IIN 93

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

1993, மே 3ல் எட்டு வயது சிறுவர்களான கிறிஸ்டோபர் பையர்ஸ், மிக்கேல் மூரே, ஸ்டீவி ப்ராஞ்ச் என்ற மூவரும் வெஸ்ட் மெம்பிஸ்கு சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார்கள். அன்று மாலை மூவரின் பெற்றோரும் சிறுவர்களைக் காணவில்லை என்று காவல்துறையில் புகாரளித்துள்ளார்கள். அடுத்த நாள் காவல்துறையினர் அச்சிறுவர்களின் உடையற்ற உடல்களை ராபின் ஹுட் ஹில்ஸ் எனப்படும் மலைப்பகுதியிலுள்ள வடிகால் பள்ளத்தில் கண்டெடுத்தார்கள். அச்சிறுவர்கள் மூவரும் அடித்து துன்புறுத்தப்பட்டு ஊனப்படுத்தப்பட்டது அடாப்சியில் தெரியவந்தது. காவல்துறையினர் இது சாத்தான் வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட கொலை என நம்பினார்கள். உடனே அவர்கள் செய்தது தன்னைத் தானே சாத்தானிஷ்டாகச் சொல்லிக்கொள்ளும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதினெட்டு வயதான டேமியன் எகோல்ஸ் என்பவனை விசாரித்தது தான். அவனுக்குப் போதைமருந்து பழக்கம், மன அழுத்தம், மனரீதியான பிரச்சனைகள் உண்டு என்பது அவனை விசாரிக்கும்போது தெரியவந்தது. ஆனால் அவன் அச்சிறுவர்களைத் தெரியாது என்று மறுத்துவிட்டான். அச்சமயத்தில் தான் விக்கி ஹட்சசன் என்ற பெண்மணியின் எட்டு வயது மகன் அந்த மூன்று சிறுவர்களின் கொலையையும் பார்த்ததாகவும், ஆனால் அவனால் கொலைகாரர்களின் முகங்களை நினைவுகூர முடியவில்லை என்றும் காவல்துறையில் தெரிவித்தார்.

                                                           -From Britanica

“என்னைப் பாத்தா உங்களுக்கு ஆச்சரியமா இருக்குல்ல? இந்தப் பொன்மலைல ஒவ்வொருத்தருக்குப் பின்னாடியும் இதே மாதிரி ஒரு இருளான பக்கம் இருக்கு… ஊருக்கே உத்தமனான கலிங்கராஜன் அவரோட தொழில் வளர்ச்சிக்காக அப்பாவிப்பொண்ணு சோபியாவ நரபலி குடுக்கப் பாத்தாரு… ரோஷண் கிட்ட அவர் இது சம்பந்தமா பேசுனது எனக்குத் தெரியும்… ரோஷண் என் கிட்ட எதையும் மறைச்சதில்ல… கிளாராக்கு என் மேல உண்டான தப்பான ஆசை முதற்கொண்டு”

ஏகலைவன் அருவருப்போடு கிளாராவின் பெயரை உச்சரித்த விதம் அவனுக்கு அவள் மேலிருக்கும் விரோதத்தின் அளவைக் காட்டியது.

இப்போது இதன்யா இடையே புகுந்தாள்.

“இப்ப இவ்ளோ அருவருப்பு காட்டுறவன் அவங்க கூட பேசுனப்ப ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தியே… நான் அதை என் கண்ணால பாத்திருக்கேன்” என்றாள் அவள்.

