• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உண்டியல்

Nithya Mariappan

✍️
Writer
உண்டியல்

“இப்போ உங்கப்பா அப்பிடி யார் கூட பேசணுமாம்? இருக்குற செலவுல மாசாமாசம் இவருக்கு வேற தனியா போனுக்கு ரீசார்ஜ் பண்ணணுமா?”

நொடித்துக்கொண்ட மருமகள் காயத்ரியின் குரல் மகனின் அறையிலிருந்து கேட்கவும் வழக்கம் போல மனம் தளர்ந்து தனது சாய்வுநாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார் மகாதேவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அரசாங்கம் தரும் ஓய்வூதியம் மற்றும் பிக்சட் டெபாசிட் வட்டியில் காலம் தள்ளும் வயோதிகர்.

தனது வங்கிக்கணக்கு, ஓய்வூதியம் என அனைத்தையும் இளையமகன் ஷியாமின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு மூன்று வேளை சாப்பாடு மட்டும் போதுமென்று வாழ்ந்து வரும் மனிதர்.

அவருக்கு என தனியாய் எந்தச் செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்தை இளையமகனுக்கு அவர் உருவாக்கவில்லை, மூத்தமகனின் வீட்டில் தங்கியிருக்கும் மனைவிக்குப் பேசுவதற்காக மொபைலை ரீசார்ஜ் செய்வதை தவிர்த்து.

சாருமதியும் மகாதேவனுக்கு ஏற்ற மனைவி. மூத்தமகன் ராம் என்றால் கொள்ளைப்பிரியம் அவருக்கு. மூத்தமருமகளும் குணத்தில் தங்கம் தான். தங்களுடனே வந்துவிடும்படி மகாதேவனையும் அழைத்தவளிடம் அவர் தான் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இளையமகனுக்கு நல்ல வேலை. வாடகைக்கு அவசியமின்றி நிறுவன குவாட்டர்சில் வாசம். ஆனால் ராமிற்கு அப்படி இல்லை. கன்யாகுமரி பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவனுக்கு வரும் ஊதியம் அவனது குடும்பத்தை நடத்தவே சரியாக இருக்கும்.

அது போக மகாதேவன் ஓய்வு பெற்ற சமயத்திலேயே தனது வைப்புநிதியைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இரு மகன்களுக்கும் சரிசமமாகப் பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டார்.

தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் மீது வைத்திருந்த அசையா நம்பிக்கையினால் அவர் செய்த காரியம் அது. அதன் பின்னர் ஷியாமுடன் அவரும் சாருமதியும் தங்கிவிட்டனர். ஷியாமின் மகன் சஞ்சீவிற்கு தாத்தா பாட்டி என்றால் உயிர்.

முதலில் நன்றாக கவனித்துக்கொண்ட காயத்ரி நாட்கள் கடக்க கடக்க மாமனார் மாமியாரைத் தங்கள் தலை மீது சுமத்தப்பட்ட சுமையாகப் பாவிக்க ஆரம்பித்தாள். சின்ன சின்ன முணுமுணுப்புகளை பேரன் மீது கொண்ட பாசம், மகனின் எதிர்காலம் போன்ற காரணங்களுக்காக சாருமதியும் மகாதேவனும் கடந்து போக பழகிக்கொண்டனர்.

காயத்ரிக்கோ இருவரில் ஒருவருக்கு உடல்நலமில்லை என்றால் தானல்லவா பணிவிடை பார்க்க வேண்டும் என்ற எரிச்சல். ஆனால் மாமனாரின் ஓய்வூதியப்பணம் அவள் வாயைக் கட்டிப்போட்டிருந்தது.

அப்படி இருக்க ராமின் மகன் கௌஷிக் என்றால் சாருமதிக்கு கொள்ளைப்பிரியம். அவனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் உடல்நலமின்றி போனதில் ராமும் அவன் மனைவி சங்கீதாவும் ஓய்ந்து போயினர்.

அந்நேரத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்ள பேரனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சாக்கு சொல்லிவிட்டு கணவருடன் சாருமதி கன்யாகுமரிக்குச் சென்றுவிட்டார்.

