பார்த்துக் கொண்டாள். அவள் தங்கைகளோடு பெரிய அளவில் பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், அவள் விட்டு கொடுக்க விரும்பவில்லை.

ஆனால் இவர்களை பார்க்க வந்த சில சொந்தங்கள் அவள் காது படவே குழந்தையை ப்ரயு கையில் கொடுக்க வேண்டாம் என்றும், அவளை திருப்பி அனுப்புமாறும் சொல்லி சென்றனர்.

முதலில் சாதரணமாக விட்ட ப்ரயு, மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக சொல்லவே, அவள் மனது வேதனை பட்டது. அதோடு அவள் தங்கையும் இவளிடம் குழந்தையை கொடுக்க யோசிக்கவே , அவளே ஐந்து நாட்களில் கிளம்பி விட்டாள்.

இவர்களுக்காக அவள் ஒரு மாதம் லீவ் வேறு போட்டிருந்தாள். இரண்டாவது தங்கை டெலிவெரியின் போது இவள் நேராக ஹாஸ்பிடலில் சென்று பார்த்து வந்தாள். அதோடு அவள் அம்மா, அங்கே உள்ளவர்களுக்கு தேவையானதை தன் வீட்டில் இருந்து சென்று கொடுத்து வந்தாள்.

மறந்தும் குழந்தையை அவள் கையால் கூட தொடவில்லை. பிரயுவின் மாமியாரும் இருவரையுமே ஹாஸ்பிடலில் வந்து பார்த்து விட்டு சென்றார். குழந்தைக்கு செய்ய வேண்டிய முறையையும் அங்கேயே கொடுத்து விட்டு வந்தார்.

ஆதிக்கு தெரிவிக்க பட்ட போது அவன் இரு சகலைகளிடமும் போனில் வாழ்த்து கூறினான்.

இந்த ஹாஸ்பிடல் களேபரத்தில் ஆதி, பிரயுவின் இரண்டாம் வருட திருமண நாள் வர, ஆதிக்கு ப்ரயு எப்படியும் தன் அம்மா வீட்டில் தான் இருப்பாள் என்பதால் பெரிய அளவில் அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அவளுக்கு என்ன தேவையோ வாங்கி கொள்ள சொல்லி பணம் அனுப்பினான்.

அதை பற்றி கேட்கவும் மறந்து விட்டான். அவளின் விலகல் தன்மையால் அவன் மனம் காயப்பட்டு இருந்தது.

பிரயுவிற்கு அவனுக்கு தனக்காக பார்த்து வாங்க கூட நேரம் இல்லையா? மனம் இல்லையா? என்ற எண்ணம் தோன்றியது. கொஞ்ச நாட்களாக மறந்து இருந்த வேதனை மீண்டும் ஆரம்பித்தது.

குழந்தைகள் பெயர் சூட்டும் விழாவிற்கு ப்ரயு வீட்டாரையும் அழைக்க, அவள் மாமியார் வரவில்லை என்று சொல்லி விட்டார்.

பிரயுவும் வரவில்லை என்று தன் தாயிடம் கூற, அவர் வருத்தப்பட்டு அழுது அவளை வரவைத்தார். பிரயுவின் பெற்றோர் இருவருக்கும் கையறு நிலை என்று சொல்லும் நிலைமை. அவர்களுக்கு யார் பக்கம் பேச என்று தெரியவில்லை.

பிரயுவின் நிலைமை தனிமைப் படுத்தபட்டது போல் இருக்கிறது. மற்ற இரு மகள்களுக்கோ தாய் வீட்டில் சீராடும் நேரம் இதுதான். இதற்கு பின் அவர்கள் வருகை என்பது குறைந்து விடும். வந்தாலும் அவர்களின் முக்கியத்துவத்தை விட பேரக்குழந்தைகளின் முக்கியம் பெரிதாகிவிடும்.

எந்தவொரு பெற்றோருக்கும் தன் பெண்களின் பேறு காலம் பார்த்து அவர்களை அனுப்புவதுதான் அவர்களின் வாழ்நாள் பூர்த்திக்கு சமானம். இந்த நிலையில் இவர்கள் இருவரை குறை கூற முடியாமல், பிரயுவை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் திண்டாடினர்.

இதை உணர்ந்த ப்ரயு அவர்களுக்காக வந்தாள். முடிந்தவரை ஒதுங்கியும் இருந்தாள்.

ஆனாலும் சில வம்பர்களின் பேச்சு அவளை வேதனைபடுத்தியது. மதியத்திற்கு மேல் அவள் கிளம்பியும் விட்டாள்.

இந்த ஒரு மாதமாக அவள் அனுபவித்து வந்த மன வேதனை அவளை மீண்டும் மயக்கம் கொள்ள வைக்கவே, டாக்டர் அவளை மிகவும் கடிந்து கொண்டார்.

