உரிமை யுத்தம்

Nithya Mariappan

✍️
Writer
உரிமை யுத்தம்

“அபி என்னோட லன்சை எடுத்து வச்சிட்டியா? அப்பிடியே சார்ஜர்ல கிடக்குற மொபைலையும் எடுத்து வச்சிடேன்... நான் இப்போ வந்துடுறேன்” என்றபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான் மகேஷ்.

சமையலறையில் காலை மதியம் என இரு வேளைக்கும் சமைத்து வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்த அபி என்ற அபிராமி உடனே தங்களது அறைக்குள் புகுந்து சார்ஜரில் கிடந்த கணவனின் மொபைலை எடுத்து அவன் அலுவலகம் கொண்டு செல்லும் பேக்கில் வைக்கும் போதே “ம்மா!” என்ற நிவியின் குரல் அவளை அழைத்தது.

மகளின் அழைப்பில் பூத்த புன்முறுவலுடன் அவளை அள்ளி அணைத்தவள் “நிவி குட்டி இப்போ தான் முழிச்சிங்களா? நம்ம ப்ரஷ் பண்ணுவோமா?” என்று கொஞ்சியபடி அவளைப் பல்துலக்க அழைத்துச் சென்றாள்.

இரண்டு வயது நிவிக்கு காலையில் எழுந்ததில் இருந்து இரவில் உறங்குவது வரை எதெற்கெடுத்தாலும் அபிராமி வேண்டும். அன்னையின்றி ஒரு நொடி கூட தனித்திருக்காத குழந்தை அவள்.

அவளைக் குளிப்பாட்டி உடைமாற்றுவதற்குள் மகேஷ் அலுவலகம் செல்லத் தயாராகி நின்றான்.

“அபி ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்து வைக்கிறீயா?” என்றபடி உணவுமேஜையில் அமர்ந்தவனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

“நான் கிராஃப்ட் ஐட்டம்ஸ் செய்யுறத கமர்ஷியலா பண்ணலாம்னு இருக்கேனு நேத்து நைட் சொன்னேனே... நீங்க எதுவும் சொல்லலயே மகேஷ்?”

நேற்றைய இரவு போல இப்போதும் அமைதியே அவனிடமிருந்து பதிலாக கிடைத்தது. அபிராமி போட்ட கணக்கோ வேறு! பெரும்பாலும் ஆழ்ந்து யோசிக்கும் சமயங்களை விட இம்மாதிரி பரபரப்பான சமயத்தில் அவள் எதையும் கேட்டால் ஒப்புக்கொள்வது மகேஷின் பழக்கம்.

பின்னர் ஒப்புக்கொண்டதற்காக அங்கலாய்த்தாலும் அபிராமியைத் தடுக்கமாட்டான் அவன்.

அந்த நம்பிக்கையில் தான் இப்போது வினவினாள். அவனது அமைதிக்கு என்ன அர்த்தம் என்று புரியாது அவள் விழித்த போதே மகேஷ் பேசத் துவங்கினான்.

“கிராஃப்ட் ஒர்க் பண்ணுறதுல உனக்கு இன்ட்ரெஸ்ட் அதிகம்னு எனக்கும் தெரியும் அபி... ஆனா ஒரு விசயத்தை யோசிச்சுப் பாரு... நிவி இன்னும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கல... அவளுக்கு ட்வென்டி ஃபோர் ஹவர்சும் அம்மா வேணும்... எனக்கோ நாள் முழுக்க ஸ்ட்ரெஸ்சா போற வேலை... ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் கியூட்டா சிரிச்சப்படியே நீ நீட்டுற காபி தான் எனக்கு ஸ்ட்ரெஸ்பஸ்டர்... நீ பாட்டுக்கு கிராஃப் ஒர்க்னு ஆரம்பிச்சிட்டனா நிவியோட கண்ணசைவை வச்சே அவளோட தேவைய புரிஞ்சுக்கிற அவ அம்மா காணாம போயிடுவா... என் கூட உன்னால டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது... வீ போத் நீட் யூ அபி... உனக்கு இங்க என்ன குறை? நீ சம்பாதிச்சே ஆகணும்னு என்ன அவசியம்? நான் உன்னை ராணி மாதிரி பாத்துப்பேன்டி... வீணா கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காத”

இது தான் எனது முடிவு என சொல்லாமல் சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டான் மகேஷ். அவன் சொன்ன எதுவும் பொய்யில்லை. அன்பான அரவணைப்பான கணவன் அவன். இது வரை அவள் கேட்ட எதற்கும் முகம் சுளித்ததில்லை. நிவி என்ற நிவேதா அவர்களின் அன்பான இல்லறத்தின் அடையாளம்.

