KPEM 17

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மௌனம் 17

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே மந்த்ரா அந்த ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை செய்துக் கொண்டிருக்கிறாள்.  நேற்று மாலை நீரஜா அந்த ஹோட்டலுக்கு நண்பர்களோடு வந்த போதே மந்த்ரா அவளை கவனித்துவிட்டாள்.

அதிலிருந்தே நீரஜாவோடு பேசும் சந்தர்ப்பத்துக்காக அவள் காத்திருந்தாள். நீரஜா நண்பர்களோடு திருமணத்திற்கு சென்றது, திரும்ப இரவு ஹோட்டலுக்கு வந்தது, காலையிலும் திருமணத்திற்கு கிளம்பி சென்றது என்று எப்போதும் நண்பர்களோடே நீரஜா இருந்ததால், தனியாக நீரஜாவோடு பேசும் சந்தர்ப்பத்திற்காக மந்த்ரா காத்திருந்தாள்.

ஆனால் அதுக்கான சந்தர்ப்பம் அமையவில்லை,  இதில் திருமணம் முடிந்து வந்ததும் அனைவரும் அறையை காலி செய்துவிட்டு கிளம்ப தயாரியிருந்தனர். நீரஜாவோடு பேச சந்தர்ப்பம் அமையவில்லையே என்று மந்த்ராவும் அமைதியாகிவிட்டாள்.

அப்போது தான் நீரஜாவும், வெற்றியும் நண்பர்களுடன் விமான நிலையத்திற்கு சென்று விட்டு திரும்ப வந்தனர்.  அதைப் பார்த்த மந்த்ரா இரண்டு அறை மட்டும் காலி செய்யாமல் இருப்பதை அறிந்து, எப்படியோ நீரஜா தனியாக தான் இருப்பாள், அவளோடு பேசலாம் என்று முடிவு செய்தாள்.

அந்த நேரம் வேலை நேரம் என்பதால், இன்னொருவரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு, இரண்டு அறையில் எந்த அறையில் பெண்கள் தங்கியிருந்தனர் என்பதை அறிந்து, அந்த அறைக்குச் சென்றாள்.

அவள் சென்ற அந்த நேரம் ” ஏய் ஏன் கதவை சாத்துற..” என்று நீரஜாவின் குரலும், அதை தொடர்ந்து கதவு வேகமாக சாத்தப்பட்டதையும் கண்டாள்.  நீரஜாவிற்கு ஏதோ பிரச்சனை என்பதை அறிந்தவள், உடனே அந்த அறையின் இன்னொரு சாவியை எடுத்துக் கொண்டு, அங்குள்ள ஆண் ஊழியர்களை துணைக்கு அழைத்து வந்து நீரஜாவை காப்பாற்றினாள்.

வெற்றி செய்த காரியத்தை நீரஜாவால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. ஒரு நல்ல நண்பனாக நினைத்து வீடு வரை அவனை அழைத்து வந்து, இப்போது தனியாக பெங்களூர் வரை அவனோடு வந்திருக்கிறாள். ஆனால் அவன் அந்த நம்பிக்கையை எளிதில் உடைத்துவிட்டான்.

இதையெல்லாம் நினைத்து அவள் கட்டிலில் சோர்வாக உட்கார, மந்த்ரா ஆறுதல் கூறும் எண்ணத்தோடு அருகில் அமர்ந்தாள். திடீரென ஏதோ தோன்றி எழுந்த நீரஜா, “இதோ வரேன் மந்த்ரா”  என்று, பெட்டியில் இருந்து ஆடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.

மனதிற்கு நெருக்கமானவன் முத்தமிட்ட போதே அதை நீரஜாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இதில் ஒரு தவறான எண்ணத்தோடு வெற்றி அவளை அணுகியிருக்க, அதை அருவறுப்பாக உணர்ந்த நீரஜா, அந்த அருவறுப்பு நீங்கும் அளவுக்கு ஷவரில் நின்றிருந்தாள்.

மந்த்ராவிற்கும் நீரஜாவின் நிலை புரிந்தது. நீரஜா குளித்துவிட்டு வருவதற்குள், சூடாக காபியை வரவழைத்து இருந்தாள். நீரஜா குளித்துவிட்டு வந்து காபியை அருந்திய பின்பு தான் கொஞ்சம் தெளிவானாள். அதன்பிறகு தான் மந்த்ரா இங்கு எப்படி வந்தாள்? என்பதை சிந்தித்தாள்.  அதை அவளிடமே கேட்டாள்.

“நான் இங்க தான் ரிசப்ஷனிஸ்ட்டா வொர்க் பண்றேன் நிரு… நேத்து நீ வந்தப்பவே உன்னை நான் பார்த்துட்டேன்…” என்று நேற்றிலிருந்து இப்போது வரை அவளை கண்காணித்ததையும், சந்தேகம் வந்து ஊழியர்களை அழைத்து வந்ததைப் பற்றியும் கூறினாள்.

