TTY 1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 1

சென்னை விமான நிலையம் நேரம் காலம் பார்க்காமல் பயணிகளின் வரவால் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலை எட்டு மணிக்கு புறப்பட தயாராக இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு செல்வதற்கான விமானத்தில் பயணிக்க, ஏழு மணி பதினைந்து நிமிடத்திற்கே விமான நிலையத்தை அடைந்த யாஷ் நெஹ்ராவும் ரித்து என்கிற ரிதுபர்னா நெஹ்ராவும் விமான நிலையத்தின் விதிமுறைகள் அனைத்தையும் சரியாக செய்து முடித்து தங்களுக்கான விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

மூன்று இருக்கைகள் இணைந்து இருந்த இடத்தில் நடு இருக்கையை விடுத்து ஆளுக்கொரு நுனி இருக்கையில் அமர்ந்தவர்கள் வெவ்வேறு திசையில் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, இரண்டு நாள் முன்பு தான் இருவருக்கும் திருமணம் ஆகியிருக்க, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இருவரும் செல்வது தங்களின் தேனிலவுக்கான பயணத்திற்கு என்றால், யாராலும் நம்ப முடியாது தான்,

எந்த இலக்குமில்லாமல் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த யாஷின் கண்களுக்கு இரண்டு அல்லது மூன்று வயதுடைய கொழு கொழுவென்று குண்டாக ஒரு பெண் குழந்தை அங்குமிங்கும் ஒரு பந்தை வைத்துக் கொண்டு ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த குழந்தையை பார்க்கவும், அவனுக்கு வேறொரு நபரின் ஞாபகம் வர, உதட்டில் புன்னகையோடு அந்த குழந்தையை பார்த்திருந்தான். அதேநேரம் ரித்து வேறொரு பக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஓரப்பார்வையால் காலர் வைத்த டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் அழகாய் அமர்ந்திருந்த கணவனை பார்த்தப்படி இருந்தவள், அவன் உதட்டில் உதிர்த்த புன்னகையை கண்டு அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க, அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பார்க்கவும், “யார் அது?” என்ற கேள்விப் பிறந்தாலும், துருதுருவென இருந்த குழந்தையை அவளுக்கும் பிடித்திருந்தது.

அதற்குள் அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பந்து இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் வந்து விழவும், அந்த பந்தை எடுக்க அவர்கள் அருகில் அந்த குழந்தை வந்தது.

ஏற்கனவே அந்த குழந்தையிடம் அதன் பெற்றோர்கள் இந்தியில் பேசியதை யாஷ் கவனித்திருந்ததால், அருகில் வந்த குழந்தையிடம், “துமாரா நாம் கியா ஹே?” என்று அதன் பெயரைக் கேட்க,

“சோட்டீ,” என்று தன்னை அழைக்கும் செல்லப் பெயரை அது மழலை மாறாமல் சொல்ல, அந்த குழந்தையின் பெயர் யாஷ்க்கு இன்னும் வியப்பை கூட்டியது.

“க்யூட் நாம் ஹே,” என்று அதன் கன்னத்தை பிடித்துக் கிள்ளியவன்,
“எனக்கும் இதே போல ஒரு சோட்டீய தெரியும், உன்னைப் போலவே க்யூட்,” என்று இந்தியிலேயே அதனிடம் சொல்லியவனுக்கு, இப்போது அந்த சோட்டீ எப்படி இருப்பாள்? எங்கே இருப்பாள்? என்ன செய்துக் கொண்டிருப்பாள்? என்று நினைவுகள் அந்த சோட்டியிடம் செல்ல, அதற்குள் அந்த குழந்தை பந்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

இத்தனை நேரம் யாஷையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்த ரித்துவோ, அவன் குழந்தையிடம் பேசியதை கேட்டு மகிழ்ந்து, அவன் அருகில் அமர வேண்டுமென்று தோன்றவே, எழுந்து அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர, அதை கவனித்தவன்,

“இப்போது ஏன் பக்கத்தில் வந்து உட்காருகிறாள்?” என்று நினைக்கும்போதே, அவள் அருகில் வேறொரு பெண் வந்து அமரவும்,

“ஓ அவங்களுக்கு இடம் கொடுக்க உட்கார்ந்தாளா?” என்று நினைத்துக் கொண்டவன், மீண்டும் இலக்கில்லாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி இருந்தான்.
பார்வை இலக்கில்லாமல் சென்றாலும், அவன் சிந்தனையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அவர்களின் திருமணத்தையும் அது குறித்த விஷயங்களை பற்றியும் இருந்தது.

