TTA 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தேன் 3
விமான நிலையத்திலிருந்து இறங்கியதும், “நீ இங்கேயே உட்காரு, நான் போய் லக்கேஜ் எடுத்துட்டு வந்துட்றேன்.” என்ற யாஷ், ரித்துவை இடம் பார்த்து அமர வைத்துவிட்டு, பயணிகளின் பெட்டிகள் வந்து சேருமிடத்திற்கு சென்றான்.
அங்கிருந்து பார்த்தால் அவள் அமர்ந்திருக்கும் இடம் தெரியும், பயணிகளின் பயண பொருட்கள் வர சிறிது தாமதமாக, அவ்வப்போது அவள் பாதுகாப்பாக தானே அமர்ந்திருக்கிறாள், என்பது போல் அவளை திரும்பிப் பார்த்தப்படியே அவன் அங்கே நின்றிருக்க, அதை அவளும் கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.
யாஷ் அடிக்கடி கோபமாக பேசினாலும் இப்படி சில முறை அவனிடம் எட்டிப்பார்க்கும் இந்த அக்கறையை நினைத்து அவள் பரவசத்தை உணர்ந்தாள். இது போன்ற அக்கறையை தான் அவள் அவனிடம் முன்பே பார்த்திருக்கிறாளே, அது தானே அவன் மேல் அவளை நேசம் கொள்ள வைத்தது. அது இப்போதும் அவனிடம் மாறாமல் இருப்பதை பார்க்கும்போது வியப்பாய் இருந்தது.
அதிலும் அவன் வாழ்க்கையில் அவள் வந்து சேர்ந்த முறைக்கு வேறொருவராக இருந்தால், இந்நேரம் அவர்கள் எப்படி நடந்துக் கொண்டிருப்பார்கள். என்னதான் அவனது தந்தை சொல்லி அனுப்பியிருந்தாலும், அவனது இயல்பான குணமே அதுதான் அல்லவா? அதுதான் அவன் அவளிடம் தன்மையாக நடந்துக் கொள்வதன் காரணமும் கூட,
இரண்டு நாட்களுக்கு முன் யாஷ் நெஹ்ராவிற்கு அவள் மனைவியாக போகிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாளா என்ன? பிடிக்காத திருமணத்தை நினைத்து அந்த அழகு நிலையத்தில் அவள் எப்படி அமர்ந்திருந்தாள்? அந்த கட்டாய திருமணத்தை செய்ய விரும்பாதவளுக்கு அதிலிருந்து தப்பிப்பது தான் எப்படி? என்ற வழி தெரியாமல் இருந்தாளே,
தற்கொலை செய்துக் கொள்ளலாமா? என்ற எண்ணம் கூட அப்போது அவளுக்கு தோன்றியது. ஆனால் தந்தைக்கு செய்துக் கொடுத்த சத்தியத்திற்காக அந்த அளவுக்கு முதலில் அவள் மனம் சிந்திக்கவில்லை. ஆனால் இந்த திருமண விஷயத்தில் தந்தையாலேயே ஒன்றும் செய்ய முடியாத பட்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டால் தான் என்ன? இப்படி ஒரு திருமணம் நரகத்திற்கு சமமல்லவா? அதற்கு ஒரேடியாக உயிரை விட்டுவிடலாமே? என்ற விபரீத சிந்தனையும் அவளுக்கு தோன்றிய நேரம் தான்,
“தயார் ஹோ கயி க்யா பேட்டி?” என்றுக் கேட்டப்படி கிஷன் அங்கு வந்தார்.
அன்பாய் அழைத்த அந்த காந்தக் குரல் அவளது அந்தநேர விபரீத எண்ணத்தை தடை செய்தது என்றுக் கூட சொல்லலாம், சுதன் லால் குடும்பத்தில் இத்தனை அன்பாக பேசும் மனிதரும் இருக்கிறாரா? அதுவும் மகள் என்று விளித்து பேசினாரே, யார் அவர்? என்று அவள் மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். அவரது முகத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவள் முகம் முக்காடு போட்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சுதன் லாலின் உறவினர்களில் வயதில் மூத்தவர்கள் உன்னை அழைத்துச் செல்ல வரலாம், அவர்களிடம் உன் முகத்தை காட்ட வேண்டாம், சடங்கை மீறியதாக ஏதாவது நினைத்துக் கொள்ள போகிறார்கள். என்று அவள் அன்னை ஸ்வராகிணி சொல்லி அனுப்பியதால், வட இந்திய முறைப்படி மணப்பெண் அலங்காரத்தில் இருந்தவள், திருமணத்தின் போது அணியும் முக்காடை போட்டு முகத்தை மூடியிருந்தாள்.
தன் தங்கை மகள், தனக்கு மருமகளாக வரப்போகிற முக்தாவை அழைக்க வந்த கிஷன், மணப்பெண் கோலத்தில் இருக்கும் ரித்துவை முக்தா என்று நினைத்து அழைக்க, அவளோ அவள் மணக்கவிருக்கும் சுதன் லாலின் உறவினர் என நினைத்து, அவர் தயாரா? என்று கேட்டதற்கு, ஒரு தலையசைப்பை கொடுத்தவள், உடன் கொண்டு வந்த கைப்பையை எடுத்துக் கொண்டு, அவரோடு எழுந்துச் சென்றாள். பின் அழகு நிலையத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வர,
உள்ளே முக்தாவை காணாமல் பதட்டத்தோடு வரப்போகும் மாமனாரை காண காரின் அருகே ஆவலாக நின்றிருந்த சோனாவிற்கு மணப்பெண்ணாக ரிதுபர்ணா வர, முக்தாவிற்கு எடுத்திருந்த அதே மெரூன் நிற லெகங்காவில் வந்த ரித்துவை முக்தா என்றே சோனாவும் நினைத்தாள். ரித்துவின் கையிலிருந்த கைப்பையும் முக்தாவின் கைப்பை போல கருப்பு நிறத்தில் இருக்க, அதை சரியாக அவள் கவனித்து பார்த்ததில்லை என்பதால் இப்போதும் அவளுக்கு அது முக்தாவின் கைப்பை இல்லை என்பது தெரியவில்லை.
இருவரையும் பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு கிஷன் கார் டிரைவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த நேரம், “என்ன முக்தா, ஃப்யூட்டி பார்லரிலிருந்து அப்படியே என்னோட ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிடுன்னு சொல்லி உன்னை விட்டுட்டு தானே நான் வீட்டுக்கு போனேன். நீ என்னடான்னா ரெடியாகி நிக்கற, இந்த கல்யாணத்தை செய்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாயா?” என்று சோனா இந்தியில் கேட்க,
“என்னது முக்தாவா? யாரோ முக்தா என நினைத்து என்னிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்களா? அப்போது வந்தவர்கள் சுதன் லாலின் உறவினர் இல்லையா? என்னை முக்தா என நினைத்து தவறுதலாக அழைத்துச் செல்கிறார்களா? என்று நடந்ததை புரிந்துக் கொண்ட ரித்துவோ, உண்மையை சொல்லிவிடலாமா? என்று அந்த நொடி நினைத்தவள்,
பின்னரோ, கடவுளாக இந்த பெரியவரை அனுப்பி இந்த திருமணத்திலிருந்து நான் தப்பிப்பதற்கு ஒரு வழி செய்திருக்கிறார். அதை தானே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துப் பார்த்தவள், மணப்பெண்ணான முக்தா இங்கு இல்லாத பட்சத்தில் முக்தாவாக இப்போது அவர்களுடன் செல்வது தான் சிறந்த வழி. பின் அங்குச் சென்று அடுத்து என்னவோ பார்த்துக் கொள்ளலாம், எப்படியோ இந்த பெண் சொல்வதைப் பார்த்தால், முக்தாவிற்கும் நடக்கவிருக்கும் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டாள் போலும், அந்த உண்மை இங்கு தெரிவதற்கு பதில், அங்கே திருமணம் நடக்கவிருக்குமிடத்திலேயே தெரிந்துக் கொள்ளட்டும், அங்கு சென்றதும் உண்மையை கூறிவிட்டு, வெறெங்காவது சென்றுவிட வேண்டியது தான், என்று முடிவெடுத்த ரித்து, அவர்களோடு செல்ல தயாரானாள்.
