• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பிழை யாரிடம்?

Nithya Mariappan

✍️
Writer
பிழை யாரிடம்?

கண்களுக்குள் குவிந்திருந்த ஊழிக்கால இருளைக் கிழித்துக் கொண்டு ஒளி கண்ணிமைகளுக்குள் புகுந்த நேரம் மெதுவாய் உணர்வு திரும்பியதன் அடையாளமாக முகத்தின் வலதுபக்க கன்னத்தில் இருந்து காது வரை வலி சுரீரேன இழுத்தது.

மூச்சு விடுவதற்காக பொருத்தியிருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழற்ற கையை உயர்த்திய போது மீண்டும் சுரீர் வலி தோள்பட்டையில். மெதுவாய் கண்களை சுழற்றி பார்த்தபோது அங்கே கட்டு போடப்பட்டிருந்தது.

நான் இருப்பது மருத்துவமனை அறை என்பதற்கு அடையாளாமாக இன்னொரு கரத்தில் ஊசி வழியே திரவம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்க வேதனை மட்டும் என் உடலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்கதவு திறந்து அதிகபட்ச ஒளியை அறைக்குள் பாய்ச்சியது.

வந்த உருவம் விழித்திரையில் பதிந்து, மூளை அது யாரென கண்டறியும் முன்னரே அவ்வுருவத்தின் குரல் எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது.

வந்தவள் என் உயிர்த்தோழி கோகிலா. இன்று நேற்று உருவான நட்பல்ல அது. ஒரே ஊரில் பிறந்து அண்டை அயலாராய் வளர்ந்த சமயத்தில் உருவான பால்ய சினேகிதம். பள்ளிப்படிப்பிலும் தொடர்ந்த அந்த நட்பு இன்று கல்லூரிப்படிப்பின் போதும் பிரியவில்லை.

“கீதா”

என்னை அழைத்தவளின் குரலில் அழுகையில் சாயல்.

அவளிடம் நான் பேச முயல என்னைத் தடுத்தவள் “நீ கட்டு பிரிக்கிற வரைக்கும் பேசக்கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காங்கடி” என்ற போது எனது விழிகள் அவளது முகத்திலிருந்த சிராய்ப்பு காயங்களை வேதனையுடன் உற்று நோக்கியது.

நான் பேசவில்லை. எனது கன்னத்தைக் கிழித்த வெட்டுக்காயத்தின் மீது போடப்பட்டிருந்த தையல் என்னைப் பேச அனுமதிக்கவும் இல்லை. ஆனால் என் மனம் கொண்ட வேதனையை குறைவின்றி காட்டும் மொழியாக அழுகையை உபயோகித்துக் கொண்டேன்.

அதற்கும் தடா உத்தரவு போட்டாள் கோகிலா.

“அழுதனா ஜலதோசம் பிடிச்சிடும்லா... அழாத... தையல் பிரிச்சதும் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்”

அது வரை என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனை பற்றி நான் யாரிடமும் பேச முடியாதா? ஆங்காரமாய் கத்த தோன்றியது. கத்துவதற்கு உடலில் வலு இல்லை, இங்கே வலி மட்டுமே நிரம்பி வழிந்தது.

எனது வலியைப் புரிந்துகொண்டவளாக “போலீஸ் அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க... ஆனா அவங்க வீட்டுல அவனுக்கு மனநிலை சரியில்லனு சொல்லி தண்டனைய குறைக்க நினைக்காங்களாம்... நீ மட்டும் சொகமாயிட்டு வா... நம்ம நடந்ததை எல்லாம் போலீஸ்ல சொல்லி அந்த கோட்டிக்காரப்பயலை இனிமே வெளிய வர முடியாதபடி பண்ணுவோம்” என்றாள் சினத்துடன்.

இதையெல்லாம் நாமே தான் செய்ய வேண்டுமா? இந்நேரத்தில் என் தந்தை அவனைச் சும்மாவா விட்டிருப்பார்? அவரது செல்வாக்கால் அவனை பந்தாடியிருக்க மாட்டாரா?

மனதின் கேள்விகளை வாயசைப்பின் மூலம் தெரியப்படுத்தவும் கோகிலா என்னை இரக்கமாய் பார்த்தாள்.

“நடந்ததுல அவருக்கும் பங்கு இருக்குலா... இப்ப சொன்னா நீ வருத்தப்படுவ... உனக்குக் காயம் குணமாகட்டும்... போலீஸே உனக்கு எல்லா விவரத்தையும் சொல்லுவாங்க”

என்ன உளறுகிறாள் இவள்? எனக்கு நடந்த கொடூரத்தில் என் தந்தையின் பங்கு எப்படி இருக்கக்கூடும்?

காதல் என்ற பெயரில் அத்துமீறிய பைத்தியக்காரத்தனங்களை செய்யும் மனப்பிறழ்ச்சி கொண்ட நவயுக இளைஞர்களில் ஒருவனால் எனக்கு நேர்ந்த இந்த அவலநிலைக்கு என் தந்தை எப்படி பொறுப்பாவார்?

கோகிலாவோ எதற்கு விடை சொல்லாமல் விடைபெற்று சென்றுவிட கண்களை மூடிக்கொண்டேன் நான்.

நான் சங்கீதா. ஆழியூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண். நானும் கோகிலாவும் பக்கத்து நகரமான ரங்கநல்லூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறோம்.

என் தந்தை முருகையாவும் கோகிலாவின் தந்தை ராஜவேலுவும் நெருங்கிய நண்பர்கள். காய்கனி மற்றும் அரிசி மொத்த வியாபாரத்தில் பணம் கொழித்தாலும் முன்னோர் விட்டு சென்ற நிலபுலன்களோடு ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருபவர்கள்.

பொதுவாக பெண் பிள்ளைகளை கல்லூரி பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து விடுவது எங்கள் ஊர் வழக்கம். சிலர் மட்டும் அந்த பதின்வயது திருமணச்சிறையிலிருந்து தப்பி கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு ரங்கநல்லூரிலோ பாளையங்கோட்டையிலோ வேலைக்குச் செல்வதுண்டு.

அது கூட கல்யாணச்செலவுக்குக் காசு சேமிக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே. மற்றபடி பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம் இதெற்கெல்லாம் அரிச்சுவடி கூட அறியாதவர்கள் எங்கள் ஊர் மக்கள்.

காலம் என்ன தான் முன்னேறினாலும் பெண் என்று வந்தால் மட்டும் அவளை தங்கள் கௌரவத்துடன் ஒட்டி வைத்துப் பார்க்கும் பிற்போக்குத்தனம் எங்கள் கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை.

“பொம்பளைப்பிள்ளை காலையில வேலைக்குப் போனா சாயந்திரம் நேரா வீட்டுல வந்து தான் நிக்கணும்... இடையில அங்க போனேன் இங்கே போனேன்னு கதை சொன்னா வீட்டுலயே கிட மூதினு பொடதில தட்டி தொழுவத்துல சாணி அள்ள வச்சிருவாங்க... அடுத்த மாசமே ஏப்பசாப்பையா நம்மாளுங்கள்ல ஒருத்தனை பிடிச்சு கட்டி வச்சிருவாங்க... அவன் படிச்சவனா, நாகரிகம் தெரிஞ்சவனா, பொண்டாட்டிய மதிப்பா நடத்துவானா இதெல்லாம் விசாரிக்கக்கூட மாட்டாங்க... காசு உள்ளவனா இருந்தா மட்டும் போதும், பிள்ளைய காலம் முழுக்க உக்கார வச்சு கஞ்சி ஊத்துவானு சப்பை கட்டு கட்டி நம்மளை ஒரேயடியா நாலு சுவத்துக்குள்ள சமாதி வச்சிடுவாங்க”

இது பாளையங்கோட்டையில் ஒரு அலுவலகத்தில் கணினியில் விவரம் ஏற்றுபவராகப் பணியாற்றும் மணிமேகலை அக்காவின் கூற்று.

இதனாலேயே நானும் கோகிலாவும் கல்லூரி விட்டால் வீடு என்று இருப்பது வழக்கம். அப்படி இருந்தும் நான் எவ்வாறு பாலுவின் கண்களில் சிக்கினேன் என்பது எனக்கே புரியாத புதிர்.

அவன் என்னை குறுகுறுவென பார்ப்பதும், கல்லூரி பேருந்து நிலையம் வரை பின் தொடர்வதும் கோகிலா சுட்டிக்காட்டவில்லை என்றால் எனக்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை.

“அவன் பாக்குறான், பின்னாடியே வாரான்னு மூளைய பிசக விட்டுடாதலா... நம்ம அப்பாக்களை பத்தி உனக்கு நல்லா தெரியும்... வீட்டோட கௌரவமே பொட்டப்புள்ள கையில தான்னு நொடிக்கு ஒரு தடவை சொல்லிக் காட்டுவாங்க... நம்ம மட்டும் கொஞ்சம் அசந்தாலும் மானம் போச்சு மரியாதை போச்சுனு தூக்குல தொங்கிடுவாங்க... ரெண்டாவது தெருல இருக்குற ரங்கண்ணன் மக இந்து பக்கத்து ஊர்க்காரனோட ஓடிப் போன மறுநாள் அந்த அண்ணனும் மதினியும் பூச்சி மருந்து குடிச்சதை மறந்துடாதலா”

கோகிலாவின் எச்சரிக்கையோடு தந்தை மீது பெண் பிள்ளைக்கு இருக்கும் இயல்பான பாசம் ப்ளஸ் படிக்கிற வயதில் காதல் தவறு என்று சொல்லி சொல்லி எங்களை உருவேற்றிய மகளிர் பள்ளியின் ஆசிரியைகளின் அறிவுரை இதெல்லாம் சேர்ந்து எனக்குக் காதல் என்ற ஒன்று தேவையே இல்லாத ஆணி என்ற வலுவான எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது.

கூடவே பாலுவின் சினிமாத்தனமான செய்கைகளும், காதல் என்ற பெயரில் அவன் செய்த கோமாளிக்கூத்துகளும் எனக்குள் எரிச்சலை மட்டுமே விதைத்தன என்பதே உண்மை.

அவன் ரங்கநல்லூர்க்காரன் என்பதால் வாரச்சந்தைக்கு என் அன்னையுடன் போகும் போது அங்கே அவனது நண்பர்களுடன் நின்று கொண்டு ஜாடையாக என்னைப் பற்றி பேசுவான்.

“என்ன மச்சி கண்டுக்கவே மாட்ற? ரொம்ப தான் அலைய விடுற... எனக்கு எப்ப ஓ.கே சொல்லுவ?”

இம்மாதிரி வசனங்களைச் சினிமாக்களில் கதாநாயகன் பேசும் போது மயிர் கூச்செறிவது போல தோன்றலாம். ஆனால் பெற்ற தாயுடன் பொது இடத்தில் இருக்கும் பெண்ணொருத்திக்கு தன்னைப் பெற்றவளுக்கு அவன் பேசுவது புரிந்து விடுமோ என பதற்றம் தான் உண்டாகும்.