முதலில் அவனுக்கு இப்போது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை,  தந்தை சொன்னதற்காக மட்டுமே திருமணத்திற்கு அவன் ஒத்துக் கொள்ள, அதில் என்னவெல்லாம் நடந்துவிட்டது.

இதுவரை நடந்தது போதாது என்று இன்னும் என்ன நடக்க காத்திருக்கிறதோ? எது நடந்தாலும் அதனால் தான் பாதிக்கப்பட்டாலும் தன் தந்தை பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தவன், திரும்பி ரித்துவை பார்க்க, அவளும் அப்போது அவனை தான் பார்த்திருந்தாள்.

நெற்றி வகிட்டில் கொஞ்சம் பெரியதாகவே இழுத்து குங்குமமிட்டிருக்க, நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு, மூக்கின் இடது பக்கமாய் ஒரு சிறிய வெள்ளை கல் மூக்குத்தி, இவையெல்லாம் அவள் முகத்தை அலங்கரித்திருக்க, இளஞ்சிவப்பான அவள் தேகத்தில் லேசான முகப்பூச்சு இன்னும் கூடுதல் சிவப்பை அவளுக்கு கொடுக்க, அதை உற்றுப் பார்த்தவனுக்கு அதில் கலங்கமில்லாமல் அப்பாவித்தனம் தான் தெரிந்தது.

அவள் முகத்தையே பார்க்கிறோம் என்பதை உணர்ந்து திரும்பிக் கொண்டவனுக்கோ, “பார்க்க அப்பாவி போல் இருக்கும் அவள் இவனை திருமணம் செய்துக் கொண்டது எதனால்? என்று மட்டும் புரியவில்லை. முகத்தைப் பார்த்தால் தவறாக தோன்றவில்லை. ஆனால் இவன் மணக்கவிருந்த முக்தாவிற்கு பதில் முகத்தை மூடி இவள் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறாளே? அதன் காரணம் என்னவாக இருக்கும்?

அவன் ஒன்றும் கோடியில் என்ன? லட்சத்தில் புரள்பவன் கூட கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவனது தற்போதைய நிலைமை செய்துக் கொண்டிருந்த வேலையை இழந்துவிட்டு, தந்தையின் சேமிப்பில் இருந்த பணத்தில் திருமணம் செய்துக் கொண்டு, நண்பனது ஏற்பாட்டால் இந்த தேனிலவு பயணத்திற்கு வந்திருக்கிறான். இப்படிப்பட்டவனை அவள் முகத்தை மூடி  திருட்டுத்தனமாக திருமணம் செய்துக் கொள்ள என்ன அவசியம் உள்ளது? 

முக்தாவை திருமணம் செய்துக் கொள்ளாமல் தப்பித்ததற்கு மகிழ்ச்சியடைய முடியாமல், இப்படி யாரென்றே தெரியாத இவளை திருமணம் செய்துக் கொண்டது மனதில் குழப்பத்தையே விளைவிக்க, மீண்டும் அவள் முகத்தை திரும்பி பார்த்தான்.

அவன் திரும்பவும் அவளும் அவனை திரும்பிப் பார்த்தவள், என்ன? என்று கண் ஜாடையிலேயே அவனிடம் கேட்க, அவனும் ஒன்றுமில்லையென்று அவனை அறியாமலேயே தலையாட்டினான்.
அந்நேரம் அவன் தந்தை கிஷன் நெஹ்ராவிடமிருந்து அவனது அலைபேசிக்கு அழைப்பு வர, அதை ஏற்றவன், “போலோ பப்பா,” என்று இந்தியில் பேச ஆரம்பித்தான்.

“யாஷ் எப்போ ஃப்ளைட் கிளம்புது. நேரத்துக்கு அங்க போயிட்டீங்கல்ல,” என்ற அவர் கேள்விக்கு,

“அதான் சீக்கிரம் சீக்கிரம்னு தூங்க கூட விடாம கிளப்பி விட்டிங்களே பப்பா, ரொம்ப சீக்கிரமாகவே வந்து இங்க காத்திருக்கோம், 8 மணிக்கு தான் ஃப்ளைட் கிளம்பும்,” என்று அவன் குறைபோல் கூறினான்.

“அவசர அவசரமா போய் ஃப்ளைட்டை மிஸ் செஞ்சுட்டா என்ன செய்றது? இப்போ எந்த டென்ஷனும் இல்லாம ஹாயா தான இருக்க,”

“ம்ம் அப்படியே ஃப்ளைட்டை மிஸ் செய்தா தான் என்ன? ஹனிமூன் ப்ளான் கேன்சல் ஆகும் அவ்வளவு தானே?” என்று அவன் சர்வ சாதாரணமாக கேட்க, ரித்து அவனது பேச்சை கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.

