TTA 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தேன் 4
மதிய உணவை முடித்துக் கொண்ட பின் இருவரையும் ஓட்டுனர் அந்தமான் சிறைக்கு அழைத்துச் சென்றார். 3 மணிக்கெல்லாம் பார்த்து முடித்துவிட்டு வந்தால், கப்பல் புறப்படும் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர் கூறிவிட்டுச் செல்ல, இருவரும் கட்டணச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
இப்போது சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த இந்த சிறையில் தானே முன்பு சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடைத்து வைத்திருந்தனர். அதை நினைவுகளில் கொண்டு வராமல் இருந்திட முடியுமா? இப்போது யாஷ், ரித்துவிற்கும் அதே நினைவுகள் தான், அதை நினைத்துப் பார்த்து ஒருவித கணத்த மனதோடு இருவரும் உள்ளேச் சென்றார்கள்.
நடுவில் கண்காணிப்பு கோபுரம், அதை சுற்றி ஏழு கிளைகளாக சிறை கட்டிடங்கள். ஒவ்வொரு சிறையும் ஒரே மாதிரி அமைப்பில் சிறியதாக, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியாததாக அமைக்கப்பட்டிருந்தது. வாயிலிலிருந்து உள்ளே செல்லும்போது வலது பக்கம் உள்ள கட்டிடத்தின் பின்புறம் கடல் அருகில் இருந்தது. இந்த சிறையிலிருந்து எளிதில் தப்ப முடியாது என்று சொல்வார்கள் தானே, பின்னே சுற்றிலும் கடல் சூழ்ந்த தீவில் ஒருவரால் எப்படி தப்பித்து செல்ல முடியும்? இதையெல்லாம் நினைத்தப்படி புதுமண ஜோடிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கிஷன் நெஹ்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. இங்கு சில நெட்வொர்க் மட்டுமே கிடைக்கும், ஆனால் அதுவும் சில சமயம் சிக்னல் கிடைக்காது. காலையில் விமான நிலையத்திலிருந்து இறங்கியதுமே இருவரும் கிஷனை தொடர்புக் கொண்டு வந்து சேர்ந்த செய்தியை சொல்ல முயற்சித்தனர். ஆனால் சிக்னல் இல்லாமல் பேச முடியவில்லை. திரும்ப காரில் வந்த போது கூட யாஷ் முயற்சித்தான். ஆனால் அழைப்பு போகவில்லை.
இப்போது அவரே அழைக்க, அதை ஏற்றவன், “ஹலோ பப்பா,” என்று பேச ஆரம்பித்தான்.
“யாஷ் நல்லப்படியா அந்தமான்க்கு போய் சேர்ந்தீங்களா ப்பா?” என்று அவர் இந்தியில் கேட்க,
“ஹான் பப்பா, சேஃபா வந்து சேர்ந்துட்டோம், வந்ததுமே உங்களுக்கு கால் செய்தேன். ஆனா சிக்னல் கிடைக்கல பப்பா,” என்று அவனும் இந்தியில் பதில் கூறினான்.
“இருக்கட்டும் யாஷ், ஆமா இப்போ எங்கப்பா இருக்கீங்க?”
“ம்ம் வந்து இறங்கினதும் ஒரு காட்டேஜ்ல ப்ரஷ் ஆகிட்டு லன்ச் முடிச்சிட்டு இப்போ அந்தமான் ஜெயில் பார்க்க வந்திருக்கோம் பப்பா,”
“ஓ அப்படியா? சரி ரித்து உன்னோட தான் இருக்காளா?”
“ஆமாம் பப்பா, இங்க தான் பக்கத்தில் இருக்கா, அவக்கிட்ட பேசறீங்களா?”
“இருக்கட்டும், இப்போ சுத்தி பார்க்க போயிருக்கீங்க, அதனால அப்புறம் பேசறேன். அப்புறம் திரும்ப திரும்ப சொல்றதால என் மேல கோபப்படாத யாஷ். ரித்துக்கு இப்போ நீ மட்டும் தான் அங்க துணை. அவக்கிட்ட உன்னோட கோபத்தைக் காட்டி அவளை வருத்தப்பட வைக்காத, அவக்கிட்ட நல்லப்படியா நடந்துக்கணும் சரியா?”
“உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா பப்பா, நான் அவ்வளவு கொடுமையானவனா?”
“அதில்ல யாஷ், உன்னை அறியாமலேயே அவக்கிட்ட கோபமா நடந்துக்கிட்டேனா? அதை தான் சொல்றேன்.”
“ம்ம் நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன் போதுமா? அதை நீங்க நம்ப என்ன செய்யணும்?”
“ம்ம் சுத்தி பார்க்கும் இடத்திலெல்லாம் என்னோட மருமக கூட சேர்ந்து போட்டோ எடுத்து அனுப்பு, அப்போ நம்பறேன்.”
“ம்ம் இங்க போன் பேசவே சிக்னல் இல்லையாம், இதில் இவருக்கு போட்டோ எடுத்து அனுப்பணுமாம், சரி அப்படியே நீங்க கேட்டீங்கன்னு வேண்டா வெறுப்பா அனுப்பினா உங்களுக்கு நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்னு தெரிஞ்சிடுமா?”
“என்னோட பையனோட எல்லா உணர்வுகளும் எனக்கு அத்துப்படி டா. கண்டிப்பா ரித்துவோட உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு புரிஞ்சதால தான் அவளோட உன்னை ஹனிமூன்க்கு அனுப்பினேன்.”
“என்ன புரிஞ்சுதோ உங்களுக்கு, எனக்கு நிஜமாவே என்னோட வாழ்க்கை எப்படி போகப் போகுதுன்னு புரியல, சரி உடனே உடனே எல்லாம் அனுப்ப முடியாது, வெயிட் செய்ங்க மெதுவா அனுப்புறேன். சரி இங்க இருந்து ஹேவ்லாக் ஐலேண்ட்க்கு போகணும், அங்க போய் பேசறேன்.” என்றவன் அலைபேசி அழைப்பை அணைத்தான்.
அந்தநேரம் இருவரும் சிறைகள் அடங்கியிருக்கும் கட்டிடத்திற்கு வந்திருக்க, ஒவ்வொரு சிறையாய் சென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவோ, அவன் அலைபேசியில் பேசியதையெல்லாம் கவனிக்கவில்லை. ஆனால் பேசி முடித்ததை கவனித்துவிட்டு, “ஆமாம் பப்பாவா பேசினாங்க, லைன் கிடைச்சுதா?” என்றுக் கேட்டாள்.
“ஆமாம் பப்பா தான் பேசினார். உன்கிட்ட அப்புறம் பேசறேன்னு சொன்னார்.” என்று அவன் சொல்ல,
“ம்ம் இருக்கட்டும், அப்புறம் அவர் வேற என்ன சொன்னார்?” என்று அவள் பதில் கேள்விக் கேட்டாள்.
“ம்ம் உன்னை வருத்தப்பட வைக்காம பார்த்துக்கணுமாம், நாம சந்தோஷமா தான் இருக்கிறோம்னு காண்பிக்க நாம ரெண்டுப்பேரும் சேர்ந்து போட்டோஸ் எடுத்து அனுப்பணுமாம், அதனால நாம இப்போ ஒரு செல்ஃபி எடுப்போம்,
கரெக்டா இப்போ நாம எந்த இடத்திலிருக்கோம் பார்த்தீயா? கல்யாணமாகி நாம முதலில் வந்திருக்க இடம் அந்தமான் ஜெயில், ஆயுள் முழுக்க என்னோட வாழ்க்கை ஜெயில் வாழ்க்கையா தான் இருக்கப் போகுதுன்னு சொல்றது போல இருக்கு இந்த தருணம், வா இந்த ஜெயில் கம்பிக்கு உள்ள நின்னு போட்டோ எடுப்போம்,” என்று அவளை வெறுப்பேற்ற சொன்னவனுக்கு, இந்த சிறை வாழ்க்கை ஜென்மம் ஜென்மமாக தொடர வேண்டுமென்று அவனே அவளிடம் மகிழ்ச்சியாக கூறும் சூழலும் வருமென்பது அப்போது தெரியவில்லை.