“என்ன முக்தா அமைதியா இருக்க, இந்த கல்யாணத்தை செய்துக்கலாம்னு முடிவு செய்துட்டீயா?” என்று சோனா மீண்டும் கேட்க,
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ரித்து விழிக்க, “ம்ம் வண்டியில் ஏறுங்க,” என்று கிஷன் கூறவும், சோனாவும் அவர் முன்னிலையில் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள். பயணத்தின் போதும் கிஷன் முன்னிருக்கையில் இருந்ததால் சோனாவால் முக்தா என நினைத்திருக்கும் ரித்துவிடம் பேச முடியாமல் போக அந்த பயணம் அமைதியாகவே கழிந்தது.
மண்டபத்தில் இருவரையும் கொண்டு போய் விட்ட கிஷன், அடுத்து மாப்பிள்ளை ஊர்வலத்திற்குச் செல்ல, சோனா அப்போது ரித்துவிடம் பேச நினைத்த போது, முக்தாவின் அன்னையும் சோனாவின் அன்னையும் அங்கு வந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர். சோனாவின் அன்னைக்குமே முக்தா அவர்கள் சொன்னப்படி கேட்காமல் மணப்பெண்ணாக தயாராகி வந்ததில் அதிர்ச்சியாகி, சோனாவிடம் ஜாடையில் என்ன நடந்தது என்றுக் கேட்டார். அவளும் தெரியவில்லை என்பது போல் ஜாடையில் காட்டினாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இப்பவே எதுக்கு முக்காடு போட்டிருக்க, எல்லாம் நம்ம ஆளுங்க தானே, மணமேடைக்கு போகும்போது இதை போட்டுக்கலாம்,” என்று முக்தாவின் அன்னை ரித்துவின் முக்காடை எடுக்க போக,
அவள் முக்தா இல்லை என்ற உண்மை தெரியும் கட்டம் வந்தாகிவிட்டது. இவர்களிடம் உண்மையை கூறிவிட்டு பேசாமல் இங்கிருந்து சென்றுவிட வேண்டியது தான், என்று ரித்து நினைத்துக் கொண்டிருக்க, முக்தாவின் அன்னை முக்காடு மீது கை வைக்கும் நேரம், முக்தாவின் தந்தை வந்து மாப்பிள்ளை ஊர்வலம் வந்துக் கொண்டிருக்கிறது என்று தகவலை கூறியவர், சோனாவின் அன்னையையும் முக்தாவின் அன்னையையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். அதுதான் தக்க சமயம் முக்தாவிடம் பேசலாம் என்று சோனா நினைக்க, வெளியே சென்ற முக்தாவின் அன்னை மீண்டும் வந்து சோனாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
அனைவரும் மாப்பிள்ளை வரவிற்காக காத்திருக்க, இங்கே அறையில் அமர்ந்திருந்த ரிதுபர்ணாவிற்கு படப்படப்பாக இருந்தது. யாரிடம்? என்ன சொல்லிவிட்டு? எப்படி இங்கிருந்து செல்வது? என்பது புரியாமல் பதட்டத்தோடு அவள் இருக்க, வெளியில் பாட்டும் ஆட்டமுமாக பட்டாசு வெடிக்கும் சத்தங்கள் கேட்டது, மாப்பிள்ளை ஊர்வலம் வந்துக் கொண்டிருக்கிறது போலும், பாவம் திருமணத்தை குறித்து அந்த மாப்பிள்ளைக்கு எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்? அவனை ஏமாற்றிவிட்டு மணப்பெண்ணான முக்தா இந்த திருமணம் வேண்டாமென்று சென்றுவிட்டாளே, அந்த விஷயத்தை இந்த மாப்பிள்ளை அறிந்தால் எப்படி எடுத்துக் கொள்வானோ? என்று அவள் மாப்பிள்ளையின் பக்கமாக யோசிக்க,
“ரித்து நீயும் தான் உனக்கு கல்யாணம் வேண்டாம்னு ஓடி வந்திருக்க, அப்போ உன்னை கல்யாணம் செய்துக் கொள்ள காத்திருக்கும் சுதனும் பாவம் தானா?” என்று அவள் மனசாட்சி கேள்விக் கேட்கவும்,
‘அய்யோ சுதன் பாவமா? எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென தெரிந்தும் என்னை வலுக்கட்டாயமாக மனைவியாக்கி கொள்ள நினைக்கிறானே, அவனுக்கு இந்த ஏமாற்றம் தேவை தான், என நினைத்து மகிழ்ந்தவளோ, அய்யோ திரும்ப சுதனிடம் நான் சிக்காமல் இருக்க வேண்டுமே, இந்நேரம் நான் அழகு நிலையத்தில் இல்லை என்பது சுதனுக்கு தெரிய வந்திருக்குமே, ஒருவேளை நான் இங்கு வந்ததை எப்படியாவது கண்டுபிடித்து அவன் வந்து விட்டால் என்ன செய்வது?’ என்று நினைத்து அவள் கலக்கமடைந்தாள்.