“போதும் போதும் திரும்ப அதே பல்லவியை பாட ஆரம்பிக்காத, போறது ஹனீமுன் என்பதை ஞாபகம் வச்சிக்கோ, திரும்ப திரும்ப உனக்கு அட்வைஸ் செய்துக்கிட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா? சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க,  கொஞ்சம் ரித்துக்கிட்ட ஃபோனை கொடு,” என்று அவர் சொன்னதும், 
அவளிடம் அவன் அலைபேசியை கொடுத்து, “பப்பா தான்,” என்று சொல்லவும்,

“ம்ம் நீங்க பேசறதிலேயே தெரியுது,” என்று சொல்லி, அவனிடமிருந்து அலைபேசியை  வாங்கி அவளும், “போலோ பப்பா,” என்று அவனை போலவே கிஷனை அழைத்து பேசினாள்.

“மனுஷன் அதில் தானே விழுந்தார். மாமனார் சப்போர்ட் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு இவளுக்கு, அந்த தைரியம் தான், ஹனிமூன் வேண்டாம்னு சொன்னாலும் கேட்காம கிளம்பி வரா,” என்று மனதிற்குள் புலம்பினாலும், கண்களோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.

தலைமுடியை வாரி பின்னலிடாமல் அப்படியே விரித்தப்படி விட்டிருக்க, காதை தாண்டி வந்த முடியை அவ்வப்பொழுது ஒதுக்கிவிட்டுக் கொண்டதை போல, இப்போதும் செய்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அப்படி முடியை ஒதுக்கிக் கொண்டிருந்த போதெல்லாம் மருதாணியால் சிவந்திருந்த கைகளில்  முழுக்க அணிந்திருந்த வளையல்கள் சத்தமிட்டுக் கொண்டே இருந்தன, கூடவே அவள் அணிந்திருந்த பெரிய தோடு அவள் பேசுவதற்கு ஏற்றது போல் அழகாக நடனமாடிக் கொண்டிருந்தது. 

இதில் அவள் அணிந்திருந்த பைஜாமா குர்தாவோடு போட்டிருந்த துப்பட்டாவை வேறு சரி செய்தப்படி இருந்தாள். அப்படி சரி செய்யும்போது அவள் அணிந்திருந்த கருப்பு மணியால் ஆன தாலி கண்ணுக்கு தெரியவும், இதுவரை அவள் யாரோ? ஆனால் இந்த தாலியை அவள் கழுத்தில் இவன் அணிந்த நொடியிலிருந்து அவள் அவனவள் என்ற உரிமையை அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

“அவன் டென்ஷன் ஆனா நீ வருத்தப்படாத ரித்து, அமைதியா போயிடு. அப்புறம் அவனும் நார்மல்க்கு வந்துடுவான்.” என்று கிஷன் அந்த பக்கம் அலைபேசியில் அவளிடம் இந்தியில் சொல்லிக் கொண்டிருக்க,

அதற்கு அவள் அவனை திரும்பிப் பார்க்க, வேகமாக அவளை பார்க்காதது போல் அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். அவன் இதுவரை தன்னை தான் பார்த்திருந்தான் என்பதை உணர்ந்த ரித்துவோ, முகத்தில் தோன்றிய புன்னகையோடு, “டீக்கே பப்பா, அவரை பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு, நீங்க சொன்னது போல நடந்துக்கிறேன்.” என்று அவளும் இந்தியிலேயே அவருக்கு பதில் சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள்.

அவள் பேசியதை கவனித்துக் கொண்டிருந்தவன், உடனே அவள்புறம் திரும்பி, “நீ என்னை பார்த்துக்கப் போறீயா? அந்தமான்ல இருக்க அந்த ஏழு நாளில் நான் உன்னைப் படுத்துற பாடுல, சென்னை வந்து இறங்கியதும், நேரா எங்க சங்காத்தமே வேண்டாம்னு ஓடப் போற பாரு,” என்று சொல்லவும்,

“ம்ம் பார்க்கத் தானே போறோம்,” என்று வீம்புக்கு அவனிடம் சொல்லியவள், பின் அந்தப்பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டாள். ஆனால் அவன் பேசியதில் அவள் முகம் வாடிவிட்டதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது. 
அதை ஏனோ அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல், “அவளோடு ஹனிமூன் செல்ல முடிவெடுத்தப்பின் இப்படி கோபமாக பேசியிருக்கக் கூடாதோ?” என்று நினைத்து, பின் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “ம்ம் நான் ரெஸ்ட் ரூம் போகப் போறேன், நீயும் போறதா இருந்தா போயிட்டு வா, கொஞ்ச நேரத்தில் ஃப்ளைட்ல ஏற வேண்டியிருக்கும் என்று அவன் சொல்ல,

“வேண்டாம், நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன்.” என்ற அவளது பதிலுக்கு, அவன் ஒன்றும் சொல்லாமலேயே எழுந்துப் போக, அவன் சென்ற திசையை பார்த்தப்படி அவள் அமர்ந்திருந்தாள். அந்நேரம் அவள் பார்வை ஒருவர் மீது நிலைக்க, அவரை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது.