“நேத்துல இருந்து இந்த ராஸ்கல உன்கூட பார்த்தேன்… எல்லோரும் ஃப்ரண்ட்ஸ், ஏதோ மேரேஜ்க்கு வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க… இவனும் உங்கக் கூடவே தான இருந்தான்… அப்புறம் எப்படி இப்படி ஒரு காரியத்தை செஞ்சான்… நீ ஏன் அவன் கூட தனியா வந்த…”

“நாங்க எல்லோரும் சிங்கப்பூர்ல ஒன்னா ஒர்க் பண்ணவங்க மந்த்ரா… அப்பவே என்கிட்ட இவன் ப்ரோபோஸ் பண்ணான்…. நான் அதை ஏத்துக்கல… அப்புறம் நல்ல ப்ரண்டா இருக்கலாம்னு சொன்னான்… நான் வேலையை விட்டுட்டு இந்தியாக்கே வந்துட்டேன்… என்னோட கெஸ்ட்டா எங்க வீட்டுக்கு வந்தான்… ப்ரண்டோட மேரேஜ்ங்கிறதால அவனோட வந்தேன்… எங்க ப்ளைட்டுக்கு டைம் இருக்குன்னு தான் நாங்க ரூமை வக்கேட் பண்ணாம இருந்தோம்… இங்க வந்து திரும்பவும் லவ் பண்றதா சொன்னான்… நான் அதை ஏத்துக்கல, அதனால இப்படி..” என்று முழுவதுமாக சொல்லப் பிடிக்காமல் நிறுத்தினாள்.

“ராஸ்கல்… நீ அவனை சும்மா விட்ருக்கக் கூடாது நிரு… எவ்வளவு தைரியம் இருந்தா ஃப்ரண்ட்னு சொல்லிட்டு தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருப்பான்… இவனை போலிஸ்ல புடிச்சுக் கொடுத்து முட்டிக்கு முட்டி தட்ட சொல்லியிருக்கணும்…”

“இல்லை மந்த்ரா… போலிஸ்க்கு போனா பிரச்சனை தான்… அந்த மேனேஜர் சொன்ன மாதிரி இந்த ஹோட்டலுக்கு கெட்ட பேர்… அப்புறம் நாங்க இங்க வந்தது ஃப்ரண்டோட மேரேஜ்க்கு.. இது அவ ஹஸ்பண்டோட ஊரு… இந்த வெற்றி போலீஸ்ல ஏதாவது உளரி வச்சான்னா… அவங்கள கூப்பிட்டு விசாரிப்பாங்க… முதல் நாளே அவளோட புகுந்த வீட்ல அவளைப்பத்தி ஏதாவது தப்பா புரிஞ்சிக்கிட்டாங்கன்னா அவளுக்கு பிரச்சனை ஆயிடும்…

அதுக்கு தான் அந்த வெற்றிய விட்டுட்டேன்… அதுமட்டுமில்லாம என்னோட அண்ணனுக்கும், சஞ்சய்க்கும் இதைப்பத்தி தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாங்க… வெற்றிய ஏதாவது செஞ்சாலும் செஞ்சிடுவாங்க… அதுக்கு தான் நான் இதைப் பெரிசுப்படுத்தல” என்றாள்.

அதுவரையிலும் நீரஜா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மந்த்ராவிற்கு, நீரஜா சஞ்சயை பற்றி பேசியதை கேட்டதும், அவர்கள் இருவருக்குள்ளும் எல்லாம் சரியாகிவிட்டதா..?? என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் பிறந்தது. அன்றைக்கு அவள் செய்த தவறுக்காக தான் மன்னிப்பு கேட்க நீரஜாவிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள் அவள்,

“நிரு… இப்போ சஞ்சய் பத்தி தானே பேசின.. உனக்கும் சஞ்சய்க்கும் இடையில…” அதற்கு மேல் கேட்க முடியாமல் தயங்கினாள்.

“சஞ்சயும், என்னோட அண்ணாவும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்… அவங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு… ஆனா அன்னைக்கு உன்னோட வீட்ல நடந்த பிரச்சனைக்கு அப்புறம் எங்களுக்குள்ள எதுவும் இன்னும் சரியாகல மந்த்ரா… நாங்க இன்னும் நல்லா முன்ன மாதிரி பேசிக்கிறது கூட இல்ல..” என்று சொன்னதும் மந்த்ரா அதிர்ச்சியானாள்.

“எல்லாம் என்னால தான் நடந்துச்சு இல்லையா நிரு..?? அன்னைக்கு சஞ்சய்க்கிட்ட பொய் சொல்லி நான் தான் வர சொன்னேன்… எனக்கு உதவின சஞ்சய்க்கு நான் கெடுதல் செஞ்சுட்டேன்… ஆனா செஞ்ச தப்புக்கெல்லாம் அளவுக்கு மீறி தண்டனையை அனுபவிச்சிட்டேன் நிரு..” என்றதும் நீரஜா அவளை கேள்வியாய் பார்த்தாள்.

“என்னோட சின்ன வயசுல நாங்க ரொம்ப வசதியா வாழ்ந்தவங்க நிரு… திடிர்னு தொழில் நஷ்டமாக அப்பா அதிர்ச்சியில இறந்துட்டாரு… நஷ்ட ஈடெல்லாம் போக மீதி இருந்த பணத்தை அம்மா எனக்கும், என்னோட தங்கைக்கும் ஆன படிப்புக்கும், கல்யாணத்துக்கும் உதவும்னு பேங்க்ல போட்டுட்டாங்க… வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க… அந்த வருமானம் குடும்ப செலவுக்கே சரியாப் போக, எங்களோட ஆடம்பர செலவெல்லாம் குறைச்சுக்க வேண்டியதாப் போச்சு…

ஸ்கூல் படிக்கிறப்போவே ஆடம்பரமா  இருந்த எனக்கு, காலேஜ்ல சிம்பிளா இருக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… அப்போ தான் அப்படிப்பட்ட ஃப்ரண்ட்ஸ் கூட அறிமுகம் கிடைச்சுது… ஜாலியா அவங்கக் கூட ஊர் சுத்தறது, நல்ல ரெஸ்ட்டாரன்ட்ல சாப்பிட்றது, ஷாப்பிங் போறதுன்னு அவங்கக் கூட ரொம்ப எஞ்சாய் பண்ணேன்…

