TTA 13
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தேன் 13
விடுமுறை முடிந்து அனைவரும் லக்னோ செல்ல இன்னும் ஒருவாரமே இருந்தது. ரித்விகாவிடம் யாஷ் கோபம் கொண்டது இரண்டு நாட்கள் தான் நீடித்தது. அதன்பின் அவளாக வந்து அவனிடம் பேசியதில் அவன் கோபம் மறைந்திருந்தது.
ரித்திமா தான் திமிராக பேசுவாள். ரித்விகா அப்படியில்லை. சோட்டீயிடம் அவள் அப்படி நடந்துக் கொண்டது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், வந்ததிலிருந்து அனைவரையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறான். ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் பொழிந்ததாக தெரியவில்லை. அதனால் அவர்களது இயல்பே அதுதான் என்று புரிந்துக் கொண்டவனுக்கு ரித்விகா மீதிருந்த கோபம் குறைந்திருந்தது.
அதிலும் ஆரம்பத்தை விட இப்போது அவனிடம் அவள் நன்றாக பேசவும், அவளிடம் அவன் காதலை உரைக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. இந்த ஒருவாரத்திற்குள் எப்படியாவது ரித்விகாவிடம் தன் மனதை திறந்திட வேண்டுமென்று நினைத்துக் கொண்டவனுக்கோ, அதை எப்படி செயல்படுத்துவது என்று தான் புரியவில்லை.
நேரடியாக போய் பேசவும் பயமாக இருந்தது. பேசாமல் அலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாமா? என்று நினைத்தவனுக்கோ, ஒருவேளை அவளுக்கு விருப்பமில்லையெனில் அந்த குறுஞ்செய்தியை யாரிடமாவது காட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான். இப்படி அதிகம் யோசித்தவன், இறுதியாக ஒரு காகிதத்தில் ரித்து ஐ லவ் யூ என்று மட்டும் எழுதியவன் அதை நேராக கொடுக்க பயந்து ரிதுபர்ணா மூலம் ரித்விகாவிடம் கொடுக்க நினைத்தான்.
அதற்காக ரிதுபர்ணா தனியாக மாட்டும் நேரத்திற்காக அவன் காத்திருக்க, அவளோ கலாவதியுடனே இருந்தாள். அதனால் இதை யாரிடம் கொடுத்து ரித்விகாவிடம் கொடுப்பது என்று யோசித்தவன், அந்த சமயம் ரிதன்யா தனியாக மாட்டவும், “ஹே மீத்தி,” என்று அவளை அழைத்தான்.
அவள் அருகில் வந்து என்னவென்று கேட்கவும், “மீத்தி எனக்கொரு ஹெல்ப் செய்யணுமே, இந்த லெட்டரை ரித்துக்கிட்ட கொடுக்க முடியுமா?” என்று கேட்டான்.
இங்கே அவரவர் செல்ல பேர் தான் மற்றவர்களுக்கு தெரியும், அப்படியிருக்க நான்கு பேருக்கும் ஒரே போல் பெயரிருக்குமென்று யாஷிற்கு எப்படி தெரியும்? அவன் ரித்விகாவை சுருக்கி ரித்து என்று கூறினான்.
ஆனால் ரிதன்யாவிற்கு சோட்டியின் பெயர் ரிதுபர்ணா. அவளை பள்ளியில் அனைவரும் ரித்து என்று அழைப்பார்கள் என்பது மட்டும் தான் தெரியும், ஏற்கனவே ரிதுபர்ணாவிடம் யாஷ் காட்டும் அக்கறையை அவள் காதல் என்று சொல்லிக் கொண்டிருக்க, இப்போது ரித்துவிடம் என்று அவன் கொடுத்த கடிதத்தை ரிதுபர்ணாவிற்கு என்று நினைத்துக் கொண்டாள்.
“இதில் என்ன இருக்குதுன்னு பிரிச்சு படிக்காத, அப்படியே கொண்டு போய் உன்னோட தீதிக்கிட்ட கொடு.” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
“தீதியா? அவ என்னோட சோட்டீ பெகன்,” என்று அவனுக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டவளுக்கோ, அந்த கடிதத்தை பிரித்து பார்க்கும் ஆசை வந்தது.
அதை பிரித்து படித்து அதிலிருந்த செய்தியை படித்தவள், வேகமாக அதை சொல்ல ரிதுபர்ணாவை தேடிச் சென்றாள்.
