IIN 97

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கேடல் ஜேசன் ராஜா வழக்கைத் தொடர்ந்து இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கேரளாவின் சாத்தான் வழிபாட்டு கல்ட் கும்பல்கள் தங்களது வலையை விரிப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது இம்மாதிரி கல்ட் கும்பல்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இம்மாதிரி சாத்தானிஷ குழுக்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்கள் திருப்பலியைப் போல ‘ப்ளாக் மாஸ்’ என்ற நிகழ்வை சாத்தானிஷ கும்பல்கள் நடத்துவார்கள். கிறிஸ்தவம் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் புனிதமானதாகவும் இறையருள் நிறைந்ததாகவும் கருதப்படும் அனைத்து நிகழ்வுகளையும் இந்த சாத்தானிஷத்தின் விழுதுகள் எதிர்ப்பார்கள். கொச்சியிலிருந்த ஒரு பாதிரியாரிடம் விசாரித்தபோது சாத்தானிஷ கும்பல்களின் ப்ளாக் மாஸில் மனித மற்றும் மிருக பலி, மண்டையோட்டில் ஒயின் அல்லது பலி கொடுக்கப்பட்ட மிருகங்களில் இரத்தத்தைப் பருகுவது போன்றவை நடைபெறுகிறது என்றார். கூடவே இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களில் இருந்து புனித அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் திருடுவார்கள், இந்தத் திருட்டு அதிகரிப்பது சாத்தானிஷ குழுக்களின் அதிகரிப்புக்கான அறிகுறி என்றார் அந்த பாதிரியார். ஒவ்வொரு மாதமும் பதிமூன்றாம் தேதி இத்தகைய சாத்தான் வழிபாட்டு கும்பல்கள் தங்களது ப்ளாக் மாஸை நடத்துவார்களாம். சாத்தானிஷ கும்பல்கள் பொதுமக்களை வெகுவிரைவில் கவரக் காரணம் செகஸ் மற்றும் போதைப்பொருட்கள். இந்ஹ இரண்டும் சாத்தானிஷ சடங்குகளின் பிரதான பாகங்களாக இருப்பதால் சாத்தான் குழுவில் சேர்ந்தால் இவற்றை எளிதில் அடையலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில் நிறைய பேர் இக்குழுக்களில் இணைகிறார்கள்.

                                                           -From Internet

ஏகலைவனை நீதிமன்றதுக்கு அழைத்துச் செல்வதற்கான பரபரப்பில் இருந்தது பொன்மலை காவல் நிலையம். அவனுக்கு முன்னர் ரிமாண்டில் வைக்கப்பட்ட  நவநீதம், கோபால் மற்றும் பாதிரியார் பவுலையும் அவனுடன் நீதிமன்றத்தில் அன்று ஆஜர்ப்படுத்தவேண்டிய நாள்.

ஏகலைவனின் வழக்கறிஞர் கட்டாயம் அவனை இவ்வழக்கிலிருந்து காப்பாற்ற முயல்வார் என்று காவல்துறைக்கு நன்கு தெரியும்.

இந்த வழக்கில் ஏகலைவனுக்கு எதிராக அவனது வாக்குமூலமே அமைந்தாலும் கூட அவர் மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருப்பார்கள் என வாதாடுவார். வாங்கிய பணத்துக்கு விசுவாசம் காட்டவேண்டும். கூடவே இந்தியாவின் தலைசிறந்த கிரிமினல் லாயர்களில் ஒருவர் தோற்கலாமா என்ற வீறாப்பும் ஒரு காரணம்.

அதையெல்லாம் மனதில் வைத்து தான் அரசு தரப்பு வக்கீல் தயாராகியிருப்பார். ஏகலைவனுக்கு எதிராக அவனது மருத்துவ அறிக்கைகள், இதன்யாவை அவன் கொலை செய்ய பார்த்த சம்பவமே ஆதாரங்களாக அமைகிற போது மனுவேந்தனால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?

நால்வரையும் நீதிமன்றம் செல்வதற்கான வேனில் ஏற்றினார்கள். நால்வரும் திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்படவிருந்தார்கள்.

