TTA 6

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 6

திருமணம் முடிந்த மறுநாள் ரித்து அறையிலேயே முடங்கியிருக்க, அப்போதுதான் கபிலன் யாஷை பார்க்க வீட்டிற்கு வந்தான். திருமணம் நடந்த நாளன்று கபிலனுக்கு ஒரு முக்கியமான வேலை வந்துவிடவே வர முடியாததால், அன்று வந்திருந்தான். அவன் வந்த நேரம் யாஷ் வீட்டில் இல்லை. கிஷன் வீட்டு வேலையில் இருக்க, அவனை பார்த்ததும், “அடடே வா வா கபிலா, எப்படியிருக்க?” என்று வரவேற்று விசாரித்தார்.

“நல்லா இருக்கேன் ப்பா,” என்று அவருக்கு பதில் கூறியவன், “யாஷ் எல்லாம் சொன்னான் ப்பா, நீங்க எல்லாம் யோசிச்சு தான் முடிவெடுப்பீங்க, எனக்கு தெரியும், இருந்தாலும் நீங்க அந்த பொண்ணு விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களோன்னு தோனுது ப்பா.” என்று சொல்ல,

“எனக்கு யாஷ் வாழ்க்கையில் அக்கறை இல்லைன்னு நினைக்கிறீயா கபிலன். ஒருவேளை அவனுக்கு முக்தாவை கல்யாணம் செய்து வச்சிருந்தா கூட அவன் சந்தோஷமா வாழ்வானான்னு சந்தேகம் இருந்திருந்திருக்கும், ஏன்னா நானே கொஞ்சம் குழப்பத்தோடு தான் அந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்தேன். ஆனா ரித்து விஷயத்தில் எனக்கு எந்த குழப்பமுமில்ல, அந்த பொண்ணோட யாஷ் வாழ்க்கை நல்லா இருக்கும்,” என்று அவர் உறுதியாக கூறினார்.

“நீங்க சொன்னா சரி தான் ப்பா, ஆனால் அந்த பொண்ணோட குடும்பத்தில் யாராவது ஏதாவது பிரச்சனை செய்தா, என்ன செய்றது?”

“பிரச்சனை இந்நேரம் வந்திருக்கணுமே, இதுவரையில்லை. இனியும் வராதுன்னு நம்புவோம், வந்தாலும் அந்த பொண்ணு இப்போ யாஷோட மனைவி. அவங்களால ஒன்னும் செய்ய முடியாது.”

“எல்லாம் நல்லதா நடந்தா சந்தோஷம் தான் ப்பா.”

“எல்லாம் நல்லதா தான் நடக்கும் கபிலன். அதுக்கு நம்மளும் முயற்சி எடுக்கணும், யாஷ்க்கிட்ட என்னோட முடிவை சொன்னதும் சரின்னு ஏத்துக்கிட்டான். ஆனா என்கிட்டேயும் ரித்துக்கிட்டேயும் முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கான். ஒரு ஃப்ரண்டா நீதான் அவனுக்கு புரிய வைக்கணும்,”

“புரியுது ப்பா. நான் அவனோட பேசறேன். அதுவுமில்லாம அவன் கல்யாணத்துக்காக சர்ப்ரைஸா ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்.”

“அப்படியா? என்ன கபிலன் அது?”

“அந்தமானுக்கு ஹனிமூன் ட்ரிப் ப்பா. அவன் ஆக்ஸிடெண்ட் ஆகி வீட்ல இருந்தப்ப, ஆஃபிஸ்ல நாங்கல்லாம் அந்தமான் போனோமில்ல, அவனை விட்டு போக எனக்கு மனசேயில்லை. ஆனா அவன் தான் கேட்கல, நீ எனக்காக போகாம இருக்காத, போன்னு சொல்லி கட்டாயமா அனுப்பி விட்டான். அதான் அவன் மேரேஜ் கிஃப்ட்டா இந்த ப்ளான் போட்டு வச்சேன். ரெண்டுப்பேரும் ஹனிமூன் போனா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க சான்ஸ் இருக்கு ப்பா.”

“நீ சொல்றது சரிதான் கபிலன். ஆனா யாஷை நம்பி அந்த பொண்ணை அனுப்ப பயமா இருக்கே, கோபத்தில் அவன் அவளை அடிச்சு வச்சிட்டா என்ன செய்றது?”