அம்மாக்கூட கண்டிப்பாங்க… புது ட்ர்ஸ்ல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டுப் போனா, எப்படி வந்ததுன்னு கேப்பாங்க… எல்லோரும் கேர்ள் ஃப்ரண்ட்ஸ், வசதியானவங்க… அன்பா வாங்கிக் கொடுக்கறாங்கன்னு சொல்லி சாமாளிப்பேன்… அம்மாவும் திடிர்னு மாறிப்போன எங்க வீட்டு நிலைமையை நினைச்சு, நான் கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவேன்னு நம்பிக்கையோட இருந்தாங்க…

ஆனா ஒழுக்கம்னு வரும்போது, அம்மா அதுல கண்டிப்பா இருப்பாங்க… நானும் அதுல கவனமா தான் இருந்தேன்… ஒரு எல்லைக்கோடோட தான் நான் அவங்கக் கூடல்லாம் பழகினேன்… ஆனா அதையும் மீறி என்கிட்ட அவங்க எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க… அப்போ நான் அவங்க ஃப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணிக்கிட்டேன்… சிலபேர் நான் வேஸ்ட்னு நினைச்சு ஒதுங்கிடுவாங்க…

ஆனா செஞ்ச செலவுக்கு என்கிட்ட பலனை எதிர்பார்த்து சில பேர் என்னை தொல்லைப் பண்ண ஆரம்பிச்சாங்க… அதுக்கு மேல அந்த ஊர்ல இருக்க பயந்து தான் சென்னைக்கு வேலைக்கு வந்தேன்… பெரிய கம்பெனிக்கு வேலைக்குப் போனா திரும்ப இது போல தொல்லையெல்லாம் இருக்கும்னு, மோகனோட அந்த சின்ன கம்பெனியில வேலைக்குப் போனேன்…

அம்மாவோட வருமானம், என்னோட வருமானமும் சேர்ந்து அதுவே எங்க 3 பேருக்கு தேவையானதா இருந்துச்சு… சிம்பிளா வாழ நானும் பழகிக்கிட்டேன்… அப்போ தான் மோகனும் என்னை காதலிக்கிறதா சொன்னாரு… எனக்கும் அவரை பிடிச்சுது… எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருந்தப்ப தான் உன்னைப் பார்த்தேன்…

நான் செஞ்ச ஒரே ஒரு தப்பு… மோகன்கிட்ட முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு சொல்லாம விட்டது தான்… அதை நீ சொல்லிடுவியோன்னு பயந்தேன்… நான் பயந்த மாதிரியே நடந்துச்சு… உன்மேல எனக்கு கோபம் கூட வந்துச்சு… ஆனா உன்னை பார்க்க வந்தது மோகன் கூட திரும்பவும் சேர முடியாதான்னு தான்… ஆனா நீ என்னோட கேரக்டரை தப்பா பேசின… நல்லபடியா நான் இருக்கிறப்போ, நீ அப்படி பேசினது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… என்னையும், மோகனையும் பிரிச்ச உங்க ரெண்டுப்பேரையும் பிரிக்கணும்னு நினைச்சேன்…

சஞ்சய்க்கிட்ட எனக்கு வேலைப் போனதால, என்னோட குடும்பம் கஷ்டப்பட்றதா சொல்லி ஏமாத்தினேன்… அவரும் வேலை வாங்கிக் கொடுத்தாரு… அன்னைக்கு அம்மாக்கு உடம்பு சரியில்ல, பணம் வேணும்னு சொல்லி தான் வரச் சொன்னேன்… அப்புறம் வேணும்னே நீ வர்றதை வச்சு அவர்க்கிட்ட நெருக்கமா இருக்க மாதிரி நடிச்சேன்… அப்புறம் நடந்தது உனக்கே தெரியும்…

ஆனா போகும் போது சஞ்சய், உன்னைப்பத்தி மோகன்கிட்ட நல்லதா சொல்லலாம்னு நினைச்சேன்… ஆனா மோகன்க்கு நீ ஏத்தவ இல்லன்னு சொன்னப்ப தான் என்னோட தப்பு புரிஞ்சுது… என்னோட தப்பை உடனே திருத்திக்கணும்னு தான் நினைச்சேன்… ஆனா அதுக்குள்ளேயே கடவுள் எனக்கு தண்டனையை கொடுத்துட்டாரு…

எந்த நேரம் அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னேனோ… அம்மாக்கு உடம்பு சீரியஸா இருக்கறதா போன் வந்துச்சு… போனா அம்மா ஐ.சி.யூல இருக்காங்க… தங்கையை எவனோ ஒருத்தன் ஏமாத்தி கர்ப்பமாகிட்டான்… அந்த அதிர்ச்சியில அம்மாக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு… தொடர்ந்து அம்மா ஹாஸ்பிட்டல்லயே இருந்தாங்க… அப்புறம் கொஞ்சம் சரியாகி அவங்க வந்த நேரம், தங்கையை ஏமாத்தினவன் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டதால, அவ தற்கொலை செஞ்சுக்கிட்டா…

என்னோட தங்கை ரொம்ப இன்னஸண்ட்… அதை யூஸ் பண்ணிக்கிட்டான் ஒருத்தன்… நாங்க பார்த்துக்கலாம்னு சொல்லியும் அப்படி செஞ்சுக்கிட்டா… நான் செஞ்ச தப்புக்கு அவளுக்கு இப்படி ஆயிடுச்சோன்னு நினைக்க தோனுச்சு… தங்கையோட இழப்புக்கு அப்புறம் அம்மா ரொம்ப உடைஞ்சுப் போய்ட்டாங்க… அந்த ஊர்லயும் அதுக்கு மேல எங்களால இருக்க முடியல… அம்மாவை கூட்டிக்கிட்டு சென்னைக்கே வந்துட்டேன்…

