• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நெருஞ்சியாய் சில உறவுகள்

Nithya Mariappan

✍️
Writer
நெருஞ்சியாய் சில உறவுகள்

“கிரிஷ் சின்னக்குழந்தை இல்ல மதி... இன்னும் ஒரு வருசத்துல மேஜர் ஆகப்போற பையனைக் கை நீட்டி அறைஞ்சிருக்க... உன் ஆபிஸ் பிரஷரை அவன் மேல காட்டுறேன்னு என் கிட்ட வந்து கம்ப்ளைண்ட் பண்ணுறான்... வாட் கேன் ஐ டூ?”

சலிப்பாய் கேட்டார் எனது கணவர் திருவாளர் ராஜசேகர். அவரைத் தூண்டிவிட்டு ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் எனது புத்திரச்செல்வம் கிருஷ்ணபிரகாஷ் சுருக்கமாக கிரிஷ்.

இது தான் சாக்கென்று அடுத்த புகாரை என் கணவரிடம் கூற ஆரம்பித்தாள் எனது ஆருயிர் செல்வமகள் சர்மிஷ்டா.

“எனக்கும் ஓவரா ரூல் போடுறாங்கப்பா... படிச்சு முடிச்சிட்டு தான் மொபைலை யூஸ் பண்ணுறேன்... உடனே வந்து பிடுங்கி வச்சிடுறாங்க... என் ஃப்ரெண்ட் கவியோட அண்ணா கதிர் கூட அன்னைக்கு பைக்ல வந்ததுக்கு திட்டுறாங்கப்பா... எனக்கு எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா? கவி என்னை கிண்டல் பண்ணுறாப்பா... அம்மாக்கு இன்னைக்கு இருக்குற லைஃப்ஸ்டைலே தெரியல”

நாற்பத்திரண்டு வயதில் எனக்குத் தெரியாத வாழ்க்கைமுறை பதினைந்து வயதில் பள்ளிக்குச் செல்பவளுக்குத் தெரிந்துவிட்டதாம். நான் ஓரக்கண்ணால் பார்க்கவும் அதிருப்தியுடன் வாயை மூடிக்கொண்டாள். இவளுக்கு வெளியுலகமும் அதில் உலாவும் நபர்களும் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று புரிந்திருந்தால் நான் ஏன் கதிருடன் வந்து இறங்கியதற்கு கத்தப் போகிறேன்?

கடந்த ஒரு வாரத்தில் நிலவும் அசாதாரணமான சூழலில் மட்டும் நான் இல்லாவிட்டால் வெளியுலகைப் பற்றியோ என் மகளைப் பற்றியோ இந்தளவுக்குக் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.

குற்றம் சாட்டும் பார்வையுடன் என்னை நோக்கிய கணவரை நிமிர்வுடன் பார்த்தேன் நான்.

அவரோ எரிச்சலுற்றவராக “உன்னோட பட்டிக்காட்டுப்பழக்க வழக்கத்தைக் குழந்தைங்க மேல திணிக்காத மதி... காலம் மாறிடுச்சு... குழந்தைங்களை நீ உன்னோட கண்ட்ரோல்ல வச்சுக்கணும்னு பிரயத்தனப்பட்டு கட்டிப் போட்டேனா அவங்களே வெறுத்துப் போய் அந்தக் கட்டை அவிழ்த்துட்டு தவறான பாதைக்குப் போயிடுவாங்க... ஓவர் கட்டுப்பாடு தான் நிறைய நேரங்கள்ல அவங்களை தடுமாற வைக்கும்” என்று கூற

“அப்பிடியாங்க? இத்தனை நாள் நான் அவங்களை என்ன கண்ட்ரோல் பண்ணுனேன்னு சொல்ல சொல்லுங்களேன் பாப்போம்... சுதந்திரமா தானே விட்டேன்... ஏன்னா நான் உயிரையே வச்சிருக்குறவங்க என் நம்பிக்கைய காப்பாத்துவாங்கனு நினைச்சேன்... ஆனா இப்ப கொஞ்சநாளா தான் அது பெரிய பொய்னு தெரியுது” என்றேன் நான் மனக்குமைச்சலுடன்.

அவசரப்படாதே வெண்மதி என்றது எனது மனசாட்சி. பொறு வரிசையாக கேட்போம் என்று என்னை அமைதிப்படுத்தியது.

எனது பேச்சின் தொனியில் என் கணவர் என்னைக் கேள்வியாக நோக்குகையில் “இன்னைக்கு கிரிஷ்சோட ஸ்கூலுக்குப் போயிருந்தேன்” என்றேன் நான்.

உடனே கிரிஷ்சின் உடல்மொழியில் மாற்றம். தடுமாற்றத்துடன் அங்கிருந்து நகர முயன்றவனை கரம் பற்றி தடுத்து நிறுத்தினேன் நான். சர்மிஷ்டாவை அவளது அறைக்குச் சென்று படிக்கும்படி கட்டளையிட அவளோ நகர்வேனா என்று அங்கேயே நின்றாள்.

“ஒரு தடவை சொன்னா கேக்க மாட்டியாடி? ரூமுக்குப் போய் படினு சொன்னேன்... போ” என்று உச்சஸ்தாயியில் அதட்டியதும் அதிர்ந்தவள் “வர வர நீங்க ரொம்ப திட்டுறீங்க... ரூடா நடந்துக்கிறிங்கம்மா... ஐ ஹேட் யூ... எனக்கு நீங்க தேவையே இல்லை” என்று கூறிவிட்டுக் கண் கலங்க ஓடிவிட்டாள்.

அவளது ‘ஹேட் யூ’வில் மனதில் முள் தைத்தது போன்ற வலி உண்டானது என்னவோ உண்மை. அவள் சொன்னது போல சமீபநாட்களில் எனக்குக் கோபம் கொஞ்சம் அதிகமாகத் தான் வருகிறது.

காரணம் மெனோபாஸை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக இந்த ஒரு வார காலத்தில் ஒரு நிமிடம் இயல்பாக இருப்பவள் அடுத்த நிமிடத்தில் விரக்தியாய் உலாவுகிறேன். இதில் குழந்தைகள் சாதாரணமாகச் செய்யும் குறும்புகள் கூட அதீத கோபத்தை உண்டாக்கியது. அதன் விளைவாக இப்போதெல்லாம் அடிக்கடி பிள்ளைகளிடம் நான் அடிக்கடி எரிந்து விழுகிறேன். ஆனால் இப்போதைய கோபத்திற்கு காரணம் அதுவல்ல.

இன்னும் முதிர்ச்சியடையாத என் மகளுக்கு இந்த உலகின் கொடூரமான பக்கங்களை இப்போது அறிமுகப்படுத்த நான் விரும்பவில்லை.

ஆனால் என் கணவருக்கு மகளின் கண்ணில் கண்ணீரைக் கண்டதும் ஆற்றாமை தாளவில்லை.

“இன்னைக்கு நீ சரியில்ல மதி”

“நான் மட்டும் தான் இந்த வீட்டுல சரியில்லையாங்க?”

எனது கேள்வியில் தகப்பனும் மகனும் தடுமாறினர். இனி இவர்கள் பேச மாட்டார்கள்.

“கிரிஷ்சோட ஸ்கூலுக்கு எதுக்குப் போனேன்னு கேக்க மாட்டிங்களா? நானே சொல்லிடுறேன்... இன்னைக்கு மதியம் எனக்கு இவங்க ஸ்கூல் ஆபிஸ்ல இருந்து கால் வந்துச்சு... உடனே கிளம்பிவாங்க முக்கியமான விசயம்னு சொன்னதும் நானும் கிளம்பிப் போனேன்...

நேரா ஹெச்.எம் ரூமுக்குப் போகச் சொன்னாங்க... என்ன விசயம்னு புரியாம அங்க போய் நின்னா எனக்கு முன்னாடி பேரண்ட்ஸோட இவன் கிளாஸ் பொண்ணு ஒருத்தி அங்க இருந்தா... நான் போனதும் அந்தப் பொண்ணோட அம்மா என்னைப் பார்த்த பார்வை இருக்கே, அதுல அருவருப்பு மட்டும் தான் இருந்துச்சு... அந்தப் பொண்ணோட நேம் ரியா”

நான் அவளது பெயரைச் சொன்னதும் கிரிஷ்சின் தேகம் பயத்தில் நடுங்கியது. வியர்வை ஊற்றெடுத்தது. நெற்றியைத் துடைத்துக் கொண்டவன் என்னை இறைஞ்சல் பார்வை பார்த்தான்.

நானோ அவனது பார்வையை ஒதுக்கி விட்டு “கிரிஷ் அந்தப் பொண்ணோட இன்ஸ்டாக்ராம் போஸ்ட்ல ரொம்ப வல்கரா கமெண்ட் பண்ணிருக்கான்... இவனும் இவன் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து ரொம்ப அசிங்கமா அந்த கமெண்ட்ல பேசிருக்காங்க... கிளாஸ்ல ஏதோ பிரச்சனையாம்... அதுக்குப் பழி வாங்க இப்பிடி பண்ணிருக்காங்க... அந்தப் பொண்ணோட அம்மா காட்டுன ஸ்கிரீன்ஷாட்டை பாத்தப்ப எனக்கு இவனைப் பெத்த உடம்பு அருவருத்துப் போச்சுங்க” என்றேன் நான் அதே அருவருப்பை முகத்தில் தேக்கி.

கூடவே மொபைலை எடுத்து அந்த ஸ்க்ரீன்ஷாட்டுகளைக் காட்டவும் என் கணவரின் முகம் கடினமுற கிரிஷ்சோ அழுது விடும் நிலைக்கு வந்துவிட்டான்.

“ம்மா... சாரிம்மா” என்று நடுங்கிய குரலில் உரைத்தவனின் கன்னத்தில் பளாரென அறை விழுந்தது. அறைந்தவர் என் கணவர்.

“என்ன காரியம் பண்ணிருக்கடா? தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய ஒரு அளவுக்கு மேல கண்ட்ரோல் பண்ணாதனு நான் உனக்காக எத்தனை தடவை மதி கிட்ட ஆர்கியூ பண்ணிருக்கேன்... ஆனா நீ வயசுக்கு மிஞ்சுன காரியத்தை பண்ணிருக்க... உனக்கும் ஒரு தங்கச்சி இருக்காடா... எப்பிடி உன்னால இன்னொரு பொண்ணு கிட்ட இவ்ளோ வல்கரா பேச முடிஞ்சுது?”

சினத்தில் சீறியவர் மீண்டும் அவனை அறைய போக அவரது கரத்தைப் பிடித்து நிறுத்தினேன் நான்.

“விடு மதி... இன்னைக்கு தோலை உரிச்சு எடுக்குறேன்... அப்ப தான் இவன் திருந்துவான்”

“தப்பு பண்ணுன எல்லாரையும் அடிச்சு திருத்திடலாம்னு நினைக்கிறிங்களா? ஒரு பழமொழி சொல்லுவாங்க, முன் ஏர் போன வழில தான் பின் ஏர் போகுமாம்”

நான் பொடி வைத்துப் பேசவும் என் கணவர் திகைக்க கிரிஷ்சோ அமைதியாய் நின்றான்.

எனவே என் கணவரை விடுத்து அவனிடம் பேச முயன்றேன் நான்.

“நீ வளர்ந்துட்ட கிரிஷ்... சயின்ஸ்ல ஹியூமன் அனாட்டமி படிக்கிறல்ல? அதுல ஒரு பொண்ணோட பார்ட்ஸ் ஆப் த பாடிய பத்தியும் அதுல இருக்குற ஆர்கன்ஸ் பத்தியும் தெளிவா சொல்லிருப்பாங்க... அப்பிடி இருந்தும் நீ அவளோட அந்தரங்க உறுப்புகளை பத்தி அசிங்கமா கேலி பேசிருக்க... என்னமோ அந்த உறுப்புகள் அவளுக்கு மட்டும் தான் இருக்குங்கிற ரீதியில பேசிருக்கடா நீ...

உன்னைப் பெத்த எனக்கும் அந்த ஆர்கன்ஸ் இருக்கு, உன் கூட பிறந்த தங்கச்சிக்கும் அது எல்லாமே இருக்கு... எந்த ப்ரெஸ்டை பத்தி நீயும் உன் ஃப்ரெண்ட்சும் அசிங்கமா கமெண்ட் பண்ணிருக்கீங்களோ அதுல தான் நீங்க சின்ன வயசுல பசியாறுனிங்க... இதுல்லாம் உனக்குப் புரியுதா இல்லையா? ஒருவேளை உன்னோட அம்மா, தங்கச்சிலாம் புனிதமானவங்க... மத்த வீட்டுப்பொண்ணுங்கல்லாம் மோசமானவங்கனு நினைக்கிறீயா? கிளாஸ் சண்டைக்கு இந்த மாதிரி வல்கரா கமெண்ட் பண்ணுறது தான் தீர்வா கிரிஷ்? உன்னை நான் இவ்ளோ மோசமாவா வளர்த்திருக்கேன்?”

நான் பேச பேச உடைந்து போய் அழத் துவங்கினான் கிரிஷ். தாயுள்ளம் அல்லவா! அவனைத் தோளில் சாய்த்து சிகையை வருடிக் கொடுத்தேன் நான்.

“சாரிம்மா... நான் தப்பு பண்ணிட்டேன்... கோவத்துல அந்த மாதிரி பேசிட்டேன்மா... பப்ஜி ஸ்குவாட்ல ஒரு அண்ணா இப்பிடி தான் கேர்ள்ஸ் கிட்ட ஃபௌல் வேர்ட்ஸ் யூஸ் பண்ணுவார்... அதை கேட்டு கேட்டு நம்மளும் யூஸ் பண்ணுனா தப்பில்லனு தோணிடுச்சும்மா... இனிமே நான் இப்பிடி பேச மாட்டேன்”

அவன் கண்களைத் துடைத்தேன் நான்.

“இனிமே அந்த ஸ்குவாட்ல நீ விளையாடவேண்டாம்... சரியா?”

சரியென தலையாட்டியவனை முகம் கழுவிவிட்டுப் படிக்குமாறு அனுப்பி வைத்தேன் நான்.

திரும்பிப் பார்த்த போது என் கணவர் சோஃபாவில் தொய்வாக அமர்ந்திருந்தார். தலையைக் கையில் தாங்கியிருந்தவரைப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது.

ஆனால் என் மனதில் தைத்த முதல் முள் இவர் தானே. பரிதாபத்தைத் துடைத்துப் போட்டுவிட்டு இரவுணவை தயார் செய்யத் துவங்கினேன் நான்.

எப்போதும் வாய் ஓயாமல் அரட்டை அடிக்கும் சர்மிஷ்டா அமைதியாய் சாப்பிட்டு விட்டு எழுந்தாள். கிரிஷ்சோ இரவு வணக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

சாப்பிட்டு முடித்த பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்துவிட்டு சமையலறையின் விளக்குகளை அணைத்தவள் பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு எங்களது அறைக்குச் சென்றேன்.

என் கணவர் இன்னும் உறங்கவில்லை. மடிக்கணினியோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தார்.

மேஜை விளக்கு வெளிச்சத்தில் அவர் வேலையைச் செய்யட்டுமென கதவைத் தாழிட்டு பாட்டிலை மேஜை மீது வைத்துவிட்டு படுத்தவள் கண்ணயர்ந்து சில நிமிடங்கள் ஆகியிருக்கும்.

எனது கழுத்தில் குறுகுறுப்பாக வலம் வந்த முரட்டு இதழ்களும், முதுகை வருடிய கரங்களும் என் உறக்கத்தைக் கலைத்துவிட்டது. எப்போதும் மௌனமாக இதழ்களும் கரங்களும் செயல்பட இசைந்து கொடுக்கும் எனது தேகம் அன்று கல்லாய் கிடந்தது.

ஆனால் கொண்டவனின் உள்ளம் அதை உணராமல் என் மேனியில் சுற்றியிருந்த புடவையைக் கலைய அவசரப்பட்டது.

அப்போது என் மூளை மட்டும் விழித்துக்கொண்டு அவரது வாட்சப்பில் ‘நட்சத்திரா’ என்ற பெயரில் இருந்த அரட்டைகளை என் நினைவுக்குக் கொண்டு வந்தது

“யூ ஆர் லுக்கிங் செக்ஸி பேபி”

“வான்னா ஹக் யூ”

“ஷேல் வீ கோ டூ அனதர் ட்ரிப் பேபி? ஐ பேட்லி நீட் யூ”

இவை அனைத்தும் எனது உத்தம கணவர் ராஜசேகர் எவளோ ஒரு நட்சத்திராவிடம் கொஞ்சி குழைந்து பேசியிருந்த அந்தரங்க அரட்டைகள்.

பொதுவாக நான் என் பிள்ளைகள், கணவரின் மொபைலை நோண்டுவதில்லை. தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்பது எனது கொள்கை.

அதனால் நான் மொபைலை எடுத்துப் பார்க்க மாட்டேன் என்ற அசட்டுத்தைரியத்தில் அவளிடம் இத்தகைய அந்தரங்க உரையாடல்கள் நடந்தேறியிருக்கிறது. ஆனால் உரையாடலைத் தாண்டிய நிலையையும் அவர்கள் அடைந்துவிட்டார்கள் என்பதை இன்னொரு ட்ரிப் போகலாமா என்ற எனது கணவரின் கேள்வி எனக்குப் புரிய வைத்துவிட்டது.

இதோ இப்போது எனது துகிலை கலைய ஆளாய் பறக்கும் அவரது கரங்கள் எனக்கு என்னவோ எனது உடலைத் துளைத்து இரத்தத்தை உறிஞ்ச துடிக்கும் கொடிய மிருகத்தின் கரங்களாய் தோன்றியது.

இதே விரல்களால் தானே அவளையும் தீண்டியிருப்பார்? அந்த எண்ணம் எழுந்ததும் கழிவில் தோய்த்த விரல்கள் உடலெங்கும் ஊர்வது போன்ற பிரமையில் அருவருத்து அவரை வேகமாக விலக்கித் தள்ளினேன் நான்.

