• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மாதவம் செய்தேனே

Nithya Mariappan

✍️
Writer
மாதவம் செய்தேனே

“சோ இப்ப நீ என்ன தான் சொல்லுற மய்யூ?”

தன் முன்னே வைக்கப்பட்டிருந்த நீண்ட கண்ணாடி தம்ளரில் நிரம்பியிருந்த கோல்ட் காபியை ஸ்ட்ராவால் உறிஞ்சியபடி அசுவாரசியமாகக் கேட்டான் நவநீத்.

நானோ கபேயின் கண்ணாடி சுவர்கள் வழியே வெளியில் நடமாடும் மனிதர்களை வெறித்தபடி என் மனதிலிருப்பதை மறைக்காது கூறிவிட்டேன்.

“இந்த தடவை உங்கம்மாவோட டிமாண்ட் ரொம்ப அதிகம் நவி... அதை எங்கப்பாவால செய்ய முடியும்னு தோணலை”

நவ்நீத்தின் கண்களில் எரிச்சல் பரவியது.

“அவரே செய்யுறேன்னு சொன்னா கூட நீ வேண்டாம்னு சொல்லுவ போலயே... எங்கம்மா யாருக்காக இதெல்லாம் கேக்குறாங்க மய்யூ? நமக்காக தானே, அதை ஏன் புரிஞ்சிக்க மாட்ற? அதோட பிள்ளைங்களுக்குச் செய்யுறதுல பெத்தவங்க கணக்கு பாக்க மாட்டாங்க... நீ உன்னோட பெண்கள் புரட்சிய நம்ம கல்யாண விவகாரத்துல தேவையில்லாம மிக்ஸ் பண்ணி நீயும் குழம்பி, வருங்கால பொண்டாட்டி வீட்டுல அடிச்சு பிடுங்குறோம்னு என்னையும் குற்றவாளி மாதிரி ஃபீல் பண்ண வைக்குற மய்யூ... இட்ஸ் ரிடிகுலஸ்”

“அப்ப இல்லனு சொல்லுறீயா நவி?”

“எதை இல்லனு சொல்லுறேன் நான்?”

“வருங்கால பொண்டாட்டி வீட்டுல அடிச்சு பிடுங்குறதை”

நிதானமாக நான் உரைக்கவும் அவன் முகம் அவமானத்தில் கன்றி சிவந்தது. உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டேன் அல்லவா!

அவமானக்குன்றலுடன் “நாங்க ஒன்னும் அவ்ளோ சீப்பான ஃபேமிலி இல்ல மய்யூ... உங்கப்பாவால முடியாதுனுனா ஓப்பனா சொல்லட்டுமே... அவரே வாய் திறக்கல... நீ தான் ஓவர் ரியாக்ட் பண்ணுற” என்றான் நவநீத்.

காரணமின்றி சிரிப்பு வந்தது எனக்கு. எப்படி இவனால் இவ்வாறு பேச முடிகிறது? உங்களால் முடிந்ததை உங்கள் பெண்ணுக்குச் செய்யுங்கள் என்று ஆரம்பத்தில் நயமாகப் பேசிய இவனது அன்னை நிச்சயதார்த்தம் நடைபெறுகையில் சபையில் வைத்த வரதட்சணை டிமாண்டுகளை பெண்ணைப் பெற்ற நடுத்தர குடும்பத்தலைவராக என் தந்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

காரணம் கேட்டதற்கு இவனது அன்னை என்ன சொன்னார் தெரியுமா?

“நவனி உன் கையில போட்ட டயமண்ட் பதிச்ச ப்ளாட்டினம் ரிங்குக்கு முன்னாடி நான் கேட்ட சீர் எல்லாமே கம்மி தான்... கல்யாணம்னு வந்துட்டா ரெண்டு பக்கமும் சமமா செய்யுறது தானே நியாயம்”

பண்ட பாத்திரங்கள், நகை நட்டுகள், துணிமணிகள் என இவற்றிற்கே ஒரு பெரிய தொகை செலவானது, காரணம் எது வாங்கினாலும் என்னை அழைத்துச் சென்று வாங்கவேண்டுமென்று. நவநீத்தின் அன்னை இட்ட கட்டளை.

