• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணீர் - அத்தியாயம் 24

Nuha Maryam

✍️
Writer
மறுநாள் விடிந்ததுமே பிரணவ் மற்றும் ஆகாஷ் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டினாள் அர்ச்சனா.

ஆகாஷ் சலிப்புடன் சென்று கதவைத் திறக்கவும் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அர்ச்சனா அப்போது தான் குளித்து உடை மாற்றி விட்டு வந்த பிரணவ்விடம், "அதான் அந்தப் ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்குறாங்கன்னு மீட்டிங் வெச்சி டிசைட் பண்ணுறதா சொல்லிட்டாங்களே... இன்னும் ஏன் நாம இங்கயே இருக்கோம்? கிளம்பலாம் தானே..." என்றாள்.

எங்கு இங்கு இருந்தால் மீண்டும் பிரணவ் அனுபல்லவியை சந்திக்க நேரிட்டு அதனால் பிரணவ்வின் பழைய நினைவுகள் வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு.

"யாரும் உன்ன எங்க கூட வான்னு கட்டாயப்படுத்தல... நீயா தான் வந்த... போறதுன்னாலும் தாராளமா போ... ஐ டோன்ட் கேர்..." என்றான் பிரணவ் அழுத்தமாக.

ஆகாஷின் முன் பிரணவ் தன்னை அவமானப்படுத்தியதில் முகம் சிறுத்த அர்ச்சனா அதனை வெளிக்காட்டாது மறைத்தாள்.

பின் போலிப் புன்னகையை முகத்தில் ஏந்தி, "அ...அது இல்ல பிரணவ்... அவங்க எப்படி பேசினாங்கன்னு பார்த்தேல்ல... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் அளவுக்கு இல்லன்னாலும் நம்ம கம்பனியும் டாப் ஃபைவ்ல தான் இருக்கு... ஆனா அவங்க நம்மள மதிக்காம எப்படி திமிரா பேசினாங்க? நாம எதுக்கு அவங்க கிட்ட அடி பணிஞ்சி போகணும்?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

"அவ அவனுக்கு அவனவன் கவலை..." என நக்கலாக முணுமுணுத்தான் ஆகாஷ்.

ஆகாஷைத் திரும்பி அர்ச்சனா முறைத்து வைக்க, "இங்க யாரும் திமிரா நடந்துக்கவும் இல்ல... அடி பணிஞ்சி போகவும் இல்ல... இதுக்கு தான் பிஸ்னஸ் மைன்ட் வேணும்ங்குறது... உன்ன எல்லாம் எப்படி தான் வேலைக்கு சேர்த்தேனோ? இதுல காதல் வேறயாம்..." என்றான் பிரணவ் கடுப்பாக.

அர்ச்சனா இடைமறித்து ஏதோ கூற வர, "இங்க பாரு அர்ச்சனா... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு ரொம்ப முக்கியமானது... அதுக்காக நான் எந்த எல்லைக்கும் இறங்கி போவேன்... உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா தயவு செஞ்சி போயிடு... நான் நிம்மதியா இருப்பேன்... ஆகாஷ்... உடனே இவளுக்கு பெங்களூர் கிளம்ப டிக்கெட் புக் பண்ணு..." என உத்தரவிட்டான் பிரணவ்.

ஆகாஷ் கைப்பேசியை எடுக்கவும், "இ...இல்ல இல்ல... நான் போகல... இங்கயே இருக்கேன்... நம்ம கம்பனிக்காக தானே... கொ.. கொஞ்சம் இறங்கி போறதுல தப்பில்ல..." என்றாள் அர்ச்சனா சமாளிப்பாக.

அர்ச்சனா அங்கிருந்து சென்று விடவும் ஆகாஷிடம் திரும்பிய பிரணவ், "நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்... ஏதாவது அர்ஜென்ட்டா இருந்தா மட்டும் கால் பண்ணுங்க..." என்கவும், "நானும் கூட வரட்டா பாஸ்?" எனக் கேட்டான் ஆகாஷ்.

பிரணவ் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்ட ஆகாஷ், "நீங்க போய்ட்டு வாங்க பாஸ்... இங்க நான் சமாளிக்கிறேன்..." என்றான் அவசரமாக.

பிரணவ் அங்கிருந்து கிளம்பியதும் ஆகாஷ் அனுபல்லவியின் அலுவலகத்திற்கு அழைத்து ஏதோ விசாரித்தான்.

அவனுக்கு தேவையான பதில் கிடைத்ததும் ஆகாஷின் முகத்தில் புன்னகை குடி கொண்டது.

உடனே தன்னவளுக்கு அழைத்து ஏதோ கூறினான்.

இங்கு பிரணவ்வோ ஹைதரபாத்தில் இருந்த புகழ் பெற்ற பார்க் ஒன்றிற்கு வந்திருந்தான்.

