• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணீர் - அத்தியாயம் 19

Nuha Maryam

✍️
Writer
அனுபல்லவியின் கன்னத்தில் தன் கன்னம் உரச அவளை இறுக்கி அணைத்தவாறு படுத்திருந்தான் பிரணவ்.

சில நொடிகளிலேயே அனுபல்லவியின் கன்னம் ஈரமாகவும் அதிர்ந்தவள் தன் தலையை உயர்த்தி தன்னவனைக் காண, பிரணவ்வின் மூடியிருந்த விழிகளைத் தாண்டி கண்ணீர் கசிய தன் அணைப்பை இன்னும் இறுக்கினான்.

அனுபல்லவிக்கு வலித்தாலும் தன்னவனின் வலியை அதன் மூலம் உணர்ந்தவள் தன் இதழால் அவனின் விழி நீரைத் துடைக்கவும், இமை திறந்தான் பிரணவ்.

பிரணவ், "என் வலியை மறக்கணும்னு நான் உன்ன கஷ்டப்படுத்துறேனா பவி?" எனத் தன்னவளின் முகம் பார்த்து வருத்தமாக வினவவும் பிரணவ்வை விட்டு விலகி கட்டிலில் சாய்ந்தமர்ந்த அனுபல்லவி தன் மடியைக் காட்டினாள்.

அதனைப் புரிந்துகொண்ட பிரணவ் உடனே அவள் மடியில் தலை சாய்த்து வயிற்றில் முகம் புதைத்தான்.

பிரணவ்வின் தலையை வருடியவாறே, "உங்களால என்னை எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படுத்த முடியாது பிரணவ்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஒருவேளை நீ மட்டும் என் பக்கத்துல இல்லன்னா எனக்கு என்ன ஆகி இருக்கும்னே தெரியல பவி..." எனப் பிரணவ் கூறவும் அவனைப் பேச விட்டு அமைதியாக இருந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "சின்ன குழந்தையா இருக்கும் போது எதுவுமே தெரியல... அம்மாவும் அப்பாவும் கூடவே இருப்பாங்க... அவங்க கையை விட்டு இறக்கவே மாட்டாங்க... அப்படி எல்லாம் இருந்துட்டு ஓரளவுக்கு வளர்ந்ததும் திடீர்னு ஒருநாள் கேர்டேக்கரை கூட்டிட்டு வந்து அவங்க கைல என்னை ஒப்படைச்சிட்டு அப்பாவும் அம்மாவும் பிஸ்னஸை கவனிக்க போய்ட்டாங்க...

எனக்கு அந்த கேர்டேக்கரை பிடிக்கவே இல்ல... சம்பளம் தராங்கன்னு கடமைக்கு என்னைப் பார்த்துப்பாங்க... ரொம்ப திட்டுவாங்க... அதனாலயே நான் அவங்களை கடிச்சி வைப்பேன்... இதை அவங்க அம்மா கிட்ட போட்டு கொடுக்கவும் அம்மா என்னைத் திட்டிட்டு வேற கேர்டேக்கர் ஏற்பாடு பண்ணாங்க... எல்லாருமே அப்படி தான்... பணத்துக்காக வேலை பார்க்குறாங்க... எத்தனையோ கேர்டேக்கர் மாத்தினாங்க... ஆனா கடைசி வரை அம்மாவால மட்டும் தான் என்னைப் பார்த்துக்க முடியும்னு அம்மாவுக்கு புரியல... ஒரு கட்டத்துக்கு மேல எனக்கே எல்லாம் வெறுத்து போய் எனக்குள்ளே ஒடுங்கி போய் அமைதியாகினேன்... என்னோட வேலை எல்லாம் நானே பண்ணிக்க ஆரம்பிச்சேன்... அதுக்கப்புறம் அம்மா எந்த கேர்டேக்கரும் வைக்கல... நான் பேசுறதை கூட குறைச்சிக்கிட்டேன்...

