• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உய்வில்லா பழிகள்

Nithya Mariappan

✍️
Writer
உய்வில்லா பழிகள்

“என் மூத்த மகன் விஸ்வநாதனுக்கு டெல்லி ஜவஹர்லால் யூனிவர்சிட்டியோட சி.ஈ.எஸ்.பில புரொபசர் போஸ்டிங் கிடைச்சிருக்கு... டியூட்டில ஜாயின் பண்ணுனதும் எனக்குக் வாட்சப்ல தகவல் அனுப்பிட்டான்”

என் கணவர் வேணுகோபாலன் பக்கத்து வீட்டுக்காரரும் அவரது நண்பருமான மூர்த்தியிடம் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தார்.

நான் மதியவுணவுக்கான வேலைகளைச் செய்தபடி அவர்களின் பேச்சில் செவியை ஒட்டியிருந்தேன்.

“அது சரி வேணு... இளையவன் ராமமூர்த்தி ஏர் ஃபோர்ஸ்ல இருக்கான்னு சொன்னிங்களே, அவன் கிட்ட இருந்து எதாச்சும் தகவல் உண்டா?” என்று அவர் கேட்க

“க்கும்! அவனுக்கென்ன, நல்ல கல்லுக்குண்டு மாதிரி இருக்கான்... படிச்சு அரசாங்க உத்தியோகத்துக்குப் போடானு தலை தலையா அடிச்சும் சொல்பேச்சு கேக்காம ஏர் ஃபோர்ஸ்ல ஜாயின் பண்ணிட்டான்... எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம அங்கயே ஒரு பொண்ணை பாத்து கல்யாணமும் பண்ணிக்கிட்டான்... பையனை கண்டிச்சு வளருடினு எத்தனை தடவை சொல்லிருப்பேன்? அதை காதுல போட்டுக்கிட்டாளா இந்த ரங்கம்? அவ வளர்த்த லெட்சணம் அப்பிடி” என்று எனது வளர்ப்பைக் குறை கூறினார் என் கணவர்.

இது தான் இந்த வீட்டிலும் என் வாழ்க்கையிலும் வாடிக்கையாக நடக்கிறது. திருமணமாகி இந்த வீட்டில் கால் வைத்த நாளிலிருந்தே யார் என்ன தவறு செய்தாலும் அதற்கான பழி என் மீதும் என் ராசி மீதுமே போடப்பட்டது.

சிரம திசையில் இருந்த என் தகப்பனாரிடம் இனிக்க இனிக்க பேசி என்னை தனது மூத்தமகன் வேணுகோபாலனுக்கு மணமுடித்து வைத்தனர் என் மாமியாரும் மாமனாரும்.

புது மருமகளாக நான் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த தினத்தில் விருந்துபசாரத்தில் பூரியும் கிழங்கும் அதிகமாக சாப்பிட்டதன் காரணமாக எனது மாமனாருக்கு வாயு உபாதையால் நெஞ்சு வலிக்க, என் நாத்தனார்களும் மாமியாரும் வாயில் அடித்துக்கொண்டு அதற்கான பழியை என் மீது போட்டனர்.

“புது மருமகள் வந்த நாளன்னைக்கே என் வீட்டுக்காரருக்கு நெஞ்சுவலி... இவ ராசி இந்த லெட்சணத்துல இருக்கும்னு தெரிஞ்சா பொண்ணு எடுத்திருக்கவே மாட்டேனே”

“ஒத்தை ஆம்பளைப்புள்ளை வச்சிருக்குற, பார்த்து பொண்ணு எடுக்கக்கூடாதா சுந்தரி?” உறவுகள் ஒத்து ஊதின.

“கஷ்டப்பட்டக் குடும்பமாச்சே, நம்ம மகனுக்கு முடிச்சு வச்சா சொன்ன பேச்சு கேட்டு வீட்டோட இருப்பாளேனு நினைச்சு கட்டி வச்சேன் மதினி... ஆனா இந்தக் கழுதை வந்த அன்னைக்கே என் தாலிக்கு வேட்டு வைக்கப் பாக்குறாளே”

துவேசமாக என் மாமியார் பேசிய அரைமணி நேரத்தில், வெறும் வாயு பிடிப்பு தான் என்று எனது மாமனாரை பரிசோதித்த மருத்துவர் கூறிவிட்டார்.

ஆனாலும் என்னைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசிய பேச்சுக்கு யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இவளைப் பேசினால் கேட்க நாதியில்லை என்ற அலட்சியம்.

கூடவே அது தான் உண்மையும் கூட. புகுந்த வீட்டில் என்ன நடந்தாலும் சமாளித்துக் கொள், இனி உனக்கு அடுத்த இரு பெண்களையும் கரை சேர்க்க தான் எங்களுக்கு நேரமிருக்கும் என எனது பெற்றோர் சொல்லாமல் சொல்லிவிட்டனர், இனி எங்கள் ஆதரவு உனக்கில்லை என்பதை.

பெற்றோரின் ஆதரவு இல்லையென்றால் என்ன? என் கணவர் இருக்கிறாரே என்று உறுதியாக நம்பினேன் நான். ஆனால் அவரும் அன்னை பேச்சை தட்டாத மைந்தன்.

கூடவே மனைவி என்றாலே இரண்டாம் தர குடிமகள் என்ற பிற்போக்கான எண்ணம் வேறு. விளைவு அடுத்தடுத்த நாட்களில் அந்த வீட்டில் எதுவும் தவறாக நடந்தால் அதற்கான பழி என் மீதும் எனது ராசி மீதும் போடப்பட்டது.

வெறும் கிளார்க்காக இருந்த எனது கணவர் பணியுயர்வு பெற்றது அவரது திறமையால் தானாம். ஆனால் அவர் என்றோ ஓர்நாள் மேஜையில் இடித்துக்கொண்டால் அதற்கு என் ராசி காரணமாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் எனது இளைய நாத்தனாருக்கு வரன் பார்க்கும் வைபவம் நடந்தேறியது. நிச்சயம் வரை கைகூடி வந்த போது நான் விஸ்வநாதனை கருவுற்றேன்.

என்ன நடந்ததோ தெரியவில்லை, என் இளைய நாத்தனாருக்கு நிச்சயம் செய்திருந்த மணமகன் இறந்து போனான். கல்யாண வீடாக மாறியிருக்க வேண்டிய இல்லம் களையிழந்து போனது.

எனது மாமனாரும் மாமியாரும் தொண்டையில் சோறு தண்ணீர் இறங்காமல் இருப்பதை கண்ணுற்று பொறுக்க முடியாமல் சாப்பாடு எடுத்துச் சென்றேன்.

அப்போது என் மாமியார் என்ன கூறினார் தெரியுமா?

“உன்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தப்பவே துரதிர்ஷ்டத்தையும் கயிறு போட்டு கட்டி கூட்டிட்டு வந்துட்டோம் போல... வந்த அன்னைக்கு என் தாலிய காவு வாங்க பாத்த... இப்ப உன் வயித்துல புள்ளை வந்த நேரம் என் மகளோட வாழ்க்கை நிர்மூலமாகிடுச்சு... ராசி கெட்டவ பீடைய சுமந்துட்டு நின்னு என் மகளோட வாழ்க்கைய சீரழிச்சிட்டியே”

நான்கு மாத கருவை வயிற்றில் சுமந்து நின்றவளின் மீது போடப்பட்ட இப்பழியோடு இன்னும் உலகைப் பார்த்திடாத என் குழந்தை ராசி கெட்ட குழந்தையாக பார்க்கப்படவும் பொறுக்க முடியாது நான் என் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பி சென்றுவிட்டேன்.

அப்போது கூட என் கணவர் போகாதே ரங்கநாயகி என்று ஒரு வார்த்தை சொல்லட்டுமே!

தங்கையோடு குற்றம் சாட்டும் பார்வை பார்த்தபடியே வராண்டாவில் நின்று, நான் எனது ட்ரங்கு பெட்டியோடு வீட்டை விட்டு செல்லும் காட்சியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என் பெற்றோரும் நடந்ததை கேள்விப்பட்டு என்னை வீட்டோடு வைத்துக்கொள்ள மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் என் கணவர் என்னை அழைத்துச் செல்ல வந்தார்.