ஒரு ஓரமாக இருந்த கல் பெஞ்ச் ஒன்றில் கண்களை மூடி அமர்ந்த பிரணவ் முதன் முறை அக் காரியத்தை செய்தான்.

தாயின் கட்டளையின் பெயரில் தான் மறந்த நினைவுகளை மீட்க இந்த ஐந்து வருடங்களும் முயலாதவன் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து தன் நினைவடுக்குகளைத் துலாவினான்.

முன்பெல்லாம் போல் அல்லாது அனுபல்லவியைப் பார்த்ததில் இருந்து அவனின் மனம் அவனிடம் ஏதோ கூற முயலுவதாக உணர்ந்தான்.

ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.

தான் இழந்த ஏதோ ஒன்று இங்கு இருப்பதாக உணர்ந்தான் பிரணவ்.

தான் காதலித்ததாகக் கூறப்படும் அர்ச்சனாவைக் காணும் போது வராத உணர்வு அனுபல்லவியைக் காணும் போது அவனுள் எழுந்தது.

ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைப் பற்றி தான் இவ்வாறு உணர்வது சரியா தவறா என்று எல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் தான் தொலைத்த ஏதோ ஒன்று நிச்சயமாக இங்கிருப்பதாக நம்பினான்.

எவ்வளவு தான் யோசித்தும் அவனின் நினைவடுக்குகளில் சேமிக்கப்பட்டிருந்த எதுவும் அவன் நினைவில் வரவில்லை.

மாறாக தலைவலி வந்தது தான் மிச்சம்.

இதற்கு மேல் முயற்சித்தால் அன்னை பயப்படுவது போல் ஏதாவது நடந்து விடும் எனப் புரிந்துகொண்ட பிரணவ் மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தான்.

அதேநேரம் அவனுக்கு முன்னே சில அடிகள் தூரத்தில் ஒரு ஆண் குழந்தை பிரணவ் இருந்த திசையைப் பார்த்து, "அப்பா..." என தன் மழலைக் குரலில் மகிழ்ச்சியாக அழைத்தவாறு அவனை நோக்கி ஓடி வந்தது.

ஒரு நொடி பிரணவ்வின் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.

மயிர்க்கால்கள் எல்லாம் பரவசத்தில் எழுந்து நின்றன.

பிரணவ்விற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு.

ஆனால் அதே நேரம் பிரணவ்வின் பின்னால் இருந்து அந்தக் குழந்தையை நோக்கி நடந்த ஒரு ஆடவன், "எங்க பாப்பா போன அதுக்குள்ள?" என்றவாறு அக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.

ஏதோ ஒரு ஏமாற்றம் பிரணவ்வின் நெஞ்சில் எழுந்து அவனை வதைத்தது.

தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

அதைப் பற்றி யோசிக்கும் முன்னே, "பிரணவ்... இங்க தான் இருக்கீங்களா?" என்றபடி அவன் முன் வந்து நின்றாள் அர்ச்சனா.

அர்ச்சனாவைக் கண்டதும் எழுந்த ஆத்திரத்தை அடக்க தன் முடியை அழுத்திக் கோதிய பிரணவ், "நீ இங்க என்ன பண்ணுற?" என்றான் எரிச்சலாக.

"நீங்க தனியா எங்கயோ கிளம்பி போறதைப் பார்த்தேன்... அதான் உங்க கூட வரலாமேன்னு வந்தேன்... அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க... அதான் உங்கள ஃபாலோ பண்ணி வந்தேன்..." என்றாள் அர்ச்சனா புன்னகையுடன்.

அவள் உரிமையாகப் பேசும் ஒவ்வொரு முறையும் கன்னத்தில் 'பளார்' என அறையத் துடிக்கும் தன் கரத்தை இறுக்கி மூடிக் கொண்ட பிரணவ், "கொஞ்சம் நேரம் கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? ச்சே..." எனக் கடிந்து கொண்டு விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான்.

அர்ச்சனாவும் அவனைப் பின் தொடர்ந்து அவசரமாக ஓடினாள்.

************************************

வாடிய கொடியாய் கட்டிலில் மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே படுத்துக் கிடந்தவரின் தலையைக் கோதி விட்டு அவருக்கு மெதுவாக கூழைப் பருக்கினாள் அனுபல்லவி.

அவரின் விழிகள் அனுபல்லவியின் முகத்தைப் பார்த்து கண்ணீர் சிந்த, உதடுகளோ ஏதோ கூற முயன்று அசைந்தன.

அவரின் விழி நீரைத் துடைத்து விட்ட அனுபல்லவி, "அதான் நான் உங்க கூட இருக்கேன்லப்பா... எதை நினைச்சும் கவலைப்படாதீங்க..." என்றாள் வரவழைத்த புன்னகையுடன்.