அந்தப் பதற்றத்தின் விளைவு வெறும் முறைப்புப்பார்வையாக அப்பெண் மீதும் படரலாம். படிக்க அனுப்பிய இடத்தில் இப்படி தொந்தரவுகளை இழுத்து வருகிறாயா என்ற ஆதங்கத்தால் அப்பெண்ணின் மேற்படிப்புக்கு மூடுவிழா நடத்தலாம்.

எது எப்படியோ கண நேர ஈர்ப்பை, எதிர்பாலின கவர்ச்சியை காதல் என மனதில் உருவேற்றிக் கொண்டு விடாமல் தொடர்ந்தால் பெண் காதலித்துவிடுவாள், மிரட்டினால் காதலித்துவிடுவாள் என்ற தவறான புரிதலோடு வலம் வரும் மூடமதி கொண்ட இளைஞர்களில் ஒருவனான பாலுவின் மீது எனக்கு வெறுப்பு உண்டானதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

“நல்லா படிக்கணும்... கவர்மெண்ட் எக்சாம் எழுதி அரசாங்க உத்தியோகத்துல உக்காந்து கை நிறைய சம்பாதிக்கணும்... பொண்ணுங்க வேலைக்குப் போய் சம்பாதிச்சு சொந்தக்கால்ல நின்னுட்டா ஆண்களை அண்டி பிழைக்கிற அவசியம் வராது”

பள்ளி காலத்தில் நன்னெறி வகுப்பில் போதிக்கப்பட்ட போதனை இது. அதை தீவிரமாகக் கடைபிடிப்பவளுக்குக் காதலில் பிடிப்பு வராது என்பது பாலுவுக்குப் புரியவில்லை.

எத்தனையோ முறை நான் தவிர்த்தும் என் பின்னால் சுற்றுவதை அவன் நிறுத்தவில்லை. வகுப்பின் வராண்டாவில் நண்பர்களுடன் நின்றபடி என்னைக் கை காட்டி பேசுவது, பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் இடையில் மறித்து சினிமா வசனங்களை பேசுவது, பேருந்தில் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தொந்தரவு செய்வது என அவனது பைத்தியக்காரத்தனங்கள் எல்லை மீறிக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் நண்பர்களின் உசுப்பேற்றலால் நேரே என்னிடம் வந்து காதலைக் கூறினான்.

“இத்தனை நாள் உன் பின்னாடி சுத்தி வர்றேனே, உனக்கு என் மேல இரக்கமே வரலையா?”

“இங்க பாருங்க, எனக்கு இதுல்லாம் சுத்தமா பிடிக்கலை... எங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்... இப்பிடி நீங்க பின்னாடி வர்றது எங்கப்பாக்குத் தெரிஞ்சுதுனா பிரச்சனை ஆகிடும்”

“என்ன பிரச்சனை ஆகும்? அப்பிடியே பிரச்சனை வந்தாலும் நம்ம சேர்ந்து சமாளிப்போம் சங்கி”

இவனுடைய கல்லூரி கட்டணத்துக்கே தந்தையை நம்பியிருப்பவன். இவனா என்னுடன் சேர்ந்து பிரச்சனையை சமாளிக்கப் போகிறான்? என்ன ஒரு அசட்டுத்தனம்! சங்கீதா என்ற இனிமையான பெயரை அறுவை சிகிச்சை செய்து குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியவனைப் பளாரென அறைந்தால் என்ன என்று ஒரு கணம் தோன்றியது. எரிச்சல் மண்டியது எனக்குள்.

“அப்பிடி ஒரு அவசியமும் இல்ல... நீங்க இப்பிடி பின்னாடி வர்றது, தேவையில்லாம பேசுறதுலாம் கொஞ்சம் கூட சரியில்ல... எனக்கு உங்களை பிடிக்கல... வேற உருப்படியான வேலை இருந்தா போய் பாருங்க... இனிமே என் பின்னாடி வராதிங்க... அப்புறம் நல்லா இருக்காது”

மிரட்டலாகவே சொல்லிவிட்டு கோகிலாவுடன் விலகி நடந்தேன் நான். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு பாலு கொஞ்சம் அடங்கினாற்போல தான் தோன்றியது எனக்கு.

அவனது குறுகுறு பார்வைகளோ, பின் தொடர்தலோ, சினிமாத்தனமான ஜாடைப்பேச்சுகளோ இல்லாமல் என் கல்லூரி நாட்கள் இனிதே கழிந்தது.

ஆனால் இது எல்லாம் முடிவுக்கு வந்தது ஒரு நாள். அன்று கல்லூரி நுழைவுவாயிலுக்குள் அடியெடுத்து வைத்தவளின் முன்னே வந்து நின்றான் பாலு. கூடவே அவனது நண்பர்கள் சிலரும்.

வழிமறித்தாற்போல நின்றவர்களை விலக்கிவிட்டு செல்ல முயன்ற என்னையும் கோகிலாவையும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

பாலுவின் கண்களில் வெறி! அவன் கரத்திலோ மஞ்சள் கயிறு ஒன்று.

“மயிலே மயிலேனா இறகு போடாது மச்சி... பொண்ணுங்க பிடிக்கலனு சொன்னா அதுக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு அர்த்தம்... நீ தைரியமா தாலிய கட்டு மச்சி... சிஸ்டரை உன்னோட சேர்த்து வைக்க நாங்க இருக்கோம்”

அவனது முட்டாள் தோழர்கள் கொடுத்த தைரியத்தில் மஞ்சள் கயிறுடன் “ஐ லவ் யூ சங்கி” என்று உளறிக்கொண்டு என்னை நெருங்கினான் அவன்.

மூளை ஸ்தம்பித்த நிலையில் எனக்குள் ஒரு வேகம் பிறக்க அவனைப் பளாரென அறைந்தேன் நான்.

அதில் அவன் தடுமாறவும் கோகிலா வேகமாக அவனது கரத்திலிருந்த மஞ்சள் கயிறை பிடுங்கிக் கொண்டாள்.

அவனது நண்பர்கள் “ஏய்” என்று எங்களை நெருங்குகையில் மாணவர்கள் கூட்டம் கூடிவிட்டது.

இத்தனை நாட்கள் பாலுவின் பைத்தியக்காரத்தனங்கள் கொடுத்த ஒட்டுமொத்த மனவுளைச்சலையும் வார்த்தைகளில் கொட்டத் துவங்கினேன் நான்.

“பின்னாடி சுத்துனா, சினிமா டயலாக் பேசுனா பொண்ணுங்க காதலிப்பாங்கனு உனக்கு யாருடா சொன்னது? பொண்ணுங்க பிடிக்கலனு சொன்னா பிடிக்கும்னு அர்த்தமா? அது எப்பிடிடா பொண்ணுங்களோட வார்த்தைக்கு இது தான் அர்த்தம்னு நீங்க தீர்மானிக்கிறிங்க? உங்களை பிடிக்கலனு ஒரு பொண்ணு சொல்லிட்டா உங்க ஆம்பளை ஈகோவால அதை பொறுத்துக்க முடியாம இப்பிடி ஒரு அர்த்தத்தை நீங்களே சொல்லிக்கிட்டிங்களோ? எனக்கு உன்னைச் சுத்தமா பிடிக்கல... இனிமே என் பின்னாடி சுத்துற வேலை வச்சுக்காத... மரியாதை கெட்டுரும்”

அவனை எச்சரித்துவிட்டு நேரே நான் போய் சென்று நின்ற இடம் முதல்வரின் அறை.

அவன் என்னைத் தொந்தரவு செய்வதை அவரிடம் புகாராக அளித்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றதோடு பிரச்சனை முடிந்ததென நான் நம்பினேன். அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை இப்போது மருத்துவமனை படுக்கையில் கிடக்கும் போது உணர்கிறேன்.

இதோ நாட்களும் வேகமாக கடக்க கன்னத்தில் பூரான் ஊர்வது போன்ற வடிவத்தில் போட்ட தையலும் ஆர்ம் ஸ்லிங்குமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு என் அன்னை மற்றும் தோழியோடு ஆழியூரில் வந்து இறங்கினேன் நான்.

ஊரார் என்னைக் கண்டதும் இரக்கத்தோடு உச்சு கொட்டுவதும், பரிதாபப்பார்வையோடு நகர்வதுமாய் என்னை வதைக்க “கன்னுகுட்டி” என்ற எனது தந்தையின் ஆத்மார்த்தமான அழைப்புக்காக ஏங்கியது இத்தனை நாட்கள் அவரைப் பாராது தவித்த என் உள்ளம்.

வீட்டுக்கு வந்ததும் கோகிலாவின் அம்மா சண்முகசுந்தரி எட்டிப் பார்த்தார்.

“போலீஸ் என்ன சொல்லுதாவ மதினி?”

அம்மாவோ “அந்தப் புத்திகெட்ட மனுசனை வெளிய விட மாட்டாவனு தோணுது சுந்தரி... நல்லா ஜெயில்ல கெடந்து அனுபவிக்கட்டும்... எவனோ என்னமோ சொன்னானுட்டு என் பிள்ளைய துள்ளத் துடிக்க கொல்ல பாத்தாவளே” என்று அழுகையோடு பதிலளிக்க எனக்கு அவர்களின் உரையாடல் சுத்தமாகப் புரியவில்லை.

கேள்வியாக கோகிலாவை நோக்க அவளோ என்னை தோளோடு அணைத்து என் அறைக்குள் கொண்டு வந்து நிறுத்தினாள்.

“கோகி” தடுமாற்றத்துடன் அழைத்த என்னைப் பார்த்தவள் “உக்காருலா... எல்லாத்தையும் விளக்கமா சொல்லுறேன்” என்றாள்.

நானும் அமர கோகிலா மீண்டும் பாலுவுடைய விவகாரத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு பாலு நம்ம ஊரு கருப்பு கோயிலுல வச்சு உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு கூப்புட்டான்லா, அப்ப நீயும் நானும் அங்க வந்தப்ப நம்மளோட உங்கப்பாவும் வந்திருக்காருலா”

“அப்பாக்கு எப்பிடி தெரியும்?”

கோகிலா நிதானித்தவள் “பாலு தான் சொல்லிருக்கான்” என்றாள்.

உடனே என் மனம் எனது தந்தையை எண்ணி மகிழ்ந்தது. அந்த பாலுவால் எனக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாதென பின் தொடர்ந்தார் போல.

அதையே கோகிலாவிடம் கூற அவளோ வேதனையோடு மறுத்தாள்.

