• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

17. விலோசன விந்தைகள்

ஷாலினி

New member
Member
"இவ்வளவு பிரச்சினைகள் இருந்ததை மறைச்சு, என்னை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்களேன்னு ஃபீல் பண்றீங்களா?" என்று விரக்தியுடன் கணவனிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

மனைவியின் இந்தக் கேள்வியில் உடைந்து நின்றான் அற்புதன்.

இப்படி யோசித்துக் கேட்கும் அளவிற்குத் தான் அவளுக்கு அந்நியனா? என்றெல்லாம் எண்ணி மனம் தவித்தது அவனுக்கு.

அவன் பதில் சொல்லாமல் நின்றிருப்பது, யக்ஷித்ராவைத் துணுக்குறச் செய்தது.

"நீங்க அமைதியாக இருக்கிறதைப் பார்த்தால், நான் சொன்னது தான் சரி போல?" என்று கணவனிடம் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

"அப்படி இருந்தால் நான் ஏன் உனக்கு இப்படி முத்தம் கொடுக்கப் போறேன்?" என மீண்டும் அவளது முகத்தில் முத்த மழையைப் பொழிந்தான் அற்புதன்.

அதில், கணவனின் தவிப்பு மட்டுமே தெரிய, இவ்விடத்தில் தனது கேள்விக்கு அவசியமில்லை என்பது யக்ஷித்ராவிற்குத் தெளிவாகப் புரிந்தது.

"என்னங்க!" என்று குறுகுறுப்புத் தாங்காமல் முனகினாள் அவனது மனைவி.

ஆனால், அற்புதனோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், யக்ஷித்ராவின் முகம் முழுவதும் ஆவேசமாக முத்தமிட்டான்.

ஒரு வழியாக, அவளை விட்டு விலகி வந்தவன்,"நான் இவ்வளவு நாளாக, உங்கிட்ட நடந்துக்கிட்டதை நினைச்சுப் பாரு யக்ஷூ! அப்படியெல்லாம் உன்னைக் கேட்டுக் கஷ்டப்படுத்துவேனா?" என்று அவளிடம் தீர்க்கமான குரலில் வினவினான் அற்புதன்.

அவனது மனைவியோ, இதைக் கேட்டப் பின்னர், முதல் முறையாகத் தன் கணவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தைக் கொடுத்தாள்.

உடல் சிலிர்க்க, அதைப் பெற்றுக் கொண்டவன், மனைவியை இன்னுமின்னும் இறுக அணைத்துக் கொண்டான் அற்புதன்.

அந்த அணைப்பில், அவளுக்கு மூச்சு முட்டவில்லை, அவனது அன்பான ஸ்பரிசத்தில், அணைப்பில் அடங்கிப் போனாள் யக்ஷித்ரா.

"அதுக்கப்புறம்?" என்றவனுக்கு உடல் உதறியது.

—----------------------------

கிரிவாசன் எப்போது வீட்டிற்கு வருவார்? என்று மீனாவும், யாதவியும் காத்திருந்தனர்.

இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள் யக்ஷித்ரா.

முன் கேட் திறக்கப்பட்ட ஒலியைக் கேட்டதும், விறைத்துப் போய், நிமிர்ந்து உட்கார்ந்தனர் அன்னையும், அவருடைய சின்ன மகளும்.

வெளியே, செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு, உள்ளே வந்தார் கிரிவாசன்.

அவர் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டதும், வீடு நிசப்தமாகி விடும்.

குடிக்கத் தண்ணீர் கேட்பார் என்று எதிர்பார்த்து இருந்தால்,

"யக்ஷி, யாது! நீங்க தான் நைட் எனக்கு சமையல் பண்ணித் தரனும்" என்றார் கிரிவாசன்.

தன் அழைப்பைக் கேட்டதும் உடனே வந்து நிற்கும் மகள்களை இப்போது தன் கண் முன்னால் காணவில்லை என்று அவர் உணர்ந்ததும்,

"யாது!" எனச் சிறியவளை அழைத்தார் கிரிவாசன்.

