TTA 16

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 16
 
காலையிலேயே பக்கத்து வீட்டு பெண்மணியோடு வெளியே சென்ற ரிதுபர்ணா வீட்டிற்கு வரும்போது வாங்கிட்டு வந்ததையெல்லாம் யாஷும் கிஷனும் புரியாமல் பார்த்தார்கள்.
 
“என்ன பேட்டீ இது?” என்று கிஷன் கேட்க,
 
“புடவையும் அதில் சில வேலைப்பாடுகள் செய்வதற்கான பொருட்களும், அப்புறம் தையல் மிஷினும்  பப்பா,” என்று அவள் கூற,
 
“எதுக்கு இதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்க ரித்து?” என்று யாஷ் கேட்டான்.
 
“நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததும் கொஞ்ச நாள் இதுபோல கிளாஸ்க்கு தான் போனேன். புடவை, ப்ளவுஸ்க்கு ஆரி வொர்க், ஸ்டோன் வொர்க் எல்லாம் செய்வேன். எப்படியோ வீட்டில் சும்மா தானே உட்கார்ந்திருக்க போறேன். அதான் இதெல்லாம் செய்யலாம்னு தோனுச்சு, பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கிட்ட ஹெல்ப் கேட்டேன். அவங்க தான் ஒரு டெய்லரிங் ஷாப்க்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க கொடுக்கும் ப்ளவுஸ், புடவைக்கெல்லாம் இப்படி டிசைன் செய்து கொடுத்தா காசு கொடுப்பாங்க, எனக்கும் பொழுது போகும்,” என்று ரித்து பதில் கூற, 
 
“ஆமாம், யாஷ் வீட்டில் இருக்கும்வரை சரி, அவனுக்கும் வேலை கிடைச்சிட்டா, நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பது போர் அடிக்கும், அந்தநேரம் இப்படி உபயோகமா செய்வதும் நல்லது தான் பேட்டீ,” என்று சொல்லிவிட்டு கிஷன் தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
 
ஆனால் யாஷ் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து அவர்களது அறைக்கு வந்ததும், “என்ன யாஷ், ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க, இந்த வேலை செய்வது உங்களுக்கு பிடிக்கலையா?” என்று ரித்து கேட்க,
 
“பிடிக்கலன்னு இல்ல, முன்னமே எதுவும் சொல்லாம திடீர்னு இதெல்லாம் வாங்கிட்டு வந்ததை பார்த்தா, நான் நேத்து சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டீயா ரித்து,” என்று கேட்டான்.
 
“என்ன யாஷ் இப்படி பேசறீங்க? நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சுது. உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிடும் அதிலும் எனக்கு எந்த சந்தேகமுமில்ல, ஆனா கல்யாணம் ஆகிடுச்சு. இன்னும் வேலை கிடைக்கல, அப்படின்னு ஒரு பதட்டம் உங்கக்கிட்ட இருக்கு. பப்பாவை கஷ்டப்படுத்தறோம்னு உங்களுக்கு தோனுது.
 
நீங்க ஹனிமூன் போகறதுக்கும், அங்க ரூம்க்கு ஆன செலவுக்கும் மத்தவங்க காசுன்னு தயங்கினது அப்போ எனக்கு புரியல, இப்போ புரியுது. எப்படியோ உடனே வேலை கிடைச்சாலும் சேலரி வர ஒருமாசம் ஆகும், அதுவரைக்கும் நம்ம தேவைக்கு பப்பாக்கிட்ட கேட்க உங்களுக்கு தயக்கமா இருக்கும், அதுவும் உங்களுக்கு மட்டும்னா பரவாயில்லை. ஆனா எனக்குன்னு பப்பாக்கிட்ட உங்களுக்கு கேட்க கண்டிப்பா தயக்கம் இருக்கும், எனக்குமே அப்படித்தான், நாம ஹனிமூன் போக டிரஸ் எல்லாம் வாங்க பப்பா தான் காசு கொடுத்தாங்க, இருந்தாலும் அவருக்கு அதிகமா செலவு வைக்கக் கூடாதுன்னு பார்த்து பார்த்து தான் வாங்கினேன். ஆனாலும் நினைச்சதை விட அதிகமா செலவு ஆகிடுச்சு தெரியுமா? பப்பா ஒன்னும் சொல்லல, ஆனா எனக்கு தான் கஷ்டமா இருந்துச்சு. முறைப்படி நான் இந்த வீட்டு மருமகளா வந்திருந்தா, இப்படியான சங்கடங்களெல்லாம் இருக்காது தானே, அது மனசுக்கு கஷ்டமா இருக்கு யாஷ்.”
 
