• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணீர் - அத்தியாயம் 4

Nuha Maryam

✍️
Writer
சரியாக ஆர்யான் மற்றும் சிதாராவின் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிரணவ்விற்கு ஆஃபீஸில் ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

எவ்வாறாவது ஆர்யான் மற்றும் சிதாராவின் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என பிரணவ் திட்டமிட்டுக் கொண்டிருக்க, திடீரென வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவும் அவனின் தந்தை மூர்த்தியின் வற்புறுத்தலாலும் கிளம்பினான் பிரணவ்.

பெங்களூர் சென்றவன் முதல் நாள் மீட்டிங் முடித்து விட்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி வந்து கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் உன்னால என் மினிக்கு எந்த பிரச்சினையும் நான் வர விட மாட்டேன்...' என ஊட்டி சென்று வந்த அன்று இரவு பிரணவ்வை சந்தித்த ஆர்யான் அவனிடம் கூறியதே காதில் ஒலிக்க, "என் மினி... என் மினி... என் மினி... எப்பப்பாரு மினி மணின்னு அவ பின்னாடியே வால் பிடிச்சி சுத்திட்டு இருக்கான்... இல்ல... நான் அந்தக் கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்... அவ என் தாரா... அவளை நான் அடையாம விட மாட்டேன் ஆர்யான்..." எனக் கோபமாகக் கூறிய பிரணவ் தன் கோபத்தை எல்லாம் காரின் வேகத்தில் காட்ட, அக் கார் வீதியில் சீறிப் பாய்ந்தது.

திடீரென தூரத்தில் ஒரு லாரி வேகமாக வருவதை அவதானித்த பிரணவ் அவசரமாக தன் காரை திசை திருப்ப முயல, அதுவோ தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. சில நிமிடங்களிலே அந்த லாரி வேகமாக வந்து பிரணவ்வின் காருடன் மோத, காரில் இருந்து தூக்கி எறியப்பட்டான் பிரணவ்.

பிரணவ் பலத்த காயங்களுடன் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்க, அவனைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடினர். ஆனால் ஒருவர் கூட அடிபட்டு இருந்தவனை நெருங்கி அவனுக்கு என்ன ஏது என்று பார்க்க முயற்சிக்கவில்லை.

அப்போது தான் தன் தோழியுடன் அவ் இடத்தை அடைந்தாள் அனுபல்லவி.

************************************

"இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அனு? ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு... இன்னைக்கு ஏதோ இம்பார்டன்ட் மீட்டிங் வேற இருக்குன்னு சொன்னாங்க... நீ என்னடான்னா ஆடி அசைஞ்சி ரெடி ஆகிட்டு இருக்க..." எனக் கடு கடுத்தாள் சாரு என்கிற சாருமதி.

ஆனால் அவளின் கோபத்தை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது கூலாக கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

சாருமதி, "என்னவோ மேடம பொண்ணு பார்க்க வர போறது போல இப்படி ரெடி ஆகிட்டு இருக்க... சீக்கிரம் வா டி..." எனக் கத்தவும் ஒருவாறு தயாராகி முடித்த அனு, "கூல் பேபி... எதுக்கு இவ்வளவு கோவப்படுற? கூல்... கூல்... ஆஹ் அப்புறம் இன்னொரு விஷயம்... ஒரு விதத்துல நீ சொன்னது கூட கரெக்ட் தான் சாரு... காலைல இருந்து நான் இன்னைக்கு உன் அண்ணன மீட் பண்ண போறேன்னு உள்ள இருக்குற பட்சி சொல்லிட்டே இருக்கு..." என சாருமதியின் தோளில் கை ஊன்றி கூறினாள்.

"அண்ணனா?" என சாருமதி புரியாமல் கேட்கவும், "என் ஆளு டி... என் ஆளு உனக்கு அண்ணன் முறை தானே..." என அனு புன்னகையுடன் கூறவும் அவளை ஏகத்துக்கும் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள் சாருமதி.