இப்போது, இரண்டாம் முறையாக கணீரென்றக் குரலில் கூப்பிட்ட போதும், அவள் வராமல் இருக்க, என்ன நடக்கிறது? என்ற கோபத்தில்,

"மீனா!" என்று இந்த முறை மனைவியின் பெயரை உச்சரித்தார்.

எப்படியும் மனைவி வந்து என்னவென்று கேட்கத் தானே வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

ஆனாலும், உடனே அங்கு வந்து விடவில்லை அவரது மனைவி.

சாந்தமான முகத்தை வைத்துக் கொண்டு, நிதானமாக நடந்து வந்தார் மீனா.

"சொல்லுங்க?" என்று கேட்டவரை ஒரு நொடி, ஆச்சரியமாக ஏறிட்டவர்,

பிறகு, பழையபடி,"யக்ஷியும், யாதுவும் எங்கே?" என்று மனைவியிடம் கேட்டார் கிரிவாசன்.

"அவங்க ரூமில் இருக்காங்க. இப்போதைக்கு வர மாட்டாங்க. உங்களுக்குச் சமையல் நான் தான் பண்ணுவேன். அது பிடிக்கலைன்னா, கடையில் வாங்கிச் சாப்பிடுங்க!" என்று அமைதியாக உரைத்தார் மீனா.

ஓரிரு நிமிடங்கள், அவருடைய கணவனுக்குப், புருவம் உயர்ந்து இறங்கியது. இதை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தான் அழைத்தாலும், இன்னும் எட்டிப் பார்த்திராத மகள்கள், அழைத்தும் தாமதமாக வந்த மனைவி, உணவு சமைக்கச் சொன்னதற்கு, அவர் கொடுத்தப் பதில் என இவையெல்லாம் கிரிவாசனுக்குப் பேதமாகத் தெரிந்தது.

மீனாவின் பார்வையோ, இன்னும் கணவனையே, துழைத்துக் கொண்டிருக்கவும்,

"உனக்கு என்ன ஆச்சு? அவங்க ரெண்டு பேரும், ஏன் இன்னும் வெளியே வரலை?" என்று மனைவியிடம் வினவினார் கிரிவாசன்.

"ஏன் வரனும் ங்க?" என்று கேட்டார் மீனா.

"என்ன?" என்று எகிறினார்.

"ஆமாம். அவங்க எதுக்கு ங்க வரனும் இங்கே?" என்று மறுபடியும் அதையே கேட்க,

"நான் கூப்பிட்றேன், என்னை மதிக்காமல் உள்ளே இருப்பாங்களா?" என்று கோபத்தில் வெடித்தார் கிரிவாசன்.

அந்த சத்தம் யக்ஷித்ராவை உலுக்கியது போலும்.

உடனே எழுந்து அமர்ந்து,"யாது! அப்பா வந்துட்டாரா?" என்று நடுங்கிக் கொண்டே தங்கையிடம் கேட்டாள்.

"ம்ம். வந்துட்டார் க்கா. அவர்கிட்ட அம்மா பேசுறாங்க" என்றாள் யாதவி.

"அம்மாவைத் திட்டப் போறார்! அவங்கப் பாவம்!" என்று தாய்க்காக யோசித்துச் சொன்னாள் யக்ஷித்ரா.

"அவங்க தைரியமாகத் தான் பேசுறாங்க க்கா. நீ இங்கேயே இரு" என்று தமக்கையைக் கட்டிலில் சாய்ந்து அமர வைத்தாள் யாதவி.

கணவன் கேட்டதற்கு,"அவங்கப் படிக்கிறாங்க! அதனால், வர மாட்டாங்க" என்று பதிலளித்தார் மீனா.

"இருபத்தி நாலு மணி நேரமுமா படிக்கிறாங்க?" என்று தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டார் கிரிவாசன்.

"ஆமா!" என்று அழுத்தமாக கூறினார்.

"ப்ச்! என்ன வித்தியாசமாகப் பேசுற? இப்போ என்னப் பிரச்சினை உங்க மூனு பேருக்கும்?" என்று எரிச்சலாக வினவினார்.