அதிலும் இந்த முறை அவள் மயக்கம் தெளிய மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகவே, அவள் வீட்டிற்கு தகவல் கொடுத்து விட்டார்.

அவர்கள் வருவதற்குள் பிரயுவிற்கு முழிப்பு வரவே டாக்டர் பிரயுவிடம் அவள் வீட்டாருக்கு தகவல் கொடுத்திருப்பதாக கூறவே,

“அப்படியென்றால் நான் அவர்கள் வந்தவுடன் கிளம்புகிறேன்” எனவும்,

“ப்ரத்யா. நீங்க படிச்சவங்கதானே.. அதுவும் மருத்துவமனையில் வேலை செய்யறீங்க. இவ்ளோ அலட்சியமா இருக்க கூடாது. ஏற்கனவே இரண்டு முறை மயங்கி இருக்கீங்க. இப்போ மூன்றாவது முறை . கம்ப்ளீட் செக்கப் பண்ணிட்டுதான் வீட்டுக்கு போகணும்.” என்று திட்டி விட்டார்கள்.

“டாக்டர். வீட்டில் யாருக்கும் என்ன விஷயம் என்று சொல்ல வேண்டாம். என் மாமியாரும், நானும் தனியாக இருக்கிறோம். அவர் மிகவும் பயந்து விடுவார். என் பெற்றோர் வீட்டிலோ இரண்டு கைக்குந்தைகளோடு என் தங்கைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் வேதனை கூடும். என்னவென்று கேட்டால் பிரஷர், சுகர் என்று எதாவது சொல்லுங்கள். நான் நாளைக்கு வேலைக்கு வருவது போல் வந்து முழு செக்கப் செய்து கொள்கிறேன்” என்றாள்.

“உன்னை நம்பலாமா” என்றார்.

“கண்டிப்பா டாக்டர். நான் வேலைக்கு வருவேந்தானே “ என்று சொல்லவும், அவள் அம்மா, அப்பாவோடு மாமியாரும் வந்தார்கள்.

“ப்ரத்யா என்னசும்மா?” என்று அவர்கள் பதற,

டாக்டர் அவர்களிடம் நேராக “பயப்படும் படி ஒன்னும் இல்லை, ஒழுங்கா சாப்பிடாமல், தூங்காமல் லோ பிரஷர் ஆகி மயங்கிட்டங்க.. மனசுலே எந்த கவலையும் இல்லாம இருந்தா போதும். ஆனாலும் அவங்க அங்கே இங்கே போறவங்க. போற இடத்தில மயக்கம் வந்து விழுந்து அடிப்பட்டா ஆபத்து அதனாலே ஜாக்கிரதையாக இருங்க” என்று கொஞ்சம் ஆறுதலாகவும், பயமுறுத்தியும் பேசினார்.

ஏனோ இந்த முறை பிரயுவிற்கு தாய் மடி தேடியது. அவள் தன் தாயிடம் அங்கே வந்து கொஞ்ச நாள் இருக்கவா என்று கேட்கவும் கேட்டாள்.

ஆனால் பிரயுவின் அம்மாவோ “இல்ல ப்ரத்யா. .நீ உங்க வீட்டில் இருந்தாலாவது ரெஸ்ட் எடுக்கலாம். இங்கே வந்தா பவி, தாரிணி , குழந்தைங்க அவங்கள் பார்க்க வரவங்க இந்த மாதிரி தொந்தரவு இருக்கும். நீ அங்கியே போ” என்றவர்,

ப்ரயு மாமியாரிடம் “சம்பந்தி அம்மா, தப்பா நினைச்சுக்காதீங்க. என் வீட்டு நிலைமை உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். உங்கள தொந்தரவு பண்றது தப்புதான். ஆனால் வேறு வழியில்லை.” என்று கேட்க,

பிரயுவின் மாமியாரோ “நீங்களே கேட்டாலும் நான் அனுப்பியிருக்க மாட்டேன். இந்த நிலைமையில் நான் அவளை அனுப்பினா, நான் மனுஷியே இல்ல. நீங்க சங்கடபடாம போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தார்,

பிரயுவின் மனதில் சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டது. அவளால் அவள் மாமியாரிடம் சகஜமாக இருக்க முடியாது. அதனால் தான் அவள் தன் பெற்றோரை கேட்டது. அவர்கள் நிலைமை புரிந்தாலும், அவள் மனதில் ஏற்பட்ட ஏமாற்றம் என்பது பெரிது தான்.

மேலும் டாக்டர் பிரயுவின் மாமியரிடத்தில் கூறியதை வைத்து அவர் புரிந்து கொண்ட அளவில் ஆதிக்கு சொன்னார்.

