TTA 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தேன் 5
போர்ட் பிளேயரில் இருந்து புறப்பட்ட கப்பல் ஹேவ்லாக் தீவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. ஒருமணி நேர பயணம். விமானத்தை போலவே மூன்று பிரிவுகளாக கப்பலிலும் இருக்கைகள் இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று இருக்கைகளாக வரிசைப்படுத்தப்பட்டிருக்க, அதில் யாஷ்க்கும் ரித்துவுக்கும் ஜன்னல்புறமாக அமைந்த இருக்கைகளே கிடைத்தது.
முதல் போன்றே ஜன்னல் இருக்கையில் யாஷை அமரச் சொல்லிவிட்டு ரித்து அவன் அருகில் அமர நினைக்க, அதற்கு அடுத்த இருக்கையில் ஒரு நடுத்தர வயது ஆண் அமர்ந்திருந்தார். அவர் இவர்களை கவனிக்க கூட இல்லை. ஒரு புத்தகத்தில் ஒன்றி போயிருந்தார் அவர், இருந்தாலும் ரித்துவை ஜன்னல் இருக்கையில் அமர வைத்துவிட்டு, யாஷ் அவளுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.
விமானத்தில் பயணித்தது போலவே இங்கும் பயணத்தின் போதான எச்சரிக்கை முறைகளை அங்கிருந்த பணிப்பெண் கூற, யாஷ் அதை கவனமாக கேட்டுக் கொண்டான். அவனுக்கு இதெல்லாம் புதுவித அனுபவம். ஒரு சுற்றுலா பயணத்தில் விமானம், கப்பல் என்றெல்லாம் பயணிப்பான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் அவன் நண்பன் கபிலன் மற்றும் அவன் தந்தையின் ஏற்பாடு. அவர்கள் இதை சொன்னபோது எப்படி குதித்தான். ஆனால் இப்போது இந்த வாய்ப்பை இழக்க இருந்தோமே என்றே தோன்றியது.
சுற்றியும் நீல வண்ணத்தில் கடலும், ஜன்னல் வழியாக கொஞ்சம் தொலைவில் வேறொரு தீவும் தெரிய அதைப் பார்த்தப்படி இருந்தான். ரித்துவும் கடலை தான் பார்த்திருந்தாள். ஆனால் நினைவுகள் கிஷனின் வார்த்தைகளில் பதிந்திருந்தது. கப்பலில் ஏறுவதற்கு முன் தான் கிஷனிடம் அவள் பேசியிருந்தாள். யாஷ் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்து அவரே அவளது அலைபேசி எண்ணுக்கு அழைத்திருந்தார்.
“யாஷ் முகம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு பேட்டீ போட்டோல, கண்டிப்பா அவனுக்கு உன்னைப் பிடிக்குது. சீக்கிரமா எல்லாம் சரியாகிடும் பாரு. ஆனா உன்னோட முகம் தான் கொஞ்சம் வாட்டமா இருந்துச்சு. யாஷ் எப்படி நடந்துப்பானோன்னு பயமா இருக்கா, சின்ன சின்னதா உன்னை காயப்படுத்துவான். ஏன்னா நடந்த கல்யாணத்தை நினைச்சு அவனுக்கு இன்னும் கோபம் போகல, அதை அவன் உன்கிட்ட தானே காட்டுவான். அதுக்காக அவனை நினைச்சு பயந்துக்காத, அவன் ரொம்பவே நல்லவன் பேட்டீ,” என்று அவர் சொல்ல,
“ஹான் பப்பா, ம்ம் அப்பப்போ கோபத்தை காட்டினாலும், திரும்ப சமாதானமும் படுத்திட்றாங்க, என்ன அவங்க கோபத்தை காட்டும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு, முன்ன யாஷ் கோபமா நடந்து பார்த்தயில்லையா அதான்,” என்று அவள் பதில் கூறினாள்.
“ம்ம் புரியுது பேட்டீ, நீ யாருன்னு அவனுக்கு சொல்லியிருந்தா, ஒருவேளை எல்லாம் சரியா ஆகியிருக்கும், நீதான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்ட, ஏன்னு தெரியல, இதுக்கு மேலேயாவது அவன்கிட்ட நீ யாருன்னு சொல்லு.” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்திருந்தார்.
அதை இப்போது நினைவுக்கு கொண்டு வந்தவள், அன்று கிஷனிடம் உண்மையை கூறியதையும் நினைவு கூர்ந்தாள்.
அன்று அலைபேசியில் பேசிவிட்டு வந்த கிஷன் மீண்டும் அறைக்குள்ளே வந்து அவள் மீது கோபத்தோடு இருந்த யாஷ் மற்றும் மணீஷ், சோனா மூவரையும் அனுப்பிவிட்டு அவள் அருகில் வந்தவர், “இப்போ தான் ப்யூட்டி பார்லரில் இருந்து போன் வந்துச்சு, அவங்க உண்மையெல்லாம் சொல்லிட்டாங்க, உன்னை காணும்னு உன்னை சேர்ந்தவங்க தேட்றாங்களாம்,” என்று விஷயத்தை சொல்லவும்,
ஏற்கனவே யாஷ் காவல் துறையினரிடம் புகார் கொடுப்பதாக சொல்லியதில் பயத்தோடு இருந்தவளுக்கு, இப்போது எங்கே சுதன் லாலிடம் தன்னை கொண்டு போய் விட்டுவிடுவார்களோ என்ற பயம் அதிகமாகவும், “ப்ளீஸ், என்னை அவங்கக்கிட்ட கொண்டு போய் விட்றாதீங்க, இங்க அவங்க என்னை தேடி வரதுக்குள்ள நானே போயிட்றேன்.” என்று அவள் அவரை பார்த்து கெஞ்சினாள்.
“பேட்டீ, நீ பயப்பட்றது போல ஒன்னுமில்ல, உன்னை காணும்னு பார்லரில் வந்து தேடியிருக்காங்க, உன்னோட போட்டோவை காட்டி கேட்ருக்காங்க, நல்லவேளை உனக்கு மேக்அப் போட்ட பொண்ணுக்கு மட்டும் தான் உன் முகம் ஞாபகமிருக்கு, வந்து கேட்டவங்க ரவுடி மாதிரி இருக்கவும் அந்த பொண்ணு உன்னைப்பத்தி எதுவும் சொல்லலையாம்,
அதுவுமில்லாம இங்க முக்தாவுக்காக நாங்க வாங்கின இந்த ட்ரஸ், நகைகளை தான் அந்த பொண்ணு உனக்கு போட்டு விட்டிருக்கு. போட்றதுக்கு முன்ன உன்கிட்ட காட்டி உன்னோடதான்னு கேட்டப்போ, நீ ஆமாம்னு தலையாட்டவே அந்த பொண்ணும் உனக்கு இதையெல்லாம் போட்டு அலங்காரம் செய்திருக்கு, பார்லருக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா மூலமா முக்தா முகத்தை மூடி வெளியே போனதையும், உள்ள உனக்கு வாங்கி வச்ச ட்ரஸ் அப்படியே இருக்கவும், அவங்க நீ அங்க இருந்து வெளிய போனதா நினைச்சிருக்காங்க,
அந்த பொண்ணும் அதுக்கு மேல உன்னைப்பத்தி சொல்லல, ஆனாலும் ஒரு எச்சரிக்கைக்காக நான் பணம் கட்டும்போது என்னோட நம்பர் கொடுத்துட்டு வந்தேனே, அது மூலமா போன் செய்து விஷயத்தை சொன்னாங்க, இப்போதைக்கு நீ இங்க மாறி வந்தது உன்னை சேர்ந்தவங்களுக்கு தெரியாது.” என்று அவர் விளக்கமாக கூறவும், ரித்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல, உனக்கு ஏற்பாடு செய்த கல்யாணம் கட்டாய கல்யாணமாக இருக்கணும், நான் வந்து கூப்பிடவே அதிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பா நீ எங்கக்கூட வந்துட்ட சரி. ஆனா இங்க வந்து உண்மையை சொல்லியிருந்தா, நாங்களே உனக்கு பாதுகாப்பு கொடுத்திருப்போமே, அதைவிட்டுட்டு இங்க என்னோட மகனை கல்யாணம் செய்துக்க என்ன அவசியம்? இது ஒன்னும் விளையாட்டு விஷயமில்ல பேட்டீ, அவசரப்பட்டுட்டீயே, இதனால உங்க ரெண்டுப்பேரோட வாழ்க்கையும் கேள்விக்குறியா நிக்குதே,” என்று கிஷன் வருத்தப்பட்டார்.
அது அவளை பாதிக்க, “பப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நீங்க சொன்னது போல தான் உங்க எல்லோரிடமும் உண்மையை சொல்லிட்டு இங்க இருந்து போயிடணும்னு நினைச்சேன். ஆனா அது யாஷை பார்க்கும்வரை தான், கல்யாண மாப்பிள்ளை யாஷ்னு தெரிஞ்சப்போ, என்னால முன்ன எடுத்த முடிவில் உறுதியா நிற்க முடியல,” என்று அவள் கூற, கிஷனோ அதிர்ச்சியானார்.
“என்ன பேட்டீ சொல்ற? என்னோட பேட்டா யாஷை உனக்கு முன்னமே தெரியுமா? நீ சொல்றது எனக்கு புரியல, என்ன சொல்ல வர?” என்று அவர் கேட்க,
“ஆமாம் பப்பா, எனக்கு யாஷை முன்னமே தெரியும்,” என்று உண்மையை உரைத்தவள், “உங்களை பப்பான்னு கூப்பிடலாமில்ல,” என்றுக் கேட்க, அதுவே அவரை நெகிழ வைத்தது.
“எப்படி யாஷை உனக்கு தெரியும்?” என்று அவர் கேட்க, அவளும் அவனை எப்படி தெரியும் என்ற விஷயத்தை கூறினாள்.
“ஆனா யாஷ்க்கு உன்னை அடையாளம் தெரியவே இல்லையே? நீயே பார்த்தல்ல? என்று அவர் கேள்வியெழுப்ப,
“அப்போ நான் குண்டா இருப்பேன். அதனால என்னை சரியா அடையாளம் தெரியலையோ என்னவோ, இல்ல கொஞ்ச நாள் தானே பழக்கம், அதனால என்னை மறந்திருக்கலாம், ஆனா யாஷை நான் பார்த்ததுமே கண்டுப்பிடிச்சிட்டேன். ஏன்னா எனக்கு யாஷை ரொம்ப பிடிக்கும், யாஷோட முகம் என்னோட மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு, ஆனா அதுக்காக யாஷை நான் கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கல, யாஷ் மத்தவங்க முன்ன அவமானப்படக் கூடாது என்பதால் தான் நான் இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டேன்.” என்ற அவளது பதிலில், கிஷன் குழம்பினார்.
“உங்கக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல, நமக்கு இப்போ தான் அறிமுகம். ஆனா சொல்லித்தான் ஆகணும், முக்தா வீட்டைவிட்டு போனதில் யாஷோட அண்ணிக்கும் சம்பந்தம் இருக்கு. யாஷோட கல்யாணம் நின்னு எல்லோர் முன்னும் யாஷ் அவமானப்படணும்னு அவங்க நினைச்சாங்க, நான் முக்தா இல்லன்னு முன்னமே அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு இருந்தும் வேணும்னே யாருன்னே தெரியாத என்னை யாஷ் கல்யாணம் செய்து கஷ்டப்படணும்னு விரும்பினாங்க,
அவங்க விருப்பப்படி யாஷ் என்னை கல்யாணம் செய்ததுக்குப் பிறகு என்ன நடக்கும்னு எனக்கு தெரியல, ஆனா யாஷை கல்யாணம் செய்துக் கொள்ளும் பெண் ஓடிப் போயிட்டதால யாஷ் மத்தவங்க முன்ன அவமானப்படக் கூடாதுன்னு நினைச்சேன். அதான் துணிஞ்சு மணமேடை ஏறினேன்.
இங்கப்பாருங்க என்ன இருந்தாலும் நான் செய்தது தப்பு தான், அதுக்கு நீங்க என்ன தண்டை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். இங்க இருந்து போக சொன்னாலும் போகிறேன். ஆனா என்னை தேடிட்டு இருக்கவங்க கிட்ட மட்டும் என்னை கொண்டு போய் விட்றாதீங்க, என்னை கல்யாணம் செய்து கொடுக்க இருந்த சுதன் லாலுக்கு என்னை விட 20 வயசு அதிகம். என்னை கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணதுக்கு ஒத்துக்க வச்சாங்க,” என்று அவள் கெஞ்சலாக கூற,
அவள் பொய் உரைப்பதாக கிஷனால் நினைக்க முடியவில்லை. ரித்துவை அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவள் மருமகள் சோனாவை பற்றி நன்றாக தெரியுமே, ரித்து சொன்னது போல் அவள் செய்யக் கூடியவள் தான், என்பது மறுக்க முடியாத உண்மை. யாரோ ஒருத்தி தன் மகனக்கு அவமானம் நேரிடக் கூடாது என்று நினைக்க, தன் சொந்த மருமகள் இப்படி தன் மகனுக்கும் குடும்பத்திற்கும் கெடுதல் நினைக்கிறாளே என்பதை நினைத்துப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது.