மகாதேவனுக்கு மகனின் குடும்பநிலை நன்றாகவே தெரியும். எனவே அவனுடன் தங்கியிருந்து பாரத்தை ஏற்ற அவர் விரும்பவில்லை. அதே நேரம் பாட்டி பாட்டி என்று ஏங்கும் கௌஷிக்கையும் ஏமாற்ற விரும்பாதவர் “நீ கொஞ்சநாள் இங்க இருந்து கௌஷிக்கையும் மருமகளையும் பாத்துக்கோ சாரு... நான் ஷியாம் வீட்டுக்குப் போறேன்” என்று சொல்லிவிட்டார்.

“அத்தை கூட நீங்களும் இங்கயே தங்கிடுங்க மாமா” என்று சங்கீதா அன்பாக வேண்ட

“சஞ்சீவ் என் கண்ணுக்குள்ளவே நிக்குறான் கீதாம்மா... குழந்தை பாவம்ல” என்று சொன்ன கையுடன் கிளம்பிவிட்டார் மகாதேவன்.

இதோ மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. டைபாய்டு ஜூரத்திலிருந்து கௌஷிக் மீண்டுவிட்டான். உடல்நலமும் தேறிவிட்டது அவனுக்கு. ஆனால் அன்பாய் தாங்கும் மூத்தமருமகளையும் மகனையும் விட்டு எதெற்கெடுத்தாலும் முகம் சுருக்கும் இளையமருமகளிடம் வருவதற்கு சாருமதிக்குப் பிரியமில்லை.

அவரது கணவரும் மனைவியின் சந்தோசத்துக்காக மூத்த மகனின் இல்லத்திலேயே அவள் தங்கி கொள்ள அனுமதித்துவிட்டார். ஷியாமும், காயத்ரியும் எப்படியோ ஒரு ஆளுக்கு உண்டான செலவு குறைந்தது என நிம்மதியுற்றனர்.

மாதம் ஒரு முறை மனைவியையும் மூத்த மகனின் குடும்பத்தையும் பார்க்கச் செல்வதும், மொபைலில் மனைவியிடம் பேச ரீசார்ஜ் செய்து கொள்வதும் தான் மகாதேவனுக்கு இருக்கும் செலவுகள். சமீபத்தில் அதற்கும் காயத்ரி முகம் திருப்பவே அவர் நொந்து போய்விட்டார்.

வயோதிகத்தில் பிள்ளைகளுடன் இருந்தால் மனநிம்மதி கிட்டுமென நம்பி அனைத்தையும் அவர்கள் வசம் ஒப்படைத்த அந்தப் பெரியவருக்கு அத்தியாவசிய செலவுகளை கூட அனாவசியம் என உணரவைத்தனர் அவரது இளையமகனும் மருமகளும்.

இதோ இப்போது ரீசார்ஜ் செய்ய என்ன அவசியம் என்று அவள் கத்துவதைக் கேட்டவருக்கு அவரை அறியாது மூடிய கண்ணிமைகளின் வழியே கண்ணீர் வழிந்தது.

சென்ற முறை ஃபார்ம் 15Hல் கையெழுத்திட வங்கிக்குச் சென்ற போது சந்தித்த அவரது நண்பரின் மகன் அருளானந்தத்தின் நினைவு வந்தது.

“மாமா என் ஷேர் புரோக்கிங் கன்சர்ன்ல முதல்ல ஷேர் வாங்கி எனக்கு தொழிலை ஆரம்பிச்சுக் குடுத்த தெய்வம் நீங்க... இப்போ என் கிட்ட நாலு பேர் ஒர்க் பண்ணுறாங்க... அதோட நீங்க வாங்குன கம்பெனியோட ஷேர் அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஏறுமுகம் தான் போங்க... எப்பிடியும் உங்களுக்கு டிவிடெண்டாவே பெரிய அமவுண்ட் வந்திருக்குமே”

அவருக்கு அச்செய்தி வெறும் தகவலே! ஏனெனில் நண்பனின் மகன் தொழில் ஆரம்பிக்கிறான் என்று ஆர்வக்கோளாறில் ஆயிரம் பங்குகளை வாங்கியவர் அத்துடன் அதை மறந்தும் போனார். ஏதோ நன்றாக தொழில் செய்தால் சந்தோசம் தான் என்று அவனை வாழ்த்தியவரை கிளர்க் அழைத்தார்.

“சார் இந்த வருசம் உங்களுக்கு டிவிடெண்ட் கொஞ்சம் அதிகமா வந்திருக்கு.. எதுக்கும் ஆடிட்டரை பாத்து இன்கம்டாக்ஸ் ரிட்டன்ல அதை கோட் பண்ணி ஃபைல் பண்ணிடுங்க... இல்லனா அதுக்கும் நோட்டிஷ் அனுப்பிடுவாங்க” என்றார் அவர்.

வங்கியில் நீண்டநாள் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் என்ற எண்ணத்தில் அக்கறையுடன் கூறினார் அவர்.

மகாதேவனுக்கோ மனவேதனை. அவரது கணக்கில் ஏறிய பணம் குறித்து யாரோ ஒரு அருளானந்தமும், கிளர்க்கும் அவரிடம் தகவல் கூற அவரது வங்கிக்கணக்கு, நிரந்தரவைப்பு நிதி, வருமானவரி விவரம் என அனைத்தையும் கவனிக்கும் இளையமகனும் மருமகளும் இது குறித்து மூச்சு கூட விடவில்லையே என்ற வருத்தம் அவருக்கு.

அதையெல்லாம் பெரிது படுத்தி பேசும் எண்ணம் அவருக்கு இல்லை. இரு பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருந்து அவரது கடமையை நிறைவேற்றி விட்டார். இனி பெற்ற மகனிடம் கணக்கு கேட்பது அற்பத்தனம் என்றி எண்ணி அதை மறந்துவிட்டார். ஆனால் மருமகளின் இன்றைய பேச்சு அதை நினைவூட்டிவிட்டது.

“தாத்தா”

அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துவிட்டு பார்த்தவரின் எதிரே நின்றிருந்தான் அவரது பேரன் சஞ்சீவ். அவன் கையில் அவர் என்றோ ஒரு நாள் கொடுத்திருந்த இளம் ரோஜாவண்ண பன்றி வடிவ உண்டியல், அவனது பிக்கி பேங்க்.

“என்னடா கண்ணா?” என்றவரிடம் அந்த உண்டியலை நீட்டியவன் “இதுல நிறைய காசு இருக்கு தாத்தா... நீ தானே மனி சேவ் பண்ணுறது குட் ஹேபிட்னு சொன்ன... நான் ரொம்ப நாளா சேர்த்து வச்சிருக்கேன்... இதுல உள்ள காசை வச்சு ரீசார்ஜ் பண்ணிட்டு பாட்டி கிட்ட பேசு தாத்தா” என்றான் வெள்ளையுள்ளத்துடன்.

மகாதேவனுக்கு அதைக் கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது. அவனது கன்னத்தை வருடி முத்தமிட்டவர் “இல்லடா சஞ்சு... தாத்தாக்கு அப்பா ரீசார்ஜ் பண்ணிடுவான்டா” என்றார் மென்மையாக.

“அவர் தான் த்ரீ டேய்ஸா ரீசார்ஜ் பண்ணவேல்லயே தாத்தா... அம்மாவும் கத்துறாங்க பாரு... நீ இத வச்சு ரீசார்ஜ் பண்ணு தாத்தா” என்று அவன் அடம்பிடித்தான்.

மகாதேவன் மீண்டும் மீண்டும் மறுக்க பன்றி வடிவ உண்டியலின் அடிப்பாகத்தை திறந்தவன் அதிலிருந்து சில்லறை நாணயங்கள் கொட்டவும் அவற்றை சேகரித்தான்.

“டூ ஹண்ட்ரெட் அண்ட் தேர்ட்டி ருபீஸ் இருக்கு தாத்தா... இதுல பாதி உனக்கு, பாதி எனக்கு” என்று சொன்னபடி சரிபாதியாக பங்கு வைத்தவனின் உண்டியல் எழுப்பிய சத்தம் கேட்டு ஓடிவந்த காயத்ரியும் ஷியாமும் அவனது உண்டியலைப் பார்த்துவிட்டுக் குழம்பி நின்றனர்.

“சஞ்சு ஏன் பிக்கி பேங்கை திறந்த?” அதட்டலுடன் கேட்டாள் காயத்ரி.

“தாத்தாவுக்கு ரீசார்ஜ் பண்ணுறதுக்கு” அவள் முகம் பாராது உரைத்தபடி சில்லறை நாணயங்களை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்ட அந்த ஆறுவயது பாலகனின் பதிலில் செருப்பால் அடிவாங்கியதைப் போல உணர்ந்தான் ஷியாம். காயத்ரியும் அவ்வாறே!

மகாதேவனோ அவர்களிடம் பேச முயலாதவராக தன் கையைப் பிடித்து இழுக்கும் பேரனுடன் வெளியே கிளம்பிவிட்டார்.

சஞ்சீவ் பஜாரில் இருக்கும் ரீசார்ஜ் செய்யும் கடையில் அந்தச் சில்லறை நாணயங்களை வைத்தவன் “அங்கிள் எங்க தாத்தாவுக்கு ரீசார்ஜ் பண்ணுங்க” என்று சொல்லவும் கடைக்காரர் சிரித்துவிட்டு

“என்ன நெட்வொர்க் தம்பி?” என்று வினவியபடியே அவன் சொன்ன எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டார்.

“தேங்க்யூ அங்கிள்” என்று விடைபெற்று அவரது கையைப் பிடித்த பேரன் அவர் கண்ணுக்குப் பெரிய மனிதன் போல தோன்றினான்.

நடக்கும் போது “தாத்தா நீயும் பிக்கி பேங்க் வாங்கிக்கோ... என்னை போல காசு சேர்த்து வை... அப்புறம் நீ உன் இஷ்டப்படி ரீசார்ஜ் பண்ணிக்கலாம்... கௌஷி அண்ணாவ பாக்க போகலாம்... பாட்டி இங்க வந்ததுக்கு அப்புறம் நீயே பங்கஜ கஸ்தூரி வாங்கி குடுக்கலாம்” என்று அறிவுரை சொன்ன சஞ்சீவ்வின் பேச்சில் இருந்த நியாயம் இப்போது தான் மகாதேவனுக்கு புரிபட்டது.

எல்லாம் இருந்தும் மகன் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான பாசமும், அவனைச் சார்ந்திருந்ததுமே அவரது இன்றைய கதிக்குக் காரணம் என்பதை புரிந்துகொண்டார்.

பேரனுடன் வீட்டுக்கு வந்தவர் மகன் அலுவலகம் சென்றிருப்பதை கவனித்துவிட்டு காயத்ரியிடம் வந்தார்.

“என் பேங்க் பாஸ் புக், பான் கார்ட், ஏடிஎம் கார்ட் மூனையும் கொஞ்சம் குடும்மா”

காயத்ரியின் முகத்தில் பதற்றத்தின் ரேகை. இத்தனை நாட்கள் இல்லாது இப்போது திடீரென ஏன் வினவுகிறார் இம்மனிதர் என்ற பயம்!

“அது மாமா... எல்லாமே உங்க பையனுக்குத் தான் தெரியும்”

“சரிம்மா... நான் அவன் ரூம்லயே போய் பாத்துக்கிறேன்” என்று சொல்லி அவளை இன்னும் அதிரவைத்தார் மகாதேவன்.

கொடுக்கவில்லை என்றால் விடமாட்டார் என்ற நிலையில் அவரது வங்கிக்கணக்கு புத்தகம், வைப்புநிதி விவரம், வருமானவரி விவரம் அடங்கிய கோப்பு, பான் கார்ட், ஏடிஎம் கார்ட் என அனைத்தையும் அவர் வசம் ஒப்படைத்தாள் காயத்ரி.

“எதுக்கு மாமா திடீர்னு கேக்கீங்க?” குரலில் தான் எத்துணை பவ்வியம், எவ்வளவு மரியாதை!

அதை கேட்ட மகாதேவனின் இதழில் சிரிப்பு அரும்பியது.

“ஆடிட்டர் கிட்ட குடுக்க தான்மா... ஷியாம் இது வரைக்கும் யார் கிட்ட ஃபைல் பண்ணுனான்னு தெரியல... போன வருசம் எனக்கு ஷேர்ல இருந்து டிவிடெண்ட் வந்திருக்கு... அதை ரிட்டன்ல காமிச்சாச்சானு செக் பண்ணனும்... இந்த வருசமும் பெரிய அமவுண்ட் வந்திருக்குதாம்... ரிட்டன் சரியா ஃபைல் பண்ணலனா நோட்டிஷ் அனுப்பிருவாங்கனு பேங்க் கிளர்க் சொன்னாரு” என்று சொன்னவர் தனது அறைக்குள் முடங்கி கொண்டார்.

மாலையில் வீடு திரும்பிய ஷியாமோ காயத்ரியை விட ஆயிரம் மடங்கு பவ்வியத்துடன் பேசினான். தானே ஆடிட்டரிடம் சென்று ரிட்டனை திருத்துவதாக வாக்குறுதி கொடுத்தான்.

“எல்லாத்தயும் நான் பாத்துக்கிறேன்... நீ டயர்டா இருப்ப... போய் ரெஸ்ட் எடு” ஒரே வார்த்தையில் அவனையும் தூர நிறுத்திவிட்டார் பெரியவர்.

அதன் பின் மூன்று நாட்கள் அமைதியில் கழிந்தது. நான்காம் நாள் ராமும் சங்கீதாவும் வருகை தந்தனர், மகாதேவனை தங்களுடன் அழைத்து செல்கிறோம் என்ற செய்தியுடன்.

உடனே காயத்ரிக்கு புரிந்துவிட்டது. இனி மாமனாரின் ஓய்வூதியம், வட்டிப்பணம், டிவிடெண்ட் என எதுவும் அவர்களுக்கு இல்லை. சென்ற வருடத்தில் வந்த டிவிடெண்டில் வாங்கிய அவர்கள் அறையின் ஃப்ளாஷ்மா டிவி அவளைப் பார்த்து சிரித்தது.

“அது எப்பிடி திடுதிடுப்புனு நீங்க கூப்பிட்டதும் அனுப்பமுடியும்கா? மாமாக்கு சஞ்சுனா உயிர்... அவனைப் பாக்காம அவரால இருக்கவே முடியாது” என்று மகனைக் காட்டி தடுக்க முயன்றாள்.

ஆனால் அதை அவளின் மகனே உடைத்தான்.

“நான் தாத்தா கூட வீடியோ கால்ல பேசிப்பேன்மா”

இது எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் அற்பத்தனம் மகாதேவனுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற பயத்தில் ஷியாம் பேசவே இல்லை. சும்மாவே ராமின் முன்னே அவன் வாய் திறக்க யோசிப்பான்.

இப்போது ஏதாவது பேசி தந்தையின் பணத்தில் தனக்கும் சரி பாதி உரிமை உள்ளது என்று ராம் சொல்லிவிட்டால் உள்ளதும் போய்விடும் என்று அமைதி காத்தான்.

இறுதியாக சங்கீதா வாய் திறந்தாள்.

“இங்க பாருங்க தம்பி, மாமா ஒன்னும் எங்க கூட தங்குறதுக்கு வரல... முஞ்சிறை பக்கத்துல ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் இருக்கு... அங்க தான் அத்தையும் மாமாவும் இனிமே இருக்க போறாங்க... அதுக்குப் பணம் கட்டியாச்சு... இப்போ எங்களோட வந்து ஒரு வாரம் தங்கிட்டு அங்க போயிடுவாங்க”

இதை கேட்டதும் ஷியாமும் காயத்ரியும் அதிர்ச்சியுடன் மகாதேவனை ஏறிட அவரோ தனது பேரனை வாஞ்சையுடன் பார்த்தபடி பேச ஆரம்பித்தார்.