‘எப்படி இங்கிருந்து செல்வது? பேசாமல் யாரிடமும் சொல்லாமலேயே இங்கிருந்து சென்றுவிடலாமா? இந்த மணமகள் உடையை கலைந்துவிட்டு சென்றால், யாருக்கு என்ன தெரியப்போகிறது? இதுதான் சரி, இப்போது மாப்பிள்ளை ஊர்வலத்தில் அவர்கள் கவனம் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று நினைத்தவள்,
‘மாற்றுடை இல்லாமல் எப்படி இந்த உடையை மாற்றிக் கொள்வதாம்? எப்படி இங்கிருந்து செல்வதாம்?’ என்று அந்த யோசனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சோர்ந்து போய் அமர, அந்தநேரம் ஊர்வலம் வந்துவிட்டதை ஆடல் பாடல் என அதிக உற்சாக கூச்சலில் உணர்ந்து, அங்கிருந்த ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள்.
அத்தனை கூட்டத்திலும் அங்கே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையோடு குதிரை மீது அமர்ந்து ஊர்வலம் வந்த மாப்பிள்ளை முகம் பூச்சரம் ஒதுங்கி இருந்ததால், அவளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ஆம் அது யாஷ். யாஷ் நெஹ்ரா. அவனா முக்தாவை திருமணம் செய்துக் கொள்ள போகும் மாப்பிள்ளை? ரிதுபர்ணா அவனை அதிர்ச்சியோடு பார்த்தப்படி நின்றிருந்தாள்.
“ம்ம் லக்கேஜ் எடுத்தாச்சு போகலாமா?” யாஷின் குரல் கேட்டு நடப்புக்கு வந்தவள், தன் கைப்பையை மாட்டியப்படி அவன் பின்னே சென்றாள்.
இருவரும் வெளியே வரவும் யாஷ் நெஹ்ரா என்ற பெயர் பலகையோடு கார் ஓட்டுனர் அங்கே நின்றிருந்தார். அந்தமான் சுற்றுலா துறை மூலம் சென்னையிலேயே அனைத்து தேவைக்கும் பணம் செலுத்தி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அவர்களை அழைத்துச் செல்ல ஓட்டுனர் தயாராக இருந்தார்.
தேனிலவு பயணிகளுக்கு ஹேவ்லாக் தீவே சிறந்த இடம் என்பதால் அங்கே தான் அவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹேவ்லாக் தீவிற்கு செல்லும் கப்பல் மாலை நான்கு மணிக்கு தான் புறப்படும், இப்போது நேரம் 10.30 மணி தான் ஆகியிருந்தது. இரண்டு மணி நேர விமான பயணம், அதுவும் காலை வேளை என்பதால் இருவருக்குமே களைப்பு தெரியவில்லை.