கூடவே என் இளைய நாத்தனாருக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்ற செய்தியையும் கொண்டு வந்திருந்தார். என்னிடம் இது குறித்து எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை.

ஏன் என்று கேட்ட என் தந்தையிடம் “உங்க மகளோட ராசியால மறுபடியும் என் தங்கச்சியோட கல்யாணம் நின்னுடுச்சுனா என்ன செய்யுறது மாமா? அதான் சொல்லலை” என்றார் என் கணவர்.

அதை கேட்டதும் என் அம்மாவுக்கு மனம் தாங்கவில்லை.

“அப்புறம் எதுக்கு அவளைக் கூட்டிட்டுப் போக வந்திருக்கிங்க?”

“இன்னைக்கே உங்க மகளை கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேனா? முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வண்டி வரும்... அதுல வரச் சொல்லிடுங்க... சம்பந்தி வீட்டுக்காரங்க என் பொண்டாட்டி எங்கனு கேட்டா காட்டுறதுக்காக மட்டும் தான் இவளை அழைச்சிட்டுப் போறேன்”

என்னால் வர முடியாதென நான் பிடிவாதமாக மறுத்திருக்கலாம். ஆனால் எனது வீட்டினரின் பொருளாதார நிலையை யோசித்து தன்மானத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் புகுந்த வீட்டிற்கு சென்றேன்.

அதுவும் முகூர்த்த நேரத்திற்கு சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்னர். இளைய நாத்தனாரின் கழுத்தில் தாலி ஏறும் வரை என் மனம் ஒரு நிலையில்லை.

எந்த அசம்பாவிதமும் நேர்ந்துவிடக்கூடாது என இடைவிடாமல் எனது இஷ்டதெய்வத்தைப் பிரார்த்தித்தபடி மேடிட்ட வயிற்றுடன் நின்று கொண்டிருந்த என்னை அங்கே ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

எப்படியோ திருமணம் நல்லபடியாக நடந்தேறியதில் மனம் குளிர்ந்த எனது மாமியார் என்னைத் திருப்பி அனுப்பினால் ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடுமென்பதால் மீண்டும் புகுந்த வீட்டில் சேர்த்துக் கொண்டார்.

இத்தோடு என் மீது பழி சுமத்துவது முடிந்ததா என்றால் இல்லை. இளைய நாத்தனாரை காண சென்ற எனது மாமனார் விபத்தில் மறைந்துவிட அவர் வீட்டை விட்டு செல்லும் முன்னர் தண்ணீர் கொடுத்த என் மீது மாபெரும் பழி போடப்பட்டது.

அப்போது விஸ்வநாதனுக்கு இரண்டு வயது. என்னை கொலைகாரி என்று சொல்லாமல் சொல்லி ஒப்பாரி வைத்த பாட்டியைக் காண பிடிக்காமல் என் புடவை முந்தானைக்குள் அவன் ஒளிந்து கொண்டது இன்று நடந்தது போல இருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் நீ ரோசமின்றி புகுந்த வீட்டிலேயே இருந்தாயா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி விட்டால் அவளுக்குப் புகுந்த வீடே அடைக்கலம், கடைசி வரை அவள் அங்கே இருப்பது தான் அவளுக்குக் கௌரவம் என்று சமுதாயம் வரையறுத்திருந்த காலகட்டம் அது.

புகுந்த வீட்டில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள்; நீ தான் அனுசரித்து வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென ஒவ்வொரு அன்னையும் தான் பெற்ற மகளுக்கு அறிவுரை கூறும் காலகட்டம் அது.

எனக்கும் இம்மாதிரியான அறிவுரைகள் தான் வழங்கப்பட்டது. கூடவே எனது பிறந்த வீட்டினருக்கு நான் எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க விரும்பவில்லை. கஷ்டமோ நஷ்டமோ இந்த வாழ்க்கையைப் பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்ந்து விடும் முடிவை எடுத்தேன் நான்.