ஆனால் இதையும் தாண்டி சில நாட்களாக அபிராமியினுள் ஒரு வெறுமை. காலையில் எழுவது, சமைப்பது, வீட்டை ஒழுங்குபடுத்துவது, கணவன் மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்வது என வாழ்க்கை இதிலேயே ஓடிவிடுமோ என்ற கேள்வி அவளுக்குள் அடிக்கடி எழுந்து கொண்டேயிருக்கிறது.

“ஓ மிசஸ் மகேஷ் நீங்க ஹோம் மேக்கர் தானா? டெய்லி ஆபிசுக்குப் போகணும், ஹையர் அபிஷியல் கிட்ட பேச்சு வாங்கணும், டார்கெட், டெட்லைன், ஒர்க் ஸ்ட்ரெஸ்னு எதுவும் கிடையாது... யூ ஆர் சோ லக்கி”

இம்மாதிரி வார்த்தைகள் சொல்லப்படுவதன் அர்த்தம் என்னவோ தெரியவில்லை. ஆனால் அவை வேறுவிதமாக அவளை யோசிக்க வைக்கும்.

என்னைப் போன்ற பெண்கள் இத்துணை சவால்களுக்கிடையே வாழ்க்கையைக் கடக்கின்றனர். ஆனால் நான் தான் தேங்கி நின்றுவிட்டேனோ?

சில நாட்களாக சுய அலசலில் ஈடுபட்டவளுக்குத் தானும் எதாவது செய்து தன்னை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. அதன் விளைவு கைவினைப்பொருட்கள் செய்வதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தை அடிப்படையாக வைத்து அதை தொழிலாகச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

மகேஷிடம் இத்தனை நாட்கள் இலைமறை காயாக வினவியும் பதில் கிடைக்கவில்லை. நேற்றைய இரவில் வெளிப்படையாக வினவியும் பலனில்லை. இதோ இப்போது அதெல்லாம் தேவையே இல்லையென்ற பதில் கிடைத்துவிட்டது.

அபிராமிக்கு எதுவும் புரியாத நிலை! என்ன செய்யவென்று புரியாமல் மகளுக்குச் சாப்பாட்டை ஊட்டிவிட்டவள் தானும் கடனே என்று சாப்பிட்டு முடித்தாள்.

அதன் பின்னர் வீட்டுவேலைகளில் தன்னை மூழ்கடித்துக்கொண்டவள் திடீரென அழைப்புமணி அடிக்கவும் யாரென்று பார்த்துவிட்டு கதவைத் திறந்தாள்.

“அனு” என்று உற்சாகத்துடன் அங்கே நின்ற மற்றொரு பெண்ணை அணைத்து வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

“என்னடி இத்தனை நாளா நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போயிடுச்சா?”

குறைபட்டபடி அவளை அமரச் சொன்னவள் மகள் உறங்குவதை கவனித்துவிட்டு தோழிக்கு பழச்சாறு எடுத்துவந்தாள்.

அதை வாங்கிக்கொண்டு அருந்தியபடியே பேச ஆரம்பித்தாள் அந்த அனு.

“ஒரு குட் நியூஸ் சொல்லணும்னு வந்தேன் அபி... நான் இத்தனை நாளா வீட்டுல வச்சு கேக், ப்ரெட் ஐட்டம்ஸ் செஞ்சு சேல் பண்ணுனேன்ல... இப்போ ஆர்டர்ஸ் கொஞ்சம் பெரிய அளவுல வருது அபி... சோ கிரண் தனியே ஷாப் ஓப்பன் பண்ணுனு சொல்லிட்டார்... புது ஷாப்போட வேலை எல்லாம் முடிஞ்சாச்சு... இன்னும் டூ டேய்ஸ்ல ஓப்பனிங் செரிமோனி இருக்குடி... நீயும் மகேஷும் நிவியோட கட்டாயம் வரணும்” என்றாள் அவள்.