புடவையே கட்ட பிடிக்காத எனக்கு ஆர்கன்சா, பனாரஸ், சாப்ட் காட்டன், ஜார்ஜெட் என வகை வகையாக எடுக்க வைத்தார் அந்தப் புண்ணியவதி. இந்தப் புடவைகள் அனைத்தும் காட்சிப்பொருளாக வார்ட்ரோபில் தொங்க போகிறது அவ்வளவு தான்!

“எப்பவும் படுதா போடுற மாதிரி டாப்பும் லெகின்சுமா சுத்துறது உங்க வீட்டுல வழக்கமா இருக்கலாம்... எங்களுக்கு அதுல்லாம் சரியா வராது... சொந்தக்காரங்க பாக்க வர்றப்ப நீ அப்பிடி நடமாடுனா உடுத்த துணி இல்லாம சாக்குப்பைய தைச்சு போட்டு விட்டிருக்கீங்களானு அவங்க எங்க குடும்பத்தை தான் கிண்டல் பண்ணுவாங்க” என்று நகைச்சுவை போல சொல்லி குத்திக் காட்டி, போட்ட பட்ஜெட்டை விட அதிகமாகி விட்ட துணி செலவுக்கு நியாயம் கற்பித்தார் அந்தப் பெண்மணி.

நகைகளை வாங்கும் போதும் இதே கூத்து தான்.

“என்ன மெல்லிசா வாங்குறிங்க? காலகாலத்துக்கும் கழுத்துல காதுல போட வேண்டிய நகை... கொஞ்சம் கனமா வாங்குங்க”

அம்மன் போல நகையலங்காரம் செய்ய விரும்பாமல் மெல்லிய தங்க நகைகளை வாங்க விரும்பிய எனது விருப்பத்திற்கும் பூட்டு போட்டாயிற்று.

அடுத்து வீட்டுபயோகப்பொருட்களும் பாத்திரங்களும் வாங்கும் சமயத்தில் அடுத்த வெடி.

“பித்தளையில நல்ல கனமா உருளி வேணும்... தலைப்பொங்கலுக்கு அதுல தான் பொங்கல் விடணும்... அப்புறம் பூஜை ரூம்ல வைக்குறதுக்கு பஞ்ச பாத்திரம் வேணும், வெள்ளில விளக்கு வாங்கிடுங்க... விளக்கு முன்னாடி வைக்குறதுக்கு பெரிய பித்தளை சொம்பு வேணும்... புலங்குற பாத்திரமெல்லாம் எவர்சில்வர்ல வாங்கிடுங்க... அப்பிடியே விருந்தாளுங்க வந்தா சமைச்சு எடுத்து வைக்க செராமிக் செட் ரெண்டு மூனு வாங்கணும்... டைனிங் டேபிள் மரத்துல வாங்கிடுங்க... மத்தபடி ஃப்ரிட்ஜ் வாஷிங்மெஷின், ஏ.சி இதுல்லாம் எப்பவும் செய்யுறது தானே”

நவநீத்தின் ஃப்ளாட்டில் ஏற்கெனவே பின்னே குறிப்பிட்ட மூன்றும் இருக்கின்றன. அதை கூறிய போது “அதுல்லாம் வாங்கி வருச காலம் ஆகுது... புதுசா குடித்தனம் பண்ணுறப்ப புது பொருளா வாங்குனா தான் நல்லா இருக்கும்” என்று கூறிவிட்டார் அவனது அன்னை.

சொல்லப் போனால் தசாவதாரம் கமலஹாசனை விட அதிக வேடங்களை போட்டுவிட்டார் அப்பெண்மணி.

இவ்வளவுக்கும் ஆன செலவு எங்கள் தகுதிக்கும் என் தந்தையின் சேமிப்புக்கும் அதிகம் தான். இரவில் நான் உறங்கிவிட்டதாக எண்ணி அன்னையும் தந்தையும் புலம்பிய போது தான் அவர்கள் வைத்திருந்த சேமிப்பு இனிமேல் கல்யாண மண்டப வாடகைக்கும் இதர திருமணச்செலவுகளுக்கும் மட்டும் தான் போதுமென்பது எனக்குப் புரிந்தது.

“உங்க இஷ்டப்படி செய்யுங்கனு சொல்லிட்டு இப்பிடி வகை வகையா கேக்குறாங்களே, இதோட நிறுத்திப்பாங்களாங்க?”

