TTA 7

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 7
 
கட்டிலில் அமர்ந்து நண்பனிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த யாஷ் இயல்பாக திரும்பும்போது பால்கனியை பார்க்க அங்கே ரித்துவை காணவில்லை. ‘இங்கு தானே இருந்தாள்? எங்கே சென்றிருப்பாள்?’ என்பது போல் அவன் யோசிக்க, அப்போது தான் கண்ணாடி சுவர் வழியே அவள் கடற்கரையை நோக்கிச் செல்வது தெரியவும், அவள் மீது பார்வையை வைத்தப்படியே அவன் கபிலனிடம் பேசினான்.
 
சிறிதுநேரம் பேசியவன் அலைபேசி அழைப்பை அணைத்துவிட்டு வெளியில் பார்க்க இருட்டத் தொடங்கியிருந்தது. இதற்கு மேலும் அவளை தனியாக விடக் கூடாது என்பதால் அவனும் அறையை பூட்டிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான்.
 
காலையிலிருந்து பயணம் செய்த அலுப்பு இருக்கவே முதலில் நன்றாக குளிக்க வேண்டும், அடுத்து சாப்பிட அங்கிருக்கும் உணவகத்திற்கு செல்ல வேண்டும், இந்த ரெசார்டில் உள்ள உணவகத்தில் பஃபே முறையில் தான் உணவுகள் வைத்திருப்பார்கள். மூன்றுவேளையும் அந்த நேரத்திற்கு என்ன மெனுவோ அதை எழுதி வைத்திருப்பார்கள். அதில் இல்லாதது ஏதாவது தேவையென்றாலும் முன்னமே நாம் அங்கே தேவையானதை தெரிவித்துவிட்டால் அங்கே சென்றதும் அதையும் சேர்த்து சாப்பிடலாம், இதெல்லாம் இப்போது தான் கபிலன் அலைபேசியில் சொல்லியிருந்தான். அதையெல்லாம் நினைத்தப்படி அவள் அருகில் சென்றான்.
 
அவன் வந்தது கூட தெரியாமல் அவள் ஏதோ யோசனையில் இருக்க, சில நொடிகள் அவள் கவனிப்பாள் என்று பார்த்தவன், அவள் கவனிக்கவில்லை என்றதும், “க்கூம்,” என்று கணைத்து தன் வருகையை தெரியப்படுத்தினான்.
 
அவன் குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, “ம்ம் இருட்டப் போகுதே, குளிச்சு ஃப்ரஷ் ஆனா போய் சாப்பிடலாமே,” என்று சொல்ல,
 
“நீங்க போய் முதலில் குளிங்க, நான் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு வரேன்.” என்று அவள் கடலை வெறித்தப்படி கூறினாள்.
 
அவளை தனியாக விட்டு செல்ல மனமில்லாததால் அவனும் அப்படியே அங்கேயே மணலில் அமர்ந்துவிட்டான். இது இருவர் மட்டும் வந்திருக்கும் தனியான பயணம் என்பதால் அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டார்கள் தான், ஆனாலும் சகஜமாக உரையாடிக் கொள்ள முடியவில்லை. ‘வந்திருப்பது ஹனிமூன், ஆனா இப்படி அவ ஒருபக்கமும் நான் ஒருபக்கமும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை தானா? ரொம்ப கஷ்டம் டா சாமி.’ என்று அவனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
 
தேனிலவிற்கு வந்தது மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காக மட்டுமில்லை. ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொள்வதற்கும் தான், கபிலன் கூறியது இப்போது அவனுக்கு ஞாபகம் வர, அவளிடம் பேச்சுக் கொடுக்க நினைத்தான்.
 
“கொஞ்ச நேரம் கடல் அலையில் கால் நனைப்போமா?” என்று அவளிடம் அவன் கேட்க, பேசியது யாஷ் நெஹ்ராவா? என்று வியப்போடு திரும்பி பார்த்தாள். 
 
“எனக்கெல்லாம் கடல்கிட்ட வந்துட்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஜாலியா முழுக்க நனையும் அளவுக்கு விளையாடணும். எப்படியோ இன்னும் குளிக்கல இல்ல, விளையாடலன்னாலும் கொஞ்சம் நேரம் நிக்கலாமே, வர்றியா?” என்று அவன் கேட்க,
 
“எனக்கு இப்படி கடற்கரையில் உட்கார்ந்து அலையை ரசிக்க தான் பிடிக்கும், அதுவுமில்லாம எனக்கு தண்ணீரில் நிற்க பயம்.” என்று அவள் கூறினாள்.
 
