TTA 15
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தேன் 15
யாஷும் ரிதுபர்ணாவும் அந்தமானிலிருந்து வந்து நான்கு நாள் ஆகிவிட்டது. போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் கோபத்தில் இருந்தவன், சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவளிடம் சமாதானம் ஆகியிருந்தான். அவ்வப்போது பாவமாகவும் ஏக்கமாகவும் முகத்தை வைத்துக் கொண்டு அவனை பார்த்திருந்தவளின் மீது வெகுநேரம் அவனால் கோபப்பட முடியவில்லை.
எப்படியோ சுஷாந்திடம் பேசிவிட்டால் இதற்கு ஒரு முடிவு தெரியப் போகிறது. பிறகு ஏன் அவளிடம் கோபம் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். வீட்டிற்கு வந்ததுமே சுஷாந்தை அலைபேசியில் தொடர்பு கொண்டான். ஆனால் மணி முழுதாக அடித்து முடிந்தும் சுஷாந்த் அழைப்பை ஏற்கவில்லை. அதுவும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்தான். ஆனால் சுஷாந்த் அழைப்பை ஏற்கவில்லை. இருவரும் கடைசியாக பேசியதென்றால் தனது திருமணத்திற்கு அழைக்க தான் யாஷ் சுஷாந்திடம் பேசியிருந்தான்.
“சாரி டா யாஷ், பிஸ்னஸ் விஷயமா நான் சிங்கப்பூர் போக வேண்டியிருக்கு, உன்னோட கல்யாண டைம்ல நான் பிஸியா இருப்பேன். கண்டிப்பா வர்றது கஷ்டம்,” என்று சுஷாந்த் கூற,
“ஹே உன்னோட கல்யாணத்துக்கு நான் வரலன்னு பழி வாங்குறீயா?” என்று யாஷ் கேட்டான். ஆறு மாதத்திற்கு முன்பு தான் சுஷாந்த் திருமணம் முடிந்திருந்தது. அப்போது தான் யாஷிற்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அதனால் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. இப்போது வேறு சுஷாந்த் குடும்பம் சென்னையில் இல்லை. வடக்கில் குடியேறியிருந்தார்கள். அவ்வப்போது வந்து இங்கு உள்ள கம்பெனியை மேற்பார்வையிட்டு செல்வார்கள். திருமணமும் அங்கு தான் நடந்தது. விபத்து ஏற்படவில்லையென்றால் யாஷ் கண்டிப்பாக சென்றிருப்பான்.
இப்போது செல்ல முடியாமல் போனதால் மருத்துவமனையிலிருந்தவன், தன் தந்தை மூலம் சுஷாந்திடம் திருமணத்திற்கு வர முடியாதென்று சொல்ல சொல்லி கூறினான். விஷயத்தை கேள்விப்பட்ட சுஷாந்தும் அப்போதே அலைபேசி மூலம் அழைத்து யாஷின் உடல்நலம் பற்றி விசாரித்தான்.
அதை நினைவில் கொண்ட சுஷாந்த், “ஹே அப்போ நீ எந்த நிலைமையில் இருந்தேன்னு எனக்கு தெரியாதா? அதேபோல என்னோட சிட்டுவேஷனையும் புரிஞ்சுக்கோடா? நான் பிஸ்னஸில் பொறுப்பேத்துக்கிட்ட பிறகு தனியா என்னை நம்பி இந்த ப்ராஜக்ட் ஒப்படைக்கிறாங்க, கிட்டத்தட்ட ஒரு மாசம் அங்க இருக்க வேண்டியிருக்கும், கூட மனைவியை கூட கூட்டிட்டு போக முடியாது டா. அவ இப்ப கன்சிவா வேற இருக்கா, இந்த நேரம் அவ கூட இருக்க முடியல, போக வேண்டிய கட்டாயம். என்னோட திறமையை நான் நிரூபிக்கணும், இந்தியால இருக்கற மாதிரி இருந்திருந்தா கண்டிப்பா உன்னோட கல்யாணத்திற்கு வராம இருப்பேனா?” என்று சுஷாந்த் விளக்கமாக கூற,
“ஹே சும்மா விளையாட்டுக்கு பேசினா சீரியஸா எடுத்துப்பியா? நீ பெஸ்ட்டா செய்வ டா. ஆல் தி பெஸ்ட். அப்புறம் அப்பாவாக போற கங்கிராட்ஸ்.” என்று சொல்ல,
“உனக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள் யாஷ்,” என்று சுஷாந்த் கூறவும், “தேங்க்ஸ் டா,” என்று அழைப்பை அணைத்திருந்தான்.
அன்று பேசியதை இப்போது நினைத்து பார்த்தவன்,’ஒரு மாதம் ப்ராஜக்ட்னு சுஷாந்த் சொன்னானே, இந்த நேரம் அவன் பிஸியா இருப்பான். அவனே நம்பர் பார்த்து கால் பண்ணுவான்.’ என்று நினைத்து யாஷ் பிறகு சுஷாந்தை தொடர்பு கொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் வீட்டில் தான் இருந்தான். தந்தையோடு சிறிது நேரத்தை செலவிட்டவன், ரித்துவை வெளியே அழைத்துச் சென்று வந்தான். அடுத்து விரைவில் ஒரு வேலையை தேடிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான். அவன் வேலைக்கு சென்றே ஆறுமாதம் ஆகியிருக்க, ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டுமென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போது கூட வலைத்தளம் மூலமாக மூன்று நேர்முக தேர்வுகள் இருப்பதை குறித்துக் கொண்டு, அதற்கு சென்றவன் மாலை தான் வீடு திரும்பினான். ஒரு இடத்தில் இல்லை என்று சொல்லிவிட்டனர். இரண்டு இடத்தில் பிறகு அலைபேசி மூலம் சொல்வதாக சொல்லியிருக்க, ஏதாவது ஒரு இடத்தில் கிடைத்திடும் என்ற நம்பிக்கையும், கிடைச்சிடணும் என்ற வேண்டுதலோடும் சோர்வாக சட்டையை இறுக்கியிருந்த டையை தளர்த்தியப்படி வீட்டுக்குள் நுழைய, கிஷன் சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டது.