“இதுக்கு மேல உங்க யாருக்கும் பாரமா இருக்க நானும் சாருவும் விரும்பல... எனக்கு வர்ற பென்சன், ஃபிக்சட் டெப்பாசிட் இன்ட்ரெஸ்ட் எங்க ரெண்டு பேருக்கும் போதும்... இந்த வயசான காலத்துல அவ ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் கிடந்து ஏன் அல்லாடணும்? அதான் ரெண்டு பேருமே சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம்... நீங்க எப்போ வேணாலும் எங்க கூட பேசலாம்... விசேசம்னா நீங்க எல்லாரும் எங்களை வந்து பாத்துக்கலாம்” என்றவர் அப்போது கூட உங்களை நாங்கள் பார்க்க வருவோமென சொல்லவில்லை.

அதற்கு மேல் அவரை எதுவும் சொல்ல வழியின்றி தவித்துப் போயினர் காயத்ரியும் ஷியாமும். மாலையில் ராமும் சங்கீதாவும் மகாதேவனுடன் கிளம்பத் தயாராயினர்.

மருமகளிடம் எதையும் கூறாத மகாதேவன் ஷியாமையும் சஞ்சீவையும் அழைத்தார்.

“சஞ்சு கண்ணா அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளையா இருக்கணும்... உன்னோட பிக்கி பேங்க்ல காசு சேக்குறத எப்போவும் நிறுத்திடாத” என்றவர் நூறு ரூபாய் தாளை அவனிடம் நீட்டி உண்டியலில் போடச் சொல்ல அவன் ஓடி மறைந்தான்.

ஷியாம் மட்டும் நின்றிருக்க அவனது தோளைத் தட்டிக்கொடுத்தவர் “உன் பையன் புத்திசாலிடா... என்னைக்கோ நான் சில்லறைய குடுத்து சேத்து வைனு சொன்னதை பிடிச்சிக்கிட்டு இன்னமும் அதை விடாம ஃபாலோ பண்ணுறான்... அதோட எனக்கு ஒரு அட்வைசும் குடுத்தான்... தாத்தா நீயும் பிக்கி பேங்க்ல சேத்து வச்சிருந்தா ரீசார்ஜ் பண்ணுறதுக்கு, கௌஷி அண்ணாவ பாக்கப் போறதுக்கு, பாட்டிக்கு பங்கஜ கஸ்தூரி வாங்குறதுக்கெல்லாம் அப்பா கிட்ட காசு கேக்க வேண்டாம்லனு... ஆனா, அவனோட தாத்தா எல்லாத்தயும் சேத்து வச்சும் பயன்படுத்த முடியாத, பாசம் கண்ணை மறைச்ச முட்டாள்னு அவனுக்குத் தெரியாதுல்ல...

சரி அதை விடு... இனியாச்சும் சம்பாதிச்சத வருங்காலத்துக்குனு சேத்து வை... இதே இளமையோட எப்போவும் இருக்க முடியாது... உனக்கும் வயசாகும்... அப்போ நீ உன்னோட செலவுக்கு உன் பையனை எதிர்பாத்து நிக்குற நிலை வரக்கூடாது... ஏன்னா எனக்குக் கிடைச்ச பேரன் தங்கமானவன், தாத்தாவுக்கு ஒன்னுனு வந்ததும் உண்டியலை உடைச்சு காசை நீட்டுனான்... கூடவே நான் பண்ணுன தப்பை எனக்குப் புரியவச்சான்... உன் பேரன் எப்பிடிப்பட்டவனா இருப்பான்னு தெரியாதுல்ல ஷியாம்” என்றார் நிதானமாக.

அதன் பின்னர் மூவரும் கிளம்பிச் செல்ல சஞ்சீவ் அவனது உண்டியலுடன் மகாதேவனுக்கு டாட்டா காட்டினான். அவரும் கையசைத்து விடைபெற அவர்களின் கார் மெல்ல மறைவதைப் பார்த்துவிட்டு திரும்பிய ஷியாமின் பார்வையில் சஞ்சீவும், அவன் கையிலிருந்த உண்டியலும் பட்டது.

இனி அந்த உண்டியலைக் காணும் போதெல்லாம் மகாதேவனின் பேச்சும் அவனது வருங்காலமும் மட்டுமே ஷியாமின் நினைவில் வரும்!
**********​
 

Sridevis

Active member
Member
மிக அருமை
தாயும் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தான்
பேரன் மகாதேவன்கண்ணை திறந்துட்டான்
 

New Episodes Thread

Top Bottom