அடுத்து ராமமூர்த்தியும் பிறந்தான். அவன் பிறந்து இரு வருடங்களில் என் மாமியாரும் இயற்கை எய்தி விட அதன் பின்னர் என் மீதான பழி போடும் வேலையை சுவீகரித்துக் கொண்டார் எனது கணவர். எனது இரண்டு பிள்ளைகளும் வளர வளர அவர்களின் குறும்புத்தனமும் வளர்ந்தது. வெளியே விளையாட செல்பவர்கள் ஏதாவது பஞ்சாயத்தை இழுத்து வருவதும் தொடர்ந்தது.

ஒவ்வொரு முறை அவர்களின் குறும்புத்தனத்தால் பிரச்சனை வரும் போதும் “நீ என்ன லெச்சணத்துல பிள்ளைங்களை வளர்க்குற? வீட்டுல சும்மா உக்காந்து திங்குற தானே... மிச்ச நேரத்துல பிள்ளைங்க என்ன செய்யுறாங்கனு கவனிக்க மாட்டியா? ஒன்னுக்கும் உபயோகமில்லாததை என் தலையில கட்டி வச்சிட்டு எங்கம்மா போய் சேர்ந்துட்டாங்க” என்று வசை பாடுவார் என் கணவர்.

ஒரு முறை பக்கத்து வீட்டுப்பெண்மணி பிடித்து வைத்திருந்த தண்ணீரில் ராமமூர்த்தி களிமண் பிள்ளையாரை கரைக்கிறேன் என்று மொத்த தண்ணீரையும் வீணாக்கி விட அப்பெண்மணி ஆடிய தாண்டவத்தில் எனது கணவரின் கரங்கள் என் கன்னத்தில் சிவப்பு தடத்தை பரிசாக அளித்தன.

“பசங்க களிமண்ணுல விளையாடுறப்ப நீ பூவா பறிச்சிட்டிருந்த? மூனு வேளை மூக்கு பிடிக்க திங்குறல்ல, பிள்ளைங்களை கவனிக்குறதை விட உனக்கு வேற என்ன வெட்டி முறிக்கிற வேலைடி? இன்னைக்குப் பசங்க அந்தம்மா வாயில விழுறது உன்னோட உதவாக்கரைத்தனத்தால தான்... தண்டம் தண்டம், இப்பிடி ஒரு தண்டத்தை என் தலையில கட்டி வச்சிட்டாங்களே”

இந்நிகழ்வைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த எனது இரு புத்திரச்செல்வங்களும் அதன் பிற்பாடு தங்களது விளையாட்டுப்புத்தி குறும்புத்தனத்தை மூட்டை கட்டிவைத்து விட்டனர்.

கணவரோ புகுந்த வீட்டினரோ கொடுக்காத ஆறுதலை என் பிள்ளைகளின் கனிவான சொற்கள் எனக்கு அளித்தது.

விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் படிப்பில் படு சுட்டி.

“நாங்க ஒழுங்கா படிக்கலைனா அதுக்கும் உங்க மேல தான் அப்பா பழி போடுவார்மா... போன தடவை வாங்குனதை விட இந்த தடவை பத்து மார்க் கம்மியா வாங்குனதுக்கே உங்க கிட்ட உறுமுனார்ல... நீங்க கவலைப்படாதிங்க, நாங்க படிச்சு வேலைக்குப் போனதுக்கு அப்புறமா உங்களை அவர் எதுவும் சொல்லாதபடி கப்சிப்னு ஆக்கிடுவோம்” என்பான் விஸ்வநாதன்.

சொன்னது போல இருவரும் நன்றாக படித்து, மூத்தவன் உதவி பேராசியராகப் பணியிலமர்ந்தான். அடுத்த சில மாதங்களில் உடன் பணி புரியும் பெண்ணோடு காதல் என்று வந்து நின்றான்.