மறுப்பாகத் தலையசைத்தவரோ, "நீ...நீ... என்...என்...னால..." என ஏதோ கூற முயன்றார்.

அனுபல்லவி, "ஷ்ஷ்ஷ்... அதான் சொன்னேனே... எதுவும் பேசாதீங்க... எல்லாம் மறந்துடுங்க... எனக்குன்னு நீங்க இருக்கீங்களே... அது போதும்... நான் சந்தோஷமா தான் இருக்கேன்..." என்கவும், "அ...அம்மா... அம்மா..." என அவர் கண்ணீர் வடிக்கவும் தன்னையும் மீறி கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.

"அவங்க வாழ்க்கை அவ்வளவு தான் பா... பிறந்ததிலிருந்து எந்த சந்தோஷமும் அனுபவிக்காமலே போய் சேரணும்னு அவங்க விதி போல... நீங்க காரணம் இல்லப்பா..." என்றாள் அனுபல்லவி சமாதானமாக.

அப்போது சரியாக பிரதாப் அவ் அறைக்குள் தயக்கமாக நுழையவும், "இ...இவன்... இவன்..." என ஆவேசமாக எழ முயன்றவரை, "அப்பா... அமைதியா இருங்க தயவு செஞ்சி..." என லேசாக அனுபல்லவி அதட்டவும் அவர் முகம் வாடினார்.

பெருமூச்சு விட்ட அனுபல்லவி தந்தையின் கரத்தைப் பற்றி, "அப்பா... அதான் தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிக்கிறாங்களே... அதுக்காக மாமா பண்ணது சரின்னு சொல்லல... அவருக்கு நான் கொடுத்து இருக்குற தண்டனையே போதும்... நீங்க எதையும் நினைச்சி வருத்தப்படாதீங்க... உங்கள இந்த நிலமைக்கு கொண்டு வந்தவங்கள நிச்சயம் நான் சும்மா விட மாட்டேன்..." என்றாள் உறுதியாய்.

அத்துடன் அமைதியானவருக்கு தேவையான மருந்தைக் கொடுக்கவும் அவர் உறங்கி விட, அறை வாயிலில் தயக்கமாக நின்றிருந்த பிரதாப்பை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் அனுபல்லவி.

************************************

அனுபல்லவி தன் அலுவலக அறையில் அமர்ந்து ஏதோ கோப்புகளை புரட்டிக் கொண்டிருக்க, புயல் வேகத்தில் அங்கு நுழைந்தான் பிரணவ்.

கோபமாக தன் இருக்கையை விட்டு எழுந்த அனுபல்லவி, "மிஸ்டர் பிரணவ்... கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லயா? இப்படி தான் பர்மிஷன் வாங்காம ஒருத்தரோட கேபின் உள்ள நுழைவீங்களா?" எனக் கேட்டாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

இதழில் கேலி நகையோட அனுபல்லவியின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்த பிரணவ், "எனக்கு மேனர்ஸ் இல்லன்னே வெச்சிக்கலாம்... ஆனா பல்லவி மேடமுக்கு நேர்மைன்னா என்னன்னு தெரியுமா? இல்ல நேர்மைக்கு எத்தனை எழுத்துன்னு கூட தெரியாததனால தான் ஜஸ்ட் ப்ராஜெக்ட் லீடரா இருந்தவங்க அஞ்சி வருஷத்துக்குள்ள ஒரு கம்பனிக்கே எம்.டி ஆகி இருக்கீங்களா?" எனக் கேட்டான் திமிருடன்.

ஒரு நொடி பிரணவ்விற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதோ என அனுபல்லவியின் முகம் மாற, மறு நொடியே அதனைப் பிரணவ்விற்கு காட்டாது மறைத்தவள் அதே திமிருடன், "ஓஹ்... உங்க கம்பனில வர்க் பண்ணி உங்க கிட்ட கை ஏந்தி சம்பளம் வாங்கிட்டு இருந்தவ இப்போ உங்கள விட உயர்ந்த இடத்துல இருக்குறதனால பிரணவ் சாருக்கு பொறாமையா இருக்கு போல..." என்றாள் எள்ளலுடன்.

நொடி நேரம் என்றாலும் அனுபல்லவியின் முகத்தில் வந்து சென்ற மாற்றத்தை அவதானித்து விட்டான் பிரணவ்.

அவளின் திமிர் கலந்த பேச்சை வெகுவாக ரசித்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை ரசனையுடன் நோக்கினான்.