“அப்பா உங்களுக்கு யாஷை பத்தி தெரியாதா? கோபமெல்லாம் 2 நாளுக்கு மேல அவன்கிட்ட தங்குமா? அதிலும் தனியா ஒரு பெண்ணை கூட்டிட்டு போறவன் பொறுப்பில்லாம நடந்துக்க மாட்டான் ப்பா. என்ன ஹனிமூன் போக அவனை சம்மதிக்க வைக்கணும், ஏன்னா நாளை மறுநாளே ரெண்டுப்பேரும் கிளம்ப வேண்டியிருக்கும், நான் முக்தாவோட அவன் கல்யாணம் நடக்க இருந்ததால உடனே அவங்க ஹனிமூன் போனா நல்லா இருக்கும்னு ப்ளான் போட்டுட்டேன். நல்லவேளை சர்ப்ரைஸ் ப்ளான் என்பதால், ஒரு கப்பிள்னு சொல்லி மட்டும் தான் ஏற்பாடு செய்து வச்சிருக்கேன். இனிதான் அவங்களுக்கான டிக்கெட்ஸ்ல்லாம் ஏற்பாடு செய்யணும், அதனால அவனை சம்மதிக்க வைக்கணும் ப்பா,”

“ரெண்டுப்பேரும் ஹனிமூன் போனா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிப்பாங்கன்னா, நானே அவனை சம்மதிக்க வைக்கிறேன். நீயும் பேசு.” என்றவர்,

“இன்னும் யாஷோட மனைவியை நீ பார்க்கல இல்ல, இரு கூப்பிட்றேன்.” என்றவர், “ரித்து பேட்டீ,” என்று குரல் கொடுக்க,

“ஹான் பப்பா,” என்றப்படி ரித்து தனது அறையிலிருந்து வந்தாள்.
புதிதாக ஒருவர் கிஷனுடன் அமர்ந்திருப்பதை பார்த்து தயக்கத்துடன் அவர் அருகில் வந்து அவள் நிற்கவும், “பேட்டீ, இது கபிலன். நம்ம யாஷோட பெஸ்ட் ஃப்ரண்ட். ரெண்டுப்பேரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்த்தாங்க,” என்று கிஷன் அவனை அறிமுகப்படுத்தி வைக்க,

‘வேலைப் பார்த்தாங்களா? அப்போ இப்போ ஒன்னா வேலைப் பார்க்கலையா?’ என்று மனதிற்குள் நினைத்தப்படி, “நமஸ்தே பய்யா.” என்று அவனை கைக்கூப்பி வணங்கினாள்.

கபிலனுக்குமே அவளைப் பார்க்கும்போது தப்பாக ஏதும் தோன்றவில்லை. யாஷிற்கு பொருத்தமான ஜோடி என்றுதான் நினைத்தான். ஆனாலும் அவளைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று யாஷ் அலைபேசியில் கூறியிருந்ததால் இவளோடு யாஷ் கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டுமென்று மனதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெறுமனே அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“பேட்டீ, கபிலனுக்கு முக்கியமான ஒரு வேலை வந்ததால் அவனால நேத்து உங்க கல்யாணத்துக்கு வர முடியல, அதான் இப்போ பார்க்க வந்திருக்கான். அதுமட்டுமில்ல யாஷ்க்கு என்ன மேரேஜ் கிஃப்ட் கொடுக்கப் போறான் தெரியுமா? உங்க ரெண்டுப்பேரையும் ஹனிமூன்க்கு அந்தமான் அனுப்பப் போறான்.” என்று கிஷன் மகிழ்ச்சியாக கூற,

“ஹனிமூனா?” என்று அவள் குழப்பத்தோடு கேட்டாள்.

“ஹான் பேட்டீ, அந்தமானுக்கு போகப் போறீங்க, சர்ப்ரைஸ் கிஃப்ட்னு எல்லாம் ரகசியமா திட்டம் போட்டு வச்சிருக்கான்.” என்று அவர் சிரித்தப்படி சொல்ல,

‘யாஷிற்கும் முக்தாவிற்குமான திருமணத்திற்காக தான் இந்த சர்ப்ரைஸ் ப்ளான் இருக்குமென்று நினைத்தவள், “பப்பா, இந்த ஹனிமூன் ப்ளான்க்கு கண்டிப்பா யாஷ் கோபப்படுவாங்க, அதனால அதெல்லாம் வேண்டாம்,” என்று அதை மறுத்தாள்.