தந்தை இப்படி வாய்விட்டு சிரித்து எத்தனை நாள் ஆகிறது. மணீஷ் திருமணத்திற்கு முன் மூன்று பேரும் சேர்ந்து சத்தமாக சிரிக்கும் சத்தம் அடிக்கடி கேட்கும்,
ஆனால் சோனா வந்த பிறகு வீடு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தால் போதும், உடனே ஏதாவது பிரச்சனையை ஆரம்பித்துவிடுவாள். மணீஷிற்கு உடனே அவளை சமாதானம் செய்வது தான் வேலை. ஆனாலும் சமாதானம் ஆகாமல் அவள் அம்மா வீட்டிற்கு கிளம்ப, மணீஷ் அவள் பின்னே செல்ல வேண்டும், இரண்டு மூன்று நாட்கள் இந்த பிரச்சனையே ஓட, அடுத்து சோனாவின் தந்தை சோனாவிற்கு அறிவுரை கூறி அனுப்பி வைப்பார்.
அடுத்து சொந்த வீட்டிற்கு போகும் கனவை தகர்த்து சோனாவுடன் மணீஷ் மட்டும் புது வீட்டிற்கு போனது கிஷன் சொல்லி தான் என்றாலும், மனதளவில் கொஞ்சம் உடைந்து போனவர், பெரிதளவாக அதற்கு பின் அதிக மகிழ்ச்சியை காட்டியதில்லை.
அப்படிப்பட்டவர் இன்று கலகலவென சிரிப்பதை கண்டு வியந்தவன், சிரிப்பு சத்தம் சமையலறையில் கேட்பதை அறிந்து அங்கே செல்ல, ரித்து கையில் கரண்டியை வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தப்படி இருக்க, கிஷன் அவளைப் பார்த்து தான் சிரித்துக் கொண்டார்.
இவன் வந்த அரவம் கேட்டு திரும்பி பார்த்தவர், “வா வா யாஷ், இங்கப்பாரு ரித்து ஜிலேபி செய்திருக்கா, சாப்பிடு.” என்று நீட்டினார்.
ஆரஞ்ச் நிறத்திலும் இல்லாமல் மஞ்சள் நிறத்திலும் இல்லாமல் ஒரு மாதிரி ப்ரவுன் நிறத்தில் இருந்த ஜிலேபியை கையில் எடுத்தவன், “என்ன பப்பா ஜிலேபி இந்த கலர்ல இருக்கு,” என்று சொல்லி அதை வாயில் வைக்க போக,
“அய்யோ யாஷ் அதை சாப்பிடாதீங்க,” என்று ரித்து கூறுவதற்குள் அதை வாயில் வைத்துவிட்டவன், கசப்பும் இனிப்பும் கலந்த சுவையில் இருந்ததை சாப்பிட்டவனின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
“அய்யோ அதை ஏன் சாப்பிட்டீங்க யாஷ், அது தீஞ்சு போச்சு,” என்றவள், “என்ன பப்பா நீங்க, இதை போய் யாஷ்க்கு கொடுத்திட்டீங்க,” என்று அவரிடம் சிணுங்கினாள்.
அவனோ, “பரவாயில்ல ரொம்ப தீயல, இனிப்போட சேர்ந்ததால் கசப்பு தெரியல,” என்று சொல்லி கையிலிருந்த மீதத்தையும் சாப்பிட்டவன்,
“என்ன பப்பா, அவளுக்கு கூட இருந்து சொல்லிக் கொடுக்காம, இப்போ சிரிச்சிட்டு இருக்கீங்களா?” என்று பொய் கோபம் காட்டினான்.
“நான் சமைக்க கத்துக்கட்டுமான்னு மருமக கேட்கவும், முதலில் இனிப்பிலிருந்து ஆரம்பிக்கட்டும்னு நான் தான் ஜிலேபி செய்ய சொன்னேன். கூட இருந்து இப்படி செய்னு எல்லாம் சொல்லிட்டு இருந்தேன். எண்ணெய்ல போட்டதும் போன் வரவே, வெந்ததும் எடுத்து ஜீரால போடுமான்னு சொல்லிட்டு போனேன். வந்து பார்த்தா இப்படி” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்.
“எனக்கு வெந்த பக்குவம் தெரியல பப்பா, அதான் இப்படி,” ரித்து கொஞ்சம் தயக்கத்தோடு சொல்ல,
“முதல் முறையே எல்லாம் சரியா வந்துடாது பேட்டீ, யாஷ் அம்மா போனதுக்கு பிறகு ஆரம்பத்தில் சமைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நிறைய சொதப்பிடுவேன். அப்போல்லாம் அதை இவனுங்க ரெண்டுப்பேரும் தான் நான் செய்ததை சாப்பிட்டாகணும், அப்போ இவனாவது சின்ன பையன் ஒன்னும் தெரியாது. ஆனா மணீஷ்க்கு நல்லா இல்லன்னு தெரிஞ்சாலும் சாப்பிட்டுவிடுவான். இவனுக்கு கருத்து தெரிஞ்சதுல இருந்தே என்னோட சமையல் தான், நல்லா இல்லன்னாலும் வேஸ்ட் செய்யாம சாப்பிடணும்னு சொல்லி கொடுத்திருக்கேன். இப்போதும் அதனால தான் ஜிலேபியை ஒன்னும் சொல்லாமல் சாப்பிட்டுட்டான்.” என்றவர்,
“சரி நீ போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா யாஷ், வேற ஜிலேபி போட்றேன். கூடவே டீயும் போட்றேன்.” என்றார்.
“சரி பப்பா,” என்று யாஷ் அங்கிருந்து போக, “நீயும் போ பேட்டீ, நான் டீ போட்டுட்டு கூப்பிட்றேன்.” எனவும் ரித்து அவர்களது அறைக்கு வந்தாள்.