அப்போது தான் ரிதுபர்ணா இருவரும் தங்கியிருக்கும் அவர்களது அறைக்கு வந்திருந்தாள். அவளிடம் ஓடிவந்தவள், “ரெண்டு நாளா நான் சொன்னதுக்கு அப்படி இருக்காதுன்னு சொன்னீயே, இப்ப பாரு யாஷே உன்னை காதலிக்கிறதா ஒத்துக்கிட்டான்.” என்று அந்த கடிதத்தை நீட்டினாள்.
ஆம் அன்று பயணத்தின் போது நடந்ததை வீட்டிற்கு வந்து ரிதன்யாவிடம் ரித்து சொல்ல, “ம்ம் நான் சொன்னப்போ நம்பலையே, உன் மேல இன்ட்ரஸ்ட் இல்லாம தான் யாஷ் இப்படி உன்மேல அக்கறையா நடந்துக்கிறானா?” என்று கேட்டாள்.
ரிதுபர்ணா மனதிலும் யாஷ் குறித்து சலனம் வந்திருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அப்படியெல்லாம் இருக்காது, ஜஸ்ட் இது ஃப்ரண்ட்ஷிப் தான்,” என்று சொல்லிக் கொண்டாள். ஆனால் மனதில் யாஷை குறித்து ரிதன்யா சொன்னதை நினைத்து மகிழ்ந்துக் கொண்டாள்.
அப்படியிருக்க, இப்போது யாஷே அவளை காதலிப்பதாக சொல்லி ரிதன்யா கொண்டு வந்த கடிதத்தை பார்த்ததும் ரிதுபர்ணா எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அப்படியே வானத்தில் பறந்தது போல் இருந்தது. இருந்தாலும் அதை ரிதன்யாவிடம் அவள் காண்பித்துக் கொள்ளவில்லை. அந்த கடிதத்தை பார்த்து பயந்தது போல், “இப்போ என்ன செய்றது மீத்தி,” என்று அப்பாவியாக கேட்டாள்.
“என்ன செய்றதுன்னு கேட்டா எப்படி? ஆமாம்னு சொல்லிடு,” என்று ரிதன்யா பதில் கூற,
“ஹே இது சரி வருமா?” என்று ரிதுபர்ணா கேட்டாள்.
“சரி வரும்வரை காதலி, அப்புறம் சரி வரலன்னா விட்டிடு,” என்று ரிதன்யா சர்வ சாதாரணமாக கூறினாள்.
அவளைப் பொறுத்தவரை இது ஒரு பொழுதுபோக்கு, அந்த வயதுக்குரிய சலனம். அவ்வளவுதான், இன்னும் ஒருவாரத்தில் இங்கிருந்து சென்றுவிடுவோமே, பிறகு இதெல்லாம் தேவையா? என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. சர்வ சாதாரணமாக கூறினாள்.
ஆனால் ரிதுபர்னாவிற்கோ இது உணர்வின் அடிப்படையில் காணப்படும் ஒரு விஷயம், அவளுக்கு யாஷ் எப்போதும் உடனிருக்க வேண்டுமென்ற ரீதியில் சிந்திக்கும் ஒருவிஷயம். சரி வரவில்லையென்றால் விட்டுவிட வேண்டுமென்றெல்லாம் அவளால் சிந்தித்து கூட பார்க்க முடியாது. யாஷை அவளுக்கு பிடிக்காமல் போகவெல்லாம் வாய்ப்பேயில்லை. எப்போதுமே யாஷ் அவளுக்கு வேண்டுமென்ற நினைப்பு மட்டும் தான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அதை ரிதன்யாவிடம் பகிர்ந்துக் கொள்ள ரிதுபர்ணா விரும்பவில்லை. யாஷை குறித்த தன் மன உணர்வுகளை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். யாஷை நேருக்கு நேராக பார்த்து பேசும் தருணத்தை குறித்து கனவு காண ஆரம்பித்தாள்.
ஆனால் அவளுக்குமே ஒருவாரத்திற்கு பிறகு இந்த உறவை தொடர முடியுமா? அதற்கு சாத்தியம் உண்டா? என்றெல்லாம் நினைத்துப் பார்க்க தோன்றவில்லை. இருவரின் வயது அந்த அளவுக்கு முதிர்ச்சியை கொடுக்கவில்லை. யாஷ் தான் காதலிப்பதாக கடிதம் மூலம் சொல்லிவிட்டானே, அவனே அனைத்தும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அதற்கு மேல் அவளை எதையும் சிந்திக்கவிடவில்லை.