பக்கத்து வீட்டுல என் வயசுலயே ஒரு பையன் இருந்தான்... ஆனா அவங்க ரொம்ப வசதி இல்லாதவங்க... அந்தப் பையன் கூட நான் சேர்ந்து விளையாடுவேன்... இதைப் பத்தி அம்மாவுக்கு தெரிஞ்சதும் என்னை ரொம்ப திட்டிட்டாங்க... நம்ம தகுதிக்கு குறைஞ்ச யார் கூடவும் பழகக் கூடாது... எல்லாருமே பணத்துக்காக தான் நம்ம கூட பழகுவாங்கன்னு சொன்னாங்க... அது அந்த வயசுலயே என் மனசுல பதிஞ்சி போயிடுச்சு... அப்புறம் அந்தப் பையன் கூட நான் சேர்ந்து விளையாடல...

ஸ்கூல் காலேஜ் எல்லாமே நல்ல பெரிய வசியானதா பார்த்து அம்மா சேர்த்து விட்டாங்க... அங்க படிக்கிற எல்லாருமே பணக்கார வீட்டுப் பசங்க... பணம் இருக்குற எல்லா இடத்திலும் குணம் இருக்கும்னு எதிர்ப்பார்க்க முடியாது இல்லயா... அங்க கூட அப்படி தான்... எல்லாருமே கெட்டவங்கன்னு இல்ல... நல்லவங்களும் இருந்தாங்க... ஆனா நான் தேடி தேடி கெட்ட பசங்களாவே ஃப்ரெண்ட் ஆனேன்... எல்லாருமே பணத்துக்காக மட்டும் தான் என் கூட ஃப்ரெண்ட் ஆனாங்க... அது தெரிஞ்சும் நான் கண்டுக்கல... ஏன்னா நான் தப்பு பண்ணினா அப்போவாவது அப்பாவும் அம்மாவும் எனக்காக வருவாங்கன்னு தான்... எல்லார் கூடவும் சண்டை போடுவேன்... யாரையாவது போட்டு அடிப்பேன்... அப்போ கூட அவங்க வரல... எல்லாத்தையும் கால்லயே பேசி முடிச்சிடுவாங்க...

ஸ்கூல் காம்படிஷன்ஸ்ல வின் பண்ணி அவார்டோட அவங்க கிட்ட காட்ட ஓடி வருவேன் சீக்கிரமா... பட் வீட்டுல யாருமே இருக்க மாட்டாங்க... நைட் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் காட்டலாம்னா டயர்ட் ஆகி வருவாங்க... நான் ஹேப்பியா என்னோட அவார்டை காட்டினா சூப்பர் பா... அப்புறம் பார்க்குறேன்... டயர்டா இருக்குன்னு சொல்லுவாங்க... அதைக் கைல கூட எடுத்து பார்க்க மாட்டாங்க... வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தப்போ தான் என் வாழ்க்கைல அபி வந்தான்... அபினவ்... எனக்கு கிடைச்ச உண்மையான ஃப்ரெண்ட்... கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள பூட்டி வெச்சிருந்த நல்லவன வெளிய கொண்டு வந்தான்... அப்பா அம்மாவோட பாசத்துக்கு ஏங்கிட்டு இருந்த எனக்கு எல்லாமுமா இருந்தான்... தப்பு பண்ணினா தட்டி கொடுக்கல... தட்டி கேட்டான்... அவன் மூலமா அவனோட அண்ணன் ஆதர்ஷ் ஃப்ரெண்ட் ஆகினான்... அவங்க கூட இருந்தப்போ மட்டும் தான் நான் நானாக இருந்தேன்... மனசுல உள்ள கவலை எல்லாம் மறந்து சந்தோஷமா இருந்தேன்...

அப்படி இருக்குறப்போ தான் தாராவ பார்த்தேன்... சிதாரா... பார்த்ததும் பிடிச்சி போச்சு அவள... அது எப்படிப்பட்ட பிடித்தம்னு எல்லாம் தெரியல... பிடிச்சிருந்தது... அவளுக்கும் அப்படி தான்... அப்போ தான் என் காலேஜ் ஃப்ரெண்ட் ராகுல் கால் பண்ணான்... அவனுங்களுக்கு நான் அபி கூட இருக்குறது சுத்தமா பிடிக்காது... எங்களை பிரிக்க எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருந்தாங்க... சரியா அவன் கால் பண்ணப்போ ரொம்ப ஹேப்பியா தாராவ பத்தி சொன்னேன்... ஆனா அவன் கிராமத்துப் பொண்ணுங்களைப் பத்தி ரொம்ப தப்பு தப்பா சொன்னான்... ஏற்கனவே சின்ன வயசுல அம்மா சொன்னதும் சேர்ந்து நானே தப்பா முடிவு பண்ணேன் தாராவும் என் கூட பணத்துக்காக தான் பழகுறான்னு...

