IIN 96

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

2017ல் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேடல் ஜேசன் ராஜா என்பவர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவுக்காரப்பெண்மணியை சாத்தான் வழிபாட்டிற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்து அக்கொலையை தீவிபத்து போல சித்தரித்து அதில் தானும் மரணித்தது போல ஒரு டம்மியை வைத்து நாடகமாடிய சம்பவம் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அவரை இரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்தபோது சாத்தான் வழிபாட்டில் ஒரு பகுதியாக ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் சோதனையை அவர்களை வைத்து செய்ததாகக் கூறியுள்ளார். சாத்தான் வழிபாட்டில் தான் ஈடுபட்டுள்ளதையும் ஜேசன் ராஜா ஒப்புக்கொண்டார். கொலை செய்த சடலங்களுடன் அவர் மூன்று நாட்கள் இருந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டதற்கு அவர்கள் அனைவரும் சுற்றுலா சென்றுள்ளதாகக் கூறியுள்ளார். அவரைக் கைது செய்த ஐ.ஜி மனோஜ் ஆப்ரஹாம் கொலை செய்த சடங்களோடு மூன்று நாட்களைக் கழித்த கேடல் ஜேசன் ராஜா பின்னர் அச்சடலங்களை ஒன்றன் பின் ஒன்றாக கழிவறையில் வைத்து எரிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் காவல்துறையினரும் பக்கத்து வீட்டாரும் விசாரித்தபோது தீவிபத்தில் தன் குடும்பத்தார் பலியானதாகக் கூறியுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் ‘ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்’ படித்தபோது உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் ‘Astral Projection’ல் ஆர்வம் கொண்டிருந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் காரணமாகவே குடும்பத்தினரை இவ்வாறு படுகொலை செய்ததாகக் கூறியுள்ளார்.

                                                           -From Internet

காவல் ஆய்வாளர் பரிசுப்பெட்டியிலிருந்து பென்ட்ரைவை எடுத்ததும் தேவநாதன் இது தன் மகளுடைய பென்ட்ரைவ் என்று உறுதிபடுத்தினார்.

“உங்க மகளோட பென்ட்ரைவ் எப்பிடி இனியா மர்டர் கேஸ் அக்யூஸ்ட் கிட்ட போச்சு?” என்று கேட்டபடி கான்ஸ்டபிடம் மடிக்கணினி ஒன்றை கொண்டு வரும்படி கூறினார்.

மடிக்கணினி வந்ததும் பென்ட்ரைவை அதில் போட்டுப் பார்த்தவர் அதில் ஒரு இணையதளத்தின் இணைப்பும், இமேஜ் ஒன்றும் இருப்பதைக் கவனித்தார். அதை மடிக்கணினியில் சேமித்துக்கொண்டவர் இணையதள இணைப்பை அழுத்த அந்தத் தளத்தைப் பார்வையிட முடியாதென்ற அறிவிப்பு மட்டும் உலவியின் திரையில் தெரிந்தது.

உடனே இமேஜை திறந்து பார்த்தவர் அதில் எலும்புகூட்டு போன்ற உடையணிந்து கையில் ஆயுதத்துடன் ஒருவன் நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் ஆடிப்போனார். அவனது கண்கள் மட்டும் அந்த உடையின் முகப்பகுதியிலிருந்த துளைகள் வழியே வெளியே தெரிந்தன.

எதிர்பார்த்ததை விட இந்த வழக்கு சிக்கலானது என்று புரிந்துகொண்ட ஆய்வாளர் தாமதிக்காமல் சைபர் க்ரைம் காவல் நிலையத்துக்கு மார்த்தாண்டனுடன் விரைந்து சென்றார்.

அங்கே இருந்த காவல்துறை ஆய்வாளர் மடிக்கணினியிலிருந்த இணையதள இணைப்பை பார்த்துவிட்டு “இது ஏதோ டார்க்வெப்ல இருக்குற சைட் மாதிரி இருக்கு… யூ.ஆர்.எல் வச்சே டார்க்வெப்சைட்சை கண்டுபிடிச்சிடலாம்” என்றபடி பாதுகாப்பான முறையில் டார்க்வெப்பில் உலவ உதவும் உலவியில் அந்த இணையதள இணைப்பைப் போட்டுத் தேட ஆரம்பித்தார்.

அந்த உலவியின் திரையின் உதயமானதோ ‘ரெட்ரூம்’ எனப்படும் வன்கொடுமைகள் செய்யும் தளம். இவை டார்க்வெப்பில் மட்டும் இயங்கும் தளங்கள் ஆகும். முகப்புத்தகத்தில் லைவ் போவது போல இந்த ரெட்ரூமிலும் லைவ் வசதி உண்டு. முகப்புத்தகத்தில் நமது லைவை நம் நண்பர்கள், ஃபாலோயர்கள் பார்க்கலாம் அல்லவா! அதே போல இந்த ‘ரெட்ரூம்களில்’ நிகழக்கூடிய வன்கொடுமைகளை லைவாக அதன் பயனர்கள் கண்டுகளிக்கலாம்.

இதைக் கூடவா கண்டுகளிப்பார்கள் என நீங்கள் திகைப்படையலாம். மனித மனங்களின் அடியாழத்தில் உறைந்து கிடக்கும் வக்கிரங்களைத் தட்டி எழுப்பும் இடங்கள் இத்தகைய ‘ரெட்ரூம்கள்’. இங்கே உடல்ரீதியான துன்புறுத்தல், காயப்படுத்துதல், கொலை, பாலியல் வன்புணர்வு, மிருகங்களை புணர்தல் என பயனர்கள் கமெண்ட் செக்சனில் என்ன கேட்கிறார்களோ அதை நேரலையில் வரும் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் இன்னொரு நபருக்குச் செய்வார்.

உதாரணத்துக்கு அவனைக் கொலை செய்துவிடு என்று கமெண்ட் செய்தீர்கள் என்றால் அந்த மர்மநபர் சம்பந்தப்பட்ட ஆளை நேரலையில் கொலை செய்வான்.

டார்க்வெப்பில் இதே போல எண்ணற்ற ரெட்ரூம்கள் உள்ளன. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தைக் கொலையென நம்புபவர்கள் கூட அவரது கொலையைச் செய்த கொலையாளி ரெட்ரூமில் லைவாக வெளியிட்டான் என்று சொன்ன செய்திகள் அந்தச் சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

அத்தகைய ரெட்ரூம்களில் ஒன்றில் தான் அந்த இணைப்பு போய் நின்றது. அதில் தெரிந்தது ஒரு நபரின் பயனர் ஐடி. அவனது பயனர் பக்கத்திற்குப் போய் பார்த்தால் எண்ணற்ற வீடியோக்கள் கொட்டிக் கிடந்தன,.

அதில் கடைசியாகப் பதிவான வீடியோவை க்ளிக் செய்தார் சைபர் க்ரைம் ஆய்வாளர்.

அங்கே விரிந்த காட்சியில் தேவநாதனின் இதயம் துடிக்க மறந்து நின்றது.

அங்கே பிரகதி ஒரு நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டிருந்தாள். ஏற்கெனவே முடிந்த நிகழ்வு என்பதால் கீழே இருந்த கமெண்ட்களைப் படிக்க முடிந்தது.

“Kill her”

“slap her until she passes out”

“cut her hair and feed her the hair with rotten apple”

“Cut her finger one by one”

இதெல்லாம் சாதாரணமான கமெண்டுகள். இன்னும் வக்கிரமாக பாலியல் துன்புறுத்தல் செய்யும்படியான கமெண்டுகள் கூட அங்கே இருந்தன. ஆனால் திரையில் அவளை கட்டிப்போட்டிருந்த மர்ம நபரோ நிதானமாக அமிலபாட்டிலை எடுத்து பிரகதியின் முகத்தில் ஊற்றினான்.

காரணம் கீழே வந்த கமெண்டில் பயனர் ஒருவர் அவளை எப்படி கொலைசெய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்த விதம் அவனைக் கவர்ந்திருக்கலாம் என நினைத்தார் சைபர் கிரைம் ஆய்வாளர்.

தொடர்ந்து கமெண்டை வாசித்தார் அவர்.

“அவ முகத்துல ஆசிட் ஊத்தி எரிச்சிடு… அப்புறம் தலையில இருக்குற முடிய மழிச்சிடு… அவ துடிக்குறப்பவே உடம்பு முழுக்க கத்தியால குத்து… அவ செத்துட்டானா உடம்பைத் துண்டு துண்டா வெட்டி சல்ஃபியூரிக் ஆசிட்ல போட்டுரு”

அந்தப் பயனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்ய ஆரம்பித்தான் எலும்புக்கூடு உடைக்காரன்.