சாருமதி தன் ஸ்கூட்டியை இயக்கவும் எங்கு தன் தோழி தன்னை விட்டு விட்டு சென்று விடுவாளோ எனப் பதறிய அனு ஓடி வந்து சாருமதியின் பின்னே ஏறிக்கொள்ள, ஸ்கூட்டி அவர்களின் ஆஃபீஸை நோக்கிப் பறந்தது.

"சாரு ஸ்டாப்... ஸ்டாப்..." என வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியின் பின்னே அமர்ந்திருந்த அனு பதட்டமாகக் கூறவும், பதறி வண்டியை ஓரமாக நிறுத்திய சாருமதி, "என்னாச்சு அனு? எதுக்கு வண்டிய அவசரமா நிறுத்த சொன்ன? ஏதாவது கீழ விழுந்திடுச்சா?" என்க,

"அங்க பாரு சாரு... ஒரே கூட்டமா இருக்கு... ஏதோ ஆக்சிடன்ட் போல... வா போய் பார்க்கலாம்..." என அனு பதிலளிக்கவும், "உனக்கு என்ன பைத்தியமா அனு? எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை? ஆல்ரெடி ஆஃபீஸுக்கு லேட் ஆகிடுச்சு... எம்.டி நம்மள திட்ட போறாரு..." எனக் கோபமாகக் கூறினாள் சாருமதி.

அந்தோ பரிதாபம். இவ்வளவு நேரம் சாரு கத்தியதைச் செவிமடுக்கத் தான் அங்கு யாரும் இருக்கவில்லை. அனு எப்போதோ அக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு விபந்து நடந்த இடத்தை நோக்கிச் சென்றிருந்தாள்.

அதனைக் கண்டு தலையில் அடித்துக்கொண்ட சாருமதி தன் நண்பியைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அங்கு அனு, "தள்ளுங்க ப்ளீஸ்..." என்றவாறு கூட்டத்தை விலக்கிக்கொண்டு செல்ல, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தவள் அவசரமாக கீழே இருந்தவனை மடியில் ஏந்தி தன் துப்பட்டாவை எடுத்து இரத்தம் வரும் இடத்தை இறுக்கிக் கட்டி விட்டு, "யாராவது சீக்கிரமா இவர ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக ஹெல்ப் பண்ணுங்க... ப்ளீஸ் சீக்கிரம்..." என்க,

சுற்றியிருந்த சனமோ தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவர், "பார்க்க சின்ன பொண்ணா இருக்க... உனக்கு எதுக்குமா தேவையில்லாத வேலை... ஆக்சிடன்ட் வேற... போலீஸ் ஸ்டேஷன் அது இதுன்னு அலைய வேண்டி வரும்..." என்றார்.

அதனைக் கேட்டு ஆத்திரப்பட்ட அனு, "என்ன மனுஷங்க நீங்க? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உங்களுக்கு? ரோட்டுல அடி பட்டு விழுந்து கிடக்குறார்... நீங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..." என்கவும் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த பிரணவ் கஷ்டப்பட்டு விழி திறந்து பார்க்க, அனுவின் முகம் மங்கலாக அவன் மனதில் பதிந்திட, அடுத்த நொடியே மயங்கியிருந்தான் பிரணவ்.

அதற்குள் சாருமதியே அவசர ஊர்த்திக்கு அழைத்திருக்க, அது வந்ததும் பிரணவ்வை அதில் ஏற்றி விட்டு அனுவும் அவனுடன் ஏறப் பார்க்க, அதற்குள் அவளின் கைப் பிடித்து தடுத்த சாருமதி, "போதும் அனு... அதான் ஆம்பியூலன்ஸ் வந்திடுச்சே... அவங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாங்க... இப்பவாச்சும் கிளம்பலாம் டி..." என்க, தோழியின் வார்த்தைக்கு இணங்கி மனமேயின்றி அவ் இடத்திலிருந்து சென்றாள் அனு. அவசர ஊர்த்தியும் மருத்துவமனையை நோக்கிக் கிளம்ப, அனுவின் மனதிலோ ஏதோ சொல்ல முடியா வலி.

