KPEM 18

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மௌனம் 18

பெங்களூரிலிருந்து புறப்பட்ட கார் சென்னை வந்தடைந்ததும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்த சொல்லி, இனி தானே வீட்டுக்குப் போய் கொள்வதாக நீரஜா அந்த தம்பதியரிடம் கூறினாள்.

“வீடு எங்கன்னு சொல்லுமா.. நாங்களே உன்னை அங்க விட்டுட்டு போறோம்…” என்று அவர்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, ஏதேதோ சொல்லி சமாளித்து, அவர்களிடம் விடைப்பெற்று ஒரு ஆட்டோவில் ஏறினாள்.

அவளுக்கு இப்போது சஞ்சயிடம் பேச வேண்டும், மாலை அவனை நேரில் சந்திக்க விரும்புவதாக கூற வேண்டும், பின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை சஞ்சயை பார்க்க கிளம்ப வேண்டும் என்ற முடிவோடு தான் அந்த தம்பதியரிடம் விடைப் பெற்றாள்.

ஆனால் ஆட்டோவில் ஏறிய நிமிடத்திலிருந்து சஞ்சயின் அலைபேசிக்கு  தொடர்பு கொள்ள முயற்சிக்க, அது அணைக்கப்பட்டு இருந்தது.

“என்ன ஆச்சு… சஞ்சய் இப்படி மொபைல ஆஃப் பண்ண மாட்டாரே… ஒருவேளை ஆஃபிஸ்ல ஏதாச்சும் முக்கியமான மீட்டிங்கா… ஆனா அப்படி எதுவும் முக்கியமான வேலை ஆஃபிஸ்ல இல்லையே…” என்று யோசித்தவள், சஞ்சயின் பி.ஏ க்கு போன் செய்து, அவளிடம் சஞ்சய் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறைமுகமாக விசாரித்தாள். அவன் இன்று அலுவலகத்துக்கே வரவில்லை என்று அந்த பி.ஏ கூறினாள்.

ஒருவேளை வீட்டில் இருக்கிறானோ… ஆன்ட்டிக்கு ஏதாச்சும் உடம்பு சரியில்லையா..?? என்று யோசித்தவள், உடனே சஞ்சய் வீட்டு தொலைபேசிக்கு தொடர்புக் கொண்டாள்.

“ஹலோ…”

“ஹலோ ஆன்ட்டி… நான் நீரஜா பேசறேன்…”

“ஹா நிரு… எப்படிம்மா இருக்க… ஆஃபிஸ் போக ஆரம்பிச்சதும், வீட்டுக்கு வர்றதேயில்லையே…”

“கொஞ்சம் வேலை நிறைய இருந்துச்சு ஆன்ட்டி… ஆமாம் நீங்க நல்லா தானே இருக்கீங்க..??”

“எனக்கு என்னம்மா… நான் நல்லா தான் இருக்கேன்… ஏன் என்னாச்சும்மா..??”

“இல்ல ஆன்ட்டி… பாஸ்க்கு போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது… ஆஃபிஸ்க்கு போகலையாம்… நான் பெங்களூர்க்கு போயிருந்தேன்… ஆஃபிஸ் விஷயமா பேசலாம்னு போன் பண்ணேன்… போனும் ஸ்விட்ச் ஆஃப், ஆஃபிஸ்க்கும் வரல… அதான் உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்…”

“இல்லம்மா எனக்கு ஒரு பிரச்சனையுமில்ல… நல்லா தான் இருக்கேன்… அப்புறம் சஞ்சய் காலையில ஆஃபிஸ்க்கு தானே கிளம்பி போனான்… நான் கூட காலையில அவன்கிட்ட பேசினேனே..!!”

சஞ்சய் வீட்லேயும் இல்ல… ஆஃபிஸ்லேயும் இல்ல… வேறெங்க போயிருப்பாரு…” என்று யோசித்தாள்.

“நிரு லைன்ல தான இருக்க..”

“ஆ.. ஆமா ஆன்ட்டி சொல்லுங்க…”

“ஏதாவது முக்கியமான விஷயமா நிரு… என்ன விஷயம்னு சொல்லு… சஞ்சய் வீட்டுக்கு வந்தா சொல்றேன்…”

“இல்ல ஆன்ட்டி… முக்கியமெல்லாம் ஒன்னுமில்ல… அதை நான் நிக்கிக்கிட்ட கூட கேட்டுக்கிறேன்… நான் இப்போ சென்னைக்கு வந்துட்டேன்.. இப்போ வீட்டுக்கு தான் ஆன்ட்டி போய்ட்ருக்கேன்..”

“சரிம்மா… அப்புறம் நிரு… சஞ்சய்க் கூட காலையில பேசினேன்னு சொன்னேன் இல்ல… எதுக்கு தெரியுமா..??”

“என்ன விஷயம் ஆன்ட்டி..??”

“எல்லாம் சஞ்சய் கல்யாணம் பத்தி தான் நிரு…” என்று அவர் சொன்னதும், ஒருவேளை என்னை காதலிக்கிறதா சஞ்சய் ஆன்ட்டிக் கிட்ட சொல்லியிருப்பாரோ..” என்று நினைத்து பரவசமானாள்.

அந்த பரவசத்தில் திளைத்திருந்த போதே… “சஞ்சய் அவனோட மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டான் நிரு…” என்ற அதிர்ச்சி செய்தியை கூறினார்.

“மேற்கொண்டு நிச்சயத்துக்கு தேதி முடிவுப் பண்ணனும், என்னோட தம்பிக்கும் இப்போ தான் போன் பண்ணி சஞ்சய் சம்மதிச்சதை சொன்னேன்… இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்மா..” அவளின் நிலையை பற்றி தெரியாமல் பேசிக் கொண்டே போனார்.

“ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி… எப்படியோ பாஸ் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரே… சரி அவரை நேர்ல பார்த்தா விஷ் பண்ணிக்கிறேன்… இப்போ நான் போனை கட் பண்றேன் ஆன்ட்டி..” என்று உடனே அழைப்பை துண்டித்தாள்.

சஞ்சய் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரா..?? ஆனா ஏன்..?? என்கிட்ட நாளைக்கு பேசணும்னு சொன்னாரே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? அவரோட காதலை தானே சொல்றதா இருந்தாரு…?? அப்புறம் ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்…?? மனதில் பல கேள்விகள் உதித்தது அவளுக்கு,

“சஞ்சய் உனக்கு ட்ரீட் கொடுக்கப் போறன்னு சொன்னாரு… இத்தனை நாளா சரியா பேசாம நீங்க ரெண்டுப்பேரும் இருந்ததால நட்பு ரீதியாகவும் பேச நினைச்சிருக்கலாம்… முன்னாடி நீங்க நல்ல ஃப்ரண்டா தானே இருந்தீங்க… அப்படி இருக்க ஆசைப்பட்ருக்கலாம்… நீ அதை தப்பா புரிஞ்சிக்கிட்ட.. அவர் உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறதா நினைச்சுட்ட…” என்று அவளது  மனம் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டது.

ஆனால் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, “அப்போ மந்த்ரா வீட்ல வச்சு சஞ்சய் அப்படி நடந்துக் கொண்டதுக்கு என்ன அர்த்தம்..?? அது காதலால செஞ்சது இல்லையா..?? சிங்கப்பூரில் இருக்கும் போது மனதிற்குள் அடிக்கடி கேட்கும் கேள்வி தான், ஆனால் அது காதலால் தான் இருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொள்வாள்.

ஆனால் திரும்பவும் இந்த கேள்வி அவள் மனதை குழப்ப ஆரம்பித்தது,  “அதுக்கு தான் சஞ்சய் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரே..” என்று மனம் சமாதானம் சொன்னாலும், செஞ்சது தவறு என்று மன்னிப்பு கேட்டார், ஆனால் அந்த காரியத்தை செய்ய வைத்தது எது..?? காதல் இல்லையா..?? வெறும் கோபத்தில் செய்தது தானா..?? அதை நினைக்கும் போதே கூனிக் குறுகி போனாள்.

“நல்லவேளை சஞ்சய் கல்யாணத்துக்கு சம்மதிச்சதை ஆன்ட்டி மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.. அது தெரியாம சஞ்சய் முன்னாடி உங்களை காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்… எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல நிருன்னு சஞ்சய் சொல்லியிருந்தா… அதைவிட அவமானமே இல்லை..” என்று மனதிற்குள் நினைத்தாள். மொத்ததில் பெங்களூரில் இருந்து கிளம்பும் போது இருந்த உற்சாகம் முழுதும் தொலைந்து தளர்ந்த மனதோடு வீடு வந்து சேர்ந்தாள்.

கோபமும் பதட்டமும் கலந்த கலவையாக நிகேதன் வீட்டுக்குள் உலாவிக் கொண்டிருந்தான். அவனின் தற்போதைய இந்நிலைக்கு காரணம் வெற்றி தான்,

நீரஜாவும் வெற்றியும் பெங்களூரிலிருந்து வர எப்படியோ மாலை ஆகிவிடும் என்று வெற்றி முந்தைய நாள் இரவே அவனுக்கு தெரிவித்திருந்தான். அதனால் ஜானவி ஜெய்யை கூட்டிக் கொண்டு தன் அம்மா வீட்டுக்கு செல்ல, நிகேதனும் அலுவலகத்திற்கு சென்றான்.

சஞ்சயும் அலுவலகத்திற்கு வராததால் நிகேதனுக்கு அலுவலகத்தில் கொஞ்சம் அதிகப்படியான வேலை, இதில் நீரஜாவிடமும் அவன் பேசவில்லை, ஒரு முக்கியமான ஃபைலை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டதால்,  நிகேதன் வீட்டிற்கு சென்றபோது தான் வெற்றி வீட்டுக்கு வந்தான். அதுவும் தனியாக,

“அவசரமாக சிங்கப்பூர் செல்ல வேண்டிய கட்டாயம் நிக்கி… நான் உடனே கிளம்பணும்…” என்று அவன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“நீ மட்டும் வந்திருக்க… நிரு எங்க..??” என்று கேட்டதற்கு,

“நீரஜ் அவளோட ஃப்ரண்ட் ஒருத்தியை பெங்களூர்ல பார்த்தா… அதான் அவ கூட பேசிட்டு மெதுவா வரன்னு சொல்லியிருக்கா… நான் உடனே கிளம்பணும்…” என்றான்.

வீட்டில் ஜானவி இருப்பாள், ஏதாவது காரணம் சொல்லிவிட்டு, சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பது தான் வெற்றியின் எண்ணம், ஆனால் இந்த நேரம் நிகேதனை இங்கே பார்த்ததே அதிர்ச்சி!! ஆனால் நிகேதனின் நடவடிக்கையே நீரஜா அவனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை என்பதுபோல் தெரிந்தது. அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டுமென்று நிகேதனிடம் ஏதேதோ சமாதானம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

ஆனால் நிகேதனுக்கு வெற்றியின் இந்த பொறுப்பில்லாத தன்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, வெற்றி நீரஜாவோடு செல்கிறான் என்பதால் தான் அவன் அமைதியாக இருந்தான். இல்லையென்றால் நீரஜா பாதுகாப்பாக செல்வதற்கு ஏதாவது ஏற்பாடு செய்திருப்பான்.

நீரஜா தனியாக வெளியூருக்கு சென்று வருபவள் தான், இருந்தாலும் ஒரு அண்ணனாக இவன் அவளின் பாதுகாப்பு பற்றி யோசிப்பான்.

ஆனால் இந்த வெற்றி இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறானே என்று கோபம் தான் வந்தது. இதில் அவன் நீரஜாவை திருமணம் செய்துக் கொள்ள வேறு ஆசைபடுகிறான்,  அவன் தன் தங்கைக்கு ஏற்றவனா..?? என்று இவனே ஆராய்ந்திருக்க வேண்டும். தன் தங்கையின் முடிவுக்கு விட்டிருக்கக் கூடாது, என்று இப்போது யோசித்தான். நீரஜாவின் அலைபேசிக்கு வேறு தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அது தொடர்பு கொள்ள முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் திரும்ப அலுவலகம்  போகக் கூட தோன்றாமல் வீட்டிலேயே நீரஜாவிற்காக காத்திருந்தான்.

ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது, கொஞ்சம் கோபமாகவே இவன் அவளை வரவேற்க வெளியே சென்றான். ஆனால் அவளின் சோர்வான முகத்தைப் பார்த்ததும்,  நிகேதனின் கோபம் பறந்து போனது.

“ஹாய் நிக்கி… என்ன இந்த டைம்ல வீட்ல இருக்க… ஆஃபிஸ்க்குப் போகல…” கையில் பையோடு வீட்டுக்குள் நுழைந்தப்படியே கேட்டாள்.

“நிரு என்னடா ஆட்டோல வர… பெங்களூர்ல இருந்து கிளம்பும் போது போன் பண்ணியிருந்தா… நானோ இல்ல சஞ்சயோ ஏர்ப்போர்ட்க்கு கார் எடுத்துட்டு வந்திருப்போம்ல…

ஒரு ஃபைல் எடுக்க தான் வீட்டுக்கு வந்தேன்… ஆமா வெற்றி என்ன தனியா வரான்… கேட்டா நான் உடனே சிங்கப்பூர்க்கு போகணும்னு சொல்றான்… உன்னை ஏன் கூட்டிட்டு வரலன்னு கேட்டா… நீ யாரோ ஃப்ரண்ட பார்த்ததால கூட வரலன்னு சொல்றான்… உன்னை இருந்து கூட கூட்டிட்டு வர முடியாதபடி என்ன அவசரம்…??” என்று படபடவென்று பொறிந்தான்.

“எப்படியெல்லாம் பொய் சொல்லிட்டு போயிருக்கான் வெற்றி..” என்று மனதில் நினைத்தவள், “அது லீவ உடனே கேன்சல் பண்ணிட்டு ஆஃபிஸ்க்கு வர சொல்லி அவனுக்கு போன் வந்துச்சு… அதான் உடனே கிளம்ப வேண்டியதா போச்சு…” என்று சமாளித்தாள்.

“அப்படி என்ன அவசரமோ.. சரி அப்படி அர்ஜன்ட்னா நீயும் வெற்றிக் கூட கிளம்ப வேண்டியது தானே… அப்படி என்ன முக்கியமான ப்ரண்ட்… மெதுவா கான்டாக்ட் நம்பர் வாங்கி பேசிக்க வேண்டியது தானே…??”

“அது ரொம்ப நாள் கழிச்சு பார்த்த ஃப்ரண்ட் நிக்கி…  நாங்க தங்கியிருந்த ஹோட்டல்ல தான் அவ வொர்க் பண்றா… அவக்கிட்ட நிறைய பேச வேண்டியிருந்துச்சு… அவ என்னை இங்க சேஃபா தான் அனுப்பி வச்சா… அந்த ஹோட்டல்ல தங்கியிருந்த கப்பிள் கூட தான் நான் சென்னை வந்தேன்… அவங்க என்னை வீட்டுக்கே வந்து ட்ராப் பண்றேன்னு தான் சொன்னாங்க… நான் தான் அவங்களுக்கு கஷ்டம் வேண்டாம்னு இறங்கி ஆட்டோ பிடிச்சு வந்துட்டேன்…”

“சரி நீ ரொம்ப டயர்டா தெரியுற… ஏதாவது சாப்ட்டீயா..?? நவி லன்ச் ரெடி பண்ணி வச்சிட்டு அத்தையை பார்க்க போயிருக்கா.. ஈவ்னிங் வந்துடுவா.. நீ வா.. வந்து சாப்பிடு…”

“இல்ல நிக்கி… என்னோட ஃப்ரண்ட் என்னை சாப்பிட வச்சு தான் அங்க இருந்து அனுப்பினா… எனக்கு இப்போ பசியில்ல.. அதனால நீ இப்படி உட்காரேன்..” என்று அவனை சோஃபாவில் உட்கார வைத்தவள், தரையில் உட்கார்ந்தபடி அவனின் மடியில் தலை வைத்துக் கொண்டாள்.

தன் சகோதரியின் இந்த திடீர் செயலில் நிகேதன் முதலில் வியந்தாலும், அவன் கைகளோ அவள் தலையை கோத தவறவில்லை.

“நிரு என்னடா..??”

“ஒன்னுமில்ல நிக்கி… இன்னைக்கு அம்மா, அப்பா ஞாபகமா இருக்கு…”

தங்கை இப்படி சொல்வாள் என்று நிகேதன் எதிர்பார்க்கவில்லை,  சிறுவயதிலேயே தாய், தந்தை இறந்துவிட்டதால், இப்போது வரையிலுமே ஏதாவது ஒரு தருணத்திலோ, இல்லை சூழ்நிலையிலோ, ஏன் அது சந்தோஷமான தருணமாக இருந்தாலும் இருவருமே அவர்களை நினைவுப்படுத்திக் கொள்வார்கள் தான், ஆனால் ஒருவருக்கொருவர் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனால் அடுத்தவரும் சேர்ந்து வருத்தப்படுவர் என்று  தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வர்.

ஆனால் இன்று வாய்விட்டு தன் சகோதரி கூறுகிறாள் என்றால், அவளுக்கு ஏதாவது பிரச்சனையா..?? என்று நிகேதன் யோசித்தான்.

“நிரு ஏதாவது பிரச்சனையாடா..??”

“அப்படில்லாம் இல்லை நிக்கி… திடிர்னு அம்மா, அப்பா ஞாபகம் வந்துடுச்சு..”

“நிரு ஏதாச்சும் இருந்தா மறைக்காம சொல்லுடா..?? நீ இப்படியெல்லாம் இருக்கமாட்டீயே..? இங்கப்பாரு அந்த வெற்றியால ஏதாச்சும் பிரச்சனையா..??”

திடிரென்று தன் சகோதரன் அப்படி கேட்டதும் தலை நிமிர்ந்து அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். “வெற்றியால என்ன பிரச்சனை நிக்கி… அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே..”

“இங்கப்பாரு எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுக்காத… அந்த வெற்றி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றதா என்கிட்ட சொன்னான்… நான் உன்னோட விருப்பம்னு சொன்னதால.. பெங்களூர்ல வச்சு உன்கிட்ட பேசப் போறதா சொன்னான்…

அவன் அப்படி சொல்லி.. நீ மறுத்துட்டியா..?? அதனால அவன் ஏதாவது கோபப்பட்டானா..?? ஏன் கேக்கறேன்னா, நீயும் அவனும் தனி தனியா வந்தீங்க… வந்ததும் வராததுமா அவன் சிங்கப்பூர் கிளம்பிட்டான்… அதான் கேட்டேன்… வெறும் கோபப்பட்டானா.. இல்லை வேறெதாவது பேசினானா..?? எதுவா இருந்தாலும் சொல்லு..” என்றவனின் பேச்சில் கோபம் அதிகமாகவே இருந்தது.

