KPEM 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 9
இரண்டு கார்களும் மகாபலிபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சஞ்சய் கார் ஓட்டிக் கொண்டிருக்க, அம்பிகாவும் வைஷுவும் பின் சீட்டில் கதை அளந்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதெல்லாம் அவன் கவனத்தில் பதியவில்லை, அவன் எண்ணம் முழுவதும் நீரஜாவை பற்றியே இருந்தது.
திடிரென்று அவளுக்கு என்ன ஆனது…?? காலையிலிருந்து அவள் பாராமுகம் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. அவன் மேல் அவளுக்கு வரும் கோபமும் அதில் உள்ள உரிமையும் காதல் தான் என்று அவனை நினைக்க வைத்தாலும், அவளின் அடுத்த நடவடிக்கை அப்படி இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முன்பு இப்படி தான் அவள் நடந்துக் கொண்டதை வைத்து காதல் என்று ஏமாந்தான். அதனாலேயே இப்போது அவளின் நடவடிக்கையை வைத்து அப்படி தீர்மானிக்க முடியவில்லை,
நேற்று இரவு கடற்கரையில் இனிமையாக பொழுதை கழித்துவிட்டு, பின் நிகேதனும் ஜானுவும் வந்ததும் அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றனர். “குட் நைட் பாஸ்” என்று இரவு வணக்கம் வேறு சொல்லி அனுப்பினாள்.
அதன்பிறகு காலை அவன் எழுந்து வரும்போது அவள் எழுந்திருக்கவில்லை, நிகேதனோடும், வெற்றியோடும் அவன் ஜாகிங் சென்று விட்டான்.
பின் மூவரும் ஜாகிங் முடித்து வீட்டிற்குள் வரும்போது வாசலிலேயே வரவேற்றவள், “என்ன நிக்கி, வெற்றி ஜாகிங்ல்லாம் போறீங்க…” என்று கேலிப் பேசிக்கொண்டே அவர்களோடு இணைந்துப் போனவள், அவர்களோடு வந்த அவனை கண்டுக் கொள்ளவேயில்லை,
அதன்பின்னும் வெற்றியோடு மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். காலை உணவு சாப்பிடும் போதும் கூட அப்படியே நடந்துக் கொண்டாள். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, என்ன பிரச்சனை என்று அவனால் நேரடியாகவும் கேட்க முடியவில்லை,
பின் அனைவரும் மகாபலிபுரம் செல்ல ஆயத்தமாகி வெளியில் வந்த போது, தனது காரில் அவள் ஏறுவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ வைஷுவிடம்… “வைஷு நீ ஆன்ட்டிக் கூட கார்ல வா.. நான் அந்த கார்ல வரேன்… பாவம் வெற்றி என்னோட கெஸ்ட்டா வந்திருக்காரு… அவர் கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும் இல்ல…” என்று சொல்லிவிட்டு நிகேதன் காரில் ஏறிக் கொண்டாள்.
அவன் எதுவும் தவறு செய்ததாகவும் தெரியவில்லை, அவளுக்கு அவன் மேல் காதல் என்று தெரிந்திருந்தால் கூட அவளின் இந்த செயல்களுக்கு விளக்கம் கேட்கலாம், இப்போது எப்படி முடியும்? அவளோடு சுமூகமானப் பின் காதலை வெளிப்படுத்தலாம் என்று அவன் நினைத்திருந்தால், அவளோ இப்படி அடிக்கடி அவனிடம் பாராமுகம் காட்டினால் எப்படி..?? ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு, எதுவும் அவளிடம் கேட்க இயலாமல் வைஷு உட்கார்ந்ததும் காரை செலுத்தினான்.
வெற்றியோடு நேரம் செலவளிப்பதாக வைஷ்ணவியிடம் சொல்லிவிட்டு வந்தாலும், காரில் வரும்போது அவனிடமும் பேசாமல் நீரஜா காதில் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுக் கொண்டு கார் கண்ணாடி வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். வழக்கமாக பேசியே அறுக்கும் வெற்றியும் அவளை தொந்தரவு செய்யாமல் எதையோ கொறித்துக் கொண்டு வந்தான்.
முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஜானவியோ “என்ன திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு..” என்று நீரஜாவை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். நேற்று அவர்கள் இருவரையும் பேச வைக்க அவள் செய்த முயற்சியெல்லாம் வீண் என்பது போல் இருக்கிறது நீரஜாவின் நடவடிக்கை, காலையிலிருந்து ஜானவியும் அவளை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள், என்ன பிரச்சனை என்று தான் தெரியவில்லை,
நீரஜாவும் காலையில் நடந்ததை தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். நேற்று இரவு அவள் சஞ்சய்க்கு இரவு வணக்கம் சொன்னதும், பதிலுக்கு அவனும் “குட்நைட்” என்று சொன்னான். அந்த சந்தோஷத்தோடு போய் உறங்கியவள், இரவு நேரம் கழித்து உறங்கியதால், காலையும் நேரம் தவறியே எழுந்து வந்தாள். அவள் அறையிலிருந்து வெளியே வரும்போது அம்பிகா மட்டும் வரவேற்பறையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் ஆன்ட்டி… என்ன உங்க டீ கான்ட்ராக்டை இன்னிக்கு வேற ஆள் எடுத்துக்கிட்டாங்களா..?? ஹாயா டீ குடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க…”
“ஆமாம்மா… வைஷு தான் டீ போட்டுக் கொண்டு வந்தா.. உனக்கும் எடுத்துக்கிட்டு வரச் சொல்லவா..??”
“வேண்டாம் ஆன்ட்டி…நானே போய் கிட்சன்ல வாங்கிக்கிறேன்…” என்றவளுக்கோ, வைஷு அம்பிகா ஆன்ட்டி மனசுல இடம்பிடிக்கத் தான் இப்படியெல்லாம் செய்வதாக தோன்றியது. நேற்றிலிருந்து அவளும் அதை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள்.
என்னவோ சஞ்சயை திருமணம் செய்ய இப்படியெல்லாம் அம்பிகாவிடம் நல்லப் பேர் வாங்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு தோன்றியதில்லை, எப்போதும் இயல்பாக இருப்பதே அவளுக்கு பிடிக்கும்,
“என்ன ஆன்ட்டி யாரையும் காணோம்..”
“சஞ்சய், நிக்கி, அப்புறம் அந்த வெற்றி தம்பி 3பேரும் ஜாகிங் போயிருக்காங்க… வைஷு ஜெய்யை தூக்கிக்கிட்டு வெளியே போனா.. ஜானு கிச்சன்ல வேலைக்காரங்கக் கிட்ட என்ன டிஃபன் பண்ணனும்னு சொல்லப் போயிருக்கா..??”
“அப்போ சரி ஆன்ட்டி.. நான் போய் ஜானுக்கிட்ட சொல்லி காஃபி வாங்கிட்டு வர்றேன்..” என்று எழுந்தவளை,
“கொஞ்சம் உட்காரு நிரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று தடுத்து அமர வைத்த அம்பிகா சுற்றி யாராவது வருகிறார்களா என்று பார்த்தார்.
“என்ன ஆன்ட்டி…” என்று நீரஜா கேட்க,
“நிரு நம்ம வைஷுவை பத்தி என்ன நினைக்கிற…” என்று அவர் கேட்டார்.
எதற்காக கேட்கிறார்கள் என்று யோசனை இருந்தாலும் சாதாரணமாகவே பதில் சொன்னாள்..
“வைஷுக்கு என்ன ஆன்ட்டி… அவ நல்ல பொண்ணு தான்… ஏன் கேக்கறீங்க…”
“ஒன்னுமில்லம்மா… சஞ்சய்க்கு என்னோட தம்பி பொண்ணை கட்டலாம்னு பார்த்தா… அவன் பிடிக்கொடுக்காம இருக்கான்… அதான் வைஷுவை சஞ்சய்க்கு பார்க்கலாமான்னு நினைக்கிறேன்… வைஷுக்கும் சஞ்சயை கல்யாணம் செஞ்சுக்கிற எண்ணம் இருக்குன்னு நினைக்கிறேன்…
அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்ப கூட பார்த்தல்ல… வைஷு சஞ்சய்க்கு போன் பண்ணி அக்கறையாய் விசாரிக்கறதும்… இவனும் பதிலுக்கு அவ மேல அக்கறை காட்றதும்… நேத்து கூட சஞ்சய்க்கு அடிபடும் போது எப்படி பதறுனா… அதெல்லாம் பார்க்கும்போது வைஷுவை சஞ்சய்க்கு கல்யாணம் செஞ்சு வைக்கலாமான்னு தோனுது… வைஷு அம்மா, அப்பா அதுக்கு ஒத்துப்பாங்களா?? நிரு..”
அம்பிகா சொன்னதை கேட்டு அதிர்ச்சியானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே அவரிடம்,
“வைஷுவும் சஞ்சயும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்கன்னா இந்த கல்யாணத்தை பத்தி பேசறதுல என்ன பிரச்சனை இருக்கப் போகுது ஆன்ட்டி… என்ன மாமா தான் கொஞ்சம் யோசிப்பாரு… தன்னோட மனைவியோட அண்ணன் பையனா இருந்தாலும் அவரோட அந்தஸ்த்துக்கு மேல இருக்கறதால நிக்கிக்கே ஜானுவை கல்யாணம் செஞ்சுக் கொடுக்க அவர் யோசிச்சாரு… அது உங்களுக்கே தெரியும்… நீங்க சஞ்சய் எல்லோரும் வந்து தான் அவரை ஒத்துக்க வச்சீங்க…
அதே போல சஞ்சய்க்கும், வைஷுவுக்கும் இதுல சம்மதம்ன்னு தெரிஞ்சா… நாம மாமாக்கிட்ட பேச ஈஸியா இருக்கும்… அதனால நீங்க சஞ்சய் கிட்ட பேசுங்க… நானும் ஜானுக்கிட்ட சொல்லி வைஷுக்கிட்ட கேக்க சொல்றேன்…” என்று கூறினாள்.
“சரிம்மா நான் நேரம் பார்த்து அவன்கிட்ட கேக்கறேன்.. நீ போய் டீ குடி…” என்று அவளை அனுப்பிவைத்தார்.
சஞ்சய், வைஷு கல்யாணம் பத்தி அம்பிகா பேசியதால் நீரஜாவிற்கு அவர் மேல் கோபமோ வருத்தமோ எதுவும் ஏற்படவில்லை, ஒரு தாயின் கடமையை தான் அவர் செய்ய விரும்புகிறார். இதில் இரண்டு பேருக்கும் விருப்பம் என்றால் தான் இந்த திருமணம் நடக்கும், சஞ்சய் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளாமல் வைஷுவும் வீணாக மனதில் ஆசையை வளர்த்துக் கொள்ள கூடாது. ஏற்கனவே இவளுக்கே இந்த நிலைமை தான், அதனால் இந்த திருமண பேச்சால் எல்லாவற்றிற்கும் ஒரு தெளிவு பிறக்கும்,
அதனால் அதைப்பற்றியெல்லாம் நினைத்து அவள் வருத்தப்படவில்லை, ஒருவேளை சஞ்சய் இந்த திருமணத்திற்கு சம்மதித்தாலும், சஞ்சய் தனக்கு இல்லை என்று கூட மனதை தேற்றிக் கொள்ளலாம், ஆனால் அவளுடைய வருத்தமெல்லாம் ஒன்று மட்டும் தான்,
சஞ்சய்க்கு தீவிரமாக பெண் பார்த்து கொண்டிருக்கும் அம்பிகாவிற்கு வைஷ்ணவியை கூட சஞ்சய்க்கு பேசி முடிக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் அவளைப் பற்றி அப்படி எதுவும் அவருக்கு தோன்றவில்லையா..?? ஏன் அவர்களுக்கு மருமகளாகும் தகுதி தனக்கில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா..?? என்று தான் நீரஜாவிற்கு வருத்தமாக இருந்தது.
ஆனால் அவளுக்கு என்ன தெரியும், முதன்முதலில் நீரஜாவை பார்த்த போதே அம்பிகாவிற்கு அவளை பிடித்துவிட, அவளை தன் மருமகளாக்கி கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதும், சில காலம் கழித்து அதைப்பற்றி சஞ்சயிடம் பேசியபோது, அப்போது தான் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டிருக்க, இப்போது தன் அன்னை போய் திருமணம் பேசுவதாக எதுவும் சொதப்பிடக் கூடாது என்பதால், “ நாங்கள் அப்படி பழகவில்லை… நீங்கள் அப்படி எதுவும் போய் நிக்கியிடமோ… நீரஜாவிடமோ கேட்டு விடாதீர்கள்” என்று சஞ்சய் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.
கணவனையோ, பிள்ளையையோ மீறி அவர் இதுவரை எதுவும் செய்யாததால் அதன்பின் இந்த கல்யாணப் பேச்சை அவர் எடுக்கவில்லை, அவர்கள் இருவரும் அப்படி பழகவில்லை போலும் என்று மனதை தேற்றிக் கொண்டார். இருந்தாலும் பிள்ளைக்கு திருமணம் செய்தாக வேண்டுமே, அதற்கு அவனும் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்பது தான் அவரின் தற்போதைய கவலை, வைஷுவின் நடவடிக்கையை கண்டு அவளுக்கு சஞ்சயை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவர்க்கு, இதைப்பற்றி யாரிடம் முதலில் பேசுவது என்ற குழப்பத்தில் நீரஜாவிடமே விஷயத்தை கூறினார்.
இப்போது கூட நீரஜா தனக்கு மருமகளாக வர முடியவில்லையே என்ற குறை அவர் மனதில் இருக்கிறது. சஞ்சய் திருமணத்தைப் பற்றி பேசும்போது நிகேதனோ, ஜானவியோ… ஏன் நீரஜாவே கூட சஞ்சய், நீரஜா திருமணம் பற்றி ஏதாவது சொல்வார்களா..?? என்ற ஒரு நப்பாசை கூட இருக்கிறது. ஆனால் அப்படி நடக்காத பட்சத்தில் தன் மகனுக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறதே, அதனால் தான் நல்லப் பெண்ணாக தன் மகனுக்கு தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இது எதுவும் தெரியாத நீரஜா, அம்பிகாவிற்கு தன்னை மருமகளாக்கி கொள்வதில் இஷ்டமில்லையோ என்ற குழப்பத்திலும், வைஷு, சஞ்சய் திருமண பேச்சும் தான் அவள் காலையிலிருந்து சஞ்சயை விட்டு விலக காரணமாயிருந்தது.
மகாபலிபுரம் சென்றபின்பும் நீரஜா வெற்றியோடு இணைந்து எல்லாம் பார்த்துக் கொண்டே அவனுடன் பேசிக் கொண்டு வந்தாள். அவர்கள் இருவரும் முன்னே நடக்க, மற்றவரெல்லாம் பின்னால் வந்துக் கொண்டிருந்தனர்.
நீண்ட தூரம் நடக்க முடியாது என்ற காரணத்தால் அம்பிகா ஜெய்யை தன்னுடன் வைத்துக் கொண்டு ஒரு இடம் தேடி உட்கார மற்ற அனைவரும் சுற்றி பார்க்கச் சென்றனர். அப்போது அங்கு கைரேகை பார்த்து குறி சொல்லும் பெண் அமர்ந்திருக்க, சாதாரணமாக ஜோசியம் பாருங்க ஐயா.. என்று கேட்டிருந்தால் அதை அவர்களும் கண்டும் காணாமல் சென்றிருப்பர்.
ஆனால் அந்த பெண்மணியோ, “தாயி ஜோசியம் பாருங்கம்மா… கைரேகை ஜோசியம்… காலையிலிருந்து இன்னும் ஒரு கை கூட பார்க்கல தாயி… ஒரு கையாவது பார்த்தா தான் மதியம் சோறு…” என்றதும் நீரஜாவால் அதை கண்டும் காணாமல் போக முடியவில்லை.
“நிக்கி ஜோசியம் பார்க்கலாம் நிக்கி..” என்று நிகேதனிடம் கேட்க,
“அதெல்லாம் வேண்டாம் நிரு… ஏதாவது ஒன்னுக் கிடக்க ஒன்னு சொல்லி மனசை கஷ்டப்படுத்திடுவாங்க…” என்று அவன் மறுத்தான்.
“பாவம் நிக்கி… ஜோசியம் பார்த்தா தான் அவங்களுக்கு மதியம் சாப்பாடே… அதனால பார்ப்போம்…”
“வேண்டாம் நிரு… வேணும்னா ஏதாவது அவங்களுக்கு காசு கொடுத்திடலாம்…”
“என்ன தனு நீ… ஏதாவது கௌரவமா சம்பாதிக்கணும்னு தான் அவங்க ஜோசியம் பார்க்கிறாங்க.. நம்பிக்கை இருந்தா பார்க்கணும்… இல்லை வேண்டாம்னு போயிடணும்… அதென்ன பிச்சை போட்ற மாதிரி காசு கொடுக்கறது…” என்று ஜானவி கேட்டதும் நீரஜாவும் அதை ஆமோதித்தாள்.
தங்கையும், மனைவியும் ஒரு முடிவெடுத்தப் பின் அதை நிகேதனால் மாற்ற முடியுமா..?? அவன் ஒத்துக் கொண்டான்.
ஆண்கள் மூவருக்கும் ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாததால் பெண்கள் மூவரும் பார்த்தனர். முதலில் பார்த்த வைஷுவிற்கும் ஜானவிக்கும் ஓரளவிற்கு எல்லாம் நல்லதாகவே சொல்லி, கொஞ்சம் மனதிற்கு சஞ்சலம் வரும், ஆரோக்கியம் கொஞ்சம் சுகமில்லாமல் போகும், என்று அந்த பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தார்.
பத்துக்கும், இருபதுக்கும் ஜோசியம் பார்ப்பவர்கள் இப்படி கொஞ்சம் நல்லதாக சொன்னால் தான் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பேர் கையாவது பார்க்க முடியும், இப்போதெல்லாம் அதற்கென்று அறை எடுத்து ஆயிரம், ரெண்டாயிரம் என்று கொடுத்து ஜோசியம் பார்ப்பது தான் வழக்கமாக விட்டது. அதனால் அந்த பெண்மணியும் நல்ல வாக்கியங்களையே சொன்னார்.
பின் நீரஜாவின் கையைப் பார்த்தவர், “இந்த கையில் லட்சுமி வாசம் செய்யறா… தொட்டதெல்லாம் துலங்கும்… எடுத்த காரியமெல்லாம் வெற்றி தான்… எல்லோர் மனசிலேயும் அழுத்தமா பதிஞ்சிடுவீங்க தாயீ… படிப்பு,உத்யோக ரேகையெல்லாம் நல்லாவே இருக்கு… ஆரோக்கிய ரேகையும் நல்லா இருக்கு… கொஞ்சம் அப்பப்ப சுகமில்லாம போனாலும் பெருசா ஒன்னும் வராது… ஆயுசு கெட்டின்னு தான் ரேகை சொல்லுது…” என்று சொல்லிக் கொண்டு வர, இவர்களின் தோற்றத்தை வைத்தும், அவள் தன் அண்ணனிடம் செல்லம் கொஞ்சி இப்போது ஜோசியம் பார்ப்பதை வைத்தும் பொதுவாக சொல்கிறார்கள் என்று ஒரு கேலிப் புன்னகையோடு நீரஜா அந்த பெண்மணியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை உணர்ந்த அந்த பெண்மணியோ, “என்ன தாயீ ஏதோ சும்மா நல்லதா சொல்லணும்னு சொல்றாளேன்னு நினைக்கிறீயா…?? இதை நானா சொல்லல தாயீ.. எங்க முருகைய்யா இந்த நாக்குல நின்னு சொல்றாரு… முருகைய்யாவே எங்களப் போல வேஷம் போட்டு வள்ளிக்கு குறி சொல்லி… அவ கையப் பிடிச்சவரு… அதனால என் வாக்கை சாதாரணமா நினைக்காத தாயீ…
இதுவரைக்கும் நான் சொன்னதும் நெசந்தான்… இப்ப சொல்லப் போறதும் நெசந்தான்… முருகப்பெருமான்னாலே வெற்றி தான்… எல்லாத்துலையும் வெற்றிப் பெற்றவரு அவரு… அந்த வெற்றியையே பேரா கொண்டவன்… உன் மனசுக்கு பிடிச்சவனே… உன்னோட கையைப் பிடிப்பான்… இது நடக்கலன்னா அப்போ வந்து சொல்லு என்னோட வாக்கு பொய்ன்னு… நீ அப்போ வந்து கூட காசு கொடு… நான் எங்கேயும் போ மாட்டேன்… இங்க தான் உக்கார்ந்திருப்பேன்…” என்று அந்த பெண்மணி சொன்னதும், நீரஜாவின் அகமும் முகமும் மலர்ந்து அது புன்னகையாகவும் வெளிப்பட்டது.
இதை மற்ற அனைவரும் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தனர். வைஷுவோ சஞ்சயிடம், “சஞ்சய் பார்த்தீங்களா அவங்க வெற்றியையே பேரா கொண்டவன் உன்னை கல்யாணம் பண்ணிப்பான்னு சொன்னதும்.. நிரு எவ்வளவு சந்தோஷப் பட்றா… அவ வெற்றியை நினைச்சு தான் சிரிக்கிறா..” என்று சொன்னதும் அவன் அதிர்ச்சியானான்.
இதை பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நிகேதனுக்கும் அப்படி இருக்குமோ என்று தோன்றியது. ஏனென்றால் வெற்றி வீட்டிற்கு வந்ததிலிருந்து நீரஜாவை பற்றியே கேட்டுக் கொண்டிருப்பான். அதனால் வைஷு சொல்வது போல் ஏதாவது இருக்குமோ என்று அவனும் யோசிக்க,
இவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றிருந்தாலும் வெற்றி காதிலும் வைஷு சொன்னது கேட்டது, இப்படி மட்டும் நடந்தால் எப்படி இருக்கும்? இந்த பெண்மணி சொன்னது பலிக்க வேண்டுமே என்று நினைத்தான்.
ஆனால் இவர்கள் பேசுவது எதுவும் ஜானவி காதில் கேட்கவில்லை, அவள் நீரஜாவின் அருகில் நின்றிருந்தாள். நிருவின் இந்த சந்தோஷத்திற்கு காரணம் . அவளுக்கு தெரியும்,
ஆமாம் சஞ்சய் என்றால் வெற்றிப் பெற்றவன் என்பது பொருள், ஒருநாள் ஜானுவும், நீரஜாவும் தங்களது பெயருக்கும், தங்களை சேர்ந்தவர்களின் பெயருக்கும் அர்த்தம் என்ன என்று கூகுளில் ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்த பெண்மணி சொன்னதும் அது நினைவு வரவே நீரஜா மகிழ்ந்தாள். தனக்கு வெற்றி என்ற பேரில் நண்பன் இருக்கிறான் என்றோ, மற்றவர்கள் வெற்றியை நினைத்து தான் இவள் மகிழ்கிறாள் என்று நினைப்பார்கள் என்பதோ அவள் புத்திக்கு எட்டவில்லை,
ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் சில பேரின் வாயிலிருந்து வந்த வாக்குகள் பலிப்பது போல் இதுவும் பலிக்க வேண்டும் என்ற சந்தோஷத்தில் அவர்கள் ஜோசியம் பார்த்ததிற்கான ரூபாயை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாள் அவள், அப்படி அதிகப்படியான பணத்தை அந்த பெண்மணி யாரிடமும் வாங்கியதில்லை என்றாலும், நீரஜாவின் முகமலர்ச்சியை பார்த்து, தன் சொல்லை அவள் நம்புகிறாள் என்ற மனநிறைவோடு நீரஜா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார்.
அதுவரைக்கும் குழப்பமாக இருந்த நீரஜா அந்த பெண்மணி வாக்கியத்தால் கொஞ்சம் தெளிவானாள். ஆனால் சஞ்சயோ சுத்தமாக குழம்பி போனான், தன்னுடைய பேருக்கு அவனுக்கு அர்த்தம் தெரியவில்லையா..?? இல்லை அந்த பெண்மணி வெற்றி என்பதற்கு ஏற்றார் போல் வெற்றி என்ற பெயருடன் ஒருத்தன் இருப்பதாலா..?? கொஞ்சம் பயந்து தான் போனான். நீரஜாவின் மனம் இன்னும் தெளிவாக தெரியாததால் வைஷு சொல்வது போல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்று வேண்டினான்.
இப்படியே மகாபலிபுரம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் நித்திய கல்யாண பெருமாள் கோவில், மாயாஜால் என்று சுற்றி பார்த்துவிட்டு வீடு திரும்ப, நீரஜா அதுவரையிலும் சந்தோஷமாகவே இருந்தாள். சஞ்சயோ குழம்பி இருந்தான். இவர்கள் இருவர் நிலை இப்படி இருக்க, வைஷ்ணவிக்கும், வெற்றிக்கும் அந்த ஜோசியம் ஒரு புது நம்புக்கையை கொடுத்திருந்தது, அதுவே வைஷ்ணவியின் தந்தை அவளுக்கு திருமணம் செய்வதை பற்றி பேச, தன் அன்னையிடம் சஞ்சயை எனக்கு பிடித்திருக்கிறது என்று அவளால் தைரியமாக சொல்லவும் முடிந்தது.
மௌனம் தொடரும்..