அதற்கு அவனோ, “சுத்தம். தண்ணீரில் நிற்க பயமா? இந்த பயத்தோடு நீ அந்தமானுக்கு வந்திருக்க, அதுவும் ஹனிமூனுக்கு, நல்லா போகப் போகுது நம்ம பொழுது அடுத்த 5 நாளும்,” என்று சத்தமாக கூறவில்லை. வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டான்.
 
“ஏதாவது சொன்னீங்களா?” அவள் கேட்க,
 
“இல்ல, நான் ஒன்னும் சொல்லல, நீதான் ஏதாவது சொல்லணும்? ஏதாவது என்ன? உன்னைப்பத்தி சொல்லு. கல்யாணம் ஆகி ஹனிமூன்க்கே வந்துட்டோம், இன்னும் உன்னைப்பத்தி சொல்லாம எப்படி?” என்றுக் கேட்டான்.
 
அவளுக்கும் தான், அவள் யாரென்பதை அவனிடம் சொல்லிவிட ஆசை. சொன்னால் கண்டிப்பாக அவன் மகிழ்ச்சியடைவான் என்பது தெரியும், கண்டிப்பாக மனைவியாக ஏற்றும் கொள்வான். அதில் சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனால் அப்படி அவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை. ஏன் இப்போதும் தான் தந்தைக்காக தன்னை ஏற்றுக் கொண்டான். ஆனாலும் தன்னை விரும்பி காதல் மனைவியாக தன்னை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருந்தது. அதில் தவறேதும் இல்லையே, இப்போதாவது அவன் மனதில் தனக்கென ஒரு காதல் இருக்கிறது என்றால் எப்படியிருக்கும்? 
 
அதனால் இப்போதைக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கூடாது என்று அவள் நினைத்தாள். அவள் யாரென்பது தெரியாமலேயே அவன் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள். ஒருபக்கம் இப்படி ஒரு எதிர்பார்ப்பு தவறோ? என்று கூட மனம் யோசித்தது. அவன் மனைவியான பின்பு இந்த எதிர்பார்ப்பு நியாயம் தானே என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு, 
 
“உங்கக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல, ஆனா இப்போ வேண்டாமே, கொஞ்ச நாள் போகட்டும், கண்டிப்பா என்னைப்பத்தி சொல்றேன்.” என்று அவள் தயக்கத்தோடு சொல்ல, யாஷிற்கு பயங்கரமாக கோபம் வந்தது.
 
தந்தை சொன்னதற்காக என்றாலும், இருவருக்கும் நடந்தது சடங்கு சம்பிரதாயப்படி நடந்த திருமணம் என்பதால், அவனுக்குமே அது தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தது. அப்படியிருக்க அவளோடு தன் வாழ்க்கையை ஆரம்பிப்பதில் அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை. அதற்கு முன் அவளைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே, ஆனால் இன்னும் தன்னிடம் எதையும் சொல்ல வேண்டாமென்று அவள் நினைப்பது அவனுக்கு எரிச்சலை வரவைக்க, 
 
“சரி இருட்டிடுச்சு. 3 நாள் இங்க தானே இருக்கப் போறோம், அப்போ இப்படி வந்து உட்காரலாம், இப்போ வா.” என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து முன்னே போக, அவன் குரலில் கோபம் இருந்ததோ என்று யோசித்தப்படியே அவளும் அவன் பின்னால் நடந்தாள்.
 
முதலில் ரித்து குளித்துவிட்டு ஒரு த்ரீ ஃபோர்த் பேண்டும், தொள தொள டீ சர்ட் அணிந்தப்படி வெளியே வந்தாள். அடுத்து சென்ற யாஷ் குளித்துவிட்டு அவனும் ஒரு டீஷர்ட்டும் ஷாட்ஸும் அணிந்திருந்தான். 
 
“சாப்பிட போகலாமா?” என்று அவன் கேட்கவும், அவளும் தலையாட்ட, இருவரும் அறையை பூட்டிக் கொண்டு உணவகத்திற்குச் சென்றனர்.
 