ஓரளவுக்கு நடந்ததை தன் சகோதரன் யூகித்ததே நீரஜாவிற்கு அதிர்ச்சி… இதில் இந்த வெற்றி செய்ததை சொன்னால் அவ்வளவுதான், நேரா சிங்கப்பூர்க்கே போய் அவனை ஏதாவது செய்திடுவான். என்று நினைத்தவள்,

“அய்யோ நிக்கி… அந்த வெற்றியெல்லாம் ஒரு ஆளுன்னு பேசிக்கிட்டு இருக்க… அவன் ஏற்கனவே சிங்கப்பூர்ல இருக்கும்போதே என்கிட்ட லவ் பண்றதா உளரினான்… அப்பவே அதை நான் ஏத்துக்கல… திரும்பவும் நான் அவன்கிட்ட ஃப்ரண்டா பழகறத வச்சு நான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சிருக்கான்…

ஆனா பெங்களூர்ல வச்சு அவன்கிட்ட ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்… அதுமாதிரி எந்த எண்ணமும் அவன் மேல கிடையாதுன்னு… அவனும் புரிஞ்சிக்கிட்டான்… இப்போ உண்மையிலேயே அவனுக்கு சிங்கப்பூர் கிளம்ப வேண்டிய கட்டாயம்… அதான் கிளம்பிட்டான்…” என்று சமாளித்தாள்.

ஆனால் நிகேதனின் பார்வையோ.. அதை நம்பவில்லை என்பது போல இருந்தது.

“உண்மை தான் நிக்கி.. அந்த வெற்றியாலெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை… எனக்கு திடிர்னு அம்மா, அப்பா ஞாபகம் வந்ததுக்கு என்ன காரணம் தெரியுமா..?? காலையில என்னோட ப்ரண்ட் மேரேஜ் முடிஞ்சதும், அவளும் அவளோட ஹஸ்பண்டும் அவளோட அம்மா, அப்பாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினாங்களா… அப்போ என்னோட ஃப்ரண்டோட அம்மா அழுதுட்டாங்க…

ஒருபக்கம் பொண்ணு கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சது சந்தோஷம்னா… இன்னொரு பக்கம் அவ அவங்களை விட்டுப் பிரியப் போறாளேங்கிற வருத்தம்… அதுவும் ஸ்டேட் விட்டு ஸ்டேட்… அதான் அழுதுட்டாங்க… அம்மா தான் அழறாங்க… அப்பா சமாதானப்படுத்துவாருன்னு பார்த்தா.. அவருக்கு கண்ணுல தண்ணி வரலைன்னாலும், அவருக்கும் வருத்தத்துல பேச்சே வரல… அம்மா, அப்பா அழறத பார்த்து, என்னோட ஃப்ரண்டும் அழ ஆரம்பிச்சிட்டா… கடைசியில அவளோட ஹஸ்பண்டும், நாங்களும் தான் 3 பேரையும் சமாதானப்படுத்த வேண்டியதா ஆயிடுச்சு…” என்றவள்,

திரும்பவும் அவன் மடியில் தலை வைத்து, “ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து பிரியறதுக்கே… அவளோட அப்பா, அம்மா இவ்வளவு ஃபீல் பண்றாங்களே… அப்போ நம்ம அப்பா, அம்மா நம்மள விட்டு நிரந்தரமா பிரியப் போறாங்கன்னு தெரிஞ்சப்போ… ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பாங்கள்ள நிக்கி… நம்மள அநாதையா விட்டுட்டு போறோம்னு வருத்தப்பட்ருப்பாங்க…” என்று அவள் சொல்லும்போது நிகேதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஆமாம் டா… ரொம்ப வருத்தப்பட்ருப்பாங்க… ஆனா அவங்க ஆத்மா நம்மளையே தான் சுத்தி வந்துக்கிட்டு இருக்கும்… நமக்கு நடக்குற நல்லதையெல்லாம் பார்த்துக்கிட்டு தான் இருக்கும்…

ஆனா அவங்க ரெண்டுப்பேரும் ரொம்ப சீக்கிரம் நம்மள விட்டு போயிருக்க வேண்டாம் தான்… அட்லீஸ்ட் ஒருத்தராவது நம்ம கூட இருந்திருக்கலாம்… அதுவும் எனக்காக இல்லைன்னாலும், உனக்காகவாவது இருந்திருக்கலாம்.. ஒரு பொண்ணா உனக்கு அப்பா, அம்மா துணை அவசியம்… என்ன தான் அண்ணனா நான் உன்னைப் பார்த்துக்கிட்டாலும்… அப்பா, அம்மா பார்த்துக்கிறது போல வருமா..??” என்று நெகிழ்ச்சியாக பேசினான்.

காலையில் திருமணத்தில் அந்த சம்பவம் நடந்ததும், தன் தாய், தந்தையின் ஞாபகம் நீரஜாவிற்கு வந்தது. இருந்தாலும் வழக்கம் போல அதை மறந்துவிட்டாள். பின் வெற்றியின் அந்த செயல், மந்த்ராவின் கதையை கேட்டது, சஞ்சயின் திருமண செய்தி  எல்லாம் சேர்ந்து அவள் மனம் வெகுவாக சோர்ந்து போனது. மனம் தாயின் மடியை அதிகமாக தேடியது. அதன் விளைவே தன் சகோதரனின் மடியில் தலை வைத்து படுத்தாள். அவன் ஏதோ பிரச்சனை என்று கேட்கவே தான் அம்மா, அப்பா ஞாபகம் வந்ததாக கூறினாள். ஆனால் அதுவே அவனை காயப்படுத்திவிட்டதோ..??

“சாரி நிக்கி… உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் பேசல… இப்போ என்ன..?? அதான் உனக்கு நானும்.. எனக்கு நீயும்னு நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போயிருக்காங்களே… அதில்லாம நமக்கு ஜானு, ஜெய் ரெண்டுப்பேரும் கிடைச்சிருக்காங்களே…

நீ, ஜானு, ஜெய் தான் என்னோட உலகமே நிக்கி… இந்த நேரம் நீ இங்க இல்லாம ஜானு இங்க இருந்திருந்தாலும், அவ மடியிலேயும் இப்படி தான் தலை வச்சுப் படுத்திருப்பேன்… அப்பா, அம்மாக்கு அப்புறம் நீங்க தான் எனக்கு எல்லாமே… இனி அம்மா, அப்பா பத்தி எதுவும் பேச மாட்டேன் சரியா..??”

“சேச்சே… நீ பேசனதுல எனக்கும் எந்த கஷ்டமும் இல்லடா… நானே அப்பா, அம்மா நம்மக்கூட இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்குனு எத்தனையோ தடவை நினைச்சிருக்கேன்…

அம்மா, அப்பா இருந்தா எல்லாம் சரியா நடந்திருக்கும்… உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்னோட கல்யாணம்னு அவங்க ஸ்டிரிக்டா சொல்லியிருந்திருப்பாங்க… என்கிட்ட சொன்ன மாதிரி அவங்கக்கிட்ட சாக்கெல்லாம் சொல்லியிருக்க முடியாது… அன்பா பேசியே உன்னை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிருப்பாங்க… அப்படி நீ வேண்டாம்னு சொன்னாலும், என்ன பிரச்சனைன்னு உன்கிட்ட கேக்கற முறையில கேட்டு, அதை சரியும் பண்ணியிருந்திருப்பாங்க…

ஆனா என்னால தான் அப்படி எதுவும் செய்ய முடியல… உன்னை வற்புறுத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கவும் முடியல… நீ கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப் போட்றதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கவும் முடியல… இதை எப்படி ஹாண்டில் பண்றதுன்னும் புரியல… மொத்தத்துல உன்கிட்ட பாசமான அண்ணனா இருந்தாலும், பொறுப்பான அண்ணனா இருக்கேனான்னு தெரியல…” என்று அவன் சொன்னதும், அவன் மடியில் படுத்திருந்தவள் விலுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

“உன்னை பொறுப்பில்லாத அண்ணன்னு யார் சொன்னது? அவங்கள என் முன்னாடி கூட்டிட்டு வா… அவங்கள ஒரு வழி பண்ணிட்றேன்…” என்றாள்.

“இல்லடா… எனக்கே அப்படிதான் தோனுது..”

“இங்கப்பாரு நிக்கி… எல்லாருக்கும் இப்படி ஒரு அண்ணன் கிடைச்சிருப்பாங்களான்னு தெரியாது… ஆனா நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்..

இப்போ என்ன..?? நான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படித்தானே… சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… போதுமா..??” அவள் சொன்னதும், தங்கயிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை!!

“நிஜமா தான் சொல்றியா நிரு… நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா..?? அப்போ நான் சஞ்சய் கிட்ட பேசட்டுமா..??” அவன் அப்படி கேட்டதும், நீரஜாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

சஞ்சய் இவளை காதலிக்கவே இல்லை, அப்படி காதலித்திருந்தால், இன்னொரு பெண்ணை அவன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டிருப்பானா..?? அதை புரிந்துக் கொள்ளாமல் இவள் தான் பைத்தியக்காரியாய் அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள் என்றால், தன் சகோதரனும் அந்த எண்ணத்தை கைவிடவில்லையே என்ற வருத்தம் கலந்த கோபம் தான் வந்தது அவளுக்கு,

“இப்போ சஞ்சய் கிட்ட பேச என்ன இருக்கு நிக்கி…??”

“உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கிற கடமை எனக்கு இருக்கு நிரு… சஞ்சய் கூடவே இருந்து நான் அவனை பார்த்திருக்கேன்… சஞ்சய் உனக்கு புருஷனா வந்தா… உன்னோட லைஃப் நல்லா இருக்கும் டா..”

“அது தான் நடக்கப் போறதில்லையே..” என்று மனதிற்குள் நினைத்தப்படியே எழுந்து நின்றவள், 

“நிக்கி இதைப்பத்தி நீ ஏற்கனவே பேசியிருக்க… நான் அப்போ அதுல இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னேன்… இப்பவும் அதைத்தான் சொல்றேன்… நான் சஞ்சயை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிச்சதில்ல…

ஏன் சஞ்சயை தவிர வேற மாப்பிள்ளை ஊர்லயே இல்லையா..?? அப்படி ஒரு நல்ல மாப்பிள்ளையை பாரு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு… நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு, அவனின் பதிலை எதிர்பார்க்காமல் மேலே சென்றுவிட்டாள்.

சஞ்சய் தன்னை காதலிக்காததால் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள போகிறான் என்று கோபப்படுகிறாளே, இப்போது இவள் வேறொருவனை திருமணம் செய்துக் கொள்ள ஒத்துக் கொண்டதற்கு காரணம் என்ன..?? அவள் சிந்தித்துப் பார்த்தாளா..??

நிகேதனுக்கோ ஒன்றும் புரியவில்லை… ஜானவியோ இவர்கள் இருவரும் காதலிப்பதாக சொல்கிறாள். ஆனால் நீரஜாவோ திருமணத்துக்கு ஒத்துக் கொண்டாலும், சஞ்சயை வேண்டாமென்று சொல்கிறாள். இவனுக்கோ சஞ்சயே தன் தங்கைக்கு கணவனாக வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.

முதலில் சஞ்சயிடம் இதைப்பற்றி பேச வேண்டும், அதேபோல் நீரஜாவிடம் நவியை வைத்து பேச சொல்ல வேண்டும். அதன்பின் மேற்கொண்டு முடிவெடுக்கலாம் என்று நினைத்தவன், அலுவலகத்திற்கு கிளம்பினான்.

நிகேதன் அலுவலகத்திற்கு வரும்போது சஞ்சய் ஏற்கனவே அங்கு வந்துவிட்டிருந்தான். நீரஜா வெற்றியிடம் என்ன சொல்லியிருப்பாள்? என்று தெரிந்துக் கொள்ளும் வரை அவன் ஒரு நிலையில் இல்லை, ஆனால் அவளின் முடிவு தெரிந்த அந்த நொடியிலிருந்து, தன் துயரத்தை மறக்க, நீரஜா அவனுக்கு இல்லை என்ற நிலையை அவன் உணர, அந்த இன்னலில் இருந்து தன்னை மீட்டெடுக்க,  தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள நினைத்தான். அதனால் உடனே அலுவலகத்திற்கு கிளம்பி வந்துவிட்டிருந்தான்.

இதை எதுவுமே அறியாத நிகேதனோ… தன்னுடைய அறைக்கு செல்வதற்கு முன், நிகேதனை பார்க்கச் சென்றான்.

“டேய் மாப்ள… என்னடா இன்னைக்கு ஆஃபிஸ் வரமாட்டேன்னு சொன்ன… திடிர்னு வந்திருக்க…”

“போன வேலை முடிஞ்சிடுச்சு மச்சான்.. அதான்..”

“அப்படி என்னடா முக்கியமான வேலை..??”

“முக்கியமெல்லாம் ஒன்னும் கிடையாது… சரி அதை விடு… நான் வரும்போது நீ இங்க இல்லையே.. எங்க போயிருந்த..??”

“நான் வீட்டுக்குப் போயிருந்தேன் டா.. அப்புறம் மாப்ள ஒரு சந்தோஷமான விஷயம் டா.. நம்ம நிரு கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா டா..”

நிகேதன் அப்படி சொன்னதும், வெற்றியை திருமணம் செய்துக் கொள்ள தான் நீரஜா ஒத்துக் கொண்டதாக அவன் கூறுகிறான் என்று சஞ்சய் நினைத்துக் கொண்டான்.

“ஓ… ரொம்ப சந்தோஷம்..”

“சஞ்சய்… உன்னை மாப்ளன்னு சும்மா தாண்டா கூப்பிட ஆரம்பிச்சேன்… ஆனா நீ நிஜமாவே எனக்கு மாப்பிள்ளையா வரணும்னு நான் ஆசைப்பட்ருக்கேன்…

நீரஜாவை நீ தாண்டா கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைச்சேன்… ஆனா அந்த வெற்றி..” அவன் என்ன சொல்ல வந்தானோ, ஆனால் சஞ்சய் அதை முழுதாக சொல்ல விடவில்லை,

“டேய் இப்போ எதுக்குடா இதையெல்லாம் பேசற… அதான் நான் ஏற்கனவே இதுல இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னேனே… அதுமட்டுமில்ல நானும் அம்மாக்கிட்ட அவங்க தம்பி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்கிட்டேன்..” என்றான்.

“சஞ்சய் என்னடா சொல்ற… அதுக்கு நீ ஒத்துக்கப் போறதில்லன்னு சொன்ன..??”

“அது எனக்கு கல்யாணம் செஞ்சு பார்க்கணும்னு அம்மாக்கு ஆசை… அம்மாக்கும் வயசாகிட்டே போகுது… நானும் காரணமே இல்லாம  எதுக்காக கல்யாணத்தை  தள்ளிப் போடணும்.. அதான் ஒத்துக்கிட்டேன்…”

“ம்ம் கரெக்ட் தான் டா.. சரி நீ வேலையை பாரு… நான் என் கேபினுக்குப் போறேன்..” என்று சொல்லிவிட்டு நிகேதன் வெளியே சென்றுவிட்டான்.

இதெல்லாம் இப்போ நிக்கிக்கிட்ட நாம சொல்லியிருக்கக் கூடாதோ…?? என்று சஞ்சய் யோசித்தான். ஆனால் நீரஜாவிற்கும், வெற்றிக்கும் திருமணம் என்ற செய்தியை தன் காதால் கேட்கும் தைரியம் அவனுக்கு இல்லை, அதனால் தான் படபடவென்று ஏதேதோ பேசிவிட்டான். ஆனால் நிக்கி இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பான்..?? என்று சஞ்சய் குழம்பிப் போனான்.

தன் கேபினுக்கு வந்த நிகேதனுக்கோ சஞ்சய் தன் மாமாவின் மகளை திருமணம் செய்ய ஒத்துக் கொண்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இவன் அளவுக்கு சஞ்சய் வளவளவென்று பேசமாட்டான் தான், ஆனால் முக்கியமான விஷயத்தில் இவனது ஆலோசனையை சஞ்சய் கேட்பான்.

ஏற்கனவே இந்த சம்பந்தத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்று சஞ்சய் இவனிடம் சொல்லியிருந்தான்.  நீரஜாவை காதலிப்பதால் தான் இந்த சம்பந்தத்தை சஞ்சய் விரும்பவில்லையோ என்று இவன் நினைத்தான். இருந்தாலும் அம்பிகா ஆன்ட்டி சஞ்சய்க்கு பெண் பார்க்க ஆரம்பிக்கவே, அப்போது தான் நீரஜாவின் திருமணம் குறித்து, இவனும் தீவிரமானான். அதன் விளைவு தான் இன்று நீரஜாவிடமும் கொஞ்சம் சீரியஸாக பேசினான்.  அதற்கு பலனும் கிடைத்தது.

அதற்கு முன்னரும் கூட நவி சொல்வது போல் இவர்களுக்கிடையே காதலும் இருந்து சண்டையும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதை சரி செய்யும் முயற்சியாகவே…வைஷு, சஞ்சயை விரும்பியதை பற்றி நீரஜாவிடம் கூறினான். அதேபோல் சஞ்சய் இருக்கவே தான் வெற்றியையும் நீரஜாவிடம் தன் காதலை சொல்லும்படியும் கூறினான்.  அப்போதாவது இருவரும் புரிந்துக் கொண்டு அவர்கள் மனதில் உள்ளதை தெரியப்படுத்த மாட்டார்களா..?? என்று நினைத்தான். ஆனால் எந்த பலனுமில்லை,

இப்பொழுதும் இருவரும் ஒரே சமயத்தில், வேறொருவரை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நவி சொன்னது போல் ஏதோ இருக்கிறது தான்,

ஆனால் பட்டென்று இதில் ஆர்வம்  இல்லையென்று சொல்பவனிடம், அவன் தன் நண்பனாக இருந்தாலும், என் தங்கையை திருமணம் செய்துக் கொள்.. என்று கெஞ்ச இவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதிலும் அவனது மாமா பெண்ணை கல்யாணம் செய்துக் கொள்ள ஒத்துக் கொண்ட நிலையில் இவனால் என்ன செய்ய முடியும்?

கடைசியாக நீரஜாவும் அவள் முடிவில் உறுதியாக இருக்கிறாளா..?? என்று நவியை வைத்து பேசிப் பார்க்க சொல்ல வேண்டும்… அப்படி நீரஜா முடிவிலும் மாற்றம் இல்லையென்றால், அவளுக்கு வேறொரு வரன் பார்க்க வேண்டியதுதான்.. என்ற முடிவை நிகேதன் எடுத்தான்.

மௌனம் தொடரும்..