************************************

வைத்தியசாலையில் பிரணவ்விற்கு சிகிச்சை நடைபெற, அவனின் கைப்பேசியில் இறுதியாக அழைத்த எண்களில் அவனின் பி.ஏ இன் எண் இருக்கவும் அவனுக்கு அழைத்து தகவல் தெரிவிக்கவும் உடனே பெங்களூர் கிளம்பி வந்தான் பிரணவ்வின் பி.ஏ ஆகாஷ்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணவ் மூன்று நாட்கள் கழித்தே கண் விழித்தான்.

என்ன நடந்தது என்பது புரியவே அவனுக்கு சற்று நேரம் எடுத்தது.

இதர பரிசோதனைகள் முடிந்து பிரணவ்வை வார்டுக்கு மாற்றியதும் ஆகாஷ் அவனைக் காண வர, "என்னாச்சு?" எனத் தலையைப் பிடித்தபடி மெல்லிய குரலில் கேட்க, "ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க பாஸ்... அன்னைக்கு மீட்டிங் முடிஞ்சு வரும் போது உங்களுக்கு ஆக்சிடன்ட் நடந்து மூணு நாள் கழிச்சி இன்னைக்கு தான் நீங்க கண் முழிச்சி இருக்கீங்க... அன்னைக்கு நீங்க அட்டன்ட் பண்ணின மீட்டிங்ல கான்ட்ராக்ட் நம்ம கம்பனிக்கே கிடைச்சிடுச்சு பாஸ்... அப்புறம்..." என ஆகாஷ் இழுக்க, பிரணவ் புருவம் சுருக்கி அவனைக் கேள்வியாய் நோக்கவும், "சாருக்கும் மேடமுக்கும் இன்ஃபார்ம் பண்ணேன்... பட் அவங்க ஏதோ பிஸ்னஸ் மீட்டிங் இருக்குறதா சொல்லி என்னையே பார்த்துக்க சொல்லிட்டாங்க..." என்றான் தயங்கியபடி.

ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், 'பெத்த பையன் ஆக்சிடன்ட் ஆகி சாக கிடந்தேன்... ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிஸ்னஸ் தான் முக்கியமா போச்சு...' என்றான் மனதில்.

அப்போது அறைக்குள் நுழைந்த மருத்துவர், "ஹெலோ மிஸ்டர் பிரணவ்... ஹவ் டூ யூ ஃபீல் நவ்?" என்க, "பெட்டர் டாக்டர்... நான் எப்போ டிஸ்சார்ஜ் ஆகலாம்?" எனக் கேட்டான் பிரணவ்.

மருத்துவர், "உங்களுக்கு நிறைய இன்டர்னல் இன்ஜுரீஸ் இருக்குறதனால வன் வீக் கழிச்சி தான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்... அப்புறம்..." என இழுத்தவாறு ஆகாஷைப் பார்க்க, "எனக்கு நம்பிக்கையான ஆள் தான் டாக்டர்... நீங்க சொல்லுங்க..." எனப் பிரணவ் கூறவும், "சாரி டு சே மிஸ்டர் பிரணவ்... அந்த ஆக்சிடன்ட்னால உங்களால ஒரு குழந்தைக்கு அப்பா ஆகுற வாய்ப்பை இழந்துட்டீங்க..." என மருத்துவர் ஒரு இடியை இறக்கவும் அதிர்ந்தான் பிரணவ்.

ஆகாஷ், "இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு தானே டாக்டர்..." எனப் பதறிக் கேட்கவும் பெருமூச்சு விட்ட மருத்துவர், "ட்ரீட்மெண்ட் பண்ணலாம்... ஆனா அது எந்த அளவுக்கு சக்சஸ்னு உறுதியா சொல்ல முடியாது... பட் நீங்க கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க... எல்லாம் அந்த கடவுள் கைல இருக்கு..." என்று விட்டு வெளியேறினார்.

பிரணவ்வோ மருத்துவர் கூறிய செய்தியில் கல்லாக சமைந்திருக்க, "பாஸ்..." என ஆகாஷ் அவன் தோள் தொடவும் தன்னிலை அடைந்த பிரணவ், "அபினவ் ஏன் வரல? எனக்கு ஆக்சிடன்ட் ஆகின விஷயம் அவனுக்கு தெரியுமா?" எனக் கேட்டான்.