யாஷ் குளிக்க துண்டு எடுத்துக் கொண்டிருக்க, “என்ன யாஷ், ஏன் அந்த ஜிலேபியை சாப்பிட்டீங்க, எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு,” என்று வருத்தமாக சொல்ல,
“அவ்வளவு ஒன்னும் கசப்பில்ல ரித்து, கூட இனிப்பு சேர்ந்ததால தெரியல,” என்று அவனும் சமாதானப்படுத்தினான்.
“ஏன் பொய் சொல்றீங்க யாஷ், சாப்பிட்டதும் உங்க முகம் போன போக்கை தான் நான் பார்த்தேனே,” என்று அவள் கூற,
“நான் சொன்னா நம்ப மாட்டேங்குற, இப்போ என்ன இந்த கசப்பை ஈஸியா போக்கிடலாம்,” என்று சொல்லி அருகிலிருந்தவளை இழுத்தவன், அவளது இதழை சிறைப் பிடித்திருந்தான்.
காலையிலிருந்து அலைந்து திரிந்த சோர்வை விட, விரைவில் வேலை கிடைக்க வேண்டுமே என்பது அவனுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்க, அவளது இதழணைப்பில் ஆறுதலை தேடியவன் அப்படியே அதில் மூழ்கிப் போனான்.
எப்போதும் இதழ் முத்தத்தில் ஆரம்பிப்பவனின் கைகள் எல்லையை மீறி அவளது மேனியில் ஊர்வலம் போகும், ஆனால் இந்த முறை அப்படியில்லாமல் முத்தத்தில் திளைத்திருந்தவனை நினைத்து யோசனைக்குள்ளானவள் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள்.
ஆனாலும் அவள் மூச்சுவிட சிரமப்படுவதை உணர்ந்தவன் அவளை விடுவிக்க, “என்னாச்சு யாஷ், ஏதாவது பிரச்சனையா? நீங்க வரும்போதே கவனிச்சேன். ஒருமாதிரி டல்லா இருந்தீங்க, உடம்பு ஏதாவது சரியில்லையா?” என்றுக் கேட்டவள்,
பிறகு தான் ஞாபகம் வந்தவளாக, “இன்னைக்கு இண்டர்வியூன்னு போனீங்கள்ள யாஷ், ரிசல்ட் நெகட்டிவ்வா?” என்று அவன் கன்னத்தில் கைவைத்து கேட்க,
அந்த கையை எடுத்து விரல்களில் முத்தமிட்டவன், பிறகு தன் கைகளில் அவள் கையை பொத்தி வைத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் இல்லையே, அப்புறம் போன்ல சொல்றதா சொல்லியிருக்காங்க,” என்றான்.
“அப்புறம் என்ன யாஷ், கண்டிப்பா வேலை கிடைச்சிடும்,” என்று நம்பிக்கையோடு கூற,
“ம்ம் எனக்கும் நம்பிக்கை இருக்கு, இருந்தாலும் சீக்கிரம் வேலை கிடைச்சுடணும் என்றும் இருக்கு, கிட்டத்தட்ட ஆறுமாசமா வேலைக்குப் போகாம வீட்டில் இருக்கேன். அதுவே எப்போ வேலைக்கு போவோம்னு இருக்கு, கூட எத்தனை நாள் தான் பப்பாக்கு கஷ்டம் கொடுப்பது, இத்தனை நாள் நான் மட்டும் இருந்தேன். இப்போ நீ வேறயா?” என்று அவன் சொல்லவும், அவள் அதிர்ச்சியோடு அவன் முகம் பார்க்க,
“ஹே நான் என்ன சொல்ல வரேன்னா, பப்பாவோட ரிடையர்ட்மெண்ட் மூலம் கிடைச்ச பணமெல்லாம் வீடு கட்றதுக்கே போயிடுச்சு, கூட என்னோட சேவிங்க்ஸும், ஆனா அதில் எங்களால போய் இருக்க முடியல, வீடு மணீஷ் பேர்ல இருக்கவே சோனா எங்களை வரக் கூடாதுன்னு சொல்லிட்டா, நாங்களும் மணீஷ்க்காக விட்டுக் கொடுத்திட்டோம், ஆனாலும் பப்பாக்கு அதில் கொஞ்சம் வருத்தம் இருக்கு, அப்புறம் எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதுல இருந்து அப்பாவோட பென்ஷன் பணம் தான் எல்லா செலவுக்கும், நடுவில் இந்த கல்யாணம் வேற, வேலையில்லாம எனக்கு கல்யாணம் வேண்டாம்னு பப்பாக்கிட்ட சொன்னேன். அவர் கேட்கவே இல்ல, அதுக்கு எவ்வளவு செலவு, ஆனாலும் அவர் எல்லாமே சமாளிச்சிட்டு தான் இருக்கார். நாங்க ரெண்டுப்பேர்னா பொதுவா சமாளிச்சுக்கலாம், ஆனா கல்யாணம் ஆகிட்டா கூடுதல் பொறுப்பு வருதுல்ல, உனக்கு தேவையானதை நான் தானே பார்த்துக்கணும், எல்லாம் பப்பா பார்த்துப்பாருன்னு இருக்க முடியுமா?
கல்யாணம்னா அடுத்து குழந்தை, அப்போ இன்னும் கூடுதல் பொறுப்பு ஆகிடுமில்ல,” என்று அவன் சொல்ல, குழந்தை என்றதும் அவள் முகம் நாணத்தை பூசிக் கொள்ள,
அதைக் கண்டுக் கொண்டவன், அவளை பின்னோடு இருந்து அணைத்து, காதருகே குனிந்து, “என்ன குழந்தை பெத்துக்கலாம் தானே,” என்றுக் கேட்க,
“அய்யோ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் கேளுங்களேன்.” என்று அவளும் அவன் அணைப்பிலிருந்து விலகாமல் சிணுங்கினாள்.
“ஆமாமில்ல, நம்ம குழந்தையை பத்தி எந்த ப்ளானும் முன்னமே யோசிக்கல, ஆனா எனக்கு உடனே குழந்தை வருவதில் எந்த பிரச்சனையுமில்ல, ஆனா அதுக்குள்ள உடனே வேலை கிடைக்கணும், அந்த டென்ஷன் தான் எனக்கு, உன்னால புரிஞ்சுக்க முடியுதுல்ல,” என்று அவன் கேட்க,
“புரியுது யாஷ், கண்டிப்பா உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும், கவலைப்படாம இருங்க,” என்று ஆறுதல் கூறினாள்.