இருந்தும் ஒரு விடுதியில் இருவரையும் இறக்கிவிட்ட அந்த ஓட்டுனர், சிறிது நேரம் இருவரையும் ஓய்வெடுக்க சொன்னான். பனிரெண்டு மணிக்கு இருவரையும் தயாராக இருக்க சொல்லி கூறியவன், மதிய உணவை முடித்துக் கொண்டு அந்தமான் சிறையை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு சென்றான். அப்படியே அங்கிருந்து கப்பல் புறப்படும் இடத்தில் கொண்டு போய் விடுவதாக சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
விடுதி என்றாலும் அது ஒரு வீடு போல் தான் இருந்தது. அதில் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் இவர்கள் சென்று தங்களது பெட்டிகளை வைத்ததும், “நீ முதலில் ப்ரஷ் ஆகிட்டு வா, அப்புறம் நான் போறேன்.” என்று யாஷ் நித்துவிடம் கூறிவிட்டு அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்து தனது கவனத்தை செலுத்தினான்.
ரித்துவோ தன் முடியை மொத்தமாக சேர்த்து ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள், தன் வேலைகளை முடித்துக் கொண்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். ஹேவ்லாக் சென்றதும் இரவு குளித்துக் கொள்ளலாம் என்று இப்போது முகம் மட்டும் கழுவிக் கொண்டு வந்திருந்தாள்.
பின் அவனும் சட்டை, பேன்ட்டை கலைந்தவன், வெறும் பனியன் துண்டோடு சென்று அவளை போலவே முகம் மட்டும் கழுவிக் கொண்டு அவன் வர, அதற்குள் மீண்டும் தலைவாரி அழகாக முடியை விரித்துப் போட்டிருந்தவள், நெற்றியில் பொட்டிட்டு வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள்.
பின் அவன் வந்து தயாராக, அவனுக்கு சங்கடமாக இருக்க வேண்டாமென்று அறைக்கு வெளியே வந்தாள். மாடியில் இருக்கும் அறையில் என்பதால், வெளியில் பால்கனி போலிருந்த அமைப்பில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தை சுற்றி குடியிருப்பு பகுதிகளும் கடை, உணவகம் என்றிருந்தது. இப்படி வீடுகளை சில பேர் விடுதிகளாக வாடகைக்கும் விட்டிருந்தனர். சுற்றி அந்த இடங்களை பார்வையிட்டப்படி வந்தவளுக்கு மீண்டும் ஞாபகங்கள் மாப்பிள்ளை ஊர்வலத்தில் யாஷை கண்டதில் சென்று நின்றது.
யாஷ் நெஹ்ரா. அவனை மறக்கத்தான் அவள் எத்தனை முயற்சிகள் எடுத்தாள். அப்படி ஒருவனை தன் வாழ்வில் சந்தித்ததையே தன் நினைவுப் பெட்டகத்திலிருந்து அழிக்க அவள் பெரும்பாடு பட்டாளே, அந்த முயற்சியில் அவள் வெற்றிக் கண்டதாக கூட நினைத்திருந்தாளே,
ஆனால் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று அவள் பெற்றோர்கள் சொன்ன போது அவனது முகம் அந்த ஒரு நொடி கண் முன் வந்து சென்ற போது தான், அவனை மறப்பதென்பது என்றைக்குமே நடக்காத காரியம் என்று அவளுக்கு புரிய வந்தது. அப்போது கூட அவனை இப்படி நேருக்கு நேர் காண்போம் என்று அவள் நினைக்கவேயில்லை.
அதிலும் அவனை திருமண கோலத்திலேயே பார்ப்பாள் என்பது ஒரு கனவு போல் தான் தோன்றியது. அவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்பது மனதில் ஒரு பெரும் வலியை உருவாக்கியதை நன்றாகவே உணர்ந்தாள்.
ஆனால் முக்தா தான் இங்கு இல்லையே, அப்படியிருக்க அவனது திருமணம் எப்படி நடக்கும்? அந்த செய்தி அவனுக்கு தெரிய வரும்போது அவன் எப்படி உணர்வான்? அதை நினைத்தாலும் யாஷை நினைத்து அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது புரியாமல் அவள் குழம்பி நின்றாள்.
அந்தநேரம் கொலுசு ஓசை யாரோ வருவதை உணர்த்த, அவள் மீண்டும் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர, திடீரென கேட்டுக் கொண்டிருந்த கொலுசு சத்தம் நின்றுவிட,
யார் வந்திருப்பது? என்று எழுந்து இன்னொரு ஜன்னலருகே சென்று ரித்து பார்க்க, “ஹலோ முக்தா,” என்று அலைபேசியை வைத்துக் கொண்டு சோனா மெதுவான குரலில் பேசினாள்.
