• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 16 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் - 16

ஆதி பிரயுவிடம் கோபம் கொண்டாலும், அவனால் பிரயுவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. தான் இங்கேயிருந்து எதுவும் சொல்லி விடலாம். அங்கே சமாளிக்க வேண்டியவள் அவள்தானே. தன் அம்மாவிற்கு பிடிக்காததை செய்யும் போது அவருடைய எண்ணங்கள் இன்னும் பிரயுவிற்கு எதிராக திரும்பும்.

அவனுக்கு கோபம் சீக்கிரம் போய் விட்டது தான். என்றாலும் தான் வேறு அவளை பேசி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணிதான் அவளிடம் பேசாமல் இருந்தான்.

குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள் கழித்து அதற்கு பேர் வைக்கும் நிகழ்ச்சி வைத்திருந்ததன்ர். ஆதி இருக்கும் இடத்தில் இப்போதுதான் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால் அவன் தன் ப்ராஜெக்ட் வேலையில் பிஸி ஆகி விட்டான்.

ஆதியை அந்த நாட்டிற்கு அனுப்பும்போது அவனுக்கு அங்கே தலைமை பொறுப்பு கொடுத்து அனுப்பியிருந்ததால், ஏற்கனவே பத்து நாட்கள் வேலை ஒன்றும் நடக்காத நிலையில், தான் அப்படியே விட்டு வருவது சரி ஆகாது என்று எண்ணி அவன் இந்தியா செல்வதை தள்ளி வைத்து விட்டான்.

அவன் வருவதாக இல்லை என்றவுடன், வித்யாவிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. அவளே தன் அண்ணனை அழைத்து பேசினாள்.

“ஹலோ” என்ற ஆதியின் குரல் கேட்கவும்,

“அண்ணா “ என்று வருத்தக் குரலில் பேசவும், பதறிய ஆதி,

“என்ன ஆச்சு வித்யா ? யாருக்கும் எதுவுமில்லையே ?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணா. நீ இப்போ பாப்பா ஃபங்சன்க்கு வரலியா?”

“அம்மாகிட்ட சொன்னேன்னேமா ?”

“இல்லை அண்ணா. அன்னிக்கு ஹாஸ்பிடலில் வைத்து நான் உங்கிட்ட கோபமா பேசிட்டேன்னு உனக்கு கோபமா ? அதான் வரலியா . சாரி அண்ணா . அன்னிக்கு ஏதோ ஒரு வேகத்துலே பேசிட்டேன் . இனிமேல் அப்படி பேச மாட்டேன் . அண்ணா. அதுக்காக வராம இருக்காத . நீ எனக்கு அண்ணன் மட்டுமில்லை . அப்பா இடத்துலேர்ந்து என்னை பார்த்துக்கிற. நீ வந்து என் குழந்தைய ஆசீர்வாதம் பண்ணு . ப்ளீஸ் “

“ஹே. என்னடா. சின்ன பொண்ணு மாதிரி கலங்கிட்டு உன்மேல் கோபம் வந்தா கூட உன்னை திட்ட மாட்டேன். நிஜமாவே இப்போ நான் வர முடியாத சூழ்நிலைடா. என் மருமகனுக்கு எப்பவும் என் ஆசீர்வாதம் உண்டு. அதுக்காக கவலைபடாத. என் வேலைகள் ஓரளவு செட் ரைட் பண்ணிட்டு என் மருமகன பார்க்க ஓடி வரேன் . சரியா ?”

தன் அண்ணன் தன்னிடம் தன்மையாக பேசவும், தெளிந்த வித்யா பிறகு அண்ணனிடம் குழந்தையை பற்றி சிறது நேரம் பேசி வைத்து விட்டாள்.

ஆதி, வித்யா பேசியவுடன் அன்று ஏதோ அவள் பேசிவிட்டாள். இனிமேல் மாறி விடுவாள் என்றுதான் நினைத்தான்.

ஆனால் வித்யாவோ தன் அண்ணனை பற்றி மட்டுமே எண்ணினாளே தவிர, தன் அண்ணியான பிரயுவை பற்றி அவள் கவலைபடவில்லை. அண்ணனை சமாதனம் செய்தால் போதும் என்று மட்டுமே செய்தாள்.

வித்யா பேசினதும் ஆதிக்கு பிரயுவிடம் பேசி ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டதால் , அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

அன்று இரவு அவளை அழைத்தான். அவன் எண் போனில் வரவும், சற்று நேரம் அதை வெறித்து பார்த்த ப்ரயு எடுத்து,

“ஹலோ” என்றாள். அதை சொல்லும்போதே அவள் குரல் தழுதழுத்தது.

“ப்ரயு. .” என்று மென்மையாக அழைத்தவன்,

“உங்க கோபம் போயிடுச்சா?” என்றாள்.

“அது அப்படியேதான் இருக்கு. ஆனால் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடியுது கண்ணம்மா. நீ சொன்னது கரெக்ட் தான் . எனக்கு என்னால தான் நீ இத்தனை கஷ்டங்களும் தாங்கி கொள்கிறாய் என்று வேதனையாக இருக்கிறது . அதுதான் கோபமாக வெளிபடுகிறது. ”

“அதற்காக பேசாமல் இருப்பீர்களா? “

“இல்லை டா. அது ஒரு நாள் கோபம் தான். அதுக்கு அப்புறம் என்னோடு பேசுவதற்காக வேறு நீ விழித்திருக்க வேண்டாமே என்றுதான் பேசாமல் விட்டேன் .”

ப்ரயு முழுதும் சமாதானம் ஆகவில்லை என்றாலும் , அவளால் பேசாமலும் இருக்க முடியவில்லை. ப்ரயுவாது தான் பழகிய இடத்தில இருக்கிறாள் ஆதியோ புது இடத்தில முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையில் அங்கே தனியாக தானே கஷ்டபடுகிறான் என்ற பரிதாபம் தோன்றியது .

அவளின் மனம் சரியாகவில்லை என்று ஆதிக்கும் புரிந்தது. என்றாலும் அந்த பேச்சை விட்டு அன்று வித்யா அவனிடம் பேசியதை கூறினான்.

மேலும் “வித்யா சரி ஆகி விடுவாள் என்று தோன்றுகிறது பிரயும்மா. அவள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டால் உன்னோட பர்டன் கொஞ்சம் குறையும்” என்று சொன்னான்.

ப்ரயுவிற்கு அவன் அளவு நம்பிக்கை இல்லை. என்றாலும் அவனை மறுத்து எதுவும் கூறவில்லை.

பிறகு அவன் எப்போ வருகிறான் என்று கேட்ட போது

“தெரியல டா. இங்கே செட் ரைட் ஆக கொஞ்ச நாள் ஆகும். பிறகு சொல்கிறேன் “ என்று வைத்து விட்டான். அன்றைக்கு அவன் வாட்ஸ்ஆப் இல் அவளுக்கு அனுப்பிய பாடல்

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ

இந்த பாடலை கேட்டவள் அவனின் அன்பும், ஏக்கமும் புரிந்து அவன் மேல் உள்ள கோபம் குறைத்தாள்.

அந்த வாரத்தில் குழந்தை பெயர் சூட்டும் விழா நன்றாக நடந்தது. தன்னால் இயன்ற வரை ஆதி இருந்தால் எப்படி ஆசையாய் செய்திருப்பானோ அவ்வளவு செய்திருந்தாள் ப்ரயு.

தன் மாமியாரை கலந்து கொண்டு, குழந்தைக்குச் செய்வதிலாகட்டும், வித்யா அவள் கணவர் இருவருக்கும் செய்யும் சீர் எல்லாம் சிறப்பாக செய்திருந்தாள். ஆதியின் அம்மாவிற்கு பிரயுவின் இந்த திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆதி பணம் தான் என்றாலும், அதை ஒரு கடமையாக ஏனோ தானோ என்று செய்யாமல், ஆசையோடும், பொருத்தமாகவும் ஏற்பாடு செய்திருந்தாள்.

அவ்வளவு ஏன் ? அன்று குழந்தை தொட்டிலில் போடும்போது

என்ன தவம் செய்தனை. யசோதா,

ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில்,

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை,

அத்தை மடி மெத்தையடி ..ஆடி விளையாடம்மா,


இது போன்ற தாலாட்டு பாடல்கள் மற்றும் கிருஷ்ணன் பாடல்களாக cd யில் பதிந்து மெலிதாக போட்டு விட்டது எல்லோரையுமே சந்தோஷபடுத்தியது.

அவளின் ஆர்வமான செயல்களை பார்த்த ப்ரயு மாமியார், பிரயுவின் அம்மா, அப்பாவை மட்டுமில்லாமல் பிரயுவின் தங்கைகள் குடும்பத்தினரையும் சேர்த்து விழாவிற்கு அழைத்து இருந்தார். ப்ரியாவும் வந்திருந்தாள்.

வந்திருந்த வித்யாவின் குடும்பத்தினரிடம் கூட எல்லாம் என் மருமகள் ஏற்பாடு என்று பெருமையாக கூறினார். மேலும் வித்யா வீட்டில் அவள் கணவர் ஒரே பையன் என்பதால், குழந்தை தொட்டிலில் போட அத்தை என்று யாருமில்லை.

ப்ரயுவின் மாமியார் , குழந்தையின் தாய் மாமா மனைவி அத்தை தானே என்று அவளை தொட்டிலில் விட சொன்னார். ப்ரயு இதை எதிர் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று உண்மை. அவர் தன் மகன், மருமகளின் செய்முறையை யாரையும் மாற்றிச் செய்ய விட மாட்டார். அந்த விதத்தில் பிரயுவை பிடிக்குமோ பிடிக்காதோ, அவளைத்தான் செய்ய சொல்வார்.

ப்ரியா இந்த நிகழ்ச்சி எல்லாம் வீடியோ எடுத்து வைத்தாள். சாப்பாடும் குறை சொல்ல முடியாத படி இருக்க, வித்யா மாமியாருக்கு இந்த முறை எந்த பிரச்சினையும் கிளப்பி விட வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

எல்லோருமே ஒரு இதமான மனநிலையில் இருந்தனர். பிரயுவிற்கு சில பல கஷ்டங்கள் இருந்தாலும், அவள் பொறுத்துக் கொண்டாள்.

அன்று இரவு பிரியா அனுப்பிய வீடியோவை . ஆதிக்கு அனுப்பி விட்டாள். அவன் அதை பார்த்து விட்டு

“ரதி, ரொம்ப தேங்க்ஸ் டா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. யு ஆர் ரியலி கிரேட்.” என்று வித விதமாக பாராட்டியவன் , அவளிடம் ரொம்ப நேரம் காதல் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தான்.

பிரயுவை ஆதியின் அம்மாவும், ஆதியிடம் பேசும் போது அவளால் தான் விழா நல்லபடியாக நடந்தது என்று பாராட்டியிருந்தார்.

வித்யா குழந்தை வந்த பின்பு, பிரயுவிற்கு மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. அதே போல் அந்த விழாவின் வீடியோவை பார்த்த பின் ஆதியின் மனத்திலும் தனக்கும், பிரயுவிற்கும் பிறக்கும் குழந்தை பற்றிய எண்ணம் தோன்றியிருந்தது.

ஆனால் இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆதியோ, பிரயுவோ ஒருவர் அதை வெளிபடுத்தினால் மற்றவர் மனதை கஷ்டபடுத்தக் கூடும் என்று எண்ணினர்.

நாட்கள் வேகமாக, அதே சமயம் எந்த புதிய பிரச்சினை இல்லாமலும் சென்றது.

என்னதான் அவன் வருவதை பற்றி சந்தேகமாக சொன்னாலும், பிரயுவிற்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது ஆதி வரமுடியவில்லை என்றாலும், இவர்களின் முதல் திருமண நாளை ஒட்டி அவன் வருவான் என்று காத்திருந்தாள்.

உண்மையில் ஆதியும் அதை மனதில் வைத்து இருந்தான். அவன் எண்ணியது முதல் திருமண நாளை ஒட்டி வரும்போது , அவன் அவளோடு ஒரு வாரம் தனியாக எங்காவது சென்று வரலாம் என்று பிளான் செய்திருந்தான். அதோடு வேறு சில வேலைகளும் சேர்த்து, எல்லாவற்றையும் அட்டென்ட் செய்து முடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தான்.

ப்ரயு அவன் பேசும்போது ப்ரியாவின் திருமணம் பற்றி கூறவும், அதே தேதியில் தன் நண்பன் திருமணம் இருப்பதாக கூறியிருந்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் திருமண நாள் என்ற நிலையில், தன் கடமையாக வீட்டிற்கு தினமும் பேசி விடுபவன், அன்றைக்கு தன் அம்மாவிடம்.