அவளோடு பேசியது இப்போது கொஞ்சம் அவன் மனதிற்கும் இதமாக இருக்க, இப்போது அவளது அருகாமை அவனுக்கு மோகத்தை தூண்ட, அணைத்திருந்த கைகள் அவளது மேனியில் அத்து மீற, “ரித்து, குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னீயே, உனக்கு எந்த குழந்தை வேணும்,” என்று அவள் தோள் மீது அவன் கன்னம் வைத்து கிறக்கமாக கேட்டான்.
“எனக்கு எந்த குழந்தையா இருந்தாலும் ஓகே தான், ஆனா உங்களை போல் பையனா இருந்தா இன்னும் ஸ்பெஷலா இருக்கும்,” என்றாள்.
“எனக்கு உன்னைப் போல குட்டி ரித்து தான் வேணும்,” என்று அவன் சொல்ல,
“அப்படியா? அப்போ ரெண்டுமே பெத்துக்கலாம்,” என்று அவள் கூறினாள்.
“ஹே என்ன ட்வின்ஸா?” என்று அவன் கேட்க,
“அது நம்மக்கிட்ட இல்லையே, அப்படி கடவுள் கொடுத்தா சந்தோஷம் தான், நான் சொல்றது, முதல் பையன் அப்புறம் பொண்ணு அப்படி.” என்றாள்.
“ஏன் முதலில் பொண்ணு அப்புறம் பையன் இருக்கக் கூடாதா? ஆனா அடுத்தடுத்தும் பொண்ணு இல்ல பையன்னு ஒரே மாதிரி பிறந்தா என்ன செய்றது?”
“பையனா இருந்தா பொண்ணு பிறக்கும் வரை பெத்துக்கிட்டே இருப்போம், இல்ல பொண்ணா இருந்தா பையன் பிறக்கும் வரை, என்ன சொல்றீங்க?” அவள் நாணத்தோடு கேட்க,
“அம்மாடியோவ் இது ஆகறதில்ல,” என்றவனின் இதழ்களும் அவளது கழுத்து பகுதியில் ஊர்வலம் போக,
யாஷ், ரித்து என்று கிஷன் சமையலறையில் இருந்து அழைத்ததும், “பப்பா டீ போட்டுட்டாங்க போல,” என்று ரித்து கூற,
“சரி நீ போ, நான் டக்குன்னு ஒரு குளியல் போட்டுட்டு வரேன்.” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை விடுவித்தவன் குளியலறைக்குச் சென்றான்.
இரவு உணவுக்கு சப்பாத்தியை தயார் செய்ததும் ரித்து தான், இரண்டு சப்பாத்திகளை சுட்டு காண்பித்த கிஷனிடம், “மீதி நானே செய்றேன் பப்பா,” என்றவள், தயார் செய்த சப்பாத்திகளை பார்த்து கிஷன் மீண்டும் சிரித்தார். அதிக தீயில் வைத்து சுட்டதில் சில சப்பாத்திகள் வறட்டி போல இருக்க, தீயை குறைத்து செய்ததில் சில சப்பாத்திகள் வேகாமல் இருந்தது.
வேகாத சப்பாத்திகளை மீண்டும் அடுப்பில் வைத்து கிஷன் சுட்டு எடுக்க, “எனக்கு சமையலெல்லாம் வராது போல பப்பா, அந்த ஹார்டா இருக்க சப்பாத்தியை நானே சாப்பிட்றேன். இனி சமையலை நீங்களே பாருங்க, மீதி வேலையை நான் செய்றேன்.” என்று ரித்து கூறினாள்.
வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒரு ஆணாக இருந்துக் கொண்டு கிஷன் பார்ப்பது அவளுக்கு ஒரு மாதிரி குற்ற உணர்வாக இருக்க, அவரோடு வேலைகளை பகிர்ந்துக் கொள்ள நினைத்து தான் சமைப்பதாக கூறினாள். அது சரிவராது என்பது புரிந்து மீதி வேலைகளை செய்வதாக சொல்ல,
அதை புரிந்துக் கொண்ட கிஷனோ, “இங்கப்பாரு பேட்டீ, முதல்முறை எல்லாமே சொதப்பும் தான், உடனே அது நமக்கு சரிவராதுன்னு நினைச்சுக்க கூடாது. அடுத்தடுத்து அதை செய்துப் பார்த்தா அப்புறம் இந்த வேலையையா நாம கஷ்டம்னு நினைச்சோம்னு நினைப்ப பாரேன்.
உனக்கு சமையல் கத்துக்க ஆர்வம் இருக்குன்னு நினைச்சு தான் உன்னை இன்னைக்கு செய்ய சொன்னேன். ஆர்வத்தோடு கத்துக்கிறது வேற, அதில்லாம அய்யோ பப்பா எல்லா வேலையும் பார்க்கிறாங்களேன்னு நீ நினைச்சா, ஆம்பிளைங்க இந்த வேலை தான் செய்யணும் அப்படில்லாம் எதுவும் கிடையாது பேட்டீ,
ரிடையர்ட் ஆகிட்டு வீட்டில் இருக்க நான் இந்த வேலையெல்லாம் செய்யாம இருந்தா, எவ்வளவு நேரம் தான் டிவியில் நியூஸும் பேப்பரும்னு இருப்பது. தலை வெடிச்சிடும், யாஷ் அம்மா இருக்கும்போது எச்சில் கிளாஸை கூட எடுக்க மாட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறோம், இதெல்லாம் ஆம்பிளை செய்யும் வேலையான்னு நினைச்சிருக்கேன். அதுக்கே அவ உங்களை போல புருஷன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்னு சொல்வா, அவ ரொம்ப நாள் என்கூட இருக்கமாட்டான்னு தெரிஞ்சா, இன்னும் இப்படி கூடமாட உதவி செய்து அவளை சந்தோஷமா வச்சிருந்திருப்பேன்.