“நீங்க பாத்தப்ப மட்டுமில்ல, அதுக்கு முன்னாடியும் நான் அவ கிட்ட ஃப்ரெண்ட்லியா இருந்து தொலைக்க வேண்டிய கட்டாயம்… காரணம் கலிங்கராஜனோட பிசினஸ்ல நான் முதலீடு பண்ணுறதா இருந்தேன்… நான் விலகுனா கிளாராவோட மனசு மாறும்னு நம்புனேன்… அந்த வீட்டுப் பெரியவங்க கூட நல்ல உறவு இருந்தா தான் பின்னாட்கள்ல இனியாவை எனக்குச் சொந்தமாக்குறது சுலபமா இருக்கும்னு யோசிச்சு அவங்க கூட பழகுனேன்… பட் அந்தக் கிளாரா… ஒரு கட்டத்துக்கு மேல என்னால அவளோட அசிங்கமான நடத்தைய ஏத்துக்க முடியல… ரோஷண் மூலமா ஏகலைவன் வேணும்னா இனியாவ பலி குடுங்கனு சொல்ல வச்சேன்… நான் நினைச்ச மாதிரியே அதுக்கு அவ ஒத்துக்கல… ரொம்ப கோவமா பேசிட்டுப் போயிட்டா… இந்த ஷாக் அவளுக்குப் போதும்னு நினைச்சப்ப தான் அவ குகையில சால்வைய விட்டுட்டுப் போனதா ரோஷண் சொன்னான்… அதை ரோஷண் கிட்ட குடுத்து பத்திரப்படுத்த சொன்னேன்… பின்னாட்கள்ல இனியாவுக்கும் எனக்கும் இடையில கிளாரா வர முயற்சி பண்ணுனானா அந்தச் சால்வைய காரணமா வச்சு கலிங்கராஜன் கிட்ட அவ முகத்திரைய கிழிக்கலாம்னு நினைச்சு அதை பத்திரப்படுத்துனேன், என்னோட குகையில” என்றான் அவன் அழுத்தமாக.

கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் கிளாராவுக்கு எதிராக அவன் இவ்வளவு தீவிரமாகப் பயன்படுத்தியதற்கான காரணம் இப்போது புரிந்தது. கிளாரா தன்னை அணுகும் முறை, தன்னோடு பழகிய முறையை வைத்து அவளது மனதிலிருந்த ஆசையை அவனும் கண்டறிந்துள்ளான். ஆனால் எந்த வகையிலும் அதை வைத்து தனது இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள ஏகலைவன் முயற்சிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்! அந்தளவுக்கு இறந்த காதலி மீது பைத்தியக்காரத்தனமான காதல் போல!

 அடுத்த நொடியே பக்கென நகைத்தவன் “கிளாராவும் நானும் சேர்ந்து தான் இனியாவைக் கொன்னுருப்போம்ங்கிற சந்தேகம் உங்களுக்கு வரலனாலும் அடுத்த ட்ராப்ல அவளை மாட்டிவிடுற ஐடியா எனக்கு இருந்துச்சு… ப்ச்! அதுக்குள்ள முருகையா கெழவன் குறுக்க வந்துட்டாரு… அதனால அவரைக் கவனிக்க வேண்டியதா போயிடுச்சு” என்று சொல்லிவிட்டு தன் முன்னே வைக்கப்பட்டிருந்த பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்தான்.

இதன்யா, முரளிதரன் இருவரும் அதிரும்போதே மார்த்தாண்டனின் கைமுஷ்டி இறுகியது. பெரியவரிடம் அவருக்கு இருந்த நட்பு அத்தகையது. குறுகிய காலமே என்றாலும் சிலருடனான நட்பு நமக்குள் பசுமரத்தாணி போல பதிந்துவிடும். முருகையாவின் நட்பை அத்தகைய ஒன்றாகக் கருதினார் மார்த்தாண்டன். இனியாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென எண்ணிய அப்பாவி மனிதர்.

முத்துவும் ஜானும் ரோஷண் மரணம் பற்றி பேசியதை முருகையா கேட்டு ஆத்திரமுற்றதால் தான் அவரைக் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். அந்தக் குற்றத்திற்காக தானே அவர்கள் சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் என்ன புதியதாக ஒரு கதையைச் சொல்கிறான்?

மார்த்தாண்டனோடு சேர்ந்து மற்ற இருவரும் ஏகலைவன் அடுத்து என்ன சொல்லப்போகிறானோ என்று காத்திருந்தார்கள்.

“என்ன பாக்குறிங்க? அந்தக் கெழவனை முத்துவும் ஜானும் கொலை பண்ணுனது உண்மை… ஆனா அதுக்குச் சொன்ன காரணம் தான் பொய்” என்றான் அவன்.

தொடர்ந்து “ஆக்சுவலி அன்னைக்கு என்ன நடந்துச்சுனா.” என்று அவன் அச்சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தான்.

தனக்கு விடுப்பு வேண்டுமென கலிங்கராஜனிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போக நினைத்த முருகையா சாந்திவனத்திலிருந்து வெளியே வந்தபோது ஏகலைவனின் பங்களா கேட் கதவு திறந்திருப்பதைப் பார்த்தார். மேய்ச்சலுக்கு விட்ட ஆட்டுமந்தை ஒன்று திமுதிமுவென அவனது தோட்டத்தை நோக்கி ஓடுவதைப் பார்த்தவர் “ஐயா வீட்டு செடிய எல்லாம் இதுக தின்னுடுமே” என்று பதபதைப்போடு அங்கே ஓடினார்.