“அம்மா, இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு விசா வந்துவிடும். நான் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் இருப்பேன்” என்றான்.

“ஏண்டா இப்போ வர ? “

“ஏன்மா? போன மாசமே வர வேண்டியது.. நானும் இங்கே வந்து ஒரு வருடம் ஆக போகிறது, அதனால உங்கள் எல்லாரயும் பார்க்க வருகிறேன்”

“நீ இப்போ வந்தால் , திருப்பி உன்னால் எப்போ வர முடியும் ..? “

“எப்படியும் ஒரு வருடமாவது ஆகும் நான் மீண்டும் வர”

“இல்லை, வித்யா குழந்தைக்கு பேர் வைக்கும் ஃபங்சன் முடிந்து விட்டது. அன்றைக்கே வித்யா மாமியார் தாய் மாமன் நீ இல்லியே என்று கொஞ்சம் மூஞ்சி காட்டினார். நான் தான் நீ அவள் குழந்தைக்கு காது குத்தி, மொட்டை போடும் ஃபங்சன்க்கு வருவாய் என்று சொல்லிருந்தேன் . அவர்கள் வீட்டில் குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்த பின் வைத்து கொள்ளலாம். இப்போவே உங்கள் பையனிடம் சொல்லி அதற்கு தகுந்த மாதிரி லீவ் போட சொல்லுங்கள் என்றார்கள். உன்னிடம் கேட்டு விட்டு தேதியும் முடிவு செய்ய சொன்னார்கள். ஆனால் நீ இப்படி சொல்கிறாயே ?”

“என்னம்மா . நீங்கள் நான் கிளம்பும் போது எல்லாம் எதாவது தடை சொல்கிறீர்கள்? என்னை பற்றி யோசிக்க மாட்டீர்களா? பிரயுவை பற்றி எண்ண மாட்டீர்களா? கல்யாணமாகி பதினைந்து நாளில் அவளை விட்டு வந்து விட்டேன். வித்யாவ விட இரண்டு வயது பெரியவள். அவள் மனத்திலும் எத்தனையோ ஆசைகள் இருக்கும்.. எனக்காக இந்த ஒரு வருடமாக அவள் அம்மா வீட்டிற்கு கூட போய் தங்கவில்லை. நான் வந்து போனால் அவள் எனக்காக இதேல்லாம் செய்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அவள் தங்கைகள் கல்யாணத்திற்கு கூட நான் வரமுடியவில்லை. நான் அவளுக்காக எதுவுமே செய்யாமல் எனக்காக நீ செய் என்று அவளிடம் எதிர்பார்க்க முடியும்?”

“ஏன். நானா உன்னை வர விடாமல் தடுத்தேன்? ஏன் உன் தங்கை வித்யா வளைகாப்பு, பிரசவம், பேர் வைக்கும் வைபவம் எதற்கும் தான் நீ வரவில்லை. அதற்காக என்ன பண்ண முடியும்.? அதோடு நானா உன் பொண்டாட்டியை அவள் அம்மா வீட்டிற்கு போகாதே என்று சொன்னேன். நீயும் அவளுமாக ஏதோ பேசி செய்துவிட்டு என் மீது பழி சொல்கிறாயா? ஏன் நீ என்னையும் , அவளையும் அங்கே வர சொன்னபோது கூட நான் அவளை கூட்டிபோ என்றுதானே சொன்னேன். வேண்டுமென்றால் இனிமேல் நீ வரும்வரை உன் பொண்டாட்டியை அவள் அம்மா வீட்டில் இருக்க சொல். நான் தனியாக இருந்து கொள்கிறேன், எனக்காக நீயோ, உன் மனைவியோ எந்த தியாகமும் செய்ய வேண்டாம்.” என்று ஆதியை பேச விடாமல் வேகமாக பேசியவர்,

“ஆனால் ஒன்று நீ எனக்காக செய்கிறாயோ இல்லியோ, உன் தங்கைக்காக நீ வந்துதான் ஆக வேண்டும். வித்யா புகுந்த வீட்டில் அவள் தலை குனியும் படி நேர்ந்தால் அதோடு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எங்காவது கண் காணாத இடத்திற்கு போய் விடுவேன்” என்று மிரட்டி போனை வைத்து விட்டார்.