“இப்படியே அவன் கோபப்படுவான்னு நீ ஒதுங்கியே இருந்தா, அப்போ எப்போ தான் நீங்க ஒன்னா சந்தோஷமா வாழறது. எது நடந்தாலும் பார்த்துக்கலாம்னு தானே தைரியமா அவனை கல்யாணம் செய்துக்கிட்ட, இப்போ இப்படி ஒதுங்கினா எப்படி?” கிஷன் கேட்க,

“அந்த கோபம் யாஷ்க்கு இன்னும் குறையல, அதுக்குள்ள ஹனிமூன் போகணும்னு சொன்னா யாஷ்க்கு இன்னும் கோபம் தானே வரும், அதுக்கு தான் சொல்றேன் பப்பா, இதெல்லாம் இப்போ வேண்டாம்,” என்று மீண்டுமே அதை மறுத்தாள்.

“யாஷை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு சிஸ்டர். அதனால நீங்க தயங்காதீங்க, அதுவுமில்லாம யாஷ் கோபமெல்லாம் ரொம்ப நாள் இருக்காது பயப்படாதீங்க, ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்க தான் இந்த ஹனிமூன் ட்ரிப், அதனால ஜாலியா ட்ரிப்பை எஞ்சாய் செய்துட்டு வாங்க,” என்று கபிலன் கூற, பதிலுக்கு ரித்து சங்கடத்தோடு புன்னகைத்தாள்.

அந்தநேரம் யாஷ் வீட்டுக்கு நுழைந்தவன், “வாடா கபில்,” என்றப்படியே அருகில் வர, இருவரின் நலம் விசாரிப்புக்குப் பின், 

“யாஷ், அப்புறம் முக்கியமான விஷயம் டா. உங்க மேரேஜ் கிஃப்ட்டா நீங்க ரெண்டுப்பேரும் அந்தமான்க்கு ஹனிமூன் போக ஏற்பாடு செய்திருக்கேன். ஜாலியா போய் எஞ்சாய் செய்துட்டு வரீங்க, சரியா?” என்று கபிலன் கூற,

“டேய் எதுக்குடா இதெல்லாம்? வேலைவெட்டி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே தப்பு. இதில் இந்த ஹனிமூன் தான் முக்கியமா? அதுவும் எனக்கு நடந்த கல்யாணத்துக்கு, இதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. இப்படி லூசுத்தனமா ஏதாவது செய்யாத,” என்று யாஷ் சலிப்போடு கூறினான்.

‘யாஷ்க்கு இப்போ வேலையில்லையா? அதான் அடிக்கடி சிடுசிடுக்கிறாங்களா?’ ரித்து யோசித்தப்படி நின்றிருக்க,

“ஹே உனக்கு நடந்த ஆக்ஸிடெண்டால தானடா உன்னை வேலையை விட்டு எடுத்தாங்க, சொல்லப்போனா உன்னைப் போல ஒரு நல்ல ஸ்டாஃபை அந்த கம்பெனி இழந்துடுச்சு, சீக்கிரமே உனக்கு நல்ல வேலை கிடைக்கப் போகுது, அப்புறம் ஏன் நீ இப்படி பேசற?” என்று கபிலன் யாஷ்க்கு சமாதானம் கூறினான்.

‘அய்யோ யாஷ்க்கு ஆக்ஸிடெண்ட் வேற நடந்துச்சா? பெரிய ஆக்ஸிடெண்ட்டா? ஒன்னும் பிரச்சனை ஆகியிருக்காதே? பப்பாக்கிட்ட அப்புறம் அதைப்பத்தி கேட்கணும்,’ என்று ரித்து மனதில் பேசிக் கொண்டிருக்க,

“ஹே வேலை கண்டிப்பா கிடைக்கும் கபில், அதில் ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா ஹனிமூன் போக செலவை யோசிச்சியா? எதுக்குடா இதெல்லாம்?” என்று மீண்டும் யாஷ் கபிலனைப் பார்த்துக் கேட்டான்.

“டேய், இது என்னோட கிஃப்ட்னு முன்னமே சொல்லியிருந்தேனே ஞாபகம் இல்லையா? அங்க எல்லாமே அரேஞ்ச் செய்தாச்சு, இப்போதைக்கு உங்க பேர்ல ஃப்ளைட் டிக்கெட், அப்புறம் ரூம் புக் செய்றது மட்டும் தான் பாக்கி. அதுவும் முன்னமே ரெடி தான், இது சர்ப்ரைஸ் என்பதால இப்போ உங்க பேர்ல எடுக்கணும் அவ்வளவுதான், அதனால அங்க கைச்செலவுக்கு மட்டும் பணம் கொண்டு போனா போதும், அதுக்கும் நானே கொடுத்து அனுப்புறேன். நீ வேலை கிடைச்சதும் மெதுவா கொடுத்தா போதும்,” என்று கபிலன் கூற, யாஷ் அப்போதும் மௌனமாகவே இருக்க,

