TTA 17

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 17

சென்னையிலுள்ள  பிரம்மாண்டமான ஒரு ஹோட்டலில் தான் ரிஷிவர்த் தங்கியிருந்தார். திருமணத்திற்காக வந்தவர்கள் முதலில் சுதன்லாலுக்கு சொந்தமான வீட்டில் தான் தங்கியிருந்தனர். கல்யாணத்தன்று ரித்து காணவில்லை என்றதும் ஒருவகையில் நிம்மதி அடைந்தாலும் அதன்பின் பத்து நாட்களுக்கு மேலாகியும் அவளைப்பற்றிய தகவல் கிடைக்காததால் ஸ்வராகிணியை பூனாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் மட்டும்  ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் ரித்துவை தேட இரண்டு நாள் முன்னர் தான் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் மகள் இந்த திருமணத்திலிருந்து தப்பிக்க மறைந்து இருக்கிறாள், என்று தான் நினைத்தார். தனக்கு எங்கு இருக்கிறாள் என்ற தகவல் அனுப்புவாள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். ஆனால் அவளிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை. அவளது அலைபேசி எண்ணும் இன்னும் உபயோகத்தில் இல்லாமல் இருந்தது தெரிந்ததும் மனதில் பயம் சூழ்ந்துக் கொண்டது. இதில் சுதன்லால் வேறு பிரச்சனை செய்துக் கொண்டிருந்தான். அதையெல்லாம் சமாளிக்கவென நாட்கள் ஓடிவிட்டது. ஒருவேளை உறவினர்கள் யாரையாவது ரித்து தொடர்புக் கொண்டிருந்தால்? என்ற சந்தேகத்தில், அவர்களையெல்லாம் தொடர்புக் கொண்டு அப்போது தான் விஷயத்தை கூறினார்.

அனைவருமே அதை கேட்டு அதிர்ந்தனர். யாரை தேடியும் சோட்டீ வரவில்லை என்று கூறினர். அடுத்து அவர் எடுத்த முடிவால் தான் இப்படி ஆனது என்று அவர்மீது கோபப்பட்டனர். பிறகு அவர் மீது உள்ள பாசத்தில் சோட்டீ கிடைத்து விடுவாள் என்று ஆறுதல் கூறினர். 

ஸ்வராகிணியோ எந்த கவலையும் இல்லாதது போல் அமைதியாக இருந்தார். அவரின் அமைதி ரிஷிக்கு கோபத்தை வரவழைத்தது. நடந்ததற்கெல்லாம் ஸ்வராகிணி தானே காரணம். அதனால் அவரிடம் ரிஷி பேசாமல் இருந்தார். அவராக பேச முயற்சித்த போது, “ப்ளீஸ் ஸ்வரா இருக்கும் பிரச்சனையில் ஏதாவது சொல்லிடப் போறேன். இப்போ உனக்கு திருப்தியா இருக்குல்ல, நம்ம உறவே வேண்டாம்னு சோட்டீ ஒரேடியா விலகிப் போயிட்டான்னு நினைக்கிறேன். இப்போதாவது சந்தோஷமா நிம்மதியா இரு. 

ஆனா என்னால அப்படி நிம்மதியா இருக்க முடியாது. என் மக எங்க? எப்படி? இருக்கான்னு தெரியாம எனக்கு ஒன்னும் ஓடாது. சொல்றது புரியுதுல்ல, எப்போதும் நீ சொல்றது போல அவ என்னோட மகள். நான் மட்டும் தான் கவலைப்படணும், அவளை கண்ணில் பார்க்கும் வரை சாப்பாடு, தண்ணீர், தூக்கம் எதுவுமே இல்லை.” என்று அவர் சொல்ல,

“பிரிச்சு பேசறீங்க,” என்று ஸ்வராகிணி கண்ணீர் சிந்தவும்,

“நீதான் இதுவரைக்கும் பிரிச்சு பார்த்த, அதை அமைதியா வேடிக்கை பார்த்தது தான் இப்போ இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு, இன்னும் ஏதாவது காயப்படுத்துவது போல பேசறதுக்குள்ள தயவுசெய்து ஊருக்கு கிளம்பு.” என்றார்.

“அப்போ நீங்க வரலையா?” என்று ஸ்வராகிணி பதிலுக்கு கேட்க,

“எப்படி மனசாட்சி இல்லாம இப்படி பேசற ஸ்வரா, சோட்டீ பாதுகாப்பா இருக்காளான்னு தெரிஞ்சிக்கணும், அப்படி தெரியாம என்னால எங்கேயும் வர முடியாது.” என்று அவர் கூற,

“கல்யாணம் வேண்டாம்னு முடிவு செய்து தானே போனா, ஏதாச்சும் திட்டம் வச்சிருப்பா, இப்போ தான் அவளுக்குன்னு சொத்து இருக்கே, அதைப்பத்தி நீங்களும் அவக்கிட்ட சொல்லிட்டீங்க, அப்புறம் நம்மளை பத்தி அவ ஏன் யோசிக்கப் போறா? அவ பேர்ல பேங்க்ல பணம் இருக்கு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாம் இருக்கு, செலவு செய்து வெளிநாட்டில் படிக்க வச்சீங்க, பாஸ்போர்ட் கூட அவக்கிட்ட தானே இருக்கும், இன்னேரம் அவ ஆஸ்திரேலியாக்கு போயிருப்பா, நீங்க என்னடான்னா அவளைப்பத்தி கவலைப்பட்டுட்டு உட்கார்ந்திருக்கீங்க,” என்று கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் ஸ்வராகிணி பேச,

“அப்படி ஒரு முடிவெடுத்திருந்தா கூட அவ பாதுகாப்பா இருக்கான்னு எனக்கு நிம்மதி தான், ஆனா அதை தெரிஞ்சிக்கிட்டு தான் வருவேன். நீ இப்போ ஊருக்கு கிளம்பு,” என்று சொல்லி ஸ்வராகிணியை ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

பிறகு தான் காவல்துறையில் தன் செல்வாக்கை பயன்படுத்தி தேட சொல்ல, ஸ்வராகிணி சொன்னது போலும் யோசித்து அதன்படி தேட நினைத்தவர்கள், அவளது அலைபேசி எண் எல்லாம் ட்ராக் செய்து  இன்னும் இரண்டு நாளில் கண்டிப்பாக கண்டுப்பிடிப்பதாக உறுதி கூறினர். 

