• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

✨இனி வரும் வசந்தம்✨

Nithya Mariappan

✍️
Writer
இனி வரும் வசந்தம்

மீனாட்சிபுரம், திருநெல்வேலி....

“இங்க பாரு உலகு, நான் ஒரு வாரத்துக்கு உங்கண்ணன் வீட்டுக்குப் போறேன்... நீ கடைக்குப் போறப்ப என்னை பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டுரு”

புதிய ஈடாக எடுத்த ஆவிபறக்கும் இட்லியைக் கணவனின் தட்டில் வைத்துவிட்டு அடுத்த ஈடு ஊற்றுவதற்காக சென்ற மாமியாரின் பேச்சைக் கேட்டும் கேட்காதது போல அமர்ந்து ஆறிப் போன இட்லிகளைச் சுவைத்துக் கொண்டிருந்தாள் வைதேகி.

அன்று டி.டி.எஸ் ரிட்டனுக்கான கடைசி தேதி! அவள் பணியாற்றும் அக்கவுண்டண்ட் அலுவலகத்தில் அன்று கிளையண்டுகள் மொத்தமாக குவிந்து விடுவார்கள்! வேலை முடிய எப்படியும் இரவு எட்டு மணி ஆகிவிடும். காலையிலும் எட்டு மணிக்கு வருமாறு அலுவலக உரிமையாளரும் அக்கவுண்டண்டுமான சுந்தரம் முந்தைய தினமே சொல்லித் தான் அனுப்பியிருந்தார்.

ஆனால் இப்போது நேரமோ ஒன்பதை தாண்டி அரைமணி நேரம் ஆகிவிட்டது. இன்றும் வழக்கமான மண்டகப்படி தவறாது!

ஏற்கெனவே சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் அதிகரித்து தரும்படி இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடம் கோரிக்கை வைத்திருந்தாள் வைதேகி. அன்றிலிருந்து மனிதர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அவளது வேலையில் இல்லாத குறையை எல்லாம் கண்டுபிடித்தார்.

“நீ நிஜமாவே பி.காம் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணுனியாம்மா? கம்பெனி ஃபார்மேஷன் டாக்குமெண்ட்ல ஏன்மா நம்பர் ஆப் பார்ட்னர்ஸ்னு டைப் பண்ணிருக்க”

அது அவளது கவனக்குறைவால் நடந்த தவறு தான். ஏனெனில் கூட்டாண்மை ஒப்பந்தம் எனப்படும் ‘பார்ட்னர்ஷிப் டீட்’டை ஒரு பக்கம் வாசித்தபடியே நிறுமத்தின் உருவாக்கத்திற்கான ஆவணங்களை தட்டச்சு செய்ததால் இயக்குனர்கள் என்ற இடத்தில் கூட்டாளி என்று மாற்றி தட்டச்சு செய்துவிட்டாள். அந்தத் தவறுக்கு மன்னிப்பும் வேண்டிவிட்டாள்.

அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை!

“பி.எஸ்.என் கம்பெனிக்கு ஜி.எஸ்.டி எக்செல் ஷீட் போட்டுட்டியாம்மா?”

“இல்ல சார்... நீங்க தான் டி.டி.எஸ் ரிட்டன் ஃபைலிங் முடிஞ்சதுக்கு அப்புறமா அதை பாத்துக்கலாம்னு சொன்னீங்க”

“அதை உன் கிட்ட ஒப்படைச்சு ஒரு வாரம் ஆச்சு... மிஞ்சி மிஞ்சி போனா எழுபத்தஞ்சு வவுச்சர்ஸ் தான் இருக்கும்... அதை எக்சல் ஷீட்ல ஏத்துறதுக்கு உனக்கு நேரமில்லையா? சாயங்காலம் ஆறு மணிக்குக் கிளம்பணும்னா அஞ்சே முக்காலுக்கே ரெடியாகத் தெரியுது... ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி குடுத்த வேலைய டி.டி.எஸ்சை சாக்கா வச்சு லேட் பண்ணுற... இதுல சம்பளத்துல வேற ஆயிரம் ரூவா இன்கிரீஸ் பண்ணுங்கனு கேக்குற”

இது நிச்சயமாக வைதேகியின் தவறல்ல. ஏனென்றால் இதே மனிதர் தான் கிடைத்த இடைவெளியில் ஜி.எஸ்.டி வேலையை முடிக்கலாம் என பி.எஸ்.என் நிறுமத்தின் கோப்பினை எடுத்ததற்கு முதலில் டி.டி.எஸ்சை முடி என கட்டளையிட்டிருந்தார்.

இதோடு இன்னும் சில வேலைகளிலும் குறை கண்டுபிடித்ததோடு மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்குக் கிளம்ப தயாரானவள் தலையில் குண்டு ஒன்றை தூக்கி போட்டார்.