"தெரியாது பாஸ்... அபினவ் சார் இன்னும் ஊர்ல இருந்து வரல... அதனால என்னால அவர் கிட்ட சொல்ல முடியல..." என ஆகாஷ் கூறவும், "அவனுக்கு ஃபோன் போட்டு கொடுங்க..." என்றான் பிரணவ்.

அபினவ் அழைப்பை ஏற்றதும், "என்னடா பண்ற இன்னும்... என்கேஜ்மன்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போன... இன்னுமே திரும்ப வரல..." எனப் பிரணவ் கேட்க,

"நீ ஏன்டா ரெண்டு நாளா கால் ஆன்சர் பண்ணல... என்கேஜ்மன்டுக்கு தான் வந்தேன்... பட் சடன்னா மேரேஜ் எடுக்க வேண்டிய நிலமை... அதான் வர முடியல.." என்றான் அபினவ்.

"ஓஹ்...." என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணவ், "சரி மச்சான்... சின்ன வேலை ஒன்னு... நான் அப்புறம் பேசுறேன்..." என்று விட்டு அபினவ்வின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்து விட்டான்.

சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்து இருந்த பிரணவ்விற்கு மருத்துவர் கூறியவையும் அவன் சிதாராவுக்கு செய்த அநியாயமுமே மாறி மாறி நினைவு வர, சிதாராவிற்கு அவன் செய்த அநியாயத்துக்கு கிடைத்த தண்டனையாகவே இதனை எண்ணினான் பிரணவ்.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனையும் மீறி மூடி இருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் வடிய, "பாஸ்..." என்ற ஆகாஷின் குரலில், "நீங்க கிளம்புங்க ஆகாஷ்... நான் கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும்..." எனப் பிரணவ் கூறவும் தன் முதலாளியின் பேச்சைத் தட்ட முடியாது அங்கிருந்து வெளியேறினான் ஆகாஷ்.

************************************

சென்னைக்கு வந்ததிலிருந்து பிரணவ்விற்கு தன்னை யாரோ பின் தொடர்வது போல் இருக்க, ஆகாஷின் மூலம் அது யார் எனக் கண்டறிந்தவன் நேரே அவனைக் காணச் சென்றான்.

பிரணவ், "வேலை நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சார்... பட் நீங்க கொஞ்ச நாளா என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்குறத நான் அவதானிச்சேன்... எதனாலன்னு தெரிஞ்சிக்கலாமா?" எனக் கேட்க,

முதலில் பிரணவ்வைக் கண்டு அதிர்ந்த ஆர்யானின் காவல்துறை நண்பனான ரவி அவனின் கேள்வியில் கேலியாகப் புன்னகைத்தவன்,

"ஹ்ம்ம்.. ரொம்ப தைரியம் தான்... போலீஸ் கிட்டயே வந்து எதுக்கு என்ன ஃபாலோ பண்றன்னு கேக்குற அளவுக்கு நல்லவனா நீ?" என்றான் கோபமாக.

பிரணவ் அவனைப் புரியாமல் பார்க்கவும், "எதுக்காக சிதாராவ கடத்த முயற்சி பண்ண..." என ரவி கேட்கவும் அதிர்ந்தான் பிரணவ்.

பிரணவ், "என்ன சொல்றீங்க சார்... நான் எதுக்கு தாராவ கடத்தனும்? " என்க,

ரவி, "சும்மா நடிக்காதேடா... நீ தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆர்யான் கிட்ட எப்படியாவது சிதாராவ உன் கிட்ட வர‌ வைக்கிறதா சேலேன்ஜ் பண்ணி இருக்க..." என்க,

"நான் ஆர்யான் கிட்ட அன்னைக்கு அப்படி சொன்னது உண்மை தான்... அது நான் தாராவுக்கு பண்ண தப்ப உணர்ந்தேன்... தாரா என்ன ரொம்ப லவ் பண்ணா... ஆர்யானுக்கு என்னை பிடிக்கல... அதனால தான் நான் அப்படி சொன்னேன்... ஆனா என் மனசுல இப்போ அப்படி எந்த எண்ணமும் இல்ல சார்.." என பிரணவ் கூற அவனை சந்தேகமாய் நோக்கினான் ரவி.

