• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

15. விலோசன விந்தைகள்

ஷாலினி

New member
Member
தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய யோசனை எல்லாம் எப்படி வந்தது? என்று நினைத்தவள்,

'இது என்ன இப்படியானதொரு எண்ணம்?' என்று யக்ஷித்ராவின் முகமோ சிவந்து விட்டது.

அதை நேஹா பார்ப்பதற்குள், தன்னைச் சமன் செய்து கொண்டவளுக்குக், காலையில் வீட்டில் தன் கணவன் ஏன் அவ்வாறானதொரு பார்வையைத் தன்னிடம் பதித்தான் என்பது அப்போது தான் புரிந்தது.

அவளுக்கு முன்பாகவே, அற்புதனுக்குப் பிடித்தம் ஆரம்பித்து விட்டது. அதுவும், தன்னை விட்டு நீங்க இயலாத நிலை வரைப் போய் விட்டது என்பதை யக்ஷித்ராவால் நம்ப இயலவில்லை.

இனி கணவனின் விழி வீச்சுத் தன்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் உணர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

தன்னுடைய கணவனுக்கு மாலை நேரம் அலுவலகம் தொடங்கியதால், அந்த வருத்தத்தில் இருந்த நேஹாவிற்கு, அருகிலிருந்த தோழியின் எண்ண ஓட்டமும், முக மாறுதலும் கருத்தில் பதியவில்லை.

அவளாகவே புலம்பிக் கொண்டும், குழந்தையை நினைத்து தவித்துக் கொண்டும் இருந்தாள்.

'அதற்கான வழியைக் கண்டுபிடி' என்று கூறி, அவளைத் தேற்றி விட்டு, இருவரும் வேலையைப் பார்த்தனர்.

இங்கோ, அற்புதனுடன் சேர்த்து, மாலை நேரத்திற்கு வேலை மாற்றம் பெற்ற சிலரோ,"குழந்தைகளை எப்படி பாக்குறதுன்றது தான் பெரிய பிரச்சனையாக இருக்கு!" என்று அவனிடம் புலம்பினர்.

அதை ஆமோதித்த இன்னொருவர்,"ஆமாம் சார். காலையிலிருந்து அவங்கப் பாத்துக்க, ஈவ்னிங் நான் டேக் கேர் செய்துக்கனும்னு, நானும், வொய்ஃப்பும் ஈக்வலாக மகளைப் பாத்துக்குவோம். இப்போ அதையெல்லாம் மாத்தனுமே?" என்று வருந்தினார்.

"நம்ம ஆஃபீஸில், ஒவ்வொரு நாளும், எல்லா போஸ்ட்ஸ்க்கும், அவ்ளோ அப்ளிக்கேஷன்ஸ் வருது! அப்படியே வேலையை விட்டுப் போனாலும், கண்டுக்க மாட்டாங்க சார்! அடுத்த ஆள் பிடிச்சிருவாங்க! நாம தான் வேலை இல்லாமல் சுத்தனும்" என்றார் மற்றொருவர்.

இதற்கிடையில், அற்புதனையும் பேச்சில் இழுத்து விட்டனர்.

"அற்புதன் சாருக்கு எல்லாம் இதைப் பத்திக் கவலையே இல்லை! எப்படி ஸ்மைல் பண்ணிட்டு, உட்கார்ந்து இருக்கார் பாருங்க?" என்று நடுத்தர வயதுள்ள ஒருவர் கூறினார்.

"அதானே! அவருக்கு என்னக் குழந்தையா இருக்கு? இப்போ தான் கல்யாணம் முடிஞ்சுருக்கு. குழந்தையைப் பத்தி இன்னும் யோசிக்க வேண்டாம்னு முடிவு செய்திருப்பாங்க! நீங்க தான் சார் லக்கி ஃபெல்லோவ்!" என்று அவனைப் பாராட்டிப் பேசினார்கள்.

அதற்கு அவனோ,"சார்! நம்ம குடும்பமும், நாமளும் சரியாக இருந்தாலே போதும்! இந்த லக் எல்லாம் ஒன்னுமே இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கடமையும், சூழ்நிலையும் இருக்கும். அதை வெளியே இருந்து மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. எனக்கும் அப்படி இருக்கு. ஆனால், அதைச் சொல்ல விருப்பமில்லை. நாம எப்படி இந்த ஷிஃப்ட்டுக்கு டைமிங் ஃபிக்ஸ் பண்றதுன்னுப் பேசலாம். வாங்க!" என்று கூறி பேச்சை மாற்றினான்.

அவர்கள் சொன்னதில், குழந்தை விஷயத்தை எண்ணிப் பார்த்தான் அற்புதன். அதை தள்ளிப் போட்டிருப்பார்கள் என்ற கருத்தை எண்ணுகையில், இவனுக்கு 'ஐயோடா!' என்றிருந்தது.

தன்னைப் போலவும், யக்ஷித்ராவைப் போலவும், சாயலில் இரு குழந்தைச் செல்வங்கள் கிடைத்தால், இவனுக்கு வேண்டாமென்றா தோன்றும்? தன் நிலையை, இவர்கள் அறியாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்று எதையும் பகிராமல் விட்டு விட்டான் அற்புதன்.

தன்னுடைய அலுவலக வண்டியும், கணவனுடைய இரு சக்கர வாகனமும் ஒரே நேரத்தில் வீட்டை அடைவதை ஜன்னலின் வழியே பார்த்தவாறு இருந்தாள் யக்ஷித்ரா.