பழமைவாதியான என் கணவர் காதலை ஏற்க முடியாதென தாம் தூம் என குதிக்கவும் என்னிடம் மட்டும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

“பிள்ளைய வளர்த்த லெச்சணத்த நீயே மெச்சுக்கோடி... தாய் தகப்பன் வேணாமாம், எவளோ ஒருத்தி பின்னாடி போறான் உன் பிள்ளை... அக்கம்பக்கத்துல உள்ளவங்கல்லாம் நாக்கு மேல பல்லை போட்டு பேசுவாங்கடி... இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்... நீ மட்டும் தான் காரணம் ரங்கம்”

வீட்டை விட்டு வெளியேறிய விஸ்வநாதன் ஒரு சுபதினத்தில் என் மருமகளை விவாகம் செய்யவிருப்பதாக கோயிலில் வைத்து என்னிடம் தெரிவிக்க நானும் ராமமூர்த்தியும் மட்டும் அவனது திருமணத்திற்கு சென்றோம்.

“அப்பா உன்னை திட்டுவார்லம்மா” என்று முகம் வாடினான் அவன். கூடவே மருமகளும்.

இருவரையும் ஆசிர்வதித்த நானோ “அது எனக்குப் பழகிப் போச்சுடா கண்ணா... என்னைப் பத்தி கவலைப்படாத... இனிமே இவ தான் உன் வாழ்க்கை.... எந்தச் சூழ்நிலையிலயும் இவளை விட்டுக்குடுக்காத விஸ்வா” என்றேன்.

என் மருமகளோ “பேசாம நீங்களும் ராமுவும் எங்க கூடவே வந்திடுங்க அத்தை” என்று பாசமாய் அழைக்க

“ஐயோ அண்ணி வேற வினையே வேண்டாம்... இது வரைக்கும் பார்ட் டைமா அம்மாவ குறை சொல்லி குத்தி காமிச்ச அப்பா இனிமே அதை ஃபுல் டைம் ஜாபா பாக்க ஆரம்பிச்சிடுவார்... நீங்க கவலைப்படாதிங்க... அம்மாவ நான் பார்த்துக்குறேன்” என்றான் ராமமூர்த்தி.

திருமணத்திற்கு சென்று வந்ததால் என் கணவர் எங்கள் இருவரிடமும் ஒரு மாதம் முகம் கொடுத்து பேசவில்லை என்பது வேறு விசயம்.

நாட்கள் கடக்க ராமமூர்த்தியும் விமானப்படையில் பணியில் சேர்ந்தான். என் கணவருக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஆனால் அவனோ பிடிவாதமாக இருக்க இப்போதும் என் மீதே பழி.

ராமமூர்த்தி என்னைத் தன்னோடு வரும்படி எவ்வளவோ கெஞ்சி பார்த்தான். ஆனால் நான் முடியாதென மறுத்து விட்டேன்.

நானும் என் கணவரும் வயோதிகத்தின் வாசற்படியில் நிற்கிறோம். இனி வரும் முதிய பருவத்தில் அவருக்கு நானும் எனக்கு அவரும் மட்டும் தான் துணை என்று நான் கூறிவிட அவன் மட்டும் அரை மனதாக வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டான்.

அங்கேயே வடக்கத்தி பெண்ணொருத்தியை மணந்து புகைப்படம் அனுப்பினான். விஸ்வநாதனும் மும்பைக்குப் பணியிடமாற்றம் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

கடந்த சில ஆண்டுகளாக நானும் என் கணவரும் மட்டுமே இந்த வீட்டில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம். எது மாறினாலும் என் மீது பழி போடும் பழக்கம் மட்டும் என் கணவரிடம் மாறவேயில்லை.

அது தயிர் சரியாக உறை குத்தவில்லை என்ற சிறிய விசயத்தில் ஆரம்பித்து எங்களின் புத்திர செல்வங்கள் அவரைத் தவிர்த்து என்னிடம் மட்டும் பேசுவது என்ற பெரிய விசயம் வரை தொடர்ந்தது.

பேரன் பேத்திகளின் புகைப்படங்களை அவ்வபோது எனது இரு மகன்களும் அவர்கள் எனக்காக வாங்கி அனுப்பி வைத்த மொபைலில் அனுப்பி வைப்பார்கள். அவற்றை என் கணவரிடம் காட்டி சந்தோசப்படுவது என் வாடிக்கை.