மணீஷ் அவளை காதலித்தான். இன்னமும் காதலிக்கிறான். அதனால் அவள் என்ன செய்தாலும் அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் யாஷ் ஏன் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே சேமித்து வைத்த பணத்தையெல்லாம் வீடுக்கட்ட கொடுத்துவிட்டு, இப்போது கையில் ஒரு வேலைக் கூட இல்லாமல் இருக்கும் மகனது வாழ்க்கையில் சோனா இன்னும் பிரச்சனைகள் ஏற்படுத்த நினைப்பதை கண்டு அவருக்கு கோபம் வந்தது. ஆனால் மணீஷுக்காக அதை பொறுத்துக் கொண்டார்.
ஆனால் அதேநேரம் சோனா நினைத்ததும் நடக்கக் கூடாது என்ற உறுதியில் அவர் இருந்தார். கட்டாயமாக தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை வேண்டாமென்று நிராகரித்துவிட்டு வந்தவள், இப்போது தன் மகனை திருமணம் செய்திருக்கிறாள் என்றால், தன் மகனை இந்த பெண் எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை கிஷனால் நன்றாகவே உணர முடிந்தது.
முக்தாவை திருமணம் செய்தால் வாழ்க்கை தரத்தில் உயரலாம், ஆனால் மகன் முக்தாவோடு மகிழ்ச்சியாக வாழ்வானா? என்பது சந்தேகம் தான், ஆனால் அவனைப்பற்றி எந்த விஷயமும் அறியாமலேயே அவனை துணிந்து மணம்புரிந்துக் கொண்ட இந்த பெண்ணுடன் தன் மகன் வாழ்க்கை கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்குமென்பதை உணர்ந்தவர், இறுதியாக ஒரு முடிவெடுத்தார்.
அவர் எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ யோசனையாக இருக்க, ரித்துவோ அவரையே பார்த்திருந்தாள். அவள் தன்னை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அவரும் அவளைப் பார்த்து புன்னகைக்க அதில் முற்றிலும் அவள் உருகிப் போனாள். யாஷுடன் தன் திருமண வாழ்க்கை நிலைத்து இவர்களோடு இங்கேயே இருந்துவிட மாட்டோமா? என்ற ஆசை அவளுக்கு அதிகமானது.
அதைப் பிரதிபலிப்பது போல், “நீயேன் போகணும், முறைப்படி உங்க கல்யாணம் நடந்துச்சு, அதனால நீ என் மகனுக்கு மனைவியா வாழ்ந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். உனக்கு சம்மதமா?” என்றுக் கேட்க,
“அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்காது பப்பா,” என்றவளின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியிருந்தது.
பின் அவரோ, “சோனா செய்தது யாஷ்க்கோ மணீஷ்க்கோ தெரிய வேண்டாம், இதனால மணீஷ் வாழ்க்கையில் பிரச்சனை தான் வரும்,” என்று அவர் சொல்ல,
மணீஷ், சோனா என்று இவர் சொல்வது, யாஷின் அண்ணன், அண்ணி போல என்பதை புரிந்துக் கொண்டவள், சரி என்பது போல் தலையசைத்தாள்.
“அப்புறம் நீங்களும் நான் யார் என்கிற விஷயத்தை யாஷிடம் சொல்ல வேண்டாம்,” என்று அவரிடம் சொல்ல,
“எதுக்கு பேட்டீ? சொன்னா யாஷோட கோபம் குறையுமில்ல, அவன் உன்னை ஏத்துக்குவான்.” என்று அவர் கேட்டார்.
“ப்ளீஸ் பப்பா, இப்போதைக்கு சொல்ல வேண்டாமே, நானே நேரம் பார்த்து சொல்றேன். யாஷோட கோபம் நியாயமானது தானே, அதை நான் பொறுத்துக்க தான் வேண்டும்,” என்று அவள் சொல்ல,
“விஷயத்தை சொல்றதுனால என்ன பிரச்சனை ஆகும்னு எனக்கு தெரியல, சரி உனக்கு எப்போ சொல்லணுமோ சொல்லு,” என்றவர், “பேட்டீ, உன்னோட பேர் என்ன?” என்று கேட்க,
“ரித்துபர்ணா, ரித்துன்னு சுருக்கி கூப்பிடுவாங்க,” என்று பதில் கூறினாள்.
