IIN 92

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

1980களில் அமெரிக்காவை சாத்தானிஷ வழிபாடு திகிலூட்டியது எனலாம். நியூபெர்ரியும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் வசித்து வந்தது சிறிய நகரமொன்றில். அங்கே சாத்தானிஷத்தின் கொடும் கரங்கள் பரவிய விதம் ஒரு கொடூர கொலையில் முடிந்தது. அவர்களிடமிருந்து சாத்தானின் உருவப்படங்கள், சாத்தானிஷத்தின் அடையாளங்கள் பதித்த பொருட்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. காவல்துறையினர் நன்கு விசாரித்தபோது தான் இந்நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற விபரம் தெரியவந்தது. அதிலும் ஜிம் ஹார்டி மற்றும் ரான் க்ளமெண்ட்ஸ் இருவருக்கும் மனரீதியான பாதிப்பும் போதைமருந்து உபயோகத்தால் ஏற்பட்டுள்ளது. க்ளமெண்ட்சின் அன்னை அவனுக்கு மனோதத்துவ சிகிச்சை கொடுக்க முயன்றபோது அவன் தெரபிஷ்டுகளிடம் தனக்கு கொலை செய்வதில் இருக்கும் ஆர்வத்தைக் கூறியுள்ளான். ரோலண்டோ தனது காதில் யாரோ கொலை செய்யும்படி கட்டளையிடுவதாக கூறுவதாகவும், அந்தக் குரல் சாத்தானுடையது என்றும், சாத்தான் தனக்கு சக்திகளை வழங்கியதாகவும் நம்பியுள்ளான். ஸ்டீவன் நியூபெர்ரியைக் கொல்லும் முன்னர் ஜிம் ஹார்டி தனது நண்பர்களிடம் சாத்தானிடம் தனது திறமையை நிரூபிக்க விரும்புவதாகப் பேசியுள்ளான். அவர்களுக்கு பரோலின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

                                                           -From Internet

குழந்தைப்பருவம் வருங்காலத்தில் நாம் எப்படி உருவாகப்போகிறோம் என்பதற்கான அரிச்சுவடியை நாம் பயிலும் பருவம். ஒரு குழந்தைக்கு முக்கியமான தேவைகள் பொம்மையோ, சாக்லேட்டோ, விலையுயர்வான உடைகளோ அல்ல! ஒரு குழந்தையின் அதிகபட்ச ஆசையே பெற்றோரின் அன்பை அனுபவிப்பதே!

அன்னையின் முத்தம் தராத இனிமையையா சாக்லேட்டுகள் ஒரு குழந்தைக்குத் தந்துவிடும்! தந்தையின் அரவணைப்பில் உணராத இதத்தையா ஒரு குழந்தை பொம்மையுடன் விளையாடுகையில் பெற்றுவிடும்!

மேற்சொன்ன யாவும் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கிறதா என்றால் அதற்கு இல்லை என்றும் பதில் வரும். காரணம் சில பெற்றோரின் தான்தோன்றித்தனமான நடத்தை.

குழந்தை பிறக்கும் வரை கணவனும் மனைவியுமாக சண்டை சச்சரவுடன் வாழ்பவர்கள் குழந்தை பிறந்த பிறகு பெற்றோராக பதவியுயர்வு அடைகிறார்கள். அந்தப் பதவிக்கான பண்புகள் நூற்றில் ஐம்பது பேருக்கு இருப்பது இல்லை என்பதே பரிதாபம்.

பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் இல்லாத மோசமான குழந்தைப்பருவமும், கொடுமையான இளமைப்பருவமும் வாய்க்கப்படும் நபர்களுக்கு சைக்கோபதி வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவர்களில் ஒருவன் தான் ஏகலைவன்.

அவனது பெற்றோர் இருவருமே பணத்தில் குளிப்பவர்கள். ஆடம்பரத்தில் திளைப்பவர்கள். பிள்ளையை ‘நானியிடம்’ ஒப்படைத்து அம்பாரமாக பொம்மைகளையும் மூட்டை மூட்டையாய் இனிப்புகள் உடைகளையும் வாங்கி தந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அவர்களின் அன்புக்கு ஏங்கி ஏங்கி கிடைக்காதென உறுதியான தருணத்தில் ஏகலைவனுக்குள் விவரிக்க முடியாத விரக்தியொன்று உருவானது. பணக்கார பிள்ளைகள் படிக்கும் போர்டிங் ஸ்கூலில் தான் ஏகலைவனும் படித்தான். ஆனால் அங்கே மற்ற பிள்ளைகளின் பெற்றோர் காட்டும் அக்கறையோ அன்போ தன் பெற்றோர் தன்னிடம் காட்டுவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட பிற்பாடு ஏகலைவன் எதற்காகவும் ஏங்கியதில்லை.

உண்மையான அன்பிற்கான அவனது ஏக்கம் நாளடைவில் விரக்தியாகி, வெறுப்பாகிப்போனது. மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் போன்ற உணர்வுகள் எல்லாம் இளம்வயதில் பெற்றோரின் போதனையால் மட்டுமே  வேர் விட்டு வளரும்.

பாவம்! அதற்கான வாய்ப்பின்றி வளர்ந்தவனுக்கு அவ்வுணர்வுகள் இல்லாமலே போய்விட சிறுவயதிலேயே பிராணிகளை வதைப்பது, கொல்வது போன்ற கொடுஞ்செயல்களை யோசிக்காமல் செய்தான் ஏகலைவன்.

ஒரு கட்டத்தில் அவனது இக்குணம் பெற்றோருக்குத் தெரிய வந்ததும் சைக்கியாட்ரிஷ்ட் ஒருவரிடம் அவனை மனநல சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள்.

வருடக்கணக்கில் சிகிச்சை தொடர்ந்தது. அவனுக்கு சைக்கோபதி எனப்படும் மனப்பிறழ்வு குறைபாடு வந்திருப்பதாகவும் அதற்காக தெரபிகளோடு மருந்து மாத்திரைகளும் உட்கொள்ள  வேண்டுமென சைக்கியாட்ரிஷ்ட் கூறியிருந்தார். அச்சமயத்தில் பள்ளிக்குச் செல்லாமல் ‘ஹோம் ஸ்கூலிங்’ முறையில் படித்து தேர்ந்தான் ஏகலைவன்.

ஒரு கட்டத்தில் கட்டுக்குள் வரவும் செய்தது. அவனும் மற்றவர்களைப் போல சாதாரண மனித உணர்வுகளுக்கு ஆட்பட ஆரம்பித்தான். அந்தோ பரிதாபம் அதிலிருந்து சில ஆண்டுகளில் விமான விபத்தொன்றில் மரணித்தார்கள் அவனது பெற்றோர்.

இருந்தாலும் இறந்தாலும் பெரிதாக வித்தியாசமில்லை என்று அவர்களது மரணத்தைக் கடந்துவிட்டாலும் தனக்கென யாருமில்லை என்ற எண்ணம் அவனுக்குள் வேரூன்றிப்போனது.

பெரியம்மா பெண்ணான சாவித்ரி உடன்பிறந்த சகோதரி போல பாசம் காட்டுவார். அவருக்கும் திருமணமாகிவிட குழந்தை என தனது வாழ்க்கையில் பிசியாகிப்போனார் சாவித்ரி.

நலம்விரும்பிகளின் விசுவாசமும், நேர்மையும் சக்கரவர்த்தி குழுமத்தின் சொத்துக்கள் மற்றும் தொழிலை எவ்வித தொய்வுமின்றி வளர்க்க தகுந்த வயதில் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் கால் பதித்தவன் ஓய்வின்றி உழைத்தான்.

ஒன்றுக்கு நான்கு தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கினான். தேயிலை ஏற்றுமதியில் முடிசூடா மன்னனாகி அன்னிய செலாவணியில் தன் பங்கை சேர்த்தான்.

இத்தகைய சூழலில் தேவசேனாவைச் சந்தித்தான். ஏதோ ஒரு தீவிரமான பிரச்சனையில் அவன் மாட்டிக்கொண்டிருந்தபோது எதிர்பாரா சூழலில் பார்த்தான். காதல்வயப்பட்டான். அவளையும் காதலிக்க வைத்தான். அதற்கு அவன் மிகவும் சிரமப்பட்டான்.

தேவசேனா தடயவியல் துறை நிபுணராகப் பணியாற்றிய காலத்தில் நேர்மையாக இருந்தது சிலரது கண்களை உறுத்தியது. அடுத்து அரசியல்வாதியின் மகன் ஒருவனின் வழக்கில் அவள் சாட்சிகளை மறைக்க இலஞ்சம் வாங்க மறுத்து நேர்மையாகப் பணியாற்றியது அவளது உயிருக்கே உலை வைத்துவிட்டது.

அவளது மரணம் ஏகலைவனை ஒரேயடியாக நொறுக்கிவிட்டது. அவன் பணக்காரன் தான். ஆனால் அவனது பணம் புக முடியாத இடத்தில் கூட அதிகாரம் புகுந்தது. அவனது பணபலத்தைச் செல்லாக்காசாக்கியது. விளைவு தேவசேனாவின் மரணம் மர்மமானதாகவே பதிவு செய்யப்பட்டது.

அவளது தந்தை பெரிதாக அவளது மரணத்தால் பாதிக்கப்படவில்லை. ஆனால் அவளது அன்னை ஓய்ந்துபோய்விட்டார். ஏகலைவன் கொடுப்பதாகச் சொன்ன உதவிகளைக் கூட ஏற்க மறுத்து வாழ்ந்தும் மறைந்தார்.

ஏகலைவனின் வாழ்க்கையும் தேவசேனா இல்லாமல் நகரப் பழகிக்கொண்டது. வருடங்கள் கடந்தன. இளைஞன் ஏகலைவனும் நாற்பதுகளைத் தொட்டான்.

அச்சமயத்தில் தான் ரோஷண் அவனது தேயிலை தோட்ட அலுவலகத்தில் நிஷாந்தின் சிபாரிசால் வேலைக்குச் சேர்ந்தான். அவனால் பொன்மலையில் சாத்தான் வழிபாடும் பெருகியது. அவ்வபோது அதனால் பிரச்சனை வரும். ஆனால் ஏகலைவனுக்கு ரோஷண் உண்மையான ஊழியனாக இருந்ததால் அவனை ஏகலைவனும் பணியை விட்டு அனுப்பவும் இல்லை.

இந்நிலையில் தான் அவனது கணினி பிரச்சனை காரணமாகச் சென்னைக்குப் பயணித்து, ஸ்ரீ மற்றும் பிரகதியின் அறிமுகம் நடந்தேறியது.

டார்க்வெப் அவனுக்கு அறிமுகமானதும் அப்போது தான். அதில் தேடுவதற்கும் பார்ப்பதற்கும் எவ்வளவோ விசயங்கள் இருந்தும் மறுபிறப்பு, சாத்தான் வழிபாடு என்று தேவையற்ற தளங்களில் சுற்றி திரிந்தவன் ஒரு கட்டத்தில் அவற்றை நம்பவும் ஆரம்பித்தான்.

மெத்தப் படித்தவர்கள், பெரிய பொறுப்பிலிருப்பவர்கள் நினைத்தது நடக்கவேண்டுமென நரபரலி கொடுப்பதை நாம் எத்தனை முறை செய்தித்தாள்களில் படித்திருக்கிறோம்? தற்போது கூட ஒரு பேராசிரியர் மறுபிறவி நம்பிக்கையில் சாமியார் சொன்னாரென பெண் பிள்ளையை நரபலி கொடுத்துவிட்டு அவள் மறுபிறவி எடுக்கவில்லை என்று காவல்துறை விசாரணையில் சொன்ன செய்தியெல்லாம் நாம் அறிவோமே!

அத்தகைய மெத்த படித்த மூடர்கூட்டத்தின் பிரதிநிதியே ஏகலைவன். அவனும் சாத்தான் வழிபாடு, மறுபிறப்பு இதையெல்லாம் நம்பினான்.

தேவசேனாவின் மரணத்தால் ‘போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிச்சார்டருக்கு’ ஆளானவனுக்கு மீண்டும் அவள் பிறந்து தனக்காக வந்துவிடமாட்டாளா என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. இப்போதோ அவை அதீதமாகிவிட்டன.

ரோஷணிடம் சாத்தான் வழிபாடு பற்றி அவன் கலந்துரையாடியதும் உண்டு,. ஆனால் அதை அவன் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தது பிரகதி தேவசேனாவின் ஆன்மாவை வைத்து ஆரம்பித்த கேவலமான விளையாட்டிற்கு பிற்பாடு தான்.

மனதளவில் பாதிக்கப்பட்டவன், மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கிப்போனவனிடம் ‘உன் காதலியின் ஆன்மா என் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆன்மாவை விற்பனை செய்யும் தளத்தில் என் பணத்தேவைக்காக அதை விற்கப்போகிறேன்’ என அவள் சொல்லிவிட அவனும் அதை நம்பியும் தொலைத்தான்.

வேறு பெயரைச் சொல்லி அவனை ஏமாற்ற நினைத்திருந்தால் ஏகலைவன் உஷாராகியிருப்பான். பிரகதி பயன்படுத்தியதோ தேவசேனாவின் பெயரை. இனி அவன் எப்படி யோசிப்பான்? முழுமையாக அவளை நம்பினான்.

காதலியின் ஆன்மாவை விற்காதே என கோரிக்கை வைத்தான். ஒன்றுக்கு மூன்று முறைகள் அவளுக்குப் பெரிய தொகையை அனுப்பவும் செய்தான்.

அது குறித்து ரோஷணிடம் பேச சாத்தான் வழிபாடு மூலம் ஆன்மாக்களை மறுபிறப்பு எடுக்க வைக்கலாமென அவனும் தன் பங்குக்கு ஏகலைவனின் மூளையைக் குழப்பினான்.

இப்படிப்பட்ட நிலையில் தான் இனியாவைக் கலிங்கராஜன் ஒதுக்கி வைத்திருப்பது, அவளது ராமபாணப்பூ விருப்பம், தடயவியல் துறை ஆர்வம் பற்றி கண்டுகொண்டான் ஏகலைவன்.

அவன் மனதில் தேவசேனாவின் மறுபிறப்பாக இனியா இருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது.

“இந்தச் சந்தேகம் வராம இருந்திருந்தா இனியா உயிர் போயிருக்காது”

இவ்வளவு நேரம் ஏகலைவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த இதன்யா பொறுக்க முடியாமல் இடையிட்டாள்.

அவனோ முறுவலோடு அவளை ஏறிட்டான்.

“வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் உண்மையா காதலிச்சிருக்கிங்களா மேடம்?”

“இது உனக்குத் தேவையில்லாத கேள்வி… செத்துப்போன காதலிய நினைச்சு உயிரோட இருக்குற ஒரு பொண்ணை சாகடிச்ச உன்னோட காதல் உத்தமமானதா உனக்குத் தோணலாம்… என்னைப் பொறுத்த வரைக்கும் அது முட்டாள்தனம்… நீ என்ன சாக்குபோக்கு சொன்னாலும் இனியாவுக்கு நீ செஞ்சது மகாபாதகம்… சில விசயங்கள் உன் காதலி கூட ஒத்துப்போச்சுங்கிறதுக்காக அவளைக் கொலை பண்ணிருக்க நீ… இன்னொரு தடவை உண்மைக்காதல் அது இதுனு வசனம் பேசுனனா கால்ல இருக்குற காயத்தைக் கூட கன்சிடர் பண்ணமாட்டேன்… ஜாக்கிரதை”

“சரி… நீங்க சொல்லுறது தான் உண்மை… என் காதல் கிடைக்காத ஏமாற்றத்தால நான் இனியாவைக் கொன்னுட்டேன்… போதுமா? அவளும் நிஷாந்தும் ஒன்னா இருந்த காட்சியை என் கண்ணால பாத்த பிறகு என்னால அமைதியா போக முடியல… இவ என் தேவா இல்லனா என் தேவா யாரு? அவ எப்ப எனக்காக வருவா? ஒருவேளை வராமலே போயிட்டா என்ன பண்ணுறது? இப்பிடிலாம் யோசிச்சு பயந்துட்டேன்… கூடவே இனம்புரியாத கோவம் வேற… அதனால நிஷாந்த் கிளம்புனதும் இனியா கிட்ட போனேன்… இங்க நடந்ததை நான் பாத்துட்டேன்னு சொன்னதும் அவ ஷாக் ஆகிட்டா”

“அப்புறம் என்னாச்சு?” முரளிதான் இடையிட்டார்.

“அவங்கப்பா கிட்ட நடந்த எதையும் சொல்லக்கூடாதுனு என் கிட்ட அழுது கதறுனா… எனக்கு என் தேவாவா அவ இல்லாம போன ஏமாற்றம்… அவளை நிஷாந்த் கிட்ட இழந்துட்டேன்ங்கிற ஏமாற்றம்… எல்லாமுமா சேர்ந்து குறுக்கு புத்தியோட யோசிக்க வச்சுது என்னை… யெஸ், இனியாவைச் சாத்தானுக்குப் பலி குடுத்தா அவர் மனசு இரங்கி என் தேவாக்கு மறுபிறப்பு குடுப்பார்னு முடிவு பண்ணுனேன்”

ஏகலைவன் இங்கே நிறுத்தியதும் அந்த அறையிலிருந்த மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் கோபம் துளிர்விட ஆரம்பித்தது. என்ன மனிதன் இவன்? இனியாவின் தந்தை தனது சுய இலாபத்துக்காக சோபியாவை பலி கொடுக்க நினைத்தார். இவன் தனது சுயநலத்துக்காக இனியாவைப் பலியிட நினைத்திருக்கிறான். இவர்களுக்கு எல்லாம் மனித உயிர் அவ்வளவு மலிவாக போய்விட்டது.

“ஆல்ரெடி சாத்தான் வழிபாடுக்காக என் எஸ்டேட் குகைக்கு நான் ரோஷணை வரச் சொல்லியிருந்தேன்… நான் சாத்தான் வழிபாடு குரூப்ல இருக்குறது இந்த ஊர்ல யாருக்கும் தெரியாது… எப்பவும் என்னோட வழிபாடு இரகசியமா தான் நடக்கும்… ரோஷணுக்கும் சென்னையில ஒரு வேலை இருந்ததால் அவன் தம்பி கிட்ட பொய் சொல்லிட்டு இரகசியமா என் குகையில வந்து தங்கிட்டான்… இனியா கிட்ட சமாதானமா பேசுற மாதிரி பேசி அங்க அழைச்சிட்டு வந்தேன்… ரோஷண் ஃபாரீன் கல்ட் குரூப்ஸ் பத்தி நிறைய தெரிஞ்சவன்… அவன் கிட்ட இனியாவை எந்த முறையில பலி குடுத்தா சாத்தான் சந்தோசப்படுவார்னு கேட்டதுக்கு அவன் ஒரு புக்கை குடுத்தான்… அதுல காலங்காலமா சாத்தான் வொர்ஷிப்பிங் கல்ட் குரூப் ஆளுங்க நரபலி குடுக்குற முறைகள்லாம் தெள்ளத்தெளிவா குடுத்திருந்தாங்க… அதுல நான் தேர்ந்தெடுத்த முறைப்படி தான் இனியாவைச் சாத்தானுக்குப் பலி குடுத்தோம்”

“அதாவது அவளை உயிரோட சித்திரவதை செஞ்சு, உடம்பளவுல நொந்து போனவளை செக்சுவல் அப்யூஸ் பண்ண வச்சு… சீ! நீயெல்லாம் அரக்க ஜென்மம்… உன்னைச் சாத்தான்னு ரொம்ப சரியா அந்தக் கும்பல்ல உள்ளவங்க எல்லாம் சொல்லிருக்காங்க” என்று சொன்ன இதன்யாவின் முகத்தில் அத்துணை அருவருப்பு!

xr:d:DAF-I-2c3BQ:150,j:1544030988786611404,t:24032000

“இந்தாளோட இரகசிய குகை பத்தி தெரியாம நம்ம காட்டுக்குகையில ஆதாரம் தேடிட்டு இருந்திருக்கோம் மேடம்” என மார்த்தாண்டன் சலிப்பாகச் சொல்ல இதன்யாவோ வேறு எதையோ யொசித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த நொடியே “ஏய்! உண்மைய சொல்லு, ரோஷண் இதன்யாவை செக்சுவல் அப்யூஸ் பண்ணுனானா? இல்ல நீ பண்ணுனியா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“ஷட்டப்” என்று மேஜையில் தட்டினான் ஏகலைவன் கோபத்தோடு.

“ஏய் கத்தாத… கொலை பண்ணுறளவுக்குத் துணிஞ்சவன் இதை செஞ்சிருக்கமாட்டியா?” என்று மார்த்தாண்டன் தன் பங்குக்கு அவனை காய்ச்சியெடுத்தார்.

“என் சந்தேகம் என்னனா நீ தான் இனியாவ செக்சுவல் அப்யூஸ் பண்ணிருக்கணும்… இப்ப ரோஷண் உயிரோட இல்லனதும் நீ பழிய அவன் மேல தூக்கிப் போடுற” என்றார் முரளிதரன்.

“இல்ல… இல்ல… நான் இனியாவை கொலை மட்டும் தான் பண்ணுனேன்… ரோஷணை வச்சு தான் அவளை அப்யூஸ் பண்ண வச்சேன்… என்னால என் தேவாவ தவிர வேற எந்தப் பொண்ணையும் மனசார தொட முடியாது… அதுலயும் இனியா தேவாவோட மறுபிறவி இல்லனு உறுதியானதுக்கு அப்புறம் அவளைத் தொட்டு என் தேவாக்கு நான் துரோகம் பண்ணுவேனா?”

ஏகலைவன் கண்களில் வேதனை மின்னக் கேட்டான். இதன்யாவும் முரளிதரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். காதலிக்குத் துரோகம் இழைக்கக்கூடாதென்று நினைக்கும் இவன் தான் இரத்தத்தை உறைய வைக்கும்படி ஒரு இளம்பெண்ணைக் கொலை செய்தும் இருக்கிறான். விசித்திரப்பிறவி என்று எண்ணிக்கொண்டார்கள் அவர்கள்.