KPEM 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 6
அலுவலகத்தில் மணி 7 என்று காட்டியது, நீரஜாவோ அவள் அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். அலுவலக நேரம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களெல்லாம் மழை பெய்தாலும் அதிலிருந்து பாதுகாக்க கோட் இருந்ததால் கிளம்பிவிட்டார்கள். பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய சில பேர் மட்டுமே கிளம்பாமல் இருந்தார்கள். அவர்களோடு இப்போது நீரஜாவும் இருந்தாள்.
மதியம் வந்து அழைத்துப் போவதாக சொன்ன நிகேதனை இன்னும் காணவில்லை, அவனிடம் என்ன நிலவரம் என்று கேட்கலாம் என்றுப் பார்த்தால், அவளுடைய அலைபேசியில் சுத்தமாக நெட்வொர்க் இல்லை, அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் முயற்சி செய்து பார்த்தாள். ஆனால் நிகேதன் மற்றும் ஜானவியின் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.
அவளாக கிளம்பி போகலாம் என்று பார்த்தால், அவள் வந்ததோ நிகேதனோடு காரில், கையில் குடையும் இல்லை.. இருந்தாலும் இந்த மழையில் போக முடியாது. செக்யூரிட்டியிடம் சொல்லி ஆட்டோ பிடித்து வரசொன்னதற்கு, “வர ஆட்டோவெல்லாம் ஆள் வர்றாங்கம்மா… ஆட்டோ கிடைக்கவில்லை என்றார் அவர், வாடகை கார் வரவழைக்க முடியுமா என்று பார்க்க சொன்னதற்கும், “போன டாக்ஸியெல்லாம் மழையில அங்கங்க மாட்டிக்கிட்டு இருக்காம்மா… இருந்தும் அட்ரஸ் சொல்லியிருக்கேன்… வந்தா அனுப்பி வைக்கிறேன்னு சொல்லியிருக்காங்கம்மா… தொடர்ந்து நேத்துல இருந்து மழை பெய்யுதுல்ல… அங்கங்க தண்ணி நிக்கும்… அதான்ம்மா” என்றார். சரி நிகேதன் வரவரைக்கும் இங்கேயே காத்திருக்கலாம் என்று அமர்ந்திருந்தாள்.
ஆனால் மதியம் சாப்பிடாததால் பசி எடுத்தது. அவளுக்கு இருக்கும் அல்சர் பிரச்சனையால் வயிறு வேறு எரிச்சலோடு சேர்ந்து லேசாக வலிப்பது போல் இருந்தது. மதியம் நிகேதன் வந்து அவளை அழைத்துப் போவான் என்று அவள் காத்திருந்தாள். அவன் வருவதாக தெரியவில்லை, சரி கேண்டினில் ஏதாவது சாப்பிடலாம் என்று பார்த்தால், ஃப்ரைட் ரைஸும், வெஜிடபள் பிரியாணியும் தான் இருந்தது. மருத்துவரோ அவளிடம் கண்டிப்பாக எண்ணெய் பொருளும், காரமான உணவும் கொஞ்ச நாட்களுக்கு அவள் தொடவே கூடாதென்று சொல்லியிருக்கிறார். மற்றும் பட்டினியாகவோ இல்லை நேரம் தவறி சாப்பிடுவது இதையெல்லாம் சுத்தமாக நிறுத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
எளிமையான உணவு இருக்கிறதா என்று கேண்டின் உரிமையாளரிடம் கேட்டாள். அவரோ, “இங்க ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸ் கேண்டின்ல அவ்வளவா லன்ச் சாப்பிடமாட்டாங்க மேடம்… அப்படியேன்னாலும் இப்பல்லாம் ஹோட்டல் ஆர்டர் பண்ணா எடுத்துக்கிட்டு வந்து கொடுக்கிறாங்க… நிறைய பேர் பிட்ஸா ஆர்டர் பண்ணி சாப்பிட்றாங்க…
ஏதோ கொஞ்ச பேருக்காக இந்த அயிட்டம் மட்டும் செஞ்சு வைக்கிறோம்… ஈவ்னிங் ஸ்நாக்ஸ் அப்புறம் டீ தான் மேம் இங்க நிறைய போகும்… இதுவே நம்ம பேக்டரில இருக்க கேண்டினில் தயிர்சாதம், சாம்பார் சாதமெல்லாம் கிடைக்கும் மேடம்…” என்றார்.