ஒருவேளை இவளது குடும்பத்திற்கு தெரிந்தவர்களாக இருந்தால்? இவளை அடையாளம் கண்டுக் கொண்டால்? யாஷோடு இவளுக்கு திருமணம் முடிந்திருந்தாலும் இன்னும் இவர்களின் வாழ்க்கை ஆரம்பிக்கவே இல்லையே, அதனால் இப்போதைக்கு இவள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் யார் கண்ணிலும் இவள் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதனால் துப்பட்டாவை எடுத்து தலையில் போட்டு யாருக்கும் தெரியாதது போல் அவள் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

யாஷ் திரும்பி வந்த போது அவள் தலையில் துப்பட்டாவை போட்டுக் கொண்டு, ஒரு கையால் முகத்தை மறைத்தது போல் அவள் இருக்கவும், “ஹே என்னாச்சு? எதுக்கு முகத்தை மூடியிருக்க?” என்றுக் கேட்க,

“அது குளிருது, அதனால் தான்,” என்று அவள் பதில் கூறினாள்.

இத்தனை நேரம் இல்லாமல் இப்போது குளிருகிறது என்று அவள் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. அவளை சந்தேக பார்வை பார்த்தப்படி, “நீ சொல்வதை என்னோட பப்பா நம்பலாம், ஆனா நம்ப மாட்டேன்.  திடீர்னு முகத்தை மறைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கன்னா, நீ ஏதோ தப்பு செஞ்சுட்டு தானே ஓடி வந்திருக்க, அதனால தான் இங்க யாருக்காவது உன்னை அடையாளம் தெரிஞ்சுடுச்சுன்னா என்னாகறதுன்னு பயப்பட்ற அப்படித்தானே?” என்று கேட்டான்.

“தப்பு செய்தா தான் பயந்து முகத்தை மூடிக்கணும்னு இல்ல, ஏதாவது பிரச்சனையோ ஆபத்தோ நம்மளை துரத்துச்சுன்னா, அதுக்கு கூட பயந்து முகத்தை மூடலாம்,” என்று அவள் பதில் கூறினாள்.

“இவளுக்கு என்ன பிரச்சனை அல்லது ஆபத்து இருக்க முடியும்? என்று யோசித்தவனுக்கு அவளை நினைத்து கவலை சூழ்ந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ம்ம் உன்னோட பிரச்சனையில் ஓடி ஒளிய நாங்க தானா கிடைச்சோம், அதுவும் கல்யாணத்தை ஆயுதமா எடுத்திருக்க, உன்னோட பிரச்சனையில் எங்களை மாட்டிவிடப் பார்க்கிறீயா? உன்னால எங்களுக்கும் ஆபத்து உண்டாகணுமா?” என்று கேட்டான்.

அதில் இன்னும் அவளது முகம் வாடி, “அந்த அளவுக்கு நான் கல் நெஞ்சம் கொண்டவ இல்லை. அப்படி பிரச்சனை என்னை நெருங்குச்சுன்னா, அதில் வர ஆபத்தை நான் மட்டுமே சந்திக்கிறேன் போதுமா?” என்று வருத்தத்தோடு அவள் சொன்ன போது, விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும், 

“அனொன்ஸ் செய்துட்டாங்க, வாங்க போகலாம்,” என்று அவனிடம் சொல்லியப்படியே, துப்பட்டாவை தலையிலிருந்து எடுத்து சரியாக போட்டுக் கொண்டு கைப்பையை மாட்டியவள் முன்னே செல்ல,

“டேய் இதுவரை என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம், இப்போ உன்னை நம்பி தான் அவ இத்தனை தூரம் வரா, அவளை மனசு கஷ்டப்படுத்துவது போல பேசலாமா? அறிவே இல்லடா உனக்கு?” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கோ, அவளின் வருத்தமான முகத்தை பார்த்தால் உடனே மனம்  இலகிவிடுகிறதே எதனால்? என்பது மட்டும் புரியவில்லை.

தேனன்பு தித்திக்கும்..