“அவங்க கேட்டா நம்ம செஞ்சு தானே ஆகணும் சீதா... நமக்கு மய்யூ ஒரே பொண்ணு வேற... அவளுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்ய போறோம் சொல்லு... மாப்பிள்ளையும் அவ விரும்புன பையன்... என்ன ஒன்னு, அம்மா சொல் கேக்குற பிள்ளை... அவங்க கேட்டதை செஞ்சுட்டா அவர் மனசும் வருத்தப்படாதுல்ல”

அந்த கணத்தில் நவநீத்தைக் காதலித்து பெரிய தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் எனக்குள்.

ஆம்! நானும் நவநீத்தும் நான்காண்டுகள் காதலிக்கிறோம். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறோம். பணி நிலையில் அவன் என்னை விட உயரதிகாரி. சம்பளமும் அதிகம்.

எனது சாமர்த்தியமும் பணிவும் பிடித்துப் போய் காதலில் விழுந்ததாக அடிக்கடி கூறுவான். காதலித்த போது சுகமாக தோன்றிய கல்யாண கனவுகள் இப்போது துர்ச்சொப்பனங்களாக மாறியது போன்ற பிரமை எனக்கு.

காரணம், திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறிய நிகழ்வுகளில் நவநீத்தின் அன்னை நடந்து கொண்ட விதம் அப்படி.

முதலில் மகனின் காதலுக்காக இறங்கி வந்திருப்பதாக திருமணப்பேச்சை ஆரம்பித்தவர் பின்னர் சாதுவான எனது பெற்றோரின் குணத்தைச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து ஒவ்வொரு நிகழ்விலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.

இதையெல்லாம் கண்ட பிறகும் நவநீத்தும் அவனது தந்தையும் வாய் மூடி இருப்பது தான் எனக்கு எரிச்சல்.

என் அனுபவத்தில் கூறுகிறேன், வரதட்சணை ஒழிய வேண்டுமென்றால் காதல் திருமணங்கள் பெருக வேண்டுமென எந்த முட்டாளாவது உளறினால் அவன் கன்னத்தில் பளாரென அறைந்து விடுங்கள். ஏனென்றால் இந்த நாகரிக உலகின் மாபெரும் பொய் அது தான்.

இங்கே காதலிக்க பணம் தேவையில்லை. அந்தஸ்து தேவையில்லை. சொத்து விவரங்கள் தேவையில்லை. ஆனால் அந்தக் காதல் திருமணத்தில் கனிய வேண்டுமென்றால் ஏற்பாட்டு திருமணத்திற்கு சற்றும் குறையாமல் வரதட்சணை பேரம் ஆரம்பித்துவிடும்.

காதலிக்கும் வரை உனக்காக எதையும் செய்வேன் என்று உருகும் ஆண்மகன் திருமணம் என்று வந்ததும் பெற்றோர் கேட்கும் வரதட்சணைக்கு வெட்கமின்றி ஆதரவாகப் பேசுவான்.

“நமக்காக தானே என் அப்பா அப்பா கேக்குறாங்க” என்ற வாதத்துடன்.

நமக்காக எப்போதும் ஏன் எனது பெற்றோரே சீர் செனத்திகளை செய்து ஓட்டாண்டி ஆக வேண்டும்? ஒரே ஒரு முறை உன் பெற்றோர் செய்யலாமே என்று கேட்டுப் பாருங்கள்!

உடனே ஆரம்பித்துவிடுவான்! நீ என்னை உண்மையாக காதலித்தால் இப்படி பேசுவாயா? பணம் பணம் என்று எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிறாயே, இது வரை உனக்காக நான் எவ்வளவு செலவளித்திருக்கிறேன் தெரியுமா? என் பெற்றோர் என்னைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப எத்தனை பெரிய கண்டங்களை தாண்டினார்கள் தெரியுமா? ப்ளா ப்ளா ப்ளா...

இக்கேள்விகள் என்னை நோக்கியும் நவநீத்தால் கேட்கப்பட்டது.

அதையே நானும் திருப்பிக் கேட்டேன்.

“நீ என்னை உண்மையா லவ் பண்ணிருந்தா உங்கம்மா அநியாயத்துக்கு வரதட்சணை சீர்னு பேசுனப்ப நீ அவங்க கிட்ட நியாயத்தை எடுத்துச் சொல்லிருப்ப... எனக்காக நீ செலவு பண்ணுனதை ரீ-இம்பர்ஸ் பண்ணுற ப்ராசஸா தான் நீ கல்யாணத்தை நினைக்கிறியா நவி? உங்கம்மா எப்பிடி உன்னை பெத்து வளர்த்து படிக்க வச்சு வேலைக்கு அனுப்ப கஷ்டப்பட்டாங்களோ அதே மாதிரி தான் என் பேரண்ட்சும் கஷ்டப்பட்டாங்க... அதோட இன்னொரு கஷ்டமா வரதட்சணை கஷ்டத்தை ஏன் நீயும் உன் ஃபேமிலியும் எக்ஸ்ட்ரா பர்டனா குடுக்குறிங்க?”