சரி நிகேதன் வந்துவிடுவான் என்று அவள் திரும்பவும் காத்திருந்தாள். அவள் கல்லூரி சேர்ந்த புதிதில் அவளுக்கு அல்சர் பிரச்சனை வந்தது… சிறு வயதிலிருந்தே சித்தப்பா வீட்டில் சித்தி சரியாக சமைக்க மாட்டார். அங்கு அதிகம் ஹோட்டல் சாப்பாடு தான், அதுவும் பசிக்கும் சமயத்தில் இருக்காது. இந்த காரணங்களால் அங்கு இருப்பவர்க்கு எதுவும் ஆகவில்லை, அவளுக்கு தான் இந்தப் பிரச்சனை,
அதுவரையிலும் சித்தப்பா வீடு பிடிக்கவில்லையென்றாலும் இருக்க வேண்டிய சூழ்நிலை, ஆனால் அதன்பிறகு நிகேதன் விடவில்லை, அப்போது அவன் பி.ஜி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். இனி சித்தப்பா வீட்டில் இருக்க வேண்டாம் என்று கூறி அவளது தோழி வீட்டில் பணம் கொடுத்து சாப்பிடவும் தங்கவும் ஏற்பாடு செய்தான். அன்பாக உணவு கிடைக்கவில்லையென்றாலும், வேளாவேளைக்கு ருசியான உணவு கிடைத்தது.
அதற்குப்பிறகு அல்சர் பிரச்சனை ஓரளவுக்கு சரியானது. திரும்பவும் அவளின் சிங்கப்பூர் வாழ்க்கையில் அந்த பிரச்சினை அதிகமாகிவிட்டது. என்ன தான் அவளுக்கும் அவளுடன் தங்கியிருந்த தோழிக்கும் தெரிந்த அரைகுறை சமையலை வைத்து பார்த்துக் கொண்டாலும், அதிக வேலை இருக்கும் நாட்களில் நேரம் தவறி கிடைத்த சாப்பாடை சாப்பிட்டு பிரச்சனையை அதிகப்படுத்திக் கொண்டாள்.
நிகேதனிடமும் ஜானவியிடமும் இதை சொல்லாமல் மறைத்துவிட்டாள். அதன் பிறகு மருத்துவரிடம் சென்றாள். அவரின் பரிந்துரைப்படி சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருந்தாள். சாப்பாடு கிடைக்காத நேரங்களில் கைப்பையில் ஏதாவது வைத்திருப்பாள் சாப்பிடுவதற்கு, ஆனால் இன்று வீட்டில் இருந்து வந்ததால் எதுவும் கையில் எடுத்து வரவில்லை, இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்பதும் கூட சிங்கப்பூரில் இருந்து வர ஒரு காரணம்.
கொஞ்ச நேரம் காத்திருந்தும் நிகேதன் வரவில்லை, சரி ஆபத்துக்கு பாவமில்லை என்று அதையே சாப்பிடலாம் என்று கேண்டினுக்கு போனால் மழையாக இருக்கவே வெளி சாப்பாடு சாப்பிட்றவங்கெல்லாம் இங்கேயே சாப்டாங்க மேடம்… எல்லாம் தீர்ந்து போச்சு.. என்றார் அவர், சரி என்று ஒரு டீ வாங்கி குடித்தாள். அது இன்னும் பசியை தான் கிளப்பிவிட்டது. முதல் நாள் அலுவலகம் வந்ததாலும், வந்ததுமே விஜி செய்த பில்டப்பாலும் யாரும் நட்பாக இல்லை, இனி தான் அனைவரோடும் நட்பாக முயற்சிக்க வேண்டும், தெரிந்த ஒருத்தியான விஜியும் மதியமே கிளம்பிவிட்டாள்.
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தாள். எப்படியும் நிகேதன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ஆனால் அவள் இவ்வளவு தவிப்போடு இருக்க, சஞ்சயோ அவன் அறையில் தீவிரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
காலையில் அவனை அவனது அறையில் பார்த்துவிட்டு வந்தது தான், அதன்பின் அவன் வெளியில் வரவில்லை. சாப்பிட்டானா என்று கூட தெரியவில்லை, அப்படி வேலையில் மூழ்கி போயிருந்தான். நிகேதன் சொன்னபோது கூட அவள் நம்பவில்லை, ஆனால் இந்த ஒரு நாளிலேயே தெரிகிறதே,
ஆனால் அவள் முன்பு பார்த்த சஞ்சய் இப்படியில்லை, அவள் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டு மொக்கை போட்டாலும், அவன் பேசுகிறானோ இல்லையோ, உம் கொட்டிக் கொண்டாவது இருப்பான். அவள் வெளியில் அழைக்கும் போது வருவான், ஆனால் இப்போதெல்லாம் சஞ்சய் அப்படியில்லை என்று நிகேதன் சொல்வதிலேயே தெரிகிறது.
இந்த மாற்றத்திற்கு காரணம் தான் தானோ என்று ஒரு நொடி நினைத்தாலும், சேச்சே அப்படி இருக்காது, இன்று அலுவலகம் வந்த ஒருத்தி என்ன செய்கிறாள் என்று கூட தெரியாமல் உள்ளே இருப்பவனுக்கு அவள் பேசாமல் இருந்தது பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா..?? என்று மனம் கேள்விக் கேட்டது.
ஒருவேளை அவனோடு நேரம் செலவிட புதிய நெருக்கமான உறவு ஏதாவது கிடைத்துவிட்டதா? என்ற யோசனையும் வந்தது, பின் அப்படியெல்லாம் இருக்காது.. அவன் வேலை தான் செய்துக் கொண்டிருக்கிறான், நிகேதன்சொன்னது போல அந்த அவனது பி.ஏ காலையிலிருந்து பரபரப்பாக வேலை செய்வதை அவள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். சாப்பாடு கூட அரக்கப்பரக்க சாப்பிட்டாளே, அவன் சொல்லும் வேலையை அவள் இருப்பிடத்தில் செய்வதும், பின் அவன் அறைக்கு செல்வதும் என்று பரபரப்பாக இருந்தாள்.
தன்னுடைய வேலை மதியத்தோடு முடிந்துவிட்டதால் நீரஜா இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள். பின் போர் அடித்ததால் இந்த நிறுவனத்தில் இன்னும் தனக்கு தெரியாததைப் பற்றிய தகவல்களை கணினி மூலம் தெரிந்துக் கொண்டாள். நேரத்தை கடத்த எதெதுவோ செய்துக் கொண்டிருந்தாள். அவள் நேராக சஞ்சயிடம் சென்று வீட்டுக்கு அவனது காரில் அழைத்துப் போக சொல்லியிருக்கலாம், ஆனால் அவனாக பேசும் வரை பேசமாட்டேன் என்ற உறுதியோடு இருந்ததால் அவனிடம் அவள் செல்லவில்லை, நிகேதன் வந்தாலோ இல்லை வாடகை கார் வந்தாலோ போகலாம் என்று அமர்ந்திருந்தாள்.
தன் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை தெரிவிப்பது போல், கை கால்களை நீட்டி சோம்பல் முறித்தான் சஞ்சய்.. இப்போது தான் பசி எடுப்பதே அவனுக்கு தெரிந்தது. அவன் நிறுவனத்தின் புது பொருள் தயாரிப்புக்கான வேலை என்பதால் மதியம் சாப்பிடக் கூட முடியாத படி அதிக வேலை, இந்த பொறுப்பை தான் மட்டுமே எடுத்து செய்வதால் தான் இந்த நிலைமை, நிகேதன் மற்ற வேலைகளை பார்ப்பதால், இந்த வேலையில் சஞ்சய் கவனமாக உள்ளான்.
அவனது பி.ஏ வோ அவளுக்கு கொடுத்த வேலையை முடித்ததால் விடை பெறுவதற்காக சஞ்சயிடம் வந்தாள், அவன் அறையில் இருந்த ஜன்னலின் வழியே மழை பெய்துக் கொண்டிருப்பதை சஞ்சய் அறிந்ததால்,
“ரேகா மழை பெய்யுதே எப்படி வீட்டுக்கு போவீங்க…” என்று கேட்டான்.
“என்னோட அங்கிள் கார் எடுத்துக்கிட்டு வர்றதா சொல்லியிருக்காரு… அவரோட போய்டுவேன் சார்… இன்னும் 5மினிட்ஸ்ல வந்துடுவாரு…” என்றாள் அவள்,
“சரி நீங்க போங்க…” என்று அவன் அனுமதித்ததும், அவள் முதலில் அறையை விட்டு வெளியே போக, அவன் பின்னால் வந்தான். அங்கே வெளியில் இருந்து வந்து காத்திருப்பவர்களுக்காக போட்டிருந்த சோஃபாவில் அலைபேசியை நீரஜா குடைந்தப்படி அமர்ந்திருந்தாள்.
“என்ன இவ இன்னும் போகலையா…?? நிக்கி மதியமே வந்து கூட்டிட்டுப் போய்டுவேன்னு சொன்னானே…” என்று மனதில் நினைத்துக் கொண்டு, அங்கே தன் இருக்கையில் நின்றுக் கொண்டிருந்த ரேகாவை கூப்பிட்டு, ” ஏன் மிஸ். நீரஜா இன்னும் கிளம்பலைன்னு கேளுங்க….” என்று அவளை அனுப்பினான்.
நிகேதன் சாரோட தங்கை தானே, ஏன் இவரே பேசாமல் தன்னை அனுப்புகிறார் என்ற யோசனையோடு ரேகா நீரஜா அருகில் சென்றாள்.
“மேடம் நீங்க இன்னும் கிளம்பலையா..??” என்று அவள் கேட்க,
சஞ்சயும் அறையிலிருந்து வெளியில் வந்ததை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நீரஜா, “இப்பக் கூட அவனா வந்து கேக்கறானா பாரு… எல்லாம் திமிறு..” என்று மனதில் நினைத்துக் கொண்டு,
“என்னோட அண்ணா இன்னும் வரல… அதான் வெய்ட் பண்றேன்…” என்று சொன்னதும், சஞ்சய் தன்னுடைய அலைபேசியில் நிகேதன் எண்ணைஅழுத்த, அது அணைக்கப்பட்டிருந்தது.
உடனே அவன அழைப்பை துண்டித்ததும், ஏதோ ஒரு எண்ணிலிருந்து அவனுக்கு அழைப்பு வர அந்த அழைப்பை சஞ்சய் எடுத்திருந்தான்.
“ஹலோ மாப்ள… நான் நிக்கி பேசறேண்டா”
“டேய் என்னடா… எங்க இருக்க..?? நீ வந்து கூப்பிட்டிக்கிட்டு போவேன்னு நீரஜா இங்க உட்கார்ந்துருக்கா… எனக்கும் வேலையிருந்ததுல அவளை கவனிக்கல..”
“இல்லடா மாப்ள…. ஹாஸ்பிட்டல்ல இருந்து மாமா வீட்டுக்கு போகறப்போ.. வண்டி பன்ச்சர் ஆகி வழியிலேயே மாட்டிக்கிட்டோம்டா… அவங்க வீட்டு கிட்ட போய்ட்டதால… மழையில வீட்டுக்கு குழந்தையை கூட்டிக்கிட்டு வர்றது கஷ்டம்னு.. மாமா வீட்டுக்கே ஒரு ஆட்டோ பிடிச்சு கூட்டிக்கிட்டு போய்ட்டேன்…
அங்க மொபைல்ல ஏற்கனவே சிக்னல் கிடைக்காது… இப்போ மழையில சுத்தமா இல்லை… அவுட்டர் ஏரியாவா.. ஆட்டோ கூட கிடைக்கலடா.. அப்புறம் மழை கம்மியாகவே இப்போ தான் குடை எடுத்துக்கிட்டு மெயின் ரோட் வந்தேன்…”
“டேய் உனக்கு மாமா வீட்டுக்குப் போக வேற நாளில்லையா..?? மழையில போயிருக்க…”
“இல்லடா கார் இருக்கேன்னு போனேன்… இப்படி ஆகும்னு யாரு எதிர்பார்த்தா… சரி விடு… இனி நான் வந்து அவளை கூட்டிக்கிட்டு போக முடியாது… நீ ஒன்னு செய் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வா… நான் ஏதாவது ஆட்டோ பிடிச்சு வரேன்… அவ மதியம் சாப்ட்டாளான்னு கூட தெரியலடா… ஏற்கனவே அல்சர் பிரச்சனையில கஷ்டப்பட்டவடா… நான் வரும்போதே சாப்பாடு ஏதாவது வாங்கிட்டு வரேன்..”
“ஹே நீ மழையில வர வேண்டாம் மச்சான்… நான் அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்… அம்மா சாப்பாடு செஞ்சு வச்சிருப்பாங்க… நான் பார்த்துக்கிறேன்… நீ திரும்ப வீட்டுக்கு போ… நாளைக்கு மழை விட்டதும்… ஜானவியையும் ஜெய்யையும் கூட்டிக்கிட்டு வா.. நான் நீரஜாக்கிட்ட சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்… போனை வச்சிடுறேன்…” என்று அழைப்பை துண்டித்தான்.
பின் ரேகாவிடம் நீரஜாவை அவனே அழைத்துப் போகப் போவதாக தெரிவிக்க சொன்னான். இப்போதும் அவளிடம் பேசக் கூடாது என்று இல்லை, அவள் வீட்டுக்கு கூட போக முடியாதபடி அமர்ந்திருக்க அது தெரியாமல் அவன் இருந்திருக்கானே என்ற குற்ற உணர்வு தான்,
சஞ்சய் சொல்லவே ரேகாவும் நீரஜாவிடம் சென்று, “மேம் உங்களை சஞ்சய் சாரே வீட்ல ட்ராப் பண்றாராம்…” என்று சொன்னதும் நீரஜா சஞ்சயை பார்த்தாள்.
பின் ரேகாவிடம் திரும்பி… “எங்க அண்ணா வரேன்னு சொல்லியிருக்கான்.. அவன் வருவான்…” என்றதும்,
“மேம் இப்போ நிகேதன் சார் தான் பேசினார் போல… அவர் வர மாட்டாருன்னு நினைக்கிறேன்… நீங்க சார் கூட போறது தான் பெட்டர்” என்று அவளே ஆலோசனை சொல்ல,
“அவன் வரலைன்னா பரவாயில்ல… நான் கால்டாக்சி புக் பண்ணியிருக்கேன்… அது வந்ததும் அதுல போய்டுவேன்..” என்றாள் நீரஜா.
அதற்குள் அவள் அருகில் வந்த சஞ்சய், “ரேகா உங்களுக்கு டைம் ஆகும் நீங்க போங்க…” என்றவன் அவள் போனதும்,
“நிரு இப்போ மழையில கால்டாக்ஸி வருவதெல்லாம் கஷ்டம்… நான் உன்னை கூட்டிட்டுப் போறேன் வா…” என்று அவளைப் பார்த்து சொன்னதும்,
“என்னோட பேகை எடுத்துக்கிட்டு வரேன்…” என்று அவள் எழுந்தாள்.
எப்படியோ ஒத்துக் கொள்ள மாட்டாள், கெஞ்ச வேண்டும் போல, என்று அவன் நினைத்தால், அவள் உடனே ஒத்துக் கொண்டதில் இவனுக்கு ஆச்சர்யம்!!
எப்படியோ அவனோடு தான் போக வேண்டும் என்று அவளுக்கு தெரிந்துவிட்டது. இருந்தாலும் அவனே கூப்பிடட்டும் என்று காத்திருந்தாள், அதனால் தான் அவன் வந்து கூப்பிட்டதும் உடனே அவனுடன் செல்ல சம்மதித்தாள்.
நீரஜா அவள் இருக்கைக்கு செல்வதற்கு திரும்ப, “நிரு மதியம் ஏதாவது சாப்பிட்டியா…??” என்று அவன் கேட்டான்.
அவன் கேட்டதில் உண்மையான அக்கறை தெரிந்தது அவளுக்கு, “இல்லை சாப்பிடல… கேண்டின்ல ஸ்பைசி புட்டா இருந்துச்சு… அதான் சாப்பிடல… அப்புறம் நிக்கி வர லேட்டாகுமோன்னு அதையே சாப்பிடலாம்னு போனா… சாப்பாடு தீர்ந்துடுச்சு..” என்று சொன்னாள்.
“சாப்பிடாமக் கூட உக்கார்ந்திருக்கா… அது தெரியாம இருந்திருக்கியேடா…?? உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு… நீயெல்லாம் எப்படி அவக்கிட்ட உன்னோட லவ்வ சொல்லப் போறன்னு… அவனோட மனசாட்சி அவனையே திட்டியது…”
அவள் வந்ததும் இருவரும் வெளியே செல்ல, அங்கு மூன்று பெண்கள் மழையில் எப்படி வீட்டுக்கு போவது என்று வாசல் பார்த்துக் கொண்டு தவித்தபடி இருப்பதை சஞ்சய் கவனித்தான். பொதுவாக அலுவலக நேரம் முடிந்ததும் அனைவரும் கிளம்பிவிடுவர். அப்படி சற்று நேரம் இருந்து வேலை செய்யும் நிலை வந்தால், அது பெண்களாக இருக்கும்பட்சத்தில், சஞ்சயோ இல்லை நிகேதனோ அதுவரைக்கும் அலுவலகத்தில் இருப்பர்.
இந்த காலத்தில் எந்த இடத்திலும் பெண்களுக்கு பிரச்சனைகள் வருவதால், அவர்களிடம் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதால் தான் அப்படி.. இன்று எதுவும் வேலையில்லை என்றாலும், மழையின் காரணமாக அவர்கள் காத்திருந்ததால், அவர்களை அப்படியே விட்டுவிட்டு போக தோன்றாமல்,
“நீங்கல்லாம் யாராவது வந்து கூட்டிட்டு போவாங்கன்னு வெய்ட் பண்றீங்களா..??” என்று கேட்டான்.
“இல்லை சார்… கொஞ்சம் மழை கம்மியானதும் போகலாம்னு இருக்கோம்..” என்று அவர்கள் சொன்னதும்,
“சரி வாங்க பஸ் ஸ்டாப்ல உங்களை ட்ராப் பண்றேன்…” என்றான்.
“இந்த நீரஜாவை தவிர மத்தப் பொண்ணுங்கன்னா அப்படியே ஹெல்ப் பண்ண துடிப்பாரே ஐயா..” என்று நீரஜா மனதில் நினைத்தாலும், பாவம் இந்த பெண்கள் ரொம்ப நேரமாக தவிக்கிறார்கள், கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை அவளுக்கும் இதே நிலைமை தானே, நிக்கி வந்தாலோ இல்லை வாடகை கார் வந்தாலோ இவர்களையும் கூட்டிக் கொண்டு போக வேண்டுமென்று அவளும் நினைத்தாளே, அதனால்…
“என்ன பாஸ் இவங்கள பஸ் ஸ்டாப்ல விட்றது சேஃபா..?? அவங்க வீட்ல ட்ராப் பண்ணலாம்…” என்றாள்.
அவன் பசி கூட அவனுக்கு பெரிய விஷயமில்லை, அவள் சாப்பிடாமல் இருக்கிறாளே, விரைந்து வீட்டுக்குப் போகலாம் என்று பார்த்தால், எதுக்கு இப்படியெல்லாம் செய்கிறாள் என்று நினைத்தான்.
அதற்கேற்றார் போல் அந்தப் பெண்களும், “இருக்கட்டும் மேம்… எங்க ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய் ட்ராப் பண்ணிட்டு நீங்க எப்போ போவீங்க… எங்கள பஸ் ஸ்டாப்லேயே ட்ராப் பண்ணுங்க…” என்றார்கள்.
“இந்த மழையில பஸ்ல போக கஷ்டமா இருக்காதா…” என்று நீரஜா கேட்டதும், அந்த மூன்று பேரில் ஒருத்தி,” அப்போ சரி மேம்… சார் போற ரூட்ல தான் என்னோட வீடு இருக்கு… எங்க 3பேரையும் அங்கேயே ட்ராப் பண்ணிடுங்க… ராத்திரி ரெண்டுப்பேரும் என்னோட வீட்லேயே தங்கட்டும் என்றாள்.
அதுதான் சரி என்ற முடிவோடு அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். நீரஜா முன் சீட்டில் சஞ்சயோடு உட்கார, அந்த மூன்று பெண்களும் பின் சீட்டில் அமர்ந்தார்கள். நீரஜாவோ அவர்கள் இறங்கும் வரை வழியெல்லாம் அவர்களோடு வளவளத்துக் கொண்டு வந்தாள். அந்த கொஞ்ச நேரத்தில் அவர்களை பற்றிய தகவல்களையெல்லாம் தெரிந்துக் கொண்டாள். அவர்கள் வீடு எங்கே? அவர்கள் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் அவர்களுக்கு என்ன வேலை? அவர்கள் யாரையாவது காதலிக்கிறார்களா? என்னப் படித்திருக்கிறார்கள்? என்று அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டாள்.
விரைவிலேயே அனைவரோடும் நட்பாகிவிட்டாள். பற்றாதற்கு “நீங்க எல்லாரும் ஏன் இவரை சார்ன்னு கூப்பிட்றீங்க… பாஸ்ன்னு கூப்பிடுங்க… இவருக்கு அப்படி கூப்பிட்டா தான் பிடிக்கும்… பாருங்க வந்த முதல் நாளே நான் அப்படிதான் கூப்பிட்றேன்… இல்ல பாஸ்…” என்றாள் அவனைப் பார்த்து,
அவர்களும் அப்படியா மேம் இனி அப்படியே கூப்பிட்றோம் என்றனர். “என்ன கொடுமை இவள் பாஸ்ன்னு கிண்டல் பண்ணி கூப்பிட்றது பத்தாதுன்னு அவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கறாளா..” என்று சஞ்சய் நொந்துக் கொண்டான்.
பின் அந்த மூவரும் இறங்கியதும் காரில் கனத்த மௌனம், இவ்வளவு நேரம் அவர்களோடு பேசிக் கொண்டு வந்தவள், இப்போது அமைதியாகி விட்டாள். அதற்குதான் அவர்களை உடன் அழைத்து வந்தாளோ என்று சஞ்சய்க்கு தோன்றியது, ஏனோ இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விட்டாலும், இப்போது சகஜமாக பேசிக் கொள்ள முடியாமல் அமைதியாக வந்தனர். மழை கூட அந்த மௌனத்தை கலைக்க விரும்பாமல் அந்த நேரம் அதன் வேலையை நிறுத்தியிருந்தது.