ஆதி அப்படியே திகைத்து போய் அமர்ந்து இருந்தான். அவன் தன் அம்மாவிடம் இப்படியொரு பேச்சை எதிர்பார்க்கவில்லை. அவன் இதுவரை நினைத்து இருந்தது தான் ஒரே பையன் என்பதால் மனைவி பின்னால் போய் விடுவேன் என்று பயப்படுகிறார்கள். அப்படி இல்லை என்று நாம் நடந்து கொள்ளும் முறையில் கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்வார்கள் என்று எண்ணியிருந்தான்.

ஆனால் அவர்களுக்கு தன் பெண் மட்டும் புகுந்த வீட்டில் சந்தோஷத்தோடும், மரியாதையோடும் இருக்க வேண்டும். தன் பெண்னுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. தன் பெண்ணிற்கு வாழ்க்கை முழுக்க சீர் செய்யவும், அவளுக்கு மாரல் சப்போர்ட் ஆகவும் தன் மகன் இருக்க வேண்டும். தன் மகனோ, வீட்டிற்கு வந்த மருமகளோ அதற்காக எந்த கஷ்டம் பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்று அவனுக்கு இப்போதுதான் புரிகின்றது.

இப்போதும் அவனால் அவன் அம்மாவை விட்டு கொடுக்க முடியாது. சின்ன வயசிலிருந்து அவர்கள் இருவரையும் எத்தனையோ சிரமங்களுக்கிடையில் யாருடைய துணையும் இல்லாமல் வளர்த்தவர்கள். அதனால் அவரின் தைரியம் அவனுக்கு தெரியும். அவன் படித்து வேலைக்கு போனபோது தன் அம்மாவை எந்த சூழ்நிலையிலும் கை விடக் கூடாது என்ற உறுதி தனக்குள் எடுத்திருந்தான்.

அவன் அதன் பின் என்ன செய்ய என்று யோசித்தவன், எப்படியும் பிரயுவிற்கு நாம் வருவதை சொல்லவில்லை. அதனால் லீவ் கிடைக்க வில்லை என்று சமாளித்து விடலாம் என்று எண்ணி விட்டான்.

ஆனால் அவன் அறியாதது, இந்த பேச்சு முழுக்க அவள் கேட்டு விட்டாள் என்பதோடு, அவள் அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள் என்பதும் .

அன்றைக்கு பிரியா அவள் வீட்டிற்கு பத்திரிகை வைக்க வரப்போவதாக சொல்லியிருந்ததால், சீக்கிரம் வந்து விட்டாள். ஆதி பேசியது தெரியாவிட்டாலும், அவள் மாமியாரின் பதிலில் இருந்து ஆதி அவளுக்காக ஏதோ பேசியிருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

அவள் உள்ளே வரவும், அவளிடம் ஏதோ சொல்ல வந்த அவள் மாமியார், பிரியா குடும்பத்தினர் வரவும் சரியாக இருக்கவே அப்படியே விட்டு விட்டார்.

நல்ல வேளை பிரியா அப்போதுதான் வந்திருந்தால் ப்ரயு மாமியார் பேசியதை அவள் கேட்கவில்லை.

பிரியாவும் அவள் பெற்றோரும் பத்திரிகை கொடுத்து விட்டு கிளம்பும் வரை இருவருமே முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

பிரியா விளையாட்டாக கூறுவது போல் ,

“ஆண்டி. ப்ரத்யாவை என் கல்யாணத்திற்காவது முதல் நாளே அனுப்பி விடுங்கள். “ சிரித்துக் கொண்டே சொல்லவும், பிரயுவின் மாமியாரும்

“நானாம்மா அவளை வேண்டாம் என்று சொல்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமோ கூட வைத்துக் கொண்டு அனுப்பி விடு” என்று அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ப்ரியா யோசனையோடு பிரயுவை பார்த்து என்ன என்று வினவ, அவள் ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

அவள் கிளம்பிய பின்,

“இதோ பார் ப்ரத்யா. உனக்கு உன் பிறந்த வீட்டில் தங்க வேண்டுமென்றால் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கி வா. அதே போல் உன் புருஷனோடு போக வேண்டுமென்றாலும் போ. எனக்காக நீயும் , உன் புருஷனும் எந்த தியாகமும் செய்ய வேண்டாம்.” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.