ஆனாலும் என்னால அவள விட முடியல... அவள பிடிச்சிருந்தது... அவ அழகா இருக்குறதால ஒருவேளை அவளை யூஸ் பண்ணி பார்க்கணும்னு வர ஆசைன்னு நானே மனசை சமாதானம் பண்ணேன்... அதுக்கேத்த மாதிரியே அவ கூட பழகினேன்... ஆனா என்னால அதையும் பண்ண முடியல... அவள விடவும் முடியல... திரும்ப சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் கால் பண்ணி அவ ஊருக்கு அவசரமா வர சொன்னா... வீட்டுல கல்யாணம் பேசுறாங்கன்னு கல்யாணம் பண்ணிக்க சொன்னா... என் சொத்துக்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறதா நினைச்சி அவளை பத்தி சீப்பா பேசிட்டு அங்க இருந்து வந்துட்டேன்...

இருந்தாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு உறுத்தல்... தாராவ ஆர்யான் கூட பார்த்ததும் என் பொருளை என் கிட்ட இருந்து எடுத்துட்டது போல ஃபீல்... திரும்ப அவ கூட சேர நினைச்சேன்... பட் முடியல... அதுக்கப்புறம் நடந்த எல்லாம் தான் உனக்கு தெரியுமே... ஆர்யான் தான் தாராவுக்கு ஏத்தவன்... அவளுக்கு பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு அப்படி ஒரு தண்டனை கிடைச்சது... நான் தாராவுக்கு பண்ணின அநியாயம் அபிக்கு தெரியவும் என்னால முன்ன மாதிரி அவன் கூட பழக முடியல... அதனால தான் எல்லாத்தையும் விட்டுட்டு பெங்களூர் வந்தேன்...‌

அந்த ஆக்சிடன்ட் பத்தி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சதும் ரொம்ப துடிச்சிட்டாங்க... என் அப்பாவும் அம்மாவும் எனக்கே திரும்ப கிடைச்சிட்டதா நினைச்சி சந்தோஷப்பட்டேன்..‌. ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் திரும்ப பிஸ்னஸ் அது இதுன்னு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க... ரொம்ப மனசு உடைஞ்சிடுச்சு... யாருமே வேணாம்னு முடிவெடுத்து தனியா இருக்கும் போது தான் நீ என் வாழ்க்கைல வந்த... என்னோட கார்டியன் ஏஞ்சல்..." என்றவனின் அணைப்பு இறுகியது.

அனுபல்லவியின் வயிற்றுப் பகுதி சூடாகுவதை வைத்தே தன்னவன் அழுகிறான் என் உணர்ந்தவளுக்கும் தன்னவன் இத்தனை வருடங்களாக மனதளவில் அடைந்த வேதனையை எண்ணி கண்ணீர் சுரந்தது‌.

அனுபல்லவியின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் பிரணவ்வின் கன்னத்தில் பட்டுத் தெறிக்கவும் அவசரமாக அவளின் முகம் நோக்கி கண்ணீரைத் துடைத்து விட்ட பிரணவ், "நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் பழையபடி என் முகத்துல சிரிப்பு வந்தது... அபி கூட இருக்குறப்போ எவ்வளவு ஹேப்பியா இருந்தேனோ நீ என் பக்கத்துல இருக்கும் போது அதை விட பல மடங்கு ஹேப்பியா இருந்தேன்... ஆனா இப்படி ஒரு குறையோட உன் வாழ்க்கைய ஸ்பாய்ல் பண்ண கூடாதுன்னு தான் உன்ன என்னை விட்டு தள்ளியே வைக்க ட்ரை பண்ணேன்... பட் உன்னோட காதலால என் தயக்கம் எல்லாத்தையும் தகர்த்து எறிய வெச்சி என்னை உனக்குள்ள கட்டிப் போட்டுட்ட..." என்றான் இவ்வளவு நேரம் இருந்த வருத்தம் மறைந்து புன்னகையுடன்.