“யாஷ் உன்னோட கல்யாணத்துக்கு கிஃப்ட்னு கபிலன் முன்னமே இந்த ஏற்பாடு செய்திருக்கான் போல, அதை இப்போ கேன்சல் செய்தா அவனுக்கு நஷ்டம் தானே, அதனால் நீங்க போயிட்டு வாங்கடா, ஒருவிதத்தில் நீங்க ஹனிமூன்க்கு போறதும் நல்லதுக்கு தான், இப்படியே ரித்துக்கிட்ட எத்தனை நாள் முகத்தை திருப்பிக்கிட்டு போவ, நீங்க ரெண்டுப்பேரும் உங்க வாழ்க்கையை வாழ வேண்டாமா? அதனால இந்த ஹனிமூன்க்கு நீ ரித்துவை கூட்டிட்டு போகணும்,” என்று கிஷன் கூறினார்.

“என்னால முடியாது பப்பா, நீங்க சொன்னீங்கன்னு தான் இவளை இங்க இருக்க வச்சிருக்கேன். மத்தப்படி இவளோட வாழ எனக்கு சுத்தமா விருப்பமேயில்லை. எல்லாத்துக்கும் என்னை நீங்க கட்டாயப்படுத்த முடியாது பப்பா.” என்று அவனும் பதிலுக்கு கோபமாக பேச,

“நான் எங்கே உன்னை கட்டாயப்படுத்தினேன். இதுதான் என்னோட முடிவு. உன்னோட முடிவை நீ சொல்லுன்னு சொன்னப்போ, நீ ஒன்னும் மறுக்கலையே, அதனால தான இந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். இப்போ நீ இப்படி பேசினா என்ன அர்த்தம்?
நீ இந்த பொண்ணோட வாழ முடியாதுன்னா சொல்லு அவளை அனுப்பி விட்டுட்றேன். ஆனா அப்புறம் நானும் இந்த வீட்ல இருக்க மாட்டேன். ஏன்னா நான்தானே ரித்துவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அதனால அந்த பொண்ணை என்னால தனியா விட முடியாது. எதுவா இருந்தாலும் இப்போ முடிவா சொல்லு.” என்று கிஷன் ஒரு உறுதியோடு கேட்க,

அவர் சொன்னதை செய்வார் என்பது அவர் பேச்சில் புரிய, “இப்போ என்ன ஹனிமூன் போகணும் அதானே, போறேன். ஆனா நான் இவளை கூட்டிட்டு ஹனிமூன் மட்டும் தான் போக முடியும், ஆனா அவளோட வாழ வைக்க நீங்க கட்டாயப்படுத்த முடியாது. அதை நல்லா புரிஞ்சிக்கோங்க,” என்றவன் கோபத்தோடு அங்கிருந்து சென்றுவிட,

“அதான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் பப்பா, இருந்தாலும் நீங்க யாஷ்க்கிட்ட இவ்வளவு கடினமா பேசியிருக்க வேண்டாம்,” என்று ரித்து வருத்தமாக பேசினாள்.

“அதெல்லாம் அவனுக்கு இப்படி அதிரடி ட்ரீட்மெண்ட் தான் வேலைக்கு ஆகும் சிஸ். அப்பா சரியா தான் செஞ்சுருக்கார். நீங்க கவலைப்படாதீங்க,” என்று கபிலன் அதற்கு சமாதானம் கூற,

“இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு,” என்று சொன்னவள், “பய்யா, நான் உங்களை விட சின்னவ தானே, என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க,” என்றாள்.

“சரி ரித்து. அப்புறம் நான் உங்களுக்கான டிக்கெட்ஸ்க்கு ஏற்பாடு செய்திட்றேன். உன்கிட்ட ஆதார்கார்ட், பாஸ்போட் இப்படி ஏதாவது இருக்கா, ஐடி ப்ரூஃப்க்கு கேட்பாங்க,” என்று சந்தேகத்தோடு கேட்டான். ஏனென்றால் அவளைப் பற்றி இதுவரை ஒன்றுமே தெரியாதே, அவள் வீட்டை விட்டு வரும்போது அதையெல்லாம் கொண்டு வந்தாளோ இல்லையோ? என்ற சந்தேகமும் இருக்கவே,  அவன் தயக்கத்தோடு கேட்க,

நல்லவேளை பூனாவிலிருந்து சென்னை வந்த போது இது எல்லாம் தேவைப்படும் என்று தன் கைப்பையில் வைத்திருந்தாள். பார்லரிலிருந்து வரும்போது கைப்பையை தன்னோடு எடுத்து வந்ததும் ஒருவிதத்தில் நல்லதாகிவிட, “இருங்க எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லி, தன் கைப்பையிலிருந்து எடுத்து வந்து அவளது ஆதார்கார்டை கொடுக்க, அதில் அவள் சொன்ன பெயர் தான் இருந்தது. அதுவே இவள் தன்னைப்பற்றி ஓரளவு உண்மையை தான் கூறியிருக்கிறாள் என்பதை கபிலனுக்கு புரிய வைத்தது.