“முக்தாவிடம் இந்த பெண் பேசுகிறாளா? இவள் தான் முக்தாவிற்கு வீட்டை விட்டுப் போக உதவுகிறாளா? அழகு நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது கூட இப்படித்தானே ஏதோ பேசினாள். இவள் யாராக இருக்கும்? யாஷின் உறவா? இல்லை பெண் வீட்டு உறவா? ரித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை. சோனா பேசுவதை கூர்ந்து கவனிக்கலானாள்.
“என்ன சொல்ற முக்தா, இப்போ நீ என்னோட ஃப்ரண்ட் வீட்ல இருக்கியா? அப்போ இங்க யார் இருப்பது?” என்று சோனா கேட்க, அதற்கு அந்தப்பக்கம் முக்தா என்ன கூறினாளோ,
“தெரியல உன்னோட வெட்டிங் ட்ரஸ்ல இன்னொரு பொண்ணு இங்க வந்து உட்காந்திருக்கு, யாருன்னு தெரியல,” என்று விஷயத்தை புரிந்துக் கொண்டு முக்தாவிடம் சோனா கூறினாள்.
“இப்போ நீ எதுக்கு இங்க வரப் போற? வந்து யாஷை கல்யாணம் செஞ்சுக்கப் போறீயா?” என்று மீண்டும் முக்தா ஏதோ பேசியதற்கு சோனா இவ்வாறு கேட்டாள்.
“இங்கப்பாரு இதுவும் நல்லதுக்கு தான், இல்ல உன்னை காணும்னு இங்க தேட ஆரம்பிச்சுடுவாங்க, இங்க என்ன செய்யணுமோ நான் பார்த்துக்கிறேன். நீ அங்கேயே இரு. நான் சொல்லும்போது வந்தால் போதும்,” என்று கடைசியாக முக்தாவிடம் இவ்வாறு பேசிவிட்டு அழைப்பை துண்டித்த சோனா,
“யாஷ் நான் ஒரு ப்ளான் போட்டா, இங்க வேற ஒன்னு நடக்குது. நான் காதலிச்சவனை கெட்டவனா காட்டி உன்னோட அண்ணனுக்கு என்னை கல்யாணம் செய்து வச்சல்ல, உன்னோட கல்யாணம் நின்னு போய் அத்தனை பேர் முன்னே நீ அவமானப்படணும்னு தான் நான் முதலில் நினைத்தேன். ஆனா இப்போ முக்தாவை கல்யாணம் செய்துக்க ஆசையா வரும் உனக்கு, யாருன்னே தெரியாத ஒரு பெண்ணோடு கல்யாணம் நடக்கப் போகுது. எதுக்காகவோ இந்த பொண்ணு கல்யாண கோலத்தில் வந்திருக்கா? எனக்கே ஒன்னும் புரியல, ஆனா யாருன்னே தெரியாத அவளை கல்யாணம் செய்துக்கிட்டா கண்டிப்பா உனக்கு ஏதாவது பிரச்சனை வரும், இல்லன்னாலும் எவளோ ஊர் பேர் தெரியாத ஒருத்தியை நீ கல்யாணம் செய்துக்கிறதே உனக்கு ஒரு அசிங்கம் தானே, நல்லா அவஸ்தை படு.” என்று வாய்விட்டு பேசிய சோனா, அறைக்குள் வராமலேயே அப்படியே திரும்பி செல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இது யார்? யாஷோட அண்ணியா? இவளுக்கு ஏன் யாஷ் மீது இத்தனை வெறுப்பு? யாஷை வெறுக்கவும் முடியுமா? அவன் முகத்தை பார்த்தால் வெறுக்கவும் தோன்றுமா? ஆனால் இவள் ஏன் யாஷை வெறுக்கிறாள்? அவனுக்கு தீங்கு செய்ய ஏன் நினைக்கிறாள்? அவனை அவமானப்படுத்த ஏன் துடிக்கிறாள்? என்று சிந்தித்த ரித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை.