"நீங்க தான, அவங்களைப் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொன்னீங்க! அதை தான் செய்றாங்க!" எனத் தெளிவாக கூறினார் மீனா.

"என்ன உளறுற?" என்றார் கிரிவாசன்.

"நீங்க கேட்டதுக்குப் பதில் சொல்லியாச்சு. எப்போ சாப்பாடு செய்யனும்?"

"மீனா!" என்று மனைவியை அதட்டினார்.

"இப்போ அதைச் சொல்றீங்களா, இல்லை நான் போகவா?" என்று வினவ,

இதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க நினைத்தவர்,

"நைட் நீயே சமைச்சு வை" என்று மீனாவை அனுப்பி வைத்தார் கிரிவாசன்.

"அம்மாவை இன்னும் காணோமே யாது?" என்று அறையின் வாயிலை விழிகளால் துழாவினாள் யக்ஷித்ரா.

அந்தச் சமயம் உள்ளே வந்தார் மீனா.

"அம்மா!" என அவரை அருகே அழைத்தாள் மூத்த மகள்.

"என்னடா ம்மா?" என்று அவளிடம் சென்றார்.

"அவர் உங்களை எதுவும் சொன்னாரா?" என்று தாயிடம் பதட்டமாக வினவினாள் யக்ஷித்ரா.

"இல்லை டா. டின்னர் சமைக்கச் சொன்னார். அவ்ளோ தான்" என்று சாந்தமான முகத்துடன் கூறினார் மீனா.

"எங்களைப் பத்தி எதுவும் கேட்டாரா ம்மா?" என்றாள்.

"ம்ஹூம் டா. நீ ரெஸ்ட் எடு" என மகளிடம் தன்மையாக உரைத்தார் அவளது தாய்.

"உண்மையைத் தானே சொல்றீங்க?" என்று கேட்டாள் யக்ஷித்ரா.

"உண்மை தான் டா ம்மா. நீ தூங்கு. யாது! நீ இங்கே வா" என்று யாதவியைத் தன்னுடன் வருமாறு அழைத்தார் மீனா.

"அவளை எதுக்குக் கூப்பிட்றீங்க?"

"டின்னர் செய்யனும்ல டா? எனக்கு ஹெல்ப்புக்குக் கூப்பிட்றேன்"

"ஓஹ்… சரிங்க அம்மா" எனக் கண்களை மூடிக் கொண்டாள் யக்ஷித்ரா.

ஒரு‌ தரம் ஹாலை எட்டிப் பார்த்தவரது கணவன், அங்கே சோஃபாவில் அமர்ந்திருக்கவில்லை எனத் தெரிந்ததும், "வா, கிச்சனுக்குப் போகலாம்" என்று யாதவியுடன் சென்றார் மீனா.

சமையலறையினுள் நின்று கொண்டு,"என்னம்மா ஆச்சு?" எனத் தாயிடம் கேட்டாள் யாதவி.

அவர் நடந்ததை விவரித்து விட்டு,"எதனால் நாம இப்படி நடந்துக்கிறோம்னு யோசிப்பாரு போல யாது! அதான், ஒன்னும் சண்டை போடலை, மிரட்டலை" என்றார் மீனா.

"இருக்கலாம் அம்மா" என்றவள், தமக்கைத் தன்னிடம் பேசியதையும் கூறினாள் சின்னவள்.

"அவரே இரண்டு, மூனு நாள் கழிச்சு வந்து நம்மகிட்ட என்னன்னு மறுபடியும் கேட்பார். அப்போ பாத்துக்கலாம். ஆனால், இதை அப்படியே விட்டால், உங்க ரெண்டு பேருக்கும் தான், கஷ்டமாக இருக்கும்
. இதில் நான் பொறுமையாக இருந்து என்னப் பண்ணப் போறேன்? அதனால், ஒரு கைப் பாத்துட்றன்" என்றவரது குரலில் உறுதியும், துணிவும் வெளிப்பட்டது.

- தொடரும்
 

New Episodes Thread

Top Bottom