அவன் கூறிய விதத்தில் அனுபல்லவியை வெட்கம் பிடுங்கித் திண்ண, கண்களில் மையலுடன் அதனை ரசித்தவன் அனுபல்லவியின் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவளின் அதரங்களில் கவி படித்தான் பிரணவ்.

சில நிமிடங்கள் நீண்ட இதழ் முத்தத்தில் அனுபல்லவி மூச்சு விட சிரமப்படவும் மனமேயின்றி அவளை விடுவித்த பிரணவ் தன்னவளை ஏக்கமாக நோக்கினான்.

அவனின் நெற்றியில் அனுபல்லவி முத்தமிடவும் கண்களை மூடி அதனை ரசித்த பிரணவ், "நீ தர லிப் கிஸ்ஸை விட இது தான் எனக்கு பிடிச்சிருக்கு..." என்கவும் அவனைப் பொய்யாக முறைத்த அனுபல்லவி, "அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?" என்றாள் தன் இதழில் இருந்த காயத்தைச் சுட்டிக்காட்டி.

அதில் குறும்பாகப் புன்னகைத்த பிரணவ், "அது வேற டிப்பார்ட்மென்ட்..." என்கவும் அவனின் தோளில் செல்லமாக அடித்த அனுபல்லவி, "பிரணவ்... நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?" எனக் கேட்டாள் தயக்கமாக.

அனுபல்லவியின் மடியில் வாகாகப் படுத்துக்கொண்டு அவளின் கரத்தை எடுத்து தன் தலை மீது வைத்து விட்டு கண்களை மூடிக்கொண்ட பிரணவ், "இப்போ சொல்லு..." என்றான்.

சில நொடி மௌனத்திற்குப் பின், "பிரணவ்... அத்தையும் மாமாவும் பண்ணினது தப்பு தான்... இல்லன்னு சொல்லல... நீங்க அதனால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கீங்க... இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் நீங்க நல்லா இருக்கணும்னு தானே ஓடி ஓடி உழைச்சாங்க... அதுலயும் உங்க அம்மா... சின்ன வயசுல அவங்க பட்ட கஷ்டம் எதையும் நீங்க அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..." என அனுபல்லவி கூறவும் பெருமூச்சு விட்ட பிரணவ்,

"நீ சொல்றது எல்லாம் கரெக்டா இருக்கும் பல்லவி... அவங்க எவ்வளவு தான் எனக்காக தான் பண்ணினாங்கன்னு ரீசன் சொன்னாலும் எனக்கு தேவைப்பட்டது அது இல்லயே... என்னைப் பொருத்தவரை இந்த பாசம் ரொம்ப பொல்லாதது பல்லவி... நாம அதுக்காக ஏங்கும் போது அது கிடைக்காது... எதுவும் வேணாம்னு இருக்கும் போது கிடைக்கும்... அந்த சமயத்துல அதை அவ்வளவு சீக்கிரமா நம்மளால அக்செப்ட் பண்ணிக்க முடியாது... எல்லாம் விடு... அவங்க நான் கேட்ட பாசத்தை தரல... அது கூட ஓக்கே... ஆனா யாரை நான் இவ்வளவு நாளா அம்மா அப்பான்னு நினைச்சேனோ, யாரோட பாசத்துக்காக நான் தவியா தவிச்சேனோ இன்னைக்கு அவங்க எனக்கு சொந்தம் இல்லங்குற உண்மைய தான் என்னால் ஏத்துக்க முடியல டி..." என்றான் கண்ணீருடன்.

அனுபல்லவி, "யாரு சொன்னாங்க அவங்க உங்களுக்கு சொந்தம் இல்லன்னு... உங்களுக்கு மட்டும் தான் அவங்க சொந்தம்... யாராலயும் உரிமை கோர முடியாது... அநாதை ஆசிரமங்கள்ல எவ்வளவு பசங்க இருப்பாங்க அப்பா, அம்மா, குடும்பம் எதுவுமே இல்லாம... ஆனா உங்களுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க... பிரணவ் ராஜ்னு ஒரு அடையாளம் இருக்கு... ஆனா எந்த அடையாளமும் இல்லாம எத்தனை பேர் இந்த உலகத்துல இருக்காங்க தெரியுமா?" எனும் போதே அவளின் கண்கள் கலங்கி விட்டன.