கபிலன் சென்றதும் ரித்து கிஷனை பார்க்க, “யாஷ் பேசினதுக்கு வருத்தப்படாத பேட்டீ, அவனுக்கும் கொஞ்சம் கோபம் இருக்குமில்ல, ஆனா எல்லாம் ஹனிமூன் போயிட்டு வந்தா சரியாகிடும், நான் சொல்றது நடக்கும் பாரு.” என்று சொல்லிவிட்டு சென்றார்.

கபிலன் வீட்டிலிருந்து வெளியே வர யாஷ் வெளியில் தான் நின்றிருந்தான். “என்னடா அப்பாக்கிட்ட இப்படி தான் பேசுவியா?” என்று கபிலன் அவனிடம் கேட்க,

“பார்த்தல்ல யாருன்னே தெரியாத அவளுக்காக அவர் வீட்டை விட்டு போவாராம், இப்படி பேசினா கோபம் வராதா?” என்று கோபமாக பேசினான்.

“அவர் ரித்துவை யாரோவா பார்க்கல, உன்னோட மனைவியா பார்க்கிறார். ஒரு அப்பாவா உன்னோட வாழ்க்கை சரியாகணும்னு நினைக்கிறார். அது தப்பா?

இங்கப்பாரு ஹனிமூன் போனா கணவன் மனைவிக்குள்ள எல்லாம் நடக்கணும்னு அவசியமா என்ன? அப்பாக்காக ரித்துவை ஏத்துக்க முடிவு செய்துட்ட, அவளைப் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டாமா? இந்த ஹனிமூன் ட்ரிப் அதுக்கு உதவுமில்ல,”

“ஆமாம் அவ முதலில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாளா?”

“நீ கேட்டீயா? இதுவரை அவக்கிட்ட பேசவேயில்லை. அப்புறம் எப்படி தெரிஞ்சிப்ப, அப்பா அவளோட பேசியிருக்கார்னு நினைக்கிறேன். அவரை பொறுத்தவரை அவ நல்லப் பொண்ணா இருப்பான்னு தான் நம்பறார். எனக்கும் அப்படித்தான் தோனுது டா. இங்கப்பாரு ஐடி ப்ரூஃப் கேட்டதும் ஆதார்கார்டை டக்குன்னு எடுத்து கொடுத்திருக்கா, இதில் அவ சொன்ன பேர் தான் இருக்கு. அட்ரஸ் கூட இருக்குடா. தப்பான நோக்கத்தில் வந்தா தயங்காம இதை கொடுப்பாளா? 

என்னைக் கேட்டா அவக்கிட்ட பேசினாலே அவளைப்பத்தி சொல்லிடுவா. முறைப்படி நடந்த கல்யாணம் ஒன்னுமில்லாம போகக் கூடாதுன்னு அப்பா நினைக்கிறார். நீயும் அதுக்கு உன்னால ஆன முயற்சியை செய்றதில் என்ன தப்புடா. இதுவே இப்படியில்லாம நல்லவிதமா ரித்து உன்னோட வாழ்க்கையில் வந்தா அவளை உன்னால மிஸ் செய்திட முடியுமா? அப்படி யோசிச்சுப் பாரு. போ அந்தமான் டூரிசம் போய் உங்க டிக்கெட் கன்ஃபார்ம் விஷயமா பேசிட்டு வரலாம், உன்னோட ஐடி ஃப்ரூஃபை எடுத்துட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்.” என்று கபிலன் சொல்ல, சின்ன தலையசைவுடன் அவன் வீட்டிற்குள் சென்றான்.

தன் ஆதார் கார்டை எடுக்க அவன் தன் அறைக்குச் செல்ல, அங்கே ரித்து அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் எழுந்து அமர, கபிலனிடம் ஹனிமூன் செல்வதற்கு ஒத்துக் கொண்டாலும், அவளைப் பார்த்து, “கபிலனும் பப்பாவும் நம்ம ரெண்டுப்பேரும் அந்தமானுக்கு ஹனிமூன் போகணும்னு சொன்னதும், நீயும் சரி சரின்னு தலையாட்டிட்டீயா?” அவன் கோபத்தோடு கேட்க,

“நான் எங்க சரின்னு சொன்னேன். உங்களை கேட்கணும்னு தானே சொன்னேன். உங்களுக்கு விருப்பம்னா போலாம்னு சொன்னேன். இப்போதும் உங்களுக்கு வேண்டாம்னா போக வேண்டாம்,” என்று அவள் பொறுமையாக பதில் கூறினாள்.