தொடர்ந்து லீவ் போட்டதால சஞ்சய் வாங்கிக் கொடுத்த வேலையும் இல்லாம போயிடுச்சு… இருந்த சேவிங்ஸும் அம்மாவோட ட்ரீட்மென்ட்க்கே செலவாயிடுச்சு… அப்போதைக்கு ஒரு வேலை அவசியமா தேவைப்பட்டுச்சு… அப்புறம் ஒரு ஹோட்டல்ல ரிசப்ஷனிஸ்ட் வேலை கிடைச்சுது… ஆனா இத்தனை நாள்ல உங்க ரெண்டுப்பேருக்கும் நான் செஞ்சத நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்…

நிலைமை ஓரளவுக்கு சரியானதுக்குப் பிறகு உன்னைப் பார்க்க நான் ட்ரை பண்ணேன்… ஆனா நீ சிங்கப்பூர் போய்ட்டதா சொன்னாங்க… அப்புறம் சஞ்சயை பார்க்க போனேன்… சஞ்சயோ என்னை பார்க்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டாரு… அப்புறம் கொஞ்ச நாள்ல அம்மாவும் இறந்துட்டாங்க… அப்புறம் தான் நான் இங்க வந்தேன்… மனசுக்குள்ள மட்டும் ஒரு குற்ற உணர்வு இருந்துக்கிட்டே இருந்துச்சு… இப்போ உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு… நீ என்னை மன்னிப்பியா நிரு…”

“மந்த்ரா நீ செஞ்சது ஒன்னும் பெரிய தப்பு இல்ல… நீ போட்ட ப்ளான் தெரியாத அளவுக்கு நாங்களும் முட்டாளா தான் இருந்திருக்கோம்… அப்போதைக்கு நான் சஞ்சயை தப்பா நினைச்சிருந்தாலும், இது உன்னோட ப்ளானா தான் இருக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன்… அதுமட்டுமில்லாம எங்களோட பிரச்சனைக்கு முழுக்க நீ மட்டும் காரணமில்ல… ஏதோ ஒரு தயக்கம், ஈகோ அதெல்லாம் தான் நாங்க இப்படி இருக்க காரணம்… அதனால நீ வருத்தப்படாத..”

“இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தானே நிரு… அப்போ அது எனக்கு தெரியல… ஆனா எனக்கு வேண்டியவங்களை இழக்கும் போதுதான் நான் எவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்கிட்டு இருக்கேன்னு தெரியுது… செஞ்சதை மறக்கறது உன்னோட குணமா இருக்கலாம்… ஆனா செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டா தான் என்னோட மனசு ஆறும்… உன்கிட்ட கேட்டாச்சு… அதேபோல சஞ்சய்க்கிட்டேயும் கேக்கணும்… அப்போ தான் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கும்…” என்று மந்த்ரா சொல்லிக் கொண்டிருந்த போதே,

நீரஜாவின் சிந்தனையோ சஞ்சயிடம் இருந்தது.  மந்த்ரா விஷயத்தில் அவன் மீது தவறு இருக்காது என்பதை அவள் எப்போதோ புரிந்துக் கொண்டாள். ஆனால் அது சஞ்சய்க்கு தெரியாதே, அன்று அந்த விஷயத்துக்காக அவனை சந்தேகப்பட்டு அவனை தவறாக பேசினாள். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்டாளா..??

சஞ்சய்க் கூட இவளிடம் நடந்துக் கொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டானே, ஆனால் இவள் அப்படி செய்யவில்லையே… மந்த்ரா விஷயத்தில் அவனை இப்போது இவள் தவறாக நினைக்கவில்லை என்பது அவனுக்கு தெரிய வேண்டாமா..?? இப்படியிருந்தால் இவர்களுக்குள் எல்லாம் எப்படி சரியாகும்…?? இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவள்… ஏதோ முடிவெடுத்தவளாக,

“மந்த்ரா நான் கிளம்பணும்…” என்றாள்.

“என்னாச்சு நிரு…??”

“நான் உடனே சஞ்சயை பார்க்கணும் மந்த்ரா… சஞ்சயே என்கிட்ட நாளைக்கு பேசணும்னு சொன்னாரு… அவர் என்னப் பேசப் போறார்னு தெரியல… ஆனா அதுக்கும் முன்னாடி நான் சஞ்சய்க்கிட்ட சாரி கேக்கணும்… மனசுவிட்டு பேசணும்… நான் கிளம்பணும்…” என்று நீரஜா சொன்னதும், மந்த்ராவிற்கு சந்தோஷத்தில் சிரிப்பு வந்தது.

“ரொம்ப சந்தோஷம் நிரு… ஆனா உன்னை எப்படி தனியா அனுப்பறது… அந்த வெற்றி திரும்பவும் ஏதாவது பண்ண நினைச்சான்னா என்ன பண்றது… அதனால கொஞ்சம் வெய்ட் பண்ணு… எனக்கு ட்யூட்டி முடிஞ்சதும், நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்…”

“இல்லை மந்த்ரா… அந்த வெற்றி ஏதோ ஒரு கோபத்துல தான் அப்படி செஞ்சுட்டான்… அவன் இதுக்கு மேல எதுவும் செய்யமாட்டான்… நான் இப்போ கிளம்பனா தான் ஈவ்னிங் சஞ்சயை பார்த்து பேச முடியும்…புரிஞ்சிக்கோ மந்த்ரா..”

“புரியுது நிரு… இருந்தாலும் உன்னை தனியா அனுப்ப தயக்கமா இருக்கே…” என்று யோசித்தவள், பின் ஏதோ வழியை கண்டதும்,

“நிரு… இங்க எனக்கு தெரிஞ்ச ஒரு கப்பிள் தங்கியிருக்காங்க… சென்னையில இருந்து தான் வந்திருக்காங்க… அவங்க இங்க அடிக்கடி வந்து ஸ்டே பண்ணுவாங்க… அவங்க பொண்ணு இங்க தான் மேரேஜ் ஆகி செட்டில் ஆயிருக்காங்க… லவ் மேரேஜ்.. இவங்க அதை அக்சப்ட் பண்ணிக்கல… இருந்தாலும் எப்பயாவது பொண்ணை மட்டும் வந்து பார்த்துட்டு போவாங்க… அவங்க இன்னைக்கு ரூமை வக்கேட் பண்றதா சொன்னாங்க… அவங்களால உன்னையும் அழைச்சுட்டு போக முடியுமான்னு கேக்கறேன்…” என்றாள்.

“வீணா அவங்களுக்கு எதுக்கு சிரமம் மந்த்ரா… நான் தனியாவே போய்டுவேன்… நீ தேவையில்லாம பயப்பட்ற..”

“அவங்க என்கிட்ட ரொம்ப நல்லா பேசுவாங்க நிரு… கேட்டா ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க… கேட்டுப் பார்க்கிறேன்.. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு அப்புறம் பேசிக்கலாம்..” என்றவள், அந்த தம்பதியரைப் பார்க்கச் சென்றாள். அதற்குள் நீரஜாவும் தன் உடமைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த மந்த்ரா… “நிரு அவங்க சரின்னு சொல்லிட்டாங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்க கிளம்பிடுவாங்க… நீயும் ரெடியாயிட்டல்ல…” என்றுக் கேட்டாள்.

“அதெல்லாம் ரெடி தான் மந்த்ரா…”

“அப்போ சரி… அவங்க கிளம்பறதுக்குள்ள நீ சாப்ட ஏதாவது அரேஞ் பண்றேன்…” என்று  அறையை விட்டு வெளியே சென்றவளை நீரஜா தடுத்தாள்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… நீயும் என்னை மன்னிக்கணும் மந்த்ரா… அன்னைக்கு சஞ்சய்க்கிட்ட உன்னைப்பத்தி சொல்லியிருக்கக் கூடாது… கண்டிப்பா அதனால நீயும், மோகனும் பிரியற அளவுக்கு ஆகும்னு நான் அன்னைக்கு நினைச்சுக் கூட பார்க்கல…

நீ மட்டும் என்னைப் பார்க்காம இருந்திருந்தா… அப்படி எதுவும் நடந்திருக்காது… நீ கஷ்டப்பட்ட நேரத்துல மோகன் உனக்கு துணையா இருந்திருப்பாரு… எல்லாம் என்னால தான… ஐ யம் சாரி மந்த்ரா…”

“ஹே… எதுக்கு ஸாரியெல்லாம் கேக்குற… எனக்கு இப்படியெல்லாம் நடக்கணும்னு என்னோட தலையில எழுதியிருக்கு.. அதுக்கு யார் என்ன பண்ண முடியும்…”

“நான் வேணா சஞ்சய்க்கிட்ட சொல்லி திரும்பவும் மோகன் கிட்ட பேச சொல்லவா மந்த்ரா…”

“வேண்டாம் நிரு… நான் இப்படியே இருந்திட்றேன்… எனக்காக மோகன்கிட்டல்லாம் பேச வேண்டாம்… இப்போ மோகன் வாழ்க்கையில என்ன வேணாலும் நடந்திருக்கலாம்… இப்போ திரும்ப என்னால எதுவும் குழப்பம் வேண்டாம்… ப்ளீஸ்…”

“சரி… இங்கப்பாரு இனிமே உனக்குன்னு யாருமில்லன்னுல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது… இனி நான் உனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்…” என்றவள், தன் கைப்பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து மந்த்ராவிடம் கொடுத்து,

“இதுல என்னோட மொபைல் நம்பர் இருக்கு… நீ எப்போ நினைச்சாலும் பேசு… சீக்கிரமா சஞ்சய்க்கிட்டேயும், என்னோட அண்ணாக்கிட்டேயும் சொல்லி, சென்னையிலேயே ஒரு நல்ல வேலையா பார்க்க சொல்றேன் சரியா..??” என்றாள்.

“இருக்கட்டும் நிரு… நீ என்னோட ஃப்ரண்ட்னு சொன்னதே போதும்… வேலையெல்லாம் எனக்கு எதுவுமே தேவையில்லை…” என்றவள் தன்னுடைய அலைபேசியிலிருந்து நீரஜாவிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தாள்.

“இது தான் என்னோட நம்பர்… முதல்ல சஞ்சய்க்கிட்ட பேசிட்டு, உங்க கல்யாணம் முடிவாயிட்ட நல்ல செய்தியை சொல்லு… சரியா..??” என்றதற்கு, நீரஜா வெட்கத்தோடு சிரித்தாள். பின் அந்த தம்பதியரோடு சென்னை செல்ல தயாரானாள்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஹோட்டலிலிருந்து புறப்பட்ட வெற்றி ஏர்ப்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தான். “நல்லவேளை ஏடாகூடமா பண்ணி மாட்டிக்கப் பார்த்தோம்… எப்படியோ தப்பிச்சோம்..”. என்று நிம்மதி பெருமூச்சு விட்டானே தவிர, தோழி என்று சொல்லி நீரஜாவிடம் இப்படி நடந்துக் கொண்டதற்காக சிறிது கூட அவன் வருத்தப்படவில்லை. அந்த அளவுக்கு நீரஜா மேல் இன்னும் கூட அவனுக்கு கோபம் இருந்தது.  தான் நினைத்தது போல் நடக்காததால் தான் அவள் மேல் அவனுக்கு அவ்வளவு கோபம்.

தொழிலில் தனக்கென்று ஒரு ராஜாங்கத்தை உருவாக்க வேண்டுமென்பது வெற்றியின் கனவு, ஆனால் அந்த அளவுக்கு அவனுக்கு வசதியில்லை,  அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான் நீரஜா சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்தாள்.

அவளை காதலிப்பதாக அவளிடம் அவன் கூறினான். ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை,  அவனுடைய அந்த பெரிய கனவில் நீரஜாவின் பதில் அவனை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் அப்போதே அவள் வசதியானவள் என்பது தெரிந்திருந்தால், கொஞ்சம் அவளை சம்மதிக்க வைக்க முயன்று இருக்கலாமோ, என்று இங்கு வந்து அவன் யோசித்திருக்கிறான்.

ஆனால் அவள் அப்போதே அதற்கு சம்மதித்திருக்க மாட்டாள் என்பதை அவன் இப்போதுக் கூட புரிந்துக் கொள்ளவில்லை,

நிகேதனின் நண்பனான சஞ்சயே அவர்கள் கம்பெனியை நிர்வாகம் செய்யும்போது, நீரஜாவை மணந்தால் இவனுடைய கனவும் பலிக்கும் என்று பேராசைக் கொண்டான். ஆனால் திரும்ப எப்படி நீரஜாவை சம்மதிக்க வைப்பது என்று யோசித்தான். அப்போது தான் மகாபலிபுரத்தில் அந்த குறி சொல்லும் பெண், வெற்றி என்ற பேர் கொண்டவனே உனக்கு புருஷனா வருவான் என்று சொன்னதும் நீரஜா முகம் மலர்ந்ததை கவனித்தான்.

திரும்ப ஒருமுறை அவளிடம் காதலை சொல்லிப் பார்த்தால் என்ன.?? என்று நினைத்தான். அதற்கு முன் அவள் அண்ணனிடம் பேசி சம்மதம் வாங்கலாம் என்ற நினைப்பில் தான் அவன் நிகேதனிடம் பேசியது.  ஏற்கனவே காதலைச் சொல்லி அதை நீரஜா மறுத்த விஷயத்தை சொன்னால், நிகேதன் தன் தங்கைக்கு விருப்பமில்லை என்று சொன்னால் விட்டுவிடு என்று சொல்வானோ என்று பயந்து தான், அதைப்பற்றி சொல்லாமல் விட்டுவிட்டான்.

அப்படியும் நிகேதன், இதில் நீரஜா தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னதால், இங்கு சொன்னால் அவள் மறுக்கும்போது நிகேதனும் மறுத்துவிடுவானோ என்று தான் பெங்களூரில் வைத்து அவளிடம் சொல்லி அவளை எப்படியும் சம்மதிக்க வைக்க திட்டமிட்டான். ஆனால் அவள் சஞ்சயை காதலிப்பது இவனுக்கு புது செய்தி.

கடைசியில் எல்லாம் சொதப்பலாக முடிந்தது. இவன் கனவையெல்லாம் பாழாக்கிய நீரஜாவை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தது. அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் துடித்தது.

ஆனால் இவனுக்கு அதனால் எதுவும் பாதிப்பு வரக்கூடாது. என்ன செய்வது என்று யோசித்தபோது ஒரு வழி கிடைத்தது.

அவன் இப்போது செய்யப்போகும் காரியம் ஆட்டோ பாம் அளவுக்கு வெடிக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக புஸ்வானமாய் போகாது. ஊசி பட்டாசு அளவுக்காவது வெடிக்கும் என்று வெற்றி நினைத்தான். உடனே தனது அலைபேசியை எடுத்து ஒரு எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

படகின் நிழலில் அமர்ந்து கடலை வெறித்தப்படி இருந்தான் சஞ்சய், பரிட்சைக்கு செல்வதற்கு முன்னரே தோல்வியை தழுவிடுவோமோ என்ற பயம் மனதில் இருந்தது. வெற்றியின் காதலை நீரஜா ஏற்கமாட்டாள் என்று 90 சதவீதம் அவனுக்கு நம்பிக்கை இருந்தாலும், 10 சதவீதம் எங்கே அவள் அதை ஏற்றுக் கொண்டுவிடுவாளோ என்ற அச்சமும் இருந்தது.

பொதுவாக நீரஜாவின் சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தொழிலில் கவனம் செலுத்துவான். ஆனால் இன்று அதில் கூட அவனால் ஈடுபட முடியவில்லை, அதனால் காலை வீட்டிலிருந்து புறப்பட்டவன் நேராக கடற்கரைக்கு வந்துவிட்டான். நேரம் போவது தெரியாமல் கூட அங்கேயே அமர்ந்திருந்தான். ஏதேதோ சிந்தனையில் இருந்தவனை அவனது அலைபேசியில் வந்த அழைப்பு கலைத்தது.

அவன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் வெற்றி என்ற பெயர் மிளிர்ந்தது. இவன் ஏன் இப்போது போன் செய்கிறான் என்ற சிந்தனையோடு அந்த அழைப்பை ஏற்றான்.

“ஹலோ…”

“ஹலோ சஞ்சய்… நிக்கி பக்கத்துல இருக்காரா..??”