திரையில் பிரகதி அவனிடம் கெஞ்சினாள். கதறினாள். அவன் இளகவில்லை. அமிலத்தால் அவள் முகத்தை எரித்தான். பிரகதி வலியில் துடிப்பதைப் பார்த்து தேவநாதன் இங்கே கண்ணீர் விட்டார்.

அடுத்து அவள் தலைமுடி மழிக்கப்பட்டு வெறியோடு உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டாள் முடிவில் அவள் தலை சரிந்து உயிர் போனதும் மரம் வெட்டும் பெரிய இயந்திரத்தைப் பயன்படுத்தி சிமெண்ட் மேடையில் அவளது உடலை வைத்து வெட்ட ஆரம்பித்தான் எலும்புக்கூடு உடைக்காரன்.

சதைத்துண்டங்கள் ஆன பிரகதியை அள்ளி கந்தக அமிலம் அடங்கிய பெரிய ட்ரம்களில் வீசினான்.

கீழே அவனைப் பாராட்டி கமெண்டுகள் நிரம்பியிருந்தன. அவ்வளவு தான்! வீடியோ முடிவுற்றது!

தேவநாதனும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வேரற்ற மரமாகச் சாய்ந்தார்.

அதே நேரம் பொன்மலை காவல் நிலையத்தில் விசாரணை அறைக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஏகலைவனோ கோணல் சிரிப்பை உதிர்த்தான்.

பிரகதிக்கு என்னவானது என்பதை அறியாதவன் இல்லை அவன். இவர்கள் கேட்டால் உடனே சொல்லிவிடவேண்டுமா என்ன அலட்சியம்.

சொல்லப்போனால் பிரகதிக்கு நேர்ந்த இக்கொடுமைக்குக் காரணகர்த்தாவே அவன் தான். ஏமாற்றத்தைத் தாங்கவியலாதவன் இனியாவுக்குத் தனது கையால்தண்டனை கொடுத்தான். ஆனால் பிரகதிக்கோ தனது கையால் தண்டனை கொடுப்பது கூட அசிங்கமென நினைத்தான். அவள் சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்லும் முன்னர் என்ன செய்யலாமென யோசித்தவனுக்கு டார்க்வெப்பே பதிலளித்தது.

ரெட்ரூம்களில் கொலை செய்யும் தொழில்முறை கொலைகாரன் ஒருவனை டார்க்வெப் மூலம் கண்டறிந்து அங்கேயே கிரிப்டோ கரன்சியில் பணம் கொடுத்து பிரகதியைக் கொல்ல ஏற்பாடு செய்தான் ஏகலைவன்.

“விக்டிம் என்ன மாதிரி சாகணும்னு எதிர்பாக்குறிங்க?”

“அதை நான் லைவ்ல சொல்லுறேன்… நான் லைவ் வர்றதுக்கு முன்னாடி உன்னோட வெப்மெயிலுக்கு ‘ஐ அம் இன்’னு மெயில் அனுப்புவேன்… அப்புறம் லைவ் கமெண்ட்ல அவளை எப்பிடி கொல்லணும்னு டிஸ்க்ரைப் பண்ணுவேன்… நான் சொன்னது பிரகாரம் நீ அவளைக் கொல்லணும்.. உனக்குப் பணத்தை பிட்காயின்ல அனுப்பி வச்சிருக்கேன்… நான் சொல்லுற திங்க்ஸ் அண்ட் டூல்சை வாங்கிக்க.. மர்டரை நீ செய்யவேண்டிய இடம் மடிப்பாக்கத்துல இருக்குற ஒரு  புது பங்களா”

“ஏன் அங்க வச்சு கொல்லணும்? பொதுவா ரெட்ரூம் மர்டர்ஸ் எல்லாமே பாழடைஞ்ச பில்டிங், கைவிடப்பட்ட இடங்கள்ல தான் நடக்கும்.”

“நீ கொல்லப்போறவ பணத்தாசை பிடிச்சவ… அவ சாகுற இடம் எலைட்டா இருந்தா தானே மரியாதை”

ஏகலைவன் கொடுத்த கட்டளைப்படி அந்த தொழில்முறை கொலைகாரன் பிரகதியைக் கொலை செய்ய தேவையான பொருட்களோடு தயாராக இருந்தான்.

ஏகலைவன் பிரகதியைக் கண்காணிக்க தனியாய் ஒரு ஆளை நியமித்திருந்தான். அவன் கொடுத்த தகவலின் படி பிரகதி எங்கே போகிறாள், எந்த டாக்சியில் பயணிக்கிறாள் என்ற தகவல் எல்லாம் அவன் அனுப்பிவைக்க, பிரகதி பயணித்த டாக்சியை விபத்தாக்குவது போல ட்ரக் ஒன்றோடு வந்தவன் சிறிய விபத்தில் டாக்சி டிரைவரும் பிரகதியும் மயங்கிய நேரத்தில் அவளை மட்டும் ஓரமாக முன்னரே நிறுத்தி வைத்திருந்த காரிலேற்றிக்கொண்டு ஏகலைவனின் மடிப்பாக்கம் பங்களாவுக்குக் கிளம்பினான். ஏற்கெனவே பங்களாவைச் சுற்றியிருந்த சி.சி.டி.வி கேமராக்களை செயலிழக்கச் செய்துவிட்டான்.

அவன் ஓட்டிவந்த ட்ரக் மற்றும் காரின் நம்பர் ப்ளேட்டுகள் போலியானவை. பிற்காலத்தில் அவற்றை வைத்து தன்னைக் கண்டறிந்துவிடக்கூடாதென முன்னெச்சரிக்கையாய் செயல்பட்டிருந்தான் அந்தத் தொழில்முறை கொலைகாரன்.

பங்களாவுக்குள் நுழைந்தவன் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறையைத் திறந்தான். பிரதான வாயிலை உட்பக்கமாகத் தாளிட்டுவிடுட் வந்தவன் மயக்கம் தெளியும் முன்னர் பிரகதியை நாற்காலியில் கட்டிப்போட்டான். பின்னர் கொலை செய்ய தேவையான ஆயுதங்களை மேடையில் எடுத்து வைத்தான். காலி ட்ரம்களில் கந்தக அமிலத்தை நிரப்பிவைத்தான்.

கூர்மையான கத்தி தனது உதிரத்தை ருசி பார்க்க காத்திருக்கிறது என்பதை அறியாதவளாக மயக்கத்திலிருந்தாள் பிரகதி.

பின்னர் தலை முதல் கால் வரை மறைக்கும் எலும்புக்கூடு டிசைன் வரைந்த உடையை அணிந்தான் அந்த தொழில் முறை கொலைகாரன்.

அந்நேரத்தில் டார்க்வெப் மூலம் ரெட்ரூம் தளத்தில் நுழைந்தவன் தனது ஃபாலோயர்களுக்கு அன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று சொல்லி பிரகதியைக் காட்டினான்.

“இன்னைக்கு உங்களுக்கு ஒரு அற்புதமான காட்சி காத்திருக்கு… நீங்க விரும்புனதை எல்லாம் செய்ய நான் தயாரா இருக்கேன்… இந்த  அழகான பொண்ணை நான் என்ன செய்யணும்னு நீங்க விரும்புறிங்க? கமெண்ட்ல சொல்லுங்க”

பின்னர் அவனது ஃபாலோயர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சித்திரவதைகளைப் பட்டியலிட எலும்புக்கூடு உடையணிந்த தொழில்முறை கொலைகாரனோ ஏகலைவனின் செய்திக்காக காத்திருந்தான்.

வெப்மெயிலில் ‘ஐ அம் இன்’ என்ற செய்தி வந்ததும் கமெண்டுகளைக் கவனிக்க ஆரம்பித்தான். சரியாக ஏகலைவன் கமெண்ட் செய்த நேரத்தில் பிரகதியும் விழித்துக்கொண்டாள்.

முதலில் அது என்ன இடமென தெரியாமல் அலறியவள் பின்னர் தன் முன்னே வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியையும் இரண்டு ட்ரம்களையும் பார்த்து பயந்து கதறினாள்.

தூரத்திலிருந்த மேஜையில் கொலை செய்ய தேவையான உபகரணங்கள் இருந்தன. அவை வேறு அவளது நடுக்கத்தையும் பயத்தையும் அதிகரித்தன.

பின்னர் நடந்தது எல்லாம் தேவநாதன் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பார்த்த காட்சிகள் தான்.

பிரகதி துடிதுடித்து இறந்ததை விட அந்தக் கொலைகாரன் அவளைத் துண்டு துண்டாக வெட்டியபோதே ஏகலைவன் ஆனந்தமுற்றான்.

“எங்க வீடு ஏலத்துல போகுது சார்.. தேவா அக்கா இருந்திருந்தா இப்பிடிலாம் நடந்திருக்குமா? அவளால முடிஞ்ச உதவிய பண்ணிருப்பா… இப்ப எனக்கு வேற வழி தெரியாம தான் எங்களுக்குத் தெய்வமா இருந்து உதவுறவளோட ஆன்மாவ விக்குற நிலமைக்கு வந்திருக்கேன்”

இந்த உரையாடலின் முடிவில் கைமாறிய தொகை மட்டும்  இருபத்தைந்து இலட்சங்கள்.

பின்னர் ஒரு முறை தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் குடும்பத்தோடு விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என்று சொல்லி பிரகதி வாங்கிய பணம் கிட்டத்தட்ட இருபது இலட்சத்தைத் தொடும்.

இதைத் தவிர தீவிர உடல்நல பாதிப்பு, தாயாருக்கு விபத்து, தனது உயர்கல்விக்கான தொகை என பிரகதி அவனிடம் வாங்கிய பணம் எழுபத்தைந்து இலட்சம் வரை இருக்கலாம்.

பணத்தை இப்படி ஒரு ஏமாற்றுப்பேர்வழியிடம் இழந்தோமே என்ற வருத்தத்தை விட எல்லாரும் எளிதில் ஏமாற்றிப் பார்ப்பதற்கான நகைச்சுவை பொருளாய் மாறிப்போனேனே என்ற எண்ணமே ஏகலைவனின் இம்முடிவுக்குக் காரணம்.

வெளிப்படையாக பிரகதி மேலிருந்த கோபத்தைக் காட்டாமல் மன்னிப்பது போல மன்னித்து அவள் என்ன செய்கிறாள் என உளவு பார்த்து மேலுலகம் அனுப்பிவைத்த பிற்பாடு தான் தேவநாதனின் வீட்டில் பிரகதியின் அன்னையின் கையால் வயிறு நிரம்ப சாப்பிட்டான் ஏகலைவன்.

வீட்டுப்பெண்ணைக் கொலை செய்ய சொல்லிவிட்டு அவளின் பெற்றோரின் உபச்சாரத்தை ஏற்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி எல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. சைக்கோபாத்களுக்கு அடுத்தவர்களின் மனதையோ உடலையோ வருத்துவதால் எவ்வித குற்றவுணர்வும்  உண்டாகாது.

அவர்களின் காரியத்தை நிறைவேற்ற யாரை வேண்டுமானாலும் அவர்கள் காயப்படுத்துவார்கள்.

ஏகலைவன் பிரகதியின் கதையை தொழில்முறை கொலைகாரன் முடித்த கையோடு டார்க்வெப்பிலிருந்த அந்த ரெட்ரூமின் இணைப்பை என்றோ ஒருநாள் பிரகதி அவனுக்கு அனுப்பி வைத்த பென்ட்ரைவில் காப்பி செய்து வைத்திருந்தான். கூடவே எலும்புக்கூடு உடைக்காரனின் பயனர் ஐடியிலிருக்கும் புகைப்படத்தின் நகலையும் வைத்திருந்தான்.

தான் அவனிடம் வாங்கிய பணத்துக்கான கணக்கை பென்ட்ரைவ் மூலம் போலியான முகவரியிலிருந்து அனுப்பிவைத்திருந்தாள் அவள். அந்த நியாயமானவள் வேடத்தில் தான் ஏகலைவன் இன்னும் ஏமாந்து தொலைத்தான். அவள் அளித்த பென்ட்ரைவையே அவளுக்குப் பரிசாக கொடுத்துவிட்டான் அவன்.

அதை ஒரு பெட்டியில் வைத்து கிப்ட் ராப் செய்து பிரக்திக்குத் தனது பரிசென தேவநாதனிடம் கொடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்தான்.

அன்று நடந்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்த ஏகலைவனுக்கு வருத்தமெல்லாம் கிஞ்சித்தும் இல்லை. தலைகீழாக நின்றாலும் காவல்துறையினர் தன்னைக் கண்டறியப்போவதில்லை என்ற கர்வம் மட்டுமே அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆட்சி செய்தது.

பிரகதியைக் கொலை செய்வதைக் கூட அருவருப்பான காரியமாக, தனது தகுதிக்குக் குறைவான காரியமாக எண்ணியவனுக்கு இனி கிடைக்கப்போகும் சிறை தண்டனையைப் பற்றி துளி கூட பயமில்லை.

சொல்லப்போனால் மறுநாள் நீதிமன்றத்திற்கு செல்வதைப் பற்றிய கவலையின்றி வெகு நாட்களுக்குப் பின்னர் அன்று நிம்மதியாக உறங்கினான் ஏகலைவன்.