ஐந்து நிமிட நடைபயணத்திற்கு பிறகு அந்த உணவகம் இருக்கும் கட்டிடம் வந்தது. அதன் உள்ளே நுழையும்போதே, ஒருபக்கம் ரெஸ்ட்டாரண்ட் என்றும் அதற்கு எதிர்புறம் பார் என்றும் எழுதியிருக்க, அதைப் பார்த்ததும் யாஷ்க்கு திடீரென ஒரு யோசனை தோன்ற,
 
“ரித்து, நீ போய் சாப்பிட்டு ரூம்க்கு போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்றேன். இந்தா கீயை பிடி. நம்ம ரூம் நம்பர் தெரியுமில்ல?” என்றவன், அவள் ஏதோ கேட்க வந்தும் அதை கண்டுக் கொள்ளாமல் பார் என எழுதியிருந்த இடத்தின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. ‘யாஷிற்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அய்யோ நான் பார்த்த யாஷ் அப்படி கிடையாதே? இப்போ குடிக்க போயிருக்காங்களே? போய் அதெல்லாம் வேண்டாம்னு தடுக்கவா? ஆனா அங்க நான் எப்படி போவது?’ என்று யோசித்து கலங்கினாள்.
 
ஆனால் யாஷோ அவளை இப்படி கலங்க வைக்க வேண்டுமென்று தானே உள்ளே வந்தான். மற்றப்படி அவனுக்கு மதுப்பழக்கம் அறவேயில்லை. அவனைப் பற்றி ஒன்றும் அறியாமல் திருமணம் செய்ததுமில்லாமல், அவளைப் பற்றியும் கூறமாட்டேன் என்பவளை இப்படி தான் செய்ய வேண்டுமென நினைத்து அங்கேயே சிறிது நேரத்தை கடத்தினான்.
 
ஆனால் மதுப்பழக்கம் இல்லாமல் எவ்வளவு நேரம் தான் அங்கே அமர்ந்திருப்பது. அங்கிருப்பவர்கள் அவன் மது அருந்தாமல் அமர்ந்திருப்பதை ஒருமாதிரி விசித்தரமாக பார்த்தனர். அதனால் அலைபேசியில் மணியை பார்த்தவன், இந்நேரம் ரிதுபர்ணா சாப்பிட்டு சென்றிருப்பாள் என்பதை கணித்து, அங்கிருந்து வெளியே வந்தவன், உணவகத்தின் உள்ளே நுழைய, ரித்துவோ கன்னத்தில் கை வைத்தப்படி அங்கு போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
 
உணவு மேசை காலியாக இருந்ததிலேயே அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. ‘அதான் சாப்பிட்டு ரூம்க்கு போன்னு சொன்னோமே, அதை கேட்காம எதுக்கு சாப்பிடாம உட்காந்திருக்கா?’ என்று மனதில் எழுந்த கேள்வியோடு அவள் அருகில் செல்ல, அவளும் அவன் வருவதை உணர்ந்து அதிகம் குடித்திருக்கிறானா? என்பது போல் ஆராய்ச்சியாக பார்த்தாள்.
 
“உன்னை தான் சாப்பிட்டு ரூம்க்கு போகச் சொன்னேனே, இன்னும் எதுக்கு உட்கார்ந்திருக்க, அதுவும் சாப்பிட்டது போல தெரியலையே, ஏன்?” யாஷ் கொஞ்சம் கோபத்தோடு கேட்கவும்,
 
“நீங்க வந்ததும் உங்கக் கூட சாப்பிடலாம்னு தான் யாஷ்.” என்று அவனுக்கு பதில் கூறியவள்,
 
“யாஷ் நீங்க குடிப்பீங்களா?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.
 
“ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு முன்ன இந்த சந்தேகம் உனக்கு வரலையா? உன்னைப் பத்தி எனக்கு தெரியாது சரி. என்னைப் பத்தி மட்டும் உனக்கு தெரியுமா? நான் குடிப்பேன். அதுவும் பயங்கரமா, நைட் அதில்லாம எனக்கு தூக்கமே வராது. இன்னைக்கு தானே ஃபர்ஸ்ட் என்னோட இருக்கப் போற, அதாவது நமக்கு இதுதான் ஃபர்ஸ்ட் நைட் இல்லையா? அதான் நீ பயந்துடக் கூடாதுன்னு கொஞ்சமா குடிச்சிட்டு வந்தேன். 
 
