IIN 95

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

2004ல் போலீசுக்கு உதவிய விக்கி ஹட்சசன் என்ற பெண்மணி காவல்துறையினரின் அவசரத்தாலும், தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்லவில்லை என்றால் கொலைவழக்கில் அவரையும் குற்றவாளியாக்கிவிடுவோமென்ற மிரட்டலாலும் தான் மிஸ்கெல்லி, எகோல்சுக்கு எதிராக பாலிகிராப் சோதனையில் பேசியதாகக் கூறினார். 2007ல் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் உடலில் கட்டியிருந்த ஷூ லேஷ்களில் இருந்த தலைமுடி டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது (90களில் இச்சோதனை கிடையாது). அதில் எகோல்ஸ், பால்ட்வின், மிஸ்கெல்லி மூவரது டி.என்.ஏவோடும் அந்த தலைமுடியிலிருந்த டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை. அதற்கு மாறாக அந்த முடி மூன்று சிறுவர்களில் ஒருவனான ஸ்டீவி ப்ராஞ்சின் மாற்றாந்தந்தையான டெர்ரி ஹோப்ஸ் என்பவரின் டி.என்.ஏவோடு ஒத்துப்போனது. அதோடு கொலை நடந்த இடத்தில் கைப்படுத்தப்பட்ட இன்னொரு தலைமுடி டெர்ரி ஹோப்சின் நண்பரின் டி.என்.ஏவோடு ஒத்துப்போனது. டெர்ரி ஹோப்ஸ் தான் கொலை செய்யவில்லை என்று மறுத்தார். ஆனால் இந்த டி.என்.ஏக்களை ஆதாரங்களாக வைத்து எகோல்ஸ், பால்ட்வின் மற்றும் மிஸ்கெல்லி மூவரும் மேல்முறையீடு செய்து தங்களது தரப்பு நியாயத்தைக் கூறினார்கள். கிட்டத்தட்ட பத்தாண்டு சிறை தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்பட்டது. 2011ல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். எகோல்ஸ் 2012ல் The life after death என்ற புத்தகத்தையும், 2014ல் A love story on death row என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டான். இரண்டாவது புத்தகத்தை சிறையில் அவன் சந்தித்த லோரி டேவிட்சன் என்ற பெண் சிறைக்கைதியை மணந்த பிற்பாடு அவளோடு சேர்ந்து எழுதினான்.

                                                           -From Britanica

“இளம்பெண் கொடூரமான முறையில் கொலை – இறந்த உடலைத் துண்டு துண்டாக்கி கந்தக அமிலம் நிரம்பிய இரண்டு கொள்கலன்களில் வீசிய சைக்கோ கொலைகாரன்”

“தாம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் தேவநாதனின் மகள் பிரகதி சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவரை டார்க் வெப் மூலம் ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார். தொழிலதிபரின் தரப்பில் புகாரைத் திரும்ப பெற்றதால் அவ்வழக்கிலிருந்து தப்பித்த பிரகதி யாருக்கும் தெரியாமல் நாட்டை விட்டுத் தப்பியோட முயன்றபோது சைக்கோ கொலைகாரன் ஒருவனால் கொடூரமான முறையில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டார்”

யூடியூபில் ஓடிய செய்திகளைப் பார்த்துவிட்டு நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறிக்கொண்டாள் இதன்யா. முந்தைய தினம் விசாரித்தபோது ஏகலைவன் சொல்ல மறுத்த உண்மை செய்தியாகத் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

பிரகதியின் மீது அவளுக்கு இரக்கம் எல்லாம் வரவில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட மோசடி பேர்வழியாக இருந்தாலும் இத்தகைய கொடூர சாவுக்கு அவர்கள் ஏற்புடையவர்கள் என்று கூற அவள் ஒன்றும் ஏகலைவன் போல சைக்கோபாத் இல்லையே!

மகேந்திரன் வரவும் மொபைலை மேஜையில் கவிழ்த்து வைத்தவள் “இன்னைக்கு நீங்களும் நானும் தான் என்கொயரிய கவனிக்கணும்… சென்னை போலீஸ் கேட்ட டீடெய்ல்ஸ் அண்ட் ரிப்போர்ட்டை அனுப்புறதுல மார்த்தாண்டன் சாரும் முரளி சாரும் பிசி” என்று இருவரையும் காட்டினாள்.

