IIN 94

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

விக்கி ஹட்சசன் காவல்துறையினருக்கு உதவ முன்வந்தார். அதன் அடிப்படையில் சாத்தான் வழிபாடு நடக்கும் இடத்திற்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து அதில் சந்தேகப்படும்படியான நடத்தை கொண்ட மிஸ்கெல்லி என்ற பதினேழு வயது இளைஞனின் பெயரைக் குறிப்பிட்டார். மிஸ்கெல்லி, எகோல்ஸ் இருவரும் கலந்துகொண்ட சாத்தான் வழிபாடு கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டு அங்கே நடந்தவற்றை காவல்துறையினரிடம் கூறியுள்ளார். கூடவே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனையான பாலிக்ராப் டெஸ்டும் நடந்துள்ளது. அதன் மூலம் காவல்துறையினர் மிஸ்கெல்லியை விசாரிக்க ஆரம்பித்தார்கள். முதலில் குற்றத்தின் தன் பங்கு இல்லை என மறுத்தாலும் பின்னர் தனது பங்கு என்ன என்பதை விவரித்தான். அந்த மூன்று சிறுவர்களையும் மறைத்து வைக்க அவன் உதவியுள்ளான். ஆனால் எகோல்சும், பதினாறு வயதான ஜேசன் பால்ட்வின்னும் தான் அச்சிறுவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தார்கள் என்ற உண்மையைச் சொல்லிவிட்டான். இந்த மூவரும் ஜூன் 1993ல் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நேரடி ஆதாரங்களும் இல்லை. கூடவே மூவருக்கும் பலமான அலிபிகள் வேறு இருந்தன. மிஸ்கெல்லி என்பவன் தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி சொல்லியுள்ளான். முதலில் அச்சிறுவர்கள் பாலியல்ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கயிறினால் கட்டப்பட்டார்கள் என்றான். ஆனால் உண்மையில் சிறுவர்கள் ஷூ லேஷினால் கட்டப்பட்டிருந்தார்கள். மிஸ்கெல்லி குழப்பத்தில் உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்க 1994 பிப்ரவரியில் அவனுக்கு பரோலற்ற ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எகோல்ஸ் தான் அக்குழுவின் தலைவன் போல செயல்பட்டுள்ளான். அவனும் பால்ட்வின்னும் சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்ஸ் அடிப்படையிலேயே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். எகோல்ஸ் சாப்ட்பால் விளையாட்டின் போது அச்சிறுவர்களைக் கொலை செய்ததைப் பற்றி பேசியதை இரண்டு பெண்கள் கேட்டு காவல்துறையில் சாட்சி சொன்னார்கள். குற்றத்தைத் தன் வாயால் ஒப்புக்கொண்ட எகோல்சுக்கு மார்ச் 1994ல் மரண தண்டனை வழங்கப்பட்டது. பால்ட்வின்னுக்கு பரோலற்ற ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

                                                           -From Britanica

“கிளாராவை மாட்டி விட்டதுக்கு அப்புறம் இந்தக் கேஸ் முடிஞ்சிடும்னு நினைச்சேன்… ஆனா நீங்க மறுபடியும் இங்க வந்திங்க… அப்ப கூட நான் அதை சீரியசா எடுத்துக்கல… சஸ்பென்சன் முடியுற வரைக்கும் இங்க தங்கி கிளம்பிப் போயிடுவிங்கனு நினைச்சேன்… பிரச்சனை மறுபடியும் ஆரம்பிச்சுது… முடிஞ்ச கேஸை கலிங்கராஜனை பெட்டிசன் போட வச்சு நீங்க ரீ-ஓப்பன் பண்ண வச்சிங்க… உங்க மேல தப்பில்லனு ப்ரூவ் பண்ணுறதுக்கான வேலைகள்ல இறங்குனிங்க… அதுக்கு முன்ஜாக்கிரதையா தான் என்னோட மேனேஜரை இந்தக் கேஸ்ல சரண்டர் ஆக வச்சேன்… என் லாயரை வச்சு ஸ்ரீயையும் பொய் சொல்ல வச்சேன்… அதுல வகையா வந்து மாட்டுனவ பிரகதி… உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் தேவசேனாவோட சித்தி பொண்ணு, அவ ஆத்மா இப்ப என் கிட்ட தான் இருக்குனு பிரகதி சொன்னப்ப துளி கூட எனக்குச் சந்தேகம் வரல… அப்பிடியே நம்புனேன்… கடைசியா பேசுனப்ப கூட பணம் கேட்டா… ஏன் எதுக்குனு கேள்வி கேக்காம குடுத்தேன்… எல்லாம் யாருக்காக? தேவசேனாங்கிற ஒரே ஒரு பேருக்காக… என் நம்பிக்கைய சிதைச்சு எனக்கு ஏமாற்றம் குடுத்தவங்க யாரா இருந்தாலும் அவங்களை நான் சும்மா விடமாட்டேன்… அப்ப பிரகதிய மட்டும் சும்மா விட்டா எனக்கு அது அசிங்கம்ல?”