அத்துடன் அபிராமியின் கைவினைப்பொருட்கள் செய்யும் தொழிலுக்கான முயற்சியைப் பற்றி கேட்க அவளோ நடந்த அனைத்தையும் ஒளிவுமறைவின்றி கூறிவிட்டாள்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்டவள் “ம்ம்... மகேஷோட பாயிண்ட்ஸ் தப்புனு சொல்லமுடியாது... ஆனா சரினும் ஆர்கியூ பண்ணமுடியாது... ஒரு ஒய்ஃபா நீ அவருக்கு வேணும்... ஒரு மதரா அவரோட பொண்ணுக்கு நீ வேணும்... ஆனா அபிராமியா இதுவரைக்கும் உனக்காக நீ என்ன செஞ்சிருக்க?” என்று வினவ அபிராமியால் பதிலளிக்க முடியவில்லை.

அவளது கரத்தை வாஞ்சையுடன் பற்றிக்கொண்ட அனு “நீ உன்னோட கனவுகளுக்காக அவங்கள கண்டுக்காம விட்டேனா அதுக்கு பேர் சுயநலம்... அதுவே அவங்களுக்காக உன்னை நீயே கண்டுக்காம விட்டேனா அதுக்கு பேர் சுய புறக்கணிப்பு... மேரேஜுக்கு அப்புறம் ஒரு பொண்ணு தனக்காக யோசிக்குறத மறந்துடுறா... அன்பு, தாய்மை, தியாகம்னு எத்தனையோ சர்க்கரைப்பூச்சு பூசி அவளோட சுயத்தை இழக்க வச்சிடும் இந்தச் சமூகம்... ஒரு கட்டத்துல நம்மளும் இது தான் வாழ்க்கைனு நம்பிட்டு வாழ ஆரம்பிச்சிடுறோம்... ஆனா வாழ்க்கையோட்டத்துல ஏதாவது ஒரு இடத்துல நின்னு திரும்பி பாத்தோம்னா நம்ம கால்தடம் கூட நமக்காக இருக்காது... ஏன்னா நம்ம நடந்து வந்தது நமக்காக இல்லையே அபி... கொஞ்சம் யோசி... மகேஷுக்காக, நிவிக்காகனு யோசிக்கறப்போ உனக்காகவும் கொஞ்சம் யோசி” என்றாள்.

அபிராமி குழப்பத்துடன் “ஆனா மகேஷ் ஒத்துக்கமாட்றாரே... அவர் திட்டி, அடிச்சு சொன்னா கூட கோபப்பட்டு வீராவேசமா கிளம்பலாம்... ஆனா அவர் தன்னோட எதிர்ப்பை அக்கறை, அன்புங்கிற வடிவத்துல காட்டுறப்போ என்னால ஒரு கட்டத்துக்கு மேல உறுதியா இருக்க முடியறதில்ல... எனக்கான ஒரு அடையாளத்த உருவாக்கிக்கணும்ங்கிற என்னோட கனவை நான் எப்பிடி அவருக்குப் புரியவைக்கிறதுனு தெரியல” என்றாள்.

“ம்ம்... கிரணும் ஆரம்பத்துல இப்பிடி யோசிச்சவர் தான்... நமக்கு இன்னொரு குழந்தை பிறந்துச்சுனா உங்க சம்பளம் மட்டும் வச்சு எப்பிடி ரெண்டு குழந்தைங்களுக்கும் ஸ்டாண்டர்டான எஜூகேசன், சேஃப்டியான பியூச்சரை குடுக்க முடியும்னு கேட்டேன்... குடும்ப பாரத்த உங்களை மட்டுமே சுமக்கவைக்கிறது எனக்கு கில்டியா இருக்குனு சொன்னேன்... அதோட நான் வெறும் பணத்துக்காக மட்டும் இத ஆரம்பிக்கல, இது என்னோட கனவுனு பிடிவாதமா சொன்னேன்... சில நேரங்கள்ல பிடிவாதமும் நமக்குத் தேவை அபி” என்றாள் அனு.

அனேக குடும்பங்களில் பெண்கள் தங்கள் கனவுகளுக்காக நடத்தும் உரிமை யுத்தத்தில் ஆரம்பத்திலேயே தோற்று விடுவது வாடிக்கை. ஏனெனில் அங்கே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுவது அன்பும் தாய்மையுமே!

இந்த இரண்டு ஆயுதங்களையும் தன் கைவசம் கொண்டு வருவதில் தான் ஒரு பெண்ணின் கனவு நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கியிருக்கிறது.

அதற்கான வழிமுறைகளைத் தான் அனு அபிராமிக்குப் போதிக்கத் துவங்கினாள்.