“ஒருவேளை உன்னோட பேர் சொன்னா யாஷ்க்கு நீ யாருன்னு ஞாபகம் வருமா?” என்று அவர் கேட்க,
“இல்ல, யாஷ்க்கு என் பேர் தெரியாது.” என்றவள், அதற்கான காரணத்தை கூற,
“ஓ” என்று அவள் சொன்னதை கேட்டுக் கொண்டவர், பின் வெளியே சென்று மூவரையும் உள்ளே அழைத்து வந்தார்.
யாஷ் உள்ளே நுழைந்ததும், “என்ன பப்பா, இவளை போலீஸ்ல புடிச்சு கொடுப்போமா?” என்று ரித்துவை பார்த்து முறைத்துக் கொண்டே கிஷனிடம் கேட்க,
“யாஷ் அதுக்கு எந்த அவசியமுமில்ல, நான் சொல்றதை கோபப்படாம கேளு. உங்களுக்கு சடங்கு சம்பிரதாயத்தோடு முறைப்படி கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கு, அதை நீ மனதார ஏத்துக்கிட்டு தான் ஆகணும், இந்த பொண்ணு தான் உன் மனைவி. அவளோடு தான் உன் வாழ்க்கை. இதுதான் என்னோட முடிவு. பப்பாவோட முடிவை நீ ஏத்துப்பன்னு நினைக்கிறேன்.” என்று அவர் தீர்மானமாக கூறினார்.
அவரது இந்த முடிவில் யாஷ் அவரை அதிர்ச்சியாக நோக்க, “பப்பா உங்களுக்கு என்ன ஆச்சு? யாருன்னே தெரியாத பொண்ணோட யாஷ் வாழணும்னு சொல்றீங்க? அவ என்ன பிரச்சனையோடு வந்திருக்கான்னே நமக்கே தெரியல, இந்த பொண்ணை நம்ம வீட்ல விட்டு பிரச்சனையை நம்ம விலை கொடுத்து வாங்கணுமா? இதெல்லாம் யோசிக்காம முடிவெடுக்காதீங்க பப்பா,” என்று மணீஷ் தான் கேட்டான்.
“எதையும் யோசிக்காம நான் முடிவெடுப்பேனா மணீஷ். இப்போ எனக்கு ப்யூட்டி பார்லரிலிருந்து தான் போன் வந்துச்சு, நம்ம நினைக்கிற அளவுக்கு பிரச்சனை பெருசா இல்லை. அப்படியே பிரச்சனை வந்தாலும், ரித்து இனி நம்ம வீட்டு பொண்ணு. அவளுக்கு நாம தான் துணை நிக்கணும்,” என்று கிஷன் கூற,
“இவளுக்காக பிரச்சனையில் மாட்டிக்க நமக்கு என்ன தலையெழுத்து. உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? யாருன்னே தெரியாத பெண்ணை என்னோட மனைவியா உங்களோட மருமகளா ஏத்துக்கணும்னு சொல்றீங்க, என்னால அதை ஒருபோதும் ஏத்துக்க முடியாது.” என்று யாஷும் அவன் பிடியில் உறுதியாக நின்றான்.
சோனாவிற்கோ கிஷனின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு திருமணத்தால் கண்டிப்பாக யாஷ் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும் என்று நினைத்திருக்க, கிஷன் இப்படி கூறவும், “யாருன்னே தெரியாத ஒருத்திய அடிச்சு துரத்தாம வீட்டு மருமகளா ஆக்கிக்கணும்னு நினைக்கிறீங்க, இதெல்லாம் நல்லாவா இருக்கு,” என்று கிஷனை பார்த்து அவள் கூற, அவரோ அவளை கோபமாக முறைத்தார்.
எத்தனை அவமதித்தாலும் கிஷன் கோபம் கொண்டு அவள் பார்த்ததில்லை. அப்படியிருக்க இப்போது அவர் கோபமாக பார்க்கவும், ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ என்று அவளுக்கு சந்தேகம் எழ, அடுத்து அவள் வாயை திறக்கவேயில்லை.