வேகமாக உடைகளைச் சரி செய்துவிட்டு விளக்கை உயிர்ப்பித்தவளுக்குக் காணக் கிடைத்தது எனது பதிதேவரின் மோகம் அறுபட்ட சுண்டிப்போன முகமே.

எரிச்சல் மண்ட “என்னாச்சு உனக்கு? இப்போலாம் நீ சரியில்ல மதி... நான் நெருங்குனாலே நீ விலகிடுற” என குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.

கூடவே “ச்சே! மனுசனுக்கு வெளியில ஆயிரம் டென்சன்... வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டி கிட்ட நிம்மதிய தேடி வந்தா நீயும் விலகிப் போற.... இப்பிடியே பண்ணுனா நான் ஒரு நாள் இல்லனா ஒரு நாள்...” என்று படபடவென பொரிந்தவரின் பேச்சில் குறுக்கிட்டேன் நான்.

“நிம்மதிய வெளிய தேடுவிங்களா?”

அடி பட்டாற் போல என் கணவர் விழிக்க எனக்கோ பரம திருப்தி.

“என்ன பாக்குறிங்க? அதை தானே சொல்ல வந்திங்க?”

எனது கேள்வியில் சுதாரித்தவர் சிரித்துச் சமாளிக்கப் பார்த்தார்.

“நீ ரொம்ப டயர்டா தெரியுற மதி... அசட்டுத்தனமா கேள்வி கேக்காம தூங்கு” என்றவர் தூங்க முயல

“எப்ப நட்சத்திரா கூட அடுத்த ட்ரிப் போகலாம்னு ப்ளான் பண்ணிட்டிங்களா?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன் நான்.

படுக்கையின் அடியில் வெடிகுண்டு வைத்திருப்பதை போல துள்ளிக் குதித்துக்கொண்டு எழுந்து நின்றார் ராஜசேகர்.

“மதி...”

குரல் தடுமாறுகிறதே! கேட்கும் போதே அற்ப சந்தோசம். எனது முதுக்குக்குப் பின்னால் கேவலமாக நடந்து கொண்ட போது அவருக்குக் கிடைத்த சந்தோசத்தை விட இதோ இப்போது இந்தக் குரலின் தடுமாற்றத்தால் எனக்குக் கிடைத்த சந்தோசம் மிகப்பெரியது.

“சொல்லுங்க... எப்ப கிளம்புறிங்க? போன மாசம் அபிஷியல் மீட்டிங்னு சொல்லிட்டு போனிங்களே, அந்த மாதிரியா?”

தடுமாற்றத்துடன் என்னை ஏறிட்டவர் “அது வந்து மதி... கொஞ்சம் சலனப்பட்டு...” என்று இழுக்க

“சலனமா? சலனப்படுறது ஆம்பளைங்களுக்கு மட்டும் இன்பில்டா இருக்குற குணமா? வெக்கமால்ல இப்பிடி சாக்குப்போக்கு சொல்லுறதுக்கு? பதினெட்டுல பையன், பதினைஞ்சுல பொண்ணுனு ஒன்னுக்கு ரெண்டு டீனேஜ் பிள்ளைங்க இருக்காங்க... பொண்ணு இன்னும் வயசுக்குக் கூட வரலை... ஆனா பெத்த தகப்பனுக்கு வாலிபம் துள்ளி விளையாடுது, அதான் வீட்டுல கிடைக்குற சுகம் பத்தாதுனு வெளிய தேட ஆரம்பிச்சிட்டார்... அப்பிடி தானே?” என வெகுண்டு வார்த்தைகளை வெளியிட்டேன் நான்.

எனது கணவர் முகம் கறுத்துப் போனது. ஆனாலும் ஆண் அல்லவா! தன்னை நியாயப்படுத்த என் மீது பழி சுமத்தும் வழக்கமான அவரது வர்க்கத்தின் வேலையை ஆரம்பித்தார்.

“நீ எனக்கு இணக்கமா இருந்திருந்தா நான் ஏன் வெளிய தேடிப் போறேன்? உனக்கு எப்பவும் வீட்டு வேலை, சாப்பாடு செய்யுறது, பிள்ளைங்க படிப்பு, இது தானே முக்கியம்... அதுவும் சமீப காலமா நான் நெருங்கி வந்தாலே முதுகைக் காட்டிட்டுப் படுத்துக்குற... நானும் உணர்ச்சியுள்ள ஆம்பளை தான்... எவ்ளோ நாள் தான் கண்ட்ரோலா இருக்க முடியும்? அதான் என் ஆபிஸ்ல ஒர்க் பண்ணுற நட்சத்திரா கிட்ட விழுந்துட்டேன்... அவ என் மனசறிஞ்சு நடந்துக்குற அளவுக்குக் கூட நீ நடந்துக்கல”