“இன்னும் மூனு நாள் வேலை கொஞ்சம் டைட்டா இருக்கும்மா... நீ ஏழு மணி தாண்டி தான் போக முடியும்... காலையிலயும் எட்டு மணிக்கு முன்னாடி வரப் பாரு”

வைதேகி சற்று தயங்கியபடியே “சார் என் பையனுக்கு மன்த்லி எக்சாம் நடக்குது... நான் சீக்கிரம் போனா தான் அவனை படிக்க வைக்க முடியும்... காலையிலயும் அவ்ளோ சீக்கிரம் வரமுடியாதே சார்”

சுந்தரம் சற்று யோசித்தவர் “அப்ப சண்டே வந்து வேலைய முடிம்மா” என்றார்.

“சார் ஞாயித்துக்கிழமை என் கொழுந்தன் மகளுக்குக் காது குத்துறாங்க... போகலனா குடும்பத்துக்குள்ள சண்டை வந்துடும்”

“என்னம்மா இது? குடும்பம் புள்ளைக்குட்டினு யோசிக்கிறவங்க ஏன் வேலைக்கு வர்றீங்க? எல்லா சண்டேவுமா வரச் சொல்லுறேன்... ஆபிஸ்ல இருக்குறது ரெண்டே பேரு... நான் டி.டி.எஸ்சை ஃபைல் பண்ணுணேன்னா, நீ அதை ஸ்கேன் பண்ணி என்.எஸ்.டி.எல் சைட்ல அப்லோட் பண்ணிடுவ... வேலை ஈசியா முடிஞ்சிடும்... நானே எல்லா வேலையையும் பாக்குறதுக்கு ஏன்மா உனக்குத் தண்டமா சம்பளம் குடுக்கணும்?”

சுந்தரம் காய்ச்சி எடுத்ததில் வேறு வழியின்றி காலையும் மாலையும் அதிகநேரம் வேலை பார்க்க ஒப்புக்கொண்டாள் வைதேகி. இதை முந்தைய தினம் மாலையிலேயே கணவனிடமும் கூறிவிட்டாள். அவனோ சுந்தரம் ஏன் திடீரென இவ்வளவு கெடுபிடியாக நடந்து கொள்கிறார் என வினவ

“சேலரிய கொஞ்சம் அதிகமா குடுங்கனு கேட்டேங்க... அந்த மனுசனுக்குக் குடுக்க வசதிப்படலனா சொல்லிருக்கலாம்... ஆனா இண்டேரக்ட்டா நான் ஏற்கெனவே குடுக்குற சம்பளத்துக்கே நீ ஒழுங்கா வேலை செய்யலனு குத்திக்காட்டுறாரு” என்றாள் வைதேகி கவலையுடன்.

அவள் கணவன் உலகநாதனோ இதை கேட்டதும் சலித்துக் கொண்டான்.

“எல்லா முதலாளியும் இப்பிடி தான் போல... பேசாம நீ வேலைய விட்டுரு வைதேகி... பாத்துக்கலாம்” என்றான்.

இப்போது சலிப்பது வைதேகியின் முறை. இருபத்தைந்தாவது வயதில் திருமணம்! உடனே குழந்தை. இதற்கிடையே திருமணமான முதல் இரண்டு வருடத்தில் எந்த வேலையிலும் அவள் நிலைக்கவில்லை. மூன்றாவதாக கிடைத்த இடம் தான் சுந்தரத்தின் அலுவலகம்.

“நீங்க கொண்டு வர்ற பத்தாயிரத்த வச்சு காலம் தள்ளுறது கஷ்டம்னு நான் அஞ்சு வருசமா வேலைக்குப் போறேன்... மத்த ஆபிஸ் மாதிரி இல்லாம இங்க பத்து டு ஆறு தான் வேலை, சண்டே லீவுங்கிறதால தான் சம்பளம் கம்மினாலும் நான் மூனு வருசம் இங்கயே இருக்கேன்... வேலைய விடுறது ஈசிங்க... ஆனா திருநெல்வேலில இப்ப டிகிரிக்கு வேலை கிடைக்குறது குதிரைக்கொம்பா இருக்கு... கையில இருக்குற வேலையை விட்டுட்டா ஆதியோட ஸ்கூல் ஃபீஸ்கு என்ன பண்ணுவோம்?”

உரையாடலின் முடிவில் வைதேகி காலையில் சீக்கிரம் வேலைக்குச் செல்லும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் உலகநாதனின் அன்னை அதற்கு மனது வைக்கவில்லையே!

“காலையில உன் பொண்டாட்டி செய்யுற வேலையே பாத்திரம் கழுவுறது ஒன்னு தான்... அதையும் என் தலையில கட்டிட்டுப் போனா என்னடா அர்த்தம்?”

“டெய்லியுமா போறா? அவங்க ஓனர் சீக்கிரம் வரச் சொல்லிட்டார்... வேற வழியில்லம்மா”

“ஆமாடா... உன் பொண்டாட்டி கலெக்டர் உத்தியோகம் பாக்குறா, இவ சீக்கிரமா போய் கையெழுத்து போடலனா அங்க எந்த வேலையையும் ஓடாது பாரேன்”

இதற்கு மேல் காலையில் சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்று வைதேகி சொன்னாள் என்றால் மாமியாரின் ருத்திரதாண்டவத்தைக் கண்டு களிக்க வேண்டும். அதை அனுபவிக்கும் மனநிலை அப்போது வைதேகிக்கும் இல்லை, உலகநாதனுக்கும் இல்லை.