“யாஷ், உன்னோட பப்பா உனக்கு நல்லது தான் நினைப்பேன்னு உனக்கு தெரியாதா? ரித்து ரொம்பவே நல்ல பொண்ணு, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அந்த பொண்ணு உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது. அதுக்காக உன்னை கட்டாயப்படுத்தி உன்னோட இருக்க அந்த பொண்ணு நினைக்கல, அதேசமயம் நாம ஒத்துக்கிட்டா உன்னோட மனைவியா உன்கூட வாழ அந்த பொண்ணு தயாரா இருக்கு. எனக்கு அந்த பொண்ணை மருமகளா ஏத்துக்கிறதில் மனப்பூர்வமான சம்மதம், அதேபோல நீயும் அந்த பொண்ணை மனைவியா ஏத்துக்கிட்டா சந்தோஷப்படுவேன். ஆனா உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அப்புறம் உன்னோட இஷ்டம்.” என்று சொன்னாலும் மகன் தன் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது அவரது பேச்சில் தெரிந்தது.
எதற்காகவும் தந்தையின் பேச்சை மீறாதவனுக்கு இப்போதும் தந்தையை எதிர்க்க முடியாமல், “என்னவோ செய்ங்க,” என்றவன், கோபமாக அறையிலிருந்து வெளியேறினான்.
“பப்பா இதெல்லாம் சரி வருமா?” என்று மணீஷ் கேட்க,
“எல்லாம் சரி வரும், வாங்க வீட்டுக்கு போகலாம்,” என்று அவரும் சொல்லிவிட்டு ரித்துவிடம் சென்று, “வா பேட்டீ,” என்று அவளை அழைத்து கொண்டு செல்ல, சோனா அதையெல்லாம் பார்த்து கடுப்பாகி அவர்களோடு வீட்டுக்குச் சென்றாள்.
இவர்களுக்கு பக்கத்து வீட்டில் இவர்களை போலவே வட இந்திய நடுத்தர தம்பதியரும் குடி இருந்தனர். அவர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். இப்போது அவர்கள் முன்னதாகவே வீட்டுக்குச் சென்றிருக்க, அவர்களிடம் மருமகள் முதல் முறை வீட்டிற்கு வரும் போது செய்யும் கிரகபிரவேசம் சடங்கை செய்வதற்கான ஏற்பாட்டை கவனிக்கச் சொல்லி கிஷன் அலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அதன்படி இவர்கள் வீட்டை அடைந்ததும் அந்த தம்பதியினர் தயாராக இருக்க, அந்த பெண்மணி மணமக்கள் இருவருக்கும் ஆலம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளே அனுப்ப வாசலில் வைத்திருந்த அரிசி பாத்திரத்தை காலால் உதைத்து சிவப்பு வண்ணம் அடங்கியிருந்த கலவையில் பாதம் பதித்து பின்னர் ரித்து உள்ளே சென்றாள்.
மாற்றுடை கூட இல்லாமல் அவள் இருக்கவே, அவளுக்கு தேவையான ஆடையை வாங்க நினைத்த கிஷன், அதற்கு முன்பு அவளிடம் சென்று, “உன்னோட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமாவது நீ இங்க இருக்க விஷயத்தை சொல்லிடலாமா பேட்டீ,” என்றுக் கேட்க,
“அய்யோ வேண்டாம் பப்பா, என்னோட பப்பா நான் எங்கே இருக்கேனோன்னு கவலைப்படுவார் தான், ஆனால் அம்மாக்கு தெரிஞ்சா திரும்ப என்னை கூட்டிட்டு போய் சுதன் லாலுக்கே கல்யாணம் செய்து வச்சாலும் வச்சிடுவாங்க, ஏன்னா இந்த கல்யாணமே அவங்க ஏற்பாடு தான்,” என்று பதட்டமாக ஆரம்பித்து வருத்தத்தோடு கூறி முடித்தாள்.
“அதான் இப்போ உனக்கும் யாஷ்க்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சே, நீ மேஜர் தானே, நீ யாரை கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு உரிமை இருக்கு பேட்டீ, அப்புறம் என்ன தைரியமா உன்னோட வீட்டுக்கு போய் விஷயத்தை சொல்லலாமே,” கிஷன் கூற,
“உங்களுக்கு சுதன் லால் பத்தி தெரியாது. அவன் ஏதாவது பிரச்சனை செய்தாலும் செய்வான். இப்பவே கையோடு என் மொபைலை கொண்டு வந்துட்டேன். அதை சுவிட்ச் ஆஃப் செய்து வச்சிருந்தாலும் கூட இப்போ தான் எப்படி வேணும்னாலும் மொபைல் வச்சு நம்ம இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கிறாங்களே, அப்படி கண்டுப்பிடிச்சு வந்துடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு.” என்று அவள் கவலையோடு கூறினாள்.