ஆனா நாளையிலிருந்து இதெல்லாம் பார்க்க மாட்டேன். ஃபுல்லா குடிச்சிட்டு ஜாலியா எஞ்சாய் பண்ணுவேன். கூடவே சிகரெட், அப்புறம் வேற லெவல் பழக்கமெல்லாம் இருக்கு, என்னைப் பத்தி தெரியாம என்னை கல்யாணம் செய்து வாழவும் தயாராகிட்ட, அதனால இதெல்லாம் சகிச்சிக்கிட்டு நீ வாழ்ந்து தான் ஆகணும்,” என்று அலட்சியமாக கூறினான்.
 
அவன் சொல்வது போல் முன்பு அவனைப் பார்த்திருந்தாலும், இப்போது யாஷ் எப்படிப்பட்டவன்? என்பது அவளுக்கு தெரியாது தான், ஆனால் அவன் சொல்வது போல் அவன் தவறானவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக, “இல்ல யாஷ், நீங்க பொய் சொல்றீங்க, உங்களை ஒரு குடிகாரனா என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல, அதுவும் பயங்கரமா குடிக்கிறவங்க முகமே அவங்களை காட்டிக் கொடுத்திடும், எனக்கு தெரியும், நீங்க இப்போ குடிச்சிட்டு வந்திருப்பது முக்தாவை மறக்க முடியாம தானே,” அவள் கேட்க,
 
‘இது என்னடா புது கதையா இருக்கு,’ என்று யாஷ் நினைத்தான்.
 
முக்தா அவனை வேண்டாமென்று சொல்லிவிட்டாலும் யாஷ் அவளை விரும்பியிருந்திருப்பானோ? என்ற சந்தேகம் ரிதுபர்ணாவிற்கு இருந்தது. அதைப்பற்றி கிஷனிடம் கேட்க நினைத்திருந்து கேட்காமல் வந்துவிட்டாளே, அதனால் முக்தா ஞாபகமாக தான் இப்படியெல்லாம் செய்கிறானோ? என்று அவன் வரும்வரை அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அதுவே இப்படி அவளை கேட்க வைத்தது.
 
“உங்களுக்கு முக்தாவை ரொம்ப பிடிச்சிருந்தது இல்ல, அவங்க உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போனது மட்டுமில்லாம, அந்த இடத்தில் நான் வந்தது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும், அப்படித்தானே?” வருத்தத்தோடு அவள் கேட்க,
 
“ம்ம் முடிஞ்சு போனதை பத்தி எதுக்கு பேசணும், விட்டுத் தள்ளு.” என்று அவன் அந்த பேச்சை திசை மாற்ற நினைத்தான்.
 
அவனுக்கே முக்தாவை பற்றி இப்போது பேசுவது பிடிக்கவில்லை. அதை உணராதவளோ, “முக்தாவை மறக்க முடியாது என்பதால இப்படி குடிக்க பழகிக்காதீங்க யாஷ். அது நல்லதுக்கு இல்ல, நான் தான் சொல்றேனே, சென்னை போனதும் உங்களை விட்டு போயிட்றேன். போறதுக்கு முன்ன முக்தாக்கிட்ட உங்களுக்காக பேசட்டுமா?” என்றுக் கேட்க,
 
“சென்னை போனதும் என்னை விட்டுட்டு போறதுக்கு தான் என்னை கல்யாணம் செய்துக்கிட்டீயா? நல்லா இருக்கு நீங்க செய்றது? முக்தா என்னன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை வேண்டாம்னு முடிவு செய்துட்டு போனா, அப்படியே விட்ருக்க வேண்டியது தானே, அதைவிட்டுட்டு நீ எதுக்காக கல்யாண பெண்ணா அங்க உட்கார்ந்த, இப்போ நீயும் விட்டுட்டு போகவா? போ தாராளமா போ, அதுக்காக எல்லாம் நான் வருத்தப்படுவன்னு நினைக்காத, ரொம்ப சந்தோஷம் தான் படுவேன். இன்னும் நல்லா என்னோட வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிப்பேன்.” என்று கூறினான்.
 
உண்மையில் அவள் விட்டுவிட்டு போவதாக சொன்னதில் கோபம் கொண்டு தான் இப்படி பேசினான். இதற்கும் முன்னரே அவனே அவளிடம் அப்படி சொல்லியிருக்கிறான். ஆனாலும் இப்போதைய மனநிலையில் அவனுக்கு அவள் அப்படி பேசியது பிடிக்காததால் கோபத்தில் பேசினான்.
 