அவனது இந்த பேச்சு அவளை வெகுவாக காயப்படுத்த, அதில் அவளது முகம் வருத்தத்தை காட்ட, “எதுக்கு அப்படி காலம் முழுவதும் இந்த ஜெயில் வாழ்க்கையை நீங்க வாழணும், அதான் நான் முன்னமே விலகிப் போயிட்றதா சொன்னேனே, இப்போதும் ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தமான்ல இருந்து சென்னை திரும்பினதும் நான் விலகிப் போயிட்றேன். அதை தானே நீங்களும் சொன்னீங்க,
இல்ல இந்த ஐந்து நாள் ஏன் காத்திருக்கணும், இப்போதே ஏதாவது ஃப்ளைட் இருக்கான்னு பார்க்கிறேன். நாம ஊருக்கு கிளம்புவோம்,” என்று சொல்லியப்படி அவள் அலைபேசியில் சிக்னல் இருக்கிறதா? என்று பார்க்க நினைத்தவளின் கண்களை கண்ணீர் மறைக்க, அவன் முன் அழ விரும்பாமல் அவள் அங்கிருந்து விலகிச் சென்றாள்.
“இவ வேற ஒருத்தி சும்மா வெறுப்பேத்த சொன்னா, அதை சீரியஸா எடுத்துக்கிட்டு, ஆனா ஊனா முகத்தை தூக்கி வச்சிக்கிறா, இப்போ அழறா போல,” என்று வாய்விட்டு கூறியவன்,
“ரித்து நில்லு. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.” என்று அவளிடம் கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாலும் அதை செயலில் காட்ட முடியாதவனாக அவனை அறியாமல் அவளை சமாதானம் செய்ய அவள் பின்னோடு சென்றான்.
இப்போது தான் தந்தை சொன்னதற்கு நான் என்ன கொடுமைக்காரனா? என்றுக் கேட்டான். ஆனால் அடுத்த நிமிடமே அந்த தவறை செய்ததை நினைத்து, ‘உனக்கு அறிவே இல்லை டா,’ என்று தன்னை தானே திட்டியப்படி ரித்துவின் அருகில் சென்றவன், அவள் அலைபேசியோடு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, அதை அவள் கையிலிருந்து பிடுங்கினான்.
அதற்கு அவள் அவனை கோபமாக முறைக்க நினைத்தாள். ஆனால் கண்களில் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் அதை செய்ய முடியாமல் தடுக்க, அவளின் கண்ணீரை பார்த்தவனுக்கோ, இன்னுமே மனம் இளகி, “நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் ரித்து, அதை இப்படி சீரியஸா எடுத்துக்கிட்டு அழற? அழுமூஞ்சியா நீ?” என்று அவளிடம் சிரித்தப்படி கேட்க, அது அவளுக்கு பழைய யாஷை ஞாபகப்படுத்தவும், அவளது அழுகை குறைந்து முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது.
“ம்ம் இப்போ தான் பார்க்க அழகா இருக்க, இப்படியே இரு,” என்று அவன் கூற,
“சரி செல்ஃபி எடுக்கலாம்னு சொன்னீங்களே, ஜெயில் கம்பிக்குள்ள வேண்டாம், வெளியே இருந்தே எடுப்போம் வாங்க,” என்று அவள் அவனை அழைத்தாள்.
“இப்போ வேண்டாம், அழுத முகத்தோடு உன்னை போட்டோவில் பார்த்தா, பப்பா என்னைத்தான் திட்டுவாரு, அதனால அப்புறம் எடுக்கலாம்,” என்று அவன் சொல்லவும்,
அப்படியானால் அவன் தந்தைக்காக தான் தன்னை சமாதானப்படுத்தினானா? அதை தாம் தான் தவறாக புரிந்துக் கொண்டோமோ? என்று நினைத்தவளின் மனம் மீண்டும் சுணங்கியது.
‘ரித்து நீ அவனை திருமணம் செய்துக் கொண்ட முறைக்கு அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிது, எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு தானே அவனை திருமணம் செய்ய துணிந்தாய்? இப்போது அவன் உன்னிடம் நல்லப்படியாக நடந்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பு வைப்பது தவறு தானே, அவன் மணக்கவிருந்த பெண்ணுக்கு பதிலாக நீ மணப்பெண்ணாக அமர்ந்து அவனுக்கு எத்தனை பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறாய்? அதை அவன் அவ்வளவு விரைவாக மறக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அதிகப்படி இல்லையா?