“எனக்கு விருப்பம் இருந்தா மட்டும் நீ என்னோட வந்துடுவியா? ஆமாம் எந்த தைரியத்தில் நீ என்னோட அந்தமானுக்கு ஹனிமூன் வர சம்மதிச்ச? உன்மேல எனக்கு இருக்க கோபத்தில் நான் உன்னை தனியா கூட்டிட்டு போய் கடலில் தள்ளிவிட்டு வந்தாலும் வந்துடுவேன் பார்த்துக்க,” அவன் கோபத்தோடு சொல்ல,

“உங்களுக்கு என் மேல எவ்வளவு கோபம் வேணும்னாலும் இருக்கலாம் யாஷ், ஆனா எப்போதும் நீங்க அப்படி செய்ய மாட்டீங்க, உங்களால செய்யவும் முடியாது.” என்று அவள் தீர்க்கமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஆனால் அவளது பதிலில் யாஷ் தான் பே என்று விழிக்க வேண்டியதாகி போனது. கொஞ்சம் பயம் காட்டலாம் என்று பார்த்தால், என்னை நன்றாக தெரியும் என்பது போல் அவளது பேச்சு இருக்கிறதே என்று வியந்தும் போனான்.

மொத்தத்தில் திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் அவர்கள் தனியாக பேசியது என்றால் இந்த சில நிமிட பேச்சுக்கள் தான், அப்படியிருக்க யாஷின் தந்தை விடாப்பிடியாக அவர்கள் இருவரையும் அந்தமானிற்கு தேனிலவுக்காக அனுப்பி வைக்க நினைத்தார்.

இப்போது ரித்துவிற்கு அடுத்த சங்கடம் என்னவென்றால், மாற்றுடையாக கிஷன் எடுத்துக் கொடுத்த இரண்டு செட் உடைகளே இருக்க, இப்போது அந்தமான் செல்வதென்றால் இன்னும் சில செட் உடைகளும் மற்ற அத்தியாவசிய பொருட்களும் தேவைப்படும், ஆனால் அதை வாங்குவதற்கு பணம் வேண்டுமே? யாஷ் இப்போது தானே தனக்கு வேலையில்லாததையும் பணப் பிரச்சனையை பற்றியும் பேசினான். அப்படியிருக்க இந்த செலவுக்காக பணம் கேட்பதற்கு அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
இன்னும் சொல்லப் போனால் தன் கைப்பையில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாமே இருக்கிறது. தன் அலைபேசியில் புது சிம் மாற்றுவதற்கு முன்பு தந்தைக்கு, “நான் கொஞ்ச நாளாவது உங்களை விட்டு ஒதுங்கியிருக்க நினைக்கிறேன் பப்பா, ப்ளீஸ் என்னை தேடாதீங்க,” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பழைய சிம்மை எடுத்துவிட்டாள்.

அவரது பதிலை கூட தெரிந்துக் கொள்ள தோன்றவில்லை. அவர் தன்னை புரிந்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலவு செய்தாலும் அதற்கு அவர் எதுவும் சொல்லமாட்டார் என்ற புரிதலும் இருந்தது. ஆனால் அதையும் மீறி அன்னை மேல் இருக்கும் காதலில் தன்னை தேட முயற்சித்தால், அதனால் தான் உபயோகிக்கும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் தான் இருக்குமிடத்தை கண்டுப்பிடிக்க நினைத்தால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. அதனால் அதை உபயோகப்படுத்த வேண்டாமென்று முடிவு செய்தாள்.

ஆனால் இப்போது இந்த செலவுக்கு என்ன செய்வது? என்ற குழப்பத்தோடு கையை பிசைந்த போது தான் கையில் இருந்த மோதிரம் தட்டுப்பட்டது. உடனே கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியும் ஞாபகம் வர, இது இரண்டும் அவளுக்கு அவளுடைய தாதி வாங்கிக் கொடுத்தது. அதை என்றுமே கழட்டியதில்லை. இப்போதைக்கு இதை விற்று தேவையானதை வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவள் வரும்போதே கிஷன் அறைக் கதவை தட்டினார்.