அவளுக்கோ அவன் வார்த்தைகள் வேதனையை கொடுத்தது. அதுவும் அவள் அவனை விலகினால் அவன் மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் கூறியது மிகவுமே மனதிற்கு வேதனையை கொடுக்க, அது கண்ணீர் துளிகளாக அவள் கண்களிலிருந்து வெளிப்பட்டது.
 
அதை கவனிக்காதவனாக அவனோ, “சரி சாப்பிட்டா ரூம்க்கு போகலாம், இங்க நாமளே தான் எடுத்து சாப்பிட்டுக்கணும், வர்றீயா?” என்றுக் கேட்டப்படி அவள் முகத்தை பார்க்கும்போது தான் அவள் அழுவது தெரிந்தது.
 
‘என்னடா இது,’ என்று அவன் நினைக்க, “எனக்கு பசிக்கல யாஷ், நான் ரூமுக்கு போறேன். நீங்க சாப்பிட்டு வாங்க,” என்று அவள் எழுந்திருக்க, அவளது கைகளை பிடித்தவன்,
 
அவள் கண்ணீரை பொறுக்க முடியாதவனாக, “என்ன உன்னோட கண்ல டேம் வச்சிருக்கியா? எப்போ பார்த்தாலும் டேமை திறந்து விட்ற, இப்படி எதுக்கெடுத்தாலும் கோழை மாதிரி அழுதா எனக்கு பிடிக்காது.
 
நம்ம கல்யாணம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்ததுன்னு உனக்கு நான் சொல்லணுமா? அடுத்து என்ன நடந்தாலும் ஏத்துக்கணும்னு நினைச்சு தானே மணமேடை ஏறியிருப்ப, இப்போ எதுக்கெடுத்தாலும் அழற, ஒருவேளை என்னோட பப்பா இந்த கல்யாணத்தை ஏத்துக்கலன்னா கண்டிப்பா நான் உன்னை வேண்டாம்னு சொல்லியிருப்பேன். அப்போ என்ன செய்திருப்ப? 
 
நீயும் அப்போ நானே போயிடுவேன்னு தானே சொன்ன, அதை செஞ்சுருக்கலாமே? அதைவிட்டுட்டு பப்பா சொன்னதும் நீ ஏன் இந்த கல்யாண வாழ்க்கையை ஏத்துக்கிட்ட? இப்போ ஹனிமூன்க்கு வந்துட்டோம், அதுக்கப்புறமும் என்னைவிட்டு போயிடுவேன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
 
“உங்களோட விருப்பமும் அதானே யாஷ்.”
 
“என்னோட விருப்பம் அதுதான்னா நான் இந்த ஹனிமூன் வர சம்மதிச்சிருக்க மாட்டேன். பப்பா சொன்னாருன்னு மட்டுமில்ல, முறைப்படி நடந்த நம்ம கல்யாணம் தோத்து போகக் கூடாதுன்னு நினைச்சேன். அடிக்கடி நானும் தான் உன்னை போயிடுன்னு சொல்லியிருக்கேன். அதுக்கு காரணமென்ன? உன்னைப்பத்தி எனக்கு எதுவும் தெரியல, திடீர்னு நீ என்னோட மனைவின்னா, அதை உடனே என்னால ஏத்துக்க முடியுமா? அதை நான் ஏத்துக்க கண்டிப்பா கொஞ்சம் காலம் ஆகும், ஆனா உடனே உன்னை ஏத்துக்கிட்டேன்னா என்னோட பப்பாக்காக தான்,
 
அதுக்காக உன்னைப்பத்தி நான் தெரிஞ்சிக்க கூடாதா? தெரிஞ்சிக்க தான் எனக்கு உரிமை இல்லையா? நீ யாருன்னே தெரியாம நாம எப்படி நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. வீட்ல ரெண்டு நாளா ஏதோ கோபத்தில் என்ன செய்றதுன்னு புரியாம சுத்திட்டு இருந்தேன். சரி ஹனிமூன் வந்த  இடத்திலாவது உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன். நீ சொல்லலன்னுதும் கோபம் வந்துச்சு, அதான் சும்மா ஒரு டிராமா போட்டேன்.” என்று அவன் சொன்னதும்,
 
ரித்துவோ மகிழ்ச்சியில், “உண்மையா யாஷ். நீங்க குடிக்கலையா?” என்றுக் கேட்டாள்.
 