அப்படி இருக்கையில் தான் விஸ்வநாதனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியர் பணி கிடைத்திருப்பது குறித்து இன்று காலை வாட்சப்பில் அவன் தகவல் தெரிவித்திருந்தான்.

அதை தான் என் கணவர் பக்கத்து வீட்டு மூர்த்தி அண்ணனிடம் பெருமையாகக் கூறி மார் தட்டிக் கொண்டிருந்தார்.

விஸ்வநாதனுக்குப் பணியுயர்வு கிடைத்ததால் உண்டான பெருமை மட்டும் அவருக்குச் சொந்தம். ஆனால் ராமமூர்த்தி மட்டும் என் வளர்ப்பில் கெட்டுப் போய்விட்டான் என்றார் வழக்கம் போல.

அது என்னவோ இந்திய குடும்பங்களில் குழந்தைகள் ஏதேனும் சாதித்தாலோ, வாழ்க்கையில் ஜெயித்து நல்ல இடத்தில் இருந்தாலோ அதற்கான பெருமை முழுவதையும் தகப்பன்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

அதே குழந்தைகள் ஏதேனும் ஒரு சமயத்தில் இடறினாலோ, வழி தவறிப் போனாலோ அதற்கான மொத்தப் பழியையும் அவர்களைப் பெற்ற அன்னைகள் மீது சுமத்தி வேடிக்கை பார்க்கும் இச்சமூகம்.

கேட்டால் குழந்தை வளர்ப்பு அன்னையின் பொறுப்பு என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். அப்படியென்றால் அதே குழந்தை சாதிக்கும் போது மட்டும் ஏன் வந்து வளர்ப்புரிமை கொண்டாடி உவகை கொள்கிறீர்கள்? அதற்கான முழு உரிமையையும் அன்னையிடமே விட்டு விடுங்களேன்.

மூர்த்தி பேசிவிட்டுக் கிளம்ப மதியவுணவுக்காக அமர்ந்தார் என் கணவர்.

அவருக்குப் பரிமாறியபடியே நானும் சாப்பிட இடையே ராமநாதனைப் பற்றிய பேச்சு எழுந்தது.

“உன்னோட உதவாக்கரை மகன் என்ன சொல்லுறான்?”

வழக்கமாக அமைதி காக்கும் எனக்குள் இன்று ஏனோ ஒருவித அலைக்கழிப்பு. விளைவு மனம் நினைத்ததை வாய் கேட்டுவிட்டது.

“எனக்கு ரெண்டு பசங்க... உங்களைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு பேருமே உதவாக்கரை தான்... இப்ப நீங்க யாரை சொல்லுறிங்க?”

எடுத்த கவளத்தை சாப்பிடாது என்னை வெறித்தார் என்னவர். அவருக்கு என் எதிர்வாதம் புதிதல்லவா!

“ராமமூர்த்திய பத்தி தான் கேக்குறேன்... விஸ்வா என் புள்ளைடி”

பேச்சில் துளி கர்வம் அதிகமோ! இதே விஸ்வநாதன் என் வயிற்றில் இருக்கும் போது தான் இந்த மனிதரின் அன்னையின் வாயால் பீடை பட்டம் பெற்றான்.

அப்போது அன்னையுடன் சேர்ந்து என்னையும் என் பிள்ளையையும் ராசியற்றவர்கள் என்று பழி தூற்றிய மனிதருக்கு இன்று என் மகனைப் பெற்றி பெருமை பீற்றிக் கொள்வதில் எத்துணை ஆர்வம்!

நான் ஏறிட்டுப் பார்க்கவும் “என்னடி பாக்குற? இன்னைக்கு அவன் இந்த நிலமைல இருக்குறதுக்கு நான் தான் காரணம்... கவர்மெண்ட் ஆபிஸ்ல முதுகு ஒடிய வேலை பாத்து நான் கொண்டு வந்த சம்பளத்துல தானே அவன் படிச்சான்... அந்தப் படிப்பு அவனுக்கு நான் குடுத்ததுடி... அவனோட வளர்ச்சிய காட்டி பெருமைப்பட்டுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றார் அதே கர்வத்துடன்.