அவன் தந்தை சொன்னதற்காக தான் அவன் உன்னோடு இணக்கமாக இருக்க முயற்சிக்கிறான் என்பது தெரிந்தும் நீ சுணக்கம் காட்டினால் எப்படி? எதுவும் உடனே சரியாகாது, அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டுமென்பதை நினைவில் வைத்துக் கொள்.’ என்று மனசாட்சி எடுத்துரைக்கவும் அவள் தெளிந்தாள்.
அவனோ அதற்கு எதிர்மாறாக, இப்படி ஒரு திருமணத்தை எதிர்பார்க்காத போது அவளுடனான மண வாழ்க்கை இத்தனை சுவாரசியமாக இருக்கும் என்பதே யாஷ்க்கு வியப்பாக இருந்தது. தானாகவே அந்த இடத்தில் அவன் மனம் முக்தாவை வைத்துப் பார்த்தது.
அன்று மணமேடையை ஏழு முறை வலம் வந்து நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு கருப்பு மணியால் ஆன தாலியை அணிவித்தது முக்தாவிற்கு என்று தானே அப்போது நினைத்திருந்தான். அந்தநேரம் இந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்று ஒரு பயம் சூழ்ந்ததை இப்போதும் அவனால் மறுக்க முடியாது. தந்தைக்காக என்று முக்தாவை மணந்தாலும், இருவரும் மனமொத்த தம்பதியாக வாழ முடியுமா? என்ற சந்தேகமெல்லாம் அந்தநேரம் அவனுக்கு தோன்றியது மறுக்க முடியாத உண்மை.
அந்த வருத்தத்துடன் அவன் மணமேடையில் வீற்றிருந்த நேரம் அங்கே முக்தா சாதாரணமாக ஒரு சல்வாரில் வந்து நிற்க சோனாவை தவிர அனைவருக்குமே அதிர்ச்சி என்றாலும், அவனுக்கு அது பேரதிர்ச்சி.
அந்தநேரம் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. முக்தா இங்கிருக்கிறாள் என்றால்? அப்போது மணப்பெண்ணாக இருப்பது யார்? என்ற கேள்வியை தாங்கி நின்றார்கள். அது ஏதும் அறியாமல் ரித்து படப்படக்கும் இதயத்தோடு முக்காடினுள் தன் முகத்தை மறைத்து அமர்ந்திருக்க,
“என்னாச்சு முக்தா? கல்யாண நேரத்தில் எங்கடி போன? அப்போ இங்க மண்டபத்தில் அமர்ந்திருப்பது யாரு?” என்று முக்தாவின் அன்னை கேள்விக் கேட்கவும் தான், முக்தா இங்கு வந்துவிட்டது ரித்துவிற்கு தெரிந்தது.
சோனா தான் அவளை வேண்டுமென்றே இப்போது வரவழைத்திருந்தாள். முக்தா என்று நினைத்து யாஷ் யாரையோ மணந்துக் கொண்டதை நினைத்து அத்தனை பேர் முன்பு அவன் கூனி குறுக வேண்டுமென நினைத்தாள்.
“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல, உங்கக்கிட்ட சொன்னா கேட்கல, அதான் இந்த கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுத்து நானே போயிட்டேன்.” என்று முக்தா அத்தனை பேர் முன்பு சொல்லவும், அவளது தந்தை அவளை ஒரு அறை விட்டார். திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, அவர் அறைந்ததை பார்த்து கிஷன் தடுக்க வந்தார்.
“அவளுக்கு சம்மதம் இல்லாம கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு, இப்போ அடிக்கிறதில் என்ன இருக்கு?” என்று கோபப்பட்டவர்,
“பேட்டீ, நீ என்கிட்டயாவது விஷயத்தை சொல்லியிருக்கலாம், நான் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தியிருப்பேனே, அதைவிட்டுட்டு இப்படி செய்யலாமா? ஏன்ம்மா இப்படி செய்த?” என்று அவளிடம் கோபப்படாமல் ஆதங்கப்பட்டு பேசினார்.