சற்று அமைதி காத்த பிரணவ் பின், "தாராவுக்கு ஆர்யான் கூட கல்யாணம்னு தெரிஞ்சப்ப எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நெனச்சது உண்மை தான்...‌ ஆனா அவங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை விஷயமா வெளியூர் போனேன்... போன இடத்துல எனக்கு ஒரு ஆக்சிடன்ட்... அதனால என்னால இனிமே எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குறதா நான் நெனச்சேன்... அப்போவே முடிவு பண்ணேன் தாரா இனிமே சந்தோஷமா இருக்கணும்னு... நிச்சயம் ஆர்யானால தான் அவள சந்தோஷமா வெச்சிக்க முடியும்... அதனால அதுக்கப்புறம் நான் தாராவ டிஸ்டர்ப் பண்ணல..." என்க,

"நீங்களும் சிதாராவ கடத்தலன்னா வேற யாரா இருக்கும்... ஆர்யானுக்கு கூட கால் பண்ணி மிரட்டி இருக்கான்... பட் சேட்டலைட் ஃபோன் யூஸ் பண்றதால எங்களால அவன ட்ரேஸ் பண்ண முடியல..." என்றான் ரவி.

பிரணவ், "உங்களுக்கு ஓக்கேன்னா என்னால தாராவ யாரு கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..." என்கவும் அவனைக் கேள்வியாய் நோக்கினான் ரவி.

"காலேஜ் டேய்ஸ்ல நான் ஹேக்கிங் படிச்சிருக்கேன்... அத வெச்சி என்னால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்... தாராவ கடத்த முயற்சி பண்ணவங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் எங்கயாவது ஏதாவது சின்ன தப்பாவது பண்ணி இருப்பாங்க... அதை வெச்சி அவங்கள பிடிக்க முடியும்..." என பிரணவ் கூறவும் ரவி சம்மதித்தான்.

பிரணவ் சென்ற பின் ஆர்யானிடம் கூற அவனுக்கு முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னவளின் நலனுக்காக அதற்கு சம்மதித்தான்.

ஆர்யான் பிரணவ்வுக்கு அழைக்க அவனும் சிதாராவுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக செய்வதாகக் கூறினான்.

ஜீவாவிடமிருந்து பெற்ற எண்ணையும் பிரணவ்விடம் வழங்கி யாரெனக் கண்டு பிடிக்கக் கூற அவன் அது நியுயார்க்கிலிருந்து வந்த அழைப்பு எனக் கூறியதும் சிதாராவைக் கடத்த முயன்றவனுக்கும் ஜீவாவிடமிருந்து தகவல் பெறுபவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ரவிக்குப் புரிந்தது.

அதனைக் கண்டு பிடிப்பதற்காக ரவி முதலில் நியுயார்க் செல்ல, அவனுக்கு உதவியாக பிரணவ்வையும் வரவழைத்தான்‌.

ஆர்யான் திடீரென அழைத்து சிதாராவைக் கடத்தி விட்டதாகக் கூறி நடந்ததைக் கூறவும் பிரணவ் சிதாராவின் எண் கடைசியாக சிக்னல் கட் ஆன இடத்தைக் கண்டு பிடித்தான்.

ஆர்யான், ரவி, பிரணவ் மூவரும் அங்கு செல்ல அங்கு ஒரு வேன் மட்டும் யாருமின்றி தனியே கிடந்தது.

ரவி அதன் எண்ணை வைத்து யாருடைய பெயரில் அந்த வேன் பதியப்பட்டிருப்பதைத் தேட, அதுவோ மிஸ்ஸிங் கேசில் பதியப்பட்டிருந்தது.

என்ன செய்ய என யோசிக்கும் போது தான் ஆர்யானுக்கு தன் வீட்டின் அருகே கிடைத்த பிரேஸ்லெட் ஞாபகம் வந்தது.