இறுகிய குரலில் சொல்லிவிட்டு உதட்டைக் கோணலாக்கிச் சிரித்தவன் “அவளுக்குக் குடுக்க வேண்டிய பனிஷ்மெண்டை சிறப்பா குடுத்துட்டுத் தான் சென்னையில இருந்து ஊருக்குத் திரும்புனேன்… எல்லாத்தையும் யோசிச்ச நான் கோட்டை விட்ட இடம் ஃபாதர் பவுல்” என்ற போது அவன் முகம் கொடூரமாக மாறியது.

இதன்யா பிரகதியைப் பற்றி விசாரிக்க நினைக்கையில் ஏகலைவன் பாதிரியார் பவுலைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

“அவரை மாதிரி ஆளுங்க என்னைக்கு இருந்தாலும் என்னைக் காட்டிக் குடுப்பாங்கங்கிறதால தான் ரோஷணோட சட்டைய என் பொறுப்புல வச்சிருந்தேன்… கிளாரா மூலமா கேஸ் முடிவுக்கு வந்தாச்சுங்கிற சிச்சுவேசன்ல தான் சட்டைய அவர் கிட்ட குடுத்தேன்…  என் கிட்ட இருந்த கடைசி துருப்புச்சீட்டு போனதும் அவருக்கு வால் முளைச்சிடுச்சு… உங்ககிட்ட உண்மைய சொல்லி தானும் மாட்டி என்னையும் சிக்க வச்சுட்டார்” என்றான் கடுப்போடு.

இதன்யா இப்போது குறுக்கிட்டாள்.

“அவர் அப்பவும் உன்னைக் காட்டிக் குடுக்கல… அவர் கிட்ட இருந்து நாங்க கைப்பற்றுன மர்டர் வெப்பன்ல இனியாவோட போன் ரெசிடியூ இருந்துச்சு… ஃபிங்கர் பிரிண்ட்ஸும் நீ மாட்டுனதுக்கு முக்கியக் காரணம்… இப்ப அதை விடு… எதுக்காக என்னைக் கொலை பண்ண செட் பண்ணுன ஆளுங்களை வச்சு கலிங்கராஜனை மிரட்டுன? எதுக்காக அவரோட பசங்களை அதே ஆளுங்களை வச்சு கடத்துன? நீ அதை செய்யலனு சொல்லாத… கொடைக்கானல்ல இருந்து இன்ஸ்பெக்டர் சுனில் எல்லா விவரத்தையும் ஃபேக்ஸ் பண்ணிட்டார்.. நீ தான் காசுக்குக் கொலை பண்ணுற ஆளுங்களை வச்சு கலிங்கராஜனோட பசங்களைக் கடத்தச் சொல்லிருக்க”

ஏகலைவன் கரங்களைக் கோர்த்து மேசையின் மீது வைத்தவன் “எல்லாத்தையும் யோசிச்சு சரியா கண்டுபிடிக்கிற ஆளு நீங்க… உங்களுக்குத் தெரியாதா ஏன்னு?” என்று திமிராகக் கேட்டவன் மீண்டும் தண்ணீரை அருந்தினான்.

இதன்யா அவனை முறைத்தவள் முரளிதரனின் காதில் ஏதோ கூறினாள். தலையாட்டியவர் அவன் தண்ணீர் குடித்து முடித்ததும் “பிரகதிய என்ன பண்ணுன ஏகலைவன்?” என்று கேட்க மர்மப்புன்னகை ஒன்று அவன் இதழில் வந்து அமர்ந்தது.

அவனது விழிகள் கிறக்கமாகச் சொக்கின. கொட்டாவியை விட்டுக் கொண்டவன்

“காயம் ஆறுறதுக்கு டேப்ளட் போடச் சொல்லிருக்காங்க சார்… அது போக ரெகுலரா நான் போடுற டேப்ளட் எனக்கு கிறக்கத்தை உண்டாக்கும்.. இந்த நேரத்துல நீங்க என்கொயரி பண்ணுனா உங்களுக்கு எந்த யூஸ்புல்லான இன்ஃபர்மேசனும் கிடைக்காது… ஐ ஹோப் யூ ஆல் அண்டர்ஸ்டாண்ட்” என்றவனை முறைத்தபடி மூவரும் எழுந்தார்கள்.