“ஆமாம் நான் குடிக்கல, அந்த பழக்கமும் எனக்கு இல்ல, உன்னை வெறுப்பேத்த தான் அப்படி செய்தேன். இனி அப்படி செய்யவே மாட்டேன் போதுமா? உனக்கா உன்னைப்பத்தி என்கிட்ட எப்போ சொல்லணும்னு தோனுதோ அப்போ சொல்லு. அதுவரைக்கும் நான் கேட்க மாட்டேன்.
 
ஆனா என்னைப்பத்தி உன்கிட்ட சொல்லிட்றேன். நான் இஞ்சினியரிங் முடிச்சிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஆறு மாசம் முன்ன நடந்த ஆக்ஸிடெண்ட்ல நான் ஹாஸ்பிட்டலில் இருக்க வேண்டியதா போயிடுச்சு, அதான் இப்போ எந்த வேலை வெட்டியும் இல்லாம இருக்கேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்க,
 
“பெரிய ஆக்ஸிடெண்டா யாஷ். அன்னைக்கும் உங்க ஃப்ரண்ட் கபிலன் பய்யா ஆக்ஸிடெண்ட் பத்தி ஏதோ பேசினாங்களே, அப்பவே பப்பாக்கிட்ட இதைப்பத்தி கேட்க நினைச்சேன்.” என்று அவள் என்னவோ விபத்து இப்போது தான் நடந்தது என்பது போல் பதட்டத்தோடு கேட்டாள்.
 
“ம்ம் கொஞ்சம் பெரிய ஆக்ஸிடெண்ட் தான், கையெலும்பு ஃப்ராக்‌சர் ஆயிடுச்சு, அதனால் ரெண்டு மாசத்துக்கு பெட் ரெஸ்ட்ல இருந்தேன். பப்பா தான் என்னை பார்த்துக்கிட்டாங்க, இப்போ நார்மலாயிட்டேன். உனக்கு பார்த்தா அப்படித்தானே தெரியுது?” என்று அவன் கேட்க,
 
அத்தனை நேரம் அவள் கண்களில் கலவரத்தை காட்டியவள், அவன் கேட்டதில் நிம்மதியை உணர்ந்து, ஆமாம் என்பது போல் தலையசைக்க, அவளது பரிதவிப்பை அவனும் உணர்ந்துக் கொள்ள, ஏனோ அது அவனுக்கு அதீத மகிழ்ச்சியை கொடுத்தது.
 
பின் விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பித்தான். “எனக்கும் மணீஷ்க்கும் எங்க பப்பா தான் எல்லாம், அம்மா இறந்த பின்பும் கூட இரண்டாவது கல்யாணம் செய்துக்காம எங்களுக்காகவே வாழ்ந்துட்டார். அவருக்கு கடைசிவரை சந்தோஷமா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா சோனா எப்போ எங்க வீட்டு மருமகளா வந்தாளோ, அப்பவே எங்க சந்தோஷமெல்லாம் குறைஞ்சிடுச்சு, அவ எங்க வீட்டுக்கு ஏத்தவளே இல்ல, ஆனா மணீஷ் காதலிச்சிட்டான்னு தான் பப்பா அவளை மணீஷ்க்கு கல்யாணம் செய்து வச்சார். அவனுக்காக தான் சோனாவை பொறுத்துக்கிட்டோம்,
 
இதுக்கும் சோனா எங்க அத்தை பொண்ணு தான், ஆனா அவ செய்றது எங்களுக்கு பிடிக்காது. இந்த நேரத்தில்  முக்தாவை கல்யாணம் செய்துக்க சொல்லி பப்பா என்கிட்ட கேட்டாங்க, ஆனா எனக்கு அதில் சுத்தமா விருப்பமில்ல, முக்தாவை அப்படி நினைச்சு பார்த்ததில்ல, அதுவுமில்லாம முக்தாவின் குணமும் கிட்டத்தட்ட சோனாவை போலத்தான், அதான் நான் வேண்டாம்னு சொன்னேன்.
 
ஆனா பப்பா திரும்ப திரும்ப இதைப்பத்தி பேசவும் அவர் விருப்பத்திற்காக நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு நடந்தது தான் உனக்கே தெரியுமே, பப்பாக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேனே தவிர, எனக்கு முக்தா மேல எந்த விருப்பமுமில்ல, அதேபோல உன்னை ஏத்துக்கிட்டதும் அவருக்காக தான், என்னடா இப்படி சொல்றானேன்னு யோசிக்காத, அதுதானே உண்மை. ஆனா என் மனசும் மாறும், ஆனா அதுக்கு எத்தனை நாள் ஆகும்னு தெரியல, ஆனா மாறும். 
 