ஆர்யான் ரவியிடம், "டேய்.. எனக்கொரு டவுட் இருக்கு... பிரணவ்.. நீங்க நான் சொல்ற நம்பர் இருக்குற இடத்த ட்ரேஸ் பண்ணுங்க... நான் நினைக்கிறது சரின்னா மினி அங்க தான் இருக்கனும்..." என்க,

பிரணவ் உடனே ஆர்யான் தந்த ஆதித்யாவின் எண்ணை ட்ரேஸ் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.

ரவி நியுயார்க் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று ஆதித்யாவைப் பிடித்தான்.

ஆர்யான் ஆதித்யாவை ஜெயிலில் அடைத்து விட்டு சிதாராவை அனுமதித்திருந்த ஹாஸ்பிடல் வர, சிதாரா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை நெருங்கிய ஆர்யான் அவன் தோள் தொட்டு, "ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு..." என்க,

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு ஆர்யான்? தாராக்கு நான் பண்ண பாவத்துக்கு ஒரு பிராயச்சித்தமா தான் நான் இதை பண்ணேன்.." என்றான் பிரணவ்.

பிரணவ், "சரி ஆர்யான்.. அப்போ நான் கிளம்புறேன்... நான் இதை உங்க கிட்ட சொல்லணும்னு அவசியமில்ல... தாராவ நல்லா பார்த்துக்கோங்க... ஆல்ரெடி அப்படி தான் பாத்துக்குறீங்க... " என்க,

ஆர்யான், "மினிய பார்த்துட்டு போகலையா?" எனக் கேட்டான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இல்ல ஆர்யான்... அவ இப்போ சுயநினைவு இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு... நீங்க அவ கூட இருந்தா நிச்சயம் அவ சரி ஆகிடுவா... தாராக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்... அவ லைஃப்ல நான் முடிஞ்சு போன சேப்டர்... அது அப்படியே இருக்கட்டும்... எனக்கு தெரியும் தாராவுக்கு நான் பண்ணின காரியத்துக்கு உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்... முடிஞ்சா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... நான் போறேன்..." என்றவன் ஆர்யானின் தோளில் தட்டி விட்டு சென்றான்.

அன்றே மீண்டும் கிளம்பி இந்தியா வந்தடைந்தான் பிரணவ். பிரணவ் வந்ததும் கையில் ஏதோ பையுடன் அவனைக் காண வந்த ஆகாஷ், "பாஸ்... இது அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொடுத்து விட்டாங்க... உங்க திங்க்ஸ்..." என்க, அதனை வாங்கிக்கொண்ட பிரணவ், "ஆகாஷ்... இன்னைக்கு இருக்குற மீட்டிங்ஸ் டீட்டைல்ஸ் எல்லாம் எனக்கு மெயில் பண்ணி விட்டுடுங்க..." என்கவும் சரி எனத் தலையசைத்து விட்டு கிளம்பினான் ஆகாஷ்‌.

ஆகாஷ் சென்றதும் அவன் தந்த பையைப் பிரித்து பார்த்த பிரணவ் அதில் இருந்த இளமஞ்சள் நிற ஷாலைக் கண்டு புருவம் சுருக்கினான். அதற்குள் அவனுக்கு ஏதோ அழைப்பு வரவும் அதனை தன் கப்போர்ட்டில் வைத்துப் பூட்டி விட்டு அழைப்பை ஏற்கச் சென்றான்.

************************************

மக்களே!!! புதுசா இந்த கதையை படிக்கிறவங்களுக்கு இந்த அத்தியாயம் கொஞ்சம் குழப்பமா இருக்கலாம். இந்த கதை என்னோட "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." கதையில் வரும் பிரணவ்வோட தனிப்பட்ட கதை. இந்த அத்தியாயத்துக்கான விளக்கம் அந்த கதைல தான் இருக்கு. பட் இனிமே வர அத்தியாயங்களுக்கும் அந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. சோ புதுசா படிக்கிறவங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. அந்த கதையை படிக்காவிட்டாலும் இந்த கதை புரியும். Keep supporting 🤗
 
Last edited:

New Episodes Thread

Top Bottom