“பிரச்சனையை கண்டு எத்தனை ஓடி ஒளிய முடியும், ஒருநாள் அதை சந்திச்சு தானே ஆகணும், இந்த மொபைலை வச்சு உன்னை கண்டுப்பிடிச்சா பிடிக்கட்டும், அப்போ அதை பார்த்துக்கலாம், வேணும்னா இப்போ உன்னோட பப்பாக்கு மட்டும் நீ இங்க இருக்கறதை சொல்லேன்.”
“இல்ல பப்பா, அவருக்கு தெரிஞ்சா அவரால அம்மாக்கிட்ட சொல்லாம இருக்க முடியாது. எனக்கு இப்போதைக்கு ரெண்டுப்பேர்க்கிட்டேயும் பேச முடியாது. நீங்க எனக்கு உதவி செய்வீங்கன்னா, புதுசா ஒரு சிம் மட்டும் வாங்கிக் கொடுங்க,”
“சரி பேட்டீ, உனக்கா எப்போ தோனுதோ அப்போ உங்க வீட்டுக்கு பேசு. சரி புது சிம் மட்டுமில்ல, உனக்கு தேவையான மாத்திப் போட்டுக்க ட்ரஸ்ல்லாம் வாங்கணும், இந்த ட்ரஸ்ஸோட நீ கடைக்கு வர முடியாது. உனக்கு ஆரத்தி எடுத்த பக்கத்து வீட்டுக்காரங்களை அனுப்புறேன். உனக்கு என்ன தேவையோ சொல்லு. வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க,” என்று அவர் சொல்லிவிட்டு செல்ல, அவரை அவள் நன்றியோடு பார்த்தாள்.
“ஏதாவது சாப்பிட்றீயா?” யாஷின் குரலில் நடப்புக்கு வந்தாள்.
அவள் சோர்வாகவும் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதும் தெரியவே, “காஃபி ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா? சாப்பிட்றீயா?” என்று அவன் கேட்க,
“இல்ல வேண்டாம், அதிலும் இங்க ஷிப்ல எல்லாமே அதிக விலை வச்சு விப்பாங்க, அதனால வேண்டாம்,” என்று அவள் மறுத்தாள்.
‘என்ன இவ வசதியான வீட்டு பெண்ணா இருக்கும்னு மணீஷ் சொன்னான். வெளிநாட்டில் படிச்சேன்னு இவ சொன்னதை வச்சு பார்த்தா மணீஷ் சொன்னது போல தானோன்னு நானும் நினைச்சேன். ஆனா இவ என்னடான்னா காசுக்கு பார்க்கிறா,’ என்று யோசித்தவனுக்கு தெரியவில்லை. அவள் அவனுக்காக தான் பார்க்கிறாள் என்று,
அவன் சிந்தனையை அறியாதவளாக, “இந்தாங்க நீங்க ஷிப்க்கான டிக்கெட் செக் செய்ய போகும்போது நான் பிஸ்கட் வாங்கி வச்சேன். சாப்பிடலாம்,” என்று தன் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுக்க,
“கூட ஒரு காஃபி குடிச்சா நல்லா இருக்கும், காசு அதிகமாக இருந்தால் என்ன? பரவாயில்லை,” என்றவன், எழுந்து காஃபி வாங்க சென்றான்.
கப்பல் ஹேவ்லாக் தீவை அடைந்ததும், இருவரும் வெளியே வர, அங்கும் அவர்களுக்காக பெயர் பலகையை வைத்துக் கொண்டு ஓட்டுநர் காத்துக் கொண்டிருந்தார். அவர்கள் காரில் தன் உடமைகளை வைத்துவிட்டு ஏறி அமர்ந்ததும் கார் அவர்கள் தங்கவிருக்கும் ரெசார்ட்டை நோக்கி சென்றது.
அவர்கள் தங்கவிருந்த ரெசார்ட் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. தனித்தனி வீடு போல் அமைந்திருந்த அந்த ரெசார்ட்டின் அறைகளில் ஒவ்வொன்றிலும் கீழிரண்டு, மேலே இரண்டு என்று நான்கு அறைகள் இருந்தது. ஒவ்வொரு அறையிலிருந்தும் கடற்கரை தெரிவது போல் கண்ணாடி பதித்த சுவர் அமைக்கப்பட்டிருந்தது.
அவர்களுக்கு மேலே இருக்கும் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்க, ஏற்கனவே அதற்கான பணமெல்லாம் செலுத்தியிருந்ததால், அதற்கு பின்னான சில விதிமுறைகளை முடித்துக் கொண்டு இருவரும் தங்களின் அறைக்குச் சென்றனர்.