அவன் பொய் சொல்லவில்லை. அறுவை சிகிச்சை காயங்கள் ஆறுவதற்காக அவனுக்கு வீரியமான மருந்துகள் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதை மருத்துவரும் உறுதிபடுத்தியிருந்தார். அது அவனுக்கு உறக்கத்தை உண்டாக்கும். இந்நேரத்தில் அவனிடம் விசாரிப்பது எந்த உருப்படியான தகவலும் கிடைக்காது.

எழுந்தவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்ள “அட இன்னும் நீங்க கிளம்பலையா? நான் தப்பிச்சிடுவேன்னு பயப்படுறிங்களா? அதான் காலை முடமாக்கி வீல்சேர்ல உக்கார வச்சிட்டிங்களே… இனிமே எங்க தப்பிக்கிறது?” என்று அவன் ஏளனமாகச் சொல்லவும் முறைத்தபடி வெளியேறினார்கள்.

வெளியே வந்ததும் “இவன் பிரகதிய என்ன பண்ணுனான்னு சொல்லமாட்டேங்குறானே… கல்லுளி மங்கன்” என்று மார்த்தாண்டன் ஏகலைவனைத் திட்டியபடி விசாரணை குழுவின் அலுவலக அறைக்குள் மற்ற இருவருடன் சென்றார்.

இதன்யா அங்கே சென்றதும் முதல் வேலையாக சென்னையில் பிரகதியின் வழக்கு எந்நிலையில் உள்ளது என்பதைக் கேட்க தேவநாதன் புகாரளித்த காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தாள்.

அந்தக் காவல் ஆய்வாளரோ அன்றைய தினம் பிரகதி விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்றார்.

“நாங்க ஏர்போர்ட் சி.சி.டி.வி ஃபூட்டேஜ் செக் பண்ணிட்டோம்… அதுல பிரகதி ஏர்போர்ட்டுக்கு வந்த அடையாளமே இல்ல… அவங்க நேம் நேம் பேசஞ்சர் லிஸ்டுலயும் இல்ல… அந்தப் பொண்ணுக்கு ஏர்போர்ட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே ஏதோ நடந்திருக்கு.. அவங்க மொபைல் கடைசியா சிக்னல் காட்டுன இடத்துல சந்தேகப்படும்படியா யாரும் இருக்காங்களானு விசாரிச்சு அவங்க ப்ரீமிசசை செக் பண்ணிட்டிருக்கோம்”

“அவ மொபைல் சிக்னல் கடைசியா எந்த ஏரியால கட் ஆச்சு?”

“மடிப்பாக்கம் மேடம்… அங்க எல்லா இடத்தையும் செக் பண்ணிட்டிருக்கோம்… கூடிய சீக்கிரம் பிரகதிய பத்தி தகவல் கிடைக்கும்னு நம்புறோம்”

காவல் ஆய்வாளரிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் முரளிதரனிடம் அத்தகவலைப் பகிர்ந்து கொண்டாள்.

“பிரகதிய ஏகலைவன் கொலை பண்ணிட்டான்னு அன்னைக்குக் கோவத்துல சொன்னான்… இன்னைக்கும் இலைமறை காயா ஒத்துக்கிட்டான்.. பட் அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு மேடம்? அவன் வாய்வார்த்தையா அதை ஒத்துக்கிட்டு வாக்குமூலம் குடுக்காத வரைக்கும் நம்மளால சென்னை போலீசுக்கு எந்தத் தகவலும் குடுக்க முடியாது… அவங்க சொன்ன ஏரியால ஏகலைவனுக்கு வேண்டியவங்க, அவனோட தொழில்முறை ஃப்ரெண்ட்ஸ் யாரும் இருக்காங்களானு தெரிஞ்சுதுனா நம்மளால டீடெய்ல்ஸ் எதுவும் கலெக்ட் முடியும்” என்றார் அவர்.

ஏகலைவனின் சென்னை வாழ்க்கை பற்றி யாருக்குத் தெரியும்? யோசித்த இதன்யாவுக்கு உடனடியாக நிஷாந்தின் நினைவு வந்தது.

“சார் நிஷாந்த் கிட்ட விசாரிச்சுப் பாக்கலாம்… அவனுக்குக் கட்டாயம் இது பத்தி தெரிஞ்சிருக்கும்”

இதன்யா சொன்னதோடு நிற்காமல் நிஷாந்தின் மொபைல் எண்ணுக்கு அழைத்தாள். அவன் என்னவோ ஏதோ என பதறியடித்து அழைப்பை ஏற்றான்.

“மேடம் எதுவும் பிரச்சனையா? அந்தாளு தப்பிச்சிட்டாரா?” என்று படபடத்தவனை முதலில் அமைதியாகுமாறு கேட்டுக்கொண்டாள் அவள்.

அவன் அமைதியானதும் “ஏகலைவனுக்குச் சென்னையில வேண்டுனவங்க யாரும் இருக்காங்களா? குறிப்பா மடிப்பாக்கம் ஏரியால?” என்று விசாரித்தாள் அவள்.

மறுமுனையில் நிஷாந்த் கொஞ்சம் யோசித்தான்.

“மடிப்பாக்கமா? ம்ம்ம்” என்று மெதுவாய் முணுமுணுத்தவன் திடீரென சுதாரிப்பான குரலில் “மடிப்பாக்கத்துல ஒரு பங்களா விலைக்கு வருது அதை வாங்கலாம்னு இருக்கேன், வில்லங்கம் எதுவும் இருக்குதானு விசாரிச்சு சொல்லுங்கனு லாயர் கிட்ட மாமா பேசுனதை நான் கேட்டேன் மேடம்… லாயர் மனுவேந்தனோட ஜூனியர் தான் மாமாவோட சொத்து விவகாரங்களைப் பாத்துக்கிறார்… அவர் கிட்ட விசாரிச்சா தெரியும்”

“அவரோட கான்டாக்ட் டீடெய்ல்ஸ் கிடைக்குமா நிஷாந்த்?”

“மனுவேந்தன் சாரோட மொபைல் நம்பர் எனக்குத் தெரியும் மேடம்… நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணுறேன்”

நிஷாந்த் அழைப்பைத் துண்டித்துவிட்டு வாட்சப்பில் மனுவேந்தனின் எண்ணை அனுப்பிவைத்தான்.

இதன்யா காலம் தாழ்த்தாமல் உடனடியாக மனுவேந்தனைத் தொடர்பு கொண்டாள்.

“ஹலோ”

“நான் இதன்யா வாசுதேவன் பேசுறேன் லாயர் சார்”

மனுவேந்தனின் குரல் அதிருப்தியாய் ஒலித்தது.

“என்ன விசயம்? ஏகலைவன் சாருக்கு விசாரணைல எதுவும் பிரச்சனையா? அப்பிடி அவருக்குப் பிரச்சனை எதுவும் வந்துச்சுனா நான் உங்க யாரையும் சும்மா விடமாட்டேன்” என்று வாங்கிய ஃபீசுக்கு மேலாக விசுவாசம் காட்டினார் அவர்.

இதன்யா பொறுமையை வரவழைத்துக்கொண்டாள்.

“சார் சார்! முதல்ல பொறுமையா நான் சொல்ல வர்றதை கேளுங்க… அப்புறமா உங்க விசுவாசத்தைக் காட்டுங்க” என்று அவள் சொல்லவும் அமைதியானார் மனுவேந்தன்.

“சொல்லுங்க… எதுக்காக கால் பண்ணுனிங்க?

“ஏகலைவன் மடிப்பாக்கத்துல ஒரு பங்களாவ வாங்கணும்னு உங்க கிட்ட பேசிருக்கார்… அந்தப் பங்களாவ அவர் வாங்குனாரா? அப்பிடி வாங்கியிருந்தார்னா அந்த பங்களாவோட அட்ரஸ் சொல்ல முடியுமா?”

மனுவேந்தன் அசட்டையாய் உச்சுக் கொட்டிவிட்டு தன் ஜூனியரிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.

 அவரது பேச்சுமுறையில் இதன்யாவுக்குக் கடுப்பேறினாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் சீக்கிரம் கேட்டுச் சொல்லும்படி அழுத்தமாகக் கூறினாள்.

“இன்னொரு தடவை ஏகலைவனைத் தப்ப வைக்க நீங்க ட்ரை பண்ண மாட்டிங்கனு நம்புறேன்” என்று எச்சரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் மனுவேந்தன் மீண்டும் அழைத்தார். அழைத்தவர் முன்பு போல் அலட்சியம் காட்டாமல் தன் ஜூனியர் சொன்ன தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

“ஏகலைவன் சார் மடிப்பாக்கத்துல ஏழு கோடிக்கு அந்த ப்ராப்பர்ட்டிய வாங்கிருக்கார் மேடம்… கிட்டத்தட்ட எட்டு மாசத்துக்கு முன்னாடி… அட்ரஸ் நோட் பண்ணிக்கிறிங்களா?“ என்று பவ்வியமாக முகவரியைப் பகிர்ந்து கொண்டார்.

“தேங்க்யூ” தன் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் நன்றி சொன்ன இதன்யா அழைப்பைத் துண்டித்தாள்.

உடனடியாக சென்னையிலுள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து ஏகலைவனின் மடிப்பாக்கம் பங்களாவுடைய முகவரியைக் கூறினாள்.

“உங்களுக்கு எதுவும் க்ளூ கிடைச்சா ஷேர் பண்ணுங்க சார்” என்று கேட்டுக்கொண்டாள்.

“கண்டிப்பா மேடம்… இன்னும் ஒன் ஹவர்ல நான் உங்களை காண்டாக்ட் பண்ணுறேன்” என்ற ஆய்வாளர் அழைப்பைத் துண்டித்தார்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் இதன்யா முரளிதரனிடம் தகவலைப் பகிர்ந்துகொண்டாள்.

சென்னை காவல் நிலையத்தில் ஆய்வாளர் மடிப்பாக்கம் பங்களாவை சோதனையிட சில காவலர்களுடன் கிளம்பினார்.

பிரகதி காணாமல் போனதில் ஏகலைவனின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் காவல் ஆய்வாளருக்கு இருந்தது. எனவே எப்போது வேண்டுமானாலும் ஏகலைவனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனையிட ஆணையொன்றை வாங்கியிருந்தார்.

அதைப் பயன்படுத்தி பங்களாவைச் சோதனையிடக் கிளம்பினார்.

ஏகலைவனின் பங்களா காவலரிடம் சொல்லி பங்களாவுக்குள் நுழைந்தவர்கள் அவரிடம் ஏகலைவன் கடைசியாக எப்போது இந்த பங்களாவுக்கு வந்தான் என விசாரித்தார்கள்.

“சார் இங்க அடிக்கடி வரமாட்டார்… நான் ஒரு மாசமா லீவ் சார்… நேத்து தான் டியூட்டில ஜாயின் பண்ணுனேன்… இடையில சார் வந்தாரானு எனக்குத் தெரியாது… இங்க சி.சி.டி.வியும் இன்ஸ்டால் பண்ணல” என்றார் அவர்.

பின்னர் காவல் ஆய்வாளரோடு சில கான்ஸ்டபிள்களும் சேர்ந்து பங்களாவைச் சோதனையிட ஆரம்பித்தார்கள்.

வீட்டின் காவலர் ஒவ்வொரு அறையாகத் திறந்து காண்பித்தார். கடைசியாக  வேண்டாத பொருட்களைப் போட்டு வைக்கும் அறை வந்தது. அந்த அறைக்கதவைத் திறந்து பார்த்ததும் அவ்வறைக்குள் பெரிதாய் இரண்டு இரும்பு ட்ரம்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஒருவித விரும்பத்தகாத நெடி அந்த அறைக்குள் வீசியது.

உள்ளே நுழைந்து விளக்கை போட்ட ஆய்வாளர் அங்கே கிடந்த பொருட்களைப் பார்த்தது அதிர்ந்து போனார்.

ஏனென்றால் ஒரு ரோலர் சூட்கேஸ் அனாதையாக கிடந்தது. தரையில் இரத்தம் காய்ந்த தடம். சமையல் மேடை போல பெரிய மேடை ஒன்றில் சில ஆயுதங்கள் கிடந்தன. பெரிய மரங்களை அறுக்கப் பயன்படும் அறுவை இயந்திரம் ஒன்றும் அங்கே வைக்கப்பட்டிருந்தது.

காவல் ஆய்வாளர் ட்ரமை திறந்து பார்த்ததும் உள்ளே இருந்து மோசமான வாடை வீச கான்ஸ்டபிள் ஒருவர் அந்த நெடி தாங்காமல் வாந்தி எடுக்க வெளியே ஓடினார்.

அடுத்த சில நிமிடங்களில் கூடுதல் காவலர்கள், தடயவியல் ஆய்வாளர்கள் கூட்டத்தோடு தேவநாதனும் அங்கே இருந்தார்.

அவரிடம் ரோலர் சூட்கேசைக் காட்டி “இது உங்க பொண்ணோடதா?” என்று கேட்க தேவநாதனோ அதிர்ச்சியில் கண்ணிமைக்காமல் அதைப் பார்த்தார்.

அடுத்த சில நொடிகளில் “ஐயோ பிரகதிம்மா” என்று தலையிலடித்து அழ ஆரம்பித்தார் தேவநாதன். தவறு செய்த மகளை திருத்தி நல்வழிப்படுத்தாத தந்தை அன்று மகளின் இறந்த உடலை முழுமையாகக் காணக்கூட வழியற்ற பாவியாகிப்போனார்.