KPEM 10

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மௌனம் 10

தன் அன்னை தன்னை பார்க்க வேண்டும் என்று அலைபேசியில் தொடர்பு கொண்டதால், நிகேதனும், நீரஜாவும் அலுவலகம் சென்றபின் ஜானவி தன் வீட்டிற்கு கிளம்பினாள். அங்கேயும் வைஷ்ணவி, மற்றும் அவள் தந்தை அலுவலகம் சென்றிருந்தனர்.  அவள் அன்னை சந்திரா மட்டும் தான் வீட்டில் இருந்தார். ஜெய்க்குட்டிக்கு விளையாட ஒரு பந்தை கொடுத்துவிட்டு ஜானவி அவள் அன்னையோடு பேச ஆரம்பித்தாள்.

“என்னவோ பேசனும்ணு சொன்னியே என்னம்மா…??”

“ஜானு… உங்கப்பா இன்னும் 2, 3 மாசத்துல ரிடையர்ட் ஆகப் போறாரு தெரியுமில்ல…??”

“தெரியும் மா.. போனதடவை வந்தப்ப அப்பா என்கிட்ட சொன்னாரு…”

“அதான்ம்மா… அவர் ரிடையர்ட் ஆனா பணம் வருமில்லையா..?? அதை வச்சு வைஷுக்கு கல்யாணத்தை முடிக்கலாம்னு பார்க்கிறோம்…”

“என்னம்மா இப்படி சொல்ற… நீரஜா இவளோட பெரியவ இல்லையா..?? அப்படி இருக்கப்போ வைஷு கல்யாணத்தை பத்தி பேசறீங்க… எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நாம தானே அவங்களுக்கு எல்லாம்…??

இப்போ நான் வீட்ல இருக்கப்ப, வைஷுவுக்கு கல்யாணம் செய்வீங்களா..?? அப்போ நீரஜா இருக்கும்போது வைஷுவுக்கு கல்யாணம் செய்ய நினைக்கிறீங்க…??”

“என்ன ஜானு, நீரஜாவையும் வைஷுவையும் நாங்க பிரிச்சு பார்ப்போமா..?? நிரு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றதா நீதானே சொன்ன… அதுவரைக்கும் வைஷுக்கு பார்க்காம இருக்க முடியுமா..??

இப்போ பணம் இருக்கப்பவே வைஷுக்கு கல்யாணம் முடிக்கலாம்னு அப்பா நினைக்கிறார்மா..”

“என்னம்மா, தனு மட்டும் நிருவையும், வைஷுவையும் வேற வேற மாதிரியா பார்ப்பாரு… நிரு கல்யாணம் மாதிரி வைஷு கல்யாணத்தையும் நடத்தமாட்டாரா..??”

“நிக்கிய பத்தி எங்களுக்கு தெரியாதா..?? ஆனா உங்க அப்பா பத்தி தெரியுமில்ல… யாரோட தயவும் இல்லாம அவரே தன் பொண்ணு கல்யாணத்தை நடத்த தானே ஆசைப்படுவாரு…”

“முன்ன வேறம்மா… ஆனா இப்போ தனு இந்த வீட்டு மாப்பிள்ளை… இந்த வீட்டு மகனா இருக்க தானே அவர் ஆசைப்பட்றாரு…”

“உங்கப்பா கொள்கையை பத்தி உனக்கு தெரியாதா…?? இப்போ அது ஒரு பிரச்சினை இல்லை ஜானு… வைஷுவுக்கு 25 வயசு ஆகிடுச்சு… நிரு அவளை விட ஒரு வயசு தான் பெரியவ… ரெண்டுப்பேருக்கும் இன்னும் காலத்தை தள்ளாம சீக்கிரம் கல்யாணம் செய்றது நல்லது… மூத்தவங்க இருக்கும்போது சின்னவங்களுக்கு கூடி வந்தா கல்யாணத்தை நடத்தறதெல்லாம் இப்போ பெரிய விஷயமே இல்லை… கல்யாண யோகம்னு ஒன்னு இருக்கு… நாம வேண்டாம்னு நினைச்சாலும் அவங்களுக்கு தானாகவே கல்யாணம் கூடி வந்திடும்…

இப்போ நான் அதைப்பத்தி பேச வரல… வேறொரு விஷயமா பேச தான் கூப்பிட்டேன்…”

“என்னம்மா..??”

“அப்பா தான் வைஷு கல்யாணத்தை நடத்தறதை பத்தி பேசினாரு… அப்போ நாங்க ரெண்டுப்பேரும் இப்போ நாம பேசின விஷயமா தான் பேசிக்கிட்டு இருந்தோம்… நிரு கல்யாணத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எல்லாம் கேக்க வீட்டுக்கு கூட வரலாம்னு இருந்தோம்… இதையெல்லாம் வைஷு கேட்டுருப்பா போல…

உங்கப்பா போனதும் அவ என்கிட்ட பேசினா… எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறீங்களா..?? அப்படின்னா எனக்கு சஞ்சயை பிடிச்சிருக்கு… அவரை நான் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்றேன்னு… சொல்றா ஜானு…”

“என்னம்மா… நான் சஞ்சயை அண்ணனா நினைக்கிறேன்… இவ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறா..??”

“நானும் இதை கேட்டேன்ம்மா… அவ அப்படி நினைச்சா நானும் அப்படி நினைக்கணுமா..?? சஞ்சய் என்ன நமக்கு ரத்த சம்பந்தமான்னு கேக்கறாமா…??

நான் அதை கூட பெரிய விஷயமா நினைக்கல ஜானு… நான் யோசிக்கிறது என்னன்னா..??  நிக்கியும் சஞ்சயும் ஃப்ரண்ட்ஸ்..  ஒருவேளை நிருவை சஞ்சய்க்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க நீங்க நினைக்காலாமில்ல… அது தான் எனக்கு தோனுச்சு…”

“தனுவுக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கும்மா…?? எங்க மேரேஜ்க்கு முன்னாடியே அவங்க நீரஜாக்கிட்ட இதைப்பத்தி கேட்ருக்காங்க… அவ அப்படி எனக்கு எந்த விருப்பமும் இல்லைன்னு சொல்லியிருக்கா .. சஞ்சயும் அப்போ எதுவும் பிடிக் கொடுத்து பேசல… ஆனா அவங்க ரெண்டுப்பேருக்கும் ஏதோ சண்டை… அதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றாங்களோன்னு நாங்க நினைக்கிறோம்மா…

அவங்களுக்குள்ள இருக்க சண்டை சரியானா.. அவங்க கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கன்னு நாங்க எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம்மா… இப்படி இருக்க வைஷு ஏன்ம்மா இப்படி யோசிக்கிறா..?? “

“நான் நினைச்சதப்பத்தி வைஷுக்கிட்ட கூட சொன்னேன்மா… அதுக்க அவ என்ன சொல்றான்னா… எனக்கு சஞ்சயை பிடிச்சிருக்கு… எனக்கு மாப்பிள்ளை பார்க்கறதுக்கு முன்னாடி அவர்கிட்ட கேக்கறதுல என்ன தப்பிருக்குன்னு கேக்கறாமா..?? அதான் நீ என்ன சொல்றன்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன்…”

“சரிம்மா… நான் தனுக்கிட்ட இதப்பத்தி பேசறேன்… அவங்க என்ன சொல்றாங்கன்னு கேக்கலாம்… அப்படி சஞ்சய் கிட்ட வைஷு பத்தி பேசலாம்னு தனு சொன்னார்ன்னா… சஞ்சய் என்ன சொன்னாலும் இவ ஏத்துக்கணும்… அப்போ சஞ்சயை தவிர யாரையும் கல்யாணம் செஞ்சுக்கமாட்டேன்ல்லாம் அவ அடம்பிடிக்கக் கூடாது… சரியா..??”

“வைஷு பேசறத பார்த்தா அப்படியெல்லாம் செய்யமாட்டான்னு தான் தோனுது ஜானும்மா..”

“சரிம்மா… அப்போ சஞ்சய் என்ன சொல்றார்ன்னு நான் கேட்டு உனக்கு சொல்றேன்… அதுவரைக்கும் அப்பாக்கு இது எதுவும் தெரிய வேண்டாம்… சஞ்சய் முடிவுக்கு அப்புறம் வைஷு என்ன சொல்றான்னு கேட்டுக்கிட்டு மேற்கொண்டு அவ கல்யாணத்தை பத்தி பேசுவோம்… அப்படி சஞ்சய் ஒருவேளை வேண்டாம்னு சொன்னா… விருப்பமில்லாத ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிறது நல்லதில்லன்னு நீங்க தான் வைஷுக்கு எடுத்து சொல்லணும்… நான் சொன்னா… நான் நிருவுக்காக பேசறதா அவ நினைப்பாம்மா… அதனால தான் சொல்றேன்…” என்று சொல்லிவிட்டு ஜானவி கிளம்பிவிட்டாள்.

கொஞ்ச நாளாகவே ஜானவிக்கும் சஞ்சயிடம் வைஷு பழகுவதை குறித்து சந்தேகம் இருந்தது. நீரஜாவும் சஞ்சயும் காதலிக்கிறார்களோ என்று அவளுக்கு தோன்றிய பின் வைஷுவின் காதலுக்கு அவளால் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? நீரஜா, வைஷுப்பற்றி ஜானவியிடம் பேச வேண்டும் என்று நினைக்கும் முன்னரே, ஜானவி தன் தங்கையிடம் பேச வேண்டும் என்று நினைத்துவிட்டாள். ஆனால் மனதில் தோன்றியதை செயல்படுத்துவதற்கு முன்னரே வைஷு இப்படி நேரடியாகவே விஷயத்தை வெளியில் சொல்வாள் என்று ஜானவி நினைக்கவில்லை,  தன் மாமன் மகனான நிகேதனை விரும்புவதையே சொல்ல தயங்கியவள் அவள், ஆனால் வைஷுவை நினைக்கும்போது ஆச்சர்யமாகவும் இருந்தது, சஞ்சயின் முடிவு தெரிந்தால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று ஜானவிக்கு பயமாகவும் இருந்தது.

வைஷ்ணவி சொன்னதாக தன் அன்னை கூறிய அனைத்தையும் நிகேதனிடம் ஜானவி கூறினாள்.  “இதில் என்ன தவறு இருக்கிறது? வைஷுவுக்கு சஞ்சயை பிடித்திருக்கிறது  என்றால் அதை நேரடியாகவே சஞ்சயிடம் பேசிடலாம் என்று அவன் கூறினான்.

“என்ன சொல்றீங்க தனு… நீரஜாவும் சஞ்சயும் லவ் பண்றதா தான் எனக்கு தோனுது… அப்புறம் வைஷுப்பத்தி சஞ்சய் கிட்ட பேசறது சரி வருமா..??”

“நவி… நாம தான் அவங்களுக்குள்ள ஏதோ இருக்குமோன்னு யோசிக்கிறோம்… அவங்க சாதாரணமாகத் தான் இருக்க மாதிரி தான் தோனுது… அதனால இதைப்பத்தி நீ யோசிக்காம நேரடியா சஞ்சய்க்கிட்ட பேசறது தான் சரி… வேணும்னா நிருக்கிட்டேயே இதைப்பத்தி கேட்போம்…” என்று அவன் நீரஜாவை கூப்பிட்டு விஷயத்தைக் கேட்டான்.

நிகேதன் கேட்டதும் என்ன சொல்வதென்று நீரஜாவிற்கு  புரியவில்லை,  ஒருபக்கம் அந்த ஜோசியக்காரி சொன்னது பலிக்கும் என்ற நம்பிக்கை அவள் மனதில் இருந்தது. இன்னொரு பக்கம் அம்பிகா ஆன்ட்டி, வைஷ்ணவியின் ஆசை என்னவென்று தெரிந்ததால் இந்த திருமணம் குறித்து பேசுவது நல்லது என்றும் தோன்றியது.  இதில் சஞ்சயின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நீரஜாவிற்கு இருந்தது. இந்த குழப்பமெல்லாம் மனதில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்,

“இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு நிக்கி… இது சஞ்சயும், வைஷுவும் சம்பந்தப்பட்ட விஷயம்… இதைப்பத்தி சஞ்சய்க்கிட்டேயும், ஆன்ட்டிக்கிட்டேயும் பேசப்போறீங்கன்னா போய் பேசுங்க… எனக்கு எந்த அப்ஜெக்‌ஷனும் இல்ல…” என்று சொல்லிவிட்டு அவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

“இப்பக்கூட தன்னோட மனசுல இருப்பதை சொல்றாளாப் பாரு… அப்படி என்ன அழுத்தமோன்னு தெரியல..” என்று ஜானவி மனசுக்குள் நொந்துக் கொண்டாள்.

“நான் சொன்னேன் இல்ல நவி… நாம தான் அவங்களுக்குள்ள ஏதோ இருப்பதா நினைக்கிறோம்… ஆனா அப்படி எதுவும் இல்ல… அதனால நாம சஞ்சயை  பார்த்து பேசிடலாம்…” என்று நிகேதன் சொன்னாலும், அவர்களுக்குள் ஏதோ இருப்பதாக தான் ஜானவிக்கு தோன்றியது.  நீரஜா இப்படி பேசினாலும், சஞ்சய் இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான் என்று தான் அவள் மனதில் நினைத்தாள்.

சஞ்சய் வீட்டிலிருக்கும் நேரம் பார்த்து நிகேதனும், ஜானவியும் சஞ்சய் வீட்டிற்குப் போக, அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பது எந்த விஷயத்துக்காக என்று அறிந்துக் கொண்ட அம்பிகாவிற்கோ, தானே போய் சஞ்சய், வைஷ்ணவி திருமண விஷயமாக பேசுவதற்கு முன் அவர்களாகவே வந்து பேசுவதில் சந்தோஷம் தான், ஆனால் அதுவே ஜானவியும், நிகேதனும் வைஷுக்காக பேச வந்ததற்கு பதிலாக நீரஜாவிற்காக பேச வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனதில் ஒரு ஏக்கம் அவருக்கு வந்தும் போனது.

இப்படி அனைவருடைய மனதிலும் சஞ்சய், நீரஜாவின் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர்கள் இருவரும் நடந்துக் கொள்ளும் விதத்தால் மற்றவர்கள் அதில் ஒரு முடிவெடுக்க கொஞ்சம் தயங்கத் தான் செய்கின்றனர்.

நிகேதன், ஜானவி எதற்காக வந்திருக்கிறார்கள் என்று சஞ்சய்க்கு தெரிந்த போது அவனுக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. முதலில் வைஷு அவனிடம் பழகிய முறையில் அவனுக்கு காதல் என்று எதுவும் தோன்றவில்லை,  நீரஜா வந்தப் பின் தான் வைஷு பழகும் முறையில் அவன் வித்தியாசத்தை உணர்ந்தான். அப்படி உணர்ந்த போதே அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் யோசித்திருந்தான். ஆனால் அதற்குள் வைஷுவின் பக்கம் இருந்து இப்படி ஒரு கல்யாணப் பேச்சு வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை,

“நிக்கி… திடிர்னு இப்படி ஒரு விஷயத்தை பத்தி பேச நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல டா.. டேய் உனக்கு தெரியுமில்ல ஜானு என்ன அண்ணன்னு கூப்பிடலைன்னாலும், அவ என்ன அண்ணனா தான் நினைக்கிறா… அதேபோல நான் அவளை தங்கையாகத் தான் நினைக்கிறேன்… ஜானுவை நான் எப்படி நினைச்சேனோ, அப்படி தான்டா வைஷுவையும் நினைக்கிறேன்… அப்புறம் எப்படிடா இந்த மேரேஜ்.. நீ அண்டர்ஸ்டாண்ட் பண்ணிப்பேன்னு நினைக்கிறேன்…”

என்று சஞ்சய் பதில் சொன்னப்போது, அங்கிருந்த மற்ற மூவருக்கும் பதில் பேச முடியாமல் போனது.

தன் அக்காவும், மாமாவும் சஞ்சய் வீட்டுக்கு போய் பேசப் போவதை அறிந்த வைஷ்ணவி சஞ்சயின் பதிலை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தாள். இதில் சஞ்சயின் பதில் என்னவென்று அவள் அறிந்தபோது அவளுக்கு கோபமாக தான் வந்தது,

சஞ்சய்க்கு நீரஜா மேல் ஈடுபாடு இருப்பது அவளுக்கு தெரியும், இருவரும் ஒன்றாக சுத்தியதும், இப்போது ஏதோ சண்டையால் பிரிந்திருப்பதையும் அவள் புரிந்து வைத்திருக்கிறாள். ஒருவேளை அந்த நாட்களில் அவர்கள் காதலை சொல்லியிருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இப்போது பழகும் முறையில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது.

அவள் தான் நீரஜாவிற்கு முன் சஞ்சயை பார்த்தாள். அப்போதே அவனை அவளுக்கு பிடித்திருந்தது. அதன்பின் நீரஜா குறுக்கே வந்ததும் அவள் ஒதுங்கி தானே போனாள்? ஆனால் மனசுக்குள் இருக்கும் காதலை அதனால் அழித்துவிட முடியுமா..?? பின் நீரஜா ஒதுங்கியதால் தான் அவள் சஞ்சயிடம் நெருங்க முயற்சி செய்தாள். ஆனால் நீரஜா திரும்ப வந்தாலும், அவள் வெற்றி என்ற ஒருவனை உடன் அழைத்து வந்திருப்பதால் ஒருவேளை சஞ்சய் அவளுக்கு கிடைப்பானோ என்ற நம்பிக்கை இருந்தது.

அப்போது கூட சஞ்சய் விஷயத்தில் பொறுமையாக இருந்து அவள் காதலைப் பற்றி அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள். அதற்குமுன் ஒருவேளை நீரஜாவுடன் அவன் மீண்டும் சேர்ந்துவிட்டாளும் அவள் ஒதுங்கிடத் தான் நினைத்தாள். அப்படி நினைத்துக் கொண்டிருந்த போது தான் தன் தாய், தந்தை தன் திருமணம் குறித்து பேசுவதை கேட்டாள். அதே சமயம் நீரஜாவுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசியதையும் கேட்டாள்.

ஏதோ ஒரு உந்துதல் அவளுக்கு, நீரஜாவிடம் அவள் திருமணம் குறித்து பேசும்போது அவளுக்கு சஞ்சயை பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டால், அதனால் தான் அவள் முந்திக் கொண்டாள். தன் அன்னையிடம் சஞ்சயை பிடித்திருக்கிறது என்று சொன்னாள். அப்போது கூட சஞ்சயிடம் இருந்து அவளுக்கு சாதகமாக பதில் வரும் என்று அவள் நினைக்கவில்லை, நீரஜா, வெற்றி இருவரும் வெறும் நட்பாக பழகுகிறார்களா..?? நீரஜா இப்போது வெற்றியை விரும்புகிறாளா?? இல்லை சஞ்சயையா..?? வெற்றியை பார்த்தால் அவன் நீரஜாவை காதலிக்கிறான் என்று தோன்றுகிறது… இது நீரஜாவுக்கு தெரியுமா..?? இப்படி எதுவும் புரியாத குழப்பத்தில் தான் அவள் இருந்தாள்.

அந்த குழப்பத்தை சஞ்சய் மனதிலும் விதைக்க நினைத்தாள். ஒருவேளை அந்த குழப்பத்தில் அவளை மணந்துக் கொள்ள சஞ்சய் விருப்பம் தெரிவிக்கமாட்டானா..?? என்று ஒரு நப்பாசையில் தான் தன் தாயிடம் தனது விருப்பத்தை தெரிவித்தாள்.

ஆனால் அவனோ அவளை தங்கையாக நினைப்பதாக கூறினானாமே…?? இத்தனை நாள் பேசிப் பழகியதில் ஒருமுறை கூடவா அவள் காதலை அவன் உணரவில்லை, எவ்வளவு சாதாரணமாக அவள் உணர்வுகளை அவன் காயப்படுத்திவிட்டான். உண்மையிலேயே அப்படி நினைத்து தான் அவன் பழகினானா..?? இல்லை இந்த கல்யாணப் பேச்சில் இருந்து தப்பிக்க அப்படி கூறினானா..?? எப்படி இருந்தால் என்ன…?? அவள் மனம் அடிபட்டது அடிபட்டது தான்… ஏனோ அதை நினைக்கும்போதே கோபம் அதிகமாக வந்தது.  அந்த கோபத்தோடே சஞ்சயை அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

வைஷ்ணவியின் அழைப்பை பார்த்து அதை ஏற்றவன் அவளிடம் சமாதானமாக பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே, அவனை பேச விடாமல் அவளே பேசினாள்.

“நீங்க என்ன பதில் சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன் சஞ்சய்… வருத்தப்படாதீங்க… நீங்க சொன்னதை நினைச்சு உருகிக்கிட்டு அழுதுக்கிட்டு இருப்பேன்னு நினைச்சுகாதீங்க… நான் ஏன் அழனும்..?? நீங்க என்னை வேண்டாம்னு சொன்னா.. என் வாழ்க்கையே ஒன்னும் முடிஞ்சுப் போகல…

எனக்கு தெரியும் அந்த நீரஜாவ தான் நீங்க மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க… ஆனா அவ தான் உங்களை கண்டுக்காம அந்த வெற்றிக் கூட சுத்திக்கிட்டு இருக்கா… அவளுக்காக என்னை வேண்டாம்னு சொல்லிட்டீங்கல்ல.. பரவாயில்லை அதுக்காக நான் வருத்தமெல்லாம் படல… ஆனா என்னை தங்கையா நினைச்சு தான் பழகனதா சொன்னீங்களாமே…?? இத்தனை நாள் என்னோட பழகனதுல என் மனசு உங்களுக்கு புரியலையா..?? நீங்க அப்படிதான் பழகறதா ஒருதடவை கூட சொன்னதில்லையே..

அப்படியே நீங்க என்னை தங்கையா நினைச்சு பழகியிருந்தாலும்… அதை இப்போ சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு… எனக்கு வைஷுவை பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே… என்னோட ஃபீலிங்ஸ இப்படி நீங்க ஹர்ட் பண்ணியிருக்க வேண்டாம்…

நீங்களும் ஒரு பொண்ணை காதலிக்கிறீங்க… அவக்கிட்ட உங்க காதலை சொல்றப்போ… அய்யோ நான் உங்களை அப்படியெல்லாம் நினைச்சுப் பழகல சஞ்சய்… என்னோட அண்ணாவோட ஃப்ரண்ட் என்பதால உங்களையும் நான் அண்ணனா நினைச்சு தான் பழகினேன்னு அந்த நீரஜா சொன்னா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க…

பொதுவா நல்ல ஃப்ரண்ட்ன்னா ப்ரண்டோட தங்கையை தன்னோட தங்கையா நினைக்கணும்… ஆனா அப்படி எந்த உறவும் ஏற்பட்டுடக் கூடாதுன்னு தான் முதலிலேயே மாமா, மச்சான், மாப்ளன்னு உறவு முறை வச்சு கூப்ட்றீங்கப் போல… நீங்க எந்த ரிலேஷன்ஷிப்ல பழகினா எனக்கென்ன..?? அதான் என்னை தங்கையா நினைக்கறதா சொல்லி இந்த விஷயத்துக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிட்டீங்களே…

ஆனால் அந்த நீரஜாக்காக என்னை வேண்டாம்னு சொல்லீட்டீங்கல்ல… அவ அந்த வெற்றியை தான் காதலிக்கிறதா சொல்லப் போறா பார்த்துக்கிட்டே இருங்க… என்னோட உணர்வுகளை காயப்படுத்தினீங்கல்ல… ஒருநாள் நீங்க காயப்பட்டு நிக்கப் போறீங்க… அதை நான் பார்க்கத்தான் போறேன்… கண்டிப்பா இது நடக்கும்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அவனிடம் பேசியப் பின்னும் வைஷ்ணவியின் கோபம் அடங்கவில்லை,  நீரஜாவுக்காக தன்னை வேண்டாமென்று சொல்லிவிட்டானே என்ற கோபம், இயல்பிலேயே வைஷ்ணவி கெட்டவள் இல்லை. ஏனோ நீரஜாவிடம் சிறு வயதில் ஏற்பட்ட பொறாமை இப்போது சஞ்சய் விஷயம் வரையில் நீட்டிக்கிறது… சாதாரண காதலர்களாக அவர்கள் இருந்திருந்தால் அவளுக்கு அது பெரியதாக தெரிந்திருக்காது. ஆனால் சிங்கப்பூர் சென்றது, இப்போது வெற்றியோடு திரும்ப வந்திருப்பது என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவனை உதாசீனப்படுத்தும் ஒருத்திக்காக தன்னை வேண்டாமென்று அந்த சஞ்சய்  சொல்கிறானே என்ற கோபம் தான் வைஷ்ணவிக்கு,

அதே கோபத்தோடு நீரஜாவையும் அலைபேசியில் தொடர்பு கொண்டாள். அதேபோல் நீரஜாவையும் பேசவிடாமல் தானே பேசினாள் அவள்,

“என்ன நீரஜா… இப்போ ரொம்ப சந்தோஷமா இருப்பீயே… சஞ்சய் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு… அதுவும் என்னை தங்கையா நினைக்கிறதா சொல்லிட்டாரு… அதைக் கேட்டு நீ எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தெரியும்… உனக்கு ஒன்னு தெரியுமா… சஞ்சயை உனக்கு முன்னாடி நான் தான் ஃபர்ஸ்ட் பார்த்தேன்… அப்பவே எனக்கு சஞ்சயை பிடிச்சுது… ஆனாலும் நீங்க ரெண்டுப்பேரும் லவ் பண்றீங்கன்னு நினைச்சு நான் ஒதுங்கி தானே போனேன்…

இப்போ நீ சஞ்சயை விட்டு விலகினதால தானே நான் சஞ்சயை கல்யாணம் செஞ்சுக்கனும்னு நினைச்சேன்… ஆனா சஞ்சயை வேணும்னு நினைக்கிற என்னை விட… வேண்டாம்னு ஒதுங்கி போன உன்னை தானே அவருக்கு ரொம்ப பிடிக்குது… இருக்கட்டும் பரவாயில்ல… ரெண்டுப்பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழுங்க… ரொம்ப சந்தோஷமா வாழுங்க…” என்று தன் வயிற்றெரிச்சலை நீரஜாவின் மீது கொட்டினாள்.

வைஷ்ணவி பேசுவதற்கு முன் தான் நீரஜா, நிக்கி, ஜானு மூலமாக சஞ்சய் சொன்ன பதிலைக் கேட்டு அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் தான் வைஷுவிடம் இருந்து அழைப்பு வந்தது.

என்ன இருந்தாலும் சஞ்சய் இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கக் கூடாது, வைஷுக்கு அது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது இவளுக்கும் புரிகிறது,

இதே இந்த இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால்,  சஞ்சயின் முடிவைக் கேட்டு அவள் சந்தோஷப்பட்டிருப்பாள்.  ஆனால் அது வைஷுவாக இருக்கும் பட்சத்தில் அவளால் அப்படி சந்தோஷப்பட முடியவில்லை, ஆரம்பத்திலிருந்தே வைஷுவோடு சுமூகமான உறவு வைத்திருக்க வேண்டும் என்று தான் அவள் விரும்பினாள். ஆனால் அவள் அறியாமலேயே வைஷுக்கும் அவளுக்கும் இடையே ஏதோ விரிசல் வந்துவிட்டது,

ஆனால் இதற்கு மேலும் அதை வளர விடக் கூடாது என்று தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் சஞ்சய் விஷயத்திலும் வைஷுக்கும் அவளுக்கும் பிரச்சனை வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் வைஷு நினைப்பது போல் அவள் எப்படி இதை நினைத்து சந்தோஷப்படுவாள்?

என்னத்தான் மனதார சஞ்சயை அவள் நேசித்தாலும், அதை இன்னும் அவள் சஞ்சயிடம் வெளிப்படுத்தாத போது, வைஷுவிடம் அதை அவள் காண்பித்துக் கொண்டதில்லையே, எத்தனையோ முறை சஞசய் பற்றி வைஷு பேசியபோதெல்லாம் அவளுக்கு பொறாமை ஏற்பட்டாலும் அதை அவள் வெளிப்படையாக காண்பித்துக் கொண்டதில்லை. ஒருவேளை சஞ்சய் வைஷுவை வேண்டாமென்று சொன்னால், அவளின் நிலைமை என்னாகும் என்று தான் அவள் யோசித்திருக்கிறாள். இருந்தும் வைஷு இப்படி நினைப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது.

இதற்கெல்லாம் காரணம் சஞ்சய் தானே என்று அவன் மீது அவளுக்கு கோபம் வந்தது. அவள் மனதையும் அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, வைஷுவின் மனதையும் அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, அவன் மேல் இருக்கும் கோபத்தில் அவனை நன்றாக திட்ட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. உடனே அவனை அலைபேசியில் அழைத்தாள். வைஷ்ணவியை போல் அவளும் அவனை பேசவிடாமல் தன் ஆதங்கத்தை கொட்டினாள்.

அவள் அழைப்பை ஏற்ற அவன் “நிரு..” என்ற போது,

“நான் நிரு தான்… உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்… ஏன் நீங்க இப்படி செஞ்சீங்க..?? ஒரு பொண்ணு உங்கக் கூட எப்படி பழகுறான்னு கூடவா உங்களால புரிஞ்சிக்க முடியல… வைஷுவை நீங்க தங்கையா நினைச்சிருந்தா… அவக்கூட பழகும் போதே அதை நீங்க அவளுக்கு புரிய வச்சிருக்க வேண்டாமா..??

அவ பழகின முறையை வச்சு அவ எந்த மாதிரி உங்கக் கூட பழகுறான்னு தெரிஞ்சிருக்க வேண்டாமா…?? அப்படி இருந்திருந்தா இப்போ வைஷுவை நீங்க ஹர்ட் பண்ணும் நிலைமை வந்திருக்காதுல்ல… நீங்க ஒரு பொண்ணோட ஃபீலிங்க்ஸோட விளையாடி இருக்கீங்க… சேச்சே..” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

இரண்டு பெண்களும் அலைபேசி மூலமாக தனது கோபத்தைக் காட்டினாலும், சஞ்சயால் அவர்கள் மீது கோபப்பட முடியவில்லை.

அவர்கள் சொல்வதும் உண்மை தானே, நன்றாக படிப்பவன், திறமையாக தொழில் செய்பவனாக இருந்தாலும், ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவனால் புரிந்துக் கொள்ள தான் முடியவில்லை, அவன் வளர்ந்த சூழ்நிலை தான் அதற்கு காரணமா..?? தன்னைப் பற்றியும், தன் தாய், தந்தைப் பற்றி மட்டுமே எப்போதும் யோசித்ததால் மற்றவரின் மனதில் உள்ளது புரியாமல் போனதோ..?? அது தான் அன்று நீரஜாவிடம் நடந்துக் கொண்டதுக்கும், இன்று வைஷ்ணவியை காயப்படுத்தியதுக்கும் காரணமோ..??

முன்பு ஜானவி அவனை அண்ணா என்று அழைத்த போது, சஞ்சய் என்று கூப்பிடும்படி அவன் தான் கூறினான். அப்போது அண்ணன், தங்கை உறவிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை, அதனால் தான் அப்படி சொன்னான். ஆனால் ஜானவியோ அவனை பேர் சொல்லி அழைத்தாலும், அண்ணன் என்ற முறையில் தான் அவனோடு பழகினாள்.

ஆனால் எப்போது அவன் நீரஜாவை பார்த்தானோ, அப்போதே நீரஜாவின் உறவுகள் தனக்கு என்ன உறவுமுறை ஆவார்கள் என்று மனம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே ஜானவியையும், வைஷ்ணவியையும் தன் தங்கையாகவே நினைத்தான். ஆனால் செயல்முறையில் அவனுக்கு அதை காட்டத் தெரியவில்லை,  ஜான்வியை போல வைஷுவும் அவனை அண்ணனாக நினைத்து தான் பழகுவதாக நினைத்தான். ஆனால் இப்போது தான் அவள் அப்படி நினைக்கவில்லை என்று தெரிந்தது.

வைஷுவுக்கு இதை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்த போதே,  நிகேதனும், ஜானவியும் திடிரென்று இப்படி வந்து கேட்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சாதாரணமாக வைஷுவை எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், ஏன், எதற்கு என்ற கேள்வி வரும்.. “அவ ரொம்ப நல்லப் பொண்ணு, அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நல்லது” என்று அவனது அன்னை சொல்வார். அதனால் வைஷுவைப் பற்றி அவன் மனதில் இருப்பதை சொல்வதே நல்லது என்று தான் வெளிப்படையாக வைஷுவை அவன் என்னவாக நினைத்திருக்கிறான் என்று சொல்லிவிட்டான்.

“நான் நீரஜாவை தான் காதலிக்கிறேன்… அவளை தான் திருமணம் செய்துக் கொள்ள விருப்பப்படுகிறேன்…” என்று வெளிப்படையாக கூறி இருக்க முடியும், ஆனால் நீரஜாவிடம் முதலில் இதை சொல்லிவிட்டு தானே மற்ற  அனைவரிடமும் சொல்ல முடியும்,  இதெல்லாம் யாருக்குப்புரியும்?

வைஷ்ணவியின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாதது போலவே, நீரஜாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதும் இன்னும் அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, அன்று அவன் நீரஜாவை காதலித்தது போலவே, அவளும் அவனை காதலிப்பதாகத் தான் அவன் நினைத்துக் கொண்டான். அந்த உரிமையில் அவன் செய்த ஒரு காரியம் தான் இப்போது இவர்களுக்குள் இந்த இடைவெளி விழுந்ததற்கான காரணம்,

தன் நண்பனின் தங்கையை தன்னுடைய தங்கையாக பார்க்க வேண்டும் தான், ஆனால் நீரஜாவை முதலில் பார்க்கும்போது, அவள் நிகேதனின் தங்கை என்று மனதிற்குள் தோன்றுவதற்கு முன்னரே, அவள் தனக்கானவள் என்று தானே மனம் நினைத்தது. மாமா,மாப்ளன்னு நிகேதனும், அவனும் கூப்பிட்டு பழகியது கூட கல்லூரியில் விளையாட்டாக கூப்பிட்டுக் கொண்டது தானே, அப்போதெல்லாம் நீரஜாவை அவன் பார்த்ததுக் கூட இல்லையே, நீரஜாவை பார்த்த பின்பு கூட எல்லாம் நன்றாக தானே சென்றுக் கொண்டிருந்தது.

அந்த ஒருநாள் இவர்கள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் எல்லாமே இவர்கள் வாழ்வில் இனிமையாகவே இருந்திருக்கும், இயல்பாகவே அவன் காதலை நீரஜாவிடம் வெளிப்படுத்தியிருப்பான். அவளும் அதை ஏற்றுக் கொண்டிருப்பாள். இந்நேரம் இவர்கள் திருமணம் கூட நடந்திருக்கும், ஆனால் அந்த ஒருநாள் இவர்கள் வாழ்க்கையே மாற்றிவிட்டது, இப்போது சாதாரணமாக நட்பாக கூட பழக முடியாதபடி ஒரு திரை விழுந்துவிட்டது. அனைத்திற்கும் காரணம் அந்த மந்த்ரா தான், அவளால் தானே இவர்கள் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டது.

சஞ்சய் யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம், நீரஜாவும் அதை தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். வைஷுவை நினைத்து கோபமாக சஞ்சயிடம் பேசிய பின்பு தான், அப்படி பேசியிருக்கக் கூடாதோ என்று அவளுக்கு தோன்றியது. வைஷு முதலில் மனதில் உள்ளதை சஞ்சயிடம் தெரிவிக்காமல், வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியிருக்கக் கூடாது. திடிரென்று திருமணம் பற்றி பேச்சு வரும்போது சஞ்சயால் என்ன செய்திருக்க முடியும், சஞ்சய் செய்ததும் ஒருவிதத்தில் சரிதான், இதை யோசிக்காமல் சஞ்சயிடம் கோபமாக பேசியதை நினைத்து நீரஜா கவலைக் கொண்டாள்.

வைஷ்ணவி விஷயத்தில் சஞ்சய் நடந்துக் கொண்டதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஏன்  மந்த்ரா விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று கூட அவள் புரிந்துக் கொண்டாள். ஆனால் அவள் விஷயத்தில் சஞ்சய் என்ன நினைக்கிறான் என்பதை தான் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ஒருவேளை வைஷு சொன்னது போல் அவளை நினைத்து தான் சஞ்சய் அவளை வேண்டாமென்று சொன்னானா..?? சஞ்சய் இவளை காதலிக்கிறானா..?? அப்படியென்றால் ஏன் அவன் மனதில் உள்ளதை அவன் வெளிப்படுத்தவில்லை,

அந்த ஒருநாள் இவர்கள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்குமோ…?? அந்த மந்த்ரா இவர்களுக்கு இடையே வராமல் இருந்திருந்தால் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டிருக்காதோ..?? ஆனால் அந்த மந்த்ராவால் தானே அவள் மனம் அவளுக்குப் புரிந்தது. ஏன் மந்த்ரா வராமல் இருந்திருந்தாலும் அவள் மனதில் உள்ளது அவளுக்கு புரிந்திருக்கும், அதை சஞ்சயிடமும் அவள் வெளிப்படுத்தியிருப்பாள். சஞ்சயும் அதை ஏற்றுக் கொண்டிருப்பான். ஆனால் அந்த நாள் இவர்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது,

இருவருமே அவர்கள் வாழ்க்கையில் மூன்று வருடத்திற்கு முன்பு நடந்ததை தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு அவர்களுக்கு உறங்காத இரவாகவே அமைந்தது. 

மௌனம் தொடரும்..