இப்போது அவனிடம் பதிலில்லை. அமைதியாய் கோல்ட் காபியை உறிஞ்சியவன் “என்னால எங்கம்மாவ எதிர்த்து பேச முடியாது மய்யூ... அது அவங்களை அவமானப்படுத்துற மாதிரி... சோ...” என்று நிறுத்தினான்.

“சோ?” கேள்வியாய் அவனை நோக்கினேன் நான்.

“சோ, உன் பேரண்ட்சை கொஞ்சம் பல்லை கடிச்சுட்டு எங்கம்மா கேக்குறதை செய்ய சொல்லு செல்லம்... அவங்க வாங்கி குடுக்கப் போற கார்ல எங்கம்மாவா ஏறி போகப்போறாங்க? நீயும் நானும் தானே போகப் போறோம்... அவங்க குடுக்கப் போற ரொக்கத்தை வச்சு எங்கம்மாவா பொன்னும் பவுனுமா வாங்கி அடுக்கப் போறாங்க? நம்ம வாழப் போற ஃப்ளாட்டோட பேலன்ஸ் ஈ.எம்.ஐய கட்டி ஜாம்ஜாம்னு நம்ம தானே அதுல வாழப்போறோம்... கொஞ்சம் நமக்காக யோசி பேபி” என்றான் எனது கரங்களைப் பற்றி உருகியவனாக.

நானும் உருகிப் போன பாவனையில் “உன் கூட சேர்ந்து பைக்குல போறது தான் எனக்குப் பிடிக்கும் நவி... நமக்குக் கார் அநாவசியம்னு நீ உங்கம்மா கிட்ட சொல்லிடேன்... அப்புறம் ஃப்ளாட்டோட ஈ.எம்.ஐயை நீயும் நானும் மன்த்லி ஈக்வலா ஷேர் பண்ணி கட்டிடுவோம்... இதுக்கு ஏன் என்னோட பேரண்ட்சை கஷ்டப்படுத்தணும்? இது வரைக்கும் அவங்க செஞ்ச செலவு போதாதா?” என்று கேட்க வேகமாக என் கையை உதறினான்.

“உனக்குப் படிச்சு வேலை பாக்குற திமிருடி... அதான் காலம் காலமா செஞ்சிட்டு வர்ற முறைய மாத்த நினைக்குற... உன்னோட ஃபெமினிஷம், விமன் எம்பவர்மெண்ட்லாம் குடும்ப வாழ்க்கையில ஊறுகா போட கூட உதவாது... ஒத்தை பொண்ணு வச்சிருக்குறவங்க அவளுக்குச் செய்யாம காசை சேர்த்து வச்சு என்ன பண்ணப் போறாங்க? போற காலத்துல சேர்த்து வச்ச காசை அவங்க சமாதிக்குள்ள போட்டுப் புதைக்கவா?”

அவனது கடைசி கேள்வியில் சுர்ரென்று என் தலைக்குக் கோபம் ஏறியது. வன்முறையை ஆண் பெண் மீது பிரயோகித்தாலும் தவறு, பெண் ஆண் மீது பிரயோகித்தாலும் தவறு என இத்தனை நாட்கள் எனக்குப் போதித்திருந்த பெண்ணியத்தை அப்போது என்னால் மதிக்க இயலவில்லை.

விளைவு என் கரம் அவனது கன்னத்தில் பளாரென இறங்கியது. நவநீத்துக்கு அதிர்ச்சியில் கண்கள் தெறித்து வெளியே வராத குறை தான்.