“உங்கப்பா உன்னை ஃபாலோ பண்ணி வந்ததுக்குக் காரணம் உன்னைய அவன் கிட்ட இருந்து காப்பாத்துறதுக்கு இல்ல கீதா... அவனையும் உன்னையும் கருப்பு கோயில்ல வச்சு சமாதி கட்டுறதுக்கு தான்”

அவள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.

“உளறாத கோகி... எங்கப்பா ஏன் என்னைய கொல்ல பாக்கணும்?”

“ஏன்னா பாலு உன் கழுத்துல தாலி கட்ட பாத்தது, அவன் உன் பின்னாடி சுத்துனது, சந்தையில ஜாடைமாடையா பேசுனதைலாம் நம்ம ஊராளுங்க கவனிச்சு உங்கப்பா கிட்ட சொல்லிருக்காங்க... அவரும் பாலுவ கூப்புட்டு விசாரிச்சப்ப அந்த நாயி நீயும் அவனும் காதலிக்கிங்கனு சொல்லிருக்கான்... உங்கப்பாக்குப் பயந்து தான் நீ அவனை அவாய்ட் பண்ணுறனு சொன்னவன் படிச்சு முடிச்சதும் நீயும் அவனும் ஊரை விட்டு ஓடிப்போறதுக்கு ப்ளான் பண்ணிருக்கிறதா சொல்லிருக்கான்... உங்கப்பாவும் அதை நம்பி...”

என் முகமாற்றத்தைக் கண்டுகொண்டு நிறுத்தினாள் அவள்.

அவள் நிறுத்தினாலும் சொல்ல வந்த அனைத்தும் எனக்குப் புரிந்துவிட்டது. என் தந்தையா என்னை சந்தேகித்தது?

“மேல சொல்லு கோகி”

“இதுக்கு மேல சொன்னா நீ வருத்தப்படுவ கீதா”

“எங்கப்பா என்னை நம்பலங்கிற கஷ்டமான விசயத்தையே என்னால ஜீரணிக்க முடிஞ்சுது... அதை விட வேற எதுக்கு வருத்தப்படப்போறேன்? சொல்லு”

அவள் சொல்ல சொல்ல அன்றைய தினம் கருப்பு கோயிலில் நடந்தேறிய ஒவ்வொரு நிகழ்வும் என் கண் முன்னே படமாக விரிந்தது.

எனது எச்சரிக்கை மற்றும் கல்லூரி முதல்வரின் கண்டிப்புக்குப் பிறகு பாலு என் பின்னால் சுற்றுவதை முற்றிலும் நிறுத்திவிட்டான். இந்த விசயத்தில் நான் கல்லூரி முதல்வருக்குத் தான் நன்றி கூறவேண்டும்.

அவன் எனக்குக் கட்டாயத்தாலி கட்ட முயன்ற சம்பவம் காவல்துறைக்கோ எனது வீட்டாரின் செவிகளுக்கோ செல்லக்கூடாதென நான் அவரிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நிகழ்வை மொபைலில் வீடியோவாக எடுத்த மாணவர்களிடம் அழிக்குமாறு வேண்டிக்கொண்டவர் பாலுவின் பெற்றோரை மட்டும் அழைத்து அவர்களிடம் அவனது நடவடிக்கைகளைப் பற்றி கூறி விட்டார்.

பின்னர் சில நாட்கள் அவனை சஸ்பெண்ட் செய்தவர் “வீட்டுக்குத் தெரிஞ்சா படிப்பை நிறுத்திடுவாங்கனு நீ சொன்னதால தான்மா நான் உன் பேரண்ட்சுக்கு விசயம் தெரியாம பாத்துக்கிட்டேன்.. ஆனா நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்மா... படிப்போட சேர்ந்து பாதுகாப்பும் அவசியம்” என்று எனக்கு அறிவுரை கூறி தான் அனுப்பி வைத்தார்.

அவரது அறிவுரையைக் கேட்டுக்கொண்டவள் தவறிழைத்தது பாலு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறிய போது தான். கல்லூரிக்கு வர முடியாதென்பதால் அவனது நண்பனை தூது விட்டு அனுமதி கேட்டிருந்தான் அவன்.

“அவன் பண்ணுனது தப்பு தான்மா... அவன் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்னு நினைக்குறான்... அவங்கம்மாவும் அப்பாவும் திட்டுன திட்டு அப்பிடி... அதான் உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு உங்க ஊரு கருப்பு கோயிலுக்கு வரச் சொன்னான்மா... காலேஜுக்கு அவனால வர முடியாதுல்ல... ப்ளீஸ் கொஞ்சம் மனசு வைம்மா”

பேசி பேசியே கரைய வைத்தான் பாலுவின் நண்பன்.

என் மனமும் இரங்கியது. சரியென்று கூறிவிட்டேன். ஆனால் கோகிலா என்னை தனியே அனுப்ப மனமில்லாமல் என்னுடன் துணைக்கு வந்தாள்.

கோயிலை நெருங்கியதும் வெட்டவெளியில் கருப்பசாமியின் சொரூபமும் பூடங்களும் வெயில் காய்ந்து கொண்டிருந்தன. ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருந்த காவல்தெய்வத்தின் கோவிலுக்குப் பகல் பொழுதில் வருவதற்கே மக்கள் அஞ்சுவது வழக்கம்.

பூசாரி கூட பத்து மணிக்குள் பூசை செய்துவிட்டு சென்றுவிடுவது வழக்கம். அன்றும் பூசை முடிந்து கற்பூரம் எரிந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.

வெளியே பூடத்தின் முன்னே விபூதியும் குங்குமமும் சிதறிக் கிடக்க கோகிலா அதை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.

“என்னலா இந்த பாலு பயலை காணும்?”

எரிச்சலுடன் முணுமுணுத்தாள் கோகிலா. அப்போது கருப்பு கோவிலிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் ஆலமரத்தின் பின்னே இருந்து வந்தான் பாலு. கூடவே அவனுக்காக என்னிடம் பரிந்து பேசிய அவனது நண்பனும்.

வந்தவன் என்னைப் பார்த்த விதத்தில் வன்மம் ஒளிந்திருப்பதாக தோன்றியது. இருப்பினும் என்னவென அவனிடம் பொறுமையாக வினவினேன் நான்.

“உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கு உங்க அழகுல பெரிய கர்வம்ல?”

சம்பந்தமின்றி வன்மத்தை வார்த்தைகளில் கக்கியவனின் பேச்சில் உஷாராகியிருக்கலாம். ஆனால் என் நேரம் நான் அவனிடம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தேன்.

“அப்பிடிலாம் இல்ல பாலு... காதலிக்கிற அளவுக்கு எங்க வீட்டுல சுதந்திரம் கிடையாது... எனக்கும் காதல்ல இன்ட்ரெஸ்ட் இல்ல... நீ நான் சொன்னதை புரிஞ்சிக்காம அசட்டுத்தனம் பண்ணுனதால தான் பிரச்சனை பிரின்சி வரைக்கும் போயிடுச்சு”

நக்கலாக சிரித்த பாலு “இதெல்லாம் சும்மா சாக்குபோக்கு... இதுவே பணக்காரன் ஒருத்தன் உன் பின்னாடி சுத்தியிருந்தா நீ அவன் கேட்டதும் மண்டைய ஆட்டி அவனைக் காதலிச்சிருப்ப... இவ்ளோ ஏன், அவன் கண் அசைச்சதும் கூட படுக்க கூட தயங்கியிருக்க மாட்ட... உன்னை மாதிரி பொண்ணுங்களுக்குக் காசு தானடி முக்கியம்” என்று அருவருப்பான விதத்தில் பேசவும் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

பளாரென அவனது கன்னத்தில் அறைந்தேன்.

“அசிங்கமா பேசாத... எனக்குக் காதலிக்க விருப்பமில்லனாலும் காதல் மேல மரியாதை இருக்கு... உன்னை மாதிரி கேவலமான ஜென்மங்கள் தான் காதலிக்கிற பொண்ணுங்க எல்லாமே காசுக்கும் சுகத்துக்கும் ஆசைப்படுறதா நினைக்கிறீங்க... நீ மன்னிப்பு கேட்ட கூப்பிட்டேன்னு உன் ஃப்ரெண்ட் கெஞ்சுனதால இங்க வந்தது என்னோட முட்டாள்தனம்... நீயெல்லாம் திருந்தவே மாட்ட”

வெறுப்பாய் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நானும் கோகிலாவும் கிளம்ப அவனுடைய நண்பன் எங்களை வழிமறித்தான்.

“எங்க போறிங்க? எவ்ளோ கஷ்டப்பட்டு திட்டம் தீட்டி உன்னை தனியா வரவச்சிருக்கோம்? அவ்ளோ ஈசியா உன்னை விட்டுடுவோமா?”

கோணலாய் சிரித்தபடி சொன்னவன் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்தான். அது என்ன ஊகிக்கும் முன்னரே கையில் பண்ணையரிவாளோடு நின்றான் பாலு.

கோகிலாவும் நானும் சுதாரிக்கும் முன்னரே பாலுவின் நண்பன் அவன் கையிலிருந்த வஸ்துவை என் முகத்தில் வீச கண்கள் எரியத் துவங்கிய போது தான் அது மிளகாய் பொடி என்பதே எனக்குத் தெரிந்தது.

அவசரமாக நான் கோகிலாவைக் கீழே தள்ளிவிட விழுந்த வேகத்தில் அவள் முகம் பூடத்தின் அடிப்பகுதி தளத்தில் உரசியது.

“கீதா” என அவள் அலறிய போது வேகமாக ஓட எத்தனித்த எனது முகத்தின் வலதுபக்கம் படுவேகமாக இறங்கியது பாலுவின் பண்ணையரிவாள்.

கன்னத்தைக் கிழித்து உதிரத்தைச் சுவைத்த அந்த பண்ணையரிவாளை ஒரு கையில் பற்றிக்கொண்டு இன்னொரு கையில் என் கழுத்தை நெறித்தான் பாலு.

“நீ சாகுறப்ப கூட உன் முகம் அழகா தெரியக்கூடாதுடி... அதுக்குத் தான் அரிவாளை வச்சு கிழிச்சு விட்டேன்” என்றவன் கயமைத்தனமாக என் கழுத்தை வருட எனக்கோ உதிரப்போக்கோடு உயிர் போகும் வலி வேறு.

“மச்சி இன்னும் ஏன்டா வெயிட் பண்ணுற? கழுத்துலயே போடு... நீ போடுற வேகத்துல கழுத்து பறந்து கருப்பு காலடில போய் விழணும்டா”

பாலுவை வெறியேற்றினான் அவனது நண்பன். அதற்குள் கோகிலா எழுந்து பாலுவின் கரத்திலிருந்த அரிவாளை வாங்க போராட அந்தப் போராட்டத்தில் அவன் என் கழுத்தை விடுவித்தான்.

கூடவே “டேய் இந்த சனியனை நீ கவனி” என்று அவளை அவனது நண்பனிடம் தள்ளிவிட்டு என்னை நெருங்கியவனின் கரத்தில் அரிவாள் இல்லை.

