• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய "மெய் நிகரா பூங்கொடியே!

ஓம் சாயிராம்.

💕நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய "மெய் நிகரா பூங்கோடியே"💕

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன் ஆத்தரே.

உங்களின் ஏராளமான படைப்புகளில், நான் வாசிக்கும் மூன்றாவது கதை எது. இது ஆன்ட்டி ஹீரோ கதை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும், எப்போதும்போல, உங்கள் தனித்துவமான நற்சிந்தனைகள் நிரம்பிய, நேர்மறையான, குட் ஃபீல் உணர்ந்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

அழகிய ஆஞ்சநேயர் தரிசனத்துடன் அமைதியாகத் தொடங்கும் கதை, நாயகன் கிருஷ்ணராஜ சாகர், அவ்விடத்தில் தன் சரிபாதியையும் சேர்த்து தரிசிக்க, அதுவும் அவள் மறுமணத்திற்குத் தயார் என்ற செய்தியும் செவிகளில் சேர்ந்து விழ, கதை அதிரடி சரவெடியாக உருமாறுகிறது.

(ஆன்ட்டி ஹீரோ கதை ஆச்சே! இது கூட இல்லாமல் இருந்தால் எப்படி!)

விலகிச்சென்றவளை விரும்பியே விரட்டும் கிருஷ் சாகரின் பேச்சிலும் செயலிலும், சுயநலமே நிரம்பி வழிந்திருந்தாலும், அவன்மேல் கோபமே வரவில்லை என்பதுதான் உண்மை. காரணம், அந்த அதிகார திமிருக்கும், அகங்கார பேச்சிற்கும் பின் ஒளிந்திருந்த அன்பிற்கான ஏக்கங்களும், ஏமாற்றத்தின் வலிகளும்தான்.

மனைவியிடம் கறாராகப் பேசி, அவளைத் துன்புறுத்தியவன், மகன் என்றதும் மறுகணமே மெழுகாய் உருகிய அந்தவொரு குணம் காட்டிக்கொடுத்துவிட்டது, அவன் உண்மை சுபாவம் எதுவென்று.

மேலும், தன் காரியதரிசி இப்ராஹிம்க்கு அவன் தந்த மரியாதையும், மனத்தில் தந்த இடமும், அவன் மனிதநேயத்தைப் பறைசாற்றியது.

பாசமலமர் தங்கை ஸ்ரீநயனி மீது வைத்த கண்மூடித்தனமான அன்பை சொல்லவும் வேண்டுமோ!

அப்பேர்ப்பட்ட உன்னதமானவன், மனைவிடமும், சகோதரனிடமும், இன்னபிற மனிதர்களிடமும் ஆன்ட்டி ஹீரோவாக நடந்துகொண்டான் என்றால், அது அவர்களின் எதிர்வினைகளால் மட்டுமே.

கதையின் போக்கில், அவர்களின் செயல்களும் அதை ஊர்ஜிதம் செய்தது. “அனுபவிக்கட்டும்!” என்று அமைதியாக வேடிக்கை பார்க்கும் அளவிற்கு, கிருஷின் ஒவ்வொரு முடிவும் செயலும் நேர்த்தியாக இருந்தது.

இவை எல்லாவற்றிருக்கும் மேலாக, அவன் மாமனாரிடம் தன் காதலை மனம்திறந்து ஒப்புக்கொண்ட காட்சி மெய்சிலிர்த்துவிட்டது ஆத்தரே.

நித்தியம் ஒரு நெருக்கடி என்று, உறவுகளின் ரூபத்திலும், உடல் உபாதைகளின் மூலமும், தொழில் எதிரிகளாலும் நித்திலா போராடியதை மறுக்கவே முடியாது. இத்தனை இன்னல்களிலும், பொக்கிஷமாய் கைசேர்ந்த மணாளனின் காதலைப் புரிந்துகொள்ளாமல், அவள் விலகிச்சென்றதை, விதி என்று சொல்வதா, ஆத்தரின் சதி என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை.

நமக்கு நாமே எதிரி என்று சொல்லும்விதமாக நித்திலா மூலம் நல்லதொரு பாடம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

துணை பாத்திரங்களாக, நர்மு மா, சாகர் பா, ஜனார்தனன், ஸ்ரீநயனி, விக்ரம், இப்ரஹிம், சந்தீப், ராகுல் என மற்ற அத்தனை கதாபாத்திரங்களும் அசத்தல்.

நல்லவர்களும் கெட்டவர்களும் சூழத்தான் வாழ்கிறோம் என்று உணர்த்தும் வகையில், நிஹாரிகா & ஷைலேந்திரி பாத்திரத்தைச் சித்தரித்த விதம், மனத்திற்கு கனமாக இருந்த போதிலும், அதுவும் நிதர்சனம் தானே.

Cute Couples ஸ்ரீநயனி-விக்ரமும் சரி, வெகுளியான சந்தீப்பும் சரி; அறுபது அத்தியாயங்கள் கொண்ட கதையே என்றாலும், அவர்களின் காட்சிகள் போதவில்லை என்று தோன்றியது. ஆக, அவர்களுக்கு என்று பிரத்யேகமாகக் கதைகள் எழுதும்படி வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன் ஆத்தரே.

முக்கியமாக, அந்தக் கதைகளில், இந்த “Whining” Coupleக்கு சைட் ரோல் கூட தரக்கூடாது சொல்லிட்டேன். கேரளாவில் அவர்கள் “குடித்தனம்!” நடத்தினவரை போதும்.

இருந்தாலும் சாகர் நித்திமாவுக்கு வைத்த பட்டப்பெயரும், பெண்மானின் கோபத்திற்குத் அவன் தரும் சிகிச்சையும் படு தூள்.

(மேலும் சொல்லி கதையின் சஸ்பென்ஸ் உடைக்க விருப்பமில்லை.)

கதையில் நடைமுறை தகவல்களைச் சேர்க்கும் உங்கள் பாங்கு, எப்போதும்போல சூப்பர். நீங்கள் இணைத்த, கஃபே சார்ந்த தகவல்களும், சரும பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு முறை, யூட்யூப், நேர்மையான Influencers சந்திக்கும் சவால்கள், உண்மைச் சம்பவங்களும், சிந்திக்க வைக்கும் விதமாக இருந்தது.

அதேமாதிரி, கண்ணுக்கு முன் காட்சிகளை நிறுத்தும் உங்கள் சொல்லாடல். சாகர் நிவாசின் CCTV இல்லாத தாமரை குளமும், அதில் Spider Manனும், மரமல்லியின் வாசமும், சிம்லாவின் கஃபேவும், க்ளைடர் ஸ்கூட்டரும், ஊடல் கொண்ட ஜோடிகள் நர்மு அம்மாவிடம் அடி வாங்கிய அறையும் மறக்க முடியுமா என்ன.

அம்ருவின் கள்ளம் கபடமில்லாத முகமும் மனத்தில் பதிந்துவிட்டது.

உங்கள் தனித்துவமான நாட்குறிப்பு பதிவுகள் அற்புதத்திலும் அற்புதம். அவை கிருஷ், நித்திலாவின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்ததே என்றாலும், எல்லாருக்கும், எல்லாவிதத்திலும் பொருந்தும் வண்ணமாக, வாழ்க்கையின் நிதர்சனங்களை எடுத்துரைத்தது என்று சொன்னால், அது மிகையாகாது.

அதீத காதல் இருக்கும் இடத்தில்தான் ‘என்னவன்(ள்)” என்ற கர்வமும் அதீதமாக இருக்கும் என்பதையும், அதைச் சரியான நேரத்தில், சரியான விதத்தில் வெளிப்படுத்தாத போது, சின்னதொரு ஊடலும் பிரிவில் முடியும் என்று சொல்லும்விதமாக, மிக மிக அழகிய நேர்மறையான ஆன்ட்டி ஹீரோ கதை தந்த ஆத்தருக்கு என் அன்பு கலந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

இக்கதை, போட்டிக் கதையாக எழுதியது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் அப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம் என்றென்றும்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@Nithya Mariappan
 
Last edited:

New Episodes Thread

Top Bottom