அதன் விளைவு தான் இப்போதைய கால தாமதம். இதோ இப்போது திருநெல்வேலி டவுனில் இருக்கும் மூத்தமகனது இல்லத்திற்கு செல்லப்போவதாக கூறியதோடு மீண்டும் இட்லி கொப்பரையோடு மல்லு கட்ட சென்றுவிட்ட அந்தப் பெண்மணி மீது வைதேகிக்கு வருத்தம் எல்லாம் இல்லை.

அவர் இல்லையென்றால் அவளது மகன் ஆதித்யாவைப் பார்த்துக் கொள்ளவோ சரியான நேரத்தில் உணவளிக்கவோ நாதி கிடையாது. கூடவே பிறந்ததிலிருந்து ஆதித்யாவைக் கண்ணும் கருத்துமாக பார்த்து வந்த மாமியாரின் குணம் ஒன்றே போதும், வயோதிகத்தால் அவர் உதிர்க்கும் சில கோப வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்வதற்கு! கூடவே கணவரை இழந்து நான்கு மகன்களையும் ஆளாக்குவதற்கு அவர் பட்ட கஷ்டத்தையும் உலகநாதன் வாயால் கேட்டிருக்கிறாளே!

அவள் சாப்பிட்டுக் கை கழுவவும் ஆதித்யனுக்குப் பள்ளி சீருடை அணிவித்து மாமியார் தலை வாரி விடவும் சரியாக இருந்தது. அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்குத் தாமதமாகச் சென்றால் போதும்.

“இன்னும் ஒரு வாய் வாங்குடா கண்ணா... அப்ப தான் ஆச்சி அல்வா வாங்கிட்டு வருவேன்”

தாஜா செய்து அவனுக்குச் சாப்பாடு ஊட்டியவர் வைதேகியிடம் “நான் ஆதிய ஸ்கூல் பஸ்ல ஏத்திவிட்டுட்டு உலகு கூட பஸ் ஸ்டாண்டுக்குப் போயிடுறேன்... இந்தப் பாத்திரத்த மட்டும் கழுவி வச்சிடு” என்க அவள் தலை சரியெனும் வகையில் அசைந்து வைத்தது.

அன்னை அறியாவண்ணம் சமையலறைக்கு வந்த உலகநாதன் கிசுகிசுக்கும் குரலில்

“உனக்கு நேரமாச்சுனா நீ பாத்திரத்த போட்டுட்டுப் போ வைதேகி... மதியம் சாப்பிட வர்றப்ப நான் கழுவி வச்சிடுறேன்” என்க அந்த நேரத்திலும் கணவனின் கரிசனத்தை எண்ணி கண் கலங்கியது அவளுக்கு.

வீட்டு வேலைகளை பெண்களுடன் ஆண் மகன்கள் பகிர்ந்து செய்வதெல்லாம் அவள் அறியாதது. ஆனால் உலகநாதன் அப்படிப்பட்டவன் இல்லை. உடல்நலமில்லை என்றாலும் எனக்கு வடித்து கொட்டிவிட்டுப் படுத்துக்கொள் என்று சொல்லும் சுயநலமிகளுக்கு மத்தியில் அவன் ஒரு வைரமே!

“இல்லங்க... என்ன தான் சுருக்குனு பேசுனாலும் நான் ஆபிஸுக்குப் போக லேட் ஆகுறத புரிஞ்சிகிட்டு ஆதிய ஸ்கூல் பஸ்ல ஏத்தி விடுறேன்னு சொல்லுறாங்க அத்தை... அவங்களை பஸ் ஸ்டாண்டுல பத்திரமா இறக்கி விட்டுருங்க... நான் ஆபிஸ்ல ரெகுலரா வாங்குற திட்டு தானேங்க... எனக்குப் பழகிப் போச்சு... நான் பாத்துக்கிறேன்”

உலகநாதன் அரைமனதுடன் கிளம்ப “டாட்டாம்மா” என்று கையசைத்தபடி ஆச்சியுடன் கிளம்பினான் ஆதித்யா.

வைதேகி முடிந்தளவுக்கு வேகமாக பாத்திரங்களை கழுவி அடுக்கிவிட்டு தனது ஹேண்ட் பேக் மற்றும் லஞ்ச் பேக் சகிதம் வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பும் போது மணி ஒன்பது நாற்பத்தைந்தை தாண்டிவிட்டது.

வேகமாக நடந்தால் பத்து நிமிடத்தில் கையிலாசபுரத்தில் இருக்கும் அவளது அலுவலகத்தை அடைந்து விடுவாள்.

ஓட்டமும் நடையுமாக வந்தவள் சாலைகுமாரசாமி கோவில் வாசலில் கூட்டமாக இருக்கவும் எப்படி கடப்பது என்று புரியாமல் தவித்தாள். அன்று முகூர்த்தநாள் போல! திருமணங்கள் வரிசையாக நடைபெறும் வேளை அது. எனவே அந்த இடம் திருமண வீட்டாராலும் உற்றார் உறவினராலும் நிரம்பி வழிந்தது.