உதிரம் வழியும் கன்னத்தைக் கரத்தால் பொத்திக்கொண்டு “இங்க இருந்து ஓடிடு கோகி... அடுத்த வயக்காட்டுல ஊராளுங்க இருப்பாங்க... கூட்டிட்டு வா” என்றேன் நான்.

என் தோழி ஓட ஆரம்பிக்க அவனது நண்பன் அவளை ஆலமரத்தை நோக்கி விரட்டிக்கொண்டு சென்றான்.

அதற்குள் என்னை நெருங்கிவிட்டான் பாலு. சிரித்தபடி அவன் என் இடதுகன்னத்தில் கை வைக்கவும் பிரக்ஞை இழந்து நான் சரியவும் சரியாக இருந்தது. அவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருந்தது.

அந்நேரத்தில் தான் என் தந்தையுடன் ரவுடிகளை போன்ற தோற்றம் கொண்ட சிலர் அங்கே வந்ததாக கூறினாள் கோகிலா.

“நான் ஆலமரத்து கிட்ட ஓடுறப்ப உங்கப்பாவும் நாலு தடியனுங்களும் வந்தாங்க கீதா... வந்தவங்க கிட்ட உங்கப்பா என்ன சொன்னாரு தெரியுமா? ஜாதிப்பெருமையையும் வீட்டு கௌரவத்தையும் கெடுத்தவளை ஒரே வெட்டா வெட்டி சரிச்சிடுங்கலனு சொன்னார்லா... அவனுவளும் நீ மயங்கி விழுறப்பவே பின்னாடி இருந்து உன் தோள்பட்டைல வெட்டிட்டானுவ... அதை பாத்து பாலு பயந்து ஓடுறதுக்குள்ள அவனையும் பிடிச்சிட்டானுங்க... அவனை அடிச்சு நொறுக்குனானுங்க... அருமை பெருமையா வளர்த்த பொண்ணை நீ இழுத்துட்டு ஓடுவ, நான் விரல் சூப்பிட்டு வேடிக்கை பாக்கணுமால? அப்பவே உன்னை அடிச்சுப் போட்டிருக்கணும்... ஆனா நான் என் மவளை நம்புனேன்... நீயே கூப்பிட்டாலும் அவ வரமாட்டானு நினைச்சேன்... ஆனா குலத்தை கெடுக்க வந்த மூதி வந்திடுச்சே, அதான் திட்டம் போட்ட மாதிரி இவனுங்களை வர வச்சேன்... உன்னை வெட்டி சாய்ச்சிட்டு முன்பகை காரணமா கொன்னுட்டோம்னு இவனுங்க போலீஸ்ல சரண்டர் ஆகிடுவானுங்கனு உங்கப்பா பேசுனது என் காதுல தெளிவா விழுந்துச்சு... அந்த நேரம் பார்த்து நம்மூர்க்கார இளந்தாரி பயலுங்க கூட்டமா வரவும் கத்தி கூப்பாடு போட்டு நான் அவங்களோட கருப்பு கோயில் பக்கம் வந்துட்டேன்...

நான் வர்றதை பார்த்து அந்த கூலிக்கு கொலை பண்ணுற கூட்ட ஓடிடுச்சு... பாலுவை அவனுவ கொல்லுறதுக்கு முன்னாடியே உங்கப்பா கிட்ட நடந்ததை நான் சொல்லிட்டேன்... நம்ம ஊர்க்கார பயலுவள்ல ஒருத்தன் போலீச்சுக்குத் தகவல் சொல்லி பாலுவையும் அவன் ஃப்ரெண்டையும் கட்டிப்போட்டுட்டான்... உங்கப்பா நான் சொன்னதை கேட்டு இடிஞ்சு போய் உக்காந்தவர் தான்... போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணப்ப, உங்கம்மா வயிறெரிஞ்சு சபிச்சப்ப கொஞ்சம் கூட கண் இமைக்கல... பாலு, அவன் ஃப்ரெண்ட், உங்கப்பா மூனு பேர் மேலயும் கேஸ் போட்டாச்சு... அவங்க வெளியவே வர வழியில்லனு நம்ம லாயர் அருண் அண்ணன் சொல்லிச்சு”

அவள் கூறியதை கேட்டுவிட்டு வேதனையுடன் அமர்ந்திருந்தேன் நான். கோகிலா என்னை ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். எனக்காக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது அவள் தானாம். என் நிலமையைக் கண்டதும் அவள் அன்னையே அவளை சாட்சி சொல்லும்படி பணித்தாராம். யார் சொன்னது பெண்களுக்கு பெண்கள் எதிரியென்று?

ஆனால் என் தந்தை பொய்த்துப் போனாரே. பொய்த்தது அவர் என் மேல் காட்டிய பாசம் அன்பு அத்துணையும் தான். மனதில் இம்மாபெரும் வேதனை சூழ்ந்திருக்கையில் இனி எனக்கு ஓய்வேது?

வழக்கு நடக்கலாம். அதில் பாலுவுக்கும் என் தந்தைக்கும் தண்டனை கிடைக்கலாம். ஆனால் நான் அனுபவித்த வலியோ வேதனையோ மறைந்துவிடுமா?

வெறிக்க வெறிக்க அமர்ந்து எனக்கு நேர்ந்த கொடுமையை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என் அம்மா வந்தார்.