ஆனால் பிரணவ் அதனைக் கவனிக்கவில்லை.

"கடவுள் சில பேருக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்க மாட்டார்... சில பேருக்கு அப்பா அம்மா இல்ல... இதுக்கு காரணம் என்ன தெரியுமா? அந்த அப்பா அம்மா இல்லாத பசங்களுக்கும் அப்பா அம்மா பாசம் கிடைக்கணும்னு தான் உங்க அப்பா அம்மா மாதிரி ஆனவங்க இருக்காங்க... யாரோ நியூஸ்ல நீங்க அவங்க புள்ள இல்லன்னு சொன்னா அது உண்மை ஆகிடுமா? உங்களுக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும் இரத்த உறவு வேணா இல்லாம இருக்கலாம்... ஆனா ஆத்மார்த்தமான அன்பு இருக்கு உங்களுக்குள்ள... அத்தையும் மாமாவும் உங்கள கண்டுக்கல... பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடினாங்கன்னு சொல்றீங்களே பிரணவ்... ஒரு வயசுக்கு அப்புறம் நீங்க கூட தான் அவங்கள ஒதுக்கி வெச்சீங்க..." என அனுபல்லவி கூறவும் அவளைப் புரியாமல் பார்த்தான் பிரணவ்.

அனுபல்லவி, "ஆமாங்க... சின்ன வயசுல நீங்க உங்களுக்குள்ள ஒடுங்கி வளர்ந்ததுக்கு அப்புறம் அவங்க கூட பேசுறதையே நிறுத்திட்டீங்க... தேவைக்கு மட்டும் தான் பேசுறீங்க... உங்க மனசுல எல்லாத்தையும் போட்டு பூட்டி வெச்சி நீங்களும் கஷ்டப்பட்டு இப்போ உங்க அப்பா அம்மாவையும் சேர்த்து கஷ்டப்பட வைக்கிறதுக்கு நீங்க ஒரு தடவ அவங்க கிட்ட மனசு விட்டு பேசி இருக்கலாமே..." எனும் போதே இடையில் குறுக்கிட்ட பிரணவ், "அவங்க தான் எனக்கு பேச கூட டைம் தரலன்னு சொல்றேனே பல்லவி..." என்றான்.

"இதெல்லாம் வெறும் சாக்கு போக்கு பிரணவ்... இப்போ இருக்குற பசங்க எவ்வளவு விஷயத்துக்கு பிடிவாதம் பிடிக்கிறாங்க... உங்களால ஒரே ஒரு தடவ பிடிவாதம் பிடிச்சி அவங்க கூட பேச முடியலயா? நீங்க பேசணும்னு சொன்னா அவங்க முடியாதுன்னு சொல்ல போறாங்களா? அவங்க ரெண்டு பேரும் உங்களை புரிஞ்சிக்கலன்னு சொல்றீங்களே... நீங்களும் தான் பிரணவ் அவங்கள புரிஞ்சிக்கல..." என அனுபல்லவி கூறவும் நெற்றியை அழுத்திப் பிடித்தான் பிரணவ்.

மெதுவாக அவனின் நெற்றியை நீவி விட்ட அனுபல்லவி, "விடுங்க பிரணவ்... எல்லாம் முடிஞ்சு போன விஷயம்... இனி வர நாட்களை சரி அவங்கள புரிஞ்சி நீங்களும் அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க... உங்க வார்த்தைகள்ல இருந்த வலியை ஆல்ரெடி அவங்க புரிஞ்சிக்கிட்டு நிச்சயம் தங்களோட தவறை உணர்ந்து இருப்பாங்க... இதுக்கு மேலயும் அவங்களுக்கு தண்டனை தர வேணாம்... அவங்க தப்பு பண்ணி இருக்காங்க தான்... ஆனா அவங்க உங்க அப்பா அம்மா... அவங்களுக்கு தங்களோட தப்பை திருத்திக்க ஒரு வாய்ப்பை கொடுக்குறது தப்பே இல்ல... இன்னொரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோங்க... அவங்க உங்க அப்பா அம்மா... யாரு சொன்னாலும் நீங்க அவங்க புள்ள இல்லன்னு ஆகிடாது... நான் இப்படி பேசினது உங்களுக்கு கஷ்டமா இருக்கா?" எனப் பிரணவ்வின் வாடி இருந்த முகத்தைப் பார்த்து வருத்தமாகக் கேட்டாள்.