ப்ரயு யோசனையோடு உள்ளே சென்றவள், என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. ஆனால் ஏனோ அவளுக்கு ஆதியிடம் இது பற்றி பேச விருப்பமில்லை. அவளுக்கு தோன்றியது அவன் அம்மாவிற்கு தான் சப்போர்ட் செய்வான். மிஞ்சி போனால் என்னால் உனக்குத்தான் கஷ்டம் என்ற அதே விஷயத்தை தான் திரும்ப சொல்வான். அதனால் ஒன்றும் பயனில்லை என்று எண்ணினாள்.

அவள் யோசித்து ஒரு முடிவு எடுத்தாள். இதற்கு தீர்வு என்றால், ஆதி இந்தியாவிற்கு நிரந்தரமாக வரவேண்டும். அது எவ்வளவு சாத்தியம் என்று அவளுக்கு தெரியவில்லை.

இல்லை அவள் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும். ஆதி வந்த பின் முடிவு எடுக்கலாம். ஆனால் ஆதியோ, அவன் அம்மாவோ சொன்னால் கூட, வயசான அவர்களை தனியாக விட்டு செல்ல அவள் மனசாட்சி இடம் கொடுக்காது. அதனால் ஆதி வரும் வரை இதுதான் வாழ்க்கை என்று உணந்தாள்.

அவள் மறந்தது தன் புத்தி சொல்வதை எல்லாம், மனம் கேட்காது என்றும், அது தன் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டே செல்லும் என்பதையும்.

இது எதுவும் வித்யா கவனத்திற்கு செல்ல வில்லை. அதனால் அன்று இரவு வழக்கம் போல் வித்யாவிடம் சென்றவளை, அவள் மாமியார் தடுக்க, அவரிடம்

“உங்கள் மகன் வரும் வரை அவரிடத்தில் இருந்து உங்களை பார்த்துக் கொள்வேன் என்று சொல்லியிருக்கிறேன். நீங்கள் கண் விழித்து உங்களுக்கு எதாவது வந்தால், நான் தான் பதில் சொல்ல வேண்டும். இது என்னுடைய கடமை. நான் செய்து கொள்கிறேன். நீங்கள் வழக்கம் போல் இருங்கள்.” என்று அவரை அனுப்பி வைத்து விட்டாள்

ப்ரயு மாமியாருக்கு கொஞ்சம் உறுத்தத்தான் செய்தது. இருந்தாலும் அவர் உடல் நிலை, மற்றும் அப்போதும் தான் போய் விட்டால், தன் மகளை யார் பார்ப்பார் என்று எண்ணி படுக்க சென்று விட்டார்.

ப்ரயு அவளின் தீர்மானத்தின் படி ஆதியிடம் பேச்சை குறைத்துக் கொண்டாள். சாதாரணமான நல விசாரிப்போடு முடித்துக் கொண்டாள். ஆதியும் குற்ற உணரவில் இருந்ததால் அவளின் மாற்றங்களை கவனிக்கவில்லை. அதோடு அவனும் பிரயுவின் உணர்வுகளோடு தான் விளையாண்டால், அவள் தாக்கு பிடிப்பது கஷ்டம் என்று எண்ணி அவளிடமிருந்து சற்று விலகி இருந்தான்.

தன்னுடைய மனக் கஷ்டங்கள் எதையும் அவள் பெற்றோரிடம் மட்டுமல்ல, ஆதியிடம் கூட காண்பிக்காமல் இருக்க ஆரம்பித்தாள்.

அவளும், அவள் மாமியாரும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய பேசுவதில்லை. காலையில் அவர்களுக்கு தேவையானதை செய்து விட்டு ஆபீஸ் செல்வாள். மாலையில் வந்து மிச்ச வேலையை முடித்து விட்டு , வித்யாவை கவனிக்க சென்று விடுவாள்.

இதுவே தொடர் கதை ஆனது. !!!!

-தொடரும் -​
 

Rajam

Well-known member
Member
ஆதி அம்மாவ கவனிகக வேலைக்காரி
வச்சிருக்கலாம்.
மனைவி யே தேவையில்லை.
பிரயு பாவம்.
 

kothaisuresh

Well-known member
Member
பணத்த கொடுத்து ஆளைப் போட்டிருக்கலாம் இல்ல. எவ்வளவு பண்ணாலும் திருப்தி இல்லை
 

sugan

Active member
Member
Enna solla therila ammakaluku ponnu madiri marumaga kidaichalum atha purinjukavae matranga
 

New Episodes Thread

Top Bottom