• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வத்ஸலா ராகவனின் "யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே"

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!”

எழுத்தாளர் வத்சலா ராகவன் அவர்களுடைய ‘யமுனை ஆற்றிலே, ஈர காற்றிலே' படித்த போது, என் மனதில் உதித்த எண்ணம் இது. கண்டிப்பாக இந்த கதையில் என் மனதை கவர்ந்த சில விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.


  • இக்கதை இறகை காட்டிலும் மிக மிக மென்மையான குடும்ப கதை; மெழுகை காட்டிலும் மனதை உருக்கும் மிருதுவான குணம் படைத்தவர்களை பற்றிய கதை.

  • தமிழ் மொழியில், பல நூற்றுக்கணக்கான உச்சரிப்புக்கள்(accent) உண்டு என்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பல கைத்தேர்ந்த எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட நடையில், முழ கதையையும் துல்லியமாக நகர்த்தும் வல்லமை உடையவர்கள். அதற்காகவே பல கதைகளை நான் ரசித்து படித்திருக்கிறேன். அப்படியொரு கதை தான் இதுவும். பிராமணர் குடும்பங்களில் அன்றாடம் சகஜமாக நிகழும் சம்பாஷனைகள் கதை முழுவதும் காணலாம்.

  • உரையாடல்களை தாண்டி, ஆங்காங்கே ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் அவர்களின் பழக்க வழக்கங்கள் கதைக்கு மெருகூட்டுகிறது. அதிகாலையில் வாசல் தெளித்து மாக்கோலமிடுதல், நெய்வேத்தியம், இலை போட்டு பரிமாறுதல், காயத்ரி மந்திர பாராயணம் போன்ற தினசரி அனுஷ்டானங்களை மிக அற்புதமாக கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். பிராமணர்கள் திருமண வைபோகத்தின் அத்தனை அம்சங்களையும் கதையில் படிக்கும் போது, நமக்கு நேரில் ஒரு திருமணத்தை கண்ட உணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

  • அதுவும் கோதை பரிமாறிய சாத்தமுது, உருளை கிழங்கு பொடிமாஸ் சுவையும் சரி, பச்சை பட்டுபுடவையில் காதில் ஜிமிக்கியுடன் அவள் உருவமும் சரி… கோதைப் பொண்னே என்று கோகுல் அழைக்கும் மென்மையான தோரணையும் சரி…இக்கதை படித்து முடித்து பல வாரங்களான பின்னும், நெஞ்சைவிட்டு நீங்காத பசுமையான நினைவாக இருக்கின்றது. அது தான் சின்ன சின்ன விஷயங்களில் கூட, வாசகர்களை வசீகரிக்கும், எழுத்தாளர் வத்சலா ராகவன் அவர்களுடைய தனிச்சிறப்பு.

  • இக்கதையில் வரும் அனைவருமே மிக மிக அருமையான மனம் படைத்தவர்கள் தான். எனினும், என் மனதை கவர்ந்த ஒருவர் என்று சொன்னால், அது முரளியின் அம்மா, யசோதா தான். ஒவ்வொரு பெண்ணும், இப்படியொரு மாமியார் தனக்கு வேண்டும் என்று பொறாமைப்படும் அளவிற்கு நற்குணத்தின் மொத்த உருவம் அவள். எந்த சூழ்நிலையிலும், நிதானம் தவறாது, மென்மையில் மென்மையாய் செயல்படும் விதம் அருமையோ அருமை.

  • மனிதர்கள் தடுமாறும் போது அந்த கண்ணன் வந்து கைத்தூக்கி விடும் இடங்கள் மெய்சிலிர்க்கும் தருணங்கள். என் வீட்டில் உள்ள கண்ணன் திருவுருவம் பார்க்கும் போதெல்லாம், எனக்கும் அவன் என்னிடம் பேசுவது போல உணர்வு.

  • மென்மையான குடும்ப கதைக்குள்ளே, சரவணன் என்னும் அதிரடி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து, ஒரு துப்பறியும் கதையும் பின்னிய விதம் மிக அருமை. அதுவும் பல முன்னறிவிப்பு குறிப்புகள் (foreshadowing tips) ஆங்காங்கே நுழைத்து, அதை நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத இடத்தில் அவற்றை திருப்பு முனைகளாக பயன்படுத்திய ஆசிரியரின் யுக்தி(Strategy)பிரமாதம்…பலே பேஷ் என்று தான் சொல்ல வேண்டும்.
பல Foreshadowing Tips இருக்கு வாசகர்களே. அவற்றை நான் சொல்ல மாட்டேன். நீங்களே படித்து கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்;);)

இந்த கதையை பற்றி கதையளக்க சொன்னால் பேசிக்கொண்டே இருப்பேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடத்தை மட்டும் சொல்லுகிறேன். ரெஜிஸ்டர் ஆஃபிஸில், கோதையின் கண்ணை பார்த்தே கோகுல் அவள் மன ஓட்டத்தை புரிந்து கொள்ளும் இடம்… வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. (Episode 15ல் படியுங்கள்…இல்லை இல்லை உணருங்கள்:love:)

வார்த்தைகளால் உணர்ச்சிகளை கிள்ளி, அதற்கு உயிர் கொடுக்க முடியாமா என்று கேட்டால், அது எழுத்தாளர் வத்சலா ராகவன் அவர்களால் மட்டுமே முடியும்…

ஒரு உண்மையை சொல்கிறேன் மக்களே! இவர் கதைகளை படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்; அதே சமயத்தில் பயமாகவும் இருக்கும். ஏனென்றால், இவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், புத்தகத்தை விட்டு வெளியேறி, நம் நினைவுகளில் கலந்து நம்மோடு நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும் பேராற்றல் படைத்தவர்கள் என்பது, நான் அனுபவத்தில் கண்ட உண்மை. அது தெரிந்தும், அவர் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்பேன்:)

“Must Read!” என்னும் பட்டியல் இருந்தால், மறக்காமல் இந்த கதையை சேர்த்துக் கொள்ளுங்கள் வாசகர்களே!

@Vathsala Raghavan Mam, இத்தனை சிறப்பான கதை கொடுத்ததற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. இருந்தும் மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன்… வேறு வார்த்தை தெரியாததனால்🙏🙏

இன்னும் நிறைய அற்புதமான மனிதர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

New Episodes Thread

Top Bottom