இங்கு யாஷோ ரித்விகாவிடம் கடிதம் போய் சேர்ந்திருக்குமா? அதற்கு அவளின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? அவளும் தன்னை போல் உணர்ந்திருப்பாளா? இல்லை அப்படி எதுவும் இல்லை என்று சொல்வாளா? ஒருவேளை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவாளா? இந்த மீத்தி ஒழுங்காக கொண்டு போய் கடிதத்தை கொடுத்திருப்பாளா? இப்படியெல்லாம் அவன் தவிப்போடு தோட்டத்தில் நடந்துக் கொண்டிருக்க,
சில நாட்களாகவே யாஷை சுஷாந்த் கவனித்துக் கொண்டுதானிருக்கிறான். யாஷ் அடிக்கடி ரிகாவை பார்ப்பதும், ரசிப்பதும் என்றிருப்பதை உணர்ந்திருந்தான். (ரிகா ரித்விகாவின் செல்லப் பெயர்.) யாஷை பற்றி தெரியுமென்பதால் தன் மாமன் மகளை அவன் இப்படி பார்ப்பதை சுஷாந்த் தவறாக நினைக்கவில்லை தான், ஆனால் இதை தொடரவிடாமல் செய்யும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதுவும் தன் நண்பனின் நல்லதுக்காக,
ஆனால் இப்போது ரித்விகாவிற்கு அவன் காதல் கடிதம் கொடுத்தது சுஷாந்திற்கு தெரியவில்லை. ஆனால் அவன் தவிப்போடு இருப்பதை பார்த்தவனுக்கு, அது ரித்விகா குறித்து இருக்குமென்பது புரிந்ததால், இப்போதே நண்பனிடம் பேசிவிட வேண்டுமென்று நினைத்து நண்பன் அருகில் சென்ற சுஷாந்த்,
“என்ன யாஷ் இப்போல்லாம் ஆளே வித்தியாசமா தெரியுற?” என்றுக் கேட்க,
“என்னடா வித்தியாசம், நான் எப்போதும் போல தானே இருக்கேன்.” என்று யாஷ் பதில் கூறினான்.
“ஹே என்கிட்ட மறைக்க பார்க்காத, ரிகா மேல உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு தானே?” என்று சுஷாந்த் கேட்கவும், யாஷ் முகம் லேசாக நாணத்தில் சிவக்க, சுஷாந்தை பார்த்து புன்னகைத்தான்.
“ஹே அப்படி ஏதாவது இருந்தா, அப்படியே அதை மறந்திடு, அவளுக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு,” என்று சுஷாந்த் சொன்னதும் யாஷ் அதிர்ச்சியாக பார்க்க,
“ஆமாம் யாஷ், மாமாவோட பிஸ்னஸ் பார்டனரோட பையனுக்கும் ரிகாவிற்கும் கல்யாணம் செய்ற ஐடியா இருக்கு, ரிகா காலேஜ் முடிக்கறதுக்குள்ள கூட கல்யாணம் பேசிடுவாங்க, இப்பவே அவங்க சேட் செய்து பேசிக்கிறாங்க தெரியுமா? அதனால அவ மேல இன்ட்ரஸ்ட் இருந்தா இப்பவே அதை மறந்திடு,
உன்கிட்ட இதை சொல்ல எனக்கு கஷ்டமா தான் இருக்கு, ஆனா நீ பாட்டுக்கு ஆசையை வளர்த்துக்கிட்டா அப்புறம் இன்னும் கஷ்டமா போயிடும், அதுவுமில்லாம ரிகா இங்க இருக்க போறது இன்னும் ஒரு வாரமா இருந்தாலும், இப்பவே அப்பப்ப நீ அவளை காதலோட பார்ப்பதை நான் கவனிச்சிட்டேன். அதேபோல வேற யாராச்சும் பார்த்தாங்கன்னு வச்சிக்க, பிரச்சனை பெருசா ஆகிடும்,” என்று சுஷாந்த் சொல்லிக் கொண்டிருக்க,
தான் கொடுத்த கடிதம் ரித்விகாவிடம் கிடைத்துவிட்டால் சுஷாந்த் சொன்னது போல் ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ? என்று பயந்த யாஷ், “நீ சொன்னது எனக்கு புரியுது சுஷாந்த், கண்டிப்பா என்னால ஏதும் பிரச்சனை வராது, ரிகாவிற்கு ஆள் இருக்கறது தெரியாம இப்படி, சாரி டா,” என்று சொல்ல,
“நீ புரிஞ்சிக்கிட்டா போதும் யாஷ், மத்தப்படி உன்னை எனக்கு தெரியாதா?” என்று சுஷாந்த் கூறினான்.