தான் யார்? என்ற உண்மையை சொல்லிவிட்டு இங்கிருந்து சென்றால்? கண்டிப்பாக யாஷ் அத்தனை பேர் முன்னும் அவமானப்பட நேரிடும், அவள் கண் முன்னரே யாஷ் அவமானப்படுவதை அவளால் பார்க்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.
ஆனால் அதற்காக அவனை திருமணம் செய்துக் கொள்ளவா முடியும்? முதலில் யாஷ்க்கு அவளை ஞாபகம் இருக்குமா? அப்படியே ஞாபகம் இருந்தாலும் அவன் அவளை என்னவாக நினைத்து பழகினான் என்பது தெரிந்தும் அவளை எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும்? அதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது இங்கிருந்து சென்றுவிடுவது தான் நல்லது என்று தான் அவளுக்கு தோன்றியது.
ஆனால் யாஷ் அத்தனை பேர் முன்பு அவமானப்படுவது போல் நினைத்துப் பார்த்தால்? அவளுக்கு இங்கிருந்து செல்லவும் மனசு வரவில்லை. அதிலும் யாஷின் அண்ணி அந்த பெண் அவனுக்கு தீங்கு செய்யும் எண்ணத்தோடு இருப்பதை நினைத்துப் பார்த்த போது யாஷை விட்டு விலகவும் மனம் வரவில்லை.
ஒன்றும் புரியாமல் குழப்பத்திலேயே நேரம் கடந்துப் போக, அவளை மண மேடைக்கு அழைத்துச் செல்லவும் ஆள் வந்துவிட்டனர். இன்னும் கூட அவளால் ஒரு தீர்மானமான முடிவை எடுக்க முடியவில்லை. அவள் முக்தா இல்லை என்ற உண்மையை கூறிவிட்டு இங்கிருந்து சென்றாலும், மீண்டும் சுதன் லாலிடம் மாற்றிக் கொள்ளக் கூடுமோ என்ற அச்சம் வேறு அவளை ஒருபக்கம் வாட்டிக் கொண்டிருந்தது. இன்னொருபக்கம் யாஷ் அத்தனை பேர் முன்பு அவமானப்பட்டு நிற்பது போல் வேறு நினைத்துப் பார்த்து வேதனை அடைந்தாள்.
அதற்காக அவனை திருமணம் செய்துக் கொள்ள முடியுமா? இப்படி வேறு ஒரு பெண்ணாக முகத்தை மறைத்துக் கொண்டு அவனை திருமணம் செய்துக் கொள்வது எத்தனை கேவலமான செயல், அதை எப்படி அவளால் செய்ய முடியும்? மனதில் கேள்விப் பிறந்த போதே,
அப்படியானால்? மீண்டும் சுதன் லாலிடம் சிக்கிக் கொண்டு அவனை திருமணம் செய்துக் கொண்டு வாழ்நாள் முழுதும் துன்பப்பட போகிறாயா? அதற்கு உன் மனம் நேசித்த யாஷை மணந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை ஏன் நீ ஏற்றுக் கொள்ள கூடாது?
நினைத்தே பார்க்க கூடாது என்றிருந்தவனை மணக்கும் வாய்ப்போடு இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதே விதி. அது அதற்கு மேலும் என்ன செய்ய காத்திருக்கிறதோ செய்யட்டுமே, அதன்படியே நீயும் பயணப்படு என்று மனசாட்சி அடித்து சொல்லும் நேரம் அவளை மணமேடை வரை அழைத்து வந்துவிட்டனர்.
இதற்கு மேலும் குழம்ப வேண்டாம், ஏதாவது ஒரு முடிவெடுக்க வேண்டுமென்ற பட்சத்தில் தன் மனசாட்சி சொன்ன முடிவை ஏற்று யாஷின் அருகே மணப்பெண்ணாக அமர்ந்து புரோகிதர் சொன்ன சடங்குகளை செய்து, அவனுடன் அக்னியை ஏழு முறை வலம் வந்து, அவனிட்ட குங்குமத்தை ஏற்று, அவன் தாலியை அணிவிக்கும் போது அவள் கண்கள் ஆனந்தத்தில் கண்ணீரை சிந்தியது.
தேனன்பு தித்திக்கும்..