எப்படியோ ஜன சமுத்திரத்தில் நீந்தி பூர்ணகலா தியேட்டரை தாண்டி விட்டாள் வைதேகி. கைக்கடிகாரத்தை நோட்டமிட்டபடியே ஏ.கே.எம் காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகத்திற்குள் நுழைந்தவள் அதன் முதல் மாடியில் இருக்கும் தங்களின் அலுவலகத்தை அடைந்த போது வியர்ந்து வழிந்திருந்தாள்.

இரண்டு பக்கம் கண்ணாடியால் சூழப்பட்ட மொத்தமே பத்து பேர் மட்டும் அமரக் கூடிய அறை தான் அவர்களின் அலுவலகம். அதில் பாதியை கிளையண்டுகளின் ஆவணங்கள் அடங்கிய பீரோக்கள் அடைத்துக் கொள்ள இன்னும் பாதியை நீளமேஜையும் அதன் இரு பக்கமும் கிடந்த நாற்காலிகளும் அடைத்துக் கொண்டன.

“குட் மானிங் சார்” என்றபடி உள்ளே நுழைந்தவளை எரிச்சலுடன் ஏறிட்டார் அக்கவுண்டண்ட் சுந்தரம். கண்களை தழைத்துக் கொண்டவள் மேஜையின் மறுபக்கம் அமர்ந்திருந்தவரைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

அவரிடம் “குட் மானிங் சார்” என்றாள் புன்சிரிப்புடன்.

“வாங்க மேடம்! எப்பிடி வந்தீங்க நீங்க? சாலைகுமாரசாமி கோவில் வாசல்ல க்ரவுட் ஓவரா இருந்துச்சே” என்றபடி அங்கே அமர்ந்திருந்தவர் சரவணன். அவரும் ஒரு அக்கவுண்டண்ட் தான். அவரது கிளையண்டுகளுக்கான டி.டி.எஸ் ரிட்டன் பதிவேற்றத்திற்கு இந்த அலுவலத்திற்கு தான் வருவார்.

கூடவே அவரும் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான்! அவரது மனைவிக்கும் வைதேகிக்கும் இடையே நல்ல நட்பு. அக்கவுண்டண்ட் சுந்தரத்தின் முசுட்டுக்குணத்தை அவர் நன்கு அறிவார். கூடவே வைதேகியின் வேலை செய்யும் பாங்கு, பொறுப்பையும் அறிந்திருந்தவர் வைதேகியிடம் நட்பாகவே உரையாடுவார்.

அவளும் எவ்வித தடையுமின்றி அவரிடம் பேசுவாள்.

“கூட்டத்துல புகுந்து வந்தேன் சரவணன் சார்... அதுவும் வெடி போட்ட கேப்ல கூட்டம் விலகி நின்னதால தான் வர முடிஞ்சுது”

“அப்பிடியும் நான் சொன்ன நேரத்துக்கு வரலையே.. எட்டு மணிக்கு வரச் சொன்னா நீ பத்து மணிக்கு வந்து நிக்குற... சார் கொஞ்சம் டி.டி.எஸ் ரிட்டன் கொண்டு வந்திருக்கார்... ஃபைல் மெயில்ல அனுப்பிருக்காராம்... டவுன்லோட் பண்ணிட்டு சீக்கிரமா அப்லோட் பண்ணி ரிசிப்ட் குடுத்து அனுப்பும்மா” என்று குறுக்கே புகுந்து மட்டம் தட்டுதலோடு கட்டளையிட்டார் சுந்தரன்.

வைதேகியின் முகம் சுருங்கிப் போனது. எப்படியும் தன்னால் தானே தாமதமாயிற்று! வேகமாக தனது கணினியை உயிர்ப்பித்தவள் மடமடவென மின்னஞ்சலில் சரவணன் அனுப்பியிருந்தவற்றை பதிவிறக்கம் செய்து கொண்டாள்.

அவர் கொண்டு வந்திருந்த டி.டி.எஸ் ரிட்டனுடன் அனுப்பியிருந்த ஃபைல்களைச் சரி பார்த்தவள் அதிவேகமாக என்.எஸ்.டி.எல் தளத்தில் பதிவேற்றம் செய்தாள்.

ரிசிப்டை சரவணனிடம் நீட்டினாள்.

“நாப்பத்து ரெண்டு ரூபா நாலு, நூத்து எழுபத்தெட்டு ரூபா ரெண்டு” என டி.டி.எஸ் பதிவுகளின் எண்ணிக்கைக்கேற்ற தொகையையும் கணக்கிட்டுக் கூற சரவணன் பணத்தை நீட்டினார்.

அப்போது தான் அந்நிகழ்வு நடந்தேறியது.

கணினி திரையில் என்.எஸ்.டி.எஸ் தளத்தில் இத்தனை நாட்கள் பதிவேற்றிய டி.டி.எஸ் விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் முகம் மாறியது.