உடனே கோபம் ஊற்றெடுக்க “எதுல? படுக்கையிலயா? நான் ஒன்னே ஒன்னு கேக்கவா? அந்த நட்சத்திரா உங்க கூட தாலி கட்டி குடும்பம் நடத்தல... உங்களுக்குப் பிள்ளைங்களை பெத்து போடல... ஒரு நாள் சாப்பாட்டுல உப்பு குறைஞ்சாலோ, மெஷின்ல போட்ட துணிய காய வச்சு மடிக்க அயர்ந்துட்டாலோ உலகமே அழிஞ்சு போன மாதிரி கத்துவிங்களே, அதை அவ காது குடுத்து கேக்கப் போறது இல்ல... திங்கள் கிழமையும் தோசை புதன்கிழமையும் தோசையானு என் கிட்ட முகம் திருப்புற மாதிரி அவ கிட்ட நீங்க மூஞ்சி காட்ட முடியாது... ஏன்னா அவ வெறும் செக்சுவல் கம்பேனியன்... உங்களுக்கு படுக்கையில கம்பெனி குடுக்குறதை தவிர அவளுக்கு வேற வேலை இல்ல...

ஆனா எனக்கு எத்தனை வேலை இருக்குனு உங்களுக்கே நல்லா தெரியும்... அதை எல்லாம் செஞ்சுட்டு ஆய்ஞ்சு ஓய்ஞ்சு தூங்க வர்றப்ப நீங்க முதுகை சுரண்டுவிங்க... படுக்கையில உங்களுக்குச் சந்தோசத்தை குடுக்குற இந்த உடம்பு வீட்டுவேலையில எவ்ளோ அலண்டு போயிருக்கும்னு ஒரு நாள் யோசிச்சிருப்பிங்களா? நான் உங்க கம்பேனியன் மாதிரி ஏர்லி தேர்ட்டி இல்லைங்க... எனக்கு நாப்பத்திரண்டு வயசாகுது... மெனோபாஸ் காலகட்டத்துல ஹார்மோன்ஸ் குடுக்குற டார்ச்சர்ல எனக்கு இயல்பான தாம்பத்தியத்துல ஆர்வம் குறைஞ்சிடுச்சு... நீங்க நல்ல புருசன்னா அதை புரிஞ்சுக்கிட்டு என் மனசை வேற வழியில திருப்பி இந்த நேரத்துல எனக்குச் சப்போர்ட்டா இருந்திருப்பிங்க... ஆனா நீங்க இங்க கிடைக்காத சுகத்தை வெளிய தேடிக்கிட்டு என்னைக் குறை வேற சொல்லுறிங்க”

ஆதங்கத்துடன் மொழிந்தவளின் முன்னே தானாக என் கணவரின் தலை குனிந்தது.

“இதுக்கு மேல என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும்” என்றபடி திரும்ப படுக்க முயன்றவளின் கரத்தைப் பற்றிக் கொண்டார் அவர்.

“வேற மாதிரி எதுவும் முடிவெடுத்துடாத மதி... நம்ம பசங்களுக்காக...”

போதுமென்பது போல கரத்தை உயர்த்தினேன் நான்.

“ஏன் நடிக்கிறிங்க? எவளோ ஒருத்தி கூட உறவு வச்சிக்கிறப்ப மறந்து போன குழந்தைங்க இப்ப மட்டும் எப்பிடி உங்க ஞாபகத்துக்கு வர்றாங்க? நான் ஒன்னும் உங்களை மாதிரி என்னோட சுகம், என்னோட வசதிக்கு முக்கியத்துவம் குடுக்குற சுயநலவாதி இல்லை... நீங்க கவலைப்படாதிங்க”

அத்துடன் பேச்சுவார்த்தை முடிந்தது என படுத்து விட்டேன் நான். இந்த வாட்சப் அரட்டையை நான் கவனித்து இத்துடன் ஒரு வாரம் ஆகிறது.

இந்த ஏழு நாட்களில் என் மனம் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும். அடுத்த சில தினங்களில் தோழியின் அண்ணன் கதிருடன் டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் சர்மிஷ்டா.

அந்த கதிர் அவளை வெறித்த விதம் தான் என்னை அதிர வைத்தது. மற்றபடி ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவது பாவமென்று சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் கட்டுப்பெட்டி அல்ல.

சர்மிஷ்டா பதினைந்து வயது குழந்தை. தன்னை ஒரு ஆண் கேவலமான கண்ணோட்டத்தில் பார்க்கிறான் என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு இன்னும் அவள் மனதளவில் வளரவில்லை. அண்ணா என்று அழைப்பதால் அந்தக் கதிரும் கிரிஷ்சை போல சகோதரப்பாசத்துடன் தன்னிடம் பழகுகிறான் என்றே எண்ணிவிட்டாள் என் பெண்.

அத்தோடு கணவரின் கயமைத்தனம் வெளியாகி ஏழே நாட்களில் ஒரு பெண்ணைப் பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்து பள்ளி தலைமையாசிரியர் முன்னிலையில் இன்று என்னைத் தலை குனிய வைத்தான் என் மகன்.

இந்தக் கணவர், மகன், மகள் இவர்களுக்காக தானே எனது ஆசை, கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு முழுநேர குடும்பத்தலைவியாக வீடே கதியென கிடந்தேன் நான். அப்படி இருந்தும் ஏதோ ஒரு இடத்தில் நான் தவறிவிட்டேன்.

கணவரை எண்ணி வருந்துவதா? வழிதவறி சென்றுவிடுவானோ என்று மகனை எண்ணி பயப்படுவதா? வெளியுலகைப் பற்றிய கவலையின்றி திரியும் என் மகளை எண்ணி மனம் மருகுவதா? இருக்கிற மூன்று உறவுகளும் நெருஞ்சியாய் மாறி என் நெஞ்சை பதம் பார்த்த வேதனை!

உடலும் மனமும் ஓய்ந்த நிலையில் தான் கிரிஷ்சிடம் நான் கை நீட்டிவிட்டேன். என் கணவரிடம் இதை கூறியிருக்க வேண்டாம் தான். ஆனால் கொஞ்சமாவது அந்த மனிதருக்குக் குற்றவுணர்ச்சி இருக்கிறதா என பரிசோதிக்க எண்ணினேன். ஆனால் சபலப்படுவது ஆணின் இயற்கையான குணம் என்பதை போல அவர் மகனுக்கு மட்டும் அறிவுரை கூறிவிட்டு தனது தவறை சகஜமாக்க முயன்ற விதத்தில் எனக்கு வெறுத்துவிட்டது.

சர்மிஷ்டாவோ என்னை வெறுப்பதாகவே கூறிவிட்டாள். இத்தனை ஆண்டுகள் சிறப்புற நடத்தியதாக எண்ணி இறுமாப்புற்ற குடும்ப வாழ்க்கையில் முற்றிலும் தோற்றுப் போனவள் நித்திராதேவியிடம் சரணடைந்தேன்.

மறுநாள் விழிக்கையில் சர்மிஷ்டாவின் விசும்பல் என்னை பதறவைத்தது. என்னவோ ஏதோ என பதறி அவளது அறைக்குச் சென்றவளை “அம்மா” என்று அழைத்தபடி வந்து கட்டியணைத்துக் கொண்டாள் என் மகள். முந்தைய இரவில் என்னை வேண்டவே வேண்டாமென்றவளின் அணைப்பில் அந்தப் பேச்சினால் உண்டான வலி மறைந்துபோனது.

“என்னடா சர்மி? என்னாச்சு?”

விசும்பியபடியே படுக்கையைக் காட்டியவள் “வயிறு வலிக்குதும்மா” என்றாள்.

மொட்டாக இருந்த என் கண்மணி இன்று மலர்ந்துவிட்டாள். மகிழ்ச்சியில் பூரித்தது என் தாய் மனம். அவளை ஆதுரமாக அணைத்துக் கொண்டவளிடம் “மன்த்லி எக்ஸாம் வருதும்மா... நான் எப்பிடி ஸ்கூலுக்குப் போவேன்?” என்று கேட்க

“ப்ச்! இது தான் உன் கவலையா? இது ஒன்னும் பப்ளிக் எக்சாம் இல்லையே... இப்ப நீ சந்தோசமான மனநிலையோட இருக்கணும்... முதல்ல என் கூட வா... அம்மா உனக்கு மத்த விசயத்தைச் சொல்லித் தரேன்” என்று குளியலறைக்கு அழைத்துச் சென்றேன் நான்.

அவளைக் குளிக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்தவள் கிரிஷ்சிடம் “மெடிக்கல் ஷாப்புக்குப் போய் சானிடரி நாப்கின் வாங்கிட்டு வா கிரிஷ்” என்று கட்டளையிட அவனோ திருதிருவென விழித்தான்.

“ஏன் முழிக்கிற? போய் வாங்கிட்டு வா”

அப்போது தான் என் கணவர் விழித்தார் போல. என்ன நடந்தது என்று கூட கேட்கவில்லை.

“இதெல்லாம் ஏன் அவனை வாங்க சொல்லுற?” என்றார் அவர்.

எரிச்சல் மண்டியது எனக்கு.

“வாங்குனா என்ன தப்பு? இதெல்லாம் என்னனு புரிஞ்சா தான் பொண்ணுங்கிறவ மாசமாசம் இந்த உபாதையால எவ்ளோ கஷ்டப்படுறானு இவனுக்குப் புரியும்... வருங்காலத்துல இவனாவது இவன் பொண்டாட்டிக்கு அந்த மாதிரி நேரத்துல துணையா இருப்பானே... இதுல்லாம் ஆம்பளைக்கு ஏன் தெரியணும்னு ஒளிச்சு ஒளிச்சு வளர்க்குறதால தான் பொம்பளைங்க எல்லாரும் பீரியட் வலியையும், மெனோபாஸ் டிப்ரசனையும் அனுபவிக்கிறப்ப அதோட வேதனை புரியாத சில ஆம்பளைங்க தன்னோட தேவை தான் முக்கியம்னு சுயநலமா திரியுறாங்க”

இதற்கு மேல் என் கணவருக்குப் பேச நா எழவில்லை. கிரிஷ்சும் சானிடரி நாப்கின் வாங்க சென்றுவிட்டான்.

அமைதியாய் நின்றவரிடம் சென்ற நான் “பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டா” என்றேன் நான்.

உடனே முகம் கனிந்தது என் கணவருக்கு. ஆனால் என் மனம் இன்னும் அவரது துரோகத்தை மறக்கவில்லை.

கடினக்குரலில் “அவளுக்கும் இனிமே விவரம் தெரிய ஆரம்பிச்சிடும்... என் கவலை எல்லாம் என் பசங்க உங்களோட நடத்தையால எங்கயும் தலை குனிஞ்சிடக் கூடாதுங்கிறது மட்டும் தான்... என் வாழ்க்கைய பத்தி யோசிக்கிற கட்டத்தைலாம் நான் தாண்டிட்டேன்... சோ இதுக்கு மேலயும் நட்சத்திரா அவ இவனு தேடி அலைஞ்சிங்கனா ரொம்ப யோசிக்காம விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு அலையுங்க... இல்ல, மனசு மாறி திருந்துறிங்கனாலும் ஒரு ஓரமா திருந்தி வாழுங்க... இனிமே என் மனசுலயோ வாழ்க்கையிலயோ உங்களுக்கு எந்த இடமும் கிடையாது” என்று தீர்மானமாக உரைத்தேன்.

நான் பேசியதை என் கணவரால் நம்ப இயலவில்லை போல. வேகமாக என் கரத்தைப் பற்றியவர்

“என்னை மன்னிச்சிடு மதி... எனக்கு ரெண்டாவது வாய்ப்பு குடுக்கக்கூடாதா?” என்று இறைஞ்ச

“நான் ஒன்னும் நளாயினியோ கண்ணகியோ இல்ல, வெண்மதி... எச்சில் பாத்திரத்துல சாப்பிடுறது எனக்குப் பிடிக்காது... பசங்களுக்காக நம்ம ஒன்னா வாழலாம்... ஆனா முன்னாடியே சொன்ன மாதிரி உங்க நடத்தை மாறலைனாலோ, என்னை வேற மாதிரி எதுக்கும் ரொம்ப கம்பெல் பண்ணுனாலோ நான் டிவோர்சுக்கு அப்ளை பண்ண வேண்டியதா இருக்கும்” என்று உறுதியாக கூறவும் அவரது பிடி தளர்ந்தது.

அதே தளர்ச்சி அவரது அறையை நோக்கி நடந்த போது உடலிலும் பிரதிபலித்தது. எனக்கு ஏனோ இரக்கம் வரவில்லை. மாறாக இந்தப் போலியான உறவை பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தொடரவேண்டியுள்ளதே என்ற ஆதங்கம் தான் எழுந்தது.

அனைத்துப் பெண்களாலும் சில முடிவுகளைத் துணிச்சலாக எடுக்க முடிவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்தச் சமுதாயமும் அவர்களின் குழந்தைகளும் தான்.

அதே போல தான் வெண்மதியாகிய நானும் இனி என் பிள்ளைகளுக்காக நெருஞ்சியாய் என்னை வதைக்கும் இந்தத் திருமண உறவை தொடரப் போகிறேன், சில நிபந்தனைகளுட்பட்டு.

**********​
 

kothaisuresh

Well-known member
Member
அருமை. குளிர்ந்திருக்கும் வெண்மதி சுட்டெரிக்கும் சூரியனா மாறிட்டா
 

New Episodes Thread

Top Bottom