அவர் ஆதியிடத்தில் சொன்னது “ஆதி . இன்னிக்கு ப்ரயு வேலை செய்யற இடத்தில் மயங்கி விழுந்துட்டா பா “

ஆதி பதறி “அம்மா . அவளுக்கு என்ன ஆச்சு ? ஒன்னும் இல்லியே ? வீட்டுக்கு வந்துட்டீங்களா?”

“டாக்டர் லோ பிரஷர் ன்னு சொல்றாங்க. அவள் ஒழுங்கா சாப்பிடறது இல்ல . தூங்குறது இல்லைன்னு. இப்போ வீட்டுலேதான் இருக்கோம் “

“வேற என்ன சொன்னங்க. ?”

“மருந்து கொடுத்து இருக்காங்க. வெளியிலே போகும் போது கவனமா இருக்க சொல்லி இருக்காங்க.

“சரி . நான் இப்போவே அவ கிட்ட பேசறேன்”

“அதுதான் சொல்ல வந்தேன். இன்னிக்கு பேசு. .ஆனால் இனிமேல் அவகிட்ட நைட் ரொம்ப நேரம் பேசாத. அவ உன்கிட்ட பேசிட்டு படுக்க லேட் ஆகி ஒழுங்கா தூங்கறது இல்லைன்னு நினைக்கிறேன். அதோட உன்கிட்ட பேசினால் அதோட தாக்கம் அவளுக்கு ரொம்ப இருக்கும். அதுவும் அவள் தூக்கத்த கெடுக்கும். நான் சொல்றது புரியும்ன்னு நினைக்கிறேன் “

“புரியதும்மா. இனிமேல் நான் கவனமா இருக்கேன்”

அவனுக்கு அவன் அன்னை சொல்ல வந்தது புரிந்தது. தன்னுடைய பேச்சு அவள் உணர்வுகளை தூண்டி விடும் என்று எண்ணுகிறார், ஆனால் அவர் அறியாதது அவர்கள் இருவரும் பேசுவதே அரிதாகி விட்டது என்று. ஆனாலும் தன் தாயின் கூற்று உண்மைதான் என்பதால் அவன் அதை சமாளிக்க தயாராகினான்.

அவளை தன் நினைவில் மறுகுவதை தடுக்க அவன் அன்று இரவு அவளிடம் பேசும்போதே சிடுசிடுத்தான். போன் செய்தவுடன் எடுத்தவளை ஹெலோ சொல்லக் கூட விடாமல்,

“ப்ரத்யா. ஏன் இப்படி பண்ற. ? உங்க அப்பா, அம்மா, மத்தவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? என்னையும் எங்க அம்மாவையும் தானே தப்பா நினைப்பாங்க. என்னமோ உன்னை பட்டினி போட்டு கொடுமை படுத்தற மாதிரி ஏன். இந்த சீன் உனக்கு? உனக்கு மட்டும் தான் வேதனையா? என்னை பிரிஞ்சி இருக்கிற எங்க அம்மாவிற்கு வேதனை இல்ல. அவங்க இப்படியா பண்றாங்க ? வீட்டை விட்டு தனியா இருக்கிற எனக்கு வேதனை இல்ல..? நாங்கெல்லாம் நல்லா சாப்பிட்டு தூங்கறோம்லே. உனக்கு மட்டும் என்ன ?

இனிமேல் இந்த மாதிரி ஆக கூடாது. ஒழுங்க சாப்பிட்டு, நேரத்துக்கு மாத்திரை சாப்பிட்டு தூங்கு. நீ பாட்டுக்கு விழுந்து வச்சா எங்க அம்மா ஒண்டியா எப்படி பார்ப்பாங்க ? அவங்கள பார்த்துக்க உன்ன விட்டுட்டு வந்தா . உன்ன பார்த்துக்க ஆள் வைக்கணும் போலே . ஜாக்கிரதையா இரு..”

என்று பொரிந்து தள்ளி விட்டு வைத்து விட்டான்.

அங்கே அவன் பிரயுவை கொஞ்சம் டைவேர்ட் பண்ணுவதற்காக கோபத்தை கையில் எடுத்து பேசி விட்டு, வேதனை தாங்காமல் அழுதான்.

இங்கே பிரயுவோ அவன் தன்னை பேசக் கூட விடாமல் பேசிய பேச்சை கேட்டு, தன் உணர்வுகள் எல்லாம் செத்து ஒரு மரக்கட்டை போல் மாறினாள்.

ஆதியின் பேச்சின் எதிரொலி பிரயுவை மாற்றியதோடு மட்டும் இல்லாமல், அது ஆதிக்கே வினையாக வந்தது.

-தொடரும் -
 

Rajam

Well-known member
Member
ஏண்டா ரொம்ப பிரயுவை கஷ்டப்படுத்தறீங்க.
வேலைய விட்டுட்டு உடனே வர வேண்டாமா.
அவள் உடல் நலம் கவனிக்காமல் விட்டுட்டா.
சீக்கிரம் வா ஆதி.
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom