KPEM 13
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 13
ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று சஞ்சயை ஒரு ரெஸ்ட்டாரண்டிற்கு நீரஜா வர சொன்னாள். ஆனால் சஞ்சயை வர சொன்ன நேரத்திற்கு செல்ல முடியாமல் கொஞ்சம் தாமதமாக தான் அவளால் செல்ல முடிந்தது,
சஞ்சய் காத்திருப்பானே என்ற பதட்டத்தோடு அவள் சென்ற போது, அவன் யாரோ இருவருடன் பேசிக் கொண்டிருந்தான். அந்த இருவரில் அந்த ஆடவன் யாரென்று அவளுக்கு தெரியவில்லை, ஆனால் அந்த பெண் மந்த்ரா.
மந்த்ரா அவள் படித்த கல்லூரியில் படித்தவள், அவள் படித்த வருடம் தான் மந்த்ராவும் படித்தாள். ஆனால் இருவரும் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தனர். இருவரும் ஒரே கல்லூரியே தவிர, மற்றபடி இருவருக்கும் அறிமுகம் இல்லை. மந்த்ராவுக்கு தன்னை தெரியுமா..?? என்பது கூட அவளுக்கு தெரியாது. ஆனால் மந்த்ராவை அவளுக்கு நன்றாக தெரியும், அவளுக்கு என்ன.. அந்த கல்லூரிக்கே மந்த்ராவை நன்றாக தெரியும், அந்தளவிற்கு கல்லூரி புகழ் பெற்றவள் அவள், ஆனால் அவள் இந்த ஊரில் எப்படி..??
இதையெல்லாம் சிந்தித்தவாரே சஞ்சயின் அருகில் நீரஜா சென்றாள். மந்த்ரா அவளை பார்த்த பார்வையிலேயே அவளுக்கும் தன்னை தெரிந்திருக்கிறதென்பது நீராஜாவிற்கு நன்றாகவே புரிந்தது.
அவள் அருகில் சென்றதும், மந்த்ரா மட்டுமல்லாமல் சஞ்சயும் அந்த ஆடவனும் அவளை கவனித்தார்கள்…
“ஹே நிரு வா வா..” என்று அவளை அழைத்த சஞ்சய்,
மோகன் இது நீரஜா..” என்று அந்த ஆடவனிடம் அறிமுகப்படுத்தினான். பின்,
“நிரு, இது மோகன்… இது அவனோட கேர்ள் ஃப்ரண்ட் மந்த்ரா..” என்று அவர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். மந்த்ராவும் நீரஜாவும் இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்பதை இருவரும் காட்டிக் கொள்ளவில்லை,
“ஹே மோகன்… நீரஜா யார் தெரியும் இல்ல… நிகேதனோட சிஸ்டர்…” என்ற சஞ்சய் நீரஜாவிடம்,
“நிரு… மோகன் எங்கக் கூட தான் படிச்சான்… எங்க ஃப்ரண்ட் தான்… அவனும் பிஸ்னஸ் தான் பண்றான்…” என்று மோகனைப் பற்றி கூறினான்.
“ரொம்ப சந்தோஷம் சிஸ்டர்… நிக்கி எப்படி இருக்கான்…” என்று மோகன் கேட்கவும்,
“ம்ம் நல்லா இருக்காங்க…” என்று நீரஜா பதில் கூறினாள்.
இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க, மந்த்ரா அமைதியாகவே அமர்ந்திருந்தாள். அப்போது நீரஜாவிற்கு அலைபேசியில் அழைப்பு வர, அவர்களிடம் கூறிவிட்டு சற்று தள்ளி நின்று பேசினாள்.
அவள் தள்ளி சென்றதும், “சஞ்சய்…. என்ன நிகேதன் சிஸ்டர் கூட நீ சுத்திக்கிட்டு இருக்க… என்னடா லவ்வா..??” என்று மோகன் கேட்டான்.
“டேய் அப்படில்லாம் இல்லடா..” என்று சஞ்சய் அவசரமாக மறுத்தாலும், அவன் முகமலர்ச்சியே அதுதான் உண்மை என்பதை காட்டிக் கொடுத்தது.
“டேய் சும்மா பொய் சொல்லாத… உன்னோட முகமே நான் சொன்னது உண்மைன்னு காட்டிக் கொடுக்குது… ஆமாம் இது நிகேதனுக்கு தெரியுமாடா..??”
“ஹே.. நீ வேறடா… நான் இன்னும் அவக்கிட்டயே சொல்லல…”
“டேய் என்னடா இன்னும் சிஸ்டர்க்கிட்ட ப்ரோபோஸ் பண்ணலையா..?? அதானே நீ லவ் பண்றதே பெரிய விஷயம்… இதுல நீ எங்க இருந்து லவ்வ சொல்றது…” என்று மோகன் நொந்துக் கொண்டான்.
“ஹே.. என்னடா அப்படி சொல்லிட்ட… சீக்கிரமா நான் லவ்வ சொல்லணும்டா… அவ அதை ரிஜக்ட் பண்ணமாட்டான்னு நம்பிக்கை இருக்கு…” சஞ்சய் சொல்லி முடிக்கவும் நீரஜா பேசிவிட்டு வரவும் சரியாக இருந்தது.
“சரிடா.. அப்போ நாங்க கிளம்பறோம்டா…” என்று மோகன் எழுந்து இருவரிடமும் விடைப் பெற்றான்.
“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க… இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே…”
“இல்ல சிஸ்டர், நாங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது… எதேச்சயா இங்க இவனை பார்த்தோம்… எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு வரோம்…” என்று சொன்னவன் மந்த்ராவோடு கிளம்பிவிட்டான்.
“சாரி பாஸ், வழியில கொஞ்சம் ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்… அதான் வர லேட்… நல்லவேளை வரவரைக்கும் Mr. மோகன் அப்புறம் அவரோட கேர்ள்ஃப்ரண்டோட டைம் பாஸ் ஆச்சுப் போல…??”
“ஆமாம் அவனைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… திரும்ப மீட் பண்ணதுல சந்தோஷமா இருக்கு… சரி அவசரமா ஏதோ பேசணும்னு வர சொன்னியே எதுக்கு..??”
“பாஸ் காதலிக்கிற பொண்ணையோ.. இல்லை பையனையோ கேர்ள்ஃப்ரண்ட், பாய் ஃப்ரண்ட்னு சொல்லி மத்தவங்கக்கிட்ட அறிமுகப்படுத்துறாங்களே ஏன்..??”
ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று கூப்பிட்டு, அதை பேசாமல் இப்படி ஒரு மொக்கை கேள்வியை கேட்டுவிட்டு, கூலாக ஆர்டர் செய்த சாக்லேட் டோனட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை சஞ்சய் முறைத்தான்.
“ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா..?? அப்போ தான் நாம ஃப்ரண்டாவே பிரிஞ்சிடலாம்னு சொல்லி கழட்டிவிட ஈஸியா இருக்கும்…” என்று அவள் கேட்ட கேள்விக்கு அவளே பதில் கூறினாள்.
“சரி நீங்க என்னை எந்த லெவல்ல வச்சிருக்கீங்க பாஸ்.. ஃப்ரண்டா..?? இல்லை கேர்ள்ஃப்ரண்டா..??” என்று அவள் கேட்டதும், சஞ்சய் கொஞ்சம் அதிர்ச்சியானான். ஆனால் அவளோ சாதாரணமாக அந்த டோனட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“என்னன்னு சொல்ல… ஃப்ரண்ட், கேர்ள்ஃப்ரண்ட், லவ்வர்னு எல்லாம் உன்னை சொல்ல முடியாது. உன்னை என்னோட மனைவியாகவே நினைக்கிறேன்னு சொல்லவா…?? அப்படி சொன்னா இவ ரியாக்ஷன் எப்படி இருக்கும்…” அவன் மனது அப்படியாக நினைத்துக் கொண்டிருக்க,
“சரி விடுங்க பாஸ்… நீங்க என்னவா என்னை நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியாதா..??” என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
“என்னவா நினைக்கிறேனாம்… ஒருவேளை நான் அவளை காதலிப்பதை அவள் புரிந்துக் கொண்டாளா…?? இல்லை வெறும் நட்பாக பழகுவதாக நினைக்கிறாளா..?? என்னை ரொம்ப குழப்பறா… சீக்கிரமா இவக்கிட்ட காதலை சொல்லணும்…” என்று மனதில் முடிவெடுத்தான்.
“ஏன் இந்த டாபிக் பத்தி இப்போ பேசினேன் தெரியுமா..??” சாப்பிடுவதை விட்டு சீரியஸாக பேச ஆரம்பித்தாள்.
“அந்த மோகன் எப்படி..?? சின்ஸியரா அந்த பொண்ணை லவ் பண்றாரா..?? இல்லை நான் சொன்ன மாதிரி கழட்டி விட்ற கேஸா..??”
“ஹே… நீ சொல்ற மாதிரி இல்ல… அவன் அந்த பொண்ணை உண்மையா தான் காதலிக்கிறான்… அவன் என்னை போல… இல்ல நிகேதனை போல வசதியானவனெல்லாம் இல்லை… ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன்… அவங்க அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்டு தான் அவனை படிக்க வச்சாங்க…
பேங்க்ல லோனெல்லாம் வாங்கி தான் இப்போ அவன் தனியா ஒரு பிஸ்னஸ் ஆரம்பிச்சு இருக்கான்… இப்போ அவனோட அப்பாவும் உயிரோட இல்ல… தங்கச்சியோட கல்யாணத்தையும் இவன் தான் நடத்தி வைக்கணும்… இவனோட கம்பெனியில தான் மந்த்ரா வொர்க் பண்றா… அவளை இவன் ரொம்ப லவ் பண்றான்… தங்கையோட கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கற ஐடியால இருக்கான்…”
“ஓஹோ.. ஆனா மந்த்ரா அவ்வளவு சின்ஸியர் கிடையாதே…”
“என்ன சொல்ற நீ..??”
“ஆமாம் பாஸ்… மந்த்ராவை எனக்கு ஏற்கனவே தெரியும்… என்னோட காலேஜ்ல தான் படிச்சா… அந்த காலேஜ்ல அவளை தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது… அவ்வளவு ஃபேமஸ்…
அவ சாதாரண ஃபேமிலிய சேர்ந்தவ… ஆனா அவ பழகுறது எல்லாம் ஹைகிளாஸ் ஆளுங்கக் கூட தான்… ஏகப்பட்ட பாய்ஃப்ரண்ட்ஸ் அவளுக்கு இருக்காங்க… தினம் ஒருத்தனோட பைக்லயோ, இல்ல கார்லயோ வருவா… அவங்கல்லாம் எங்க காலேஜ் பசங்க கூட கிடையாது…
அவ போட்ற ட்ரஸ்ல்லாம் காஸ்ட்லியா தான் இருக்கும்… டேட் பண்ணி பார்த்துட்டு லவ் பண்ணலாமான்னு முடிவுப் பண்ணுவாங்களே..?? அப்படித்தான் அவங்கக் கூடல்லாம் சுத்தறாப் போல…. அவ தினம் எந்த கார்ல வருவா… என்ன ட்ரெஸ் போடுவான்னு தான் காலேஜ் பசங்க பேச்சா இருக்கும்… அவ மட்டுமில்ல, அவளை மாதிரியே ஒரு நாலஞ்சு பொண்ணுங்க அப்படி இருந்தாங்க… ஆனா மந்த்ரா அவங்கக்கிட்ட எந்த எல்லை வரை பழகுனான்னு எனக்கு தெரியாது…
இப்படி ஹைகிளாஸ் ஆளுங்கக் கூட பழகுறவ, உங்க ஃப்ரண்ட் மோகனை எப்படி பிடிச்சான்னு தெரியல… ஆனா அவ எப்போ வேணாலும் அவரை கழட்டிவிட்டுட்டுப் போகலாம்…. பாவம் மோகன் வேற சின்ஸியரா இருக்காரு… சரி விடுங்க அந்த கதை எதுக்கு இப்போ… நான் பேச வந்த விஷயம் என்ன தெரியுமா..??
மாமா, ஜானுக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டாராம்… இந்த நிக்கி என்னடான்னா… என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் அவனோட கல்யாணம்னு சொல்லிக்கிட்டு இருக்கான்… நான் தான் ஒருவழியா பேசி அவனை கல்யாணத்துக்கு சம்மதிருக்க வச்சிருக்கேன்…
ஆனா இப்போ மாமாக்கிட்ட யாரு அவங்க காதலைப் பத்தி பேசறதுன்னு தெரியல… எங்களுக்குன்னு இருக்கறதே அத்தையும், மாமாவும் தான்.. ஆனா இவங்க கல்யாண விஷயத்துல மாமா என்ன முடிவெடுப்பாருன்னு தெரியல… சித்தப்பாங்கக்கிட்ட சொல்லலாம்னா அவங்க மாமாவை ஏதாவது சொல்லிடுவாங்க… அதனால நீங்களும் ஆன்ட்டியும் தான், மாமாக்கிட்ட நிக்கி கல்யாணத்தைப் பத்தி பேசனும் பாஸ்…”
“என்ன நிரு… வெளியாளுங்க நாங்க எப்படி உங்க மாமாக்கிட்ட பேசறது…”
“என்ன பாஸ் வெளியாளுங்கன்னு பிரிச்சுப் பேசறீங்க… நானும், நிக்கியும் உங்க ரெண்டுப்பேரையும் எங்க வீட்ல ஒருத்தரா தான் நினைக்கிறோம்… இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க பாஸ்…” என்று அவள் கோபமாக சொன்னப்போது சஞ்சய் உண்மையிலேயே சந்தோஷப்பட்டான்.
“அதில்ல நிரு… நீயும் நிக்கியும் அப்படி நினைக்கமாட்டீங்க… ஆனா உங்க மாமா அப்படி ஃபீல் பண்ணாருன்னா..?? அதுக்கு தான் அப்படி சொன்னேன்..
“மாமாக்கு உங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி நல்லா தெரியும் பாஸ்… ஆன்ட்டி மேலேயும் அவங்களுக்கு நல்ல மரியாதை இருக்கு… அதனால நீங்க வந்து மாமாக்கிட்ட பேசினா அவர் ஒன்னும் சொல்லமாட்டாரு…”
“அப்போ சரி… நான் ஏற்கனவே நிக்கிக்கிட்ட அவனோட லவ்வுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் பண்றேன்னு சொல்லியிருக்கேன்… அதனால அம்மாக்கிட்ட சொல்லி, நாங்க ரெண்டுப்பேரும் உங்க மாமாக்கிட்ட பேசறோம்…” என்று அவளுக்கு உறுதியளித்தான்.
வந்த வேலை முடிந்ததும் இருவரும் ரெஸ்ட்ரான்ட்டை விட்டு வெளியேப் போனார்கள்… மந்த்ராவைப் பற்றிய விஷயத்தை நீரஜா ஒரு செய்தியாகத் தான் சஞ்சயிடம் தெரிவித்தாள். ஆனால் சஞ்சயோ அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை, நிகேதன் அளவுக்கு மோகன் நெருக்கமான நண்பன் இல்லை என்றாலும் ஒரு நல்ல நண்பன். அவன் மந்த்ராவிடம் ஏமாந்துப் போகக் கூடாது என்பதால், மோகனை எச்சரிக்க வேண்டும் என்று சஞ்சய் மனதிற்குள் நினைத்தான்.
பின் சஞ்சயும் அவன் அன்னையும் நிகேதன் மாமாவிடம் அவனின் காதலைப் பற்றி கூறி, ஜானவியை முறைப்படி பெண் கேட்டனர், முதலில் தயங்கிய ஜானவியின் அப்பாவும் பின் அவர்களின் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார். அனைவரும் கூடி பேசி, நிச்சயதார்த்ததிற்கு தேதி குறித்தனர்.
தன் அண்ணனின் நிச்சயதார்த்தம் குறித்து நீரஜா சந்தோஷத்தில் இருந்தாள். நிச்சயதார்த்திற்கான வேலைகளை அவள் சந்தோஷமாக கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் மந்த்ரா நீரஜாவை பார்க்க வேண்டும் என்று அலைபேசியில் அழைத்தாள். ஏனென்று புரியாமலேயே நீரஜாவும் அவளை காண சென்றாள்.
அன்று நீரஜாவை ரெஸ்ட்ரான்ட்டில் பார்த்தபோதே மந்த்ராவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எங்கே தன்னைப்பற்றி மோகனிடம் நீரஜா தெரியப்படுத்தி விடுவாளோ என்று பயந்தாள். முன்பு அவள் எப்படியிருந்திருந்தாலும், இப்போது அவள் மாறியிருந்தாள், மோகனின் உண்மையான காதலைப் புரிந்துக் கொண்டு அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்.
ஆனால் அவளின் முந்தைய காலத்தைப் பற்றி மோகனிடம் மறைத்து வைத்திருந்தாள். இதில் நீரஜாவைப் பார்த்ததும், அதுவும் நீரஜாவின் அண்ணணும், அந்த சஞ்சயும் மோகனின் நண்பர்கள் என்று தெரிந்ததும் மோகனுக்கு விஷயம் தெரிந்திடுமோ என்று பயந்துப் போனாள்.
கடைசியில் பயந்தது போல நடந்துவிட்டது. நீரஜா மூலம் சஞ்சய்க்கு எல்லாம் தெரிந்து அவன் மோகனிடம் சொல்லி, இப்போது மோகன் அவளை விட்டு பிரிந்துவிட்டான். மோகன் பிரிந்தது மட்டுமில்லாமல், மோகன் கம்பெனியில் பார்த்த வேலையும் இப்போது இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணமான நீரஜாவையும், சஞ்சயையும் சும்மா விடக்கூடாது என்று மந்த்ராவின் மனதில் பழி வாங்கும் எண்ணம் தோன்றியது. அதற்கு முதற்கட்டமாக நீரஜாவை சந்திக்க நினைத்தாள், அன்று ரெஸ்ட்ரான்ட்டில் சஞ்சய் அவன் அலுவலக முகவரியை மோகனிடம் சொன்னதை அவள் கவனித்துக் கொண்டிருந்தாள். அதை வைத்து நீரஜாவின் முகவரியையும், வீட்டு தொலைபேசி எண்ணையும் தெரிந்தவர் மூலம் கண்டுப்பிடித்து, நீரஜாவை பார்க்க அழைத்தாள். நீரஜாவும் அவளை காண வந்தாள்.
“நீரஜா… நாம ரெண்டுப்பேரும் ஒரே காலேஜ்ல படிச்சோம் என்பதை தவிர, நமக்கு வேற என்ன சம்பந்தம் இருக்கு..?? ஏன் இப்படி என்னோட லைஃப்ல விளையாடின..??” நீரஜா வந்ததும் கோபமாக பேச ஆரம்பித்துவிட்டாள் மந்த்ரா.
“ஏன் மோகன் கிட்ட என்னைப்பத்தி சொன்ன..?? உனக்கு அது தேவையில்லாதது…”
முதலில் கோபமாக மந்த்ரா பேசும்போது நீரஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் மெல்ல விஷயம் அவளுக்கு புரிய ஆரம்பித்தது. அன்று சஞ்சயிடம் அதை ஒரு தகவலாக தான் சொல்லியிருந்தாள். ஆனால் சஞ்சய் அதை மோகனிடம் சொல்லியிருப்பான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. அதனால் இருவரும் பிரிந்திருப்பார்கள் என்றும் நினைக்கவில்லை,
முதலில் அதைக்கேட்டு நீரஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பின் மந்த்ராவின் நடத்தையை நினைத்து பார்க்கும்போது சஞ்சய் செய்தது சரிதான் என்று அவளுக்கு தோன்றியது. மோகன் மந்த்ராவிற்கு எத்தனையாவது பாய்ஃப்ரண்டோ..?? இதில் அவளுக்கு கோபம் வருகிறதே என்ற ஒரு அலட்சியம் தான் அவளுக்கு தோன்றியது.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி குதிக்கிற…. மோகன், சஞ்சயோட நல்ல ஃப்ரண்ட்… அவரை நீ ஏமாத்தறதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது… அதான் மோகனை சஞ்சய் எச்சரிச்சாரு…”
“இங்கப்பாரு நீரஜா.. நான் முன்ன மாதிரி இல்ல… மோகனை உண்மையா தான் லவ் பண்றேன்… நான் அவரை தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்… நான் இப்போ மாறிட்டேன்… அது தெரியாம நீயும் சஞ்சயும் இப்படி செஞ்சிருக்கக் கூடாது…”
“நீ அப்படி உண்மையா மாறியிருந்தா, உன்னைப்பத்தி எல்லா விஷயத்தையும் மோகன் கிட்ட சொல்லியிருக்கணும்…. ஆனா நீ சொல்லல… நாங்க மோகன் கிட்ட எல்லாம் சொன்னதால நீ இப்படி மாத்தி பேசற…”
“நான் எதுவும் சொல்லல தான்… சொன்னா மோகன் அதை எப்படி ஏத்துப்பாரோன்னு தான் எல்லாம் மறைச்சேன்…. அதுக்காக மோகனை என்னையும் பிரிச்சிட்டிங்களே..?? இப்படி அநியாயம் பண்ணீட்டீங்களே…??”
“என்ன மோகனை ரொம்ப சின்ஸியரா லவ் பண்றா மாதிரி பேசற… மோகன் உனக்கு எத்தனையாவது பாய் ஃப்ரண்ட்..?? இந்த மோகன் இல்லன்னா, ஒரு சேகரோ இல்லை குமாரோ கிடைக்கவா மாட்டாங்க…
உன்னோட ரேஞ்சே வேறயாச்சே… இந்த மோகன் கூட ஏன் சுத்தறன்னு தான் புரியல… ஏன் உன் கூட சுத்தனவங்களெல்லாம் உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டாங்களா..?? அதான் இப்போ மோகனை ஏமாத்த வந்திருக்கியா…?? பாவம் அவரே கஷ்டப்பட்ட ஃபேமிலில இருந்து வந்தவரு… அவர் தங்கச்சி கல்யாணத்தை வேற அவர் தான் நடத்தணும்… அவரை லவ் பண்றன்னு சொல்லி அவரை இப்படி ஏமாத்தாத… ஒழுங்கா அவரை விட்டு ஒதுங்கிப் போய்டு… அதான் மோகனுக்கு நல்லது…”
“நான் என்ன ஒதுங்கறது… அதான் நீயும் சஞ்சயும் சேர்ந்து என்னை மோகன் கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்களே… உங்க ரெண்டுப்பேரையும் நான் சும்மா விடமாட்டேன்… சும்மாவே விடமாட்டேன்..
என்னது சேகரோ.. இல்லை குமாரோ கிடைப்பாங்களா…?? அடுத்து நான் யாரோட சுத்தணும்னு முடிவுப் பண்ணிட்டேன்…. அது யாரும் இல்ல… சஞ்சய் தான்…”
“என்ன உளர்ற மந்த்ரா… உன்னைப் பத்தி சஞ்சய்க்கு நல்லா தெரியும்… அப்படி இருக்கும்போது சஞ்சயோட சுத்தப் போறீயா… நல்ல காமெடி தான்.. சஞ்சய் உன்னை லவ் பண்ணுவாருன்னு தப்பு கணக்கு போடாத…”
“சஞ்சயை நான் ஏன் லவ் பண்ணணும்…. அதுக்கெல்லாம் எனக்கு அவசியமேயில்ல… என்னோட பழகன எல்லாரையும் நான் காதலிச்சிக்கிட்டா இருந்தேன்… எல்லோரும் என்னோட அழகை பார்த்து லவ் பண்ணாங்க… இப்போ சஞ்சயையும் அந்த அழகை காட்டி என்னோட வலையில விழ வைக்கிறேன் பார்க்கீறீயா…?? என் பின்னாடியே அந்த சஞ்சயை சுத்த வைக்கிறேன் பாரு… அதப்பார்த்து நீ அழணும்…. சஞ்சயும் நீயும் பிரியணும்… இதெல்லாம் பார்த்து நான் சந்தோஷப்படணும்… அப்போ தெரியும் இந்த மந்த்ராவைப் பத்தி உனக்கு…”
“நீ உன்கூட பழகனவங்க மாதிரி, சஞ்சயையும் நினைச்சிட்டப் போல… சஞ்சய் அப்படிப்பட்ட ஆளே இல்ல, அதை முதலில் நீ தெரிஞ்சிக்கோ…”
“எந்த ஒரு ஆம்பளையும் சந்தர்ப்பம் கிடைக்கிற வரைக்கும் தப்பு பண்ணாதவங்களா தான் இருப்பாங்க…. சஞ்சயும் அப்படித்தான்… ஒரு அழகான பொண்ணு தன்னோட இருந்தா, கண்டிப்பா தப்பு பண்ணாம இருக்க முடியாது… சஞ்சய்க்கு அந்த சந்தர்ப்பத்தை நான் உருவாக்கி கொடுப்பேன்…”
“கண்டிப்பா நீ நினைக்கிறது நடக்காது… நீ உன்னோட முயற்சியில தோல்வியை தான் தழுவப் போற மந்த்ரா… அதனால இந்த பழி வாங்கப் போறன்னு சொல்லிக்கிட்டு சுத்தாம… வேற வேலை இருந்தாப் பாரு..” என்று சொல்லிவிட்டு நீரஜா கிளம்பிவிட்டாள்.
“உன்னையும் அந்த சஞ்சயையும் பிரிக்கிறத தவிர எனக்கு வேற வேலையே இல்லை நீரஜா…” என்று மந்த்ரா மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்த பின்பும் மந்த்ரா பேசியதையே நீரஜா நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் சொன்னது போல் எதுவும் செய்ய முடியாதென்பது நீரஜாவிற்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் மனம் அதையே யோசித்துக் கொண்டிருந்தது.
“நானும் சஞ்சயும் காதலிக்கிறதா அந்த மந்த்ரா நினைக்கிறாப் போல… அதான் சும்மா என்னை பயமுறுத்த அப்படியெல்லாம் பேசறா… ஆனா அப்படி எதுவும் இல்லையே…” மனதில் அப்படி ஒரு எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி மந்த்ரா பேசியது அவளுக்குள் என்னவோ செய்துக் கொண்டிருந்தது.
மந்த்ரா அவள் அழகை வைத்து சஞ்சயை மயக்க போவதாக சொன்ன போதே அதை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, “அப்படின்னா நான் சஞ்சயை காதலிக்கிறேனா..?? ஏன் அதை பத்தியே எனக்கு நினைக்க தோனுது…??
ஒருவேளை மந்த்ரா சொன்னதை செஞ்சுட்டான்னா… அப்படி நினைச்சுப் பார்க்கக் கூட முடியலையே… அப்படி அவ செஞ்சான்னா அதுல எனக்கு என்ன பாதிப்பு இருக்கப் போகுதுன்னு அலட்சியமா விட முடியலயே… சஞ்சய் அப்படிப்பட்டவர் இல்லன்னு தெரிஞ்சாலும்… ஏன் நான் இதையே யோசிக்கிறேன்…” என்று அவள் வெகுநேரம் குழம்பினாள்.
அந்த வெகுநேர குழப்பதிற்கு பிறகு அவள் மனம் தெளிந்தது. அவள் சஞ்சயை காதலிப்பதை உணர்ந்தாள். என்னவோ அந்த நேரம் வானிலே பறப்பதை போல உணர்ந்தாள். பின் சஞ்சய்க்கும் அவள் மேல் காதல் இருக்குமா..?? என்று குழம்பினாள். மந்த்ராவிற்கே நாங்கள் இருவரும் காதலிப்பது போல் தோன்றியிருக்கிறதே, ஆனால் என் மனதிற்கு இது புரியவில்லையே, ஒருவேளை சஞ்சய்க்கு இப்படி தோன்றியிருக்குமா…?? என்று அவளே அவளை கேட்டுக் கொண்டாள்.
பின் திரும்பவும் மந்த்ரா பேசியதை நினைத்துப் பார்த்தாள். சஞ்சயை பற்றி தெரிந்திருந்தாலும், மந்த்ரா எந்த முறையில் சஞ்சயை அணுக முயற்சிப்பாளோ… ஒருவேளை அவளை காயப்படுத்தவோ.. இல்லை கோபத்திலோ கூட மந்த்ராஅப்படி பேசியிருக்கலாம், இருந்தாலும் சஞ்சயை எச்சரிக்க வேண்டும் என்று நினைத்து, அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
நீண்ட நேரம் மணி அடித்ததுக்குப் பிறகு அவன் அழைப்பை ஏற்றதும், “உங்கக்கிட்ட ஒரு பொண்ணு க்ளோஸா பழகனா… நீங்க அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க…” என்று பட்டென்று கேட்டுவிட்டாள். பின் திடிரென்று இப்படி பேசிவிட்டோமே என்று யோசித்தவள், அலைபேசியை உடனே அணைத்துவிட்டாள்.
திடிரென்று அவள் கேட்ட கேள்வியில் சஞ்சய்க்கு ஒன்றுமே புரியவில்லை, பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது தெரிந்ததும், எதற்காக இப்போது நீரஜாஅழைத்தாள்..?? ஏன் இப்படி கேட்டாள்..?? என்று யோசிக்க தொடங்கினான். ஒருவேளை அவள் என்னை காதலிக்கிறாள் என்பதை நான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாளோ..?? என்று நினைத்தான். அந்த நினைப்பே இனிமையாக இருந்தது.
இங்கு அழைப்பை துண்டித்தவளுக்கோ, நான் ஏன் இப்படி உளறினேன்? மந்த்ராவை பற்றி நேராக கேட்காமல், இப்படியா பேசுவது? சஞ்சய் அதை எப்படி எடுத்துக் கொள்வார்? என்று மனதிற்குள் புலம்பினாள். அப்போது தான் ஏற்கனவே அவனிடம் பலதடவை இப்படி உளறியதை யோசித்துப் பார்த்தாள். இனி சஞ்சயிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.
பின் இன்னொரு நாள் சஞ்சயிடம் மந்த்ரா விஷயத்தை மோகனிடம் தெரிவித்ததைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டாள். மந்த்ரா அவளிடம் பேசியதை பற்றி விளக்கமாக கூறாமல், “அவ இந்த விஷயத்துல நம்ம ரெண்டுப்பேர் மேலேயும் கோபமா இருப்பா… அதனால கவனமா இருங்க பாஸ்” என்று எச்சரித்தாள்…
அதன் பின் வந்த நாட்களில் நீரஜாவிற்கு சஞ்சயிடம் முன்போல இயல்பாக பழக முடியவில்லை, அவளுக்குள் வந்த காதல் அவளை பாடாய் படுத்தியது. அதனால் சஞ்சயிடம் பேசும்போது கூட ஏதோ ஒருவித தயக்கம் அவளிடம் இருந்தது. சஞ்சய்க்கோ, அலுவலகத்தில் அதிகப்படியான வேலையும், கூடவே நிகேதனின் நிச்சயதார்த்த வேலையும் சேர்ந்து, அவன் அதிக வேலையில் இருந்ததால் நீரஜாவிடம் வந்த மாற்றத்தை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. நீரஜாவிற்கோ அவனை பார்த்தாலே மனதில் ஏற்படும் சந்தோஷம் முகத்திலும் தெரிவது போல் தோன்றுவதால் அவனை நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்த்து வந்தாள். ஒருவேளை சஞ்சய் அவளை கூர்ந்து கவனித்திருந்தால், அவள் முகமாற்றமே அவள் மனதை எளிதாக படித்திடும் ஒரு வழியாக அமைந்திருக்குமோ, என்னவோ… ஆனால் சஞ்சய்க்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
தனிமையில் இருக்கும் போது நீரஜாவிற்கு எப்போதும் சஞ்சயின் நினைவு தான், அவனிடம் எப்படி மனதில் உள்ளதை தெரிவிப்பது, அவனோடு நடக்கும் திருமணம் என்று கனவில் மிதந்துக் கொண்டிருந்தாள். அவனை பாஸ் பாஸ் என்று கேலியாக அழைப்பதை நினைத்து சிரித்தாள். அவனிடம் காதலை சொன்னதும் ஜெய் என்று கூப்பிட வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள். வாயில் ஜெய், ஜெய் என்று அவன் பேரை உச்சரித்தாள்.
இப்படியே சஞ்சயின் மேல் உள்ள காதலின் பூரிப்பிலும், நிகேதன், ஜானவி திருமணம் நடக்கப்போகிற சந்தோஷத்திலும் நிகேதனின் நிச்சயதார்த்த்தில் நீரஜா கலந்துக் கொண்டாள். இதில் மந்த்ரா என்ற ஒருத்தியையே அவள் மறந்துப் போனாள். ஆனால் மந்த்ராவோ மனதில் பழி உணர்வோடு அதற்கான நேரத்திற்காக காத்திருந்தாள்.
மௌனம் தொடரும்..