அப்போது தான் ஒருபக்கம் தொழிலையும் பார்க்க வேண்டியிருக்க, ஒரு முக்கிய விஷயமாக சுஷாந்திடம் பேசும்போது, அவன் யாஷ் பற்றி சொல்லி, சோட்டீயை விசாரித்ததை பற்றியும் கூறினான். அதுவும் யாஷும் சோட்டீயும் சென்னையில் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்ற கூடுதல் தகவலை சுஷாந்த் சொல்லவும், அவருக்கு பழைய விஷயம் ஞாபகம் வந்தது. தன் மகள் காதலித்ததாக மருத்துவர் கூறியது ஒருவேளை யாஷ் தானோ? என்ற சந்தேகம் வந்தது. அதிலும் மகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டி இருக்கவே யாஷை உடனடியாக பார்க்க வேண்டுமென்று அவர் நினைத்தார்.

இன்று காலை வந்து யாஷ் பார்ப்பதாக சொல்லியதை சுஷாந்த் கூறவும், அவனுக்காக தான் இப்போது தவிப்போடு ஹோட்டல் அறையில் காத்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் அலைபேசி அடிக்க, அவர் எடுத்து பேசவும்,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“சார் உங்க பொண்ணு, நேத்து பாரீஸ் கார்னரில் இருக்க ஒரு ஏடிஎம்ல பணம் எடுத்திருக்காங்க, அந்த சரவுண்டிங்ல உங்க பொண்ணு போட்டோ காட்டி விசாரிச்சா, அவங்களைப்பத்திய தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கு நீங்களும் வர்றீங்களா?” என்று காவல்துறையை சேர்ந்தவர் ஒருவர் பேச,

“அப்படியா? என்னோட பொண்ணு விஷயமா எனக்கு ஒரு தகவல் கிடைச்சிருக்கு, அதைப்பத்தி பேச தான் ஒருத்தரை வர சொல்லியிருக்கேன். அவர்க்கிட்ட பேசிட்டு வரட்டுமா? இல்லை உடனே வரணுமா?” என்று ரிஷிவர்த் கேட்கவும்,

“அப்படியா? உங்க பொண்ணு இருக்க இடத்தைப்பத்தி தெரிஞ்சிக்க கூட வாய்ப்பிருக்கலாம், அதனால அந்த நபரை பார்த்து பேசிட்டு வாங்க, முக்கியமான தகவல் கிடைச்சா உடனே எங்களுக்கு சொல்லுங்க,” என்று சொல்லி அந்த பணியாளர் அழைப்பை அணைக்கவும், உடனே அறையிலிருந்த இண்டர்காம் ஒலித்தது.

ரிஷிவர்த் அதை எடுத்து பேசவும், “சார் உங்களைப் பார்க்க யாஷ் நெஹ்ரான்னு ஒருத்தர் வந்திருக்கிறார். அவரை உங்க ரூம்க்கு அனுப்பட்டுமா?” என்று வரவேற்பறையிலிருந்த பெண் கேட்கவும், “அனுப்புங்க,” என்று சொல்லி காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்படவும் அவர் போய் கதவைத் திறக்க, “நான் யாஷ் நெஹ்ரா. சுஷாந்தோட ஃப்ரண்ட்,” என்று சொல்லி வெளியே நின்றிருந்த யாஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, 

“ஓ நல்லது. உள்ள வாங்க,” என்று ரிஷிவர்த் அவனை உள்ளே கூப்பிட்டார்.

அவன் உள்ளே வந்ததும், “நீங்க சுஷாந்த்க்கிட்ட சோட்டீ பத்தி விசாரிச்சிங்கன்னு சுஷாந்த் சொன்னான். நீங்க எதுக்கு அவளை விசாரிச்சிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? ஏன்னா சுஷாந்த் உங்கக்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். என்னோட மகளை பத்து நாளுக்கு மேல காணல, அவளை தான் நான் தேடிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது அவளைப்பத்தி தகவல் தெரியுமா?” என்று ரிஷிவர்த் படப்படப்போடு கேட்கவும்,

“பத்து நாளுக்கு மேல காணும்னு சொல்றீங்க, இத்தனை நாளா அவளை உங்களால கண்டுப்பிடிக்க முடியலையா?” என்று யாஷ் கேட்டான்.

“அது அவ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இங்கிருந்து போனா, பாதுகாப்பா இருப்பா, வந்திடுவான்னு நினைச்சேன். ஆனா இத்தனை நாள் ஆகியும் அவக்கிட்ட இருந்து தகவல் இல்லை என்றதும் தான் தேடும் முயற்சியில் இறங்கினேன். ப்ளீஸ் அவளைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்க,” என்று அவர் கேட்கவும்,

“முதலில் உங்க மகள் சோட்டியோட உண்மையான பேர் சொல்லுங்க, அப்புறம் அவளோட போட்டோ ஏதாவது இருந்தா காண்பீங்க, அப்போ தான் என்னால உங்க மகள் பத்திய தகவல் கொடுக்க முடியும்,” என்று யாஷ் பதிலுக்கு கேட்க,

உடனே ரிஷிவர்த் அவசரமாக, “ஒரு நிமிஷம் என்று அவரது அலைபேசியிலிருந்த போட்டோவை எடுத்து காட்டி,”இது தான் என்னோட மகள், பேர் ரிதுபர்ணா.” என்று சொல்ல, முழுமையாக உறுதியாக ரிதுபர்ணா தான் சோட்டீ என்பது யாஷிற்கு தெரிந்துவிட்டது. 

சிறிது நேரம் அவன் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்க, “சொல்லுங்க இவளை பார்த்திருக்கீங்களா? உங்களுக்கு சோட்டீ எங்க இருக்கான்னு தெரியுமா?” என்று ரிஷி கேட்க,

“தெரியும், உங்க மகள் சோட்டீ எங்க இருக்கான்னு தெரியும், இப்போ அவ என்னோட மனைவியா என்னோட வீட்டில் தான் இருக்கிறாள்.” என்று அவன் அவரது முகத்தை பார்த்து எந்தவித தயக்கமுமின்றி கூற, 

அவரோ, “என்ன?” என்று அதிர்ச்சியாகினார்.

“ஆமாம் உங்க மகள்  இங்கிருந்து வந்த அன்னைக்கே எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு,” என்று அவன் சொல்லவும்,

“அப்போ என் மகள் சென்னையில் பார்த்து காதலித்தது உங்களை தானா?” என்று அவர் கேட்க, அவன் முகம் யோசனையை தாங்கவும், அதைப் பார்த்து அப்படி கேட்டிருக்க கூடாதோ என்று நினைத்தார்.

ஏற்கனவே யாஷ் தான் அந்த பையனோ என்று அவர் நினைத்திருக்க, அவன் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னதும், அதிலும் ரித்து இங்கிருந்து சென்ற அன்றே இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும், ஒருவேளை மகள் அந்த திட்டத்தோடு தான் சென்றிருப்பாளோ என்று நினைத்து தான் அப்படி கேட்டார்.

பிறகு அவன் முகம் போன போக்கை பார்க்கவும் தான், அப்படியில்லை போல என்பதை உணர்ந்தார். அதிலும் ரித்து மட்டும் தான் அந்த பையனை காதலித்தாள். அந்த பையனுக்கு அப்படி ஒரு எண்ணமில்லை என்பது தெரிந்து தான் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்ததே என்பதெல்லாம். அடுத்தடுத்து அவருக்கு ஞாபகம் வர, ரித்துவிற்கும் அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக யாஷ் வேறு சொல்லியிருக்க, அவனிடம் இந்த விஷயத்தை பற்றி பேசியது அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துமோ என்றெல்லாம் விபரீதமான எண்ணங்கள் அவருக்கு தோன்றியது.

அதேநேரம் யாஷோ அடுத்தடுத்து ரித்துவை பற்றி புது செய்திகளாக கேட்க, அதிலும் அவள் யாரையோ காதலித்ததாக வேறு ரிஷிவர்த் சொல்லவும், ஒருவேளை அதுதான் அவள் பிரச்சனையா? யாரையாவது காதலித்து, அவனுக்காக தான் வீட்டை விட்டு வந்தாளா? எதிர்பாராமல் இவனை திருமணம் செய்யும் சூழல் வந்துவிட்டதா? இவனுக்கு தான் அவளை அடையாளம் தெரியவில்லை. அவளுக்கு இவனை தெரிந்திருக்கும், அந்த இக்கட்டான சூழலில் இவனை அவமானத்திலிருந்து காக்க திருமணம் செய்துக் கொண்டாளா? தன் காதலைப் பற்றி எப்படி சொல்வது என்பது தான் அவள் தயக்கமா? என்ற அளவிற்கெல்லாம் அவன் சிந்தனைகள் நீள,

‘ச்சேச்சே இருக்காது, அப்படியென்றால் அந்த இடத்தில் முக்தாவிற்கு பதில் அவள் மாறியதை கண்டிப்பாக சொல்லியிருப்பாள். அதுமட்டுமில்லாமல் தன் விஷயத்தை மறைக்க அவள் நினைத்தாலும், என்னுடன் அவள் இருந்த பொழுதுகள் அவள் மகிழ்ச்சியாக தான் இருந்தாள். அதனால் அவள் வேறு யாரையும் காதலித்தெல்லாம் இருக்க மாட்டாள்.’ என்று முடிவு செய்துக் கொண்டவன், ‘பிறகு ஏன் இவர் இப்படி கேட்டார்?’ என்று நினைத்தவன்,

“நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு புரியல?” என்று ரிஷிவர்த்தை பார்த்துக் கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை விடுங்க,” என்று சமாளித்தவர், உள்ளே வந்ததிலிருந்து அவன் நின்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தவர், அதிலும் மகளை திருமணம் செய்துக் கொண்டவன் என்பதும் இப்போது தெரிந்துக் கொள்ளவே, “வந்ததிலிருந்து நிக்கறீங்களே, முதலில் உட்காருங்க,” என்று சொல்லி அவனுக்கு சோஃபாவை காட்டினார்.

“நீங்களும் உட்காருங்க,” என்று சொல்லி இருக்கையில் அமர்ந்தவன், அந்த அறையை ஒரு பார்வை பார்த்தான். அதுவே ஒரு வீடு போல் இருந்தது. முன்னே வரவேற்பறை, அங்கு தான் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அடுத்து படுக்கயறை போலும், கண்டிப்பாக அதுவும் பெரிதாக தான் இருக்கும், இந்த அறைக்கு ஒருநாள் வாடகை எப்படியோ பத்தாயிரத்தை  தாண்டிவிடும் போல், இப்படி வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்த ரித்து, அவனுடன் வந்து அந்த வீட்டில் அனுசரித்து வாழ்வது அவனுக்கே வியப்பாக இருந்தது.

அவனுக்கு தலையாட்டிவிட்டு அவன் எதிரில் அமர்ந்த ரிஷியோ, “நிஜமாகவே சோட்டீக்கு உங்கக் கூட கல்யாணம் ஆகிடுச்சா? அவ உங்கக் கூடவா இருக்கா? நீங்க என்ன செய்றீங்க? உங்க குடும்பம் இங்க சென்னையில் தான் இருக்காங்களா? நீங்க வரும்போதே அவளையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே? ஏன் கல்யாணம் நடந்த விஷயத்தை ரித்து எனக்கு தெரியப்படுத்தல? எப்படி இந்த கல்யாணம் நடந்தது?” இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனவர்,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அவ என்கிட்ட எப்படி சொல்லுவா? ஒரு பப்பாவா அவளுக்கு நான் என்ன செய்திருக்கேன். அவளுக்கு அநியாயம் நடக்கவிருந்ததை அமைதியா வேடிக்கை தானே பார்த்தேன். பாவம் அவளா அதிலிருந்து தப்பிச்சு போனா, ஏதாவது ஆபத்தில் மாட்டியிருந்தா என்னாகறது? அப்படியில்லாம அவ பாதுகாப்பா இருப்பதே பெரிய விஷயம், இதில் அவ கல்யாணம் நடந்ததை ஏன் சொல்லலன்னு கேட்கிறேன்.” என்று அவரே வருத்தமாக சொல்லிக் கொண்டார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவனோ, “இந்த கல்யாணமே ஒரு குழப்பத்தில் தான் நடந்தது. எங்க வீட்டில் நான் என்னோட பப்பா, அப்புறம் ஒரு அண்னன். அவனுக்கு கல்யாணம் ஆகி மனைவியோடு தனியா இருக்கான். எனக்கு கொஞ்ச நாள் முன்ன நடந்த ஒரு விபத்து காரணமா நான் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. அதானால் பார்த்துட்டு இருந்த வேலை இப்போ இல்லை. எனக்கும் என்னோட அத்தை பெண்ணுக்கும் தான் கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தாங்க, ஆனா நடந்தது என்னன்னா..”  என்று திருமணத்தன்று நடந்ததை கூறியவன்,

“அப்படி ஒரு எதிர்பாரா சூழ்நிலையில் தான் எங்க கல்யாணம் நடந்ததே, அப்போ ரித்து தான் சோட்டீன்னு கூட எனக்கு தெரியாது. உங்கக்கிட்ட சுஷாந்த் சொல்லியிருப்பான். சோட்டீயை வெகேஷன்க்கு வந்திருந்தப்போ அவன் வீட்டில் வச்சு தான் பார்த்தேன். அப்போ அவ குண்டா இருப்பா இல்லையா? இப்போ அடையாளமே தெரியாம மாறியிருக்கா, அது தெரியாம அவ மேல முதலில் கோபப்பட்டேன். ஆனா அப்புறம் தான் அவ சோட்டீயா இருப்பான்னு தெரிஞ்சுது.

ஆனா ஏன்னு தெரியல, அவ தான் சோட்டீன்னு என்கிட்ட சொல்ல மாட்டேங்குறா, அதுமட்டுமில்ல பிடிக்காத கல்யாணம் என்பதை தவிர வேற எதுவும் எனக்கு இதுவரை அவளைப்பத்தி தெரியாது. அதுவும் சுஷாந்த் சொல்லி தான் எனக்கு தெரியும், கேட்டப்போது உங்க மேல பயங்கர கோபம் வந்துச்சு, என்னன்னு எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கணும் தான் உங்களை பார்க்க வந்தேன்.

ஆனா நீங்க பேசும்போது அவ மேல ரொம்ப பாசமா இருக்கீங்கன்னு தெரியுது. ஆனா அவளுக்கு இப்படி ஒரு அநியாயம் செய்ய ஏன் நினைச்சீங்க? ரித்துக்கு அந்த கல்யாணம் மட்டும் தான் பிரச்சனையா? இல்லை வேறெதுவுமா? ஏன்னா அவளோட பாட்டி இறந்ததிலிருந்தே ஏதோ அவளைப்பத்தி பெரியவங்க பேசிட்டு இருக்காங்கன்னு சுஷாந்த் சொன்னான். ப்ளீஸ் அவளோட கணவனா அவளுடைய பிரச்சனைகளை தெரிந்து தீர்த்து வைக்க நினைக்கிறேன். என்னன்னு சொல்லுங்க?” என்று கேட்க,

ரிஷிவர்த்திற்கோ அவனிடம் அனைத்தையும் சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்தது. அவனது ரித்துவை குறித்த அக்கறை பேச்சு, மற்றும் ஒளிவு மறைவில்லாமல் அவனைப் பற்றிய தகவல்களை கூறியது, அனைத்தும் அவனை நல்லவனாக காட்டினாலும், ரித்து மேலெழுதி வைத்திருக்கும் சொத்து அவளுக்கு ஆபத்தை வரவழைத்தால் என்ன செய்வது? ஏற்கனவே அந்த சொத்து தான் ஸ்வராகிணி மாற்றத்திற்கு காரணம் என்பதை அவரால் புரிந்துக் கொள்ள முடியாதா என்ன? அதனால் அவர் சொல்வதற்கு தயங்க,

“என்ன இவனிடம் எப்படி சொல்றது? சோட்டீக்கும் இவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றான். ஆனா அதை நாம எப்படி நம்பறதுன்னு யோசிக்கிறீங்களா?” என்றவன் தன் அலைபேசியை எடுத்து, “இங்கப்பாருங்க இது நானும் ரித்துவும் அந்தமான்க்கு ஹனிமூன் போனப்ப எடுத்த போட்டோ,” என்று அவரிடம் காட்டினான்.

இரண்டு பேரும் தம்பதிகளுக்குரிய நெருக்கத்தோடு புகைப்படத்தில் இருக்க, இருவரும் பொருத்தமான ஜோடியாக கண்ணுக்கு நிறைவாக இருந்தனர். அதைப்பார்த்து ரிஷிக்கு கண்கள் லேசாக  கலங்கியது.

கல்யாணம் நடந்த அன்னைக்கு ரித்து மேலே கோபமா தான் இருந்தேன். ஆனா பிறகு எங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சு. இங்கப்பாருங்க ரித்துவோட கடந்தகாலம் என்னவா இருந்தாலும் அவளை ஒருபோதும் விட்டுட மாட்டேன்னு நான் எப்போதோ மனதில் நினைத்துக் கொண்டேன். அதனால நீங்க எதுவா இருந்தாலும் சொல்லலாம்,” என்று அவன் கூறவும்,

ரிஷிக்கும் மேலும் அவன் மீது நம்பிக்கை வர, “மாப்பிள்ளை,” என்று சொல்லி அருகே வந்து அவனது கைப்பிடித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தவர், அவளின் காதல், தற்கொலை முயற்சியை தவிர, அவள் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் அவனிடம் கூறிவிட்டார். அதைக்கேட்டு யாஷ் எப்படி உணர்ந்தான் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் ரிஷி மீது கோபத்தோடு தான் அவரை காண வந்தான். ஆனால் அவர் ரித்துவை காணவில்லை என்ற தவிப்போடு பேசவும் அவனது கோபம் குறைந்திருந்தது. ஆனால் இப்போதோ நடந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் தான் என்பதை அறிந்ததும் அவனுக்கு திரும்பவும் அவர் மீது கோபம் வந்தது.

அவனது மனநிலை புரியாமல் அவரோ, “இத்தனை நாள் என்னோட மகள் பட்ட கஷ்டத்துக்கு இப்போ தான் ஒரு நல்லகாலம் பிறந்திருக்குன்னு நினைக்கிறேன். நீங்க அவளுக்கு பொருத்தமான ஜோடி. இனி அவளை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மாப்பிள்ளை. எனக்கு இப்போதே என்னோட மகளைப் பார்க்கணும், என்னை கூட்டிட்டுப் போறீங்களா?

அவளுக்கு என்மேல கொஞ்சம் கோபம் இருக்கும், கூட சுதன்லாலை நினைச்சு  பயமும் இருக்கும், ஆனா இப்போ எந்த பிரச்சனையுமில்ல, கல்யாணம் நின்னது மானப்பிரச்சனைன்னு அவனுக்கு அவனோட சொந்தத்திலிருந்து ஒரு பெண்ணை பேசி அப்பவே திருமணம் முடிச்சிட்டாங்க, ஆனாலும் அவன் பிரச்சனை செய்ய தான் இருந்தான். ஆனா அவங்க எங்கக்கூட பிஸ்னஸ் டீல் வச்சிருக்காங்க, அதனால அவங்களுக்கு வரும் லாபத்தை அவங்க இழக்க விரும்பல, அதனால் அவங்க தாத்தா தலையிட்டு அந்த பிரச்சனையை தீர்த்துட்டாரு, கூட போலீஸிலும் சொல்லி வச்சிருக்கேன். 

அதனால சுதன்லால் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டான். அவனைப்பத்தி எந்த பயமும் வேண்டாம், எனக்கு உடனே ரித்துவை பார்க்கணும், அம்மா அவளுக்காக கொடுத்த சொத்தை உங்க ரெண்டுப்பேர்க்கிட்ட ஒப்படைக்கணும், அதுமட்டுமில்ல உங்களுக்கு இப்போ வேலையில்லைன்னு சொன்னீங்க இல்ல, இனி நீங்க எந்த வேலைக்கும் போக வேண்டாம், ரித்துவும் நீங்களும் வந்து ஆஃபீஸ்  பொறுப்பையும் ஏத்துக்கணும், அப்போ தான் எனக்கு சந்தோஷம், உங்க குடும்பத்தையும் நான் சந்திச்சு பேசணும், என்னை கூட்டிட்டு போறீங்களா மாப்பிள்ளை?” என்று அவர் ஆவலாக கேட்க,

“சுதன்லால் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டான் சரி. ஆனா உங்க மனைவி இதுக்கு மேல எந்த பிரச்சனையும் செய்ய மாட்டாங்கன்னு உங்களால உறுதி கொடுக்க முடியுமா?” என்று யாஷ் கேட்கவும், அவர் அதிர்ந்து அவனை பார்த்தார்.

அதற்கு அவர் என்ன பதில் சொல்வார்? தயக்கத்தோடு, “ஏதோ புத்திக் கெட்டு போய் அவ அப்படி நடந்துக்கிட்டா, ஆனா இனி அவ அப்படி செய்ய மாட்டா, அதுக்கு நான் பொறுப்பு. நான் அவளுக்கு பேசி புரிய வைக்கிறேன்.” என்று அவர் சொல்ல,

“இத்தனை நாள் புரிய வைக்காததையா இப்போ புரிய வைக்கப் போறீங்க?” என்று அவன் கேள்விக் கேட்கவும், அவர் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றார்.

“இங்கப்பாருங்க நடந்த விஷயத்தில் முழுக்க முழுக்க உங்க மேல தான் தவறு. உங்க மனைவியின் உணர்வுகளை புரிஞ்சிக்காம நீங்க உங்க சுயநலத்தை மட்டுமே நினைச்சு  செய்த காரியம் இப்போ எந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு பார்த்தீங்களா?

உங்க மனைவியை விட்டு பிரிய முடியாதுன்னா உங்க அம்மாக்கிட்ட தைரியமா பேசியிருக்கலாம். ஆனா அந்த அளவு தைரியமில்லாம, உங்க மனைவிக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் அப்படி ஒரு முடிவெடித்தீங்க, ஆனா அதுக்கு தண்டனை அனுபவிப்பது ரித்துவா? உங்க மனைவி மீதும் தவறு இருக்கு.

நீங்களும் உங்க அம்மாவும் அவங்களுக்கு அநியாயம் செய்துட்டீங்க தான், ஆனா உங்களை விட்டு பிரியக் கூடாதுன்னு தானே நீங்க எடுத்த முடிவுக்கு சம்மதிச்சாங்க, அதுக்குப்பிறகும் அவங்களுக்கு என்னப் பிரச்சனை? யாரோ ஒரு குழந்தையை தத்தெடுத்ததா நினைச்சு கூட ரித்துக்கிட்ட பாசம் காட்டியிருக்கலாமே?

தாய்மை என்பது ஒரு குழந்தையை பெத்துக்கறதால் வருவதில்லை. அது பெண்மைக்கே உரிய சிறப்பு. அதனால் தான் பெண்ணுக்கு மட்டுமே அந்த வரத்தை கடவுள் கொடுத்திருக்கான். ஏன் அதே தாய்மை உணர்வை சில ஆண்களிடத்திலும் பார்க்க முடியும், அதுக்கு உதாரணம் என்னோட பப்பா, அம்மா இல்லாத குறை தெரியாம எங்களை வளர்த்திருக்கார்.

ஆனா உங்க மனைவிக்கிட்ட அது துளி கூட இல்லையா? அவங்க பெத்த குழந்தையா இருந்தா தான் அதை காட்டியிருப்பாங்களா? அதில் நூற்றில் ஒரு பங்காவது ரித்துக்கிட்ட காண்பித்திருக்கலாமே? இல்லை கடைசி வரை அப்படியே விட்டிருந்தா கூட பரவாயில்லை. ஆனா சொத்துக்காக இன்னைக்கு ஒரு மோசமானவனுக்கு அவளை திருமணம் செய்துக் கொடுக்க துணிஞ்சவங்க, நாளைக்கு அதே சொத்துக்காக அவளை கொலை செய்ய முடிவெடுத்தாங்கன்னா என்ன செய்வது?”

“அய்யோ இல்ல மாப்பிள்ளை. ஸ்வரா அந்த அளவுக்கு மோசமானவ இல்லை.”

“இவ்வளவு தூரம் அவங்க போயிட்டாங்க, இப்போதும் அவ்வளவு மோசமானவங்க இல்லன்னு சொல்றீங்க, மனித மனம் மாற கொஞ்சம் நிமிடம் போதும், ஆரம்பத்திலிருந்து அவங்க விருப்பம் இல்லாம ரித்துவுக்கு அம்மாவா இருந்தாங்க, ஆனா எப்போ அவளுக்கு எதிரா ஒரு காரியம் செய்தாங்களோ, இனி அவங்களால ஒரு பேச்சுக்கு கூட அம்மாவா இருக்க முடியாது.

மனிதனுக்கு கொடுத்த ஆறறிவை பயன்படுத்தி என்னன்னவோ கண்டுப்பிடிக்கிறான். அப்படித்தான் தாய்மை வரம் எல்லோருக்கும் கிடைக்கணும்னு இந்த செயற்கை கருத்தருத்தரித்தல் முறை கண்டுப்பிடிச்சாங்க, ஆனா அதுவும் நிறைய பேருக்கு பாதகம் தான்,

ஒருபக்கம் மருத்துவமனைகள் இதை வியாபார நோக்கில் செயல்படுத்த ஆரம்பிச்சிடுச்சு. இன்னொருபக்கம் வறுமை காரணமாக தங்களோட உடல் உறுப்புக்களை வித்து கூட வறுமையை போக்கிக்க நினைக்கும்  மக்கள் இருக்க, கருப்பை தானம் அவங்களுக்கு பெரிய விஷயமா தெரியாம இருக்கோ என்னவோ,

கையில் பணம் இருந்தா எதையும் வாங்கிடலாம்னு நினைக்கும் உங்களுக்காகவே இப்படி துணிஞ்சு தங்களின் பணத் தேவைக்காக வராங்க, கருப்பை தானம், கருமுட்டை தானம், விந்தணு தானம்னு ஒரு வாரிசு உருவாக  மருத்துவத்தில் நிறைய வழி இருக்கு. 

தன்னோட கௌரவத்தை காப்பாத்திக்கணும், தன்னோட குறை வெளி உலகத்திற்கு தெரியக் கூடாது. தன்வழியில் தனக்கு வாரிசு வரணும், அதுதான் தன்னோட சொத்தை ஆளணும், எப்படியோ வெளி உலகத்தின் பேச்சுக்கு ஆளாகாம தனக்குன்னு ஒரு குழந்தை இருந்தா போதும், அதுக்கு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் பரவாயில்லை. 

அதனால பணத்தை செலவழிச்சு, ஒருத்தரோட வறுமையை பயன்படுத்தி குழந்தை பெத்துக்கறீங்க, ஆனா அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறி தான்? அப்போதைக்கு ஊர் வாயை அடைச்சாச்சு, ஆனால் உங்களால அந்த குழந்தைக்கு நிரந்தர சந்தோஷத்தை கொடுக்க முடியும்னு உறுதியா சொல்ல முடியுமா?

பணம், சொத்து மட்டும் ஒருத்தருக்கு சந்தோஷத்தை கொடுக்காது. அன்பும் பாசமும் தான் நிரந்தர சந்தோஷத்தை கொடுக்கும், தவறு செய்தததெல்லாம் பெரியவங்க நீங்க 3 பேரும், ஆனா தண்டனை அனுபவிப்பது ரித்து, இன்னும் ரித்து போல எத்தனை குழந்தைங்கள் கௌவரத்தை காப்பாற்ற மட்டுமே இந்த உலகத்தில் வந்து பிறக்கிறாங்களோ தெரியல,

ரித்துக்கு இப்போ தேவைப்படுவது சொத்தோ, அந்தஸ்தோ இல்லை. அவளுக்கு தேவை அன்பும் பாசமும், இத்தனை நாள் அதை நீங்க ரெண்டுப்பேருமே கொடுக்கல, அப்படியிருக்க இனியும் அது உங்கக்கிட்ட கிடைக்குமான்னு தெரியல, நீங்கல்லாம் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தகுதி கூட இல்லாதவங்கன்னு தான்  நான் சொல்வேன்.

ஏதோ அதிர்ஷ்டவசமா ரித்து எனக்கு மனைவியா கிடைச்சிருக்கா, அவளுக்கு இனி என்மூலம் அன்பு பாசமும் கிடைக்கணும், அதேபோல அவ மூலமா வர சொத்து எனக்கு வேண்டாம், அந்த சொத்துக்காக தானே அவளுக்கு உங்க மனைவி இப்படி ஒரு அநியாயம் செய்தாங்க, அதை அவங்க பேருக்கே எழுதி கொடுத்திட்றோம், உங்க காலம் முடிஞ்சு அப்போதும் அந்த சொத்து ரித்துக்கு கிடைக்கணும்னு நீங்க நினைச்சா அது பிற்காலத்தில் ரித்துக்கு வரட்டும். அப்போக்கூட அதை ஏத்துக்கிறது அவ விருப்பம் தான், 

இப்போ எனக்கு வேலை இல்லைன்னாலும், சீக்கிரம் வேலை கிடைச்சிடும், அவளை நான் என் உள்ளங்கையில் வச்சு பார்த்துப்பேன். அதைவிட பாசமா என்னோட பப்பா பார்த்துப்பார்.” என்று  அவன் ஆவேசமாக சொல்லவும்,

“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல மாப்பிள்ளை. நீங்க சொல்றது ஒவ்வொன்னும் சரியான வார்த்தை. அப்போ அம்மாவை சமாளிக்க இந்த முடிவு தான் சரின்னு தோனுச்சு. ஆனா பிறகு அது தப்புன்னு எத்தனையோ முறை யோசிச்சுப் பார்த்துட்டேன். ஸ்வரா ஒருநாள் கண்டிப்பா மாறுவான்னு நினைச்சேன். ஆனா அவ மாறவேயில்லை. ஆனா அதுக்காக இந்த சொத்து வேண்டாம்னு சொல்லாதீங்க, அது அம்மா சோட்டீக்கு எழுதிக் கொடுத்தது. அது அவளுக்கு தான் சேரணும் மாப்பிள்ளை.” என்றார் அவர்.

“இல்ல சார், கண்டிப்பா அவளோட பாதுகாப்புக்காக தான் சுஷாந்த் நாணி ரித்துக்கு சொத்து எழுதி வச்சிருப்பாங்க, ஆனா அதுவே அவளுக்கு பாதுகாப்பு இல்லாம ஆயிடுச்சு. உங்க மனைவிக்கு ரித்து மேல சொத்து எழுதி வச்சது கூட கோபமா இருக்காது. உங்க ரெண்டுப்பேர் மேல நம்பிக்கையில்லாம உங்க அம்மா அவ பேரில் சொத்து எழுதி வச்சது தான் அவங்க கோபத்துக்கு காரணம். அதுக்கு தான் சொல்றேன். எல்லாமே உங்க பேரிலோ இல்ல அவங்க பேரிலோ மாத்திடலாம், அது அவங்களை சமாதானப்படுத்தலாம்,

தன்னை பெத்த தாய் யாருன்னு கூட ரித்துக்கு தெரியாது. ஏன்னா அவங்க பணத்துக்காக வந்தாங்க, குழந்தை பெத்து கொடுத்தாங்க, அதோட அவங்க வேலை முடிஞ்சுதுன்னு போயிட்டாங்க, ரித்துக்கும் அவங்களுக்கும் எல்லாமே அதோட முடிஞ்சுது. ஆனா பிறந்ததிலிருந்து தன்னோட அம்மான்னு அவ உங்க மனைவியை தான் நினைச்சிட்டு இருக்கா, அவளுக்காகவாவது அவங்க மனம் மாறினா சந்தோஷம். அதுக்காக தான் சொல்றேன். எல்லாம் அவங்க பேரில் மாத்திடுங்க,”

“சரி மாப்பிள்ளை நீங்க சொல்றதும் சரிதான், நான் அப்படியே செய்றேன். என் மகள் ஏதோ ஒருவிதத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கா, அதான் அவளுக்கு நீங்க கணவனா கிடைச்சிருக்கீங்க, எனக்கு அந்த சந்தோஷமே போதும், அதனால் நீங்க சொல்றப்படியே செய்றேன். ஆனா எனக்கு ரித்துவை உடனே பார்க்கணும், என்னை கூட்டிட்டுப் போறீங்களா?”

“நான் உங்களை பார்க்க வருவது அவளுக்கு தெரியாது. உங்களை குறித்து அவ எந்த மனநிலையில் இருக்கான்னு தெரியல, அதனால் அவக்கிட்ட தான் கேட்கணும், அவளுக்கு விருப்பம்னா நான் கூட்டிட்டு வரேன். அப்படியே இல்லைன்னாலும் எப்படியோ சொத்தை மாத்தும்போது ரித்துவும் வரணுமில்ல, அப்போ அவளைப் பார்க்க தானே போறீங்க,” என்று அவன் கூறவும், 

இத்தனை நடந்தும் மகள் பார்க்க நினைப்பாளா? என்று தெரியவில்லை. இருந்தும் அவள் சம்மதிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு சரியென்று தலையாட்டினார்.

“அப்புறம் இன்னொரு விஷயம், சொத்து தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க, ஆஃபிஸ் பொறுப்பையாவது ஏத்துக்கலாமில்ல, அதுக்காக பூனா கூட வரவேண்டாம், இப்போ சென்னையில் இருக்கும் தொழிலோட பொறுப்பை நீங்க ஏத்துக்கணும்,” என்று ரிஷி கூற,

“விலகி இருக்கணும்னு நினைச்சிருக்கோம், அதனால இப்போதைக்கு இதுவுமே வேண்டாம், ப்ளீஸ் எங்களை கட்டாயப்படுத்தாதீங்க,” என்று யாஷ் மறுத்தான்.

அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில நொடிகள் அமைதியாக இருந்தவர், பின் ஏதோ யோசனையோடு தனது பர்ஸை எடுத்தவர், அதிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் நீட்டியவர், “இது என்னோட ஃப்ரண்ட்டோட ஆஃபிஸ். நாளைக்கு நீங்க அவனை போய் பாருங்க, உங்களுக்கு ஒரு நல்ல பொஷிஷன்ல வேலை ரெடியா இருக்கும்,” என்று அவர் சொல்ல,

“வேண்டாம், நான் 2, 3 இண்டர்வியூ அட்டண்ட் செய்திருக்கேன். கண்டிப்பா வேலை கிடைச்சிடும்,” என்று அதற்கும் அவன் மறுப்பு தெரிவிக்க,

“இங்கப்பாருங்க மாப்பிள்ளை, முறைப்படி உங்க கல்யாணம் நடந்திருந்தா என் மகளுக்கு தேவையான எல்லாமே கொடுத்திருப்பேன். ஆனா நீங்க எதுவும் எதிர்பார்க்கல, வேண்டாம்னு சொல்லிட்டீங்க, இப்படி ஒரு துணை கிடைச்சது எனக்கு சந்தோஷம், அவளுக்காக ஏதாவது செய்யணும்னு இருக்கு. நீங்க இந்த வேலையை ஏத்துக்கிட்டா  கொஞ்சமாவது என் மனசுக்கு திருப்தி கிடைக்கும்,” என்று அவர் வேண்டிக் கேட்டார்.

முக்தாவின் தந்தை தொழில் ஆரம்பித்து தருவதாக கூறியதால் தானே கிஷன் அந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். அதை ஞாபகம் கொண்டவனாக, “நான் நாளைக்கு அங்க போறேன். என்னை இண்டர்வியூ செய்து என்னால அந்த வேலையும் செய்ய முடியும்னு நம்பினா அவங்க வேலை கொடுக்கட்டும், மத்தப்படி நீங்க சொன்னதுக்காக வேண்டாம், கூட நான் உங்க மருமகன் என்று இப்போதைக்கு தெரிய வேண்டாம்,” என்று அவன் சொல்லவும்,

“உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கும் மாப்பிள்ளை. ரொம்ப தேங்க்ஸ்.” என்று ரிஷி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“சரி அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று அவரிடம் கேட்டவன், “அதுக்கு முன்ன ஒரு விஷயம்,” என்று தயங்கியப்படியே,

“நான் எங்க கல்யாணத்தை பத்தி சொன்னதுமே ஏதோ கேட்டீங்கல்ல, ரித்து காதலிச்ச பையனான்னு, ஏன் அப்படி கேட்டீங்க?” என்று அவன் கேட்க,

மீண்டும் அதை சொல்லலாமா என்று அவர் யோசித்தார். ஏனோ யாஷ் ரித்துவிற்கு தெரிந்தவனாக இருந்தாலும், அவனிடம் தான் தான் சோட்டீ என்று ரித்து சொல்லாதது அவருக்கு மருத்துவர் சொன்ன பையன் யாஷாக தான் இருக்குமோ என்ற சந்தேகத்தை இன்னுமே அதிகப்படுத்தியது. ஆனால் உறுதியாகவும் தெரியாததால் அதைப்பற்றி சொல்லலாமா? என்று அவர் தயங்க,

“நான் முன்னமே சொன்னேனே, ரித்துவின் கடந்தகாலம் எப்படி இருந்தாலும் அவளை விட்டுட மாட்டேன். அவளை நல்லாவே பார்த்துப்பேன். ப்ளிஸ் என்னன்னு சொல்லுங்க?” என்று அவன் உறுதியாக கூறினான்.

பிறகு தான் நம்பிக்கையோடு, ரித்து சென்னையில் ஒருவனை காதலித்ததையும், அவனுக்காக தற்கொலை முயற்சி செய்தது. மருத்துவர் மனநல ஆலோசனை கொடுத்தது அனைத்தையும் கூறியவர், 

“அதிலிருந்து சோட்டீ இன்னுமே அமைதியாகிட்டா, எல்லோரிடமிருந்தும் ரொம்பவே விலகிப் போயிட்டா,” என்று சொல்லி முடித்தவர், அது அவனாக இருக்குமோ என்று தனக்கு ஏற்பட்ட  சந்தேகத்தை மட்டும் கூறவில்லை.

அதை கேட்டுக் கொண்டிருந்த யாஷோ, “என்ன ரித்து சென்னையில் இருந்த போது ஒரு பையனை காதலிச்சாளா? அது யாராக இருக்கும்?” என்று யோசித்தான். ஆனால் அவனுக்குமே அது அவனாக தான் இருக்கும் என்று தோன்றவில்லை.

ஏனெனில் அவன் சென்னையில் இருந்த போது ஒருபோதும் சோட்டீயை பற்றி அப்படி அவன் எண்ணியதில்லை. அவளை ஒரு சிறு பெண்ணாக நினைத்து தான் பழகினான். அவனை அறியாமலே அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியதை அவன் அறிய வாய்ப்பில்லை. ரித்விகா, ரிதுபர்ணா இரண்டையும் சுருக்கி ரித்து என்று கூப்பிடலாம் என்பதும் இப்போது அவனுக்கு தோன்றவில்லை. அவன்தான் சுஷாந்திடம் சொன்னது போல் ரித்விகாவை மறந்திருந்தானே, அப்படியிருக்க அவனுக்கு ரித்விகாவை சுருக்கி ரித்து என்று அழைத்ததோ இல்லை அவளுக்கு எழுதிய கடிதமோ இப்போது சுத்தமாக நினைவில்லை.

அதனால் ரித்து ஒருவனை காதலித்திருக்கிறாள் என்றதுமே, “எனக்கு தெரியாமல் அங்கு யாரை ரித்து காதலித்திருப்பாள்? என்ற சிந்தனை தான் ஓடியது. அந்த குழப்பத்துடனே ரிஷிவர்த்திடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான். அது அந்த வயதில் ஏறபட்ட சலனம் என்பது அவனுக்கு புரிந்தாலும், அவள் தற்கொலை வரை சென்றதை கேட்டவனுக்கு என்னவோ அது இப்போது நடந்தது போல் நினைக்கும்போதே அதிர்ச்சியாக இருந்தது.

தேனன்பு தித்திக்கும்..