உடனே அவளை விட்டுப் பிரிந்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "நான் தப்பு பண்ணா என்னைத் திருத்துற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு... பிரணவ்வும் பல்லவியும் வேற வேற இல்ல... ரெண்டு பேரும் ஒன்னு தான்... என்னை அடிக்கவும் உனக்கு உரிமை இருக்கு... சும்மா எதையும் நினைச்சி ஃபீல் பண்ணாதே... நீ இவ்வளவு சொல்லலன்னா நிச்சயம் நான் அவங்கள இப்போ வரைக்கும் தப்பா தான் புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்... என் மேலயும் தப்பு இருக்கு... அவங்க ரெண்டு பேரும் என்னைத் தேடி வரும் போது நான் தான் தூரமா போனேன்... என் பவி சொல்லிட்டாளே... இனிமே உன்னோட பிரணவ் குட் பாயா இருப்பான்... ஓக்கே..." என்றவன் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளுக்கு அப்போது தான் தன் தோழியின் நினைவு எழுந்தது.

அவசரமாக பிரணவ்வை விட்டு விலகி தலையில் கை வைத்து அமர்ந்தவளைப் புரியாது நோக்கிய பிரணவ், "என்னாச்சு பல்லவி?" எனக் கேட்டான்.

அனுபல்லவி, "சாரு கிட்ட நைட் சீக்கிரமா வரேன்னு எங்க போறேன்னு கூட சொல்லாம வந்தேன்... அவ இந்நேரம் நான் நைட் வீட்டுக்கு வரலன்னு டென்ஷன் ஆகி தேடிட்டு இருப்பா..." என வருத்தத்துடன் கூறவும் ஏதோ யோசித்த பிரணவ், "உனக்கு யாரு நான் இங்க தான் இருப்பேன்னு சொன்னாங்க?" எனக் கேட்டான்.

"ஆகாஷ் அண்ணா தான்..." என்ற அனுபல்லவியின் பதிலில் புன்னகைத்த பிரணவ், "அப்போ விடு... டென்ஷன் ஆகாதே... அவன் பார்த்துப்பான் உன் ஃப்ரெண்ட... நீ குளிச்சிட்டு வா... நாம ரெண்டு பேரும் போய் உன் அத்தையையும் மாமாவையும் பார்த்துட்டு வரலாம்... அப்படியே அவங்களுக்கு அவங்க மருமகளையும் இன்ட்ரூ பண்ணலாம்..." என்றான்.

பிரணவ் கூறிய விதத்திலேயே அவன் மனம் மாறி விட்டதை உணர்ந்த அனுபல்லவிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அனுபல்லவி, "முதல்ல நீங்க போய் குளிச்சிட்டு வாங்க..‌. நான் எதுக்கும் சாருக்கு கால் பண்ணி அவளை சமாதானப்படுத்துறேன்..." என்கவும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்ட பிரணவ், "பெங்களூர்ல தண்ணி பஞ்சமாம்... பேசாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா குளிச்சி தண்ணிய மிச்சம் வைக்கலாமே..." என்றான் அப்பாவியாக.

இடுப்பில் கை வைத்து அனுபல்லவி அவனை ஏகத்துக்கும் முறைக்கவும், "ஓக்கே ஓக்கே... நோ டென்ஷன் பேபி... நாட்டுக்கு நல்லது பண்ண நினைச்சேன்... பரவால்ல... கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணிக்கலாம்..." என்றவாறு எழுந்து குளியலறை நோக்கி நடந்தான் பிரணவ்.

பிரணவ் செல்லவும் புன்னகைத்த அனுபல்லவி, "சரியான கேடி என் பிரணவ்..." எனச் செல்லமாக அவனைத் திட்டி விட்டு தன் கைப்பேசியைத் தேடி எடுத்து சாருமதிக்கு அழைப்பு விடுத்தாள்.

திடீரென ஏதோ விழும் சத்தம் கேட்கவும் பதறி அவசரமாக சென்று பார்க்க, பேச்சு மூச்சற்று மயங்கிக் கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள் அனுபல்லவி.
 

New Episodes Thread

Top Bottom