“சீ! உன்னை மாதிரி மாமனார் காசுல வாழ நினைக்குற ஒருத்தனை காதலிச்சதுக்கு நான் அசிங்கப்படுறேன்... ஆக்சுவலி முதல்ல விரும்புனதை செய்யுங்கனு சொன்ன உங்கம்மா நிச்சயதார்த்த சபையில திடீர்னு கார், ரொக்கம், காஸ்ட்லி ஜூவெல்லரினு கேட்டப்ப அந்தம்மா மட்டும் தான் பணத்தாசை பிடிச்சவங்கனு நினைச்சேன்... ஆனா நீயும் அப்பிடிப்பட்டவன் தான்... உன் படிப்பு, வேலைய காரணம் காட்டி அதிகபட்சம் என் குடும்பத்து கிட்ட எவ்ளோ உறிஞ்ச முடியுமோ அவ்ளோ காசை உறிஞ்சி எடுத்துடணும்னு ரத்தம் குடிக்குற ட்ராகுலா மாதிரி வெறி...

நானும் படிச்சிருக்கேன், சம்பாதிக்குறேன்... நம்ம சம்பளத்தை வச்சே அழகா சிக்கனமா குடும்பம் நடத்தலாம்னு தெரிஞ்சும் ஓசில வர்ற மாமனார் காசை விடுறதுக்கு மனசு இல்ல... அசிங்கமா இல்ல உனக்கு? ஐயா சாமி, உன்னை வாங்குற அளவுக்கு என் வீட்டாளுங்க கையில காசு இல்ல... உன்னை வாங்குற அளவுக்கு வசதியான வேற குடும்பம் வருவாங்க... அவங்க கிட்ட இதை விட நல்ல விலைக்கு நீ உன்னை வித்துக்க நவி... குட் பை”

பொங்கிய சினத்தை கொட்டித் தீர்த்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தேன் நான். நவநீத்தால் எனது பேச்சிலிருந்த உண்மையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆவேசமாக எனது பாதையின் குறுக்கே வந்தவன் “ஏய் வாய் கிழிய பேசுறல்ல, உன் அப்பன் எங்கம்மா கேட்டதை ஏன் விழுந்தடிச்சுக்கிட்டு செஞ்சான்? எனக்கு நல்ல வேலை இருக்கு, சொந்த வீடு இருக்குனு தானே... இவ்ளோ பேசுறல்ல, எங்கம்மா வரதட்சணை கேட்டது தப்புனா சொந்த வீடு, நல்ல வேலை இருந்தா தான் பொண்ணு குடுப்போம்னு இன்னைக்கு நிறைய பொண்ணை பெத்தவங்க டிமாண்ட் வைக்காங்களே அதுவும் தப்பு தான்டி... என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ கவலையில்லாம வாழலாம்னு தானே உங்கப்பாவும் அம்மாவும் குனிஞ்சு கும்பிடு போட்டு கல்யாண வேலைய செஞ்சாங்க... பெருசா சொல்ல வந்துட்ட” என்றான் என்னை அவமானப்படுத்தும் நோக்கில்.

நான் அவனைப் போல கோபப்படவில்லை. அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் இருக்கும் பணத்தாசையை தோலுறித்துக் காட்டிவிட்டேன் அல்லவா? இனி என்னை மடக்க இந்தக் காலத்து இளைஞர்கள் வரதட்சணைக்காக சப்பை கட்டு கட்ட கேட்கும் கேள்விகளை தானே அவனும் கேட்பான்.

“ஆணோ பொண்ணோ வேலையும் இருக்குற இடமும் அடிப்படை தேவை... பொண்ணு வீட்டுக்காரங்க அதை எதிர்பாக்குறதுல என்ன தப்பு இருக்குடா? ஆனா கனம் கனமா தங்க நகையும், பெட்ரோல் விக்குற விலைக்கு காரும் ரொம்ப அவசியமோ? பொண்ணுங்களை பெத்தவங்க எதிர்பாக்குறது அடிப்படை தேவைய தான்... ஆனா உன்னை மாதிரி பணத்தாசை பிடிச்ச ட்ராகுலாவை பெத்த இரத்தகாட்டேரிங்க எதிர்பாக்குறது ஆடம்பரமான பொருட்களை... அதுவும் எதுக்காக? சொந்தக்காரங்க கிட்ட என் பையனோட தகுதிக்கு அவனோட மாமனார் வீட்டுல எவ்ளோ செஞ்சாங்க தெரியுமானு படம் ஓட்டுறதுக்கு...