நவீன வசதிகளோடு இருந்த அந்த ஆடம்பரமான அறையை பார்த்து யாஷ் வாயை பிளந்தான். சுவருக்கு பதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியே கடற்கரை தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு கதவை திறந்துக் கொண்டு சென்றால் அங்கே பால்கனியும் இருந்தது. குளியலறையும் நவீன வசதிகளோடு இருந்தது.
அப்படிப்பட்ட இந்த அறைக்கு ஒருநாள் வாடகை எவ்வளவு இருக்கும்? என்று அவன் யோசித்த நேரம், அங்கே அவர்களது உடமைகளை கொண்டு வந்து வைத்த பணி செய்பவரிடம் அறை வாடகையை அவன் விசாரிக்க, அந்த பணி செய்பவன் ஒருநாளுக்கு எட்டாயிரம் என்று சொல்லிவிட்டு செல்லவும், யாஷ்க்கு மயக்கம் வராத குறைதான், உடனே தன் நண்பனை அலைபேசியில் அழைத்தான்.
உடனே அழைப்புச் சென்று கபிலனும் அதை எடுக்க, “கபில், இந்த ரூம்க்கு ஒருநாளைக்கு எட்டாயிரம் வாடகையாமே? எதுக்குடா இவ்வளவு செலவு செய்த?” என்று யாஷ் கேட்க, கதவைத் திறந்து பால்கனி வழியே கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கும் அவன் பேசுவது கேட்டது.
அலைபேசியின் மறுமுனையில், “ஹே இது என்னோட மேரேஜ் கிஃப்ட் யாஷ், அப்புறம் நீயேன் அதையெல்லாம் கேர் செய்ற? ஜாலியா எஞ்சாய் செஞ்சுட்டு வா,” என்று கபிலன் கூற,
“டேய் நீயும் என்னைப் போல மிடில் கிளாஸ் பேமிலி தானடா, அப்படியிருக்க இவ்வளவு செலவு செய்து ட்ரிப் ஏற்பாடு செய்யணுமா? எதுக்குடா இதெல்லாம்,” என்று யாஷ் திருப்பிக் கேட்டான்.
“யாஷ், 3 நாள் தானடா ஹேவ்லாக்ல நீங்க இருக்கப் போறீங்க, அப்புறம் 2 நாள் போர்ட் பிளேயர்க்கு வந்துடுவீங்க, அங்க ரூம்க்கு மட்டும் தான் கொஞ்சம் செலவு. மீதியெல்லாம் நார்மல் தான்,
நீ இதைவிட எனக்கு அதிகமாக செய்திருக்க, ஃப்ரண்ட்ஸ்க்குள்ள இதெல்லாம் எதுக்கு பார்த்துக்கிட்டு, இதையெல்லாம் கேட்டா ரித்து என்ன நினைப்பாங்க, நீ போயிருப்பது ஹனிமூன் டா. அதிலும் உங்க ரெண்டுப்பேருக்கும் ஒருத்தரையொருத்தர் இன்னும் தெரிஞ்சு வச்சிக்கல, அதனால ரித்துவோட நல்லா பேசி பழகப் பார். அதைவிட்டுட்டு தேவையில்லாததையெல்லாம் யோசிக்காத,” என்றான்.
இவர்கள் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கோ யாஷ் புதியவனாக தெரிந்தான். முன்பு பார்த்தபோது இவ்வளவு பொறுப்புள்ளவனாக யாஷ் அவளுக்கு அறிமுகமில்லை. இப்போதோ இப்படி பார்த்து பார்த்து செலவு செய்பவனை பார்க்கும்போது வியப்பாக இருந்தது. அதிலும் அவன் இப்போது வேலையில்லாமல் இருப்பது வேறு தெரிந்துக் கொண்டாள். அதுவே அவனை செலவு செய்ய யோசிக்க வைக்கிறது என்பதையும் புரிந்துக் கொண்டாள். அதற்கான தான் கப்பலில் கூட எதுவும் வாங்கி தர வேண்டாமென்று சொல்லிவிட்டாள். இந்த தேனிலவு பயணத்திற்கு கிளம்புவதற்கு முன்பு கூட அவனை சம்மதிக்க வைக்க கிஷனும் கபிலனும் மிகவுமே கஷ்டப்பட்டனர். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தப்படி அவள் கடலை வெறித்துப் பார்த்தப்படி இருந்தாள்.
தேனன்பு தித்திக்கும்..