அதுக்கு பதில் சொல்ல முடியாமல் முக்தா தலைகுனிய, “பப்பா இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதலில் இவளுக்கு பதிலா மணமேடையில் இருப்பது யாருன்னு தெரிஞ்சிக்கணும்,” என்று கூறிய மணீஷ்,
“ஹே இவ எப்படி உனக்கு பதிலா இங்க வந்தா, நீ எப்படி வீட்டை விட்டு போன?” என்று முக்தாவிடம் அவன் கேள்விகள் கேட்க,
“இவ எப்படி வந்தான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் ப்யூட்டி பார்லரில் இருந்து என்னோட ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டேன்.” என்று சோனாவை மாட்டிக் கொடுக்காமல் பதில் சொல்ல, முக்தாவின் தந்தை மீண்டும் அவளை அடிக்க முயற்சிக்க,
அவரை தடுத்த கிஷன், “எதுவா இருந்தாலும் அவளை வீட்ல அழைச்சிட்டு போய் பேசுங்க, போங்க,” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் திருமணம் வேண்டாமென்று ஒரு பெண் ஓடிப் போயிருக்க, யாரென்றே தெரியாத பெண்ணுடன் திருமணம் நடந்தது குறித்து யாஷ் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, நடந்ததை புரிந்துக் கொண்டு ரித்துவும் தன் முக்காடை விலக்கினாள்.
அதை உணர்ந்து அவளைப் பார்த்து யாஷ் கோபத்தோடு முறைத்தான். அங்கிருக்கும் அனைவருக்குமே அவள் யாரென்று தெரியாததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களுக்கெல்லாம் தெரியாது என்பது அவளுக்கும் தெரியும், அதைப்பற்றி அவளுக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் யாஷ் தன்னை யாரென்று சரியாக அடையாளம் கண்டுக் கொள்வானா? என்று மனதிற்குள் ஒரு எதிர்பார்ப்போடு தான் அவள் மணமேடைக்கு வந்தாள். ஆனால் அவனது கோப முகமே அவனுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பது அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தான் யார் என்பதை சொல்லவே வேண்டாமென்று அந்தநேரம் முடிவெடுத்தாள்.
அவள் முகத்தை பார்த்து சோனாவும் சிறிது அதிர்ச்சியாகிவிட்டாள். ஏனென்றால் அவளையும் முக்தாவையும் விடவே ரித்து அழகாக இருந்தாள். இப்படி ஒரு பெண் யாஷிற்கு மனைவியா? என்று அந்தநேரம் அவள் மனதிற்குள் பொறாமை எழுந்தது. ஆரம்பத்திலேயே அனைவரிடமும் சொல்லாமல் தவறு செய்துவிட்டோமோ? என்று யோசித்து வருத்தம் கொண்டாள்.
“பப்பா இந்த பொண்ணு யாரு? நீங்க தானே பார்லர் போய் முக்தாவை அழைச்சிட்டு வந்தீங்க, அங்க தான் இவ மாறியிருக்கணும், நீங்க யாருன்னு முகம் பார்க்காமலா கூட்டிட்டு வந்தீங்க?” என்று மணீஷ் கிஷனிடம் கேட்டவன்,
“சோனா, நீயும் தானே பப்பாவோட போன, கூட வந்தது முக்தா இல்லன்னு உனக்கு தெரியாதா?” என்று அவளிடமும் கேட்டான்.
“இல்ல அவ முகத்தை திறந்து பார்க்க எனக்கு தோனல, அவ முக்தாவா இல்லாம இருப்பான்னு நான் எங்க கண்டேன்.” என்று அவள் பதில் கூறினாள். உண்மையில் அந்தநேரம் அவளுக்கும் விஷயம் தெரியாது தானே, அதை வைத்து கூறினாள்.
“பப்பா இது யாரா இருக்கும்?” என்று மணீஷ் கிஷனிடம் கேட்க, அங்கே கூடியிருந்தவர்களின் சலசலப்பு இன்னும் அடங்காமல் இருக்கவும்,
“நீ யாஷையும் அந்த பெண்ணயும் கூட்டிட்டு ரூம்க்கு போ. அங்க பேசிக்கலாம்,” என்றவர், சோனாவின் தந்தையிடம் வந்திருப்பவர்களை கவனித்து அனுப்புமாறு பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவரும் அறைக்குச் சென்றார்.