இன்னொன்னு கேக்கவா? இத்தனை நூற்றாண்டா டிமாண்ட் பண்ணி வரதட்சணை வாங்கி பொண்ணை பெத்தவங்களோட கடைசி பைசா வரைக்கும் உறிஞ்சி எடுத்தப்ப சுகமா இருந்துச்சுல்ல, இப்ப பொண்ணு வீட்டுக்காரங்க வேலை, வீடுனு டிமாண்ட் போடுறப்ப உங்களுக்கு வலிக்குதோ? அந்த டிமாண்டை கூட என் பேரண்ட்ஸ் உனக்கு வைக்கலையே... நான் உன்னை லவ் பண்ணுனேன்னு தானே அவங்க உங்கம்மாவோட டிமாண்டுக்கு பணிஞ்சு போனாங்க... அவங்க டிமாண்ட் பண்ணுனதை நீயும் நானும் வருங்காலத்துல சம்பாதிச்சு வாங்கிக்கலாமே... அதை நீ யோசிக்க மாட்ட... ஏன்னா உனக்கு பணத்தாசை நவி... அதுக்கேத்த மாதிரி உனக்குனு ஒருத்தி வருவா... அவளைக் கல்யாணம் பண்ணிக்க... இதுக்கு மேல உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல... இந்தக் கல்யாணம் நடக்காது”

சொல்லிவிட்டு வெளியேறியவளின் முதுக்குப் பின்னே நவநீத் கத்துவது கேட்டது.

“போடி, எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல... ஆனா உன் நிலமை தான் கஷ்டம்... ஒரு தடவை கல்யாணம் நின்னு போச்சுனா எந்தப் பொண்ணுக்கும் அவ்ளோ ஈசியா மறுபடி கூடி வராதுடி... அதோட நீ பேசுற திமிர் பேச்சுக்கு உனக்குலாம் வாழ்க்கை முழுக்க கல்யாணமே நடக்காது... நீ கடைசி வரைக்கும் தனிமரமா தான் நிப்ப”

என் இதழில் சிரிப்பு முகிழ்த்தது.

இவனைப் போன்ற பேராசைக்காரனை திருமணம் செய்துகொண்டு காலம் முழுவதும் சீர் என்ற பெயரில் இவனும் இவனது குடும்பமும் எனது பெற்றோரின் உழைப்பை உறிஞ்சுவதை சகித்துக் கொண்டு வாழ்வதை விட நான் தனிமரமாக இருந்துவிடுவது உத்தமம்.

அத்தோடு அனைத்து ஆண்களும் ட்ராகுலாக்கள் இல்லை; அனைத்து ஆண்களின் பெற்றோரும் சம்பந்திகளுக்கு செலவிழுத்துவிட்டு அதை கௌரவமென எண்ணும் இழிகுணத்தார் இல்லை.

பரந்தமனமும் முதிர்ச்சியும் கொண்டோர் இங்கு ஏராளம். அவர்களில் ஒருவரை நான் சந்தித்தால் திருமணத்தைப் பற்றி கட்டாயம் யோசிப்பேன். நவநீத் என்ற பூனை கண்களை மூடிகொண்டதால் மட்டும் உலகில் வாழும் ஆண்கள் அனைவரும் பணத்தாசை கொண்டவர்களாகி விட மாட்டார்களே!

கவிமணி என்றோ ஒரு நாள் பாடினார், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமென. அத்தகைய மாதவத்தால் வாய்த்த பெண் பிறப்பை பணத்தாசை கொண்ட ஒருவனை மணந்து நாசம் செய்துகொள்ள விரும்பாதவளாக நிம்மதியாக எனது வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கி நடைபோட்டேன் நான், என் பெயர் மயூரி.

******​
 

Thani

Well-known member
Member
காலம் காலமாய் வரதட்சணை கொடுமை நடந்துகிட்டு தான் இருக்கு ...அதிலும் மாப்பிள்ளையின் அம்மாக்கள் போடும் டிமாண்ட் இருக்கே ...ச்சே!!
மயூரி மாதிரி பெண்கள் சிங்கபெண்ணே தான்😀😛
சூப்பர் சிஸ்😀😀😀👍👍👍❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
காலம் காலமாய் வரதட்சணை கொடுமை நடந்துகிட்டு தான் இருக்கு ...அதிலும் மாப்பிள்ளையின் அம்மாக்கள் போடும் டிமாண்ட் இருக்கே ...ச்சே!!
மயூரி மாதிரி பெண்கள் சிங்கபெண்ணே தான்😀😛
சூப்பர் சிஸ்😀😀😀👍👍👍❤️❤️❤️
தேங்க்யூ சிஸ்😍😍😍😍
 

New Episodes Thread

Top Bottom