“உள்ள வாங்க பப்பா,” அவள் கூறவும் உள்ளே வந்தவர்,

“ரித்து பேட்டீ, அன்னைக்கு அவசரத்துக்கு ரெண்டு ட்ரஸ் தான் எடுத்தோம், இப்போ நீங்க அந்தமான் போக இன்னும் சில ட்ரஸ் அப்புறம் வேற ஏதாச்சும் தேவையானது வாங்கணுமில்ல, இந்தா இதில் பத்தாயிரம் பணமிருக்கு. கூடவே என்னோட டெபிட் கார்டும் கொடுக்கிறேன். உனக்கு என்ன தேவையோ அதை வாங்கிக்க,” என்று பணத்தையுக் கார்டையும் அவளிடம் நீட்ட,

“உங்களுக்கு நான் நிறைய செலவு வைக்கிறேன் பப்பா, இப்போ தான் இதெல்லாம் வாங்கணும், அதுக்கு பணம் வேணும்னு யோசிச்சேன். சரியா நீங்க பணம் கொண்டு வந்து கொடுக்கறீங்க, ஆனா ஏற்கனவே கல்யாணத்துக்கு நிறைய செலவு செய்திருப்பீங்க, இதில் இந்த செலவு வேறயா? பேசாம இந்த செயினை வித்து கொடுக்கறீங்களா? நான் அதில் தேவையானதை வாங்கிக்கிறேன்.” என்று அவள் செயினை கழட்டப் போக,

“பேட்டீ என்ன செய்ற நீ? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நீ இந்த வீட்டுப் பொண்ணு, யாஷோட மனைவி. எனக்கு மருமகளா இருந்தாலும், எனக்கு பேட்டீ மாதிரி தான், அதனால உனக்கு செலவு செய்றது எங்க கடமையில்லையா?” என்று கேட்டார்.

“இல்ல பப்பா, யாஷ்க்கு இப்போ வேலையில்லாத நேரத்தில் இதெல்லாம் அதிகப்படியான செலவு இல்லையா? அதான்,” என்று அவள் தயங்கியப்படி சொல்ல,

“ஓ யாஷ் சொன்னதை வச்சி சொல்றீயா? இப்போ கொஞ்ச நாளா தான் அவனுக்கு வேலையில்லை. ஆனா சீக்கிரமா அவனுக்கு வேலை கிடைச்சிடும், அதுக்காக வீட்ல கஷ்டமான சூழ்நிலையெல்லாம் இல்ல, எனக்கு பென்ஷன் வருது. எங்க ரெண்டுப்பேருக்கு அதிகமா எவ்வளவு செலவு இருக்கப் போகுது. சொல்லப் போனா கல்யாண வேலையில் பாதி செலவு முக்தா அப்பாவோடது, அதையே நான் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். ஆனா அவசரமில்ல, மெதுவா கொடுத்தா போதும், இப்போ உன்னோட செலவுக்கு மட்டுமில்ல, அங்க அந்தமான்ல உங்களுக்கு ஆகற செலவுக்கும் நானே பணம் தருவேன். கபிலன் கிட்டல்லாம் கேட்க வேண்டாம், உங்களுக்கு செய்றதில் எனக்கு சந்தோஷம் தான் புரியுதா? இப்படி டக்குன்னு நகையை கழட்ற பழக்கமெல்லாம் வேண்டாம் பேட்டீ, சரியா?”

“ம்ம் பப்பா, உங்களை போல ஒரு கேரக்டரை நான் பார்த்ததேயில்லை. உங்களுக்கு மருமகளா வந்தது என்னோட அதிர்ஷ்டம்.” என்று அவள் சொல்லவும், அவர் புன்னகைத்தப்படி அங்கிருந்து சென்றுவிட்டார்.

உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் யாஷ்க்கு நடந்த விபத்தைப் பற்றியோ, இல்லை முக்தாவிற்கும் அவனுக்குமிடையே உறவு எப்படி இருந்தது? அவனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இருந்ததா? என்று அவரிடம் கேட்க நினைத்ததையெல்லாம் ரித்து மறந்து போனாள். 