“என்னம்மா மூனு நாளுக்கு முன்னாடி அப்லோட் பண்ணுன லாட்ல பிரச்சனை, அதுக்குப் பெனால்டி பே பண்ணுங்கனு ரிப்போர்ட் அனுப்பிருக்காங்க” என வெடித்தார் மனிதர்.

சரவணன் கிளம்ப எத்தனித்தவர் “என்ன சார் பிரச்சனை?” என்று வினவ வைதேகியோ திருதிருவென விழித்தபடி நின்றாள்.

“மூனு நாலுக்கு முன்னாடி இந்தியன் பேங்க் சமாதானபுரம் ப்ராஞ்ச்ல இருந்து டி.டி.எஸ் ஃபைல் பண்ணுனாங்க சார்... நாங்க இந்தக் காப்பிய ரிசிப்டோட சேர்த்து ஸ்கேன் பண்ணி ஜிப் ஃபோல்டரா என்.எஸ்.டி.எல் சைட்ல அப்லோட் பண்ணணும்... அப்பிடி பண்ணுன ஃபோல்டர்ல பிரச்சனைனு பெனால்டி போட்டிருக்காங்க”

வைதேகி மூன்று நாட்களுக்கு முந்தைய ஸ்கேன் ரிப்போர்ட்களை சோதனை செய்து பார்த்தவள் என்ன பிரச்சனை என்பதை புரிந்து கொண்டாள்.

“சார் அவங்க குடுத்த ஒரு ரிட்டன்ல மேனேஜர் சைன் பண்ணல... ஆனா ஹெட் ஆபிஸ்ல ரிசிப்ட் கேக்குறாங்கனு பியூன் சொன்னதால நீங்க தான் சைன் போடாத ரிட்டனை ஃபைல் பண்ணச் சொன்னீங்க... அவர் சைன் போட்ட இன்னொரு காப்பிய கொண்டு வர்ற வரைக்கும் பழைய காப்பிய ஸ்கேன் பண்ணி வைக்கச் சொன்னதும் நீங்க தான்... ஆனா அதை மட்டும் சைட்ல அப்லோட் பண்ண வேண்டாம்னு சொன்னீங்க... அதான் நான் பெண்டிங்னு மார்க் பண்ணி வச்சிருந்தேன்... நான் அதை அப்லோட் பண்ணல சார்”

சுந்தரத்தின் கணினியும் வைதேகியின் கணினியும் நெட்வொர்க்கில் இணைந்திருப்பதால் அவளது கணினியிலுள்ள கோப்புகளை அவர் பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும். அந்த மனிதர் தான் அவசர கதியில் மூன்று தினங்களுக்கு முன்னர் வைதேகி ‘பெண்டிங்’ என குறித்து வைத்திருந்த ஜிப் ஃபோல்டரை பதிவேற்றியிருந்தார்.

வைதேகி நடந்ததை கூறியதும் என் மீதா குற்றம் சாட்டுகிறாய் என வெகுண்டெழுந்து விட்டார் அவர்.

“நீ ஒழுங்கா அப்லோடிங் வேலைய செஞ்சிருந்தா நான் ஏன்மா பெண்டிங்னு போட்டத கவனிக்காம அப்லோட் பண்ணப் போறேன்? எல்லாம் உன்னால தான்... நேரத்துக்கு ஆபிஸ் வர்றதில்ல... வந்ததும் கம்ப்யூட்டர்ல நோண்டிட்டு மூனு மணி நேரத்துல லஞ்ச் சாப்பிட ஆரம்பிச்சிடுறது... அப்புறம் உண்ட மயக்கத்துல அரையும் குறையுமா எதையோ செஞ்சுட்டு என் தலையில எல்லா வேலையையும் கட்ட வேண்டியது... இந்த லெச்சணத்துல உனக்குச் சம்பளத்துல ஆயிரம் ரூவா அதிகமா வேற குடுக்கணுமா?”

காச்மூச்சென்று அம்மனிதர் கத்த ஆரம்பிக்க வைதேகிக்குக் கண்ணீரே வந்துவிட்டது. எப்போதும் கிளையண்டுகள் முன்னிலையில் மட்டம் தட்டினாலும் திட்டியதில்லை. அதுவும் இன்று அக்கவுண்டண்ட் சரவணன் இருக்கும் போது நடந்துவிட்டது.

செய்யாத தவறுக்கு இப்படி திட்டுகிறோமே என்றெல்லாம் யோசிக்காது வாய்க்கு வந்தபடி கத்தினார் அக்கவுண்டண்ட் சுந்தரம். சரவணன் அவரைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.

“சார் விடுங்க... அவங்க எப்பவும் ஒழுங்கா வேலை செய்யுறவங்க... பேங்க்ல சைண்ட் காப்பி குடுக்கலனு தானே பெண்டிங் வச்சிருக்காங்க... நீங்க கோவப்பட வேண்டியது அந்தப் பியூன் மேல தான்”

சுந்தரம் அதற்கு காது கொடுக்க வேண்டுமே!