பிரேக்கை அழுத்தித் தன் வண்டியை நிறுத்தியவன், அந்த வாகனத்தில் இருந்து, மனைவி இறங்கி வருவதற்காக காத்திருந்தான் அற்புதன்.

அவள் கேப் - யை விட்டுக் கீழிறங்கியதும்,

"ஹாய் யக்ஷூ!" என்று உற்சாகம் பொங்க உரைத்தான் அவளது கணவன்.

"ஹாய்!" என இவளும் பதிலுக்குச் சொல்லி விட்டுக் கணவனின் முகத்தை ஆராய்ந்தவள், அது வழக்கத்திற்கு மாறாக ஒளிர்ந்து காணப்பட்டது. காலையில் தனக்கு வந்த எண்ணம் இப்போது இலேசாக எட்டிப் பார்க்க, வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டாள் யக்ஷித்ரா.

அவளது வேக நடையுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தானும் வந்து சேர்ந்தான் அற்புதன்.

"வாங்க! எப்போதாவது இப்படி நடக்குது" என்று கூறி, இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்ததும், முகம் விகசிக்க அவர்களை வரவேற்றார் கீரவாஹினி.

அவர்களும் புன்னகைத்து, ஒரு சில நிமிடங்களில், தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தனர்.

காலையில் பேச நேரம் கிடைக்காததால், இப்போது, அனைவரிடமும், தன் வீட்டிற்குப் போனதில் இருந்து, காலையில் வந்தது வரை, சுவாரசியமாகச் சொன்னவள், தாய் மற்றும் தங்கையும் ஓரளவிற்குத் தெளிந்து காணப்பட்டார்கள் என்பதையும் மூவரிடமும் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

அன்று கணவனிடம் தானே முன் வந்து கதையைக் கூறத் தொடங்கி விட்டாள்.

ஒரு சில பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிந்ததும்,
அதற்குப் பிறகான நாட்களில், பன்னிரெண்டாம் வகுப்பிற்கானப் பாடங்களை நடத்த தொடங்கி விடுவர்.

அதிலும், கணக்கு, வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவை முடிந்ததும், ஒரு வாரம் மட்டுமே மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அப்படியான நாட்களானாலும், மகள் வீட்டில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்தார்
மீனா.

எப்போதும் போல,‌ மகள்களுடைய படிப்பைக் கவனித்தார் கிரிவாசன்.

அவரது செயல்களில் மாற்றங்கள் வந்ததா? என்றால், இல்லை!

இன்னும், ஏதாவது கோபம் ஏற்பட்டால், மீனா தான் பலியாடு. யக்ஷித்ராவும், யாதவியும் தான், தனக்கான உணவை அன்றைக்குச் சமைக்க வேண்டும் என்பது மாறவில்லை.

இந்தச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இதன் முக்கியத்துவத்தையும், இதில் பெறும் மதிப்பெண்கள் எவ்வளவு அத்தியாவசியம் என்பதையும் மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.

அதை மூளையில் ஏற்றிக் கொண்டு, "நான் காலேஜில் மேத்ஸ் தான் எடுக்கப் போறேன் நிவி" என்று தோழியிடம் கூறினாள் யக்ஷித்ரா.

"ஓஹோ! அதுக்கு மட்டும் அப்ளைப் பண்ண வேணாம். நாம மூனு கோர்ஸூக்கு அப்ளிக்கேஷன் போட்டு வைக்கலாம் யக்ஷி. எது கிடைக்குதோ, அதைப் படிப்போம்" என்றாள் நிவேதிதா.

ஒரே பாடத்திற்கு மட்டும் விண்ணப்பம் போட்டு வைத்தால் கிடைப்பது அரிது. அதுவும், நல்ல கல்லூரிகளில் இவர்கள் சேர வேண்டுமென்று காத்திருக்கின்றனர்.

யக்ஷித்ராவின் தங்கை யாதவியோ, பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் பிரிவிற்குப் போவதால், அவளுக்கு இந்த நிலை வரவில்லை.

ஆனால், மதிப்பெண்களைப் பற்றிய பயம் இருந்தது. அதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று வெளியில் ஜம்பமாக சுற்றிக் கொண்டு இருந்தாள் யாதவி.

சிறப்பு வகுப்புகள் முடிவடைந்து, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

அப்போது, "நீ எந்த சப்ஜெக்ட்டில் கம்மியா மார்க் வாங்கி இருக்கிற?" என்று அவளிடம் கேட்டார் கிரிவாசன்.

அதற்கு,"ஃபிசிக்ஸ் (இயற்பியல்) ப்பா!" எனப் பதிலளித்தாள்.

"சரி. அப்போ அதுக்குத் தனியாக டியூஷன் வைக்கவா?" என்றார்.

"இல்லைப்பா. ஒரே மிஸ் கிட்டயே படிக்கிறேன்" என்று கூறினாள் யக்ஷித்ரா.

"அடுத்தப் பரீட்சையில் உன் மார்க்கைப் பாத்துட்டுப் பேசுறேன்" என்று கூறி விட்டுப் போனார் கிரிவாசன்.

இப்படி அறிந்தும், அறியாமலும் மகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருந்ததால், அதற்கானப் பலனும் அடுத்து வந்த நாட்களில் கிடைத்தது மொத்தக் குடும்பத்திற்கும்.

- தொடரும்
 

New Episodes Thread

Top Bottom