அதுக்கு தான் மணீஷும் யாஷும் கூட எல்லா வேலையும் செய்யணும்னு நினைப்பேன். மணீஷ் என்னைவிட நல்லா சமைப்பான் தெரியுமா? யாஷ்க்கு டீ காபி மட்டும் தான் போட தெரியும், ஆனா மத்த வேலையெல்லாம் செய்வான். எனக்கு சின்னதா உடம்பு சரியில்லன்னா கூட, என்னை உட்கார வச்சிட்டு ரெண்டுப்பேரும் எல்லா வேலையும் செஞ்சுடுவாங்க,
அதனால எந்த வேலையும் செய்ய தெரியலன்னு கவலைபடாத, மெதுவா கத்துக்கலாம், கூட யாஷ்க்கும் சமையல் கத்துக் கொடுத்திட்டா பிரச்சனை முடிஞ்சிடுது,” என்று சொல்லி சிரித்தார்.
கடைசியில் அந்த வரட்டி சப்பாத்தியை யாஷ் தான் சாப்பிட்டான். கிஷன் சாப்பிடுவதாக சொல்ல, “உங்களுக்கு பல்லு வீக்கா இருக்கு பப்பா வேண்டாம்,” என்றவன், “உனக்கும் இப்படி சாப்பிட்டு பழக்கம் இருக்காது. வேண்டாம்,” என்று ரித்துவிடமும் கூறிவிட்டு சாப்பிட்டான்.
ஒருபக்கம் அவனைப் பார்த்து பரிதாபமாகவும் இன்னொருபக்கம் அவனை நினைத்து ரித்து பெருமையாக உணர்ந்தாள்.
சாப்பிடும்வரை ஒன்றும் சொல்லாதவன், சாப்பிட்டு முடித்து வந்து அமர்ந்ததும், “ஆமாம் உங்க வீட்டில் நீ ரொம்ப செல்லப் பெண்ணா? உன்னோட டாடிக்கு நீ லிட்டில் பிரின்ஸஸ்ஸா? வீட்டில் சமையல்கட்டு எப்படி இருக்கும்னாவது பார்த்திருக்கீயா?” என்று கேலி செய்தான்.
அவளும் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்பாவின் செல்ல மகள் என்ற போது விரக்தியாக ஒரு சிரிப்பு வந்தது. தந்தையின் பாசத்தை முழுமையாக அனுபவித்தது என்றால் தற்கொலைக்கு முயன்ற அந்த பத்து நாள் தான், அதுவும் ஸ்வராகிணி இருந்திருந்தால் அதுவும் கிடையாது. அந்த பத்து நாள் பாசம் போதுமா? அதை நினைக்கும்போதே மனம் வேதனை கொள்ள,
“எங்க வீட்டில் எல்லாத்துக்குமே வேலைக்கு ஆள் இருப்பாங்க, ஆஸ்திரேலியால கூட பேயிங் கெஸ்ட் போல தான் இருந்தேன். அதனால எந்த வேலையும் செய்ததில்ல, என்ன என்னோட வேலைகள் மட்டும் செய்துக் கொள்ள ஆஸ்திரேலியால தான் பழகினேன்.
எந்த வேலையும் செய்யாததால நான் எங்க அப்பா, அம்மாக்கு செல்லப் பெண்ணெல்லாம் கிடையாது. என்னோட தாதிக்கு தான் நான் ரொம்ப செல்லம், ஆனா ஒருவேளை அவங்களோடவே இருந்திருந்தா எனக்கு எல்லாம் பழக்கி விட்ருப்பாங்க,” என்று தன்னை மறந்து சொல்லிக் கொண்டிருந்தவளை யாஷ் யோசனையோடு பார்க்க, அவளும் அவனை கவனித்து அப்போது தன் பாட்டியை பற்றி சொல்லிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதோடு நிறுத்திக் கொண்டாள்.
அதற்குள் கிஷனோ, “என்ன யாஷ் என்னோட மருமகளை கேலி செய்ற, இன்னும் ஒருவாரத்தில் அவளுக்கு சூப்பரா சமைக்க கத்துக் கொடுக்கிறேன் பார். அவ என்னோட சூப்பரா சமையல் கத்துப்பா, நீ அவ சமையலை சாப்பிட்டு அசந்து போகப் போற பாரு.” என்றவர்,
“என்ன பேட்டீ சரி தானே,” என்று ரித்துவிடம் கேட்க, அவளும் ஆமாமென்பது போல் தலையசைத்தாள்.
“ம்ம் கடைசியில் என்னை சமையல் கத்துக்க வச்சிடுவீங்க போலயே ரெண்டுப்பேரும்,” என்று யாஷ் பயந்தது போல கூற,
“இது கூட நல்லா இருக்கே,” என்று சொல்லி கிஷன் சிரித்தார்.
பின், “சரி நேரமாகுது ரெண்டுப்பேரும் போய் படுங்க,” என்று சொல்லியவர், அங்கேயே படுத்துக் கொள்வதற்கு அவர் ஆயத்தமாக,
“ரித்து நீ போய் படு, நான் கொஞ்ச நேரம் பப்பாக்கூட பேசிட்டு வரேன்.” என்று சொல்லி யாஷ் அங்கேயே அமர்ந்திருக்க, எங்கே இப்போது பாட்டியை பற்றி சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து மீண்டும் நீதானே சோட்டீ என்று கேட்பானோ? என்று நினைத்தவள், அவன் தந்தையோடு பேசிக் கொண்டிருப்பதாக சொல்லவும், சரியென்று சொல்லி அவர்களது அறைக்குச் சென்றாள்.
அவள் சென்றதும், “என்ன யாஷ் ஏதாவது முக்கியமா பேசணுமா?” என்று கிஷன் கேட்க,
“ஆமாம் பப்பா, ரித்து பத்தி தான் பேசணும்,” என்றவன், “எங்க கல்யாணம் அன்னைக்கு ரித்துக்கிட்ட தனியா பேசினீங்கள்ள, அப்போ அவ உங்கக்கிட்ட என்ன சொன்னா? அதுக்கு முன்ன வரை குழப்பமா இருந்தீங்க, ஆனா அவ பேசி முடிச்சதும் எங்க கல்யாணத்தை அங்கீகரிச்சீங்க, அது எதனால்?” என்று அவன் கேட்க, கிஷனோ அமைதி காத்தார்.
“எதுக்கு பப்பா அமைதியா இருக்கீங்க, ரித்து உங்கக்கிட்ட ஏதோ சொல்லியிருக்கா? ஆனா அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறீங்க, சொல்லுங்க பப்பா, ரித்து என்ன சொன்னா? அவ தான் சோட்டீன்னு சொன்னா தானே,” என்று கேட்க, கிஷன் அவனை வியப்போடு பார்த்தார்.
“எனக்கு தெரியும் பப்பா, அவ தான் சோட்டீன்னு நான் கண்டுப்பிடிச்சிட்டேன். ஆனா அதை அவ ஒத்துக்க மாட்டேங்குறா, என்னையே குழப்புறா, எனக்கு ஏன் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறான்னு தெரியல, நீங்களாவது சொல்லுங்க பப்பா,” என்று அவன் மீண்டும் கேட்கவும்,
“இங்கப்பாரு யாஷ், உனக்கு தெரியக் கூடாதுன்னு ரித்து நினைக்கிற விஷயத்தை நான் மட்டும் எப்படி உனக்கு சொல்ல முடியும், அது தவிர எனக்கும் அவளைப்பத்தி விளக்கமா தெரியாது. அவளோட கணவனா நீதான் அதெல்லாம் தெரிஞ்சிக்க முயற்சி செய்யணும், அவ குழப்பரான்னு அமைதியா இருக்காம அவளைப்பத்தி தெரிஞ்சிக்க முயற்சி செய்.
இந்த கல்யாணத்தை நான் அங்கீகரிச்சேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு, அது ரித்து உன்மேல நிறைய அன்பு வச்சிருக்கா, அவ உன்னை கல்யாணம் செய்துக்கிட்டது அவளோட பாதுகாப்புக்காக இல்ல, உனக்காக தான், பார்லரிலிருந்து அவ மண்டபத்திற்கு வந்தது வேணும்னா அவளோட பிரச்சனையிலிருந்து தப்பிக்க தான், ஆனா உன்னை கல்யாணம் செய்துக்கிட்டது உன்னை அவமானத்திலிருந்து காப்பாத்த தான்,” என்று கிஷன் சொல்லவும், யாஷ் புரியாத பார்வை பார்க்க,
“முக்தா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போனது அவளோட முடிவு இல்லை. அவளை சோனா தான் தூண்டி விட்ருக்கா, உன்னோட கல்யாணம் நின்னு நீ அவமானப்படணும்னு நினைச்சிருக்கா, அதுமட்டுமில்ல பார்லரில் ரித்து மாறிப் போனது வேணும்னா சோனாக்கு தெரியாம இருக்கலாம், ஆனா மண்டபத்திற்கு வந்ததுமே மணப்பெண்ணா இருந்தது முக்தா இல்லன்னு சோனாவிற்கு தெரிஞ்சிருக்கு, ஆனாலும் அமைதியாகிட்டா, உன் வாழ்க்கையில் குழப்பம் உருவாகணும்னு நினைச்சிருக்கா,
இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட ரித்து, அவ முக்தா இல்லைங்கிற விஷயத்தை சொன்னா, அப்போ முக்தா எங்கன்னு கேள்வி வரும், நீ அத்தனை பேர் முன்னேயும் அவமானப்பட் கூடாதுன்னு நினைச்சு தான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா, ஆனாலும் முக்தா அப்போ வந்து மண்டபத்திலேயே குழப்பம் வந்ததுக்கும் சோனா தான் காரணமா இருக்கமுடியும், ” என்று கிஷன் கூறி முடிக்க,
‘இவ்வளவு தெரிஞ்சும் சோனாவை நீங்க சும்மாவா விட்டீங்க,” என்று யாஷ் கோபப்பட்டான்.
“மணீஷை மனசுல நினைச்சுப்பாரு யாஷ், அவனுக்காக தான் அமைதியாகிட்டேன். அதுவுமில்லாம சோனா கெட்டது நினைச்சாலும், உனக்கு அது நல்லதா முடிஞ்சிருக்கு, ரித்து மாதிரி ஒரு பொண்ணு உனக்கு மனைவியா கிடைச்சிருக்கா, அதை நினைச்சு சந்தோஷப்படு.
அந்த நேரத்திலும் தன்னோட பிரச்சனையை கூட பெருசா நினைக்காம உனக்காக யோசிச்ச ரித்துவை நீ சந்தோஷமா வச்சிக்கணும், அவ ஏன் உன்கிட்ட வெளிப்படையா பேசல, அவளுக்குள்ள என்ன இருக்கு? நீதான் கண்டுப்பிடிக்கணும், புரியுதா?” என்று அவர் கேட்க, அவனும் சம்மதமாக தலையாட்டினான்.
‘அவள் தான் சோட்டீயா? என்று கேட்டதற்கு பப்பா ஒன்னும் சொல்லல, ஆனா எனக்கு தெரியாதுன்னு திட்டவட்டமாகவும் சொல்லல, அப்போ அவ தான் சோட்டீயா? அவளுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்?’ என்று குழம்பியவன், மீண்டும் சுஷாந்திடம் பேசலாம் என்று நினைத்து மணிப் பார்க்க ஒன்பது என்று காட்டியது.
‘இங்கேயே படுக்கும் நேரம் ஆகிவிட்டது. அப்போ அங்கே சுஷாந்த் தூங்கியே இருப்பான்’ என்று நினைத்தவன், ‘போனமுறை கொடுத்த மிஸ்ட் காலை பார்த்தானா தெரியல, எதுக்கு இன்னொரு மிஸ்ட் கால் கொடுத்து வைப்போம்,’ என்று முடிவு செய்து யாஷ் சுஷாந்தின் அலைபேசிக்கு தொடர்புக் கொள்ள இரண்டாவது மணியிலேயே சுஷாந்த் அவனது அழைப்பை ஏற்றிருந்தான்.
“என்னடா புது மாப்பிள்ளை, இந்த நேரம் எனக்கு போன் போட்ருக்க,” சுஷாந்த் கேலியோடு பேச ஆரம்பிக்க,
“என்னடா செய்ய? கல்யாணத்துக்கு தான் வர முடியாதுன்னு சொல்லிட்ட, ஆனா அதுக்குப்பிறகு ஒரு விஷ் கூட இல்ல, உன்கிட்டல்லாம் பேசவே கூடாதுன்னு நினைச்சேன். ஆனா விதி உன்கிட்ட பேசறது போல ஆகிடுச்சு,” என்று பதில் கூறிக் கொண்டே மொட்டை மாடிக்கு வந்தான்.
“யாஷ் நான் தான் சொன்னேனே, அந்தநேரம் உண்மையிலேயே ரொம்ப பிஸியா இருந்தேன் டா, ஆனா 3 நாளுக்குப் பிறகு உனக்கு போன் போட்டேன். ஆனா லைனே போகல, சரி புது மாப்பிள்ளை உன்னை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு விட்டுடேன் டா.”
“அப்போ அந்தமான்ல இருந்தேன் டா, அங்க நிறைய நேரம் சிக்னல் கிடைக்காது. அதுவும் குறிப்பிட்ட சிம் தான், அதான் இன்னொரு புதுசா வாங்கின சிம் மட்டும் தான் அங்க ஆக்டிவேட் ஆகியிருக்கும்”
“ஓ அப்படியா? ஹனிமூன் எப்படி போச்சு, உடனே திரும்பிட்டீங்க போல, இன்னும் கொஞ்ச நாள் அங்க இருந்திருக்கலாமே?”
“அந்தமான் எங்க டா போயிடப் போகுது. திரும்ப போய் பார்த்துக்கலாம், ஆமாம் 3 நாள் முன்ன உனக்கு போன் போட்டேனே பார்க்கலையா?”
“பார்த்தேன் டா, முக்கிய வேலையா மலேசியா போயிட்டேன். இன்னைக்கு தான் வந்தேன். பர்சனல் மொபைலை ரூம்லயே வச்சிட்டு போனதால வந்ததும் தான் பார்த்தேன். சரி நாளைக்கு பேசுவோம்னு இருந்தேன்.”
“டிஸ்டர்ப் செய்துட்டேனா டா, நீ தூங்கியிருப்ப வெறும் மிஸ்ட் கால் கொடுத்து வைப்போம்னு நினைச்சேன். நீ அட்டண்ட் செய்துட்ட,”
“இல்லடா ரெண்டு நாளா வைஃப் கிட்ட கூட பேச முடியல, அதான் இவ்வளவு நேரம் அவக்கிட்ட தான் பேசினேன். பேசிமுடிக்கவும் உன்னோட கால் அதான் உடனே அட்டண்ட் செய்தேன். சொல்லுடா ரெண்டுமுறை போன் போட்ருக்க ஏதாச்சும் முக்கியமான விஷயமா?”
“ஆமாம் சுஷாந்த், எனக்கு ஒரு தகவல் தெரியணும், உன்னோட கசின் சோட்டீ இருக்கால்ல, இப்போ அவ எங்க? என்ன செய்றான்னு தெரியுமா?”
“சோட்டீயா? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா?” சுஷாந்த் சொல்லவும்,
‘அப்போ சோட்டீக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்பது ஒத்து போகுது.’ என்று நினைத்துக் கொண்டவன்,
“என்னடா சொல்ற? சோட்டீக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இப்போ என்ன அவளுக்கு வயசு 21 இல்ல 22 இருக்குமா? அதுக்குள்ள கல்யாணம் செய்துட்டாங்களா? எப்போடா ஆச்சு?” ஏதாவது தெரிந்துக் கொள்ள விஷயம் கிடைக்குமா?” என்பது போல கேட்க,
“அந்த கொடுமையை ஏன் யாஷ் கேட்கிற?” என்று சுஷாந்த் பதில் கூறவும், என்னவோ விஷயம் இருப்பதாக யாஷ்க்கு பட்டது.
“கொடுமையா? என்னடா சொல்ற?”
“யாஷ் உனக்கு தெரியுமா? உனக்கு கல்யாணம் நடக்கவிருந்த தேதியில் தான் சோட்டீக்கும் கல்யாணம் முடிவாகியிருந்தது. இன்னேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும், பாவம் புகுந்த வீட்டில் சோட்டீ என்ன கஷ்டப்பட்றாளோ?” சுஷாந்த் புலம்ப,
அதே தேதியில் திருமணம் என்றதுமே, 90 சதவீதம் ரித்து தான் சோட்டீ என்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ‘என்ன சோட்டீ புகுந்த வீட்டில் கஷ்டப்பட்றாளா? நானும் பப்பாவும் நல்லா தான் டா பார்த்துக்கிறோம்,’ மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,
“புகுந்த வீட்டில் கஷ்டப்படுவாளா? என்னடா சொல்ற?” என்று கேட்டான்.
“சுதன் லால் சுத்த மோசமானவன் யாஷ், இல்லாத கெட்டப்பழக்கமே இல்ல, வயசு 40 க்கு இருக்கும், அவனுக்கு சோட்டீயை கல்யாணம் செஞ்சு வைக்க மாமாவும் மாமியும் முடிவு செய்துட்டாங்க, சுதன்லால் எங்கக்கூட பிஸ்னஸ் டீல் வச்சிருக்கவன் தான், பப்பா, அம்மா, மத்த மாமாங்க எல்லோரும் இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாகிட்டாங்க, ஆனா யார் சொல்லியும் மாமாவும் மாமியும் கேட்கல, அதனால நாங்க யாருமே கல்யாணத்துக்கு போகல,” என்று சுஷாந்த் சொல்லிக் கொண்டிருக்க,
‘கல்யாணம் நடந்த அன்னைக்கு ரித்து தீவிரவாதி, ப்ளான் செய்து வந்திருக்கான்னுல்லாம் சொன்னோமே? கடைசியில் இதுதான் பிரச்சனையா?’ என்று யோசித்து அவளுக்காக வருத்தப்பட்டவன்,
“எதுக்கு சுஷாந்த் உங்க மாமா இப்படி ஒரு கல்யாணம் ஏற்பாடு செய்தாங்க?” என்று கேட்டான்.