பிரணவ்வின் பார்வையில் தடுமாறிய அனுபல்லவி அவசரமாக தண்ணீரைக் குடித்து தன்னை சமன்படுத்திக்கொள்ள, பிரணவ்வின் பார்வை மெதுவாக அவளின் முகத்தை விட்டு கீழிறங்கி அவளின் கழுத்தில் தொங்கிய பொன் தாலியில் நிலைத்து நின்றது.

மறு நொடியே பிரணவ்வின் தாடை இறுக, அனுபல்லவியை ஆத்திரத்துடன் நோக்கியவன், "என்ன தைரியம் இருந்தா எங்க கிட்ட ப்ராஜெக்ட்டை யாருக்கு தரணும்னு யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு எங்க கம்பனிக்கு எதிரா வேலை பார்க்குற கம்பனிக்கு கொடுக்க ரகசியமா டீல் பேசி இருப்ப?" எனக் கேட்டான் பல்லைக் கடித்துக்கொண்டு.

பிரணவ்வின் பேச்சில் குழம்பிய அனுபல்லவி ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனைத் திமிருடன் நோக்கி விட்டு, "உன் கம்பனிக்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுக்க விரும்பலன்னு அர்த்தம்..." என்றவள், "என் இடத்துக்கே வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறீங்க... மரியாதை கொடுத்தா மட்டும் தான் மரியாதை திரும்ப கிடைக்கும்..." என்றாள் அழுத்தமாக.

அவளை ரசனையாக நோக்கிய பிரணவ் தன் இருக்கையை விட்டு எழுந்து அனுபல்லவியை நோக்கிக் குனிந்தான்.

அதில் தடுமாறி அனுபல்லவி இருக்கையின் பின்னே சாய, "உரிமை உள்ள இடத்துல மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன் மிஸ் ப....ல்லவி..." என இழுத்துக் கூறியவன் மேலும் குனியவும் அனுபல்லவியின் விழிகள் தன்னால் மூடிக் கொண்டன‌.

வெகுநேரம் கழித்தும் எதுவும் நடக்காததால் அனுபல்லவி மெதுவாக இமைகளைத் திறக்க, அவளையே குறும்புப் புன்னகையுடன் மார்பின் குறுக்கே கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

இவ்வளவு நடந்தும் பிரணவ்வின் அருகாமையில் தடுமாறும் தன் மனதை வறுத்தெடுத்த அனுபல்லவி பிரணவ்வை ஏகத்துக்கும் முறைத்தாள்.

பிரணவ், "எனக்கு சொந்தமான பொருளை என் கிட்டயே எப்படி வர வைக்கணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்.‌‌.." என்றவனை அனுபல்லவி பயத்துடன் ஏறிட, "ப்ராஜெக்ட் பத்தி சொன்னேன் மிஸ் பல்லவி..." எனக் குறு நகையுடன் கூறிய பிரணவ் வந்த வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்று வெகுநேரம் கழிந்தும் திடீரென பிரணவ் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் என்ற பயத்தில் இதயம் பல மடங்கு வேகமாகத் துடிக்க அமர்ந்திருந்தாள் அனுபல்லவி.

அப்போது தான் பிரணவ் கூறிய விடயம் நினைவு வந்து ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள் உடனே பிரதாப்பிற்கு அழைத்து தன்னை சந்திக்கக் கூறினாள்.

பிரதாப் அங்கு வரவும், "யார் கிட்ட கேட்டு எனக்கு தெரியாம மிஸ்டர் தர்மராஜோட கம்பனி கூட டீல் பேசினீங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி கோபமாக.

"அனு அது..." என ஏதோ கூற வந்த பிரதாப்பின் முன் கை நீட்டி தடுத்தவள், "இது என் கம்பனி... உங்க லிமிட்டோட இருந்துக்கோங்க... அதை விட்டு இப்படி ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா தண்டனை கடுமையா இருக்கும்..." என எச்சரித்த அனுபல்லவி, "என்ன? திரும்ப நான் பிரணவ்வை பார்த்ததும் மனசு மாறிடுவேனோன்னு பயந்து இப்படி பண்ணுறீங்களா?" எனக் கேட்டாள் நக்கலாக.

பிரதாப்பின் தலை ஆம் என மேலும் கீழும் ஆட, அவனை நோக்கி கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த அனுபல்லவி, "அதுக்கு தான் வழியே இல்லாம பண்ணிட்டீங்களே..." என்றவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியைக் குனிந்து நோக்கினாள்.

பிரதாப்பின் முகம் குற்ற உணர்வில் வாட, வெறுமையுடன் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த அனுபல்லவி, "உங்க கிட்ட கெஞ்சி கேட்குறேன் மாமா... தயவு செஞ்சி இதுக்கு மேலயும் என்னை உயிரோட வதைக்காதீங்க..." என்றாள் கண்ணீருடன்.
 

New Episodes Thread

Top Bottom