ஏனோ அந்த அமைதி சஞ்சய்க்கு பிடிக்காமல் அவன் காரில் தனியாக போகும் போது கேட்கும் பாடல்களை இப்போதும் ஒளிபரப்பினான்.
சந்தன தென்றலை …
ஜன்னல்கள் தண்டித்தல்..
நியாயமா?? நியாயமா??
காதலின் கேள்விக்கு….
கண்களின் பதில் என்ன…
மௌனமா?? மௌனமா??
அன்பே எந்தன் காதல் சொல்ல..
நொடி ஒன்று போதுமே…
அதை நானும் மெய்பிக்க தானே
புது ஆயுள் வேண்டுமே…
இல்லையென்று சொல்ல
ஒரு கணம் போதும்…
இல்லையென்ற சொல்லை
தாங்குவதென்றால்..
இன்னும் இன்னும் எனக்கோர்
ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்..??
என்ன சொல்லப் போகிறாய்..??
என்று முதல் பாடல் ஒளிக்க, “நான் அவளை காதலிக்கிறேன்னு அவளுக்கு புரியுதா இல்லையா..?? எப்படி என்னோட காதலை அவளுக்கு புரிய வைக்கப் போறேனோ..” என்று சஞ்சய் நினைத்துக் கொண்டு வர…
“நான் சஞ்சயை காதலிக்கிற மாதிரி சஞ்சயும் என்ன காதலிக்கிறாரா..?? அப்படி இருந்தா எப்படி இருக்கும்… அப்படி ஒருவேளை சஞ்சய் மனசுல காதல் இருந்து… அதை என்கிட்ட சொன்னா… கண்டிப்பா நான் மறுக்க மாட்டேன்… ஆனா சஞ்சய் மனசுல என்ன இருக்குன்னே தெரியலையே… நான் எப்படி என்னோட காதலை சொல்லப் போறேனோ…” என்று நீரஜா நினைத்தாள்.
பின் அந்த அமைதி, இனிமையான பாடல்கள் கேட்டு கொண்டு வருவது, மதியம் சாப்பிடாததாலேயும், வயிற்று வலியாலும் வந்த சோர்வு இவையெல்லாம் சேர்ந்து நீரஜாவிற்கு உறக்கம் வர, அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள். உறக்கத்தில் தன்னை அறியாமலேயே சஞ்சயின் தோள்களில் சாய்ந்துக் கொண்டாள்.
அதில் சஞ்சய்க்கு சந்தோஷமாக இருந்தாலும், அவளின் சோர்வான முகத்தைப் பார்த்து குற்ற உணர்வும் ஏற்பட்டது. காரில் வரும்போது இப்படி உறங்குபவளா இவள், அந்த பெண்களிடம் கதையடித்து வந்தது போல் தான் அவனிடமும் பேசிக் கொண்டு வருவாள். ஆனால் இப்போதோ சகஜமாக பேசிக் கொள்ள கூட முடியாதபடி அவர்களுக்குள் இந்த இடைவெளி ஏற்பட்டதை நினைத்து ஒரு பக்கம் கஷ்டமாக இருந்தாலும்,
“டேய் நீரஜாக்கு வயிறு வலின்னு ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்களாம், அல்சர்ன்னு டாக்டர் சொல்றாங்களாம், நான் என்னன்னு பார்த்துட்டு வரேன் மாப்ள” என்று அன்றைக்கு நிகேதன் சொல்லிவிட்டு சென்றபோது,
“டேய் பதட்டப்படாம போய்ட்டு வாடா..” என்று தன் நண்பனுக்காக கவலைப்பட்ட அவன்,
நேராக பார்த்திடாத அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கூட சிந்தித்ததில்லை. ஆனால் இன்றோ அவளின் சோர்வான முகத்தை கூட பார்க்கமுடியாமல் தவிக்கும் அளவிற்கு மனதுக்கு நெருக்கமானவளாக இவள் மாறிப் போன அதிசயம் தான் அவனுக்கு தெரியவில்லை. விரைவில் அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த இடைவெளி சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
மௌனம் தொடரும்..