IIN 91

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாத்தானிஷத்தின் மீதான நம்பிக்கையால் உலகெங்கும் ஏகப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 1987ல் அமெரிக்காவின் மிசோரி கம்யூனிட்டியை உலுக்கிய ஒரு கொலைவழக்கு தான் ஸ்டீவன் நியூபெர்ரி என்ற இளைஞனின் மரணம். அதே ஆண்டு டிசம்பர் ஆறில் தனது நண்பன் ஜிம் கார்டி மற்றும் பெட்டி ரோலண்ட், ரான் க்ளமெண்ட்ஸ் என்ற இருவரோடும் சேர்ந்து தொடர்வண்டி ட்ராக் அருகே ஒரு பூனையோடு சென்றுள்ளான் நியூபெர்ரி. இந்நால்வரும் சிறிய மிருகங்களை வதைத்துக் கொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். நியூபெர்ரி அந்தப் பூனையைக் கொல்ல தான் செல்கிறோமென நினைத்து அவர்களோடு செல்ல, ஜிம் ஹார்டியோ மற்ற மூவரிடமும் நியூபெர்ரியைக் கொல்லும்படி கட்டளையிட்டிருக்கிறான். அடுத்த சில நிமிடங்களில் நியூபெர்ரியின் முகத்தை பேஸ்பால் பேட்டால் மூவரும் தாக்கியிருக்கிறார்கள். அவன் உணர்விழந்து விழும்வரை அடித்தவர்கள் இறந்துவிட்டான் என்றதும் ஒரு பாறைத்துண்டை அவன் மார்போடு வைத்து உடலைச் சுற்றி கயிற்றால் கட்டி குடிநீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு அவனைக் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை வெவ்வேறு இடங்களில் வீசி விட்டார்கள். ஆனால் காவல்துறை விசாரணையின்போது உண்மையைச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் நியூபெர்ரியைத் தாக்கி கொலை செய்ய காரணம்  அவர்கள் அனைவருமே சாத்தான் வழிபாட்டைப் பின்பற்றியது. சிறிய மிருகங்களைச் சாத்தானுக்குப் பலி கொடுத்து சாத்தானின் சீடனாக விரும்புவதாக ஜிம் கார்டி அடிக்கடி கூறியதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களது பள்ளியில் மேல்நிலை வகுப்புக்குப் போனதும் தனது முதன்மை நோக்கமே சாத்தானுக்கு உயிர்ப்பலி தருவது தான் என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறான் ஜிம் ஹார்டி.

                                                           -From Internet

“இன்னும் தலைக்காயம் தழும்பாகல… அதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேரையும் ஊருக்கு அனுப்புறதுலயே குறியா இருக்க… ஒரு வாரம் இருந்து உனக்கு உடம்பு முழுக்க சரியானதும் கிளம்புறேனே” என்ற மயூரியைச் சமாதானப்படுத்தி டாக்சியில் ஏறியமரச் செய்தாள் இதன்யா.

வாசுதேவனிடம் இன்னும் பத்தே நாட்களில் இனியாவின் வழக்கை முழுவதுமாக முடித்து வந்துவிடுவேன் என வாக்களித்தவள் “என்னை நினைச்சுக் கவலைப்படாம கிளம்புங்கப்பா” என்றாள்.

“நீ இப்பிடி பேசுறப்ப தைரியமா இருக்குடா… ஆனா உன்னை தலைல கட்டோட பாத்தப்ப எங்க ரெண்டு பேருக்கும் உயிர் கையில இல்ல… கொஞ்சம் கவனமா இருடா… கேஸை முடிக்கிறதா சொல்லி இன்னொரு தடவை எந்த ஆபத்துலயும் சிக்கிக்காத”

வாசுதேவன் அளித்த அறிவுரைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டவள் டாக்சி கிளம்பியதும் நேரே பொன்மலை காவல் நிலையத்துக்குச் சென்றாள்.

சிறப்பு விசாரணை குழுவின் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் மார்த்தாண்டன் ஏகலைவனை மருத்துவமனையிலிருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அவனது கால்களிலிருந்த தோட்டாக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். கூடவே அவனை விசாரித்து உண்மையைக் கண்டறிய ரிமாண்டில் வைத்திருந்தார்கள்.

ஏகலைவனுக்காக மனுவேந்தன் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில் மனோதத்துவ சிகிச்சையும் அவனுக்கு அளிக்கப்படவிருந்தது. அவனது மனநலம் பற்றிய மருத்துவ அறிக்கைகள் மாஜிஸ்திரேட் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதால் அவரும் மனோதத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்டிருந்தார் அவர்.

“மாத்திரை எல்லாம் கரெக்டா போட்டிங்களா மேடம்?” என்று விசாரித்தபடி வந்து சேர்ந்தார் முரளிதரன்.

“அம்மா கிளம்புறதுக்கு முன்னாடி வாய்ல மாத்திரைய திணிச்சிட்டுத் தான் போனாங்க முரளி சார்” என்று கிண்டலாகச் சொன்னவள் பின்னர் வழக்கு தொடர்பான வேலைகளில் அவருடன் பிசியாகிவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து மார்த்தாண்டன், இன்னும் சில காவலர்களுடன் பொன்மலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டான் ஏகலைவன்.

காலில் இருந்து தோட்டாக்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்த காயங்கள் ஆறும் வரை அவனால் எழுந்து நடமாட இயலாது. எனவே சக்கர நாற்காலியில் வந்து சேர்ந்தான் அவன். விசாரணை அறையில் அவனை இருக்கும்படி பணித்துவிட்டு மார்த்தாண்டன் சிறப்பு விசாரணை குழுவின் அலுவலக அறைக்குள் வந்தார்.

அவரது முகத்தில் ஏகத்துக்கும் கடுப்பு! இதன்யா என்னவென விசாரிக்க அவரோ “இந்த சைக்கோவை நீங்க ஸ்பாட்லயே காலி பண்ணிருக்கணும் மேடம்… இவனைப் பாக்க பாக்க எனக்கு வெறியாகுது… போய் அவன் முகத்தைப் பாருங்க… கொலை, கொலைமுயற்சி, குழந்தைங்களை கடத்துனது, ஃபினான்ஷியல் ஸ்காம்னு எல்லா தப்பையும் செஞ்சுட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம இருக்கான்… எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு என் துப்பாக்கில இருக்குற புல்லட் ஒன்னு விடாம அவன் தலையில இறக்கணும் போல கோவம் வருது மேடம்” என்றார்.

இதன்யா தண்ணீர் பாட்டிலை அவர் பக்கம் நகர்த்தினாள்.

“குடிங்க” அவரும் மறுப்பு கூறாமல் எடுத்து அருந்தினார்.

அதன் பிற்பாடும் அவருக்குக் கோபம் அடங்கவில்லை போல.

“அந்த நிஷாந்த் உங்க கூட தானே குகையில இருந்தான்… அவன் நினைச்சிருந்தா இந்தாளைக் கொன்னுருக்கலாம்… என்னத்த காதலிச்சானோ? காதலி செத்துட்டானா காதலும் செத்துடும்ங்கிற ரகம் போல”

அவர் புலம்பியபடி சென்றுவிட இதன்யாவோ நிஷாந்தைப் பற்றிய உண்மை தெரியாமல் பேசுகிறாரே என்று நினைத்துக்கொண்டாள் மனதிற்குள்ளே.

அந்த மனம் அதோடு விடவில்லை. அன்று குகையில் நிஷாந்த் துப்பாக்கியோடு ஏகலைவனைக் கொல்லும் வெறியோடு நின்ற காட்சியைத் திரைப்படம் போல மீண்டும் ஓட்டிப்பார்த்தது.

முகமெங்கும் வெறியோடு ஏகலைவனை நோக்கி துப்பாக்கியை நீட்டியிருந்தான் நிஷாந்த்.

அவனோ பைத்தியம் பிடித்தவனைப் போல் சத்தமாகச் சிரித்து குகையையே தனது சிரிப்பால் அதிர வைத்துக்கொண்டிருந்தான்.

“சிரிக்காத… இன்னொரு தடவை சிரிச்சனா அதுதான் உன்னோட கடைசி சிரிப்பா இருக்கும்” என்று கத்தினான் நிஷாந்த்.

“இந்த ஏகலைவனுக்கே நீ ஆர்டர் போடுறியா? அது சரி, உன் உடம்புலயும் என் குடும்பத்து இரத்தம் ஓடுதுல்ல… அப்ப திமிர் இருக்க தானே செய்யும்… இவ்ளோ வெறியோட இத்தனை நாள் உனக்கு ஆதரவு குடுத்த என் முன்னாடி நிக்குறளவுக்கு அந்த இனியா உனக்கு முக்கியமாடா? அவ்ளோ உயர்ந்ததா உன் காதல்? வெறும் அல்ப உடம்பு சுகத்துக்கு காதல்னு பேர் வச்சு அதை புனிதப்படுத்த நினைக்குறியா? நீயும் இனியாவும் உண்மையா காதலிக்கவேல்ல… உங்களுக்கு இருந்த செக்ஸ் அர்ஜை தீர்த்துக்க காதல்ங்கிற புனிதமான பேரை யூஸ் பண்ணிக்கிட்டிங்க… வைக்கோல் போரை பாத்ததும் ஒதுங்கிற நாய்கள் மாதிரி காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம வந்து உங்க ஆசைய தீர்த்துக்கிட்டிங்க… இதுவாடா காதல்? இது ப்யூர் காமம்… இன்னொரு வாட்டி நீ இனியாவ காதலிச்சனு சொல்லி சிரிப்பு காட்டாத”

அவனைக் கோபப்படுத்தியபடியே ஒற்றைக்காலை நொண்டியபடி எழுந்து நின்றான் ஏகலைவன்.

தனது காதலை ஏகலைவன் துச்சமாகப் பேசியதை நிஷாந்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கோபத்தோடு துப்பாக்கியை அவனுக்கு நேராகக் குறிவைத்தவனின் கை நடுங்கியது. இதுவரை துப்பாக்கி பிடித்து பழகாத கை அல்லவா! ஆனால் மனதில் நிரம்பியிருக்கும் வெறுப்பு ஏகலைவனைச் சுட்டுத்தள்ள தூண்டியது.

“நிஷா..ந்த்… வே..ண்ட..ஆம்… அவன்… உன்னை… தப்பு… செய்ய தூண்டுறான்” வலித்த தொண்டையைப் பிடித்தபடி இதன்யா விடுத்த எச்சரிக்கைகள் எதுவும் அங்கே எடுபடவில்லை.

நிஷாந்த் துப்பாக்கியின் விசையை அழுத்திய பிறகு அந்தக் குகையே அதிர்ந்தது. ஆம்! அவன் ஏகலைவனைச் சுட்டுவிட்டான்!

இதன்யாவும் ராக்கியும் அதிர்ந்தபோதே அலறலோடு மடிந்து அமர்ந்தான் ஏகலைவன்.

அவன் இன்னும் சாகவில்லை! ஏன் என்றால் நிஷாந்த் குறி தவறி கை நடுங்கி சுட்டது அவனது இன்னொரு முழங்காலுக்குக் கீழே தானே!

காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியை அவரைத் தவிர சாமானியர் யாரும் உபயோகிக்கக்கூடாது. அதுவும் அடுத்தவரைக் காயப்படுத்தும் நோக்கத்தோடு உபயோகிப்பது தவறு!

இந்த ஏகலைவன் தான் கெட்டது மட்டுமன்றி நிஷாந்தையும் கொலை செய்ய முயன்ற பழியில் சிக்க வைத்துவிட்டானே!

இதன்யா சோர்ந்து போன போது வெளியே இருந்து யாரோ உள்ளே வரும் அரவம் மிகவும் மெதுவாகக் கேட்டது.

ஏகலைவன் இரத்தம் அதிகமாக வெளியேறியதால் மயங்கி சரிந்துவிட இதன்யாவோ வேகமாக ஓடிச்சென்று நிஷாந்தின் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டாள்.

“மேடம்…” என்று கோபத்தோடு உறுத்து விழித்தவனை “உஷ்” என்று எச்சரித்தாள் அவள்.

“எதுவும் பேசக்கூடாது நீங்க ரெண்டு பேரும்” அவனையும் ராக்கியையும் அதட்டி வைத்தாள்.

அடுத்த சில நொடியில் குகைக்குள் முரளிதரனும் ஏனைய காவலர்கள் வந்த போதும் நிஷாந்திடம் கண் காட்டி எதையும் உளறிவிடாதே என எச்சரிக்க மறக்கவில்லை அவள்.

மருத்துவமனையில் மார்த்தாண்டனிடம் அவனையும் ராக்கியையும் விசாரிக்கவேண்டாமென கூறக் காரணமும் இதுதான்.

வேலையின்போது உணர்வுகளை ஒதுக்கி ஓரமாக வைத்துவிடவேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுபவளுக்கு இரு இளைஞர்களின் வாழ்க்கை ஒரு சைக்கோபாத்தால் நாசமாகிவிடக்கூடாதென்ற ஆதங்கம்.

நிஷாந்த் ஏகலைவனைச் சுட்டான் என்றால் அது கொலைமுயற்சி! அதுவே இதன்யா செய்தால் தற்காற்பு! யோசித்துப் பார்த்துவிட்டே அன்று நடந்ததை முரளிதரனிடம் கூட அவள் மறைத்துவிட்டாள்.

இதோ ஏகலைவன் வந்தாயிற்று! அவனிடம் விசாரித்து மிச்சமீதி விபரங்களை வாங்க வேண்டியது தான்!

முக்கியமாகப் பிரகதியைக் கொன்றதை மறைமுகமாக ஒப்புக்கொண்டவன் எங்கே கொலை செய்தான்? உடல் எங்கே போன்ற விபரங்களை இன்னும் சொல்லவில்லை.

தேவநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரகதி வழக்கமாகச் செல்லும் இடங்கள், ஏகலைவன் செல்லும் இடங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தேடிச் சலித்தும் பிரகதியின் உடல் கிடைக்கவில்லை.

அவளது உடல் எங்கே என்ற கேள்விக்கான விடையையும் அவன் தானே சொல்லவேண்டும்!

சொல்ல வைக்கிறேன் நான் என முரளிதரனோடு விசாரணை அறைக்குச் சென்றாள் இதன்யா.

அங்கே சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தான் ஏகலைவன். கண்களில் இன்னும் அகம்பாவமோ ஆணவமோ குறையவில்லை. இதழ்களில் ஏளனச்சிரிப்பு வேறு!

அவன் எதிரே அமர்ந்தார்கள் முரளிதரனும் இதன்யாவும்.

“எப்பிடி இருக்கிங்க இதன்யா மேடம்? உங்க குரலுக்கு ஒன்னும் பாதிப்பு இல்லையே? ஏன்னா என்னோட பிடி அந்த மாதிரி”

விசாரணையைக் கவனிக்க அதே அறையில் வீடியோ கேமராவை செட் செய்து கொண்டிருந்த மார்த்தாண்டனுக்குச் சுள்ளென்று கோபம் ஏறியது.

“டேய்” பற்களைக் கடித்துக்கொண்டு இறுகிய முஷ்டியோடு அவனை நெருங்கியவரை அரும்பாடு பட்டு முரளிதரன் தடுத்து நிறுத்தினார்.

“பாருங்க சார்! எவ்ளோ திமிரா பேசுறான்… இவனை மாதிரி ஆளுங்களுக்குலாம் என்கவுண்டர் தான் கரெக்ட்” என்று பற்களைக் கடித்தபடி கூறினார் மார்த்தாண்டன்.

“காம் டவுன் மார்த்தாண்டன் சார்… மிஸ்டர் ஏகலைவன் சக்கரவர்த்தி இன்னும் நான் அவர் கிட்ட சிக்குன இரைங்கிற மாயையில இருக்குறார்.. அந்த மாயையை தெளிய வச்சிட்டா ஒழுங்கா என்கொயரில கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லுவார்” என்றாள் இதன்யா.

அடுத்த நொடி ஏகலைவனை இரக்கம் ததும்பிய விழிகளால் பார்த்தவள் “பாவம் மார்த்தாண்டன் சார் இவரு! சைக்காலஜிக்கலி அஃபெக்டட் பேஷண்ட் கிட்ட இப்பிடி ரூடா பிஹேவ் பண்ணக்கூடாது நீங்க… தனக்கு இருக்குற பாதிப்பு யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுனு திமிர்ங்கிற முகமூடிய போட்டுட்டு இருக்கார்… அதை பெருசா எடுத்துக்காதிங்க” என்று எள்ளல் தொனியில் உரைக்கவும் ஏகலைவனின் அலட்சியம், ஆணவம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போனது.

அவனது முகம் கறுக்க இதன்யா மார்த்தாண்டனை அர்த்தபுஷ்டியோடு பார்த்தாள். அவரும் ஏகலைவனின் இந்தத் தோற்றத்தில் திருப்தியடைந்து வேலையைக் கவனிக்க ஆயத்தமானார்.

முரளிதரன் வீடியோ கேமரா ஆன் ஆனதை உறுதி செய்துகொண்டார். அவரே விசாரிக்கட்டுமென இதன்யா அமைதியாய் இருக்க முடிவு செய்தாள். அவளது தொண்டை காயம் ஆறத் தொடங்கியிருப்பதால் அதிகவேலை கொடுக்கவேண்டாமென்பது ஒரு காரணம் என்றால் ஏகலைவனின் உடல்மொழியைக் கவனிக்க வேண்டியது இன்னொரு காரணம்.

“ஏகலைவன் சக்கரவர்த்தி, உங்களுக்கு சின்ன வயசுல சைக்கோபதி இருந்ததும், நாலு வருசம் ட்ரீட்மெண்ட் எடுத்து அது ஓரளவுக்குக் கட்டுக்குள்ள வந்ததும் மெடிக்கல் ரிப்போர்ட்டை வச்சு தெரிஞ்சுக்கிட்டோம்… உங்க காதலி தேவசேனாவோட மரணம் உங்களுக்குள்ள அழுத்தமான பாதிப்பை உண்டாக்கியிருக்கு… அதனால உங்களுக்கு போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்சார்டர் இருக்குறதா உங்களோட சைக்கியாட்ரிஷ்ட் குடுத்த ரிப்போர்ட் இது… நீங்க மாத்திரை சாப்பிடுறதாவும் அவர் சொன்னார்… வெல்! இது எல்லாமே பல வருடங்களா உங்களுக்கு இருக்குற பிரச்சனைகள்… பட், இத்தனை வருசமா எந்த ஒரு கிரிமினல் ஆக்டிவிட்டிலயும் ஈடுபடாத நீங்க இனியாவைச் சாகுற அளவுக்குக் குத்திருக்கிங்க… ரோஷணை விட்டு அவளை செக்சுவலி அப்யூஸ் பண்ண வச்சிருக்கிங்க…  இந்த குரூரம் உங்களுக்குள்ள திடீர்னு வரக் காரணம் என்ன? ஐ மீன், உங்களுக்குள்ள இத்தனை வருசம் தூங்கிட்டிருந்த சைக்கோபதி திடீர்னு முழிச்சு இனியாவை காவு வாங்க என்ன காரணம்? யார் காரணம்?”

ஏகலைவனின் இதழ்கள் முறுவலில் விரிந்தன.

“தேவா! என்னோட தேவசேனா… அவ தான் காரணம்.. அவ எனக்காக மறுபடி பிறந்து என் கிட்ட திரும்பி வருவாங்கிற எண்ணம் எனக்குள்ள உருவானது தான் காரணம்… அந்த எண்ணத்தை அடிப்படையா வச்சு எனக்குள்ள நான் கட்டுன கற்பனை கோட்டை தான் காரணம்… அது நடக்காதுனு ஆனதும் என்னால தாங்கிக்க முடியல… நீங்க ரொம்ப நாளா ஒருத்தருக்காக ஆசையோட காத்திருப்பிங்க… அவங்களும் வருவாங்க… உங்க கூட நல்லா பழகுவாங்க… ஆனா திடீர்னு இன்னொருத்தருக்கு உரிமையானவங்களா மாறிடுவாங்க… அப்ப உங்களுக்கு வலிக்கும் தானே? எனக்கும் வலிச்சுது… ரொம்ப வலிச்சுது… என் வலிய எது தீர்க்கும்னு யோசிச்சேன்… முள்ளை முள்ளால எடுக்குற மாதிரி வலிய வலி மட்டுமே தீர்க்கும்னு கண்டுபிடிச்சேன்… எனக்கு வலி குடுத்தவளை வலிக்க வலிக்க கொலை பண்ணுனேன்”

இதைச் சொல்லும் போது ஏகலைவனின் கண்களில் அத்துணை குரூரம்! பொறுத்துக்கொள்ள முடியாத இதன்யா அவனிடம் தனது கேள்வியைக் கேட்டாள்.

“உன்னோட கற்பனை, உன்னோட ஏமாற்றம், உன்னோட வலி இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்… அதை பத்தி எதுவும் தெரியாத அப்பாவிப்பொண்ணு இனியா… நீ செஞ்ச கொலைக்கு நியாயம் கற்பிக்க நீ ட்ரை பண்ணுற… அர்த்தமில்லாத கற்பனைய வளக்குறவங்களுக்குக் கிடைக்குற பரிசு ஏமாற்றம் மட்டும் தான்… உன் முட்டாள்தனம், மூடநம்பிக்கை, அர்த்தமில்லாத கற்பனையால ஒரு பொண்ணு உயிரை கொடூரமா எடுத்திருக்க… இதை நியாயப்படுத்துறதை விட்டுட்டு என்ன நடந்துச்சுங்கிறதை சொன்னா நல்லா இருக்கும்… எந்தக் காரணத்துக்காக நீ இனியாவ தேவசேனாவோட மறுபிறப்புனு நம்புன?”

கொதிப்போடு இதன்யா கேட்ட கேள்வியும் அவளது கூற்றும் ஏகலைவன் தனக்குள் உருவாக்கி வைத்திருந்த மாயை எனும் சிலந்தி வலையை துடைத்து எடுத்துவிட அவனது முகத்தில் ஏகப்பட்ட உணர்வு மாற்றங்கள்! தனக்குள் தேவசேனாவின் மறுபிறப்பு பற்றிய அழுத்தமான நம்பிக்கை விதை விழக் காரணமான சம்பவங்களை விவரிக்க ஆரம்பித்தான் ஏகலைவன்.