மணீஷ் மணமக்கள் இருவரையும் அழைத்துச் செல்லும்போதே சோனாவும் அங்கு நடப்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அவர்களோடு சென்றாள். இதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்த யாஷ் உள்ளே செல்லவும் தான் நடந்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தவன், உடன் வந்த ரித்துவை பார்த்து, “ஏய் எந்த நோக்கத்தில் என்னை கல்யாணம் செய்துக்கிட்ட? உனக்கு என்ன வேணும்? எதுக்காக வந்த? நீ யார்?” என்று கோபத்தோடு கேட்டிருந்த போது தான் கிஷன் உள்ளே வந்தார்.
யாஷ் கோபத்தோடு பேசுவதை பார்த்து, “பேட்டா எதுக்கு இப்போ கோபமா பேசற? இரு என்னன்னு கேட்போம்,” என்று அவர் பொறுமையாக சொல்ல,
“என்ன பப்பா நீங்க, நடந்தது சாதாரண விஷயமா? எங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் நடந்திருக்கு, வேற ஒரு பெண்ணுக்கு பதிலா முகத்தை மறைச்சு கல்யாணம் செய்திருக்கா, பக்காவா அதுக்கேத்தது போல தயாரா வந்திருக்கா பாருங்க, இன்னைக்கு தானே முக்தா வீட்டை விட்டுப் போனா, ஆனா இவ பாருங்க கையில் மெஹந்தி அது இதுன்னு நம்மள ஏமாத்தன்னே வந்திருக்கா பாருங்க, இவளோட திட்டம் என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று அவரிடமும் கோபமாக பேசினான்.
“நம்மக்கிட்ட என்ன இருக்குன்னு அந்த பொண்ணு திட்டம் போடணும் யாஷ், பப்பா பார்லரில் தான் முக்தாவுக்கு பதிலா இந்த பெண்ணை கூட்டிட்டு வந்திருக்காரு, ஏதோ தப்பு நடந்திருக்கே தவிர, திட்டமெல்லாம் எதுவும் இருக்காது.” என்று மணீஷ் யாஷை பார்த்துச் சொல்ல,
“மணீஷ் சொல்றது தான் சரி யாஷ், எதுவா இருந்தாலும் பொறுமையா கேட்போம்,” என்று சொன்ன கிஷன்,
“பேட்டீ நீ யாரு? எதுக்காக இங்க வந்த? எதுக்கு இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிட்ட, இது விளையாட்டு விஷயமா? எவ்வளவு பெரிய விஷயம் இது, இதில் துணிஞ்சு இப்படி செய்யலாமா? அதுவும் நீ யாருன்னே எங்களுக்கு தெரியல, என்ன பேட்டீ இதெல்லாம்?” என்று ரித்துவிடம் அவர் அமைதியாக பேசினார்.
அதுவரை பயத்திலும் யாஷின் கோபம் கண்டும் மிரண்டு இருந்தவள், இப்போது கிஷனின் அமைதியான பேச்சில் கொஞ்சம் தெளிந்தவளாக, “இங்கப்பாருங்க ஒரு பிரச்சனை, அதிலிருந்து தப்பிக்க தான் இங்க வந்தேன். கொஞ்ச நாளுக்கு எனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுது, அதுக்குத்தான் இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டேன். ப்ளீஸ் என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. கொஞ்ச நாளில் நானே போயிடுவேன். அதுவரைக்கும் உங்க வீட்டில் இடம் கொடுத்தா போதும், பிறகு நீங்க என்ன சொல்றீங்களோ கேட்டு அதுப்படியே விலகிடுவேன்.” என்று தயக்கத்தோடு அவள் கூற,
“ஹே என்னைப் பார்த்தா உனக்கெப்படி தெரியுது? உன்னோட பாதுகாப்புக்கு என்னோட வாழ்க்கை தான் கிடைச்சுதா? அப்படியேன்னாலும் நீ சொல்றதை நாங்க எப்படி நம்பறது? நீ ஏதோ திட்டத்தோடு தான் வந்திருக்க, உன்னையெல்லாம் சும்மா விடக் கூடாது, என்ன செய்யறேன் பாரு,” என்றவன்,
“பப்பா இவளை போலீஸ்ல கம்பெளியிண்ட் செய்து உள்ள தள்ளணும், அவங்க விசாரிச்சா உண்மையை சொல்லிடுவா,” என்று கிஷனிடம் கூறினான்.