விசாரணை அதிகாரிகள் என்ற முறையில் இதன்யா, முரளிதரனுடன் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரான மார்த்தாண்டன் மற்றும் மகேந்திரன் தனி காவல் வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

காவல் வேனில் கான்ஸ்டபிள்கள் புடைச்சூழ கைவிலங்குடன் அமர்ந்திருந்த ஏகலைவன் அலட்சிய சிரிப்போடு அந்த வேனில் இருந்த நெருக்கமாக கம்பிகள் வைக்கப்பட்ட ஜன்னல் வழியே வெளியே நோக்கினான்.

குழுமியிருந்த பெரும் கூட்டத்தில் அவனுக்காகக் கண்ணீர் வடித்தபடி நின்றது ஒரே ஒரு ஜீவன் தான். அது அவனுடைய தமக்கை சாவித்ரி. அவர் அருகே முகமெங்கும் பழிவெறியோடு நிஷாந்த் நின்று கொண்டிருந்தான். அவனருகே கண்ணீர் நிறைந்த விழிகளோடு ராக்கி. பாதிரியாருக்காக கண்ணீர் சிந்துகிறான் போல, பாசக்காரன் தான் என்று எண்ணிக்கொண்டான் ஏகலைவன்.

அவர்களைப் பார்த்ததும் மனம் வேனிலிருந்து இறங்கி ஓடி இத்தனை நாட்கள் அனுபவித்த சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கவும் திரும்பி அமர்ந்து கொண்டான். எங்கே ஓடுவது? கால் காயங்கள் ஆறும்வரை சக்கர நாற்காலி தான் கதி.

இன்று நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரும்? மனுவேந்தன் தனக்காக வாதாடி வழக்கை இழுத்தடிக்கும் எண்ணத்தில் இருப்பாரோ? ஒருவேளை தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால்?

கடைசி கேள்வி உதித்ததுமே அவன் கண்கள் ஜொலித்தன. பழிவெறியிலோ கோபத்திலோ அல்ல! சந்தோசத்தில்!

மனக்கண்ணில் தேவசேனா வந்து போனாள்.

“நான் இல்லாத உலகத்துல உங்களுக்கு மட்டும் என்ன வேலை ஏகா? என் கூட வந்திருங்க… இல்லனா மறுபடி மறுபடி நீங்களே உங்களை ஏமாத்திப்பிங்க… யாராச்சும் என் பேரைச் சொல்லி உங்களை ஏமாத்துவாங்க… நீங்க வேதனைப்படுறதை என்னால பாக்க முடியல… நீங்க என் கூடவே வந்துடுங்க ஏகா”

மந்தகாசப் புன்னகை அவனது இதழில்!

“எனக்கும் உன் கிட்ட வர தான் ஆசை தேவா”

தனக்குத் தானே பேசிக்கொண்டவனைப் பைத்தியம் முற்றிவிட்டது என்ற ரீதியில் கான்ஸ்டபிள் ஒருவர் பார்த்துவைத்தார்.

நவநீதமும் கோபாலும் தங்களை மிரட்டி குற்ற செயல்கள் செய்ய வைத்தவனின் முகத்தில் இளகிய பாவனையைக் கண்டு அதிசயித்துப் போய் அமர்ந்திருந்தார்கள். பாதிரியார் பவுல் தன்னைச் சுற்றியுள்ளவர்களைக் கண்டுகொள்ளாது மனதுக்குள் ராக்கிக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்.

மலையிலிருந்து வாகனங்கள் இறங்கி சமதளத்தை அடைந்து திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தை அடைந்தன. நீதிமன்றத்தின் வெளியே ஊடகங்களின் நிருபர்களும், ஊடக வண்டிகளும் பெரும் திரளாக குழுமியிருந்தனர்.

அன்று முதல் வழக்கே இனியாவின் கொலை வழக்கு தான். குற்றம் சாட்டப்பட்டவர்களை வேனிலிருந்து இறக்கிய கான்ஸ்டபிள்கள் ஏகலைவன் சக்கர நாற்காலியில் அமர உதவினார்கள். அவனை நெருங்க முயற்சித்த நிருபர்களை விலக்கிவிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் அவனையும் நவநீதம் மற்றும் கோபாலோடு அழைத்துச் சென்றனர்.

அவனுக்காக காத்திருந்த மனுவேந்தன் நம்பிக்கையூட்டும் விதமாகப் பார்த்தார். கலிங்கராஜனும் வந்திருந்தார். அவரது விழிகள் உணர்ச்சியின்றி ஏகலைவனை வெறித்தன.

உன்னை எவ்வளவு நம்பினேன், கடைசியில் நீயா என் மகளுக்கு எமன் ஆனாய் என்ற கேள்வி அவரது விழிகளில்!

வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பித்தது. காவல்துறை தரப்பிலிருந்து ஏகலைவனை விசாரணை செய்த வீடியோ ஆதாரங்கள், தடயவியல் துறை அளித்த அறிக்கைகள், நவநீதம், கோபால் மற்றும் பாதிரியாரின் சாட்சியங்கள் அவனுக்கு எதிராக அமைந்தன.

கூடவே அவனது மனப்பிறழ்வு குறைபாடு உண்மை தான் என மனநல மருத்துவர் ஒருவர் அறிக்கை கொடுத்தார். அவனுக்கு இருந்த போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்சார்டரும் கட்டுக்கதை இல்லை என்றார் அவர்.

இறுதியாக சாட்சி கூண்டிலேற்றப்பட்ட இதன்யாவும் ஏகலைவனின் சைக்கோபதி பிரச்சனையை ஒப்புக்கொண்டாள்.

எல்லா சாட்சியும் ஆதாரமும் ஏகலைவனுக்கு எதிராய் அமைந்தாலும் மனுவேந்தன் நீதிபதியிடம் அவனது நிலையை எடுத்துரைக்க தவறவில்லை.

“அவரால அவரோட காதலியோட இறப்பை ஏத்துக்க முடியாதது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு நான் சொல்ல வரலை… இத்தனை நாள் இந்த மனோவியாதிகளோட போராடி வெற்றிகரமா யாரையும் ஹர்ட் பண்ணாம வாழ்ந்த மனுசன் பிரகதி என்ற ஏமாற்றுக்கார பேர்வழி தன்னோட பணத்தாசைக்காக சொன்ன பொய்யை நம்பி, மூடநம்பிக்கைகள்ல மூழ்கி தன் அறிவுக்கு அப்பாற்ப்பட்டு இப்பிடி ஒரு நிலமைக்கு ஆளாகியிருக்கார்… அவர் செஞ்ச குற்றங்களோட அடிப்படை அவரோட மனோவியாதி அவருக்குள்ள உண்டாக்குன வெறி… மனரீதியா பாதிக்கப்பட்ட நபர் இவர்… அதை மனதில் வைத்து நீதிபதி யோசிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”

நீதிபதியும் அனைவரது சாட்சியங்களையும் விசாரித்துவிட்டு தனது தீர்ப்பைக் கூறினார்.

“இனியாவை ஏகலைவன் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. ஆனால் கொலை செய்த விதமும், அந்தக் கொலைக்கான ஆதாரங்களைத் திட்டமிட்டு மறைத்த விதமும், ஆதாரங்களை மறைக்க கொலைமிரட்டல் விடுத்து சிலரை தனக்கு அடிபணிய வைத்த குணமும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

அவரது மனப்பிறழ்வு குறைபாடு தான் இதற்கு காரணம் என மனநல மருத்துவர் அளித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது” என்றார் அவர்.

இனியாவைக் கொடூரமாகக் கொலை செய்து அவளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும்படி ரோஷணைத் தூண்டிய குற்றம், ஆதாரங்களை மறைக்க சிலரை மிரட்டிய குற்றம், முருகையாவைக் கொலை செய்ய ஜானையும் முத்துவையும் தூண்டிய குற்றம், காவல்துறை அதிகாரி ஒருவரை இருமுறை கொலை செய்ய முயன்றது மற்றும் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப் பார்த்த குற்றம், ஆட்களை வைத்து குழந்தைகளைக் கடத்த முயன்ற குற்றம், தனக்குப் பதில் வேறு நபர்களை குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி பணத்தைக் காட்டி விலைக்கு வாங்கிய குற்றம், அப்பாவி பெண் ஒருவருக்கு எதிராக ஆதாரங்களை திரித்து கொலைப்பழியை அவர் மீது போட்ட குற்றம் – இவை அனைத்துக்காகவும் ஏகலைவனுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின்படி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே இன்னொரு குற்றவாளியான ரோஷண் இறந்துவிட்டதால் அவனுக்கான தண்டனையாக அபராத தொகையை ஏகலைவனே செலுத்தவேண்டும் என தீர்ப்பளித்தார் நீதிபதி.

அவனது மனநிலையைக் கருத்தில் கொண்டு மரண தண்டனைக்குப் பதிலாக இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதாக கூறிய நீதிபதி ஏகலைவனுக்குப் போதிய மருத்துவ உதவியும், மனநல ஆலோசனைகளும் சிறை நாட்களில் தவறாமல் வழங்கப்படவேண்டுமென உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் ஏகலைவனின் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

“ப்ளீஸ் எனக்கு மரண தண்டனையே குடுத்துடுங்க… நான் என் தேவா கூட போயிடுறேன்… என்னை விட்டு வச்சிங்கனா எனக்கு வாழுறதுக்கான ஆசை வந்துடும்… அந்த ஆசை வந்தா மறுபடியும் நான் தப்பு பண்ண ஆரம்பிச்சிடுவேன்” என்று பிதற்ற ஆரம்பித்தவனை நீதிபதியின் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் அமைதிப்படுத்தினார்கள்.

நீதிபதி இனியாவின் கொலைவழக்கில் ஏகலைவனுக்கு ஆதாரங்களை மறைக்க உதவியாக இருந்தவர்களான முத்து, ஜான் இருவரும் ஏற்கெனவே முருகையாவைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களுக்குக் கூடுதலாக ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

ஆதாரங்களைத் திரித்து கிளாராவுக்கு எதிராகப் பொய்யாகச் சாட்சி சொன்ன கோபாலுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதாரங்களை மறைக்க ஏகலைவனுக்கு உதவியாக இருந்ததோடு, ஆதாரங்களைத் திரித்து கிளாராவை கொலைக்குற்றவாளியாகச் சித்தரித்த நவநீதத்துக்கு பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிரியார் பவுல் ஆதாரங்களை மறைக்க உதவியாக இருந்த காரணத்திற்காக மூன்றாண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளானார்.

இறுதியில் இனியாவின் கொலை வழக்கில் தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்த கிளாரா எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாள்.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய அயராது உழைத்த சிறப்பு விசாரணை குழுவிலிருந்த காவல்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய நாளில் இதன்யாவை விட நிம்மதியாக உணர்ந்தவர் மார்த்தாண்டனே! வழக்கின் ஆரம்ப நாளிலிருந்து அவருக்குள் இருந்த பதபதைப்பு இதோ இக்கணம் அகன்றுவிட்டது.

என்னவொன்று, முருகையா போன்ற ஒரு அப்பாவி கொடுமையான முறையில் இறந்திருக்க வேண்டாம்! அவருக்காக மீண்டும் ஒரு முறை வருந்தியது மார்த்தாண்டனின் மனம்.

யோசனையோடு நடந்தவரின் தோளில் யாரோ கை வைத்தார்கள். திரும்பிப் பார்த்தவர் இதன்யா அங்கே நின்று கொண்டிருக்கவும் புன்னகைத்தார்.

“இன்னைக்கு என்னை விட நீங்க ரொம்ப ஹேப்பியா இருப்பிங்கனு தெரியும்… இந்தக் கேஸ் ஆரம்பத்துல அடிக்கடி நான் ஒன்னு சொல்லுவேன்.. வேலையோட ஃபீலிங்சை கலக்காதிங்கனு… ஃபைனலி இப்ப நானும் உங்களை மாதிரி ஃபீலிங்சுக்கு முக்கியத்துவம் குடுக்குற ஆளா மாறிட்டேன்” என்று இதன்யா சொல்லவும் சத்தமாகச் சிரித்தார் அவர்.

“உங்களோட உணர்வுகள் கேஸை பாதிக்காத மாதிரி பக்குவமா அதை ஹேண்டில் பண்ணுறிங்க மேடம்… எனக்கு உங்க கூட வேலை பாத்ததுல அந்தப் பக்குவம் வந்திருக்கும்னு நம்புறேன்”

மார்த்தாண்டன் பேசிக்கொண்டிருக்கையிலேயே ஏகலைவனை சிறைச்சாலைக்குச் செல்லும் காவல் வாகனத்தில் ஏற்ற முயல்வதை இருவரும் காண நேர்ந்தது. அவனுடன் மனுவேந்தனும் நின்று கொண்டிருந்தார். இருவரும் தீவிரக்குரலில் ஏதோ பேசினார்கள். பின்னர் மனுவேந்தன் சென்றுவிட்டார்.

ஏகலைவன் கான்ஸ்டபிள் ஒருவரிடம் ஏதோ சொல்லியனுப்ப அவர் இதன்யாவிடம் வந்து நின்றார்.

“ஏகலைவன் சார் உங்க கிட்ட பேசணுமாம் மேடம்”

“ஏகலைவன் சார்?” இதன்யா புருவத்தை உயர்த்தி கண்களை உருட்டி கேட்ட விதத்தில் அந்தக் கான்ஸ்டபிள் தடுமாறினார்.

“இல்ல மேடம்… அவரு..”

“ஹீ இஸ் அ கில்லர்… பணக்காரன்ங்கிறதுக்காக அவனுக்கு ஸ்பெஷல் மரியாதை எல்லாம் தேவையில்ல”

அவரிடம் கடுகடுத்தவள் ஏகலைவனிடம் பேசிவிட்டு வருவதாக மார்த்தாண்டனிடம் சொல்லிவிட்டுப்  போனாள் இதன்யா.

ஏகலைவன் அவளைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

“ஜெயில்ல போய் சத்தம் போட்டு சிரிச்சுக்க.. என் கிட்ட என்ன பேசணும்னு வரச் சொன்ன?” என்று கறாராகக் கேட்டாள் இதன்யா.

“ஐ அம் சாரி” என்றான் அவன் அதே சிரிப்புடன். மன்னிப்பு கேட்கும் பாவனையே இல்லாமல் ஒரு மன்னிப்பு! வினோதமாக இருந்தது இதன்யாவுக்கு. கடுகடுப்பு மறைந்தது அவளிடம்.

திடீரென ஏகலைவனுக்கு வந்த ஞானோதயத்தை அவளால் நம்ப  முடியவில்லை.

“நீங்க மேரீட்னு எனக்குத் தெரியும்… டிவோர்ஸ் அப்ளை பண்ணுனதும் தெரியும்… ஆனா நீங்களும் உங்க ஹஸ்பெண்டும் மறுபடி சேர்ந்தது எனக்குத் தெரியாது… தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் என் தேவாவோட இடத்துல உங்களை வச்சு பாத்திருக்கமாட்டேன்… ஒரு உன்னதமான உறவை இழந்தவன் நான்… எந்தக் குடும்பத்தையும் பிரிக்குற வேலைய செய்ய மாட்டேன்… அது அருவருப்பான வேலை”

இதன்யாவுக்கு இப்போதும் அவனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“சைக்கோபாத்தும் நம்மளை மாதிரி மனுசன் தான்.. அவன் வாழ்க்கையில நடந்த திருத்த முடியாத தவறுகள் அவனை நிலை பிறழ வச்சிடும்… சிலருக்கு ட்ரீட்மெண்ட், சிலருக்கு அன்பான மனுசங்களோட ஆதரவு – இது போதும் அவங்களை மறுபடி சாதாரணமா மாத்துறதுக்கு… பட் அவங்களை ஸ்டிமுலேட் சூழல் உருவாச்சுனா மறுபடியும் அவங்களுக்குள்ள சைக்கோபதி தூண்டப்படலாம்”

அவளுக்குத் தெரிந்த மனோதத்துவ நிபுணர் சொன்னது தான்.

“ஐ அக்செப்ட் யுவர் அப்பாலஜி… ஒரே ஒரு கேள்வி, பிரகதியோட டெத்துக்கு யார் காரணம்?”

மீண்டும் அவனது இதழில் புன்சிரிப்பு. பதில் தெரியாத கேள்விகள் சிலரின் ஞாபகமாக நமக்குள் பதிந்து போகும். இந்தக் கேள்வி ஏகலைவனை இதன்யாவுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.

நிருபர்கள் ஏகலவனைப் படம்பிடிக்க ஓடிவர கான்ஸ்டபிள் அவர்களைத் தடுத்து அவனை வேனுக்குள் ஏற்றினார்.

வேன் நீதிமன்ற வளாகத்திலிருந்து கிளம்பியது அனைவரது கண்களிலும் விரலை விட்டு ஆட்டிய ஏகலைவனைச் சுமந்துகொண்டு. இனி அவனது வாழ்நாளை கழிக்கப் போகிற சிறைச்சாலையின் திறக்கப்பட்ட கதவுகள் எக்காலத்திலும் உள்ளே வந்தவனை வெளியே விடப்போவதில்லை.