“நிவி ஸ்கூலுக்குப் போற வரைக்கும் நீ வீட்டுல வச்சே இந்த ஒர்க்சை பண்ணு... அவ விவரம் தெரிஞ்ச பொண்ணானதும் ஒர்க்கிங் ப்ளேசை சேஞ்ச் பண்ணு... உன்னோட வேலை நேரத்தை உன் குடும்பத்த பாதிக்காத மாதிரி டிசைன் பண்ணு... மகேஷ் வீட்டுக்கு வர்றதுக்கு செவன் ஓ கிளாக் ஆகுதுனா உன்னோட ஒர்க்கை நீ ஆறு மணிக்கே முடிச்சிடு... இது எல்லாத்துக்கும் மேல உன்னோட கனவுக்காக நீ குரல் எழுப்புனா தான் மத்தவங்க அது தீவிரமானதுனு நினைப்பாங்க... நீ ஜஸ்ட் அத ஆசைங்கிற லெவலுக்குச் சொன்னா அது நிராசையா மட்டும் தான் மாறும்... நான் உன்னை மகேஷ் கிட்ட சண்டை போட சொல்லல... உன்னோட நிலைப்பாட்டை வெறும் ஆசைனு சொல்லிக்காம அது உன்னோட கனவுனு அவருக்குப் புரியவைக்கச் சொல்லுறேன்”

நீண்டநேர உரையாடலுக்குப் பின்னர் அனுவும் கிளம்பிவிட்டாள். மாலையில் வீட்டிற்கு வந்த மகேஷிடம் மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் அபிராமி.

“சின்னக் குழந்தைக்குச் சொல்லுற மாதிரி சொன்னேனே அபி... உன்னோட இந்த ஆசை தேவையே இல்லாததுனு” சலிப்பான குரலில் சொன்னான் அவன்.

“ஆசை இல்ல மகேஷ்... இது என் கனவு... என் மேல அக்கறை இருக்குனு சொல்லுறீங்களே, என் கனவு மேல உங்களுக்கு அக்கறை இல்லையா?”

இம்முறை அபிராமியின் குரல் தடுமாற்றமின்றி அழுத்தத்துடன் ஒலித்தது. இது அவளது கனவுக்கான உரிமை யுத்தம்! இதில் அவளுக்காக அவள் மட்டுமே குரல் கொடுக்க முடியுமென்பதை அபிராமி புரிந்துகொண்டாள். இந்த உரிமை யுத்தத்தில் அவளது நிலைப்பாட்டை விளக்கி அவளுடைய அடையாளத்தை அபிராமி என்றாவது ஒரு நாள் உருவாக்குவாள்!

************

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

மகேஷ் அவளோட கனவுக்கு ஒத்துக்கிட்டா மாதிரி ஏன் கதைய முடிக்கலனு நீங்க கேக்கலாம்... ஃபேரி டேல் மாதிரி ஹேப்பி எண்டிங் வசு முடிக்கிறதுக்கு இது நாவல் இல்ல மக்களே! இது சிறுகதை! சிறுகதையோட சிறப்பம்சம் நிதர்சனத்தை முகத்துல அறையுற மாதிரி சொல்லுறது தான்... எத்தனை வீடுகள்ல குடும்பத்தலைவிகளோட கனவுகள் நிறைவேற அவங்களோட குடும்பத்தினர் ஒத்துழைக்கிறாங்கனு நீங்களே சொல்லுங்க... வேற ஃபீல்ட் எதுவும் வேண்டாம்... எழுத்தாளர்களையே எடுத்துப்போம்... ஒரு பெண் எழுத்தாளருக்கு எத்தனை சவால்கள், தடைகள் வரும்னு நான் என் தோழிகளை வச்சே பாத்திருக்கேன்... கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்லுற குடும்பங்கள், குழந்தைய பாத்துகிட்டு வீட்லயே இருனு சொல்லுற குடும்பங்கள் தமிழ்நாட்டில் ஏராளம்... அவங்களை ஈசியா சம்மதிக்கவைக்க முடியாது.... அதனால இத அபிராமியோட முயற்சிங்கிற மாதிரி முடிச்சிட்டேன்... நாளைக்கு வேற ஒரு கதையோட உங்களை மீட் பண்ணுறேன்.

நன்றி

நித்யா மாரியப்பன்​
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஓம் சாயிராம்.
Sorry for posting it late.
படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... ☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்த சொல்லுங்க... ☺️☺️☺️

New Episodes Thread

New Comments Posts

Top Bottom