TTA 12

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 12
 
கலாவதி முதுமையின் காரணமாக சென்னையில் உள்ள கோவில்களுக்கு மட்டுமே செல்வார். அப்போது பேரப் பிள்ளைகளில் யார் உடன் வருகிறார்களோ அவர்களை அழைத்துச் செல்வார். ஆனால் சினிமா, மால், தீம் பார்க், பீச் என்று சுற்றுவதற்கு அவரால் செல்ல முடியாது. அப்படியே வருவதாக சொன்னாலும் அவரை வரவிடாமல் பேசி வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டு இளமை பட்டாளங்கள் மட்டுமே செல்வர். ஏனென்றால் அவர் வந்தால் சுதந்திரமாக அங்கு இருக்க முடியாதே,
 
அது புரிந்து சுஷாந்தின் அன்னையும் சிறியவர்களை மட்டுமே அனுப்பி வைப்பார். வீட்டில் பெரிய கார் உள்ளது. அதற்கு ஓட்டுனரும் இருக்கிறார். சுஷாந்தும் யாஷும் கல்லூரியில் படிப்பவர்கள். அதனால் அவர்கள் பொறுப்பிலேயே பெண்கள் நால்வரையும்  அனுப்பி வைப்பார். இருந்தாலும் ஆயிரம் பாதுகாப்பு அறிவுரைகள் சொல்லி அவர் அனுப்ப, “கவலைப்படாதீங்க மா, நாங்க பாதுகாப்பா போயிட்டு வருவோம்,” என்று யாஷ் தான் கூறுவான்.
 
“ம்ம் யாஷ், உனக்கு இந்த ஊரும் நல்லா தெரியும், தமிழ் பேசவும் தெரியும், அதான் தைரியமா இவங்களை உன்னோட அனுப்பறேன்.” என்று சுஷாந்தின் அன்னையும் இந்தியில் கூறுவார்.
 
கலாவதியோ இன்னும் கூடுதலாக ரிதுபர்ணாவை கவனமாக இருக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்.  அவர் கைப்பிடியிலேயே வளர்ந்ததாலோ என்னவோ, அவள் இயல்பிலேயே கொஞ்சம் பயந்த சுபாவமாக இருப்பாள். அதனால் அவளை தனியாக அனுப்ப கலாவதிக்கு பயமாக இருக்கும், அதனால் அவர் அவளை அனுப்ப தயங்குவதை பார்த்து மற்ற பேரப் பிள்ளைகளுக்கு எரிச்சலாக இருக்கும்,
 
ஏனெனில் அப்படி சென்ற இடத்தில் அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால், சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று மற்றவர்களை திட்டுவார். அதனால் ரிதுபர்ணா எதற்கு பாட்டி வராத இடத்திற்கு தங்களுடன் வருகிறாள்? என்று அவளிடம் ஏதாவது கோபமாகவே பேசுவார்கள். 
 
இதில் ரிதன்யா ஒரே வயதுடையவள் என்பதால் அவள் மட்டும் நன்றாக பேசுவாள். ஆனால் அதுவும் சில நேரத்தில் தான், மற்ற நேரத்தில் தன் தந்தையிடம் அடம்பிடித்து வாங்கிய அலைபேசியிலேயே நேரத்தை கழிப்பாள். அதனால் ரிதுபர்ணா எப்போதும் பாட்டியோடே ஒட்டிக் கொண்டிருப்பாள்.
 
அதையெல்லாம் கவனிக்கும் யாஷ், ரிதுபர்ணாவின் அமைதியையும் பயத்தையும் கண்டு அவளை வெறுப்பேற்றுவான். ஆனால் அவள் குண்டாக இருப்பதையெல்லாம் வைத்து பேசமாட்டான். அதேசமயம் மற்றவர்கள் அவளிடம் நடந்துக் கொள்வதைப் பார்த்து அக்கறையாகவும் இருப்பான்.
 
சினிமாவிற்குச் சென்றால், திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பே கையில் ஐஸ்கிரீம், பாப்கார்ன், கேக் என்று அனைத்தையும் கையில் வாங்கி வைத்திருப்பவளை பார்த்தால் சிரிப்பு தான் வரும், அடிக்கடி ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிடுவது தான் அவள் வழக்கம் ஆயிற்றே,
 
“ஹே என்ன இப்பவே எல்லாம் வாங்கிக்கிட்ட, அப்போ ப்ரேக்ல என்ன சாப்பிடுவ?” என்று அவன் விளையாட்டாக கேட்டால்,
 
“அப்போ சிக்கன் பப்ஸ், டோனட், கோக் அதெல்லாம் வாங்கிப்பேன்.” என்ற அவள் அப்பாவித்தனமாக பதில் கூறுவாள்.
 
‘இப்படி சாப்பிட்டா இப்படி தான் குண்டா இருப்பாங்க, இதெல்லாம் நல்லதில்லன்னு யாரும் சொல்லமாட்டாங்காளா?’ என்று அவளிடம் நேரடியாக சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று மனதில் மட்டுமே நினைத்துக் கொள்வான். 
 
“சரி எப்படி இதெல்லாம் எடுத்துட்டு உள்ளே போவ, பார் ஆல்ரெடி எல்லாம் உள்ள போயிட்டாங்க, வா மூவி ஆரம்பிப்பதுக்குள்ள போலாம்,” என்று அவளிடம் இருப்பதை வாங்கிக் கொண்டு அவளுடன் செல்பவன், அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு அவள் ஒன்றை சாப்பிட்டதும் இன்னொன்றை எடுத்து கையில் கொடுப்பான். அவனது செயலில் மகிழ்பவள், அவனுக்கும் தான் வாங்கி வந்ததில் கொஞ்சம் கொடுப்பாள்.
 
மாலை(mall) சுற்றி வரும்போது எல்லாம் வேகமாக நடந்தால் இவள் மட்டும் குண்டாக இருப்பதால் மெதுவாக நடந்தால் அவளுடன் மெதுவாக நடந்து செல்வான்.
 
தீம் பார்க்கிலோ சில ரைடுகளில் ஏற அவளுக்கு விருப்பம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருக்கும், மற்றவர்களோ வருகிறாயா? என்று அவளிடம் கேட்பதோடு சரி, வர விருப்பமிருந்தால் அழைத்துச் செல்வார்கள். இல்லையென்றால் விட்டுவிட்டு அவர்கள் மட்டும் செல்ல நினைப்பார்கள். ரிதன்யாவும் அந்த சமயம் அப்படித்தான் நடந்துக் கொள்வாள்.
 
ஆனால் யாஷோ, அவள் முகத்தில் இருக்கும் ஏக்கத்தை பார்த்து, “என்ன இந்த ரைட்ல ஏறணுமா?” என்று கேட்கவும், முதலில் ஆமாமென்று தலையசைப்பவள், பின் பயத்தில் வேண்டாமென்று தலையசைப்பாள்.
 
“இங்கப்பாரு பயம் வேண்டாம், அதான் நானிருக்கேன் இல்ல, கூட வரேன்.” என்று அவளுடன் பாதுகாப்பாக செல்வான்.
 
இதையெல்லாம் பார்த்து ரிதன்யாவோ யாஷ் ரிதுபர்ணாவை காதலிப்பதாக அவளிடம் கூறினாள்.
 
ரிதன்யா ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளியில் படிக்கிறாள். என்னத்தான் கட்டுப்பாடான பள்ளி என்றாலும், இன்றைய இளம் தலைமுறையினரிடம் நஞ்சாக பரவியிருக்கும் ஒன்று பள்ளிப் பருவத்து காதல், ஒரு மாணவன் மாணவிக்கு பார்த்து பார்த்து ஏதாவது செய்தாலே அது காதல் என பேசப்படுகிறது. அப்படி பள்ளியில் பல காதல்களை பார்த்த ரிதன்யா யாஷ் ரிதுபர்ணாவிடம் காட்டும் அன்பை காதல் என்றாள்.
 
ரிதுபர்ணாவோ காதலை வெறும் திரைப்படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறாள். அவள் படிப்பது பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. அதிலும் ஸ்வாராகிணி அவளை ஒரு அன்னையாக பொறுப்பாக கவனித்து கொள்ளாததால் அவளை பார்த்துக் கொள்ள வீட்டிலும், அதேபோல் பள்ளியில் கொண்டுவிடவும் அழைத்து வரவும் நம்பகமான ஆட்களை ரிஷிவர்த் நியமித்திருந்தார். 
 
அதனால் ரிதுபர்ணாவிற்கு வெளி உலக அனுபவம் என்பதே இல்லை. பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி தான் அவளது தினசரி வாழ்க்கை முறை. யாஷின் அக்கறையும் அன்பும் அவளுக்கு பிடிக்கும், அதனால் யாஷை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த பிடித்தமையை காதல் என்றெல்லாம் அவள் நினைத்ததில்லை. ஆனால் அவளை ரிதன்யா குழப்பிக் கொண்டிருந்தாள்.
 
ரித்விகா விஷயத்திலோ யாஷ் வெறும் காதல் பார்வை பார்ப்பதோடு சரி. அதுவும் அவளும் சரி மற்றவர்களும் சரி, யாரும் பார்க்காத போது தான் பார்ப்பான். மற்றப்படி அதற்கு மேல் அவனுக்கு தைரியம் வரவில்லை. சுஷாந்தின் குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என்பது தெரியும், அதே சமயம் அவர்கள் இருக்க போவதும் இந்த விடுமுறை காலம் மட்டும் தான், அதனால் ரித்விகாவின் மீது ஈர்ப்பு இருந்தாலும், அதற்கு மேல் அதை வளரவிடக் கூடாது என்ற உறுதியில் இருந்தான்.
 
அதனால் அவன் எப்போதும் ரிதுபர்ணாவிடம் மட்டுமே கொஞ்சம் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ரிதன்யாவிற்கு அப்படி தோன்றியது. அதைக் கேட்ட ரிதுபர்ணாவோ அவளை மிரட்சியாக பார்க்க,
 
“என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் பாய் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா? இப்போ பாய் ஃப்ரண்ட் இல்லன்னா தான் அதிசயமா பார்ப்பாங்க, நானும் டென்த் ஸ்டாண்டர்ட் போனதும் பாய் ஃப்ரண்ட் வச்சிப்பேன். இங்கப்பாரு உன்னோட ஸ்கூல் கோ எஜுகேஷன் இல்லல்ல, அதுவுமில்லாம உனக்கு பாய் ஃப்ரண்ட் கிடைப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம், ஃபேட்டா இருக்கவங்களை அவ்வளவா லைக் செய்ய மாட்டாங்க பசங்க, ஆனா யாஷ்க்கு அப்படியில்லாம உன்னை பிடிச்சிருக்கு போல, அதனால யாஷ் பெஸ்ட் சாய்ஸ்.” என்று காதல் என்பது அவசியம் போல அவள் பேசவும் ரிதுபர்ணாவும் கொஞ்சம் குழம்பித்தான் போனாள்.
 
இப்போதெல்லாம் ரிதன்யா சொன்னதே அடிக்கடி அவள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அந்தநேரம் அனைவரும் பாண்டிச்சேரியை சுற்றிப் பார்க்க கிளம்பினர். நடுவில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்த்தவர்கள், பின் முதலியார் குப்பம் படகு குழாமிற்கும் சென்று படகு பயணம் செய்தனர்.
 
அடுத்து வண்டி பாண்டிச்சேரியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போதுதான், வழியில் கடப்பாக்கம் ஊர் வரவும், “ஹே சுஷாந்த், இங்க உள்ள போனா ஆலம்பரா கோட்டை ஒன்னு இருக்குடா, கூட பீச்லயும் அதிகமா ஆள் நடமாட்டம் இருக்காது. போனமுறை நீ லக்னோ போயிருந்தப்ப நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இங்க தான் வந்தோம், கொஞ்ச நேரம் அங்கு போயிட்டு போகலாமா?” என்று யாஷ் கேட்கவும்,
 
“ஹே ஆளில்லாத பீச்னா சூப்பரா விளையாடலாம் சுஷாந்த், வா போகலாம்,” என்று ரித்திமா கூறினாள்.
 
சுஷாந்தும் சரி என்று ஒத்துக் கொள்ள, அங்கேயே தேவையான நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டவர்கள் அந்த கோட்டைக்குச் சென்றனர்.
 
காரில் சென்றதால் ஒரு கால்மணி நேரத்தில் அந்த கோட்டை இருக்குமிடத்திற்கு வந்தனர். யாஷிற்கு தான் அந்த இடம் தெரியுமாதலால் முதலில் காரை விட்டு இறங்கி அவன் முன்னே நடக்க, பின்னால் சுஷாந்தும் இறங்கிச் சென்றான். நேற்று ஷட்டில் காக் விளையாடும் போது காலில் இடித்துக் கொண்டதில் காயம் ஏற்படவே ரிதன்யாவை கலாவதி போக வேண்டாமென்று சொல்லிவிட்டதால் அவள் வீட்டிலேயே இருந்துக் கொள்ள, 
 
இப்போதைய சங்கடமான சூழ்நிலையை யாரிடம் சொல்வது என்று யோசித்த ரிதுபர்ணா, காரை விட்டு இறங்க இருந்த ரித்விகா, ரித்திமாவை அழைத்து, “தீதி இங்கப் பாருங்க,” என்று பின்பக்கம் திரும்பி தன் ஆடையை காட்டினாள்.
 
பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் நிகழ்வு தான் இப்போது அவளுக்கு திடீரென வந்துவிட்டது. குண்டாக இருப்பதால் ஒழுங்கற்ற முறையில் வரும் மாதவிடாய் இப்போது வருமென்று  தெரியாமல் அவள் பாட்டுக்கு கிளம்பி வந்துவிட்டாள். அதுவும் முதல் இரண்டு நாட்களுக்கு அதிக உதிரப்போக்கு இருக்குமென்பதால் வெளியில் ஆடையெல்லாம் கறையாகிவிட்டது.
 
அதில் எரிச்சல்பட்டவர்களாக, “இப்படி ஆகும்னு உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்க வேண்டாமா? நீயும் மீத்தியோட வீட்ல இருக்க வேண்டியது தானே, (மீத்தி ரிதன்யாவின் செல்லப் பெயர்) அதைவிட்டு இப்படி வந்து எங்களுக்கு தொல்லையா இருக்க? அட்லீஸ்ட் மெயின் ரோட்லயாவது சொல்லியிருக்கலாம்,” என்று இருவரும் அவளை திட்டியவர்கள்.
 
“இப்போ இங்க ஒன்னும் செய்ய முடியாது. மெயின் ரோட் போனதும் நேப்கின் வாங்கிட்டு ஏதாவது செய்துக்கலாம், இப்போதைக்கு நீ கார்ல உட்காரு. எங்கக் கூட வரவேண்டாம்,” என்று சொல்லிவிட்டு இருவரும் இறங்கினர்.
 
அவர்கள் அப்படி சொல்லவும் ரிதுபர்ணாவிற்கு தன்னை மீறி அழுகை வந்தது. எவ்வளவு நேரம் இப்படி தனியாக அமர்வதாம்? அருகில் குடியிருப்புகள் இருந்தாலும், அது மதிய நேரமென்பதால் ஆள் நடமாட்டம் என்பது அங்கு இல்லை. அவர்களோடு வந்த ஓட்டுனருக்கோ இந்தி தெரியாது. ஒன்றிரண்டு இந்தி வார்த்தைகளை தெரிந்து வைத்திருந்தார். அதேபோல் சுஷாந்த் வீட்டிலும் கொஞ் தமிழ் பேச தெரிந்திருந்ததால் அவர் அங்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
 
ஆனால் வந்த விருந்தினர்களுக்கு தமிழ் பேச தெரியாது என்பதால், அவர்களோடு அவர் பேசமாட்டார். ஆனால் இப்போது சகோதரிகள் ஏதோ இந்தியில் பேசிவிட்டு ரிதுபர்ணாவை விட்டுவிட்டு சென்றது மட்டுமில்லாமல் அவள் அழுதுக் கொண்டிருப்பதை பார்த்தவர், என்னவென்று தனக்கு தெரிந்த இந்தியில் கேட்க, இவரிடம் எப்படி பதில் கூறுவது என்று நினைத்த ரிதுபர்ணா, அவரிடம் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள். 
 
முன்னே சென்ற யாஷ் திரும்பி பார்க்க, ரித்விகாவும் ரித்திமாவும் மட்டும் வருவதை பார்த்து நின்றவன், அவர்கள் இருவரும் அருகில் வரவும், “ஆமாம் சோட்டீ எங்க?” என்று கேட்கவும்,
 
“அவ கார்ல இருக்கா,” என்று ரித்விகா கூறினாள்.
 
“ஏன் என்னாச்சு?” என்று அவன் திருப்பிக் கேட்க,
 
“அவளால வர முடியாது.” என்று மட்டும் கூறினாள்.
 
“ஏன் வர முடியாது. அவ எப்படி அங்க தனியா இருப்பா? எதுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்தீங்க?” என்று யாஷ் விடாமல் கேட்கவும்,
 
“அதான் அவளால வர முடியாதுன்னு சொல்றோம்ல, அதோட விட மாட்டீயா? சும்மா கேள்விக் கேட்டுட்டே இருக்க, அவ எங்க தனியா இருக்கா, அதான் டிரைவர் இருக்காரில்ல, அப்புறம் என்ன?” என்று ரித்திமா திமிராக பதில் கூறினாள்.
 
என்ன இருந்தாலும் இது தெரியாத இடம், இந்தக் காலக்கட்டத்தில் யாரையும் நம்ப முடியாது, ஒருவேளை டிரைவரே சோட்டீயிடம் தவறாக நடந்துக் கொள்ளலாம், இல்லை அவரை ஏதாவது செய்துவிட்டு யாராவது சோட்டீயிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சிக்கலாம், அப்படியிருக்க அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் இவ்வளவு சாதாரணமாக கூறுகிறார்களே?” என்று அவர்கள் மீது கோபம் கொண்டவன், அவர்களிடம் ஏதும் பேசாமல் சோட்டீயை காணச் சென்றான்.
 
தான் இவர்களோடு வந்திருக்கவே கூடாது. வீட்டிலியே இருந்திருக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த ரிதுபர்ணாவிற்கு இப்போதே பாட்டியிடம் செல்ல வேண்டுமென்று தோன்றியது. தனியாக இருக்கவே பயத்தில் அழுதுக் கொண்டே இருந்தாள்.
 
அவள் அழுதுக் கொண்டிருப்பது ஜன்னல் வழியே தெரியவும், அங்கு வந்த யாஷ்,  “என்னாச்சு சோட்டீ? ஏன் அழுதுட்டு உட்கார்ந்திருக்க? ஏன் எங்களோட வராம காரில் இருக்க?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, 
 
அவனிடம் எப்படி சொல்வது? என்பது தெரியாமல் ரிதுபர்ணா திருதிருவென விழித்தாள்.
 
“உன்னை தானே கேட்கிறேன். எதுக்கு இப்படி அழுதுட்டு உட்கார்ந்திருக்க? சொன்னா தானே தெரியும், என்னாச்சு?” என்று திரும்பவும் கேட்டான். அப்போதும் அவள் அமைதியாக அமர்ந்திருக்க,
 
“இங்கப்பாரு எவ்வளவு நேரம் இங்க தனியா உட்கார்ந்திருப்ப? இது அவ்வளவு பாதுகாப்பான இடம் இல்ல, ஒழுங்கா எங்களோட வா.” என்று அவன் அழைக்கவும், 
 
ஏற்கனவே பயந்திருந்தவள், அவனது பேச்சில் இன்னும் பயந்து போக, இன்னும் கூடுதலாக கண்களில் கண்ணீர் வந்தது.
 
“அய்யோ என்னாச்சு சோட்டீ, இப்படி அழுவாம விஷயத்தை சொன்னா தானே தெரியும்,” என்று அவன் கொஞ்சம் அதட்டலோடு கேட்டான்.
 
இதுவரை அவளிடம் அவன் இந்தியில் கேட்டுக் கொண்டிருந்ததால், அதை டிரைவர் வேடிக்கைப் பார்த்தப்படி இருந்தார். ‘இவனிடம் சொல்வதை தவிர வேறு வழியில்லை’ என்று நினைத்த ரிதுபர்ணா, ஓட்டுனரை ஒருமுறை பார்க்க,
 
அவர் முன் சொல்ல தயங்குகிறாள் என்பதை உணர்ந்தவன், “அண்ணா கொஞ்சம் வெளிய இருக்கீங்களா?” என்று ஓட்டுனரிடம் சொல்ல, அவரும் தலையாட்டிவிட்டு வெளியே இறங்கினார்.
 
அவர் இறங்கியதும், “என்ன சோட்டீ?” என்று அவன் திரும்ப கேட்க, அவனிடம் சொல்ல தயங்கியவள் பின்பக்கம் திரும்பி தன் ஆடையை காட்ட, முதலில் புரியாமல் என்ன இது கறை? என்று குழம்பியவனுக்கு பிறகு ஏதோ புரிந்தது போல் இருந்தது.
 
இப்படி ஒரு சூழ்நிலையில் பெண்களாக இருந்தும் தனியாக விட்டுவிட்டு சென்றிருக்கிறார்களே என்று ரித்விகா, ரித்திமா மீது அவனுக்கு கோபம் வந்தது. அவனுக்கு இப்போது என்ன செய்வதென்று புரியவில்லை. ஒருவேளை கடைகள் இருக்கும் சாலையில் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை, இங்கு எப்படி? என்று யோசித்தவனுக்கு அருகில் மீனவர்களின் குடியிருப்பு கட்டிடங்கள் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது.
 
பாண்டிச்சேரியில் சுஷாந்தின் தந்தைக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் கடற்கரை ரெசார்ட் இருப்பதால் அங்கு விளையாடிவிட்டு உடை மாற்றிக் கொண்டு வீடு திரும்பலாம் என்ற திட்டத்தோடு தான் அனைவரும் புறப்பட்டனர். அதனால் மாற்றுடையை உடன் கொண்டு வந்திருப்பது ஞாபகத்திற்கு வரவும்,
 
“நீ கொண்டு வந்த ட்ரஸ்ஸை எடுத்துக்கிட்டு என்னோட வா,” என்று யாஷ் அழைக்க, 
 
எப்படி இந்த கறையோடு வெளியில் வருவது? என்று ரிதுபர்ணா தயங்க, முதலில் அவள் அப்படியே நிற்பதை பார்த்து, “என்ன?” என்றவனுக்கு, பிறகு தான் அவளது நிலை புரியவும், தன் மேல் சட்டையை கழட்டி அவள் கையில் கொடுத்தவன், “இதை இடுப்பில் கட்டிக்கோ,” என்று கூறினான்.
 
அவளும் அப்படியே செய்தவள், தான் கொண்டு வந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு அவனுடன் சென்றாள்.
 
அவளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு பகுதிக்குச் சென்றவன், யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்த நேரம், அங்கே ஒரு பெண்மணி வீட்டிற்கு வெளியே துணி காய வைத்துக் கொண்டிருக்க, அவர் அருகில் ரித்துவை அழைத்துக் கொண்டு சென்றான்.
 
இருவர் தன்னை நோக்கி வருவதை பார்த்து அந்த பெண்மணி இருவரையும் கேள்வியோடு நோக்க, “சொல்லு” என்று யாஷ் ரித்துவிடம் இந்தியில் கூற, அவளுக்கு தான் தமிழ் தெரியாதே, அதனால் திருதிருவென விழித்தாள்.
 
பிறகு தான் அவளுக்கு தமிழ் தெரியாது என்பதை புரிந்துக் கொண்டவன், அந்த பெண்மணியை பார்த்து, “ஆன்ட்டி ஒரு சின்ன ஹெல்ப்,” என்றவன், ரித்துவை பார்த்து இடுப்பில் இருக்கும் ஷர்ட்டை கழட்டிவிட்டு பின்பக்கம் காண்பிக்க சொல்லி இந்தியில் கூறினான்.
 
அவளும் அவ்வாறு செய்யவும், அந்த பெண்மணி அவளது நிலையை புரிந்துக் கொண்டவர், அவளை தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். 
 
இன்னுமே நிற்காமல் அவள் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டிருக்க, “அழாதே” என்று ஜாடையில் கூறியவர், தன் மகள் உபயோகிக்கும் நேப்கினை எடுத்துக் கொடுத்து அவர் வீட்டு குளியலறையை காட்டினார். அதனுடன் கழிவறையும் இருக்க, தன்னை சுத்தப்படுத்திக் கொண்ட ரித்து, தான் கொண்டு வந்த மாற்றுடையை அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள்.
 
“எல்லாம் முடிந்ததா?” என்று ஜாடையில் கேட்ட பெண்மணியிடம், முடிந்ததாக தலையசைத்து ரித்து நன்றி கூறினாள்.
 
“அந்த பையன் யாரு உன்னோட அண்ணனா?” என்று ஜாடைக் காட்டியப்படியே கேட்க,
 
இங்கு வந்த சில நாட்களில் யாஷும் சுஷாந்தும் ஓட்டுனர் மற்றும் வெளியில் பார்க்கும் சிலரை அண்ணன் என்று விளிப்பதை கேட்டு, அது சகோதரனை கூப்பிடும் வார்த்தை என்று தெரிந்துக் கொண்டவளோ, இல்லை என்பது போல் வேகமாக தலையசைத்தாள்.
 
“அப்போ ஃப்ரண்டா?” என்று அவர் கேட்க, ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
 
“ரொம்ப நல்ல பையன், பொறுப்பானவனா இருக்கான்,” என்று அவர் சொல்ல, அவர் சொல்வது புரியவில்லையென்றாலும் யாஷை பற்றி புகழ்ந்து சொல்கிறார் என்பதை புரிந்து சிரித்தாள்.
 
அவள் கையிலிருந்த அழுக்கு ஆடையை அலசி தருவதாக சொன்னதும் அவரை நன்றியோடு பார்த்தப்படி யாஷின் சட்டையோடு வெளியே வந்தாள்.
 
மேல் சட்டையின்றி உள்ளே போட்டிருந்த கைப்பனியனோடு யாஷ் வெளியில் நிற்க, அவள் வந்ததும் அவளோடு வந்த பெண்மணியை பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி,” என்று கூற,
 
“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்ல்லாம், நானும் ஒரு பொண்ணு, எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா, இதெல்லாம் புரிஞ்சிக்க முடியாதா? அந்த ட்ரஸ்ஸை அலசிப் போட்டு வைக்கிறேன். போகும் போது வாங்கிட்டு போங்க,” என்று அந்த பெண்மணி கூறினார்.
 
“அய்யோ எதுக்கு ஆன்ட்டி உங்களுக்கு கஷ்டம்,” என்று யாஷ் கேட்க,
 
“இதுல எனக்கு ஒரு கஷ்டமுமில்ல, அதை பெருசா யோசிக்காம போங்க, அப்புறம் சட்டையை வாங்கி போட்டுக்கப்பா,” என்று அவர் சொல்லவும், இருவரும் பேசுவதை புரிந்துக் கொள்ள முடியாமல் திருதிருவென பார்த்துக் கொண்டிருந்த ரிதுபர்ணாவிடமிருந்த சட்டையை வாங்கி போட்டுக் கொண்டான்.
 
பின் இருவரும் அந்த பெண்மணியிடம் விடைப்பெற்றுக் கொண்டு கோட்டையை நோக்கிச் செல்ல, அவனிடம் என்ன பேசுவதென்று புரியாமல், “ரொம்ப தேங்க்ஸ் யாஷ்,” என்று மட்டும் கூற, அவனும் ஒரு புன்னகையை மட்டும் அவளுக்கு பதிலளித்தான்.
 
கோட்டையின் உள்ளே மற்ற மூவரும் சுற்றிப் பார்த்தனர். இடிந்து இருந்த அந்த கோட்டை அங்கு வசிக்கும் மனிதர்களின் நடமாட்டத்தால் சுத்தம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் திரைப்பட படப்பிடிப்பு அடிக்கடி நடப்பதால் அந்த இடம் பிரபலம் ஆகியிருக்க, “என்ன இந்த இடம் இப்படி இருக்கு சுஷாந்த், வா சீக்கிரம் பீச்க்கு போகலாம்,” என்று ரித்திமா அவசரப்படுத்தினாள்.
 
“இரு யாஷும் சோட்டீயும் வரட்டும்,” என்று சுஷாந்த் சொல்லிக் கொண்டிருக்க, அப்போது இருவரும் வந்தனர்.
 
ரிதுபர்ணா வேறு உடை மாற்றியிருந்ததை பார்த்த இருவரும் அதோடு விட்டுவிட்டனர். யாஷ் இங்கிருந்து போன போதே சுஷாந்த் இருவரிடமும் சோட்டீக்கு என்ன? என்று கேட்டதற்கு, “அதெல்லாம் லேடீஸ் ப்ராப்ளம், உங்கக்கிட்ட சொல்ல முடியாது.” என்று ரித்விகா பதில் கூறினாள். 
 
அதனால் சுஷாந்த் இப்போது அதைப்பத்தி மீண்டும்  பேச வேண்டாமென்று அமைதியாக இருந்தான். அவனது அமைதியும் யாஷிற்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் பெண்கள் இருவரும் சோட்டீ எப்படி சமாளித்தாள்? என கேட்காமல், அதைப்பற்றிய கவலையில்லாமல் இருந்தது தான் யாஷ்க்கு எரிச்சலாக இருந்தது. கொஞ்சம் கூட பாசமில்லாத பெண்களாக இருக்கிறார்களே என்று நினைத்தான்.
“பீச்க்கு போகலாமா யாஷ்,” என்று சுஷாந்த் கேட்க,
“இருடா, கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்,” என்றவன், கோட்டையின் படிக்கட்டுகள் மீது ஏறினான். கைப்பிடிச் சுவரில்லாத அந்த படிக்கட்டுகளில் யாஷ் ஏறியதை ரிதுபர்ணா வியப்பாக பார்த்தாள். இதற்கும் அது ஒன்று அத்தனை உயரம் கூட இல்லை, இடிந்த கோட்டை தானே, ஆனாலும் அவள் பார்க்க, அவள் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்,
 
“நீயும் ஏறி வா,” என்று அவளை அழைக்க, அவள் பயத்தில் மறுப்பாக தலையசைக்கவும்,
 
“என்னோட கைப்பிடிச்சுக்கோ,” என்று சொல்லி அவளை ஏற வைக்க, அவனோடு ஏறி நின்றவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 
நேற்று வரை ரிதன்யா சொன்ன விஷயத்தை நினைத்து குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு இன்று யாஷின் அருகாமை ஒரு புது உணர்வை கொடுத்தது.
 
பாட்டிக்கு பிறகு தனக்கு யார் இருக்கிறார் என்று இப்போதெல்லாம் அவள் அடிக்கடி நினைத்து பார்ப்பதுண்டு. அன்னை, தந்தை இருவரும் இருந்தும் இல்லாதது போல் தான், கலாவதி அவளோடு இருந்த வரை ஸ்வராகிணியின் ஒதுக்கம் அவளுக்கு பெரிதாக தெரிந்ததில்லை. ஆனால் இப்போதோ அது அவளை பெரிதாக பாதித்தது. ஆனால் அவள் அதைப்பற்றி வெளிப்படையாக கேட்டதில்லை. மனதில் தான் அன்னை ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டுக் கொள்வாள்.
 
ரிஷிவர்த் சில சமயம் பாசத்தை பொழிவார், சில சமயம் கண்டுக் கொள்ளவே மாட்டார். அதற்கும் அவளுக்கு காரணம் தெரிந்ததில்லை. பள்ளியிலும் நெருக்கமான நட்பு அவளுக்கு இருந்ததில்லை. அதனால் இப்போதெல்லாம் அவள் மனதில் ஒரு வெறுமை வந்து போக, இப்போது யாஷின் அன்பும் அக்கறையும் அவளுக்கு எப்போதும் வேண்டுமென்று  மனம் எதிர்பார்த்தது.
 
அவளுக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை, ரித்தஷோ இல்லை அத்தை மகன்களாக இருந்தாலும் நிஷாந்தோ இல்லை சுஷாந்தோ சகோதர பாசத்தை காட்டியிருந்தால் ஒருவேளை யாஷையும் அப்படி நினைத்துப் பார்த்திருப்பாளோ என்னவோ, ஆனால் பார்க்கும் போது சாதாரண நண்பர்கள் போல் தான் அவர்களது பழக்கம் இருக்கும், அதனால் அவளுக்கு அந்த உறவு பழக்கமில்லாத உறவு, இதில் ரிதன்யா வேறு ஏதேதோ உளரவும், அன்னை தந்தையாக ரிஷியும் ஸ்வராகிணியும் அவளுக்கு பாசத்தை காட்டவில்லையென்றாலும், அன்னைக்கு ஒன்றென்றால் பார்த்து பார்த்து செய்யும் தந்தையை பார்த்து வளர்ந்தவள் என்பதால், யாஷும் அதே போல் தனக்காக இருக்க வேண்டுமென்று அவள் மனம் எதிர்பார்த்தது.
 
“ஹே என்ன அப்படி யோசனை?” யாஷின் கேள்வியில் தான் அவள் நிகழ்விற்கு வந்தாள். அனைவரும் கடற்கரைக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவள் மட்டும் மணல் பரப்பிலேயே அமர்ந்துவிட, அவள் தனியாக இருக்கவே யாஷ் அவள் அருகில் வந்தான். ஆனால் அவன் வந்ததை கூட கவனிக்காமல் அவள் ஏதோ யோசனையாக இருக்கவும் தான் யாஷ் அப்படி கேட்டான். 
 
அவள் அவனது முகத்தை பார்க்கவும், “என்ன நீ தண்ணியில் விளையாடலையா? இங்கேயே உட்கார்ந்துட்ட?” என்று யாஷ் கேட்க,
 
“இந்த டைம்ல தண்ணியில் விளையாட முடியாது.” என்று அவள் பதில் கூறினாள்.
 
அவனுக்கு அவளது நிலை புரிந்ததால், “சரி சும்மா கால் நனைக்கலாமில்ல, வா என்னோட” என்று அழைக்க,
 
“அய்யோ வேண்டாம் யாஷ், எனக்கு தண்ணின்னா பயம்” என்று சொல்லி கண்ணில் மிரட்சியை காட்டினாள்.
 
சிறு வயதில் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சென்ற போது உடன் இருந்த மாணவி கடலலையில் அடித்து செல்லப் பார்த்தாள். எப்படியோ அவளை காப்பாற்றி விட்டார்கள். அதை பார்த்ததிலிருந்து ரித்துவிற்கும் கடல் என்றால் பயம், அந்த பயத்தில் வர மாட்டேன் என்று சொல்ல,
“முதலில் கடல்க்கிட்ட போக பயம், அதை சொல்லாம சமாளிக்க பார்க்கிறீயா?” என்று கேலி செய்தவன்,
 
“நான் தான் இருக்கேன் இல்ல, உன்னை கெட்டியா பிடிச்சிக்கிறேன். கொஞ்ச நேரம் வந்து நில்லு.” என்று அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, இப்படியே அவன் கைக்கோர்த்தப்படி வாழ்க்கை நகர வேண்டுமென்ற ஆசையோடு அவனுடன் சேர்ந்து கடலில் கால் நனைத்தாள்.
 
தேனன்பு தித்திக்கும்..