நானோ பொறுமையாக “ராமுவும் உங்க காசுல தான் படிச்சான்” என்க

“சீ! அவனைப் பத்தி பேசாத... சொல்பேச்சு கேக்காத கழுதை” என்றார் எரிச்சலுடன்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் இவர் தான். இவரிடம் வாதிட்டு என் சக்தியை இழக்க விரும்பாமல் அமைதியாய் சாப்பிட்டு முடித்தேன் நான்.

மோர்சாதத்திற்கு ஊறுகாய் வைக்க ஜாடியைத் திறக்கும் போது ஊறுகாயில் பூஞ்சை படர்ந்திருக்கவும்

“இன்னைக்கு மட்டும் குழம்பு ஊத்தி மோர்ச்சாதம் சாப்பிடுங்க... ஊறுகால பூஞ்சை வந்திடுச்சு” என்றேன் நான்.

சாதத்திற்குள் பள்ளம் பறித்து அதில் குழம்பை ஊற்றியபடியே “சிலரை ஊறுக்காக்கு கூட லாயக்கில்லனு சொல்லுவாங்க... ஆனா நீ ஊறுகா போட்டு பத்திரப்படுத்தி வைக்குறதுக்குக் கூட லாயக்கு இல்லடி... உன்னையும் என் தலையில கட்டி வச்சிட்டு எங்கம்மா போய் சேர்ந்தாங்க... அவங்க போனதுல இருந்து விரும்புனதை சாப்பிடுறது கூட குதிரைக்கொம்பாயிடுச்சு... இத்தனை நாள் வேலைக்குப் போன வரைக்கும் ஏதோ கொஞ்சம் மரியாதை கிடைச்சுச்சு... இப்ப ரிட்டயர்ட் ஆனதும் உனக்கு எகத்தாளம்... இப்பிடி என் கூட இருந்து அரைவயிறும் கால்வயிறுமா என்னை தவிக்க வைக்குறதுக்கு நீ உன் மகன் கூடவே போயிருக்கலாம்” என்று குறை சொன்னபடி சாப்பிட ஆரம்பித்தார்.

எனக்கு இதெல்லாம் பத்தோடு பதினொன்று தான். சாப்பாட்டை முடித்துவிட்டு அக்கடாவென அமர்ந்தவள் மெதுவாக என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன்.

கஷ்ட ஜீவனமுள்ள குடும்பத்தில் மூத்த மகளாய் பிறந்து, செல்வந்தர் வீட்டில் அரசு ஊழியனுக்கு மனைவியாய் வாழ்க்கைப்பட்டு, அங்கே கிடைத்த பழிகளையும், ஏச்சு பேச்சுகளையும் சகித்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்று, உன்னைக் குறை சொல்வதே என் வாழ்வின் இலட்சியம் என்ற குணத்தினனான கணவருடன் இத்தனை நாட்கள் நான் நடத்திய இந்த வாழ்க்கையில் எனக்கென கிடைத்தது என்ன?

ஒன்று எனது செல்வ மகன்கள். இவர்கள் என்றும் என்னை விட்டு மனதளவில் நீங்கியதில்லை.

இரண்டு என் மீது இத்தனை ஆண்டுகாலங்களில் சுமத்தப்பட்ட விதவிதமான பழிகள். இவையும் என்றும் என்னை விட்டு நீங்கப் போவதில்லை.

ஏனோ ஆயாசமாக வந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வரவே சுவரில் சாய்ந்தவளுக்கு நெஞ்சை பிசைவது போன்று இருந்தது. உதரவிதானம் சுருங்கி விரிவது நின்று குரல் நாண்கள் மூடிக்கொள்வது போன்ற பிரமை.

மூச்சுக்காற்றுக்காக என் நுரையீரலின் காற்றறைகள் ஏங்க துவங்கியது. கண்கள் சொருக ஆரம்பிக்கவும் என் கணவர் அங்கே வந்துவிட்டார்.