“ஒரு முக்கியமான வேலை இதோ வந்துட்றேன் சுஷாந்த்,” என்று அவனது பதிலை கூட கேட்காமல் யாஷ் வீட்டுக்குள் ஓட, சுஷாந்த் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
வீட்டிற்குள் வந்தவன் ரிதன்யாவை தேட, அவளும் அவனை அதிகம் சோதிக்காமல் வந்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகே சென்றவன், “மீத்தி, நான் உன்கிட்ட கொடுத்த லெட்டர் எங்க? ரித்துக்கிட்ட கொடுத்திட்டீயா?” என்று அவன் ரிதன்யாவை பார்த்து பதட்டத்தோடு கேட்க,
“ஹான் அது சோட்டீக்கிட்ட,” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை,
“ஓ சோட்டிக்கிட்ட கொடுத்தீயா? தேங்க் காட்,” என்று அவளிடம் சொல்லிவிட்டு, ‘அய்யோ சோட்டீ அதை ரித்துக்கிட்ட கொடுத்திருக்கக் கூடாதே,” என்று அவளைப் பார்க்க அவசரமாக மாடிக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறியவனை, ரிதன்யா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து ரிதுபர்ணாவையும் அவன் பார்வை அவசரமாக தேட, அவள் அப்போது தான் அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்து அவன் அருகில் செல்லவும், அவளும் அவனை கண்டு ஒரு பரவசத்தோடு பார்த்தப்படி நிற்க,
அதெல்லாம் உணராதவனாக அவள் அருகில் பதட்டத்தோடு வந்தவன், “மீத்தி உன்கிட்ட கொடுத்த லெட்டர் எங்க? அதை ரித்துக்கிட்ட கொடுத்திட்டீயா?” என்று கேட்டான்.
தன்னிடமே வந்து ரித்துவிடம் கொடுத்துவிட்டாயா? என்று கேட்பவனை அவள் புரியாத பார்வை பார்க்க, “என்ன அப்படி பார்க்கிற? மீத்தி உன்கிட்ட லெட்டர் கொடுத்தா தானே?” என்று கேட்க, அவளும் ஆமாமென்று குழப்பத்தோடு தலையாட்டினாள்.
“அதை ரித்துக்கிட்ட கொடுத்திட்டீயா?” என்று மீண்டும் பதட்டத்தோடு கேட்க, அப்போதும் அவள் புரியாத பார்வை பார்க்க,
இதுவரை தான் மனதிற்குள் சுருக்கி கூப்பிட்ட ரித்துவை சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவன், “உன்னோட ரித்விகா தீதிக்கிட்ட அந்த லெட்டரை கொடுத்திட்டீயா?” என்று திரும்ப கேட்டான்.
அப்போதும் அவள் புரியாமல் தான் விழித்தாள். ‘ரித்விகாவா யாரது?’ என்று அவன் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ள,
“ரித்விகா, அதான் உன்னோட ரிகா தீதிக்கிட்ட அந்த லெட்டரை கொடுக்கல தானே,” என்று அவன் கேட்க,
‘ஓ ரிகா தீதி தான் ரித்விகாவா? அவளைத்தான் யாஷ் ரித்துன்னு சொல்றாங்களா? அப்போ அந்த லெட்டர் ரிகா தீதிக்கு தானா?” என்ற விஷயத்தை புரிந்துக் கொண்டவளுக்கு யாரோ இதயத்தை குத்தி கிழிப்பது போல் இருந்தது.
“என்ன இன்னுமே முழிக்கிற, ரிகாக்கிட்ட அந்த லெட்டரை கொடுக்கல தானே,” அவன் கேட்க, இல்லையென்று தலையசைத்தாள்.