“அந்தாளு நேத்தே நக்கலா பேசுனான்னு மார்த்தாண்டன் சார் சொன்னார்… இன்னைக்கும் அவன் அப்பிடி பேசுனா எனக்கு கோவம் வந்துடும் மேடம்” என்றார் அவர்.

“கோவம் வந்துச்சுனா அவனோட ரெண்டு கையையும் உடைச்சு மாவு கட்டு போட்டு மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்துவோம்” என்றாள் இதன்யா கேலிச்சிரிப்புடன்.

“கிண்டல் பண்ணுறிங்களா மேடம்? இந்த மாதிரி சைக்கோவ அரெஸ்ட் பண்ணுனதும் தூக்குல போடனும்ங்கிற மாதிரி நம்ம நாட்டுல சட்டம் கொண்டு வரணும்” என்று கடுப்புடன் சொன்னவரைத் தன்னோடு விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே ஏகலைவன் மேஜையில் தாளம் போட்டபடி அமர்ந்திருந்தவன் இதன்யாவையும் மகேந்திரனையும் பார்த்ததும் போலியாய் ஆச்சரியம் காட்டி வரவேற்றான்.

“இன்னைக்கு என்கொயரி இருக்காதுனு நான் நினைச்சேன்… நேத்து மேடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லலை… அவங்க ரோசப்பட்டு உண்மைய கண்டுபிடிக்கப் போயிருப்பாங்கனு நினைச்சேன்… ப்ச்… எல்லா நேரத்துலயும் ஏகலைவன் வைக்குற செக் பாயிண்டை அவங்களால உடைச்சிட முடியாதுல்ல”

அவன் கர்வமாகப் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவனுக்கு எதிரே அமர்ந்தாள் இதன்யா.

தனது மொபைலில் ஓடிய செய்தியில் பிரகதியின் உடலில் பாகங்கள் கந்தக அமிலத்தில் கரையாமல் மிச்சமிருப்பதாக செய்தி அறிவிப்பாளர் கூறுவதை ஏகலைவனிடம் காட்டியவள்

“இந்தத் தடவை மர்டர் வெப்பன்சை மறைக்குறதுல நீ பெருசா இண்ட்ரெஸ்ட் காட்டல போல” என்றாள் ஏளனமாக.

ஏகலைவன் புருவத்தை மெச்சுதலாக உயர்த்தியவன் “சோ இதுக்கும் நான் தான் காரணம்னு சொல்லப்போறிங்களா? பை த வே, அவளை நான் தான் கொலை பண்ணுனேன்ங்கிறதுக்கு என்ன ஆதாரம் கிடைச்சிருக்கு? என்னோட ஃபிங்கர் பிரிண்ட்ஸ், டி.என்.ஏ சாம்பிள்ஸ் எனிதிங் எல்ஸ்?” என்று சாமர்த்தியமாகக் கேட்டான்.

இதன்யா நீ சொல்லும் பொய்யில் கொஞ்சம் கூட சுவாரசியமில்லை என்பது போல தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

“அதுல உனக்குப் பங்கு இருக்கா இல்லையானு கண்டுபிடிக்க வேண்டியது என் வேலை இல்ல… சென்னைல இருக்குற இன்ஸ்பெக்டரோட வேலை… என் வேலை நீ இனியாவை கொலை பண்ணுனதோட சேர்த்து நிறைய மனுசங்களை மிரட்டி உன் கட்டுப்பாட்டுல வச்சு இந்தக் கேசை குழப்ப பாத்திருக்க… அதுக்கான வாக்குமூலத்தை உன் கிட்ட இருந்து வாங்கி உன்னை கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணி தண்டனை வாங்கி தர்றது தான்… இப்ப அந்த வேலையைத் தான் பாக்கப்போறேன்.. சோ நேத்து விட்ட இடத்துல இருந்தே ஆரம்பிக்கலாம்… எதுக்காக கலிங்கராஜனை ஆள் வச்சு மிரட்டுன? அவங்க பசங்களைக் கடத்த சொன்ன?”

ஏகலைவன் இதன்யாவைக் கை காட்டினான்.