“தெரியல டா, நானி இறந்ததிலிருந்தே ஏதோ பெரியவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க, ரித்து பத்தி தான், ஆனா என்னன்னு தெரியல, எங்கக்கிட்ட எதுவும் சொல்லல, ஆனா இந்த கல்யாணம் விஷயம் எல்லோருக்குமே அதிர்ச்சி தான், அதான் வெளிப்படையா புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,”
“என்னடா சொல்ற, நானி இறந்துட்டாங்களா? எப்படா?”
“3 மாசம் இருக்கும் யாஷ், ரொம்ப சீரியஸா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தோம், அப்போ தான் சோட்டீ ஆஸ்திரேலியால இருந்து வந்தா, உனக்கே தெரியுமில்ல எல்லோரையும் விட அவ மேல தான் நானிக்கு கொஞ்சம் அதிக பாசம், அவளைப் பார்த்ததும் உயிரை விட்டுட்டாங்க,
உனக்கு அப்போ ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்ததால சொல்லல, அப்புறம் கல்யாணம்னு நீ போன் செய்யவே அதைப்பத்தி சொல்ல வேணாம்னு விட்டுட்டேன்.”
‘சோட்டீயும் ஆஸ்திரேலியாக்கு போயிருக்கா, 99 சதவீதம் ரித்து தான் சோட்டீன்னு முடிவா தெரியுது, அவளோட உண்மையான பேர் இல்ல அவ போட்டோ பார்த்தா 100 சதவீதம் தெளிவு வந்திடும்,’ என்று நினைத்த யாஷ்,
“பரவாயில்ல டா, சரி சோட்டீயோட நிஜப் பெயர் என்ன?” என்றுக் கேட்க,
“தெரியலையே டா, எல்லாம் சோட்டீன்னு சொல்லி தான் கூப்பிடுவோம், உண்மையான பேர் என்னன்னு தெரியலையே,” என்று சுஷாந்த் பதில் கூறினான்.
“சரி அவளோட லேட்டஸ்ட் போட்டோ ஏதாவது இருக்கா?” என்ற கேள்விக்கும்,
“இல்லடா,” என்று சுஷாந்த் பதில் கூற,
“டேய் நீ அவளோட கசின் தானே, அவ பேர் தெரியலன்னு சொல்ற, அவளோட போட்டோ இல்லன்னு சொல்ற, எப்படிடா இப்படி இருக்க?” யாஷ் அவனை கோபமாக திட்ட,
“ஹே அவ சென்னைக்கு வந்தப்ப தான் நான் பார்த்ததே, அதுக்குப்பிறகு எதுக்கும் அவ வந்ததில்ல, அப்புறம் ஆஸ்திரேலியா போயிட்டா, எங்க ரிலேடிவ் யார் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் அவ வந்ததில்ல, அவ வந்ததே பாட்டிக்காக மட்டும் தான், அந்த நேரத்தில் போட்டோ எடுக்க முடியுமா சொல்லு, சும்மா கொஞ்ச நேரம் தான் பேசினேன். ஆனா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டா தெரியுமா?” என்று சொன்னவன்,
“ஆமாம் எதுக்கு அவளைப்பத்தி நீ கேட்கிற? நீ ரிகா பத்தி தானடா கேட்கணும், உனக்கு தெரியுமா? ரிகாக்கு கல்யாணம் ஆகி, இப்போ அவளுக்கு 4 வயசுல பெண் குழந்தை இருக்கு,” என்ற தகவலை கூற,
“ஹே அதெல்லாம் அப்போதே மறந்துட்டேன் டா, எனக்கு ரிகா முகம் கூட ஞாபகம் இல்ல,” என்று யாஷ் கூறினான்.
“ஆனா சோட்டீயை ஞாபகம் வச்சிருக்க எப்படி?” என்று சுஷாந்த் கேட்க,
“சில பேரை மறக்கணும்னு நினைச்சாலும் முடியாது. அப்படித்தான் சோட்டீயும், ஆனா அவ இப்போ எப்படி இருக்கான்னு எனக்கு தெரியணும், அவ போட்டோ எனக்கு வேணும், அவ பேர் என்னன்னு தெரியணும், ரெண்டும் நீதான் எனக்கு உன்னோட ரிலேடிவ் மூலமா கேட்டு சொல்லணும், முடியுமா?” என்று யாஷ் கேட்டான்.
“எதுக்கு டா?” என்று சுஷாந்த் திருப்பிக் கேட்க,
“நீ போட்டோ காட்டு, நான் சொல்றேன்.” என்று யாஷ் சொல்லவும்,
“சரி நான் நாளைக்கே போட்டோ அனுப்புறேன்.” என்று சொல்லி சுஷாந்த் அலைபேசி அழைப்பை அணைத்தான்.
அந்தமானில் எடுத்த தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை சுஷாந்திடம் காட்டினால் கூட இப்போதே அவள் தான் சோட்டீயா? இல்லையா? என்று தெரிந்து விடும் தான், ஆனால் ரித்துவிற்கு என்ன பிரச்சனை என்பது இப்போது சரியாக தெரியவில்லை. அவள் பெற்றோர் ஏன் இப்படி ஒரு திருமணம் செய்தார்கள். ஒருவேளை அவள் இங்கிருப்பது அவர்களுக்கு தெரிந்தால் ஏதாவது பிரச்சனையாகுமோ? என்று யோசித்த யாஷ், சுஷாந்த் சோட்டீயின் புகைப்படம் காட்டட்டும் பிறகு என்ன செய்யலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்து அப்போதைக்கு அமைதியானான்.
தேனன்பு தித்திக்கும்..