“ஏய்… சூ சூ” என்று ஆடுகள் செடிகள் மீது வாய் வைக்கும் முன்னர் குச்சி ஒன்றால் அடித்து விரட்டியவர் ஒரே ஒரு ஆடு மட்டும் அவருக்கு விளையாட்டு காட்டி பங்களாவைச் சுற்றி ஓடவும் எரிச்சலோடு அதை விரட்ட ஓடினார்.

அப்படி ஓடியவர் ஒரு கட்டத்தில் ஏகலைவனின் அறை இருக்கும் பகுதிக்கு வெளியே வந்தபோது அந்த அறைக்குள் இருந்து ஏகலைவனும் முத்தும் பேசுவதைக் கேட்க நேர்ந்தது.

“போலீசோட சந்தேகம் நிஷாந்த் மேல வந்துடக்கூடாது… இந்த போனையும் லேப்டாப்பையும் நீ வச்சுக்க… எப்பிடி இனியாவை கொலை பண்ணுனப்ப எல்லா ஆதாரத்தையும் ஒளிச்சு வச்சோமோ அதே மாதிரி இதையும் ஒளிச்சு வைச்சிட்டா போலீஸ் தேடித் திரிஞ்சு ஏமாந்து போயிடுவாங்க… அந்த கேப்ல நான் கிளாராவை மாட்டிவிட ஒரு ப்ளான் ரெடி பண்ணிடுவேன்” என்றான் ஏகலைவன்.

தொடர்ந்து “சாந்திவனத்தோட கார்டன் மேனேஜ் பண்ணுற கோபாலுக்கு ஏதோ பெரிய பணத்தேவை போல… அதை வச்சு நான் ஒரு ப்ளான் போட்டிருக்கேன்” என்றவன் யாரோ தடுமாறி விழும் சத்தம் கேட்கவும் மூவரும் அதிர்ந்தே போனார்கள்.

“ஏய் யாரோ வெளிய இருக்குறாங்க போல.. போய் என்னனு பாரு” என்று முத்துவை விரட்டினான் ஏகலைவன்.

முத்துவும் அடித்துப் பிடித்து தோட்டத்திற்கு ஓடிப்போய் பார்த்தான். அங்கே தரையில் விழுந்து கிடந்த முருகையா அவனைக் கண்டதும் பாய்ந்து எழுந்து வந்தார்.

“டேய் எங்க சின்னம்மாவ இப்பிடி அநியாயமா எல்லாரும் சேர்ந்து கொன்னுட்டிங்களே… உங்களை நான் சும்மா விடமாட்டேன்… இப்பவே போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் நான் கேட்ட உண்மை எல்லாத்தையும் சொல்லப்போறேன்” என்று வெளியேறப் பார்த்தவரை தனது பலம் அனைத்தையும் சேர்த்து கன்னத்தில் ஓங்கியறைந்தான் முத்து.

வயோதிக மூப்பின் காரணமாக ஏற்கெனவே தளர்ந்து போயிருந்த முருகையா முத்துவின் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்ளும் வலிமையின்றி சுருண்டு விழுந்து மூர்ச்சையடைந்தார்.

அவரை என்ன செய்யட்டும் என ஏகலைவனிடம் சைகையில் கேட்டான் முத்து. வீட்டுக்குள் கொண்டு வரும்படி சைகை காட்டினான் அவன்.

முத்துவும் முருகையாவைத் தோளில் சுமந்து ஏகலைவனின் வீட்டுக்குள் கொண்டு வந்தான்.

“இன்னைக்கு உங்க கிட்ட பேசணும்னு சர்வெண்ட்ஸ் யாரையும் வரவேண்டாம்னு சொன்னது ஒருவகையில நல்லதா போச்சு… இப்ப இந்தக் கெழவனோட கதைய முடிக்கணும்… இவன் உடம்புல ஓடுற இரத்தத்துல விசுவாசம் அதிகம்… கலிங்கராஜன் கிட்ட இனியாவ கொன்னது நான்னு சொல்லி என்னை ஜெயிலுக்கு அனுப்ப இவன் முயற்சி பண்ணுறதுக்குள்ள இவனை நான் இனியா போன இடத்துக்கு அனுப்பி வச்சாகணும்” என்றான் ஏகலைவன் குரூரமான குரலில்.

“இவனை இங்க வச்சு எதுவும் பண்ணுனா ஊருக்குள்ள இருக்குறவங்களுக்குச் சந்தேகம் வரும் சார்… இரகசியமா தான் இவன் கதைய முடிக்கணும்” என்றான் முத்து அவனுக்குச் சளைக்காத குரூரத்துடன்.

போதைமருந்து உபயோகத்தால் மனிதம் மரத்து உணர்வுகள் மரித்துப் போன சதைப்பிண்டங்கள் போன்ற நிலையில் இருந்த முத்துவையும் ஜானையும் வைத்து முருகையாவைக் கொலை செய்வது ஏகலைவனுக்கு ஒன்றும் கடினமான வேலையாகத் தோன்றவில்லை.

“இந்தக் கெழவன் இன்னைக்கு இருட்டுற வரைக்கும் அவனோட வீட்டுல இருக்கட்டும்… ஊர் அடங்குனதும் இவனை காட்டுக்குகைக்குக் கொண்டு போயிடுங்க… அங்க வச்சு நான் சொல்லுற மாதிரி இவனைக் கொன்னுடுங்க” என்ற ஏகலைவன் இனியாவை எவ்வாறெல்லாம் வதைத்தானோ அதைச் சொல்ல முத்துவும் ஜானும் கேட்டுக்கொண்டார்கள்.

“நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க… ஆதாரம் எதுவும் போலீஸ் கிட்ட சிக்கிடக்கூடாது… இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் கவனமா இருங்க… முத்து நீ கொஞ்சநாளுக்கு வெளியூர் போறது நல்லது… சப்போஸ் மாட்டிக்கிட்டிங்கனா என் பேரைச் சொல்லக்கூடாது… மீறி சொன்னிங்கனா என்ன நடக்கும்னு தெரியும்ல”

அவன் மிரட்டிய விதத்தில் இருவரது தேகமும் மார்கழி பனியில் வெட்டவெளியில் நிற்பவர்களைப் போல வெடவெடத்தது.

ஜான் முதலில் அவன் காலில் விழுந்தார்.

“சார் நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்… உங்களுக்காக நான் ஜெயிலுக்குக் கூட போவேன்… என் பொண்ணை மட்டும் எதுவும் செஞ்சிடாதிங்க”

முத்து ஏகலைவனின் காலில் விழவில்லை. ஆனால் அவன் கண்களும் ஏகலைவனிடம் சோபியாவுக்காக யாசித்தன.

“அப்ப என்னை மாட்டிவிடாம இருக்கணும்.. நீங்க என்னை மாட்டிவிட்டதா சின்ன சந்தேகம் வந்தா கூட நான் சோபியாவை இரக்கமில்லாம மேல அனுப்பிவச்சிடுவேன்”

ஏகலைவனின் மிரட்டல் வேலை செய்தது. முத்துவும் ஜானும் முருகையாவை மதிய நேரத்தில் யாரும் தெருவில் நடமாடாத சமயத்தில் அவரது வீட்டுக்கு தூக்கிச் சென்றார்கள். அவரது பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லாம் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்கள். எனவே முத்துவையும் ஜானையும் யாரும் பார்க்கவில்லை. இருவரும் அங்கே இருந்து முருகையாவுக்குப் போதைமருந்து கொடுத்து அன்று நாள் முழுவதும் நினைவு திரும்ப முடியாதபடி பார்த்துக்கொண்டார்கள்.

அச்சமயத்தில் தான் ஜானிடம் இருந்த முத்து திருடி எடுத்து வந்த மோதிரமானது முருகையாவின் வீட்டில் விழுந்தது. முருகையாவின் கதையை முடிக்கும் ஆர்வத்தில் இருவரும் மோதிரத்தைக் கவனிக்கவில்லை.

இரவில் ஊரடங்கியதும் முருகையாவைக் காட்டுக்குகைக்குக் கொண்டு போய் கொடூரமாகக் கொலை செய்தார்கள்.

பின்னர் நடந்ததை தான் மற்ற மூவரும் அறிவார்களே! ஆக மொத்தத்தில் ஏகலைவனின் குற்ற கணக்கில் இன்னும் ஒரு கொலை சேர்ந்துவிட்டது!

எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி முருகையாவின் மரணத்தில் தன் பங்கு என்னவென்பதை விளக்கிவிட்டு வலித்த கால்களைத் தடவிக்கொண்டான் ஏகலைவன்.

இன்னும் என்னென்ன செய்திருக்கிறானோ இந்த சைக்கோ என்ற ரீதியில் இதன்யா பார்க்க மார்த்தாண்டனோ விட்டால் அவனைக் கொன்றுவிடுவது போல கடுங்கோபத்தொடு நின்று கொண்டிருந்தார்.

முரளிதரன் தொண்டையைச் செருமி அவர்களை இயல்புக்குக் கொண்டு வந்தார்.

“கிளாராவ மாட்டி விட்டது உன்னோட ப்ளான்… நீ எங்க கிட்ட மாட்டுனது?”

“அதுவும் என் ப்ளான் தான்…  ஒருதடவை நானே உங்க கிட்ட  மாட்டி அப்புறம் தப்பிச்சிட்டா என் மேல உங்களுக்கு டவுட் வராதுனு நினைச்சேன்… முத்துவை எப்பிடியும் நீங்க அரெஸ்ட் பண்ணுவிங்கனு எனக்குத் தெரியும்… உங்களுக்கு என் மேல சந்தேகம்னு எனக்குத் தெரியும்… அதனால அந்த லேப்டாப்பை ஆதாரமா வச்சு நீங்க நிஷாந்தையும் என்னையும் கட்டாயம் அரெஸ்ட் பண்ணுவிங்க… எனக்கு நிஷாந்த் மேல க்ரைம் ரெக்கார்ட்ஸ் வர்றதுல இஷ்டமில்ல… அவன் சாவித்திரி அக்காவோட மகன்… என்னோட இரத்தச் சொந்தம்… அந்த அன்பு எப்பவும் எனக்கு உண்டு… நீங்க இனியாவை கொலை பண்ணுனதா என்னை அரெஸ்ட் பண்ணுவிங்கனு எதிர்பாத்தேன்.. அதை எப்பிடிலாம் உடைக்கலாம்ங்கிற ப்ளானை போட்டுட்டுத் தயாரா இருந்தேன்… ஆனா இதன்யா என்னையும் கிளாராவையும் சேர்த்து வச்சு பேசுனது, எங்களுக்குள்ள அஃபயர்னு நியூஸ் பரவுனது இதுல்லாம் எனக்கு வெறிபிடிக்க வச்சிடுச்சு… என் லாயரை வச்சு முத்து ஜான் கிட்ட பேசி பொய்ச்சாட்சி சொல்லச் சொன்னதா கோர்ட்ல பேச சொன்னேன்… ஸ்ரீய வச்சு இதன்யாவோட அக்கவுண்டுக்கு கோடிக்கணக்குல என் ரைவல் கம்பெனி அக்கவுண்ட்ல இருந்து அமவுண்டை ட்ரான்ஸ்ஃபர் பண்ண வச்சேன்… அவன் எனக்காக இதை செஞ்சு முடிச்சான்… பலன், நேர்மையும் நியாயமும் கொண்ட இதன்யா ஐ.பி.எஸ் இலஞ்சம் வாங்குனதாவும் பொய்ச்சாட்சி சொல்லச் சொன்னதாவும் சஸ்பெண்ட் பண்ணப்பட்டாங்க… என்னை அந்தக் கிளாரா கூட சேர்த்து வச்சு பேசுனது ரொம்ப பெரிய தப்பு… அதுக்கு இந்த  தண்டனை போதாது… அதனால ஆள் செட் பண்ணி என் எஸ்டேட்டுக்கு வர்ற லாரிய வச்சு இவங்களை ஒரேயடியா காலி பண்ணனும்னு திட்டம் போட்டேன்… ஆனா கடவுளோட கருணையால ரசூல் பாய் வந்து இவங்களைக் காப்பாத்திட்டார்”

 ஒரு உயிரைக் கொல்ல பார்த்ததை ஏதோ விருது வாங்கியது போல பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தவன் ஒரு இடத்தில் சட்டென நிறுத்தினான்.

இதன்யாவை கண்ணெடுக்காமல் பார்த்தவன் “பட் என் ஹார்ட்ல இவங்களுக்குனு தனியிடம் உண்டு… ஷீ ரிசம்பிள்ஸ் மை தேவா” என்றான் இதன்யாவை நோக்கி கை காட்டியபடி விசமமாக.

திடீர் திடீரென வெவ்வேறு உணர்வைக் காட்டியவனைப் பார்த்து மூன்று அதிகாரிகளும் இப்போது வாயடைத்துப்போனார்கள், குறிப்பாக இதன்யா.