“என்னல, முகம் வலிக்குதா?” ஆதுரத்துடன் கேட்டபடி என்னருகே அமர்ந்தார்.

“முகத்தை விட மனசு வலிக்குதும்மா” என்றேன் நான்.

“என் ராசாத்தி” என்று அழுகையுடன் என்னை தோளில் சாய்த்துக்கொண்டார் அவர்.

“நான் என்னம்மா தப்பு பண்ணுனேன்? படிக்குற வயசுல காதல் தேவையில்லனு ஒதுங்குனது தப்பா? இல்ல நடந்ததை வீட்டுல சொன்னா படிப்பை நிறுத்திடுவிங்கனு மறைச்சது தப்பா?”

“உன் மேல எந்த தப்பும் இல்ல தங்கம்... தப்பு செஞ்சது அந்த பய பாலுவும், உங்கய்யாவும் தான்... போலீஸ் வந்து கேட்டா நடந்ததை மறைக்காம சொல்லு... அவியளுக்கு கிடைக்குற தண்டனை இனிமே அம்புட்டு ஆம்பளை சென்மத்துக்கும் பாடமா இருக்கணும்... இந்த உலகம் இருக்குதே, அது ஆம்பளைங்க தீர்மானிச்ச உலகம்... இதுல பொம்பளைங்க நம்ம என்ன செஞ்சாலும் ஆம்பளைங்க பார்வையில அது தப்பு தான்... உன்னை காதலிச்ச பையன் பார்வையில நீ அவனைக் காதலிக்காம விட்டது தப்பு... உங்கப்பா பார்வையில நீ அவனைக் காதலிச்சது தப்பு... காதலிக்கலைனா அவன் உன்னை கொல்லுவான், காதலிச்சா உங்கப்பா உன்னை கொல்லுவார்... ஆகமொத்தத்துல ரெண்டு ஆம்பளைங்களோட வெறியால போயிருக்க வேண்டியது என்னவோ பொம்பளை உசுரு தான் தங்கம்... நான் கும்புட்ட மாரியாத்தா என் மேல இரக்கப்பட்டு உன்னை எனக்குத் திருப்பிக் குடுத்துட்டா... ஆனா என்னை மாதிரி எத்தனை அம்மா பிள்ளைய பறிகுடுத்துட்டு இருக்காவ தெரியுமா?”

விசும்பலுடன் இன்றைய நவநாகரிக சமுதாயத்தின் இன்னொரு கருப்பு பக்கத்தை வெளிப்படையாக கூறிவிட்டார் என் அன்னை.

இங்கே ஆண்களின் கௌரவங்கள் பெண்களின் கருப்பையில் தான் அடகு வைக்கப்படுகிறது. ஒரு பெண் அவளது விருப்பப்படி காதலித்தால் வேறு ஜாதி இரத்தத்தைச் சுமந்து குல கௌரவத்திற்கு கறை உண்டாக்குவாள் என்ற நோக்கில் ஜாதிவெறி நிறைந்த பிறந்தவீட்டினரால் அவள் ஆணவக்கொலை செய்யப்படுவாள்.

அவளது விருப்பப்படி காதலை மறுதலித்தாலோ எனது காதலை மறுத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டு வேறொருவனை மணந்து அவன் பிள்ளையைச் சுமப்பாளே என்ற நோக்கில் ஆணாதிக்க வெறி கொண்ட காதலித்தவனால் கொல்லப்படுவாள்.

இப்போது சொல்லுங்கள்! பிழை யாரிடம்? கௌரவம், ஆண் ஈகோ என்ற பெயரில் பெண்ணை பொம்மையாய் அடக்கியாள துடிக்கும் ஆணாதிக்க சமுதாயத்திடமா? அல்லது அவர்களின் அரிவாள் வெட்டுக்கும் அமில வீச்சுக்கும் பலியாகும் பெண்களான எங்களிடமா?

*******

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

ரொம்ப நாள் கழிச்சு ஒரு குட்டிக்கதை... பிரதிலிபி போட்டிக்காக எழுதுன சிறுகதை தொகுப்பு இது... மொத்தம் 5 சிறுகதைகள் ஒவ்வொன்னா போஸ்ட் பண்ணப்படும்... இந்த 5 கதைகளுமே பெண்களை மையமா வச்சு எழுதப்பட்டது... படிச்சுப் பாருங்க!

நன்றி!
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருமை மா
சில கேள்விகளுக்கு எத்தனை காலம் ஆனாலும் பதில் கிடைக்காது என்பது தான் நம்முடைய சாபம்.
 

kothaisuresh

Well-known member
Member
முகத்துல அறையறாப்போல உண்மைய சொன்னாலும் திருந்தாத ஜென்மங்களும், நம்பிக்கை இல்லாத ஜென்மங்களும் ஆண் ஆதிக்கமும் இருக்கும் வரை இதுக்கு விடிவு காலமே இல்லை
 

Nithya Mariappan

✍️
Writer
முகத்துல அறையறாப்போல உண்மைய சொன்னாலும் திருந்தாத ஜென்மங்களும், நம்பிக்கை இல்லாத ஜென்மங்களும் ஆண் ஆதிக்கமும் இருக்கும் வரை இதுக்கு விடிவு காலமே இல்லை
ஆமா ஆன்ட்டி😣😣😣😣
 

Thani

Well-known member
Member
பெண்களை தனக்கு அடிமைகள் என்று நினைக்கும் ஆண்வர்கம் திருந்தாத வரைக்கும் இப்படிப்பட்ட இன்னல்கள்..தெடரும்.. ..........😥
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom