KPEM FINAL

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மௌனம் 23

இன்று சஞ்சய், நீரஜாவின் நிச்சயதார்த்தம், அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிந்திருக்க, இன்று நிச்சயதார்த்தம் என்று, அன்றே எல்லோரும் சேர்ந்து முடிவு செய்திருந்தனர்.

அன்று நிகேதன் ஹோட்டல்க்கு வந்ததும் அனைவரும் கிளம்பி வீட்டுக்கு சென்றனர், வித்யாவின் நிச்சயதார்த்தம் முடிந்து, உறவினர்கள் சாப்பிடும் நேரம், இன்னும் நீரஜாவை கூப்பிடச் சென்றவர்கள் வரவில்லையே என்ற கவலையில் அலைபேசியில் தொடர்புக் கொண்ட அம்பிகாவிடம், ஜானவி விஷயத்தைக் கூற, அம்பிகா கிளம்பி உடனே வீட்டுக்கு வந்திருந்தார். ஜானவியின் பெற்றோரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்திருந்தனர். அனைவரும் நீரஜாவிற்கு என்ன ஆனதோ என்ற தவிப்புடன் இருக்க, நிகேதன் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து நீரஜா பாதுகாப்பாக இருப்பதை சொன்னான்.

நீரஜாவை வீட்டுக்கு அழைத்து வந்ததும், அம்பிகா, சந்திரா இருவரும் அவளை சூழ்ந்துக் கொண்டனர்.  “ஃப்ரண்ட்னு கூட்டிட்டு வந்தா, பாவிப் பையன் என்ன காரியம் செஞ்சுருக்கான்…” என்று சந்திரா புலம்பி தள்ளினார்.

“என்னடா நிரு… நீ ஏன் வீட்ல தனியா இருந்த, நீயும் நிக்கி கூடவே வீட்டுக்கு வந்திருந்தா இதெல்லாம் நடந்துருக்காது… சரி இப்படியெல்லாம் நடக்கணும்னு இருக்கு… என்ன பண்றது..” என்ற அம்பிகா,

“எல்லாம் இவங்க ரெண்டுப்பேரால வந்தது.. சர்ப்ரைஸ் கொடுக்கிறோம்னு, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்காங்க….” என்று சஞ்சய், நிகேதனை பார்த்துக் கொண்டே கூறினார்.

“விடுங்கம்மா… எப்படியோ ஏதாச்சும் செய்யணும்னு அந்த வெற்றி நினைச்சுருக்கான்… எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்குதான்னு பார்த்துட்டு இருப்பான்… இப்போ எந்த ஆபத்தும் இல்லாம முடிஞ்சதுக்கு நாம சந்தோஷம் தான் படணும்…” என்று ஜானவி கூறினாள். அதுவும் சரிதான் என்பது போல, அம்பிகாவும் சந்திராவும் தலையாட்டினார்கள்.

“நிரு…. உன்னை பார்த்த கொஞ்ச நாள்லயே நீதான் எனக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டேன்…. சஞ்சயோட கல்யாணத்துல எப்பவும் சஞ்சயோட விருப்பம் தான் ரொம்ப முக்கியம்… அவனை எதுக்காகவும் நாம கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு சஞ்சயோட அப்பா சொல்வார்… அதான் சஞ்சய்க்கிட்ட கேட்டு, அவன் இதைப்பத்தி பேச வேண்டாம்னு சொன்னதும் விட்டுட்டேன்….

ஆனா நீங்க ரெண்டுப்பேரும் மனசுக்குள்ள இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு, இப்படி வெளியில சொல்லிக்காம இருந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா… அப்பவே, நானே உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருப்பேன்…. சரி இப்பவும் ஒன்னு பிரச்சினை இல்லை…. அடுத்து வர நல்ல நாள்ல, ரெண்டுப்பேருக்கும் நிச்சயதார்த்தம்… உடனே ஒரு மாசத்துலயே கல்யாணம்…” என்றார் அம்பிகா, மற்றவர்களும் அதுதான் சரி என்று ஆமோதித்தார்கள்.

ஆனால் இப்போது தான் காதலை வெளிப்படுத்திக் கொண்ட சஞ்சய், நீரஜாவிற்கு விரைவில் திருமணம் செய்துக் கொள்ளாமல், கொஞ்ச நாட்கள் காதல் பறவைகளாய் திரிய ஆசை, இருந்தும் ஏற்கனவே செய்து வைத்த சொதப்பல்களையெல்லாம் நினைத்துப் பார்த்த போது, இனியும் அப்படி எதுவும் சொதப்பல்கள் வராமல் இருக்க, இந்த முடிவுக்கு தலையாட்டினார்கள்.

அழகு நிலையப் பெண்களின் உதவியோடு,  நீரஜா அழகாக மிளிர்ந்தாள்.  நிகேதன் வீட்டிலேயே எளிமையாக நிச்சயதார்த்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜானவியின் பெற்றோர்களும், அவர்கள் சொன்னதற்காக கடமைக்காக நிகேதன் அழைத்ததால், அவனின் சிறிய தந்தைகள் இருவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர். சஞ்சய் வீட்டில், அவன் மாமா குடும்பத்தோடு வந்திருந்தார். சஞ்சயின் தந்தை வழி உறவினர்கள் சிலரையும் அம்பிகா அழைத்திருந்தார்.  சஞ்சய், நிகேதனின் அலுவலகத்தை சேர்ந்தவர்களும் இந்த விஷேஷத்தில் கலந்துக் கொண்டனர்.

மந்த்ரா வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாது என்ற காரணத்தால் நிச்சயதார்த்ததிற்கு வர முடியாது, திருமணத்துற்கு கண்டிப்பாக வருவதாகவும் முன்பே சொல்லியிருந்தாள். அதனால் இன்று விஷேசத்தில் அவளால் கலந்துக் கொள்ள முடியவில்லை,   அதேபோல் வைஷ்ணவியும் இந்த விஷேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை. அவள் இன்னும் கோபமாக இருப்பதாகவும், அவள் வரவில்லையென்றால் பரவாயில்லை விடு என்று ஜானவி நீரஜாவிற்கு சமாதானம் கூறினாள்.

வைஷ்ணவியும், மந்த்ராவையும் தவிர, மற்ற முக்கியமானவர்கள் எல்லாம் வந்திருக்க, நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பித்தது. பெரியவர்கள் ஒன்றுக் கூடி உட்கார்ந்திருக்க, அவர்கள் முன்னிலையில் சஞ்சய், நீரஜாவின் திருமணப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. பின் அந்த நிகழ்வுகள் முடிந்ததும், இருவரையும் மோதிரம் மாற்ற சொல்ல, ஏற்கனவே காதலை சொல்லியிருந்தாலும், முன்பே சஞ்சய், நிகேதன் ஏற்பாடு செய்திருந்த சர்ஃப்ரைஸ் ப்ளான் படி, சஞ்சய் நீரஜாவின் முன் மண்டியிட்டு அவளிடம் காதலைச் சொல்லி, கையில் மோதிரத்தை மாட்டி, அவள் கையில் மெலிதாக முத்தமிட்டான். ஜானவி, நிகேதன் இருவரும் ஓ என்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். நீரஜாவும் வெட்கத்தோடு சஞ்சய்க்கு மோதிரம் அணிவித்து தன் காதலை அவனிடம் தெரிவித்தாள்.

இந்த ஒரு மாத காலத்தில் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் சஞ்சய், நீரஜா இருவரும் காதல் பறவைகளாய் சுற்றி வந்தனர்.  இந்த மூன்று வருட கணக்கையும் சேர்த்து ஒரே மாதத்தில் காதலித்து தீர்த்து கொள்ள நினைத்தனர்.  இருந்தும் இந்த ஒரு மாதம் இருவருக்கும் போதவில்லை, திருமண வேலைகள், ஷாப்பிங், அப்படி இப்படி என்று நாட்கள் ஓடி, திருமண நாளும் வந்தது.

அந்த பெரிய திருமண மண்டபத்தில் கூட்டத்திற்கு குறைவில்லை, சஞ்சய், நீரஜாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்று அனைவருமே வந்திருந்தனர்.  அந்த மாலை நேரம் மணமக்கள் ஊர்வலமாக கோவிலில் இருந்து அழைக்கப்பட்டு, அந்த மண்டபத்துற்கு வந்திருந்தனர். வட இந்தியர்கள் முறையில் அந்த மண்டபத்தை அலங்கரித்து, ரிஷப்ஷன் நடத்த முடிவு செய்திருந்தனர். அதற்கேற்றார் போல், மயில் பச்சை மற்றும் மயில் நீலம் கலந்த லெஹங்காவில் நீரஜாவும், அதே மயில் நீல நிற ஷெர்வானியில் சஞ்சயும் மணமேடையில் ஓவியமாய் நின்றிருந்தனர். கண்களில் காதலோடு சஞ்சயும், முகத்தில் வெட்கத்தோடு நீரஜாவும் புன்னகையோடு இருந்தனர். ஜானவியும், மந்த்ராவும் கூட லெஹங்கா தான் உடுத்தியிருந்தனர். நிகேதனும் ஷெர்வானி அணிந்திருந்தான்.

ஜானவியும் நீரஜாவும் நெருங்கிய தோழிகளாய் இருந்தாலும், இப்போது ஜானவி நீரஜாவின் அண்ணி என்ற முறையில் திருமண வேலைகளில் மூழ்கி விட, மந்த்ரா தான் மணப்பெண் தோழியாய் நீராஜாவோடு உடனிருந்தாள். இந்த ஒருவார காலமாகவே வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, நீரஜாவோடு அழகு நிலையம் செல்ல, மருதாணி இட என்று அவளுக்கு உதவியாக இருக்க நீரஜாவின் வீட்டிலேயே தங்கியிருந்தாள். மந்த்ரா இருக்கவே ஜானவிக்கும் உதவியாக இருந்தது.

நிச்சயதார்த்தத்திற்கு வராதது போல, திருமணம் குறித்து நடந்த சடங்குகளுக்கும் வைஷ்ணவி வரவில்லை, இதோ ரிஷப்ஷன் ஆரம்பித்தாகிவிட்டது, இதுவரையும் அவள் வரவில்லை, இதற்கும் நீரஜா, வைஷுவை நேரில் பார்த்து இந்த திருமணத்திற்கு அழைத்திருந்தாள். சஞ்சயும் உடன் வருவதாக கூறினான். ஆனால் இருவரையும் ஒன்றாக பார்த்தால், அவள் எப்படி நடந்துக் கொள்வாளோ என்று நீரஜா அவனை உடன் அழைத்துச் செல்லவில்லை.

வைஷுவை நீரஜா திருமணத்துக்கு அழைத்த போதும், அவள் நீரஜாவிடம் கோபமாக எதுவும் பேசவில்லை தான், இருந்தும் நட்பாக பேசி இந்த திருமணத்திற்கு வருவதாகவும் கூறவில்லை. வைஷு திருமண சடங்குகளில் கலந்துக் கொள்ளாதது நீரஜாவிற்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஜானவி, நிகேதன், மந்த்ரா அனைவரும் அவளிடம் ஆறுதலாக பேசி, இதோ இப்போது கொஞ்சம் அதை மறந்திருந்தாள். அதுவும் சஞ்சயோடு மணமேடையில் ஒன்றாக நிற்கும் போது, மற்ற எந்த பிரச்சனையையும் அவள் யோசிக்கவில்லை.

வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடை ஏறி, மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க, சஞ்சயும், நீரஜாவும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் வைஷ்ணவி மேடை ஏறினாள். இவர்கள் திருமணத்திற்காக நிகேதன் எடுத்துக் கொடுத்திருந்த லெஹங்காவை தான் அவளும் உடுத்தியிருந்தாள்.

மேடை ஏறி வந்த வைஷுவை இருவரும் ஆச்சர்யத்தோடு பார்த்திருக்க, அவர்கள் அருகில் வந்தவள்,  அவர்கள் இருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து சொன்னாள். கூடவே அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருளையும் அவர்களிடம் கொடுத்தாள்.

“ரெண்டுப்பேரும் பொருத்தமான ஜோடி…. முதல் முறை உங்களை ஜோடியா பார்த்தப்பவும் எனக்கு அதுதான் தோனுச்சு… இருந்தும் அதை என்னோட மனசு ஏத்துக்கல…. நீங்க ரெண்டுப்பேரும் காதலிக்கிறீங்கன்னு தெரிஞ்சும் நான் சஞ்சயை காதலிச்சது தப்பு… அது புரியாம நான் உங்க மேலேயே கோபப்பட்டேன்…. இப்போ உங்களை பார்க்கும் போது தான், கடவுள் நீங்க தான் ஜோடி சேரணும்னு முடிவு செஞ்சு உங்களை பிறக்க வச்சிருக்காருன்னு புரியுது… அது தெரியாம நான் தான் முட்டாள்த்தனமா நடந்துக்கிட்டேன்… கொஞ்ச நாளா தான் எனக்கு இதெல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு….

உங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கே எனக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல… இருந்தும் நான் உங்க ரெண்டுப்பேர்க்கிட்டேயும் நடந்துக்கிட்டதை நினைச்சு தான் பங்க்‌ஷன்க்கு வர தயங்கினேன்… இப்பவும் அப்படித்தான் நினைச்சு வரக்கூடாதுன்னு நினைச்சேன்…. ஆனா ஜானு தான் நீ ரொம்ப ஃபீல் பண்றதா சொன்னா… அதுக்காகவே வந்தேன்…. ரெண்டுப்பேரும் என்னை மன்னிக்கணும்… ப்ளீஸ்..” என்று மனம் திறந்து இருவரிடமும் வைஷ்ணவி மன்னிப்புக் கேட்டாள்.

“இங்கப் பாரு உன்மேல எங்களுக்கு எந்த வருத்தமுமில்ல… உன்னைத்தான் நாங்க கஷ்டப்படுத்தினதா நினைச்சு வருத்தப்பட்டோம்… அதனால மன்னிப்பெல்லாம் வேண்டாம் வைஷு..” என்று நீரஜா சொன்னதும்,

“ஆமாம் வைஷு…. நீ தான் எங்களை மன்னிக்கணும்… நீ ஏன் எஙகக்கிட்ட மன்னிப்பு கேக்கற… பழசையெல்லாம் மறந்துடுவோம்…” என்று சஞ்சயும் கூறினான். பின் வைஷு அவர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

சஞ்சய் நீரஜா இருவரும் மண மேடையில் ஏறியதிலிருந்து மந்த்ரா அவர்கள் அருகில் தான் இருந்தாள்.  இருவருக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டாளோ, அவர்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை வாங்கி வைப்பதற்கும் அவள் அவர்கள் அருகிலேயே இருந்தாள்.

இப்போதும் நீரஜாவின் நகைகளை சரி செய்ய சொல்லி, புகைப்படம் எடுப்பவர் கூறவே, நீரஜாவை நெருங்கி அதை சரி செய்தவள் நிமிர்ந்த போது, அங்கே மோகன்  மணமேடை ஏறிக் கொண்டிருந்தான்.

மோகன்… அவனை எப்படி மறந்துப் போனாள் அவள், சஞ்சயும், நிகேதனும் அவனுக்கு நண்பர்கள் எனும் போது, இந்த திருமணத்திற்கு அவன் வருவான் என அவள் எவ்வாறு யோசிக்காமல் போனாள்.  இப்படி திடீரென்று அவனைப் பார்த்த அதிர்ச்சியும், அவனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே, என்ற மகிழ்ச்சியோடும் அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள். அவள் அணிந்திருந்த லெஹங்காவிற்கு இணையான வண்ணத்தில் ஷெர்வானி அணிந்திருந்தான் அவன், அவனும் அவளையே பார்த்தப்படியே தான் மேடை ஏறினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, பார்வையை திருப்பிக் கொண்டாள். அவனோடு இணைந்து இன்னொரு வயதான பெண்மணியும் உடன் வந்தார். அவர் அவனின் அன்னையாக தான் இருக்க வேண்டும்…. அன்னையோடு வந்திருக்கிறான்…?? ஏன் மனைவியோடு வரவில்லையா..?? ஒருவேளை திருமணம் ஆகவில்லையோ..?? ஆனால் ஏன்?? கேள்விகளோடு அங்கேயே நின்றிருந்தவள், பின்பு தான் மணமக்கள் அருகில் நிற்கிறோம் என்பதை உணர்ந்தவள், அந்த இடத்தை விட்டு செல்ல முயலும்போது, நீரஜா அவளின் கையை பிடித்துக் கொண்டாள்.

“நிரு… என்ன இது..?? விடு நான் போகணும்..” மந்த்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மோகனும் அவன் அன்னையும் அவர்கள் அருகில் வந்துவிட்டனர்.

சஞ்சயும், நீரஜாவும் அவர் காலில் விழுந்து வணங்க போக, பாதி குனிந்த போதே தடுத்தவர், ரொம்ப சந்தோஷமா இருக்கும் உங்க வாழ்க்கை என்று வாழ்த்தினார்.

மச்சான்… கங்கிராட்ஸ் டா.. கங்கிராட்ஸ் ம்மா….” என்று இருவரையும் வாழ்த்திய மோகனின் பார்வை, அவ்வப்போது இன்னும் நீரஜா அருகிலேயே நின்றிருந்த மந்த்ராவை சென்றடைந்தது.  அதற்குள் புகைப்படம் எடுப்பவர் அவர்களை புகைப்படம்  எடுப்பதற்காக நிற்க சொல்ல,  இன்னும் தன் கையை கெட்டியாக பிடித்திருந்த நீரஜாவின் கையிலிருந்து விடுபட மந்த்ரா முயன்றுக் கொண்டிருந்தாள். “ப்ளீஸ் நிரு…” மெதுவாக நீரஜாவிற்கு கேட்கும்படியாக கூறினாள்.

அதற்குள் மோகனின் அன்னை மந்த்ரா அருகில் வந்து நின்றப்படியே, “வாம்மா போட்டோ எடுத்துக்கலாம்..” என்றார்.

மணமக்கள் இருவரும் நடுவில், சஞ்சய்க்கு அருகில் மோகன், நீரஜாவுக்கு அருகில் மந்த்ரா அவளுக்கு அடுத்து மோகனின் அன்னை நிற்க, புகைப்படம் எடுக்கப்பட்டது.

போட்டோ எடுத்து முடித்ததும் நீரஜா மந்த்ராவின் கையை விடுவிக்க, அடுத்த நொடியே அங்கிருந்து அவள் சென்றுவிட்டாள்.

ரிஸப்ஷன் முடிந்ததும், வந்த விருந்தினர்களுக்கு ஒரு பக்கம் சாப்பாடு பந்தி நடக்க, இன்னொரு புறம் சஞ்சய், நீரஜாவை இணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர், அது முடிந்ததும் சஞ்சய், நீரஜாவோடு சேர்ந்து சாப்பிட அவர்களது நண்பர்கள் அனைவரும் காத்திருந்தனர். அவர்கள் வந்ததும் அனைவரும் சாப்பிட டைனிங் ஹாலுக்கு சென்றனர்.

மோகனை பார்த்ததும் நேராக மந்த்ரா மணமகள் அறைக்கு வந்திருந்தாள். இதோ இப்போது வரையிலும் அதே அறையில் தான் இருக்கிறாள்.  நடுவில் ஜானவி வந்து என்ன என்று கேட்டப்போது, தலைவலி என்று சொன்னவள், அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். பிறகு, வைஷு தான் சஞ்சய், நீரஜாவிற்கு உதவியாக அவர்கள் அருகில் இருந்தாள்.

இரண்டு முறை நீரஜா மந்த்ராவை அலைபேசியில் சாப்பிட வருமாறு அழைத்தாள்.  வந்த கிஃப்ட்டை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதாக மந்த்ரா சாக்கு சொன்னாள். “எல்லாரும் சாப்டாச்சு… இதுதான் கடைசி பந்தி.. எல்லோரும் உனக்காக தான் வெய்ட் பண்றோம், சீக்கிரம் வா மந்த்ரா..” என்று அவசரப்படுத்தினாள்.

கண்டிப்பாக அங்கு மோகனும் இருப்பான் என்று அவளுக்கு தெரியும், அதனால் தயங்கினாள். மூன்றாவதாக நீரஜாவிடம் இருந்து அழைப்பு வந்ததும், வேறு வழியில்லை என்பதால், டைனிங் ஹாலை நோக்கிச் சென்றாள்.

டைனிங் ஹாலின் வாசலிலேயே மோகன் நின்றிருந்தான். அவளிடம் பேச காத்திருக்கிறான் என்பது நன்றாகவே புரிந்தது. மோகன் விஷயத்தில் ஏற்கனவே அவள் முடிவெடுத்து தான் அவனை மீண்டும் சந்திக்காமல் இருந்தாள். அவனை விட்டு விலகிட நினைத்தாள்.  மூன்று வருடக் காலமும் கடந்துவிட்டது, இனி என்ன பேச வேண்டியிருக்கு இவர்களுக்குள், அவனை கவனிக்காதது போல் அவள் உள்ளே செல்ல முயற்சிக்க, அவளது கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் அவன்,

“மோகன்..”

“உன்கிட்ட பேச காத்துக்கிட்டு இருக்கேன் மந்த்ரா… உனக்கு என்னைப் பார்க்கக் கூட பிடிக்கலையா..??”

“நமக்குள்ள என்ன பேச இருக்கு மோகன்…”

“நமக்குள்ள ஒன்னுமே இல்லையா..??”

“இனி நமக்குள்ள பேச ஒன்னுமே இல்லன்னு தான் நினைக்கிறேன்…”

“மந்த்ரா..”

“மோகன்…. சஞ்சயும் நீரஜாவும் என்னைப்பத்தி உங்கக்கிட்ட பேசியிருக்காங்கன்னு நல்லாவே புரியுது… இருந்தாலும் பழசெல்லாம் எதுவும் மாறிடல..”

“சஞ்சயும், நீரஜாவும் என்கிட்ட எதுவும் பேசல மந்த்ரா… நீ அவங்களுக்கு செஞ்ச ஹெல்ப் பத்தி மட்டும் தான் சொன்னாங்க… நீ இந்த கல்யாணத்துக்கு வருவியான்னு நான் தான் கேட்டேன்… எனக்கு உன்னைப் பார்க்கணும் அதான் வந்தேன்…

“இங்கப்பாரு மந்த்ரா… அன்னைக்கு உன்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டப்போ ரொம்ப கோபம் வந்தது உண்மை தான்… உன்னோடது உண்மையான காதல் இல்லன்னு நான் கோபப்பட்டேன்…. ஆனா அந்த கோபம் எனக்கு ரொம்ப நாள்ல்லாம் இல்ல… என்னவோ நீ என்னை டைம் பாஸ்க்கு காதலிச்சதா தோனல… அது உன்னோட பாஸ்ட், இப்பவும் நீ அப்படியிருக்க மாட்டன்னு மனசுக்குக்கு தோனிக்கிட்டே இருந்துச்சு… நீ திரும்ப வந்து அதை தெளிவுப்படுத்துவன்னு காத்துக்கிட்டு இருந்தேன்… ஆனா நீ வரல…

சரி நானா உன்னைப் பார்க்க வரலாம்னு நினைச்சப்ப தான், சஞ்சய் என்னை பார்க்க வந்தான்… அவங்களை பழிவாங்க நீ செஞ்சத பத்தியெல்லாம் சொன்னான்… திரும்ப உன் மேல கோபம் வந்து, உன்னைப் பத்தி தப்பாவே என்னை நினைக்க வச்சுது… ஆனா என்னால உன்னை மறக்க முடியல… தீவிரமா பிஸ்னஸ டெவலப் பண்றது… தங்கை கல்யாணம்னு அதுல கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிட்டேன்…

தங்கை கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது… பிஸ்னஸையும் ஒரு நல்ல லெவல்க்கு கொண்டு வந்துட்டேன்… அடுத்து அம்மா என்னோட மேரேஜ் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க… அப்போ தான் உன்னைத்தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு புரிஞ்சுது… அப்போ உன்மேல இருக்க கோபமும் குறைஞ்சிருந்தது… திரும்ப உன்னைப் பார்க்க மனசு ஏங்க ஆரம்பிச்சுது….

நீ எங்க இருக்கன்னு வேற எனக்கு தெரியல.. உன்னோட ஊருக்கு வந்து உன்னைப்பத்தி தெரிஞ்சுக்க முடியுமான்னு பார்த்தேன்…  அங்க வந்து உன்னோட குடும்பத்தை பத்தி கேள்விப்பட்டதெல்லாம் அதிர்ச்சியா இருந்துச்சு… ஒரு பக்கம் குற்ற உணர்வும் கூட, அந்த நேரம் நான் உன்கூட இருந்தா, உனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காம கூட போயிருக்கலாம்… இல்லை ஒரு ஆறுதலாவும் நான் உன்கூட இருந்திருக்கலாம்… இப்படி ஆயிடுச்சேன்னு நான் வருத்தப்பட்டேன்…. உடம்பு சரியில்லாத அம்மாவோட எவ்வளவு கஷ்டப்பட்றியோன்னு உன்னைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன்….

நீ எங்க இருக்க, என்ன பண்ற, எதையும் என்னால தெரிஞ்சிக்க முடியல… அம்மா கல்யாணத்தைப் பத்தி பேசும் போதெல்லாம் தடைப்போட்டுக்கிட்டே வந்தேன்… கடைசியா சஞ்சய், நீரஜா மூலம் உன்னைப்பத்தி தெரிஞ்சதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..?? வார்த்தையில அந்த சந்தோஷத்தை விவரிக்க முடியாது மந்த்ரா..”

“இந்த அன்புக்கும் காதலுக்கும் நான் தகுதியானவளா மோகன்… என்ன இருந்தாலும் நான் தப்பு பண்ணவ தானே… அதெல்லாம் நீங்க மறக்கலாம், ஆனா என்னால மறக்க முடியல மோகன்.. நான் உங்களுக்கு ஏத்தவ இல்ல..”

“இங்கப்பாரு… தப்பு பண்ணாதவங்கன்னு இந்த உலகத்துல யாராவது இருக்காங்களா.??
செஞ்சது தப்புன்னு உணர்ந்துட்டாளே போதும், ஆனா அந்த அளவுக்கு நீ பெரிய தப்பெல்லாம் செய்யல.. அந்த வயசு, திடிர்னு வந்த ஏழ்மை நிலைமை அதெல்லாம் உன்னை தப்பு செய்ய தூண்டியிருக்கு, ஆனா நீ வளர்ந்த விதம், உன்னை பெரிய அளவுல தப்பு செய்ய விடல… அதுமட்டுமில்ல, பெரிய அளவுல தப்பு செய்யாமலேயே நீ தண்டனையை அனுபவிச்சிட்ட, அப்புறம் என்ன மந்த்ரா…

உனக்கு ஒன்னு தெரியுமா..?? உன்னை பத்தி தெரிஞ்சதுமே, அம்மாக்கிட்ட நம்ம காதலைப்பத்தி சொல்லிட்டேன்… சண்டைப் போட்டு பிரிஞ்சிட்டதாகவும், இன்னும் உன்னை என்னால மறக்க முடியலன்னும் சொன்னேன்… அவங்க நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க… உன்னைப் பார்க்க தான் அவங்க இந்த பங்ஷன்க்கு வந்ததே, மணமேடையில உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் உன்னை ஆள காணோமேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க… இன்னும் நான் உன்கிட்ட பேசல, பேசிட்டு உங்கக்கிட்ட கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருக்கேன்…. அம்மா இப்பவே கிளம்பிடுவாங்க… ப்ளிஸ் ஒருமுறை அவங்கள வந்துப் பாரு…”

“அவங்கக்கிட்ட என்னைப்பத்தி எல்லாம் சொன்னீங்களா…?? எல்லாம் தெரிஞ்சு என்னை ஏத்துக்க அவங்க தயாரா இருக்காங்களா மோகன்..??”

“இல்ல… நான் மொத்த விஷயத்தையும் அவங்கக்கிட்ட சொல்லல… இதை அவங்க எந்த மாதிரி எடுத்துப்பாங்கன்னு தெரியல… அதுமட்டுமில்லாம இது முடிஞ்சு போன விஷயம், இனி அவங்களுக்கு எதுக்கு தெரியணும்..??”

“ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு பிறகு, அவங்களுக்கு இதெல்லாம் தெரிய வந்துச்சுன்னா..??”

“அப்படி தெரிய வந்தா, என்னோட சந்தோஷத்துக்காக உன்னை மன்னிக்கக்கூடிய பக்குவம் அம்மாக்கு இருக்கு மந்த்ரா.. என்னால அவங்களுக்கு புரிய வைக்கவும் முடியும்..”

“இருந்தாலும் மோகன்…” அவள் இன்னும் தயங்க, “ப்ளீஸ் மந்த்ரா.. இதுக்கு மேலயும் என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது, புரிஞ்சிக்க..” என்றவன் அவள் கையைப் பிடித்து அவன் அன்னையிடம் அழைத்துப் போனான்.

“அம்மா உங்க மருமகள்..” தன் அன்னையிடம் அவன் சொல்ல, உடனே காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

“நல்லா இரும்மா..” என்றவர், தன் மகனைப் பார்த்து… “என்னோட மருமக அழகா இருக்காடா.. அதுமட்டுமில்ல, நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணாவும் இருக்கா… இவ்வளவு அருமையான பொண்ணுக்கிட்டயா இத்தனை நாளா கோச்சுக்கிட்டு இருந்த..” என்றுக் கேட்டார்.

“அய்யோ.. மோகன் மேல எந்த தப்பும் இல்ல ஆன்ட்டி.. தப்பெல்லாம என்மேல தான், நான் தான் இத்தனை நாளா இவரை விட்டு ஒதுங்கி இருந்தேன்..” மந்த்ரா சொன்னதும்,

“இல்லம்மா தப்பு என்மேலயும் தான், நானும் இவளைப் போய் பார்க்காம இருந்துட்டேன்..” அவனும் தன் தவறை சொல்ல..

“இங்கப்பாருங்க… நாம தப்பு செஞ்சோம்னு உணர்ந்து மன்னிப்பு கேட்டாலே, எல்லா பிரச்சனையும் சரியாயிடும்… இதுக்கு மேலயும் ஏதாவது பிரச்சனைன்னா கோபப்பட்டு விலகிப் போகாம, பேசி சரிப் பண்ண பாருங்க….

அப்புறம் மோகன், அடுத்து வர ஒரு நல்ல நாளா பார்த்து சொந்தப்பந்தங்களை கூப்பிட்டு உங்க நிச்சயத்தை முடிச்சுடுவோம்… அடுத்து கல்யாணமும் உடனே வைக்கணும்… சீக்கிரம் நம்ம மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகணும்…சரி சரி லேட்டாகுது போய் ரெண்டுப்பேரும் சாப்பிடுங்க, நாம வேற கிளம்பணும் இல்லையா மோகன்.. போங்க போய் சாப்பிடுங்க..” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

மந்த்ரா, மோகனுக்காக அனைவரும் சாப்பிடாமல் காத்திருக்க, மோகனோடு அந்த டைனிங் ஹாலுக்குள் நுழைந்த மந்த்ரா, கண்களில் கண்ணீரோடு நீரஜாவை அணைத்துக் கொண்டவள், குலுங்கி குலுங்கி அழுதாள்.

“ஹே மந்த்ரா… எதுக்காக இப்போ அழற…” மந்த்ராவிடம் கேட்டப்படியே, அவள் மோகனை பார்த்து கண்ணாலேயே என்னவென்று கேட்டாள்.

“மந்த்ரா எதுக்கு அழற..” மோகனும் எதுவும் புரியாமல் கேட்டான்.

பின் மெதுவாக அழுகையை நிறுத்திய மந்த்ரா.. “என்னோட வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சிட்டு இருந்தேன் நிரு… இன்னைக்கு இப்படி ஒரு சந்தோஷமா வாழ்க்கையை நான் தொடங்க நீங்க இரண்டுப் பேரும் தான் காரணம்… ரொம்ப தேங்க்ஸ்..” என்று நன்றி கூறினாள்.

“நாங்க என்ன செஞ்சுட்டோம் மந்த்ரா… உன்னைப் பத்தி மோகன்கிட்ட சொன்னோம்… மோகன் அதுக்கும் முன்னாடியே உனக்காக வெய்ட் செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு… இதுக்கு போய் தேங்க்ஸ்ல்லாம் சொல்லிக்கிட்டு, அப்போ நீ எனக்கு செஞ்சதுக்கு நான் எவ்வளவு தேங்க்ஸ் சொல்லணும் தெரியுமா.?? முதல்ல இந்த தேங்க்ஸ் சொல்றத விடு..” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டாள்.

“அப்புறம் மாப்ள… அம்மா என்ன சொன்னாங்க..” சஞ்சய் மோகனிடம் கேட்டான்.

“சீக்கிரம் நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணணும், உடனே கல்யாண தேதியும் முடிவுப் பண்ணனும்னு சொன்னாங்கடா..”

“இங்கப்பாரு மோகன்… மந்த்ராக்கு யாரும் இல்லன்னு கல்யாணத்தை சிம்பிளா பண்ணனும்னு நினைக்க வேண்டாம்… மந்த்ராக்கு அண்ணனா நான் எல்லாத்தையும் செய்வேன்… இது எங்க வீட்டு கல்யாணம், நாங்க எல்லோரும் அதை சிறப்பா செஞ்சுடுவோம்… அப்படித்தானே ராஜி..” என்று நீரஜாவிடம் கேட்டான். அவளும் ஆம் என்று தலையசைக்க, திரும்பவும் மந்த்ரா கண்களில் கண்ணீர்.

“என்ன சொல்லன்னு தெரியல சஞ்சய்… கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் எனக்கு யாருமில்லன்னு ஃபீல் பண்ணேன்… இப்போ நீங்க சொன்னது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குதுன்னு தெரியுமா?? அதை வார்த்தையால சொல்ல முடியாது..” என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

“பரவாயில்லையே… சஞ்சய் முன்னைக்கு இப்போ கொஞ்சம் முன்னேறியிருக்காரு… ஆரம்பத்துல அண்ணான்னு நான் கூப்டப்ப, வேண்டாம்னு சொன்னவரு, இப்போ மந்த்ராவுக்கு அண்ணன்னு அவர் வாயாலேயே சொல்றது ஆச்சர்யமா இருக்கு…” என்று ஜானவி சொல்ல,

“சாரி ஜானு… அன்னைக்கு என்னோட மனநிலை உன்கிட்ட அப்படி சொல்ல வச்சுது… ஆனா அப்பவே மனசார நான் உன்னை தங்கையா தான் நினைச்சேன்..” என்று சொல்லிக் கொண்டே போனவன், அப்போது தான் அங்கிருந்த வைஷ்ணவியை கவனித்தான்.

மந்த்ராவிற்கும் ஜானவிக்கும் பிடித்த அந்த அண்ணன் என்ற வார்த்தை வைஷுவிற்கு வருத்தத்தை கொடுத்ததை நினைத்து அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதை வைஷுவும் கவனித்தாள்.

“சஞ்சய்… எப்போ உங்களுக்கும், நிருவுக்கும் கல்யாணம் ஆச்சோ, நீங்க எனக்கும் அண்ணன் தான்.. உங்க மேல் எனக்கு எந்த வருத்தமுமில்ல…”

“இருக்கட்டும் வைஷு… நமக்குள்ள எந்த உறவு முறை வேணாலும் இருக்கலாம்… ஆனா எனக்கும் ராஜிக்கும் நீ எப்போதுமே ஒரு நல்ல ஃப்ரண்ட்…”

“ஆமாம் வைஷு… நமக்குள்ள இருக்க உறவு முறையை தாண்டி, நாங்க உன்கூட நட்போட தான் பழக நினைக்கிறோம்..”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு நிரு… நானும் உங்கக் கூட அப்படி பழகத்தான் விரும்புறேன்”

“வைஷு… ஒரு நல்ல தோழியா உனக்கு ஒன்னு சொல்ல ஆசைப்பட்றேன்… சீக்கிரம் உனக்கும் கல்யாணம் ஆகணும் வைஷு… நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்… அப்ப தான் அத்தையும், மாமாவும் சந்தோஷப்படுவாங்க… எங்களுக்கும் அதுல தான் சந்தோஷமே..” என்று நீரஜா சொன்னதும்,

“அதெல்லாம் வைஷுக்கும் சீக்கிரம் கல்யாணம் கூடி வரத்தான் போகுது நிரு… மாப்பிள்ளால்லாம் கூட ரெடி..” என்று ஜானவி கூறினாள். அனைவருக்குமே இது புது செய்தி, நிகேதனுக்கு கூட இந்த விஷயம் தெரியவில்லை,  ஜானவி சொன்ன அடுத்த நொடி, வைஷு முகத்தில் வெட்கப் புன்னகை.

“ஜானு… நீ என்ன சொல்ற..?? வைஷுக்கு மாப்ள ரெடியா..??”

“ஆமாம் நிரு… பேரு ராகவ்.. வைஷு ஆஃபிஸ்ல அவளுக்கு சீனியர்… ராகவ் ஒரு பொண்ணை ரொம்ப நாளா ஒன்சைட்டா காதலிச்சிருக்காரு… எப்படியும் அவரோட காதலை அந்தப் பொண்ணு ஏத்துக்கும்னு நம்பிக்கையோட அவக்கிட்ட சொல்லியிருக்காரு… ஆனா அந்த பொண்ணு அதை ஏத்துக்கல… இவரும் ரெண்டு மூனு முறை அவக்கிட்ட கெஞ்சியிருக்காரு… ஆனா அந்த பொண்ணு இவரை வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணிடுச்சு… அந்தப் பொண்ணுக்கு கல்யாணமும் முடிவாயிடுச்சு… அதை தாங்கிக்க முடியாத ராகவ் சூசைட்க்கு ட்ரை செஞ்சுருக்காரு…

ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தவரை ஆஃபிஸ் ஸடாஃப் எல்லாம் பார்க்க போயிருக்காங்க… எல்லாம் அவருக்கு ஆறுதல் சொன்னா.. நம்ம மேடம் அவரை லெஃப்ட் அன் ரைட் வாங்கிட்டாங்க… உங்களுக்கு உங்க உயிர் அவ்வளவு துச்சமா போச்சா… நமக்கு சுதந்திரம் கிடைக்கணும்னு எத்தனை பேர் செத்துப் போனாங்க… நம்ம பாதுகாப்புகாக எத்தனை பேர் எல்லையில உயிரை விட்றாங்க… நீங்க ஒரு பொண்ணு வேண்டான்னு சொன்னதுக்காக உங்க உயிரை விட துணிஞ்சிருக்கீங்க… அதுவும் உங்க காதலை புரிஞ்சுக்காத ஒருத்தருக்காக சாக முடிவெடுத்தீங்களே.. அதுக்கு முன்னாடி உங்க மேல அன்பு வச்சிருக்க குடும்பத்தை பத்தி யோசிச்சு பார்த்தீங்களா..?? அப்படின்னு கோபப்பட்டு பேசியிருக்கா… இன்னும் என்னென்னவோ பேசியிருக்கா…

இவ பேசனதை பார்த்துக்கிட்டு அவ்வளவு நேரம் அழுதுக்கிட்டு இருந்த அவங்க அம்மாவும், அப்புறம் தன் பையன்கிட்ட அவன் செஞ்சது தப்புன்னு எடுத்து சொல்லியிருக்காங்க… இவளை பாராட்டவும் செஞ்சுருக்காங்க… அதுல இருந்து, அந்த குடும்பத்துல உள்ளவங்க எல்லோரும் வைஷுக்கு ஃப்ரண்ட் ஆயிட்டாங்க… ராகவும் அவர் செஞ்சது தப்புன்னு உணர ஆரம்பிச்சிட்டாரு… அந்த விஷயத்துல இருந்து வெளிய வந்து சகஜமாவும் ஆயிட்டாராம்..  இதுக்கெல்லாம் காரணம் வைஷுன்னு அவங்க அம்மா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க… இவளை மருமகளா ஆக்கிக்கவும் முடிவு செஞ்சுருக்காங்க…

ராகவ் உட்பட எல்லோருக்கும் இதுல சம்மதம்… அப்புறமா தான் ராகவ் அம்மா இவக்கிட்ட பேசியிருக்காங்க… இவளும் எதுவா இருந்தாலும் வீட்ல வந்து பேசுங்கன்னு சொல்லியிருக்கா.. அவங்களும் வீட்டுக்கு வந்து பேச ஆர்வமா இருக்காங்க… இவ ரெண்டு நாள் முன்னாடி தான் என்கிட்ட வந்து சொன்னா… அப்போ உங்க கல்யாண வேலையா இருந்ததால கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்னு சொல்ல சொன்னேன்… இன்னும் தனுக்கிட்ட கூட இந்த விஷயமா பேசல.. அவருக்கும் இப்போ தான் தெரியும்..”

“என்ன ஜானு… ஒரு நல்ல விஷயம் நடக்குதுன்னா, அதை தள்ளிப் போடலாமா..?? வைஷு உனக்கு ராகவ்வ பிடிச்சிருக்குள்ள..??”

“பிடிச்சிருக்கு நிரு.. ஆஃபிஸ்ல பார்த்த வரைக்கும் ராகவ் நல்ல டைப் தான்… அவரை ஒரு பொண்ணு வேண்டாம்னு சொன்னதே ஆச்சர்யம்… அவர் சூசைட்க்கு ட்ரை பண்ணப்போ, அந்த நேரம் எனக்கு உங்க மேல இருந்த கோபம் தான் அவர்க்கிட்ட நான் அப்படி பேசினேன்… ராகவ் நான் செஞ்சது தப்புன்னு ஃபீல் செஞ்சதும் இல்லாமல், அந்த பொண்ணு நிலைமைல இருந்தும் திங்க் பண்ண ஆரம்பிச்சாரு… அப்போ தான் எனக்கு நான் செஞ்ச தப்பும் புரிய ஆரம்பிச்சுது… ஒரு நல்ல ஃப்ரண்ட்ஸா நாங்க எல்லா விஷயத்தையும் ஷேர் செஞ்சுக்கிட்டோம்… அவரை மேரேஜ் செஞ்சுக்கிட்டா என்னோட லைஃப் நல்லா இருக்கும்னு தான் தோனுது…”

“அப்புறம் என்ன..?? ஏன் நாளை கடத்தணும்..?? இங்கப்பாரு ராகவையும் மேரேஜ்க்கு இன்வைட் செஞ்சு மாமாவுக்கு அறிமுகப்படுத்தலாமே… அப்புறம் அவங்க வீட்ல பேசினா மாமாவும் ஒத்துப்பாரு…

நிக்கி… நம்ம சார்பா.. நீயே போன்ல ராகவையும் அவங்க பேமிலியையும் இன்வைட் பண்ணு.. ஜானு நீ அத்தைக்கிட்ட இந்த விஷயமா சொல்லு… அவங்க மாமாக்கு பக்குவமா எடுத்து சொல்வாங்க..” என்று நீரஜா தன் கருத்தை சொன்னதும் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

தங்கள் காதல் ஏதோ ஒரு விதத்தில் மந்த்ராவையும், வைஷுவையும் பாதித்ததில் நீரஜா மனதளவில் வருத்தப்பட்டாள். இப்போது இருவரின் வாழ்க்கையும் நல்லப்படியாக அமைவதில் அவளுக்கு சந்தோஷம். சஞ்சயும் கூட அந்த சந்தோஷத்தை உணர்ந்தான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் உறங்குவதற்கு சென்றனர். அந்த திருமண மண்டபத்திலேயே அனைவரும் தங்குவதற்கான வசதி இருந்தது. சில பேருக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலிலும் ரூம் புக் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது, வைஷு தன் அன்னை, தந்தையுடன் அறையை பகிர்ந்துக் கொள்வதாக சொல்லிவிட்டாள். அம்பிகா திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களோடு அறையை பகிர்ந்துக் கொண்டார்.

மணமகள் அறையில் நீரஜாவோடு ஜானவியும், மந்த்ராவும் படுத்துக் கொள்வதாக முடிவெடுத்தார்கள்.  அதேபோல் சஞ்சயோடு அவனது அறையில் நிகேதனும் மோகனும் படுக்கப் போவதாக நிகேதன் முடிவு செய்திருந்தான்.  ஆனால் மோகனின் அன்னை வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னதால், இப்போது அவரை வீட்டில் விட்டுவிட்டு, காலை திரும்ப தனியாக வருவதாக அவன் சொன்னதால், இப்போது சஞ்சயும் நிகேதனும் மட்டும் அந்த அறையில்,  மந்த்ரா மோகனையும் அவனுடைய அன்னையையும் வழி அனுப்ப கார் பார்க்கிங் வரை சென்றதால், அவர்களது அறையில் ஜானவியும், மந்த்ராவும் மட்டும் இருந்தனர்.

சஞ்சய், நீரஜா பிரிந்ததற்கு வெறும் மந்த்ரா மட்டும் காரணமில்லை. அதையும் தாண்டி வேறெதோ இருக்கிறது என்பது, ஜானவி நிகேதனின் எண்ணம். சஞ்சயும், நீரஜாவும் ஒருவரையொருவர் காதலிப்பதை ஒத்துக் கொண்டதிலிருந்தே ஜானவியும் நிகேதனும் அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருந்தனர். இன்று அதை சொல்லியே ஆக வேண்டுமென்று இருவரும் அவர்களை கட்டாயப்படுத்தினர்.

அங்கே சஞ்சய் வேறு உடை மாற்றிக் கொண்டிருக்க, இங்கே நீரஜாவின் நகைகளை ஜானவி கழற்றிக் கொண்டிருந்தாள்.

“இத்தனை முறை கேக்கறேன்…. என்கிட்ட சொன்னா என்னவாம் நிரு…”

“டேய்… நீ அவளுக்கு அண்ணன் டா.. உன்கிட்ட எப்படிடா சொல்ல முடியும்..??”

“நிரு… நாம அண்ணி நாத்தனாராவா பழகுறோம்… நாம நல்ல ப்ரண்ட்ஸ்.. அப்புறம் சொல்றதுக்கு என்ன..??”

“டேய் ப்ரண்ட்ங்கிறதால எல்லாம் சொல்ல முடியாது.. இதோட விடு மச்சான்..”

“நீ மட்டும் என்னோட மேரேஜ் முடிஞ்சதும், என்கிட்ட என்னன்ன கேள்வியெல்லாம் கேட்ட… அப்போ அண்ணின்னு பார்த்தீயா..?? ப்ரண்ட்ஸ்குள்ள எல்லாம் சொல்லலாம்னு என்னை சொல்ல வச்சியே.. அது என்னவாம்…??”

“நானா மச்சான் உன்கிட்ட அதெல்லாம் கேட்டேன்… நீயா சொன்ன, நான் வழக்கம் போல அதெல்லாம் காதுல வாங்கிக்கவே இல்ல… நீ எல்லாம் சொன்னங்றதுக்காக, நான் இதெல்லாம் சொல்ல முடியாது…”

நீரஜாவும், சஞ்சயும் இவ்வளவு தூரம் நடந்ததை சொல்ல மறுக்கவே, ஏதோ பெரிதாக இருப்பதாக தோன்றியதால், விடாமல் நச்சரித்து இருவரும் விஷயத்தை அறிந்துக் கொண்டார்கள்.

சஞ்சய் செய்த விஷயத்தைப் பற்றி சொன்னதும் நிகேதன் வாயைப் பிளந்தான்… “அடப்பாவி.. நீ ஒரு சாமியார்னு என் தங்கச்சிக்கிட்ட அடிக்கடி சொல்வேன்… நீ என்னடான்னா சாமியார் வேலையை அவக்கிட்டயே காமிச்சிருக்க… அதான் அவ இவ்வளவு கோபமா இருந்தாளாடா..??” அவன் கேட்க,

“டேய் ஒரு அண்ணன் மாதிரியாடா பேசற….” சஞ்சய் கேட்டதற்கு,

“டேய் இதெல்லாம் அயன் படத்துலேயே பார்த்தாச்சு விட்றா.. விட்றா…” என்றதும் இருவரும் சிரித்தார்கள்.

இங்கேயோ ஜானவி முகத்தில் ஈயாடவில்லை. இந்த பூனையும் பால் குடிக்குமா..?? என்றிருந்த சஞ்சய் இப்படிக் கூட செய்வானா…?? அப்பா நிகேதனே பரவாயில்லைப் போல என்று நினைத்துக் கொண்டாள்.  தூங்கிக் கொண்டிருந்த ஜெய்க்குட்டி விழித்து சிணுங்கி அழுதான்.

“இந்த மந்த்ரா வேற இன்னும் காணோம்… சரி வெய்ட் பண்ணு நிரு… இவனை தனுக்கிட்ட கொடுத்துட்டு வரேன்… அப்புறம் வந்து மேக்அப் ரிமூவ் செய்யலாம்..” என்று நிகேதனுக்கு போன் செய்தப்படியே ஜெய்க்குட்டியை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

நிகேதனும் அறையை விட்டு வெளியே வந்திருக்க, அவனிடம் ஜெய்யைக் கொடுத்தவள், “என்ன தனு.. உங்க ப்ரண்ட்க்கிட்ட என்னன்னு கேட்டீங்களா..?? சஞ்சய் சொன்னாரா..?? நிரு என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா..”

“ம்ம் சொன்னான்… சொன்னான்..” கவலையோடு கூறினான்.

“என்ன இருந்தாலும் சஞ்சய் செய்தது தப்பு தனு… என்ன அண்ணன் நீங்க, உங்க தங்கச்சிக்கிட்ட என்னத்தான் உங்க ஃப்ரண்டா இருந்தாலும் ஒருத்தர் இப்படி நடந்துருக்காங்க… அதுக்கூட தெரியாம இருந்திருக்கீங்க… நீங்க வேஸ்ட் தனு..” என்றாள்.

“ஆமாம் நான் வேஸ்ட் தான்… எத்தனை முறை உன்கிட்ட கிஸ் கேட்ருக்கேன்… நீ மறுத்தப்ப, இப்படி ஏதாவது அதிரடியா செய்யணும்னு எனக்கு தோனியிருக்கா.. ச்சே நாம லவ் பண்ணும் போதே இந்த விஷயம் தெரியாம போச்சே..” அவன் ரொம்ப ஃபீல் செய்து சொல்ல,

“ஓ ஐயாவுக்கு இந்த ஆசை வேற இருக்கா.. நீங்க அப்படி ஏதாவது செஞ்சிருக்கணும்… அப்போ இந்த ஜானவிய பத்தி தெரிஞ்சிருக்கும்.. ஒழுங்கா குழந்தையை தூங்க வைங்க.. பிடிங்க..” என்று குழந்தையை அவனிடம் கொடுக்க,

“இந்த ஜென்மம் போனா என்ன..?? அடுத்த ஜென்மத்திலேயும் நாம காதலிப்போம்… அப்போ இந்த சான்ஸ நான் மிஸ் பண்ணவே மாட்டேன்… நீ வேணா பாரு நவி..” அவன் சபதம் எடுப்பது போல் ஆக்‌ஷனோட சொல்ல,

“உங்களை கட்டிக்கிட்டு இந்த ஒரு ஜென்மம் கஷ்டப்பட்றது போதாதா.. அடுத்த ஜென்மம் வேற வேணுமா..?? போங்க தனு போய் படுங்க… காமெடி பண்ணிக்கிட்டு..” சொல்லிவிட்டு அவள் சென்றதும், இவனோ ஜெய்குட்டியை தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தால், அங்கே சஞ்சயை காணவில்லை. இங்கே தங்களது அறைக்கு வந்து ஜானவி பார்க்க, நீரஜாவை காணவில்லை. அப்போது அறைக்கு வந்த மந்த்ராவிடம் கேட்க,  அவளுக்கும் நீரஜாவை பற்றி தெரியவில்லை.

அந்த திருமண மண்டபத்தின் மொட்டை மாடியில் இருவரும் நின்றிருந்தனர்.

“என்ன ஜெய்… விடிஞ்சா கல்யாணம், இப்போ பேசலாம்னு கூப்ட்றீங்க… ஏற்கனவே மந்த்ரா, ஜானு என்ன கிண்டல் செய்யறாங்க… இதுல அவங்கக்கிட்ட சொல்லாம வேற வந்திருக்கோம்… திரும்ப கீழ போகும்போது என்னல்லாம் சொல்லி கிண்டல் செய்யப் போறாங்களோ… அப்படி என்ன ஜெய் இப்போ பேசணும்..”

“என்ன பேசணும்னு கேட்டா என்ன சொல்றது… நிறைய பேச வேண்டியிருக்கு… நாளைக்கு விடிஞ்சா நம்ம கல்யாணம்… காதலர்களா இன்னைக்கு தான் லாஸ்ட் டே… அதுவும் நாம 3 வருஷத்தை வேஸ்ட் செஞ்ச காதலர்கள்… இந்த ஒருமாசம் எனக்கு பத்தவே இல்ல… இன்னும் கொஞ்ச நாள் நாம காதலர்களாகவே இருக்கலாம்னு தோனுது… கல்யாணம்னு ஆயிட்டா, என்னத்தான் அப்பவும் நம்ம காதல் மறையாதுன்னாலும், நமக்கு சில பொறுப்புகள் கல்யாணத்துக்கு பிறகு வந்துடும்… அதனால உடனே கல்யாணமான்னு இருக்கு… இன்னொரு பக்கமோ நம்ம வாழ்க்கையில இந்த நாள் வராதான்னு நான் காத்திருந்தேன் தெரியுமா..?? எப்போ என்னோட மனைவியா நீ வீட்டுக்கு வரப்போறேன்னு எதிர்பார்ப்போட இருக்கேன்….  அதனால ஒரு பக்கம் இந்த கல்யாணம் உடனே நடக்கணும்னு நினைக்கிறேன்.. இப்படி ரெட்டை மனசா சுத்திக்கிட்டு இருக்கேன்…”

“எனக்கும் அப்படித்தான் இருக்கு ஜெய்.. எப்போ கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு வரப் போறேன்னு இருக்கு… உங்கக் கூடவே இருக்கலாமே, இன்னொரு பக்கமோ, நிக்கி, ஜானு, ஜெய்க்குட்டி இவங்களையெல்லாம் விட்டுட்டு வரணுமேன்னு இருக்கு… பொதுவா எல்லா பெண்களுக்குமே இந்த அவஸ்தை தான் தெரியுமா..??”

“ம்ம் புரியுதுடா… உங்க வீட்டை நீ எப்பவும் மிஸ் பண்ணாத மாதிரி பார்த்துப்பேன் போதுமா..??”

“ம்ம் சோ ஸ்வீட்..” என்று சொல்லி அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“ராஜி… இதுவரைக்கும் என் வாழ்க்கையில தோல்விய நான் சந்திச்சதே இல்ல தெரியுமா…??” அவள் தோளில் சாய்ந்திருந்த நிலையிலே இருக்க அவன் பேச ஆரம்பித்தான்.

“நான் எதிர்பார்த்த எதுவும் எனக்கு கிடைக்காம இருந்ததில்ல… அன்பான அம்மா, அப்பா… நல்ல ஃப்ரண்ட், பிடிச்ச படிப்பு, வேலை… இப்படி எல்லாமே எனக்கு கஷ்டமில்லாம கிடைச்சிருக்கு…

அம்மா, அப்பாவோட அன்பு எனக்கு திகட்ட திகட்ட கிடைச்சிருக்கு… இதுக்கும் சின்ன வயசுலயே ஹாஸ்டல் வாழ்க்கை தான், இருந்தும் அம்மாவையும் அப்பாவையும் நான் மிஸ் பண்ணதே இல்ல… அப்பா அடிக்கடி வந்து என்னை பார்த்துட்டுப் போவாரு… ஹாலிடேல வீட்டுக்குப் போனா, அம்மா அத்தனை பிரிவுக்கும் சேர்த்து பாசத்தை பொழிஞ்சுடுவாங்க… அப்படியும் சில டைம் அவங்களை மிஸ் பண்ற மாதிரி எனக்கு தோனுச்சுன்னா, அப்போ அதை ஈடு செய்யறது நிக்கியோட ப்ரண்ட்ஷிப் தான், ஜஸ்ட் எங்களோட தனிமையை போக்கிக்க ஆரம்பிச்ச நட்பு, இப்போ ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிற அளவுக்கு  வளர்ந்திருக்கு… எங்களுக்குள்ள என்னைக்குமே போட்டி, பொறாமை இருந்ததே இல்லை… அவனை பிரியணும்னுங்கிற நிலைமை எனக்கு இதுவரைக்கும் வந்ததில்ல, இனிமேயும் வராது…

அதே போல படிப்பு… நான் படிக்கணும்னு ஆசைப்பட்ட படிப்பு, அதுவும் நான் படிக்க நினைச்ச காலேஜ்ல, நிக்கியோட சேர்ந்து படிச்சேன்… நான் நினைச்ச காலேஜ்ல சீட் கிடைக்காம என்னோட மார்க்கோ, இல்லை பணமோ தடையா இருந்ததில்ல.. அதே போல தான் வேலையும், படிக்கும் போது என்ன பிஸ்னஸ் பண்ணலாம்னு யோசிச்சது தான், எல்லாம் நல்லப்படியா நடக்குமான்னு கூட பயந்தேன்… ஆனா நிக்கி, உங்க அப்பா விட்டுட்டு போன கம்பெனிய நடத்தலாம்னு சொன்னதும், முதல்ல் யோசிச்சாலும் அப்புறம் அது எனக்கு சரின்னு பட்டுது… இப்போ அதை நாம எல்லாம் சேர்ந்து சக்ஸஸா நடத்தவும் ஆரம்பிச்சிட்டோம்… அடுத்து உங்க அப்பாவோட இன்னொரு கம்பெனியையும் நம்ம கவனிப்புல கொண்டு வரப் போறோம்… அதையும் நல்ல நிலைக்கு கொண்டு வருவோம்…

இப்படி எதிலேயும் எனக்கு தோல்வி கிடைச்சதில்ல, அதுக்காக தோல்வியை சந்திக்கிற நிலை வந்தா நான் துவண்டு மூலையில உட்கார்ந்திருக்கும் ஆளும் இல்லை… எதிர்த்து போராடும் தைரியத்தை என்னோட அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காரு…  ஆனா முதல்முதலா தோல்வியை நினைச்சு பயந்தது உன் விஷயத்துல தான்,

உன்னை பார்த்த முதல் பார்வையிலேயே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட… நீ நிக்கியோட சிஸ்டர்னு தெரிஞ்சும், பர்ஸ்ட் யோசனையா இருந்தாலும், அப்புறம் நான் அதைப்பத்தி நினைக்கல…. உன்னோட காதல் எனக்கு ஈஸியா கிடைச்சிடும்னு நினைச்சேன்…. ஆனா உன்னோட காதலை அடைய, உன்கிட்ட காதலை சொல்ல இவ்வளவு கஷ்டம் வரும்னு நினைக்கவே இல்லை ராஜி… நான் எதிர்பார்த்த எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு, அப்படி சிலது கிடைக்காம போனாலும் அதுல சின்ன வருத்தம் தான் ஏற்பட்டிருக்கும், ஆனா நீ என் வாழ்க்கையில இல்லைன்னு ஒரு நிலைமை வந்திருந்தா, அது எனக்கு எவ்வளவு பெரிய வலியா இருக்கும் தெரியுமா..?? கண்டிப்பா அதுல இருந்து மீண்டிருக்கவே முடியாம ஆயிருப்பேன்…. அதை நினைக்கும் போது, உண்மையிலேயே இந்த நேரம் நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன் ராஜி..

“நீங்க பேசறதை கேக்கும்போது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜெய்…” அவனிடமிருந்து விலகி பேச ஆரம்பித்தாள்.

“கிட்டத்தட்ட உங்க மனநிலை தான் எனக்கும், ஆனா அதுல கொஞ்சம் வேறுபாடு இருக்கு… நீங்க எதிர்பார்த்ததெல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்கு… ஆனா என் லைஃப்ல அப்படி இல்ல…

பணம் இருந்தா எதையும் வாங்கிட முடியும்னு சொல்வாங்க… ஆனா அதால கண்டிப்பா அன்பை வாங்கவே முடியாது… சின்ன வயசுல அம்மா, அப்பா இறந்தப்போ எதுவும் தெரியல… ஆனா அதுக்குப்பிறகு நாங்க வாழ்ந்த வாழ்க்கை அம்மா, அப்பாவை ரொம்ப மிஸ் பண்ண வச்சுது… அம்மா, அப்பா இல்லன்னாலும் பரவாயில்ல.. அண்ணனோட கூட இருந்தா போதும்னு நான் எதிர்பார்த்தது நடக்கவே இல்ல… கார்டியனா யாராவது எங்களுக்கு பொறுப்பு ஏத்துக்கணும்னு சொன்னப்போ, அது அத்தையா இருக்கணும்… ஜானு, வைஷு கூடல்லாம் ஜாலியா இருக்கணும்னு எதிர்பார்த்தது நடக்கல…

சரி சித்தப்பா வீடு தான் நிலைன்னு தெரிஞ்சப்போ அதுக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் செஞ்சுக்க நினைச்சேன்… சித்தப்பாக்கு வேண்டியது சொத்து, அதுக்காகவாவது போலியா அன்புக் காட்டினாரு… ஆனா சித்தி அப்படி கூட அன்புக் காட்ட விரும்பல… அவங்களுக்கு என்னைப் பார்த்துக்கிட்டா, அப்பா கொடுக்கறதா இருந்த சொத்து வேணும்… ஆனா அவங்க பேமிலில நான் ஒரு இடைஞ்சல்… ஒருக்கட்டத்துல பசியோட சாப்பாடுக்கு எதிர்பார்த்திருந்த நாள் கூட வந்துச்சு… ஆனா அந்த நேரம் அது கிடைக்கவே கிடைக்காது.. அதுக்கப்புறம் எதையும் எதிர்பார்த்து காத்திருக்கவோ, ஏமாறவோ நான் தயாரா இல்லை… அதனாலேயே வாழ்க்கையை அது இஷ்டத்துக்கு போக விட்டேன்… அப்புறம் நான் எதிர்பார்த்த ஒன்னு நிக்கி, ஜானுவோட கல்யாணம், அவங்கக் கூட ஒன்னா சேர்ந்து இருக்க நினைச்சேன்…

ஆனா அந்த சந்தர்ப்பம் வந்தப்ப, நான் சிங்கப்பூர்ல இருந்தேன்… இப்போ அவங்கக் கூட ஒன்னா இருக்க சான்ஸ் கிடைச்சுது… ஆனா அப்போ என்னோட எதிர்பார்ப்பு வேறயா இருந்தது… அது உங்க காதல் எனக்கு கிடைக்கணும்னுங்கிற எதிர்பார்ப்பு… எதுவுமே நான் நினைச்ச மாதிரி நடக்கல… ஆனா இந்த எதிர்பார்ப்பு மட்டும் நடக்கணும்ங்கிற தவிப்பு, இன்னொரு பக்கம் எதிர்பார்த்த எதுவுமே நடக்காத மாதிரி இதுவும் நடக்காம போய்டுமோன்னு பயம்… நான் எவ்வளவு தவிச்சுப் போய்ட்டேன் தெரியுமா..?? மத்த விஷயத்துல அதை என்னால தாங்கிக்க முடிஞ்சுது… ஆனா உங்க விஷயத்துல என்னால அதை தாங்கிக்க முடியாது ஜெய்..” சொல்லியப்படி அவனை அணைத்துக் கொண்டாள்.

“அடடா… இந்த நேரத்து சந்தோஷத்தை உன்கிட்ட ஷேர் செஞ்சுக்க நினைச்சு, உன்னை வருத்தப்பட வச்சுட்டனா… சாரிடா.. ஆனா ஒன்னு சொல்றேன், இதுவரைக்கும் எப்படியோ, ஆனா இனி நீ எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களையும் நிறைவேத்தறது மட்டும் தான் என்னோட குறிக்கோள்…

“அது எனக்கும் தெரியும்… சரி நம்மல தேடிக்கிட்டு எல்லோரும் வர்றதுக்குள்ள, வாங்க போகலாம்…” அவன் கைகளைப் பிடித்தப்படியே அவனைக் கூப்பிட,

“ஹே ஒரு நிமிஷம்… இன்னும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” என்று அவளை நிறுத்தினான்.

இன்னொரு முக்கியமான விஷயம், உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி இந்த சஞ்சய் எப்படி இருந்தேன் தெரியுமா..?? அம்மா, அப்பா, நிக்கி இவங்க மட்டும் தான் என்னோட உலகம்… இவங்களை தாண்டி மத்தவங்களை பத்தி நான் யோசிச்சதே இல்ல… உறவுகளெல்லாம் போலித்தனமானவங்கன்னு தான் நினைச்சேன்… ஆனா இன்னிக்கு ஜானு சொன்ன மாதிரி, அண்ணாங்கிற அந்த ஒரு வார்த்தை மந்த்ராக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்துது பார்த்தீயா..??

என்னோட பக்கம் அம்மா மட்டும் போதும், எந்த உறவும் வேண்டாம்னு சொல்லுவேன், ஆனா இன்னிக்கு நீ, நிக்கி, உன்னை சேர்ந்த மத்தவங்க இவங்களையெல்லாம் பார்த்துதான், உறவுகளோட மதிப்பே எனக்கு புரிஞ்சுது… எல்லாம் உறவுகளும், எல்லா நேரத்திலையும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… சில சமயம் உறவுகள் மூலமா பிரச்சனைன்னா, இது மாதிரி நல்ல நாள்ல அவங்க நம்மக்கூட சேர்ந்திருக்கிறதும் ஒரு சந்தோஷம் தான், இன்னைக்கு அம்மா எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க தெரியுமா..?? எல்லா க்ரெடிட்டும் உனக்கு தான்,

“ம்ம் அப்படியா..?? அப்போ அந்த க்ரெடிட்க்கு ஏதாவது கிஃப்ட் வேணுமே.. என்ன கேக்கலாம்..?” யோசிப்பது போல் நடித்தாள்.

“உனக்கு இல்லாத கிஃப்ட்டா.. என்ன வேணுமோ கேளு… வேணும்னா இப்போ உடனே ஒரு கிஃப்ட் ரெடியா இருக்கு தரட்டுமா??” கண்ணடித்துக் கேட்டான்.

“ஹேய்.. நீங்க என்ன கிஃப்ட் கொடுக்கப் போறீங்கன்னு தெரியுது… அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை…”

“ராஜி… இது காதலர்களா நமக்கு லாஸ்ட் டே இல்லையா..?? அதை செலப்ரேட் செய்ய வேண்டாமா..?? இங்கப் பாரு அன்னைக்கு மாதிரி அதிரடியா ஏதும் செய்யாம, உன்கிட்ட பர்மிஷன் தான கேக்கறேன்… ப்ளீஸ் ராஜி.. ப்ளீஸ்..” அவன் கெஞ்ச,

சட்டென்று அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லாம், இப்போ இது போதும்” என்று சொல்லியப்படியே படியிறங்கி சென்றாள்.

உறவுகள் அனைவரும் ஒன்றுக் கூடியிருக்க, அதுவும் நிகேதன் ஜானவி, மோகன் மந்த்ரா, ராகவ், வைஷு என இந்த ஜோடிகள் அனைவரும் மணமேடையில் இருக்க சஞ்சய் நீரஜா கழுத்தில் தாலியை கட்டினான்.

காதல் திருமணத்தில் முடிய ஆயிரம் தடைகள் வரும், பெற்றவர்கள், ஜாதி, மதம், அந்தஸ்து, சகோதரர்கள், உறவினர்கள், நட்பு, நோய், மரணம் இப்படி பல தடைகள் உண்டு. ஆனால் இவரது காதலுக்கு தடை இவர்களே தான், இவர்களுக்குள் இருந்த தயக்கம், கோபம், ஈகோ, பிடிவாதம் இதெல்லாம் தான் இவர்கள் காதலுக்கு தடையாக இருந்தது. இருவரில் ஒருவர் மௌனத்தை உடைத்திருந்தால் கூட இருவரின் காதலும் என்றோ திருமணத்தில் இணைந்திருக்கும்.

அன்று இரவு சஞ்சய் வீட்டில் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம். முறைப்படி அந்த சடங்கு நீரஜாவின் வீட்டில் தான் நடைபெற வேண்டும், ஆனால் எப்போது நீராஜா தன் மனைவியாய் தன் வீட்டிற்கு வரப்போகிறாள் என்று காத்திருந்த சஞ்சய், இங்கேயே இந்த சடங்குகளை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டான். அதுமட்டுமல்ல, அவனது அறையை, அதாவது அவர்களின் இருவரது அறையாக மாறப்போகும் அந்த அறையை அவனே முழுக்க முழுக்க அவளுக்கு பிடித்த ரோஜா மலர்களால் அலங்கரித்தான்.

கீழே உள்ள அறையில் நீரஜாவோ, சஞ்சய் அவளுக்காக வாங்கி வைத்திருந்த, வெள்ளை நிறத்தில் பல வண்ணங்களில் ரோஜாப் பூக்களால் எம்ப்ராய்ட்ரி போட்ட புடவையை கட்டி தயாராகினாள். ஜானவியும், மந்த்ராவும் அவளை கேலிச் செய்துக் கொண்டே அலங்கரித்தனர். பின் அம்பிகா கொண்டு வந்த பால் சொம்பை வாங்கிக் கொண்டு, அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு அவர்களின் அறைக்குச் சென்றாள்.

இன்னும் நீரஜா வராததால், அவளின் வருகைக்கு காத்திருந்தப்படி பால்கனியில் நின்றிருந்தான் சஞ்சய். அவனது தேவதை வரும் வரையிலும், அங்கே தோட்டத்தில் உள்ள வெள்ளை ரோஜாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

மெல்ல கதவை திறந்து உள்ளே நுழைந்த நீரஜா சஞ்சயை அறையில் காணாமல் தேடினாள். பின் அவன் பால்கனியில் நின்றிருப்பதை பார்த்து பால் சொம்பை வைத்துவிட்டு அவனருகே சென்றாள். அவனோ அவள் வந்தது கூட தெரியாமல் இன்னும் அந்த ரோஜாவையே பார்த்திருந்தான்.

“க்க்கூம்..” என்று மெல்ல குரல் கொடுத்தாள்,  அப்போது தான் அவளை கவனித்தான் அவன், பார்த்தவன் அசந்துப் போனான்.

“ஆமாம் நான் வந்ததுக் கூட தெரியாம அங்க என்ன பார்வை…??”

“அதுவா… இந்த வெள்ளை ரோஜா வரவரைக்கும், அந்த வெள்ளை ரோஜாவை சைட் அடிச்சிக்கிட்டு இருந்தேன்…”

“ஹலோ… என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே நீங்க சைட் அடிச்ச விஷயத்தை சொல்லுவீங்க…”

“ம்ம் பொறாமை… ஹே உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? நீ இல்லாத அந்த 3 வருஷத்துல உன்னோட ஞாபகம் வர்றப்பல்லாம், இந்த ரோஜா செடியில பூத்திருக்க ரோஜாவை தான் பார்த்துப்பேன்… பாரு எங்கேயாச்சும் இந்த ரோஜாவுக்கும் அந்த ரோஜாவுக்கும் வித்தியாசம் தெரியுது… அப்போ உன்னைப் பார்த்தா என்ன..?? இல்லை அந்த ரோஜாவை பார்த்தா என்ன..?? சொல்லு..”

“அப்படியா..?? அப்போ நைட் முழுக்க அந்த ரோஜாவை சைட் அடிச்சிக்கிட்டே உக்காந்திருங்க… நான் போய் தூங்கறேன்…” என்று அறைக்குள் நுழைய  காலடி எடுத்து வைக்கப் போனவளை கைகளைப் பிடித்து தடுத்தான்.

“ஹேய்… உனக்காக வெய்ட் பண்ணிகிட்டு தான் இங்க நின்னுக்கிட்டு இருந்தேன்… இப்போ இந்த நேரம் நான் ரோஜாவை சைட் அடிக்கிறத விட முக்கியமான நேரம்னு எனக்கு தெரியாதா..??”

“என்ன முக்கியமான நேரம்?? அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. ஜெய் நேத்து நீங்க சொன்னதை நான் யோசிச்சுப் பார்த்தேன்… நாம 3 வருஷத்தக்கு மேல காதலிக்கிறோம்… ஆனா ஒரு மாசம் தான் நமக்கு பேசி பழக சான்ஸ் கிடைச்சுது… நாம நிறைய விஷயங்களை பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க நமக்கு டைமே கிடைக்கல… அதனால நமக்கு கல்யாணம் ஆனா என்ன..?? கொஞ்ச நாள் நாம நல்லா பேசி புரிஞ்சிக்கணும்… மத்ததெல்லாம் அப்புறம் தான்.. என்ன ஜெய் நான் சொன்னது கரெக்ட் தான..” அவள் கேட்டதும் திருதிருவென்று அவன் விழித்தான். அதைப் பார்த்து வந்த கேலிப் புன்னகையை அவள் அடக்கிக் கொண்டாள்.

“ராஜி… நீ சும்மா தானே சொல்ற… நேத்து நீ சொன்னதை மறந்துட்டியா..?? கல்யாணம் முடியட்டும் அப்புறம் தான் எல்லாம்னு சொல்லிட்டு ஓடிப் போன, அந்த எல்லாமே கிடைக்கும்னு நான் இவ்வளவு நேரமா காத்திருக்கேன் தெரியுமா..??”

“அது ஏதோ அப்போ உங்கக்கிட்ட இருந்து தப்பிக்க சொன்னது ஜெய்.. ஆனா இப்போ சொன்னது தான் உண்மை.. எனக்கு என்னோட ஜெய்யை பத்தி தெரியும்.. எனக்காக நீங்க இதை கூட செய்யமாட்டீங்களா..??”

“என்னோட ராஜி பட்டுல்ல, செல்லம்ல்ல… உண்மையிலேயே இந்த சஞ்சயோட ஃபீலிங்ஸ் புரியவே இல்லையா..?? சுமார் ரெண்டு மணி நேரம் இந்த ரூமை நான் டெகரேட் பண்ணது எதுக்காம்… நாம பேசிக்கிட்டு உக்கார்ந்திருக்கவா..?” பாவமாக அவன் கேட்க, கண்ணில் குறும்போடு, ஆனால் அதை முகத்தில் காட்டாமல் அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

“ம்ம் இப்படி ஒரு இடத்துல பேசிக்கிட்டு இருந்தா எப்படியிருக்கும்..?? என்ன சொல்றீங்க ஜெய்..??”

“இந்த சஞ்சயோட ஃபீலிங்ஸ புரிஞ்சிக்காம இப்படியே பேசிக்கிட்டு இருந்தா.. அப்புறம் உன்னை ரேப் பண்றத தவிர வேற வழியே இல்லை..”

“ஜெய்… ஒரு முத்தத்துக்கே 3 வருஷம் சிங்கப்பூர்ல போய் உக்கார்ந்துட்டேன்… இப்போ இப்படி நீங்க ஏதாவது செஞ்சீங்க… அப்புறம் அமெரிக்காவுக்கோ இல்லை லண்டன்க்கோ போய் செட்டில் ஆயிடுவேன் பார்த்துக்கோங்க… அப்புறம் உங்க இஷ்டம்..”

“அம்மா தாயே… நீ செஞ்சாலும் செய்வ.. நீ சொன்ன மாதிரியே நாம பேசிக்கிட்டே இருப்போம்..” அவன் சொல்வதை உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்போடு அவள் கேட்டுக் கொண்டிருக்க,

“அந்த 3 வருஷமே போதும்… இனி தாங்காதும்மா..” என்று சொல்லியப்படியே, அவள் எதிர்பார்க்காத நேரம், அவளை இரு கைகளால் தூக்கிக் கொண்டான்.

“ஹே இது சீட்டிங் சீட்டிங்..” என்று கை கால்களை உதறியப்படியே, “பேசிட்டு இருக்கலாம்னு சொல்லிட்டு என்ன இது ஜெய், விடுங்க” என்றாள்.

“உன்னோட வாய் தான் பேசிட்டு இருக்கலாம்னு சொல்லுச்சு… ஆனா உன்னோட கண்ணு இதெல்லாம் பொய்னு சொல்லுதே… இப்பல்லாம் உன்னோட கண்ணு என்ன சொல்லுதோ அதையே கேக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேனே…”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. விடுங்க என்னை..”

“நான் சொல்றது உண்மை தான் ராஜி… கண்ணாலேயே கதை பேசற தெரியுமா..?? உன்னோட கண்ணு இப்போ என்ன சொல்லுதுன்னா… எதுக்குடா இன்னும் வெட்டியா பேசிக்கிட்டு இருக்கன்னு என்கிட்ட சொல்லுது…” என்றவன்,

கதைகளை பேசும் விழியருகே..

எதை நான் பேச என்னுயிரே..

காதல் சுடுதே.. காய்ச்சல் வருதே..

என்றுப் பாட,

அவன் தோள்களில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவள், “என்ன பாஸ்.. பாட்டெல்லாம் பாட்றீங்க..” என்றுக் கேட்டதற்கு,

“ம்ம் எப்போ உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே ஒரே லவ் சாங்கா கேக்க ஆரம்பிச்சிட்டேன்… பாத்ரூம் சிங்கர் மாதிரி, நான் பெட்ரூம் சிங்கரா மாறிட்டேன்… இனி டெய்லி ஒரு பாட்டுன்னு பாடி, எப்படி ரொமான்டிக்கா மாறப் போறேன் பாரு..” என்று பதில் கூறினான்.

“ம்ம் என்னத்தான் நீங்க ரொமான்டிக்கா பாடினாலும், எனக்கு எப்பவும் நீங்க உம்மனாமூஞ்சி சஞ்சய் தான், அதை நல்லா ஞாபகத்துல  வச்சுக்கோங்க பாஸ்..”

“அப்படியா..?? இந்த உம்மனாமூஞ்சி சஞ்சய் இப்போ என்னல்லாம் செய்யப் போறான்னு பார்க்கத் தானே போற..”

“போங்க ஜெய் நீங்க ரொம்ப மோசம்..” வெட்கத்தோடு அவள் சொல்ல, அந்த வெட்கத்தை பருகிடும் ஆசையோடு அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு,

சென்னை விமான நிலையம்

மலேசிய விமானம் தரையிறங்க கொஞ்சம் தாமதமாகும் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சஞ்சயை அழைத்துப் போக வந்த நீரஜாவோ அதைக் கேட்டு எரிச்சலாகவில்லை. காத்திருப்பதும் ஒரு சுகம் தானே, அதிலும் சஞ்சய்க்காக அவள் மட்டுமல்ல, இன்னொரு ஜீவனும் காத்திருந்தது.

எட்டு மாத கருவை சுமந்துக் கொண்டிருந்த அந்த மேடிட்ட வயிற்றை மெல்ல தடவிப் பார்த்துக் கொண்டாள் அவள், “இந்த மாதிரி நேரத்துல நீ தனியா  ஏர்ப்போர்ட்டுக்கு போகவேண்டாம் நிரு.. நான் உன்கூட வரேன்” என்று நிகேதன் சொன்னதற்கு, “நான் தனியாவா போறேன்… அதான் அப்பாவை பார்க்கணும்னு இந்த குட்டியும் கூட வராங்கல்ல… நாங்க இரண்டு பேர் இருக்கோம்… அப்புறம் என்ன நிக்கி..??” என்று வயிற்றில் கை வைத்தப்படி கூறினாள்.

“சஞ்சய் என்ன சின்னக் குழந்தையா..?? ஏர்ப்போர்ட்ல இருந்து ஒரு டாக்ஸி புடிச்சு வீட்டுக்கு வரப் போறான்.. இல்ல நான் போய் கூட்டிட்டு வரப் போறேன்… சொன்னா கேக்கறதே இல்லை.. ஆன்ட்டியும், சஞ்சயும் உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க.. சரி பத்திரமா போய்ட்டு வா..” என்று அரை மனதாக அவளை நிகேதன் அனுப்பி வைத்தான்.

உண்மையிலேயே இப்போது முக்கியமான மீட்டிங் இருந்தது அவனுக்கு, இல்லை அவளை தனியாக அனுப்பியிருக்க மாட்டான். ஜானவிக்கும் செல்ல முடியாத சூழ்நிலை, சஞ்சய் தானே வந்துவிடுவதாக கூறியும் அவன் பேச்சை கேட்காமல் இதோ விமான நிலையத்திற்கு வந்துவிட்டாள் அவள்,

மூன்று மாத பிரிவின் ஏக்கம், சீக்கிரம் அவனை காண வேண்டும் என்ற தவிப்பு, இவளா மூன்று வருடம் அவனை பார்க்காமல் சிங்கப்பூர் ஓடினாள்!! நம்பத்தான் முடியவில்லை அவளால், இதற்கும் தினம் அலைபேசியில் உரையாடல், கணினி திரையிலும், அலைபேசி திரையிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இருந்தும் அவனை நேரில் கண்டு அவன் ஸ்பரிசத்தை உணர பெண்மனம் துடிக்கின்றது.

“கல்யாணத்துக்கு அப்புறம் சில பொறுப்புகள் வந்துவிடும், அப்போ இப்படி நாம காதலிக்க முடியுமா..??” திருமணத்திற்கு முன் இரவு சஞ்சய் கேட்டது இப்போது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் இன்னும் கூட அந்த காதல் குறையவில்லை தான், இனிமேலும் குறையாது. காதலர்களாய் இருந்தபோது அவர்களுக்குள் இருந்த கோபமும் ஈகோவும் திருமணத்திற்கு பிறகு காணாமல் போயிருந்தது.

திருமணம் ஆன இரண்டாவது நாள் தேன்நிலவு சென்று வந்ததிலிருந்து மூன்று மாதம் வரை, பிரிவு என்ற ஒன்றை அவர்கள் அறிந்ததே இல்லை, இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை என்பதால் காலை தொடங்கி இரவு வரையும் ஒன்றாகவே இருப்பர். நீங்க எப்படி 3 வருஷம் காதலை சொல்லாம இருந்தீங்களோ தெரியல.. ஜானவியும் நிகேதனும் அடிக்கடி கேலி செய்வர்.

முக்கியமான வேலை என்று சஞ்சய் விலகி இருக்கும் நேரம் வந்தால், அந்த நேரம் அந்த குறையை அம்பிகா தீர்த்துவிடுவார். அவருக்கு பெண் பிள்ளை இல்லாத குறையை நீரஜாவை கொண்டே அவர் தீர்த்துக் கொண்டார். மருமகளாய் நடத்தாமல், மகளாய் இல்லை ஒரு குழந்தையாய் நடத்தினார்.

அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளுக்கு பிடித்த சமையல் தான் பெரும்பாலும் சமைப்பார். வேலை முடிந்து அவள் சோர்வாக வீடு திரும்புகையில் அவளை தன் மடியில் சாய்த்து தலையை தடவிக் கொடுப்பார். அன்னை மடிக்காக ஏங்கிய அவளுக்கு அந்த நிமிடங்கள் சொர்க்கம்.

சில சமயங்களில் சஞ்சய் வேண்டுமென்றே சீண்டுவதற்காக, “அம்மா.. ராஜி வந்ததுக்கு பிறகு என்னை கண்டுக்கறதே இல்லை..” என்று சொல்லி அவனும் அம்பிகாவின் மடியில் தலை சாய்த்துக் கொள்வான். படிப்பு, வேலை என்று வளர்ந்த ஆண்மகனாய் மாறிப் போயிருந்த தன் மகன் மீண்டும் குழந்தையாய் மாறியது போன்று அவருக்து தோன்றும், இரண்டு பேரும் மடியில் தலை வைத்து படுத்திருக்க, இருவரின் தலையை கோதியப்படி அவர் இருக்க, அப்படியே மூன்று பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பர்.

“ஆன்ட்டி… எனக்கு சமைக்க கத்துக் கொடுங்க.. எவ்வளவு நான் தான் நீங்க தனியா எல்லா வேலையும் செய்வீங்க… உங்களுக்கு எந்த ஹெல்ப்பும் செய்யாம இருப்பது எனக்கு கஷ்டமா இருக்கு..” நீரஜா அம்பிகாவிடம் கூறினால்,

“ம்ம் ஒரு பேரனையோ இல்ல பேத்தியையோ சீக்கிரம் பெத்துக் கொடுத்திடு, அப்புறம் எல்லாத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்துட்டு, நான் ஒதுங்கிக்கிறேன். அதுவரைக்கும் நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..” என்பார்.

புகுந்த வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தாலும் பிறந்த வீட்டை மறக்க முடியுமா?? அலுவலகத்தில் நிகேதனை தினமும் பார்த்தாலும், அடிக்கடி சென்று ஜானவியையும் ஜெய்க்குடியையும் பார்த்துவிட்டு வருவாள். அவர்களும் இங்கு வந்து சிறிதுநேரம் இவளோடு இருப்பர்.

இதுமட்டுமில்லாமல் இப்போதெல்லாம் வார விடுமுறை நாட்களில் முன்பு போல ஈ சி ஆரில் உள்ள கடற்கரை வீட்டிற்குச் சென்று வருகிறார்கள். சஞ்சய், நீரஜா, நிகேதன், ஜானவி ஜோடிகள் மட்டுமல்லாமல், சஞ்சய் நீரஜாவின் திருமணத்திற்கு பிறகு மந்த்ரா மோகனுக்கும், வைஷு ராகவிற்கும் அடுத்தடுத்து திருமணம் நடக்கவும் அவர்களும் இவர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

அனைவரும் அந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பர். ஆனால் அங்கே சென்றால் சஞ்சய் நிலைமை கொஞ்சம் பாவம் தான், தன் அண்ணன் மகன் ஜெய்யை பார்த்தால் போதும், இந்த ஜெய்யை நீரஜா மறந்துவிடுவாள். அந்த கடற்கரை வீட்டில் ஜெய்க்குட்டியோடு தான் பொழுதை கழிப்பாள்.  ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக வீட்டிற்கு வந்ததும் அவளிடம் சஞ்சய் வசூல் செய்துவிடுவான்.

“போங்க ஜெய் நீங்க ரொம்ப மோசம்..” இப்போதெல்லாம் நீரஜா வாயிலிருந்து இந்த மந்திர வாக்கியம் தான் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

சஞ்சயும் நிகேதனும் ஏற்கனவே முடிவெடுத்தது போல், நிகேதனின் தந்தை பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு தொழிலையும் இப்போது இவர்கள் கவனிப்பில் கொண்டு வந்துவிட்டார்கள். அந்த கம்பெனியை முழுக்க நிகேதனே பார்த்துக் கொள்ள, இந்த கம்பெனியை சஞ்சயும் நீரஜாவும் கவனித்துக் கொள்கிறார்கள். இப்போது தொழிலில் முன்னேற்றம் பெருகுவதால், ஜானவியும் அலுவலகத்திற்கு சென்று நிகேதனுக்கு உதவியாக இருக்கிறாள். மந்த்ராவும் திருமணத்திற்கு பின் ரிஸப்ஷனிஸ்ட் வேலையை விட்டுவிட்டு, மோகனோடு அவனது தொழிலை கவனித்துக் கொள்கிறாள். வைஷு, ராகவின் வாழ்க்கையும் சந்தோஷமாக செல்கிறது.

இந்நிலையில் தான் நீரஜா தாய்மை அடைந்தாள். அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த அதே நேரம் தான் மலேசியாவிலிருந்து ஒரு கம்பெனி இவர்களோடு பார்டனர்ஷிப் முறையில் இவர்களது தயாரிப்பை மலேசியாவில் தொடங்குவதற்கான வாய்ப்போடு வந்தனர். இது உண்மையிலேயே மிகப் பெரிய வாய்ப்பு, ஆனால் சஞ்சய்க்கு தான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள யோசனையாக இருந்தது.

நீரஜா கருவுற்றிருக்கும் நேரத்தில் அவளோடும் நேரம் செலவழிக்க வேண்டும், இந்த நேரத்தில் வியாபாரத்தை பெருக்க நினைத்து பிஸியாகி விடக் கூடாதே என்று நினைத்தான். அதை அனைவரிடமும் கூறியப் போது, நீரஜா உட்பட அனைவரும் இந்த வாய்ப்பை விடுவது நல்லதல்ல என்று அவனை சம்மதிக்க வைத்தார்கள்.

அதிலிருந்து அடிக்கடி அவன் மலேசியா சென்று வர வேண்டியிருந்தது. ஆனால் அது ஓரிரெண்டு நாட்களாக தான் இருக்கும், ஆனால் இவர்கள் வேலையை ஆரம்பிக்கும் நாள் வந்தபோது அங்கேயே இரண்டு மூன்று மாதம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. நீரஜாவிற்கும் மாதங்கள் அதிகரிக்க,  இப்படிப்பட்ட நேரத்தில் அவளை விட்டு செல்ல வேண்டுமா..?? என்று அவன் தயங்க, அம்பிகா, ஜானவி, நிகேதன் மூவரும் நீரஜாவை கவனமாக பார்த்துக் கொள்வதாக கூறினர். நீரஜாவும் அவனுக்கு ஆயிரம் சமாதானங்கள் சொல்லி அனுப்பி வைத்தாள். அரை மனதாக இவனும் மலேசியா கிளம்பி சென்றான்.

நடுவில் வந்து போக நினைத்தாலும், அங்கே இருந்த வேலைப்பளுவால் அவனால் இங்கு வரமுடியாமல் மூன்று மாதம் முடிந்து இப்போது தான் அவனுக்கு வர நேரம் கிடைத்தது. இதிலிருந்து நீரஜாவிற்கு குழந்தைப் பிறக்கும் வரை உடன் இருப்பதற்காக வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு கிளம்பினான்.

விமானம் தரையிறங்கி பயணிகள் வருவது தெரிந்ததும் நீரஜா சஞ்சயின் வரவை எதிர்பார்த்து நின்றாள். சில நிமிடங்களுக்குப் பிறகு சஞ்சய் அவள் கண்களில் பட்டான். வேலை அதிகம் போலும், இளைத்தது போல் தெரிந்தான். அவனை பற்றிய வருத்தத்தில் நின்றிருக்க அவனோ புன்னகைத்தப்படி வந்தான்.

“என்ன சார் முகத்துல இப்படி ஒரு ஸ்மைல்” யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவன் அருகில் இருந்த பெண்ணை பார்த்தாள். இவள் பார்க்கும் நேரம் அவனுக்கு பக்கத்தில் நெருக்கமாக வந்து அந்த பெண்  ஏதோ சிரித்துப் பேசினாள்… “யார் அவள்..??” இவள் மனம் கேள்விக் கேட்க, அவனோ இவள் வந்திருப்பதைக் கூட கவனிக்காமல், அந்த பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தான்.

இவள் அருகே வரும்வரையிலும் இவளை கவனிக்காமல் வந்தவன், அந்த பெண்ணுக்கு கையசைத்து பை சொல்லொவிட்டு, பின்பு தான் இவளை பார்த்தான்.

“ராஜி… நீ எதுக்குடா ஏர்ப்போர்ட்டுக்கு வந்த.?? அதான் நானே வரேன்னு சொன்னேன் இல்ல….” இவன் பேசிக் கொண்டே போக, அவளோ இவனை முறைத்தப்படி நின்றாள்.

“என்னடா..??”

“யார் அந்தப் பொண்ணு… நான் இங்க நிக்கறதுக்கு கூட தெரியாம, அவக்கிட்ட சிரிச்சு பேசிக்கிட்டு வர்றீங்க…?”

“ஓ அந்தப் பொண்ணா… அவ என்னோட ஃப்ரண்ட்.. நாம பார்டனர்ஷிப் வச்சிருக்கோமே அந்த கம்பெனியில தான் அவளும் வேலைப் பார்க்கிறா..?? நான் ஊருக்கு போறேன்னு சொன்னதும் அவளும் ஊருக்குப் போகணும், தனியா போகணுமே நானும் உங்கக் கூடவே வரவான்னு கேட்டா.. அதான் அப்படியே நாங்க ரெண்டுப்பேரும் வந்தோம்.. நீ வருவன்னு நான் எதிர்பார்க்கலடா..??”

“ஓ அதான் அவக்கூட நெருக்கமா இளிச்சு பேசிட்டு வர்றீங்களா?? 3 மாசம் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?? இந்த மாதிரி நேரத்துல கூட உங்களை பார்க்க ஏர்ப்போர்ட்க்கே வந்தா.. நீங்க என்னை எதிர்பார்க்கலன்னு சொல்றீங்க… உங்களுக்கு எவ்வளவு தைரியம்..??” கோபமாக சொல்லியப்படியே, கையிலிருந்த கைப்பையால் அவனை அடிக்க ஆர்ம்பித்தாள்.

“ஹே ராஜி அடிக்காத… இங்கப்பாரு நீ வருவன்னு எனக்கு தெரியாதா..?? நீ கண்டிப்பா வந்திருப்பன்னு தெரிஞ்சு தான் சும்மா இப்படி செஞ்சேன்… சிங்கப்பூர்ல இருந்து நீ வெற்றிக் கூட வந்தப்ப, அந்த நேரம் உங்களை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு சாரி கேட்டதுக்கு மன்னிக்கிற மாதிரி மன்னிச்சு, அப்புறம் எத்தனை முறை எப்படி  வெற்றியை நான் காதலிப்பேன்னு நீங்க நினைக்கலாம்னு சண்டைப் போட்ருக்க.. இப்போ தெரியுதா..?? நமக்கு கல்யாணம் ஆனப்பிறகு ஒரு பொண்ணு கூட பேசிக்கிட்டு வந்ததுக்கே உனக்கு எப்படி கோபம் வருது..?? அந்த நேரம் எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பாரு..”

“அப்போ வேணும்னே தான் இதெல்லாம் செஞ்சீங்களா..?? அதுக்காக இன்னொரு பொண்ண வேணும்னே கூட கூட்டிட்டு வருவீங்களா..?? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு  மறந்துட்டீங்களா..?? பொண்டாட்டி கர்ப்பமா இருக்காளேன்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா.. போங்க….” கோபத்தில் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

“ராஜி… நான் என்ன சொன்னாலும் எல்லாம் நம்பிட்ற.. அந்த பொண்ணை நான் ப்ளைட்ல தான் பார்த்தேன்.. என்னோட பக்கத்து சீட்ல தான் உக்கார்ந்திருந்தா.. பார்த்ததுமே அண்ணான்னு கூப்பிட்டு பேசினா.. அதான் அவக்கூட பேசிக்கிட்டு வந்தேன்… அவளுக்கு கல்யாணம் கூட ஆயிடுச்சு… அங்கப்பாரு அவ புருஷன் தான் அவளை கூட்டிடுப் போக வந்திருக்கான்..” என்று காண்பித்தவன்,

“என்னோட பொண்டாட்டிக்கு இன்னும் என்னை இன்னொரு பொண்ணுக் கூட பார்த்தா பொறாமை வருதேன்னு சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேண்டா.. மத்தப்படி வேற ஒன்னுமில்ல..” என்று சொல்லி அவன் சிரிக்க,

“போங்க ஜெய்.. நீங்க ரொம்ப மோசம்..” என்று திரும்ப  அவனை கைப்பையால் அவள் அடிக்க ஆரம்பித்தாள்.

நீரஜாவின் கண்களாவது தன்னிடம் பேசாதா?? என்று தவம் கிடந்த சஞ்சய்க்கு, இன்று அவள் கண்கள் என்ன..?? வாயும் பேசும் கூடவே கைகளும் பேசும் என்று அவள் அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கிறாள். அது கூட அவனுக்கு சுகமாக தான் இருந்தது. அடிக்கும் அவள் கைகளை தடுத்து, விமான நிலையம் என்றுக் கூட பார்க்காமல், அவளை அணைத்துக் கொண்டான்.

உயிரே உயிரே உனைவிட எதுவும்…

உயிரில் பெரிதாய் இல்லையடி…

                                சுபம்