அதுக்கு நீயும் முயற்சி எடுக்கணும், உன்னைப்பத்தி வெளிப்படையா சொல்லணும், ஆனா அது எப்போன்னு நீதான் முடிவு செய்யணும், அதுவரை நானா எதுவும் கேட்க மாட்டேன். தேவையில்லாம சின்ன சின்ன விஷயத்துக்கு அழுவாத, அப்புறம் நைட் சாப்பிடாம படுக்கறது நல்லதில்ல, கொஞ்சமா சாப்பிட்டா கூட பரவாயில்லை. அதனால நான் உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரேன் சாப்பிடு.” என்றவன் எழுந்து சென்றான்.
 
அவனுக்கு முக்தா மீது எந்த விருப்பமுமில்லை என்பதே அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதேபோல் அவள் யாரென்று சொல்லி அவன் அன்பை பெறுவதிலும் அவளுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதை சொல்லாமல் அவன் தன்னை சுலபத்தில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான் என்பதும் உறுதி. வெறுமனே பிடிக்காத திருமணம், தப்பித்து வந்து உன்னை திருமணம் செய்தேன் என்று சொல்லவும் முடியாது. 
 
அப்போது என்னை ஏன் திருமணம் செய்தாய்? என்று அவன் கேட்டால் என்ன செய்வது? ஏற்கனவே பப்பாவும் இதையே தானே கேட்டார். அவரிடம் உண்மையை கூறிவிட்டோம், ஆனால் யாஷிடம் எப்படி உண்மையை கூறுவது? என்று குழப்பத்துடன் அவள் அமர்ந்திருக்க,
 
“ம்ம் சாப்பிடலாமா?” என்றப்படி இரண்டு தட்டில் உணவோடு வந்தான்.
 
அதில் சப்பாத்தியும் சப்ஜியும் இருக்க, “இன்னும் சில ஐட்டம்ஸ் இருந்துச்சு, உனக்கு எது பிடிக்கும்னு தெரியல, அதான் பொதுவா சப்பாத்தி மட்டும் எடுத்துட்டு வந்தேன். இதை சாப்பிட்டதும் வேற வேணும்ங்கறதை எடுத்துக்கோ,” என்று அவன் கூற,
 
“அய்யோ இதுவே போதும் யாஷ்.” என்று அவள் பதில் கூறினாள்.
 
“அதை சாப்பிட்டுட்டு சொல்லு. நீ மதியமும் சரியா சாப்பிடவேயில்லை. அந்த டிரைவர் ஒரு மொக்கை ஹோட்டலுக்கு நம்மளை மதியம் கூட்டிட்டு போயிட்டான். இது நல்லா இருக்கு சாப்பிடு.” என்று கூறியப்படியே அவனும் சாப்பிட்டான்.
 
அவன் அக்கறையாக நடந்துக் கொண்டதிலேயே அவள் வருத்தமெல்லாம் நீங்கியிருக்க, உண்மையில் பசியெடுப்பதை உணர்ந்து நன்றாக சாப்பிட்டாள். தேவையானதை எடுத்துக் கொண்டு வந்தும் சாப்பிட்டாள். 
 
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “இவ்வளவு பசியை வச்சிக்கிட்டு சாப்பிடமாட்டேன்னு சொன்ன இல்ல, சரி பட்னியா இருன்னு அப்படியே விட்ருக்கணும்,” என்று அவன் கேலியோடு கூற,
 
“விட்ருந்தீங்க, எனக்கு இருந்த பசியில் நைட் உங்களை அப்படியே விழுங்கியிருப்பேன். தப்பிச்சிட்டீங்க” சொல்லிவிட்ட பின் தான் வந்திருப்பது தேனிலவிற்கு, இதற்கு வேறு அர்த்தமும் எடுத்துக் கொள்ள கூடும் என்பதை யோசித்து, நாக்கை கடித்தப்படியே தன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை ஓரப்பார்வையில் பார்க்க, அவன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டான் என்பது அவன் புன்னகைப்பதிலேயே தெரிய, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
 