“கிளையண்டை குறை சொன்னா தொழில் நடத்த முடியாது சார்... ஏற்கெனவே முன்னாடி வந்த மாதிரி எஸ்.பி.ஐ பேங்க்லாம் வர்றது இல்ல... இருக்குற பேங்க் கிளையண்டையும் இவளால இழக்கமுடியுமா?”

இப்போதும் தன் மீதே குற்றம் என்று இரக்கமின்றி மொழிந்தவருக்குப் பதிலடி கொடுக்க இயலாதவளாக கூனி குறுகி நின்றாள் வைதேகி.

“சார் இப்ப நல்ல எம்ப்ளாயிஸ் கிடைக்கிறது கஷ்டம்,.. தெரியாம செஞ்சுட்டாங்க... விட்டுடுங்க” என்று மீண்டும் சமாதானம் கூறும் படலத்தை ஆரம்பித்தார் சரவணன்.

“நல்ல எம்ப்ளாயிஸ்குலாம் பஞ்சமில்ல சார்... என் தலையெழுத்து இப்பிடிப்பட்ட எம்ப்ளாயிய கட்டி மேய்க்க வேண்டியதா இருக்கு... இவங்க இல்லனா காசை விட்டெறிஞ்சா ஆயிரம் காக்கா இந்த வேலைக்கு வரும்” என்றார் சுந்தரம் அலட்சியமாக.

அந்த வார்த்தையில் தான் வைதேகியின் சுயமரியாதை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது.

ரிட்டன் பதிவேற்றும் நாட்களைத் தவிர மற்ற தினங்களில் எல்லாம் அந்த வேலை, இந்த வேலை என சுந்தரம் வெளியே சென்றுவிட்டால் கூட வைதேகி அலுவலகத்தைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வாள். அதுவும் பண விசயத்தில் அவள் படு சுத்தம்!

இதெல்லாம் சுந்தரத்திற்கு தெரியாது என்றா எண்ணுகிறீர்கள்? அவரும் இவை அனைத்தையும் அறிவார்! ஆனால் வாய் விட்டுப் பாராட்ட மாட்டார். தன்னிடம் பணி புரிபவர்களை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைப்பதே சிறந்து; இல்லை என்றால் தலை மீது ஏறி அமர்ந்து விடுவார்கள் என்பது அவரது எண்ணம்!

வைதேகியால் அவரது வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தனது ஹேன்ட்பேக்கில் வைத்திருந்த அலுவலகச்சாவியை எடுத்து சுந்தரத்தின் முன்னே வைத்தவள்

“இனிமே நான் இங்க வேலைக்கு வர மாட்டேன்... இந்தாங்க சாவி” என்று கூற அந்த மனிதரின் முகத்தில் ஈயாடவில்லை.

மன்னிப்பு கேட்பாள் என்று எண்ணியிருந்தவருக்கு அவள் வேலையை விட்டுச் செல்லும் முடிவை எடுத்ததும் அதிர்ச்சி!

ஹேண்ட்பேக்கை மாட்டிக் கொண்ட வைதேகி “காசை விட்டெறிஞ்சா வர்ற ஆயிரம் காக்கால ஒரு காக்காவ வேலைக்கு வச்சுக்கோங்க... ஆனா அந்தக் காக்கா மேலயாச்சும் செய்யாத தப்புக்குப் பழி சுமத்தாதீங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்.

அந்த வணிக வளாகத்தை விட்டு வெளியேறியவள் நேரே போய் நின்ற இடம் அவள் கணவன் பணியாற்றும் சாந்தி ஸ்வீட் கடை தான்!

அவள் முகம் கலங்கியிருப்பதைக் கண்டதும் கவுண்டரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தவன் என்னவாயிற்று என விசாரிக்க வைதேகி நடந்ததை விம்மலுடன் கூறி முடித்தாள்.

உலகநாதன் அவளை ஆறுதல் படுத்தும் விதமாக “நீ வருத்தப்படாத வைதேகி... நம்ம செய்யுற வேலைக்குத் தான் முதலாளிங்க சம்பளம் தர்றாங்களே தவிர நம்மளோட சுயமரியாதைய அடகு வச்சிட்டு அடிமையா இருக்குறதுக்கு இல்ல... நீ வேலைய விட்டுட்டு வந்ததுல தப்பே இல்ல” என்றான் அவன்.

வைதேகி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். கணவன் தன்னைப் போலவே சிந்திக்கிறான் என்று மனம் நெகிழ்ந்தாலும் ஆதித்யாவின் பள்ளிக்கட்டணம் அவள் மனக்கண்ணில் வந்து மருட்டியது.

“ஆதி ஸ்கூல் ஃபீஸுக்கு என்ன பண்ணுறதுங்க?”

உலகநாதன் அவளது தோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தவன் “செலவை குறைச்சுக்கலாம் வைதேகி... இன்னும் கம்மியான வாடகைல வீடு பாத்து போயிடுவோம்... எனக்குப் பைக் வேண்டாம்... அப்ப பெட்ரோல் செலவு மிச்சமாகும்... நம்மளால சமாளிக்க முடியும்... நீ அதை நினைச்சு வருத்தப்படாத” என்றான்.