“இல்ல வெற்றி, நான் வெளியே இருக்கேன்… நிக்கி ஆஃபிஸ்ல இருப்பான்…”

“நான் நிக்கிக்கு தான் ட்ரை பண்ணேன்… அவரோட போன் ரீச் ஆகல… அதான் உங்களுக்கு போன் பண்ணேன்… நீங்களும் ஆஃபீஸ்ல இருப்பீங்கன்னு நினைச்சேன்..”

“இல்ல ஒரு வேலையா வெளியே வந்தேன்… ஆமா என்ன விஷயம்…??”

“எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் சஞ்சய்… நீரஜ் என்னோட ப்ரோபஸல ஏத்துக்கிட்டா…” என்று அவன் சொன்னப் போது, இப்போதே ஒரு பெரிய அலை வந்து தன்னை கடலில் இழுத்துக் கொண்டுப் போகக் கூடாதா..?? என்றிருந்தது சஞ்சய்க்கு,

அதை எதிர்பார்த்து தானே வெற்றியும் அவனுக்கு தொடர்பு கொண்டான். அதனால் தொடர்ந்து பேசினான்.

“நீரஜாவே நிக்கிக்கிட்ட சொல்லப் போறதா தான் சொன்னா… இருந்தாலும் இந்த சந்தோஷத்தை நிக்கிக் கிட்ட ஷேர் பண்ணலாம்னு நினைச்சேன்… நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல பெங்களூர்ல இருந்து கிளம்பிடுவோம்… நான் உடனே சிங்கப்பூர்க்கு கிளம்பணும்… அப்போ நிக்கி வீட்ல இருப்பாரான்னு தெரியல… அதான் போன்ல சொல்லலாம்னு நினைச்சேன்… சிங்கப்பூர் போனதும், என்னோட பேரண்ட்ஸோட ஒருநாள் வீட்டுக்கு வர்றதா சொல்லலாம்னு நினைச்சேன்…

சரி அதனால என்ன..?? ஒருவேளை என்னால நிக்கிய பார்க்க முடியலன்னாலும் நீரஜாவே சொல்லிடுவா.. சரி நான் போனை வைக்கிறேன்..” என்று வைத்துவிட்டான்.

எல்லாம் சூன்யமாகி போனது போல் இருந்தது சஞ்சய்க்கு, நீரஜா இதை ஒத்துக் கொண்டிருப்பாள் என்று இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் வெற்றி ஏன் அப்படி சொல்ல வேண்டும்..??

மந்த்ராவிற்கு இவனால் ஒரு கெடுதல் நடந்தது. அதனால் அவள் இவனை பழிவாங்க நினைத்தாள். ஆனால் சஞ்சயால் அதையே புரிந்துக் கொள்ள முடியாத போது, வெற்றி நீரஜாவின் நண்பன், அவளின் விருந்தினராக வந்தவன், அவளை நேசிப்பவன், அப்படி ஒரு எண்ணம் தான் வெற்றியை பற்றி சஞ்சய்க்கு இருந்தது.

இதில் வெற்றியின் தீய எண்ணமோ, அவன் பெங்களூரில் நீரஜாவிடம் தவறாக நடக்க முயற்சித்ததோ, வெற்றியிடம் சஞ்சயை காதலிக்கிறேன் என்று நீரஜா சொன்னதோ, அதை மனதில் வைத்து வேண்டுமென்றே வெற்றி இவனிடம் பொய்யுரைத்ததோ, இவனுக்கு எப்படி தெரியும்…??

நீரஜாவின் மேல் உள்ள அந்த 10 சதவீத நம்பிக்கையின்மை, வெற்றி சொல்லியதை நம்ப வைத்தது. தன்னுடைய தொழிலில் யாரிடமும் ஏமாறாமல், தன் தந்தை கற்று தந்த பாடத்தை வைத்து திறமையாக செயல்பட்டவனுக்கு, தன் வாழ்க்கையில் மந்த்ரா, வெற்றி போன்றவர்களால் ஏமாற்றமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

வெற்றியின் பேச்சை சஞ்சய் நம்பியதால், வெற்றி நினைத்ததை விடவே இந்த விஷயம் பெரிதாக தான்  வெடிக்கப் போகிறதோ..??

அவளை முதலில் பார்த்தவுடன் அவள் தான் இனி அவன் வாழ்க்கை என்று நினைத்தானே, அதெல்லாம் பொய்யாக போகப் போகிறதா?  இந்த மூன்று வருடம் அவளைப் பார்க்காமல் இருந்தாலும், எப்படியும் அவள் மனதை மாற்றலாம் என்று நினைத்ததெல்லாம் முடியாமலே போகப் போகிறதா..??

இனி இவனுக்கென்று என்ன இருக்கிறது. இனி எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்..?? அவள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..?? எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்த போது திரும்பவும் அவன் அலைபேசி அடித்தது.

அவனை ஈன்றெடுத்தவர் தான் அழைத்திருந்தார். அவருக்காகவாவது அவன் வாழ வேண்டும் என்பதை நினைவுப்படுத்த தான் அந்த அழைப்பு வந்ததோ…??

அன்று சஞ்சயின் தந்தை தன் இறுதி நேரத்தில் அவனிடம் பேசியதை நினைவு கூர்ந்தான்…

“எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம ஒரு ராஜாவா நீ வளருணும்னு தான் ஒத்த பிள்ளையா உன்னப் பெத்து வளர்த்தோம்… கடைசியில உங்க அம்மாவ உன் பொறுப்புல விட வேண்டியதா ஆயிடுச்சு இல்லப்பா..??”

“என்னப்பா பேசறிங்க… அம்மா எனக்கு பாரமாப்பா.. நீங்க ரெண்டுபேரும் தான் என்னோட உலகமே ப்பா..”

“எனக்கு தெரியும் சஞ்சய்… நீ இப்படி தான் சொல்லுவ… ஆனா சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுட்டு என்ன நம்பி வந்தவளை கடைசி வரைக்கும் கண் கலங்காம பத்திரமா பார்த்துக்கணும்னு நினைச்சேன் டா… ஆனா இப்படி சாவு ஒன்னு வந்து உங்கம்மாவை விட்டு என்னை பிரிக்கும்னு நான் நினைக்கல… என்னோட இறப்புக்கு அப்புறம் அம்மாக்கு எல்லாமா நீ தாண்டா இருக்கணும்… அம்மாவை சந்தோஷமா வச்சுக்கணும்… சரியாப்பா…”

“என்னப்பா… நீங்க இதெல்லாம் சொல்லணுமா… அம்மாவை நான் சந்தோஷமா வச்சிருப்பேன்ப்பா.. நீங்க இல்லாத ஒரு குறையை தவிர மத்தப்படி எல்லா விதத்திலேயும் அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துப்பேன்…” என்று உறுதியளித்தான். அதன்பின் இரண்டு நாட்கள் உயிரோடு இருந்த அவன் தந்தை பின் இவர்கள் இருவரையும் விட்டு பிரியப் போகும் அந்த ஒரு குறையை தவிர, மற்றப்படி நிறைவாகவே இந்த உலகத்தை விட்டுப் பிரிந்திருந்தார்.

தன் நினைவுகளிலிருந்து அவன் விடுபடும் போது, அலைபேசியில் வந்திருந்த அழைப்பு முற்றிலும் மணியடித்து நின்றுப் போனது.

இவனே திரும்ப அவரை அழைக்கலாமா..?? என்று யோசித்த போது, அவரிடம் இருந்து திரும்ப அழைப்பு வந்தது. முதல் அழைப்பிலேயே அதை அவன் ஏற்றிருந்தான்.

“ஹலோ சொல்லுங்கம்மா…”

“சஞ்சய் ஏதாவது முக்கியமான வேலையா இருக்கியாப்பா..??”

“இல்லம்மா… நான் ஃப்ரியா தான் இருக்கேன் சொல்லுங்க…”

“உன்னோட மாமா போன் பண்ணியிருந்தாரு சஞ்சய்… நம்ம வித்யாவ பொண்ணுக் கேட்டு நிறைய பேர் வர்றாங்களாம்… நீங்க நான் கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லலையே அக்கா… நீங்க சொல்றத வச்சு தான் நான் மேற்கொண்டு முடிவு பண்ண முடியும்னு சொல்றாண்டா.. நான் சஞ்சயை ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்… உன்னோட மாமாவுக்கு என்னடா பதில் சொல்றது…?”

“நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்கம்மா..??”

“நான் என்னடா சொல்றது… காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா… என்னோட கடமை முடிஞ்சிடும்… நீரஜாவை எனக்கு பிடிச்சிருந்தது… உங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் பேசலாம்னு நினைச்சா.. உனக்கு அதுல விருப்பம் இல்லன்னு சொல்லிட்ட…

சரி வைஷுவை உனக்கு பிடிச்சிருந்தா… அவளையே பேசி முடிக்கலாம்னு நினைச்சேன்… அதுலையும் உனக்கு விருப்பமில்ல… தெரியாத ஒரு பொண்ணைப் பார்க்கறதுக்கு பதிலா…
என்னோட தம்பி பொண்ணையே பேசி முடிச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்… இருந்தாலும் உங்கப்பா சொல்ற மாதிரி இதுல உன்னோட விருப்பம் தான் முக்கியம்… நீ என்ன சொல்ற..?”

“பிள்ளையோட விருப்பத்துக்கு சம்மதிக்கிற பெத்தவங்க எத்தனை பேருக்கு கிடைப்பாங்க… இந்த அதிர்ஷ்டம் எனக்கு இருந்தும், ஏன் என்னோட மனசுக்கு பிடிச்சவள என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியல… அன்னைக்கே அம்மாவை நீரஜாக் கிட்ட பேச சொல்லியிருந்தா… ஒருவேளை அம்மாவுக்காக அவ என்னை கல்யாணம் செய்துக்க ஒத்துக் கொண்டிருப்பாளா..??

நிலைமை கை மீறி போய்டுச்சு… இதுக்கு மேல ஒன்றும் செய்ய முடியாது” என்று நினைத்தவன், தன்னுடைய அன்னைக்காகவாவது வாழ வேண்டும் என்பதால்… “அம்மா உங்க விருப்பம் என்னவோ அதுப்படியே செய்ங்கம்மா..” என்று திருமணத்திற்கு சம்மதித்திருந்தான்.

அம்பிகாவிற்கோ தலை கால் புரியவில்லை, “நிஜமா தான் சொல்றியா சஞ்சய்… இதை கேக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? நான் இப்பவே உங்க மாமாவுக்கு போன் பண்ணி நீ சம்மதிச்ச விஷயத்தை சொல்றேன்…” என்று சொல்லிவிட்டு, அழைப்பை துண்டித்தார்.

இதற்கு மேல் யாரிடமும் பேச விரும்பாத சஞ்சய், தன் அலைபேசியை அணைத்துவிட்டு, அமைதியை நாட,  அதே நேரம் சஞ்சயோடு எப்படி பேச வேண்டும் என்று மனதில் ஒத்திகைப் பார்த்தப்படி, அந்த தம்பதியரோடு காரில் சென்னை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தாள் நீரஜா.

மௌனம் தொடரும்..