“ஏன் இப்படி பேசற ரித்து, நம்ம கல்யாணம் எப்படி வேணும்னாலும் நடந்திருக்கலாம், ஆனா இப்போ நம்ம வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிச்சாச்சு. அப்படியிருக்க இப்படியெல்லாம் பேசக் கூடாது. நீ சொல்றது போல பார்த்தா, நீ வசதியான வீட்டு பொண்ணு, எவ்வளவு வசதியோட வளர்ந்திருப்ப, இங்க வந்து எல்லாத்துக்கும் கணக்கு போட்டு வாங்கறது போல இருக்கே, என்னை கல்யாணம் செய்துக்கிட்டதால தானே இந்த நிலைமைன்னு நான் நினைக்கலாமில்ல,”
 
“என்ன யாஷ் இப்படி சொல்றீங்க, உங்க மனைவியா நான் எவ்வளவு சந்தோஷமா, பாதுகாப்பா இருக்கேன்னு வார்த்தையால சொல்ல முடியாது. அந்த பணம் வசதியெல்லாம் இதுக்கு முன்ன ஒன்னுமேயில்லை. அப்புறம் உங்க நிலையும் ரொம்ப மோசமில்ல, இப்போதைக்கு உங்களுக்கு வேலையில்லை அவ்வளவு தான், வேலை கிடைச்சா என்னை மகாராணியை போல பார்த்துப்பீங்க, அதனால் இப்படியெல்லாம் பேசாதீங்க, உங்களுக்கு நான் இதுபோல வேலை செய்றது பிடிக்கலன்னா நான் திரும்ப இதெல்லாம் கொடுத்திட்டு வந்துட்றேன்.”
 
“இங்கப்பாரு இதெல்லாம் உன்னை செய்ய வேண்டாம்னு சொல்லல, தப்பா புரிஞ்சிக்கிட்டீயோன்னு நினைச்சு தான் கேட்டேன். உனக்கு எது இஷ்டமோ செய். ஆமாம் தையல் மிஷின்ல்லாம் கூட டெய்லரிங் ஷாப்லயா கொடுத்தாங்க?”
 
“இல்ல யாஷ் எல்லாம் காசு கொடுத்து தான் வாங்கினேன். முதலில் முதலீடு நம்ம காசு தான், ஆனா கண்டிப்பா லாபம் கிடைக்கும்,”
 
“சரி இதெல்லாம் வாங்க பணம் ஏது? பப்பாக்கிட்ட வாங்கினது போலவும் தெரியல, என்கிட்டேயும் கேட்கல? பின்ன பணத்துக்கு என்ன செய்த?”
 
“நான் என்கிட்ட இருந்த டெபிட் கார்ட் மூலமா பணம் எடுத்துக்கிட்டேன்.” என்று கொஞ்சம் தயக்கத்தோடு கூறியவள், 
 
“எனக்கு அப்படி பணம் எடுப்பதில் சுத்தமா விருப்பமில்ல, கூட அதுமூலமா என்னை கண்டுப்பிடிச்சிடுவாங்களோன்னு கொஞ்சம் பயமும் இருந்தது. ஆனா இப்போ பயம் இல்ல, உங்கக்கிட்ட இருந்து என்னை பிரிக்க முடியாதுன்னு தெரியும், ஆனா பணம் எடுக்க சங்கடமா தான் இருந்தது. ஆனா திரும்ப அதை போட்டுடலாம்னு உறுதியோட தான் எடுத்தேன். முன்னமே இந்த வேலையை செய்றது பத்தி உங்கக்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். ஆனாலும் சொன்னா நானே பணம் தரேன்னு சொல்லிட்டு பணம் புரட்ட கஷ்டப்படுவீங்கன்னு சொல்லலை, என்மேல உங்களுக்கு கோபமில்லையே யாஷ்,” என்று கொஞ்சம் அச்சத்தோடு அவனிடம் கேட்டாள்.
 
இப்போது கூட அவளுக்கு என்ன பிரச்சனை? எதனால் அவளுக்கு அப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்தார்கள்? எதற்காக பயப்படுகிறாள்? ஏன் பணம் எடுக்க கூட தயங்குகிறாள்? இப்படி நிறைய கேள்விகள் அவன் மனதில் ஓடியது. இன்னும் அவள் தான் சோட்டீ என்று முழுதாக தெரியவில்லையென்றாலும் அவள் சோட்டீயாக தான் இருப்பாள் என்று அவன் உறுதியாக நம்பினான்.
 
ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “உன்மேல எனக்கு எந்த கோபமுமில்ல, உனக்கு எப்படி விருப்பமோ செய். ஆனா உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லாம இருப்பது தான் கஷ்டமா இருக்கு, சரி அதைப்பத்தி இப்போ பேச வேண்டாம், நீ தாராளமா இந்த வேலை செய்யலாம், இல்ல ஏதாவது வேலைக்கு போகணும்னு நினைச்சாலும் போகலாம், ஆஸ்திரேலியாக்கு போய் படிச்சிருக்கேன்னு சொல்ற, கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும், ஏன் அந்த ஐடியா இல்லையா?” என்று அவன் கேட்கவும்,
 
அவளும் முதலில் ஏதாவது வேலைக்கு போகலாம் என்று தான் நினைத்தாள். இப்போதைக்கு அவள் அன்னை, தந்தையை நினைத்து பயமில்லை. முதலிலுமே தந்தையும் அந்த திருமணத்திலிருந்து இவள் தப்பித்ததை நினைத்து  நிம்மதி அடைந்திருப்பார் தான், ஆனால் அன்னைக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார் என்பதால் பயந்தாள். இப்போது அன்னைக்கு தெரிந்தாலும் பரவாயில்லை என்ற தைரியம் வந்திருந்தது.
 
ஆனால் சுதன்லாலை நினைத்தால் இன்னும் கொஞ்சம் மனதில் பயம் இருக்கிறது. இவள் திருமணம் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்ததற்கு அவனது எதிர்வினை என்ன என்பது தெரியவில்லை. தனியாக நேர்முக தேர்வு, வேலை என்று போகும்போது அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது? அந்த பயத்தில் தான் இப்போதைக்கு வேலைக்கு செல்ல வேண்டாமென்று நினைத்தாள். கூடவே குடும்ப சூழலாய் வீட்டு வேலைகளை செய்துக் கொண்டு இருக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனாலும் யாஷிற்கு உதவியாக அவன் கஷ்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினாள். என்னத்தான் கலாவதி அவளுக்கு சொத்து எழுதி வைத்திருந்தாலும் அதை தற்போதைய சூழலில் பயன்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. அதனால் வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்க இந்த வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.
 
“அதையெல்லாம் மனதில் நினைத்தவளாக, “நானும் முன்ன வேலைக்கு போகலாம்னு தான் நினைச்சேன் யாஷ், ஆனா கொஞ்ச நாள் குடும்ப சூழலில் இருக்கணும்னு நினைக்கிறேன். ஆஸ்திரேலியால கூட பேமிலியோட இருந்தேன். ஆனா ஆரம்பத்தில் மொழி பிரச்சனைன்னு அவங்க கூட அவ்வளவாக பழக முடியல, அப்படியே பழகினாலும் ஒரு எல்லைக்குள்ள தான் இருப்பேன். அதனால வீட்டில் இருக்கணும்னு ஆசையா இருக்கு,” என்று சுதன்லால் குறித்த பயத்தை மறைத்து கூறினாள்.
 
“அப்பா, அம்மால்லாம் இருக்காங்க தானே, அப்போ குடும்ப சூழலில் இருக்க ஆசைன்னு சொல்ற?” என்று அவன் கேட்க,
 
அவள் என்னவென்று பதில் சொல்வாள். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல் தான் பிறந்ததிலிருந்து அவளின் நிலை. பாட்டியும் இல்லையென்றால் அவள் எப்படி ஆகியிருப்பாளோ? அன்னை தந்தையோடு சேர்ந்து நேரத்தை செலவிட எவ்வளவு ஆசைப்பட்டிருப்பாள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததேயில்லை. எப்போதாவது கிடைக்கும் தந்தையின் பாசம் அந்த ஏக்கத்தை கொஞ்சமேனும் இல்லாமல் செய்தது. ஆனால் உண்மை தெரிந்த பின் அந்த ஏக்கத்திற்கு கூட மதிப்பில்லாதது போல் தான் அவள் நினைத்தாள். 
 
அவனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் அவனைப் பார்த்தப்படி நிற்க, ஆனால் அவள் முகத்தில் தெரிந்த தவிப்பில், தன் கைகள் இரண்டால் அவள் முகத்தை தாங்கியவன், “இன்னும் என்கிட்ட ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குற ரித்து, உனக்குள்ள என்னவோ கஷ்டம் இருக்கு, ஆனா சொல்ல தோனல, என்னன்னு சொல்லு? எதுக்கு என்கிட்ட எல்லாம் மறைக்கணும்னு நினைக்கிற?” என்று அவன் கேட்க,
 
அவனிடம் தன் குடும்பத்தை பற்றி மறைக்க வேண்டுமென்பதெல்லாம் அவளது எண்ணம் கிடையாது. அவள் தான் சோட்டீ என்பது சொல்லாமல் மற்றதையும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு தான், சொன்னால் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்பது அவளின் எண்ணமாக இருக்க, என்னவோ இந்த நொடி அவனிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென்பது போல் தோன்ற, அவள் பேச நினைக்கும்போது, “யாஷ், ரித்து,” என்று கிஷன் அவர்களை அழைத்தார்.
 
“இதோ வரேன் பப்பா,” என்று குரல் கொடுத்த யாஷ், “சரி எதையும் போட்டு குழப்பிக்காம ஃப்ரியா இரு,” என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வர, பார்த்தால் மணீஷும் சோனாவும் வந்திருந்தனர்.
 
இவர்கள் அந்தமானிலிருந்து வந்ததிலிருந்து மணீஷ் இன்னும் இவர்களை வந்து பார்த்திருக்கவில்லை. அலுவலகத்தில் வேலையிருந்ததால் பிறகு வருவதாக சொல்லியவன் இன்று வர முடிவெடுத்து சோனாவிடம் பார்த்துவிட்டு வரலாமா? என்று கூற, அவளுக்குமே யாஷிற்கும் அவன் மனைவிக்குமான நெருக்கம் எந்த அளவிற்கு என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கவே அவனோடு செல்ல ஒத்துக் கொள்ள, இருவரும் உடனே புறப்பட்டு வந்தார்கள்.
 
“என்னடா மணீஷ், ரொம்ப பிஸியா?” என்று மணீஷை பார்த்துக் கேட்டப்படியே யாஷ் அவர்கள் அருகில் வர, “வாங்க” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூப்பிட்டப்படி ரித்துவும் அவனோடு வந்து நின்றாள்.
 
“ஆமாம் யாஷ், ரொம்ப வேலை. அதான் அப்புறம் வரேன்னு பப்பாக்கிட்ட சொல்லியிருந்தேன். அப்புறம் எப்படிடா போச்சு ஹனிமூன் ட்ரிப். எஞ்சாய் செய்தீங்களா?” என்று மணீஷ் கேட்க,
 
“சூப்பரா போச்சுடா, ரொம்ப எஞ்சாய் செய்தோம், 7 நாள் எங்களுக்கு பத்தவே இல்லடா, இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசையா இருந்துச்சு, அந்தமானை விட்டு வர மனசே இல்லைன்னா பார்த்துக்கோயேன்.” என்று யாஷ் கூறினான். 
 
உண்மையிலேயே அந்த பயணத்தின் முடிவில் இருவரும் அப்படித்தான் உணர்ந்தார்கள். என்றாலும் சோனாவை வெறுப்பேற்றவென கொஞ்சம் அழுத்தமாக கூறினான்.
 
“அப்படியா யாஷ், கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா, கபிலன் உங்களுக்கு ஹனிமூன் ட்ரிப் ஏற்பாடு செய்திருக்கான்னு பப்பா சொன்னப்ப கொஞ்சம் பயமா தான் டா இருந்துச்சு. அன்னைக்கு கல்யாணத்தப்போ எப்படி கோபப்பட்ட, பாவம் உன்னோட தனியா ரித்துவை அனுப்பணுமான்னு உண்மையிலேயே கொஞ்சம் கவலையா தானிருந்தது.” என்று மணீஷ் சொல்ல,
 
“என்னடா நான் அவ்வளவு டெரராவா இருக்கேன். நீயும் அப்படித்தான் சொல்ற, கபிலனும் அப்படித்தான் சொல்றான். என் டார்லிங் கிட்ட கேளுடா, நான் எப்படி நடந்துக்கிட்டேன்னு,” என்று மணீஷிடம் கூறிய யாஷ்,
 
“ரித்து டார்லிங், நான் உன்கிட்ட கோபமாகவா நடந்துக்கிட்டேன். நான் உன்னை எப்படி பார்த்துக்கிட்டேன். இவனுக்கு சொல்லு, அப்போ தான் என்னைப்பத்தி இவனுக்கு தெரியும்,” என்று சட்டை காலரை தூக்கியப்படி சொல்ல,
 
“ம்ம் நீங்க கோபப்பட்டாலும் அதை பெருசா எடுத்துக்காம நான் கூலா இருந்து சமாளிச்சேன். கொஞ்சம் பயந்தா இன்னும் நீங்க ஓவரா தான் போயிருப்பீங்க யாஷ்,” என்று அவளும் அவர்களை போலவே சொல்ல, மணீஷும் கிஷனும் சிரித்தனர்.
 
அதில் அவளை முறைத்தவன், “யாரு? நீ கூலா இருந்தியா?” என்று கேட்டுவிட்டு,
 
“ஏதாவது கோபமா சொல்லிட்டா, உடனே கண்ணிலிருந்து டேமை திறந்து விட்டிடுவா மணீஷ், அதுக்கு பயந்தே நான் அமைதியா போயிட்டேன்.” என்று யாஷ் வருத்தப்படுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு கூற, இப்போது முறைப்பது அவளது முறையாக, மணிஷும் கிஷனும் இன்னும் வாய்விட்டு சிரித்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சோனாவிற்கோ நெருப்பின் மேல் இருப்பது போல் இருந்தது.
 
இந்த சிறிது நாளில் எப்படி இவர்களுக்குள் இந்த நெருக்கம்? அவளுக்கு புரியவில்லை. காதலித்தவன் தவறானவன் என மணீஷுக்கு அவளை திருமணம் செய்து வைத்தார்கள். அவளுக்கே அந்த உண்மை புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை. மணீஷோடு உடனுக்குடன் நெருக்கமாக முடியவில்லை. அதுக்கு அதிகமாகவே காலம் பிடித்தது. ஆனால் யாரென்றே தெரியாத பெண்ணை மணந்துக் கொண்டு அதற்குள் எப்படி இவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டார்கள்? என்ற கேள்வியோடு அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் அவள்  நின்றிருந்தாள்.
 
மணீஷுக்கும் அதே சிந்தனை தான், ஆனால் சோனாவை போல் பொறாமைக் கொண்டு அல்ல,  தம்பியும் அவன் மனைவியும் இவ்வளவு விரைவில் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை ஆரம்பித்ததை நினைத்து மகிழ்ந்தவனாக, “உங்க கல்யாணம் நடந்த அப்போ, உன்னோட கோபத்தை பார்த்தப்போ, இவ்வளவு சீக்கிரம் எல்லாம் சரியாகும்னு நினைக்கல யாஷ். பப்பா சொல்லிட்டாருன்னு நீ அதை ஏத்துக்கிட்டாலும், எல்லாம் சரியாக ரொம்ப நாள் ஆகுமோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு தெரியுமா? ஆனா பப்பா தான் நம்பிக்கையோடு இருந்தார். அதேபோல உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சு, பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு யாஷ்.” என்று அவன் கூற,
 
“மணீஷ் இப்போ இதைப்பத்தி பேசக் கூடாது. இருந்தாலும் சொல்றேன். ஒருவேளை முக்தாவோட கல்யாணம் நடந்திருந்தா, இந்த அளவு நான் சந்தோஷமா இருந்திருப்பேனா கண்டிப்பா தெரியலடா, ஆனா ரித்துவோட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று ரித்துவை பார்த்தப்படியே கூறிய யாஷ்,
 
“முக்தாவோட நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்தி, இவளோட எனக்கு கல்யாணம் நடக்க காரணமாக இருந்தவங்களுக்கு கண்டிப்பா நான் நன்றி சொல்லியே ஆகணும் தெரியுமா? அவங்க என்ன மனசுல நினைச்சு செய்தாங்கன்னு தெரியல, ஆனா அது எனக்கு ரொம்ப ரொம்ப நல்லதா முடிஞ்சிருக்கு தெரியுமா?” என்று வேண்டுமென்றே சோனாவை பார்த்து கூறினான்.
 
மணீஷ்க்கு ஒன்றும் புரியாமல், “என்னடா சொல்ற?” என்று கேட்க,
 
“அதான் டா, மனித சக்தியையும் மீறி அனைத்தையும் எப்படி நடத்திக் கொடுக்கணுமோ, அப்படி நடத்திக் கொடுப்பது கடவுள் தானே, அவருக்கு நன்றி சொல்லணும் மணீஷ்,” என்று பேச்சை மாற்றினான். ஆனால் அப்போதும் பார்வை சோனாவிடமே இருக்க, அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பது அவளுக்கு புரிந்தது.
 
அவளுக்கு மட்டுமல்ல ரித்துவிற்கும் அது புரிந்து விட, ‘பப்பா எல்லாம் யாஷ்க்கிட்ட சொல்லிட்டாங்க போல, சோனா விஷயத்தை மட்டும் தான் சொன்னாங்களா? இல்லை என்னோட விஷயமும் சொல்லிட்டாங்களா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
“நமக்கு கெடுதல் நடக்கணும்னு சில பேர் நினைச்சாலும், அந்த கடவுள் நல்லது நடக்கணும்னு நினைக்கிறார். அதான் எனக்கும் ரித்துக்கும் கல்யாணத்தை நடத்தியிருக்கார். ஆனா அது தோல்வியில் முடியும்னு சில பேர் எதிர்பார்ப்பாங்க, இருந்தாலும் கடவுள் அருள் எங்க கல்யாணம் வெற்றி அடைஞ்சிருக்கு,” என்று விடாமல் யாஷ் பேசிக் கொண்டிருக்க, முதலில் புரியவில்லையென்றாலும் இப்போது மணீஷிற்கு அவன் சோனாவை சொல்கிறானோ என்பது போல் யோசிக்க தொடங்கினான்.
 
அதை உறுதிப்படுத்துவது போல், இதுவரை எதுவும் பேசாமல் இருந்த சோனாவோ, “உங்க பப்பாவையும் தம்பியையும் பார்க்க நீங்க மட்டும் வந்திருக்க வேண்டியது தானே, எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு வந்தீங்க?” என்று மணீஷிடம் எரிந்து விழுந்தவள்,
 
“நான் அம்மாவை பார்த்துட்டு வீட்டுக்கு வரேன். நீங்க மெதுவா பப்பா, தம்பியோடு சிரிச்சு பேசிட்டு ஜாலியா இருந்துட்டு மெதுவா வாங்க,” என்று சொல்லிவிட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டாள்.
 
அவள் சென்றதும் என்ன சொல்வது என்று புரியாமல் கிஷன் நின்றிருக்க, யாஷோ அவள் போனால் போகட்டும் என்று அமைதியாக இருந்தான். ரித்துவிற்கோ யாஷ் இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றியது.
 
மணீஷோ புரிந்த உண்மையை தாங்க முடியாமல், “பப்பா, யாஷ் கல்யாணத்தில் நடந்த குழப்பத்திற்கு சோனா தான் காரணமா?” என்றுக் கேட்டான்.
 
அதற்கு அவரோ, “விடு மணீஷ், என்னத்தான் குழப்பம் நடந்திருந்தாலும் அது நன்மையில் தானே முடிந்திருக்கு, ரித்து மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வந்ததுக்கு நாம சந்தோஷம் படணும் பேட்டா,” என்று சோனா தான் காரணம் என்பதை அவர் மறைமுகமாக கூறினார்.
 
“நல்லது நடந்ததால பரவாயில்லை, இதுவே தப்பா ஏதாவது நடந்தா அப்போ என்ன செய்திருப்போம் பப்பா,  என்னை பிடிக்காம தான் கல்யாணம் செய்துக்கிட்டா, ஆனா அதுக்கு அவ என்மேல தானே கோபப்படணும், ஆனா இப்போ என்கிட்ட அப்படி கோபமா இல்லை. ஆனா உங்க ரெண்டுப்பேரை ஏன் பப்பா அவளுக்கு பிடிக்கல, பிடிக்கலன்னா கூட பரவாயில்லை, ஆனா இப்படி மனசுல வன்மத்தோட இப்படி ஒரு காரியம் செய்யும் அளவுக்கு துணிஞ்சிட்டாளே, ச்சே நினைச்சாலே வெறுப்பா இருக்கு,” என்று அவன் சலித்துக் கொள்ள,
 
“இங்கப்பாரு மணீஷ், சோனா மேல இத்தனை வெறுப்பை வளர்த்துப்பது நல்லதில்ல, அவ தப்பான ஒருத்தனை காதலிச்சிட்டா, அதை வச்சு அவ வாழ்க்கையை எல்லோரும் முடிவு செய்துட்டாங்க என்கிற கோபம் அவளுக்கு, அது உடனே போகணும்னு நினைக்க கூடாது. அது கொஞ்சம் கொஞ்சமாக தான் போகும், நீ போக வைக்கணும், உன்னோட வெறுப்பாலயோ கோபத்தாலயோ இல்ல, உன்னோட அன்பால போக்கணும், நீ அவக்கிட்ட காட்ற அன்பில் தான் அவ மாறணும், 
 
நீ சோனாவை காதலிச்ச, அவ கிடைக்கலன்னு நீ தற்கொலைக்கு முயற்சி செய்தேன்னு மட்டும் உனக்கு அவளை நான் கல்யாணம் செய்து வைக்கல, ஒரு தப்பானவனை காதலிச்சிட்டா, வேற யாருக்காவது அவளை கல்யாணம் செய்து வைக்கும்போது அவளோட முந்தின வாழ்க்கையை பத்தி யாரும் எதுவும் தப்பா பேசிட்டா? 
 
நீ அவளை ரொம்ப நேசிச்சவன், அவ கிடைக்கலன்னு உயிரை விட துணிஞ்சவன். அதனால அவளை நீ புரிஞ்சிப்ப, நல்லப்படியா வச்சுப்பன்னு தான் உனக்கு கல்யாணம் செய்து வச்சேன். அவ யாரு? எனக்கு தங்கை பொண்ணு தானே, என்னால அவளை புரிஞ்சிக்க முடியுது. அதேபோல நீயும் அவளை புரிஞ்சு நடந்துக்கணும், 
 
அவ வளர்ந்த சூழ்நிலையையும் நாம யோசிக்கணுமில்ல, அவளோட அம்மா அவ செய்ற எதையும் தப்புன்னு சொல்லுவதில்லை. அவளோட அப்பாவோ எல்லாத்தையும் ஆராய்ச்சியா பார்ப்பது. அதனால அவளுக்கு எது நல்லது? கெட்டதுன்னு தெரியல, தெரிஞ்சுக்க முயற்சி செய்றதில்ல, கண்டிப்பா எல்லாம் அவ புரிஞ்சு நடந்துக்கிற நாள் வரும், காலம் எல்லாத்தையும் மாத்தும், அதுவரை நீ பொறுமையா இருக்கணும், உங்களுக்கு ஒரு குழந்தை வந்துட்டா இன்னும் அவ பொறுப்பா ஆகிடுவா, எல்லாம் புரிஞ்சுப்பா மணீஷ்” என்று எடுத்துக் கூறினார்.
 
“நானும் ஒரு குழந்தை வந்தா எல்லாம் சரியாகிடும்னு தான் நினைக்கிறேன். கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகப் போகுது. இன்னும் அப்படி ஒன்னும் நடக்கலையே பப்பா,”
 
“இங்கப்பாரு கண்டிப்பா நடக்கும், தானா நடக்கும், ஏன் நடக்கலன்னு அதையே எதிர்பார்த்துட்டு இருக்கக் கூடாது. ஒருவேளை அது நடக்காம போயிட்டா அது ஏமாற்றமா ஆயிடும், அப்படியே குழந்தை இல்லன்னாலும் உனக்கு நான், எனக்கு நீன்னு வாழ பழகணும், இல்ல ஏதாவது குழந்தையை தத்தெடுத்துக்கலாம், இப்படி நடக்கும்னு சொல்ல வரல, நடந்தா அடுத்து என்னன்னு யோசிக்கும் பக்குவம் நமக்கு வேணும் மணீஷ். இப்படி நடந்துசுச்சேன்னு சோர்ந்து போயிடக் கூடாது. உங்க அம்மா இறந்ததும் எதுவுமே இல்லன்னு நான் இருந்திருந்தா நீங்க இப்போ இந்த நிலைமையில் இருந்திருக்க முடியுமா?” என்று அவர் பேசிக் கொண்டிருக்க, ரித்து அவரை பிரமிப்பாய் பார்த்தாள்.
 
யாஷின் அக்கறையான குணம் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்பது இப்போது அவளுக்கு புரிந்தது. இப்போது கிஷன் மணீஷிடம் பேசியது போல் அவளின் பாட்டி தந்தையிடம் இதுபோல் பேசியிருந்தால் அவள் இந்த  மண்ணில் பிறக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்று நினைத்தவள்,
 
‘ச்சே ஏன் நான் அப்படி நினைக்கிறேன். எல்லா பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கும், அர்த்தம் இருக்கும். அம்மா, அப்பாவோட அன்பு எனக்கு கிடைக்கலன்னாலும், யாஷோட கல்யாணம், இப்படி ஒரு குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு கிடைக்க தான் முன்ன அவ்வளவு கஷ்டம் போல,” என்று நினைத்துக் கொண்டவள், அருகிலிருந்த யாஷின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
 
அவன் என்ன என்றவென்று பார்வையால் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள். அதற்குள் மணீஷிடம் பேசிக் கொண்டிருந்த கிஷனோ, “யாஷ் உனக்கு உண்மை தெரிஞ்சிருக்கணும்னு தான் கல்யாணத்தில் நடந்ததை சொன்னேன். அதை இப்படி சோனா இருக்க பேசிக் காட்டணுமா?” என்றுக் கேட்டார்.
 
“சாரி பப்பா, நீ நினைச்சது நடக்கல, நாங்க சந்தோஷமா தான் வாழறோம்னு சோனாக்கு தெரியணும்னு நினைச்சேன். அதான்,”
 
“என்ன இருந்தாலும் சோனா உன்னோட பாபின்னு ஞாபகம் வச்சுக்க,” என்று அவர்  கோபமாக சொல்ல,
 
“விடுங்க பப்பா, இப்போ அவன் பேசினதால எனக்கு தெரிஞ்சது. என்னை நீங்களும் சமாதானப்படுத்திட்டீங்க, இல்லன்னா ஏதாவது ஒரு கட்டத்தில் அது எனக்கு தெரிஞ்சா அது பெருசா வெடிச்சதுன்னா, அதனால நீங்க சொன்னது போல எல்லாம் நல்லதுக்கு தான்,” என்று மணீஷ் சமாதானப்படுத்தினான்.
 
பிறகு, “சரி பப்பா, நான் கிளம்பட்டுமா?” என்று அவன் கேட்க,
 
“இரு டா, சோனாவும் அம்மா வீட்டுக்கு போயிட்டு மெதுவா வரேன்னு தானே சொன்னா, அதனால் இங்கேயே சாப்பிட்டு போ,” என்று கிஷன் கூறினார்.
 
“ஆமாம் மணீஷ், சாப்பிட்டு போ. இன்னைக்கு சமையல் ரித்து தான் செய்தா, அதுவும் பப்பாவோட ட்ரெயினிங் வேற,” என்று யாஷ் கூற,
 
“பப்பாவோட ட்ரெயினிங்கா, அப்போ கொஞ்சம் பயமா தான் டா இருக்கு,” என்று மணீஷும் கேலி செய்தான்.
 
“இத்தனை வருஷம் என் சாப்பாட்டை சாப்பிட்டிட்டு ஏன் டா சொல்ல மாட்டீங்க, எங்கிட்ட கத்துக்கிட்டு ரித்து சூப்பரா சமைக்க போறா பாரு.” என்று கிஷன் கூற,
 
“பய்யா, இன்னைக்கு பப்பா தான் சமைச்சாங்க, நான் கடைக்குப் போயிட்டு இப்போ தான் வந்தேன். அதனால பயமில்லாம சாப்பிட வாங்க,” என்று ரித்து கூறினாள்.
 
“அய்யோ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ம்மா, சோனா சமையல் சாப்பிட்டப் பின்ன மத்த எல்லோரோட சமையலும் நல்லா தான் எனக்கு தெரியும்,” என்று மணீஷ் சொல்லவும்,
 
“டேய் வீட்டில் தினமும் உன்னோட சமையல் தானே, எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சீயா?” என்று யாஷ் கேலியாக கேட்க,
 
“பேசாம அப்படி ஒரு முடிவை எடுக்கலாம்னு தான் நானும் நினைக்கிறேன் யாஷ். சத்தியமா முடியல,” என்று மணீஷ் தீவிரமாக கூற, மற்ற மூவரும் சிரித்தனர்.
 
“சரி பேசினது போதும், கை கழுவிட்டு சாப்பிட வாங்க,” என்று கிஷன் மூவரையும் கூப்பிட, அப்போது யாஷின் அலைபேசி ஒலியழுப்ப, அதை எடுத்துப் பார்த்தால், சுஷாந்த் தான் அழைத்திருந்தான்.
 
“சரி நீங்க சாப்பிட்டுட்டே இருங்க, ஃப்ரண்ட் தான் கூப்பிட்றான், நான் பேசிட்டு வந்துட்றேன்.” என்று சொல்லிவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு யாஷ் மொட்டை மாடிக்குச் சென்றவன், அழைப்பை ஏற்று, “சொல்லுடா சுஷாந்த், சோட்டீயோட பேர் தெரிஞ்சுதா? போட்டோ கிடைச்சுதா?” என்று கேட்டான்.
 
“யாஷ் நீ முதலில் சொல்லு, சோட்டீ எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா? அவளை பார்த்தீயா?” என்று சுஷாந்த் பதிலுக்கு கேட்க,
 
“என்னடா உளர்ற?” என்று யாஷ் திருப்பிக் கேட்டான்.
 
“ஹே நான் உளரல, சோட்டீ போட்டோ யார்க்கிட்ட வாங்கறதுன்னு நான் யோசிச்சிட்டு இருந்தப்ப, ரிஷி மாமாவே எனக்கு போன் செய்தார். பேச்சு பிஸ்னஸ் விஷயம் தான், பேசி முடிச்சதும் அவர்க்கிட்ட சோட்டீ போட்டோ கேட்டதும், அவர் எதுக்குன்னு கேட்டார். அவர் குரலில் பதட்டம் தெரிஞ்சுது. நான் நீ கேட்டதை பத்தி சொல்ல, அப்போ தான் உனக்கு விஷயம் தெரியாதான்னு கேட்டு சோட்டீ காணாம போயிட்டா, அதாவது இந்த கல்யாணம் வேண்டாம்னு போயிட்டான்னு சொன்னாரு. அப்படி போனவ எங்க இருக்கான்னு தெரியலையாம், அதனால அவர் அவளை தீவிரமா தேடிட்டு இருப்பதா சொன்னார். எங்க வீட்டுக்கும், மத்த மாமாங்களுக்கும் இரண்டு நாள் முன்ன தான் சொன்னாராம், என்னோட மனைவி அவங்க அம்மா வீட்டில் இருக்கவே நான் அவக்கிட்ட மட்டும் தான் பேசியிருந்தேன். அவளுக்கு விஷயம் தெரியாததால் அவ என்கிட்ட சொல்லல, மாமா சொல்லி தான் எனக்கே தெரியும், சொல்லுடா சோட்டீ இருக்க இடம் உனக்கு தெரியுமா? அதனால் தான் சோட்டீ பத்தி என்கிட்ட கேட்டீயா?” என்று பதட்டத்தோடு சுஷாந்த் கேட்க,
 
“டேய் உன்னை உன்னோட ரிலேடிவ்ஸ் கிட்ட தானே சோட்டீயோட போட்டோ கேட்க சொன்னேன். நீ என்னடான்னா அவளோட பப்பாக்கிட்டயே கேட்டுருக்க,” என்று யாஷ் பதில் கூறினான்.
 
“யாஷ், நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ அதுக்கு பதில் சொல்லாம மாமாக்கிட்ட ஏன் கேட்டன்னு சொல்லிக்கிட்டு இருக்க,” என்று சுஷாந்த் கோபமாக கேட்கவும்,
 
“பின்ன என்னடா? அவளோட கசின் உனக்கு அவளைப்பத்தி எதுவும் தெரியல, அவ கல்யாணத்தில் நடந்தது கூட தெரியல, பணக்காரங்கன்னா இப்படித்தானா? உன்னோட மாமாவோ ஒரு கெட்டவனுக்கு பெண்னை கல்யாணம் செய்துக் கொடுக்க இருந்துட்டு, இப்போ அவளை காணும்னு தேடிட்டு இருக்காரா? ரொம்ப நல்லா இருக்குடா? சோட்டீ எங்க இருக்கான்னு கேட்டா நான் எப்படி பதில் சொல்வேன். அவ போட்டோ இல்ல அவ உண்மையான பேர் தெரிஞ்சா தானே நான் ஏதாவது சொல்ல முடியும், சரி அவ பேராவது கேட்டு தெரிஞ்சிக்கிட்டீயா?” என்று யாஷ் கேட்கவும்,
 
“இல்லடா, மாமா சொன்னதில் அதை எனக்கு கேட்க தோனல,” என்று சுஷாந்த் வருத்தமாக பதில் கூறியவன்,
 
“மாமா ரித்து கிடைக்காததால் இன்னும் சென்னையில் தான் இருக்கார் யாஷ், அவர் உன்னை பார்க்கணும்னு சொல்றார். அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு போனா மாமா சோட்டீ பத்தி டீடெயில்ஸ் கொடுப்பார் டா,” என்று கூறினான்.
 
“அப்படியா? அப்போ அவர் எங்க இருக்கார்னு அட்ரஸ் மெசெஜ் செய். நான் அவரை போய் நாளைக்கு காலையில் பார்க்கிறேன்.” என்று யாஷ் சொல்லவும்,
 
“சரிடா, மாமாவை பார்த்துட்டு எனக்கு விஷயத்தை சொல்லு. சோட்டீயை நினைச்சா கவலையா இருக்கு,” என்று சுஷாந்த் வருத்தமாக கூறினான்.
 
“சரி, கண்டிப்பா நான் உங்க மாமாவை பார்த்துட்டு பேசறேன்.” என்று சொல்லி அழைப்பை அணைத்தவன், நாளை ரிஷிவர்த்தை நேரில் சந்தித்து சோட்டீயைப் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துக் கொண்டான்.
 
தேனன்பு தித்திக்கும்..