பின் அறைக்குச் சென்றதும் எங்கு படுப்பது என்பதில் அவளுக்கு குழப்பம் வந்தது. சாப்பிடும்போது அவன் இதுகுறித்து தெளிவாக பேசியிருந்தாலும், அவள் அவனை திருமணம் செய்து வந்த முறைக்கு இயல்பாக அவன் அருகில் படுப்பது அவளுக்கு தயக்கமாக இருந்தது. வீட்டிலோ அவளுக்கு அந்த ஒற்றை படுக்கை அறையை கொடுத்துவிட்டு கிஷனும், யாஷும் வரவேற்பறையில் படுத்துக் கொண்டனர். அதனால் அவளுக்கும் தனக்காக விட்டுக் கொடுக்கிறார்களே என்பதை தவிர, வேறு எந்த சங்கடமும் இருக்கவில்லை.
 
ஆனால் இந்த இரவை கழிப்பது அவளுக்கு பெரும் அவஸ்தையாக இருக்க, அவன் உள்ளே வந்ததும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பார்த்துக் கொண்டிருக்க, அவளோ பால்கனியில் ஏற்கனவே அங்கு போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தவளுக்கு சில நிமிடங்களை கடப்பதே பெரிய விஷயமாக இருந்தது.
 
முதலில் அவளை கவனிக்காமல்  யாஷ் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, அதன்பிறகு தான் அவளை காணவில்லையென்பதை கவனித்தவன், அவள் பால்கனியில் இருப்பதை உணர்ந்து, “என்ன இன்னும் கடலையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கியா? நாம இன்னும் 5 நாள் இங்க தானே இருக்கப் போறோம், நிறைய பீச்சை தான் பார்க்கப் போறோம், அப்புறம் என்ன? உள்ள வந்து படு டயர்டா இல்லையா?” என்றுக் கேட்டான்.
 
இப்போதைக்கு இந்த தேனிலவு என்பது அவளைப்பற்றி தெரிந்து, புரிந்துக் கொள்ள மட்டுமே என்ற மனநிலையில் அவன் இருந்தான். அதன்பிறகு அவளுடன் தன் வாழ்க்கையை ஆரம்பிப்பதிலும் அவனுக்கு எந்த தயக்கமுமில்லை. அதனால் அவளோடு கட்டிலில் படுப்பதை பற்றி அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அதனால் இயல்பாக அவளை அழைக்க, இதற்கு மேலும் பால்கனியில் அமர்ந்திருப்பது நல்லது இல்லை என்பதால் அவள் அறையின் உள்ளே வந்தாள்.
 
“கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு தூங்கறேன், உனக்கு டிஸ்டர்ப் இருக்காதே என்றுக் கேட்டப்படி கட்டிலில் ஒரு ஓரமாக அவன் தள்ளி அமரவும், அவளுக்கு இடம் கொடுக்க தான் தள்ளி அமருகிறான் என்பதை உணர்ந்தவள், இதற்கு மேலும் தயக்கம் காட்டக் கூடாது என்பதை உணர்ந்து கட்டிலின் இன்னொரு பக்கம் சென்று அமைதியாக படுத்துக் கொண்டாள். அதுவும் உறங்க முயற்சிப்பது போல் கண்களை மூடிக் கொண்டாள்.
 
முதலில் அவள் பால்கனியில் அமர்ந்திருந்தது கூட அவனுக்கு சாதாரணமாக தான் இருந்தது. ஆனால் இப்போது வேகமாக வந்து கட்டிலில் படுத்து உறங்க முயற்சிப்பவளை பார்த்த போது தான் அவளது தயக்கம் புரிந்தது. ‘இப்படி தயக்கம் காட்டுபவள் எதற்காக என்னை திருமணம் செய்துக் கொண்டாளாம்? அதுவும் முகத்தை மூடி வேறொரு பெண் போல, உண்மையிலேயே அவள் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மட்டும்தானா?’ என்று அவன் யோசிக்க,
 
அப்படி ஒரு திருமணம் செய்துக் கொண்டதால் மட்டுமே அவளுக்கு அந்த தயக்கமே தவிர, அவனை திருமணம் செய்ததால் அல்ல, இப்படி ஒரு நிகழ்வு தன் கனவில் கூட நடக்காது என்று அனைத்தையுமே மறக்க முயற்சித்திருந்தவளுக்கு இந்த திருமணம் எத்தனை பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பதை அவன் தெரிந்துக் கொள்ளும் நாள் எப்போது வரும்?

தேனன்பு தித்திக்கும்..