என் நிலையைக் கண்டதும் “ரங்கம் என்னாச்சு உனக்கு?” என்று பதறியவரைச் சரியாகப் பார்க்க கூட முடியவில்லை என்னால். எனக்காக முதல் முறை பதறுகிறார் இம்மனிதர்.

இது தான் கடையும் என்பதை போல இறுகிப் போன குரல்நாணோடு பெருத்த சப்தமாய் விக்கல் ஒன்று புறப்பட்டது என்னிடமிருந்து.

“க்க்கு”

அவ்வளவு தான். நுரையீரல் உதரவிதானம் குரல் நாண்கள் என அனைத்தும் ஒரே ஒரு விக்கலில் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டதை உணர்ந்தவளாக இந்த தேக கூட்டிலிருந்து விடைபெற்றேன் நான்.

கையில் தண்ணீர் நிரம்பிய தம்ளருடன் வேகமாக வந்த என் கணவர் என் உயிரற்ற சரீரம் சுவரில் சாய்ந்தபடி வாயை சில அங்குலத்திற்கு திறந்து அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டதும் அதிர்ச்சியில் தம்ளரை தவறவிட்டு “ரங்கம் என்னாச்சும்மா?” என்று பெருங்குரலெடுத்துக் கத்துவதை ஆன்மாவாய் நின்று ரசிக்கிறேன் நான்.

இதோ நேரம் கடந்தது. இறந்த வீட்டிற்கே உரித்தான சூழல் ஆரம்பமாக பக்கத்துவீட்டு மூர்த்தியிடம் என் கணவர் அழுதபடி பேசிக்கொண்டிருந்தார்.

“உங்க மகன்கள் ரெண்டு பேரும் புறப்பட்டுட்டாங்களாம் வேணு... நீங்க பதறாதிங்க... குடுத்து வச்ச மகராசி... அதான் சுமங்கலியா போய் சேர்ந்துட்டாங்க” – மூர்த்தி.

“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கூட நல்லா பேசுனாளே... திடீர்னு என்னை விட்டுட்டுப் போயிடுவானு நான் நினைக்கல மூர்த்தி... என்னைய தனியா தவிக்க வச்சிட்டு அவ மட்டும் சந்தோசமா போய் சேர்ந்துட்டாளே... இத்தனை நாள் நான் பேசுன பேச்சை அமைதியா கேட்டுட்டிருந்தவ இன்னைக்கு எனக்கு எதிர்பேச்சு பேசுனப்பவே இவ்ளோ தைரியத்த குடுத்தது யார்னு யோசிச்சேன்... அவளோட சாவு தான் அவளுக்குத் தைரியத்த குடுத்திருக்கு.... கூடவே இருந்து நான் பேசுன பேச்சுக்குலாம் அவ இல்லாம நான் தவிச்சா தான் புத்தி வரும்னு சாவுல என்னை பழி வாங்கிட்டா மூர்த்தி... பழி வாங்கிட்டா”

அடக்கமாட்டாமல் சிரித்தேன் நான். இறந்த பிறகும் என்னைத் துரத்துகிறது இந்தப் பழிகள். இதற்கு உய்வே இல்லை. இதோ என் தேகத்தை உதறியது போல இப்பழிகளை உதற இயலாது இவ்வுலகை விட்டு விடைபெறுகிறேன் வேணுகோபாலனின் மனைவியாகிய ரங்கநாயகி எனும் நான்.

******’

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

இதோட என் சிறுகதை தொகுப்பு முடிஞ்சுது மக்களே. தொகுப்பில இல்லாத இன்னும் சில சிறுகதைகள் இருக்கு... டைம் கிடைக்குறப்ப போஸ்ட் பண்ணுறேன்... கதைகளை படிச்சு கமெண்ட் பண்ணுனவங்களுக்கும் சைலண்ட் ரீடர்சுக்கும் நன்றி!​
 

GayuR

Member
Member
நிறைய வீட்டுல இதுதான் நிதர்சனம். மனைவி இருக்கறப்போ அவங்க அருமை உணர்வதில்லை.. இந்த கதைல அவங்க இறந்தும் உணரலை...
 

New Episodes Thread

Top Bottom