அவன் போலீஸ் என்றதும் வெகுவாக பயந்தவள், எங்கே சுதன் லாலிடம் மாட்டிக் கொள்வோமோ என்று கவலையில், “இங்கப் பாருங்க, இப்பவே வேணும்னாலும் நான் வெளியே போயிட்றேன். எந்தவிதத்திலும் உங்களுக்கு பிரச்சனையாவோ தொந்தரவோ இருக்க மாட்டேன். ப்ளீஸ் போலீஸெல்லாம் போக வேண்டாம்,” என்று அவள் யாஷை பார்த்து கெஞ்சலாக கூற,
“போலீஸ்னா பயப்பட்றா பப்பா, இவக்கிட்ட ஏதோ தப்பிருக்கு, இவளை சும்மா விடக் கூடாது.” என்று அவன் அதே பிடியில் நின்றான்.
அவளுக்கு பயத்தில் கை கால்களெல்லாம் உதறல் எடுக்க, அதை கவனித்த கிஷன், “இரு யாஷ், என்னன்னு பொறுமையா கேட்போம்,” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம், அவரது அலைபை ஒலியெழுப்ப,
“நான் போன் பேசிட்டு வர வரைக்கும் இந்த பொண்ணுக்கிட்ட கோபப்படக் கூடாது.” என்று யாஷை பார்த்துக் கூறியவர்,
“மணீஷ் பார்த்துக்க,” என்று சொல்லிவிட்டு தனியாக சென்று பேசியவர், திரும்பி வந்து ரித்துவிடம் தனியாக பேச வேண்டுமென்று சொல்லி மற்ற மூவரையும் வெளியே அனுப்பினார்.
உள்ளே அவளிடம் என்ன பேசினார் என்று தெரியவில்லை. வெளியே வந்து இவள் உன் மனைவி. அவளோடு தான் நீ வாழ வேண்டுமென்று சொன்னபோது யாஷ் கோபத்தோடு மறுத்தான்.
ஆனால் தந்தையின் பேச்சை ஒருக்கட்டத்தில் மீற முடியாமல் அவளோடு வாழ ஒத்துக் கொண்டு இதோ தேனிலவிற்கும் வந்துவிட்டான். ஆனால் இதெல்லாம் சரி வருமா? அவளோடு சேர்ந்து வாழ முடியுமா? என்று மனதில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. இரண்டே நாளில் இந்த மாற்றமா? வியப்பாக தான் இருந்தது.
சிறிது நேரத்திற்கு முன் தந்தை சொன்ன “ரித்துவோட உன் வாழ்க்கை சந்தோஷமாக தான் இருக்கும்,” என்ற வார்த்தையை நினைத்துப் பார்த்தவனது இதழ்கள் புன்னகைக்க,
“பப்பா சொல்றது நிஜம் தானா? என்னோட வாழ்க்கை ரித்துவோட நல்லா இருக்குமா?” என்று வாய்விட்டு கேட்டுக் கொண்டான்.
அவன் நடந்ததை நினைத்துக் கொண்டிருக்க, அவளோ அந்த சிறைச்சாலையை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்தப்படி வந்தாள். அப்படியே இருவரும் மாடிப் பகுதியை அடைய அங்கிருந்து கடலும் அருகில் உள்ள தீவும் தெரிய, இப்போது இருவருமே இயல்பு நிலைக்கு வந்திருக்கவே,
“இங்க செல்ஃபி எடுப்போமா?” என்று யாஷ் கேட்கவும், ரித்துவும் தலையசைக்க, இருவரும் மகிழ்ச்சியுடனே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை மறக்காமல் யாஷ் அவன் தந்தைக்கு அனுப்பி வைத்தான்.
தேனன்பு தித்திக்கும்..