மறுநாள் அவளுக்கு தேவையானதை வாங்கவே நேரம் சரியாக இருந்தது. அன்றும் பக்கத்து வீட்டு பெண்மணியை தான் கிஷன் அவளுடன் அனுப்பி வைத்திருந்தார். ரித்து பொதுவாக எல்லா உடைகளையும் அணிவாள். ஆஸ்திரேலியாவில் சிலகாலம் ஒரு தமிழ் குடும்பத்தோடு தங்கியிருந்ததால் நன்றாக புடவை அணியவும் தெரியும், அதேபோல் மாடர்ன் உடைகளும் அணிவாள். அவர்களின் பாரம்பரிய உடைகளையும் அணிய அவளுக்கு பிடிக்கும், ஆனால் யாஷ்க்கு எப்படி உடை அணிந்தால் பிடிக்குமென்பது அவளுக்கு தெரியாததால் அவளுக்கு எப்படி உடை எடுக்க என்று தெரியாமல் விழிக்க, பக்கத்து வீட்டு பெண்மணியோ தேனிலவு பயணத்திற்காக உடை எடுக்க வந்திருப்பதால், அவர் விருப்பத்துற்கு ஏற்றது போல் அவளுக்கு எடுத்துக் கொடுக்க, அதையெல்லாம் உடுத்தினால் யாஷிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்று தெரியாததால், மறுக்க தோன்றாமல் அதையே வாங்கி கொண்டாள்.

மணமக்கள் இருவரும் தேனிலவிற்கு செல்வதை கேள்விப்பட்டு சோனாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. தான் ஒன்று நினைத்து செய்ய, அது வேறொன்றாய் முடிந்ததில் அவளுக்கு அவளை நினைத்தே கோபம் வந்தது. “உங்க பப்பாக்கு மூளை குழம்பிடுச்சா, யாருன்னே தெரியாத பெண்ணோட யாஷ் வாழணும்னு சொல்றாரு, ரெண்டுப்பேரையும் ஹனிமூன் அனுப்புறாரு. நம்மளை இப்படி ஹனிமூன் அனுப்பி வைக்கணும்னு அவர் என்னைக்காவது நினைச்சிருப்பாரா? சொந்த தங்கை மகளிடம் இல்லாத அக்கறை, யாருன்னே தெரியாத ஒருத்திக்கிட்ட காட்றாரு.” என்று மணீஷிடம் சண்டைப் பிடித்தாள்.

“இங்கப்பாரு இது யாஷோட ஃப்ரண்ட் கபிலன் செய்ற ஏற்பாடு. அதுவுமில்லாம நாம ஹனிமூன் போலாமான்னு நம்ம கல்யாணம் முடிஞ்சு கேட்டேன். நீதானே வேண்டாம்னு சொன்ன, வேணும்னா இப்போக் கூட நாம எங்கேயாவது ஊருக்கு போலாம், பப்பாவும் நம்மள சந்தோஷமா தான் அனுப்பி வைப்பாரு.” என்று மணீஷ் பதில் கூற,

“நான் எதுக்காக பேசிட்டு இருக்கேன். நீங்க எதைப்பத்தி பேசறீங்க?” என்று அதற்கும் கோபம் கொண்டவள்,
“அந்தப் பொண்ணு ஒரு தீவிரவாதியா கூட இருக்கலாமில்ல, எந்த தைரியத்தில் உங்க பப்பா இதெல்லாம்.செய்றாரு.” என்று கேட்டாள்.

“ஒருத்தரோட நடவடிக்கையும் பேச்சும் வச்சே அவங்க எப்படின்னு பப்பா கண்டுப்பிடிச்சிடுவார். அவருக்கு எல்லாம் தெரியும், நீ தேவையில்லாம பயப்படாத,” என்று அவன் சொல்லிவிட்டு போக,

அவளின் பயமே யாஷிற்கு நல்ல வாழ்க்கை அமைந்திடக் கூடாது என்பது தானே, அதிலும் ரித்து வசதியான வீட்டு பெண்ணாக இருப்பாள் என்று வேறு மணீஷ் முன்பே சொல்லியிருக்க, அதெல்லாம் சேர்ந்து யாஷிற்கு நல்லது நடக்கிறதே என்ற அவளுக்கு எரிச்சலை கொடுப்பது தெரியாமல் அவன் பேசிவிட்டு சென்றதில் கடுப்பானவள், அதை தடுப்பதற்கு வழியேதுமில்லாததால் இன்னும் கடுப்பும் எரிச்சலோடும் சுற்றிக் கொண்டிருந்தாள்.

இப்படி மற்றவர்களின் எண்ணங்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகன், மருமகளை தேனிலவிற்கு அனுப்பி வைத்துவிட்டே கிஷன் ஆசுவாசமானார். இப்படி இங்கு வருவதற்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தவள், அப்படியே அறையிலிருந்து வெளியே வந்து கடற்கரைக்குச் சென்றவள், கடலைப் பார்த்தப்படி அங்கு போடப்பட்டிருந்த மரப்பலகை கொண்ட இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

தேனன்பு தித்திக்கும்..