“அதுக்கு நீங்க தான் காரணம்… நீங்க கேசை ரீ-ஓப்பன் பண்ணுறதுக்கான முயற்சில இறங்கியிருந்திங்க… அதைத் தடுக்க என்ன வழினு யோசிச்சேன்… கேசை ரீ-ஓப்பன் பண்ண இரத்தச்சொந்தம், இல்லனா ஹஸ்பெண்ட் தான் பெட்டிஷன் போடணும்… கலிங்கராஜன் கிட்ட நீங்க அது சம்பந்தமா பேசுனா எனக்கு ஆபத்து… அதனால தான் அவரை என் ஆளுங்களை வச்சு மிரட்டுனேன்… உங்க கூட அவரோட பசங்க பேசக்கூடாது, உங்களைக் காண்டாக்ட் பண்ணக்கூடாதுனு நான் தான் ஆர்டர் மிரட்ட சொன்னேன்… பாவம் அந்த மனுசன், பயந்து ஓடிட்டார்… பட் நீங்க அந்த மனுசன் மனசை மாத்தி கேசை ரீ-ஓப்பன் பண்ண வச்சிங்க… அதனால தான் அவரோட பசங்களை சம்மர் கேம்ப் போன இடத்துல கடத்தச் சொன்னேன்… அவங்களை வேற எதுவும் பண்ணுற ஐடியா எனக்கு இல்ல… பாவம், ஒரு பொண்ணை இழந்த துக்கம் அவருக்குப் போதும்னு  பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்”

இதன்யா அவனிடம் கேட்க நினைத்த சந்தேகங்கள் அனைத்தையும்  கேட்டுவிட்டதாக நினைத்தவள் திடீரென நினைவு வந்தவளாக “ரசூல் பாய் வீட்டுக்கு விஷம் கலந்த சாப்பாட்டை அனுப்பி வச்சது எதுக்காக? அந்தக் கொலைமுயற்சிய யார் கணக்குல எழுதுறது?” என்று புருவங்கள் நெறிய கேட்டாள்.

அன்றைய தினம் அஸ்மத்தும் எவ்வளவு துடித்தார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தவள் அல்லவா!

ஏகலைவன் மறுப்பாகத் தலையசைத்தவன் “இப்ப வரைக்கும் எனக்கு ரசூல் பாய் மேல எந்த விரோதமும் கிடையாது… பாம்பும் தேளும் உலாவுற காட்டுல அப்பாவியா தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்குற பிள்ளைப்பூச்சி அவர்…. அந்தப் பிள்ளைப்பூச்சியால சில நேரங்கள்ல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் கொல்லுற அளவுக்கு அவர் ஒர்த் இல்ல இதன்யா மேடம்” என்றான் அவன்.

இவ்வளவு தூரம் வந்த பிறகு நான் ஏன் பொய் சொல்லப்போகிறேன் என்ற ரீதியில் தோளைக் குலுக்கிக்கொண்டான் அவன்.

அவன் செய்த குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டபோது அவனுக்குள் ஒரு திமிர் இருந்தது. ரசூல் பாய் விவகாரத்தைப் பேசுகையில் அந்தத் திமிர் மிஸ்சிங். எனவே ரசூல் பாய் விவகாரத்தில் வேறு யாருடைய தலையீடோ இருக்கிறதென ஊகித்துக்கொண்டாள் இதன்யா.

அடுத்தக் கேள்வி அவளது விசாரணைக்கு அப்பாற்பட்ட கேள்வி. ஆனால் ஏகலைவன் செய்த குற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படை காரணமாக இருந்தவளைப் பற்றி விபரங்கள் கேட்க வேண்டியதும் விசாரணையின் ஒரு பகுதி என்பதால் இதன்யா பிரகதியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.

“லுக்! உனக்குள்ள அமைதியா இருந்த சைக்கோபதிய தூண்டிவிட்டவ பிரகதி… அவளுக்குத் தண்டனை குடுத்துட்டேன்னு நீ என் கிட்ட குகையில வச்சு சொன்ன… இப்ப அவளோட கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பேசுற… உண்மைய சொல்லு… பிரகதிய கொலை பண்ணி அவ உடம்பை துண்டு துண்டா வெட்டி சல்ஃபியூரிக் ஆசிட்ல போட்டவன் நீ தானே?”

ஏகலைவன் மெதுவாகச் சீட்டியடித்தான். மகேந்திரன் அதில் எரிச்சலுற்றார்.

“ஏய்! ஜாலியா விசில் அடிச்சு என்ஜாய் பண்ணுறதுக்கு உன்னை இங்க மறுவீட்டுக்கு அழைச்சிட்டு வரல… நீ ஒரு அக்யூஸ்ட்… உன்னை இன்ட்ராகேட் பண்ணிட்டிருக்கோம்… அதை மனசுல வச்சு மரியாதையா பிஹேவ் பண்ணு” என்றார் அவர் அடக்கப்பட்ட கோபத்தோடு.

ஏகலைவன் அவரது எச்சரிக்கையை மருந்துக்குக் கூட மதித்தான் இல்லை. அதே தெனாவட்டுடன் “இங்க பாருங்க மேடம், அவளுக்கு நான் தண்டனை குடுத்ததா சொன்னது என்னவோ உண்மை தான்… ஆக்சுவலா அது ஒரு மெட்டஃபர்… அவளை நான் மன்னிச்சு விட்டுட்டேன்… அதுக்கு ஆதாரமா அவங்கப்பா கிட்ட நான் குடுத்த கிப்ட் பாக்ஸ் இருக்கு… வேணும்னா அவர் கிட்ட விசாரிச்சு வாங்கி பாருங்க… தேவையில்லாத பிரச்சனைல என் பேரை இழுத்துவிடாதிங்க” என்றான்.

தொடர்ந்து “அவளுக்கு நான் அனுப்புன பணம் மட்டும் எழுபது லட்சம்… அதை வசூல் பண்ண விருப்பமில்லாம அந்தக் கேஸையே வாபஸ் வாங்குனவன் நான்… என்னை ஏமாத்துன யாரையும் நான் சும்மா விட்டது இல்ல… அவளுக்கான தண்டனைய மன்னிப்பா நான் குடுத்துட்டேன்… நான் அவளைக் கொலை பண்ணல” என்றான் அவன்.

இனியாவின் மரணம் குறித்த அனைத்து உண்மைகளையும் அவனிடமிருந்து வாங்கியாயிற்று. இனி ஏகலைவனை மாஜிஸ்திரேட் முன்னே ஆஜர் படுத்தி தண்டனை வாங்கி தருவது மட்டுமே பாக்கி!

இருப்பினும் ஏகலைவன் தன்னைக் கொலை செய்ய முயன்றதற்கான காரணம் இப்போது வரை இதன்யாவுக்குப் புரியவில்லை. அதை மட்டும் விட்டு வைப்பானேன்? கேட்டுவிடுவோமென என்னை ஏன் கொலை செய்ய முயன்றாய் என்று கேட்டாள் அவள்.

ஏகலைவன் ஒரு வினாடி அவளது வதனத்தை குறுகுறுவென பார்த்தவன் “இனியாக்கு அப்புறம் நீங்க என் கண்ணுக்குத் தேவாவா தெரிஞ்சிங்க… உங்களை பாக்குறப்ப என்னையறியாம தேவாவோட முகம் என் மனசுக்குள்ள வந்துட்டுப் போகும்… அவளுக்கும் இதே தைரியம், முகத்துக்கு நேரா உண்மைய பேசுற குணம், முக்கியமா எதிர்ல நிக்குறவங்களைக் கண்ணாலயே எரிக்குற பார்வை… ப்ச்… மறுபடியும் தடுமாறிட்டேன்… எப்ப நான் ஏமாந்துட்டேன்னு எனக்குப் புரிஞ்சுது தெரியுமா? போலீஸ் ஸ்டேசன் முன்னாடி அந்த ஆளை நீங்க ஹக் பண்ணுனப்ப” என்கையிலேயே அவன் முகம் இறுகிப்போனது.

இதன்யா நிதானமாக “ஹீ இஸ் மை ஹஸ்பெண்ட்… எங்களுக்குக் கல்யாணமாகி ஃபைவ் இயர்ஸ் ஆகுது… அதுவும் லவ் மேரேஜ்… ஒரு மேரீட் விமனை நீ எப்பிடி உன்னோட காதலிங்கிற கண்ணோட்டத்துல பாக்கலாம்? கலாச்சாரரீதியாவும் ஒழுக்கவிழுமியப்படியும் நீ என்னை அந்தக் கோணத்துல பார்த்தது தப்பு… நியாயப்படி நீ என் கிட்ட மன்னிப்பு கேக்கணுமே தவிர என்னைக் கொலை பண்ண நினைச்சிருக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவள் “எங்க தரப்பு விசாரணை முடிஞ்சுது… உன்னால இதுக்கு மேல தப்பிக்க முடியாது… ஜெயில் காலத்தை ஒரு அப்பாவிப்பொண்ணைக் கொன்னுட்டோம்ங்கிற குற்றவுணர்ச்சியோட கழிக்க வாழ்த்துக்கள்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக ஏகலைவனின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு மகேந்திரனோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

சிறப்பு விசாரணைக்குழுவின் அலுவலக அறைக்கு வந்தவளின் மனபாரம் இறங்கியது போன்ற உணர்வு!

ஏகலைவன் தேவநாதனிடம் பிரகதிக்காக கொடுத்த பரிசு என்ன என்பதை உடனடியாக சென்னை காவல்நிலைய ஆய்வாளரிடம் சொல்லவேண்டும் என்பது புத்தியில் உறைக்க உடனே காவல் நிலைய எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ  இதன்யா வாசுதேவன் ஃப்ரம் பொன்மலை”

“சொல்லுங்க மேடம்… ஏகலைவன் பிரகதிய கொலை பண்ணுனதை ஒத்துக்கிட்டானா?” என்று பரபரப்பானார் ஆய்வாளர்.

“சார் இப்பவும் அவன் ஒத்துக்கல… பட் ஒரு க்ளூ குடுத்தான்… மிஸ்டர் தேவநாதன் கிட்ட பிரகதிக்கான கிப்ட்னு ஒரு பாக்சை குடுத்தானாம்… அதை ஓப்பன் பண்ணி பாக்கச் சொன்னான்…. ஆனா அவளை கொல்லலங்கிறதுல தீர்மானமா இருக்கான்”

“லை டிடெக்டிங் டெஸ்ட் எடுத்துடலாமா?”

“ஆல்ரெடி இனியா கேஸ்ல ஒரு லை டிடெக்டிங் டெஸ்ட் எடுத்ததுல பாதிக்குப் பாதி உண்மை தான் தெரிய வந்துச்சு… இத்தனைக்கும் அக்யூஸ்ட் ஒரு டிப்ரசன் பேசண்ட்… இருந்தாலும் மனவுறுதியோட பொய் சொல்லிருக்கான்… லை டிடெக்டிங் டெஸ்டை மட்டுமே நம்பி கேசை கொண்டு போறதுல எனக்கு உடன்பாடு இல்ல… எதுக்கும் நீங்க அந்த கிப்ட் என்னனு தேவநாதன் கிட்ட விசாரிங்க… நாளைக்கு நாங்க ஏகலைவனை கோர்ட்ல ப்ரடியூஸ் பண்ணப்போறோம்… இதுக்கு மேல பிரகதி கேஸ்ல நாங்க ஏகலைவனை விசாரிக்குறதுக்கு எதுவும் இல்ல சார்… தேங்க்யூ”

இதன்யா அழைப்பைத் துண்டித்துவிட்டு ஏகலைவனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான வேலைகளில் ஆழ்ந்துவிட்டாள்.

அதே நேரம் சென்னையில் பிரகதியின் வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் தேவநாதனிடம் ஏகலைவன் பிரகதிக்காக கொடுத்த பரிசைக் காவல்நிலையத்துக்குக் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

“முக்கியமா அதை பிரிச்சிடாம அப்பிடியே கொண்டு வாங்க” என்று கட்டளையிட்டார்.

தேவநாதனும் அடித்துப் பிடித்து அந்தப் பரிசுப்பெட்டியைத் தேடியெடுத்து காவல்நிலையத்துக்கு ஓடினார்.

காவல் ஆய்வாளர் அதை பிரித்துப் பார்த்தால் அதில் இருந்ததோ பென்டிரைவ் ஒன்று! அதைப் பார்த்ததும் திகைத்த தேவநாதன் “இது என் பொண்ணோட பென்டிரைவ் சார்” என்றார் வேதனையோடு. அந்தப் பென்டிரைவில் மறைந்திருக்கும் இரகசியம் என்ன? பிரகதியின் மரணத்திலுள்ள முடிச்சை அவிழ்க்குமா அந்த பென்ட்ரைவ்?