‘தேங்க் காட்,’ என்று மறுபடியும் சொல்லிக் கொண்டவன், “நல்லவேளை அந்த லெட்டரை நீ ரிகாக்கிட்ட கொடுக்கல, நீ எனக்கு பெரிய ஹெல்ப் செய்திருக்க தெரியுமா? அந்த லெட்டரை மட்டும் அவக்கிட்ட கொடுத்திருந்தா, அதுக்குப்பிறகு என்ன நடந்திருக்கும்னு கூட நினைச்சு பார்க்க முடியல,” அவன் பேசிக் கொண்டே போக,
அவன் ஏன் ரித்விகாவிற்காக எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுக்காததற்கு மகிழ்ச்சியடைகிறான் என்ற அளவுக்கெல்லாம் அவளால் சிந்திக்க முடியவில்லை. அது அவளுக்கு எழுதிய கடிதமில்லை என்பதிலேயே நின்று போனாள். அவள் நினைத்து மகிழ்ந்தது போல் யாஷ் அவளை காதலிக்கவில்லை என்ற அதிர்ச்சியிலிருந்து அவளால் வரவே முடியவில்லை. அவளது மனம் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
அவள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது என்னவென்று அறியாத யாஷோ, “சரி சோட்டீ, அந்த லெட்டர் எங்க?” என்றுக் கேட்க,
“அது, அது,” என்று அவள் திணர,
“சரி சரி, அதை ரிகாக்கிட்ட கொடுக்கல இல்ல, அதுவே போதும், அடுத்ததா இன்னொரு உதவியும் செய்திடு, அப்படியே அந்த லெட்டரை யாராவது பார்க்கிறதுக்கு முன்ன கிழிச்சு போட்டுடு, யாரும்னா உன்னையும் சேர்த்து தான், நீ சின்ன பொண்ணு, அதெல்லாம் நீ பார்க்கக் கூடாது. சரியா?” என்றவன்,
“நீ சொன்னா கேட்டுப்ப, நீ குட் கேர்ள்னு எனக்கு தெரியும்,” என்று சின்ன குழந்தையை கொஞ்சுவது போல், கொழு கொழுவென்றிருந்த அவளது இரண்டு கன்னங்களையும் பிடித்து இழுத்து கூறியவன்,
“நான் சொன்னதை மறக்காம செஞ்சுடு,” என்று சொல்லிவிட்டு செல்ல, இதுவரை தன் அழுகையை அடக்கி வைத்திருந்தவள், உடனே அறைக்கு ஓடிச் சென்று முடிந்தவரை அழுது தீர்த்தாள்.
சிறிது நேரத்தில் அறைக்கு வந்த ரிதன்யா அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து என்னவென்று கேட்க, ஒன்றுமில்லையென்று வெறுமனே தலையசைத்துவிட்டாள். யாஷ் அவளை தேடியதை பற்றி சொல்லி ரிதன்யா காரணம் கேட்டபோதும் அவள் அதற்கும் ஒன்றும் பதில் சொல்லவில்லை. தன் ஏமாற்றத்தை தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவெடுத்தவள் ரிதன்யா எவ்வளவு கேட்டும் ஒன்றுமே சொல்லவில்லை.
அடுத்து அவளுக்கு யாஷை நேருக்கு நேராக சந்திக்கவே ஒரு மாதிரியாக இருந்தது. மீண்டும் அவனுடன் சாதாரணமாக பேச அவளால் கண்டிப்பாக முடியாது. எப்படி அவனை விட்டு இந்த ஒருவாரம் ஒதுங்கியிருக்க போகிறோம் என்று அவள் யோசித்த நேரம், சூழ்நிலை அவளுக்கும் சாதகமானதோ என்னவோ, மறுநாள் தனது தனிப்பட்ட வேலையால் யாஷ் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை.
அதற்கு மறுநாளோ ரித்திமா, ரிதன்யாவின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாக தகவல் வரவும், ஒருவாரம் இருக்க வேண்டியவர்கள் அன்றே லக்னோவிற்கு கிளம்பும் சூழ்நிலை உருவானது.
ஏனோ அதுதான் ரிதுபர்ணாவிற்கும் நல்லதாக பட்டது. யாஷை திரும்ப நேருக்கு நேராக பார்க்கும் சக்தியில்லாதவளாக உடனே புறப்படுவதே நல்லது என்று தோன்றியதால் லக்னோவிற்கு கிளம்பிவிட்டாள்.
ஆனால் கிளம்புவதற்கு முன்னர் அவனோடு ஒரு வார்த்தையாவது பேசிவிட்டு சென்றிருந்தால் அவள் அவனுக்கு முக்கியமானவள் என்பதையாவது அவள் உணர்ந்திருப்பாளோ என்னவோ?
உண்மையிலேயே ரிதுபர்ணா ஊருக்கு செல்லும்போது அவளை பார்க்காதது யாஷின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ரித்விகாவை பார்த்த உடனே விரும்பினான் தான், ஆனால் அது புறத்தோற்றத்தின் மீது வந்த ஈர்ப்பு, அது சரி வருமா? என்று அதிகம் யோசித்தாலும், அந்த வயதுக்குரிய அசட்டு தைரியம் தான் ரித்விகாவிடம் தன் மனதை வெளிப்படுத்த நினைத்தது.
ஆனால் அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கப் போகிறது என்று தெரிந்ததுமே அவன் மனதில் தெளிவு உண்டாகவே ரித்விகாவை குறித்து அவன் மனதில் எந்த கவலையும் இல்லை.
ஆனால் ரிதுபர்ணாவிடம் ஏதோ இனம் புரியாத பாசம் உருவாகிட, அவளது பயந்த சுபாவம், அப்பாவித்தனம் அதையெல்லாம் நேரில் பார்த்தவனுக்கு அவள் இந்த உலகை எப்படி எதிர் கொள்வாளோ? என்ற கவலையெல்லாம் இருந்தது. அவள் ஊருக்கு போகும்போது அவளுக்கு நிறைய விஷயங்களை சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தான். ஆனால் அவளை பார்க்க கூட முடியாதது அவனுக்கு மிகவுமே வருத்தமாக இருந்தது. “நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் சோட்டீ,” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
ஒருவேளை அவளிடம் அதை நேராக சொல்லும் வாய்ப்பு உருவாகியிருந்தால், அந்த வார்த்தையிலாவது அவள் ஒருவகையில் ஆறுதல் அடைந்திருப்பாளோ என்னவோ, ஆனால் அதுவும் நடக்காமல் போய்விடவே அவளுக்கு எப்போதும் யாஷ் ஞாபகம் தான்,
சென்னையிலிருந்து நேராக அனைவரும் லக்னோவிற்குச் செல்ல, அங்கே தம்பியை பார்க்க வந்த ரிஷிவர்த் உடன் ரிதுபர்ணாவும் பூனாவிற்கு திரும்பிவிட்டாள். கலாவதியும் மகன் உடல்நிலை குறித்த கவலையில் ரிதுபர்ணா பூனாவிலேயே இருக்கட்டும் என்று அனுப்பி வைத்தார்.
அவளுக்கு இந்த சமயம் தனிமை தேவைப்படவே தன் வீட்டிற்கு வந்தவள், தன் அறைக்குள்ளேயே அடைந்துக் கிடந்தாள். அவளது சிந்தனை முழுவதும் யாஷிற்கு ஏன் தன்னை பிடிக்காமல் போய்விட்டது என்பதிலேயே இருந்தது.
‘ஒருவேளை தான் குண்டாக இருப்பதில் தான், அவனுக்கு தன்னை பிடிக்காமல் போய்விட்டதோ, ரிதன்யா அப்படி தானே கூறினாள். ரிகா தீதி எவ்வளவு அழகு, தான் அப்படியில்லையோ? என்று கேட்டுக் கொண்டாள்.
ஒருவேளை வெளிய எனக்கு எப்படி இருக்கணும்னு கூட தெரியல, அன்னைக்கு யாஷ் இல்லன்னா அந்த நாள் எப்படி இருந்திருக்கும்? இப்படி ஒன்னுமே தெரியாதவளா இருப்பது தான் யாஷிற்கு பிடிக்கவில்லையோ? என்றெல்லாம் நினைத்து மருகியவளுக்கு, நீ சின்ன பெண் என்று யாஷ் சொன்னது நினைவுக்கு வரவில்லை, அப்படி ரீதியில் அவன் பழகினான் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
‘கடைசி வரைக்கும் யாஷ் துணையா வருவாங்கன்னு நினைச்சேனே அப்படி இல்லையா? யாஷ் இல்லாம இனி என்னோட லைஃப் எப்படி இருக்கும்?” என்று அதைப்பற்றிய சிந்தனையிலேயே மன அழுத்தத்திற்கு ஆளான ரிதுபர்ணா, தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டாள்.
தேனன்பு தித்திக்கும்..