அவனுக்குமே இது எதிர்பாராத அதிர்ச்சி தான்! இருவரது சம்பளத்தில் தான் வீட்டின் செலவு சரியாக கழிகிறது. அதில் ஒன்று விடுபட்டால் கூட கஷ்டம் தான். ஆனால் அதற்காக வைதேகி செய்யாத தவறுக்கு யாரிடமும் தலை குனியத் தேவையில்லையே!

இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் பேசிக்கொண்டிருந்த போது “வைதேகிக்கா” என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே நின்று கொண்டிருந்தவள் சரவணனின் மனைவி கவிதா. அவரைக் கண்டதும் சினேகமாகப் புன்னகைத்தனர் உலகநாதனும் வைதேகியும்.

அவள் உலகநாதனிடம் “அரை கிலோ அல்வா வேணும் அண்ணா” என்க

“இதோ கொண்டு வர்றேம்மா” என்றபடி கடைக்குள் விரைந்தான்.

அவன் சென்றதும் வைதேகியின் கரத்தைப் பற்றியவள் “இப்ப தான் அவரு போன் பண்ணுனார்கா... உங்க ஆபிஸ்ல நடந்த எல்லாத்தையும் சொன்னார்... நீங்க இருக்குற நிலமையில இதை கேக்கலாமானு தெரியல... ஆனாலும் மனசு கேக்கல... தப்பா நினைச்சுக்காதீங்க” என்று பீடிகை போட்டாள்.

வைதேகியோ “எதுனாலும் கேளுங்கக்கா... நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன்” என்று உறுதியளிக்க

“உங்க கிட்ட ஏற்கெனவே சொல்லிருந்தேன்ல, இவர் நட்ஸ் ஹோல்சேல், ரீல்சேல் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணப் போறார்னு” என்று பாதியில் நிறுத்தினாள் கவிதா.

“ஆமா... சரவணன் சாரும் அதுக்கு டீலர் தேடுறதா சொன்னாங்க... டீலர் கிடைச்சிட்டாங்களா?”

“கிடைச்சிட்டாங்க... அவங்க கிட்ட இருந்து சரக்கும் இன்னும் ஒரு வாரத்துல வந்துடும்... பொருளை வைக்குறதுக்கு சின்னதா ஒரு இடம் பாத்திருக்கோம்... அதுலயே ஆபிஸும் இருக்குற மாதிரி அரேஞ்ச் பண்ணிட்டாரு”

“ரொம்ப சந்தோசம்கா... இந்த பிசினஸ்லயும் சாருக்கு ஏறுமுகம் தான்... ஏன்னா யாரையும் கடிஞ்சு பேசாத அவரோட குணம் அப்பிடி” என்று வாழ்த்தினாள் வைதேகி.

“யாரோட குணத்த பத்தி பேசுற வைதேகி?” என்றபடி அல்வா கவருடன் வந்த உலகநாதன் கவிதாவிடம் அதை நீட்ட அவளும் வாங்கிக் கொண்டாள்.

“எல்லாம் நம்ம சரவணன் சார் குணத்த பத்தி தான்... சார் புது பிசினஸை ஆரம்பிச்சிட்டாங்களாம்... அதை தான் அக்கா சொல்லிட்டிருந்தாங்க”

“ரொம்ப சந்தோசம்மா... நான் சாரை சாயங்காலம் பாக்குறப்ப வாழ்த்து சொல்லிடுறேன்” என்றான் உலகநாதன் மனநிறைவுடன்.

கவிதா பூரிப்பாய் தலையசைத்தவள் “அவர் இப்ப ஆபிசையும் பாத்துக்கிட்டு பிசினஸையும் பாக்குறது கஷ்டம்னு சொல்லுறார்... என்னால அவருக்கு ஹெல்பா அங்க வரமுடியாத நிலமை... அதான் ஒரு நல்ல ஸ்டாஃபா தேடிட்டிருந்தோம்... இன்னைக்குத் தான் ஸ்டாஃப் கிடைச்சாங்க” என்றாள்.

உலகநாதனும் வைதேகியும் புன்சிரிப்புடன் நிற்கையிலேயே வைதேகியின் கையைப் பற்றிய கவிதா

“நம்ம வைதேகி அக்காவ தான் எங்க புது பிசினஸை கவனிக்க நாங்க அப்பாயிண்ட் பண்ணிருக்கோம்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

வைதேகியும் உலகநாதனும் பேச வார்த்தை எழாமல் தவிக்கவும் தானே தொடர்ந்தாள் கவிதா.

“நீங்க ஒர்க்ல ரொம்ப டெடிகேசனா இருப்பீங்கனு அவர் அடிக்கடி சொல்லுவார்க்கா... இன்னைக்கு ஆபிஸ்ல உங்க ஓனர் நடந்துக்கிட்ட விதத்தை சொன்னவருக்கு மனசு ஆறலயாம்... அவரா உங்க கிட்ட கேக்குறதுக்குச் சங்கடப்பட்டுக்கிட்டு அஅங்க இருந்து வெளிய வந்ததும் எனக்குக் கால் பண்ணி உங்க கிட்ட என்னை கேக்க சொன்னார்... இப்ப சொல்லுங்க, எங்க ஆபிஸ்கு வேலைக்கு வர்றீங்களா?” என்று வினவ வைதேகிக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

மகனின் படிப்பு, வீட்டு வாடகை, கணவனின் வாகனத்திற்கான எரிபொருள் செலவு, இதர பிற செலவுகள் என வரிசை கட்டி நின்ற செலவீனங்கள் இவ்வளவு நேரம் பூதாகரமாய் தோற்றமளித்து மிரட்டியது! இப்போது அவை சூரியனைக் கண்டால் விலகும் பனி போல மெதுவாக விட்டது போன்ற பிரமை.

அவள் பேசாமல் நிற்கவும் “சம்பளத்த பத்தி யோசிக்காதீங்க அக்கா... பழைய ஆபிஸ் விட மூவாயிரம் ரூபா அதிகமா தான் குடுக்கணும்னு அவர் முடிவு பண்ணிருக்கார்... அவர் இல்லனாலும் அங்க வேலை நடக்கணும்... நியாயமான ஆள் வேலைய கவனிக்கணும்... அதுக்கு நீங்க தான் பொருத்தமானவங்கனு நினைக்கிறார்க்கா... அதோட உங்களுக்கு பாலபாக்கியா நகர், ஸ்ரீபுரத்துல ஆட்கள் பழக்கம் அதிகம்னு சொன்னார்... உங்களோட பேச்சுத்திறமையும் ஆபிஸை கவனிச்சிக்கிற விதமும் அவருக்குப் பிடிச்சிருந்ததால தான் கேக்க சொன்னார்... உலகண்ணா நீங்க என்ன சொல்லுறிங்க?” என்று உலகநாதனிடம் திரும்பினாள் கவிதா.

உலகநாதனுக்கு நன்றியுணர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. கடினப்பட்டு வார்த்தைகளைக் கோர்த்து உச்சரித்தான்.

“ரொம்ப நன்றிம்மா... ரெண்டு வருமானம் வந்தாலே வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கும்... அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் எப்பிடி சமாளிக்கப் போறோம்னு முழி பிதுங்கி நின்னோம்... தெய்வம் போல நீங்களும் சாரும் ஹெல்ப் பண்ணிருக்கீங்க”

“பெரிய வார்த்தைலாம் பேசாதீங்கண்ணா... வைதேகிக்காவோட நேர்மை, உழைப்புக்கு முன்னாடி இதுல்லாம் ஒன்னுமில்ல... திறமையான ஸ்டாஃப் கிடைச்சா யாருக்குக் கசக்கும் சொல்லுங்க... அதனால எங்களுக்கு நன்றிய அப்புறமா சொல்லிக்கலாம்... இப்ப ஸ்வீட் வாங்கிக்கோங்க... அக்காக்கு அல்வா தான் பிடிக்கும்னு நாங்க பேசுறப்ப சொல்லிருந்தாங்க... எங்க ஆபிஸ்ல வேலைக்குச் சேர்ந்ததுக்கான இனிப்பு இது”

கவிதா அல்வா பொட்டலத்தை நீட்டவும் வைதேகி மகிழ்ச்சி பொங்க வாங்கிக் கொண்டாள். உலகநாதனை முகம் விகசிக்க நோக்கியவள் “நான் சாரோட ஆபிசுக்கு வேலைக்குப் போகட்டுமாங்க?” என்று கேட்க

“தங்கச்சியே சொல்லிட்டாங்க... கூடவே அட்வான்சா ஸ்வீட்டும் குடுத்துட்டாங்க... இனிமே போகாதனு தடுத்தா கவிதாக்கு என் மேல கோவம் வந்துடும்” என்றான் உலகநாதன் பயந்தவனாக.

“கண்டிப்பா கோவப்படுவேன்ணா... நீங்க அனுப்பமாட்டேன்னு வேற சொல்லுவீங்களாக்கும்?” என பொய்யாய் முறைத்த கவிதா

“சரிண்ணா... நீங்க வேலைய பாருங்க... நான் அக்காவ வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன்” என்றவள் தனது ஸ்கூட்டி பெப்பில் வைதேகியை ஏற்றிக்கொண்டாள்.

அவள் அமரவும் ஸ்கூட்டி வேகமெடுத்து கிளம்ப, வந்த போது இருந்த கலக்கம் அகன்று உலகநாதனுக்குப் புன்னகையுடன் கையசைத்தாள் வைதேகி.

தங்கள் வாழ்வில் வந்த இடர் அகன்று இனி வரப் போகும் புதுவாய்ப்பான இனிய வசந்தத்தை வைதேகியுடன் ஏற்க தயாரானவனாய் மனநிறைவுடன் தனது வேலையைக் கவனிக்கச் சென்றான் உலகநாதன்.

இனிதே நிறைவுற்றது!

 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom