IIN 80

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

டார்க்வெப் ஹாக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் ஒன்று கூடுமிடம். அங்கே பல தளங்கள் சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை, திருடப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் நிதி விவரங்கள் விற்பனை போன்றவற்றை ஜரூராக நடத்துகின்றன. டார்க்வெப்பிலிருந்து நீங்கள் எந்த ஃபைலையாவது தரவிறக்கம் செய்தால் உங்கள் கணினி வைரஸ், ரான்சம்வேர் தாக்குதலுக்கு உட்படும் சூழலும் உண்டாகும். சில சமயங்களில் பயனர்கள் அவர்களை அறியாமல் டார்க்வெப்பில் சட்டத்திற்கு புறம்பான சில தளங்களைப் பார்வையிடும் வாய்ப்பும் உண்டு. ஏனென்றால் இங்கே சர்ஃபேஸ் இண்டர்நெட் போல வடிகட்டும் முறைகள் இல்லை. சட்டப்படி மற்றும் சட்டத்திற்கு புறம்பான இருவகை செயல்பாடுகளையும் ஒரு தளமோ ஃபோரமோ ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கும். பயனர்கள் ஆர்வக்கோளாறின் காரணமாக சட்டத்திற்கு புறம்பான பக்கங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு அதிகம். அதோடு டார்க்வெப்பில் உள்ள தளங்களில் காணப்படும் இணைப்புகள் எதிர்பாராத பக்கங்களில் நம்மை கொண்டு போய் சேர்க்கும்.

                                                          -From Internet

சோபியா மருண்ட பார்வையோடு இதன்யாவின் முன்னே நின்று கொண்டிருந்தாள். நவநீதமும் கோபாலும் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு துண்டு விடுபடுவதாக எண்ணிய இதன்யாவுக்கு நவநீதம் ஒரு காரியம் செய்கிறாள் என்றால் கட்டாயம் அது ஜானுக்குத் தெரிந்திருக்குமென்ற எண்ணம் உதித்தது.

கடைசியாக ஜானை சிறைச்சாலையில் சந்தித்தபோது கலிங்கராஜன் பற்றிய பேச்சை எடுத்ததும் நன்றி சொல்லும்படி வேண்டி பின்னர் வேண்டாமென அவர் மறுத்த தருணம் நினைவுக்கு வந்தது.

ஒருவேளை முதலாளி மீது கொண்ட விசுவாசத்தால் நவநீதம் கிளாராவை மாட்டிவிட்டு இப்போது மீண்டும் அதே வழியில் பாதிரியாரையும் மாட்டிவிடுகிறாளோ என்ற சந்தேகம் அவளுக்கு. கோபாலும் எஜமான விசுவாசத்தால் அவளுக்கு உதவியிருக்கலாமே!

சாத்தானாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நபராக கலிங்கராஜன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இனியாவின் கொலையில் அவருக்குப் பங்கு இருக்கலாமே என மீண்டும் பழையபடி ஐயம் கொண்டு சோபியாவிடம் விசாரிக்க வந்து நின்றாள்.

ஏனெனில் நவநீதமும் கலிங்கராஜனும் மாறி மாறி அவள் மீது அக்கறை காட்டுவதால் அச்சிறுமிக்கு ஏதேனும் உண்மை தெரிந்திருக்குமோ என்ற ரீதியில் இதன்யாவின் ஐயம் பயணித்தது.

இதன்யாவைப் பார்த்ததும் அடையாளம் தெரியாமல் குழம்பிய சோபியா அவளது பணியைக் குறிப்பிட்டதும் மருண்டு போனாள். வாயை மூடி நின்றவளின் கண்ணில் அவ்வளவு பயம்!

“லுக்! நீ என்னைப் பாத்து பயப்படவேண்டாம்.. உன் கிட்ட சில தகவல்களைக் கேட்டுத் தெளிவாக வேண்டிய அவசியம்… இல்லனா நான் இவ்ளோ தூரம் வந்திருக்கமாட்டேன்” என்றாள் இதன்யா.

“அப்…அப்பாவ பத்தி விசாரிக்கப் போறிங்களா? அப்… அவரு கொலைகாரன்னு… சொல்லி என்னை…”முடிக்க முடியாமல் அழத் தொடங்கினாள்.

ஜான் செய்த தவறின் பலனை அவள் அறுவடை செய்கிறாள் என்பதையே அந்தக் கண்ணீரும் அழுகையும் இதன்யாவுக்கு உணர்த்தியது.

அவளது முதுகில் தட்டி ஆறுதல் படுத்தியவள் “உன் அப்பா செஞ்ச தப்பு பத்தி யாரும் குத்திக்காட்டி உன்னை கிண்டல் பண்ணுறாங்களாம்மா?” என்று கேட்டாள்.

“ஹாஸ்டல்ல நிறைய பேரு…” மீண்டும் அழுகை!

அவள் ‘புல்லியிங்குக்கு’ ஆளாகியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டாள் இதன்யா.

“நான் மதர் சுப்பீரியர் கிட்ட பேசி அந்தப் பொண்ணுங்களை வார்ன் பண்ண சொல்லட்டுமா?”

“இல்ல… வேண்டாம்… அப்புறம் அவங்க என் ட்ரஸ், இன்னர்சை எல்லாம் எடுத்து காம்பவுண்ட் வாலுக்கு அந்தப் பக்கம் வீசிடுவாங்க… கிழிஞ்ச இன்னர்சை போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வர அசிங்கமா இருக்கும் மேடம்… வேண்டாம்”

பதறியடித்துக் கூறினாள் அச்சிறுபெண். போர்டிங் பள்ளிகள், ஹாஸ்டல்களில் புல்லியிங்கின் கொடூர கரம் யாரையும் விட்டு வைக்காது. சில நேரங்களில் அது துன்புறுத்தலில் ஆரம்பித்து உயிருக்கு ஆபத்தாக கூட முடிவதுண்டு. இளம் தலைமுறைக்கு இரக்கம், அன்பு போன்ற உணர்வுகளையும் பாடத்தோடு சேர்த்து புகட்டியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

அதை சில பெற்றோர்கள் செய்ய தவறியதன் விளைவே இப்போது சோபியா சில மாணவிகளின் ‘புல்லியிங்கிற்கு’ ஆளானது!

சோபியா தெளிவானதும் அவளிடம் நவநீதம் பற்றி விசாரித்தாள் இதன்யா.

அவளைப் பற்றி அச்சிறுமி நல்ல விதமாகத் தான் கூறினாள். ஜான் அவளை மணமுடிக்கப் போவதாக மகளிடம் கூறியிருக்கிறார். அதற்குள் தான் ஏகப்பட்ட அனர்த்தங்கள் அரங்கேறி அவர் சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்.

“அப்பா இல்லனாலும் நவநீதம் ஆன்ட்டி எனக்கு வேண்டியதை வாங்கிட்டு வருவாங்க… அதே மாதிரி கலிங்கராஜன் சாரும் வாங்கிட்டு வருவாங்க… ஆனா ஆன்ட்டிக்கு கலிங்கராஜன் சார் கிட்ட நான் பேசுனா பிடிக்காது… அவர் கிட்ட ரொம்ப பேச்சுவார்த்தை வச்சுக்கக்கூடாதுனு சொல்லுவாங்க மேடம்”

கலிங்கராஜனிடம் இந்தப் பெண் பேசினால் நவநீதத்துக்கு என்ன வந்தது?

“சரி! வேற என்னல்லாம் செய்யக்கூடாதுனு சொல்லுவாங்க அவங்க?”

சோபியா கொஞ்சம் தயங்கினாள் பின்னர் “அப்பாவுக்கு ஒருத்தர் கிட்ட இருந்து கால் வரும்.. அவர் கிட்ட இருந்து கால் வந்தாலே அப்பா என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாம எங்கயோ கிளம்பி போயிடுவார்… ஒரு தடவை என் பர்த்டேக்குக் கூட அப்பாவ என் கூட இருக்கவிடாம அந்தாளு கூப்பிட்டுட்டார்… அவரைப் பத்தி கலிங்கராஜன் சார் விசாரிச்சா வாயைத் திறக்கக்கூடாதுனு சொன்னாங்க” என்றாள்.

“ஒவ்வொரு தடவையும் இதை தான் சொல்லுவாங்களா?” சந்தேகமாக இதன்யா கேட்கவும் ஆமென்றாள் சோபியா.

“கலிங்கராஜன் சாருக்கு நல்ல மனசு கிடையாது… அவர் உனக்கு உதவுறதுக்கு பின்னாடி கூட நல்ல மோட்டிவ் இல்ல.. அதனால அவர் உன் கிட்ட உன்னோட அப்பாவை பத்தி விசாரிச்சா கிட்ட அடிக்கடி எதுவுமே சொல்லக்கூடாதுனு ஞாபகப்படுத்திட்டே இருப்பாங்க”

இதன்யா இப்போது குழம்பினாள். அப்படி என்றால் எஜமான விசுவாசத்தில் நவநீதம் பொய் சொல்லவில்லை. அப்படி சொல்பவளாக இருந்தால் ஏன் அவளது தந்தையிடம் அடிக்கடி பேசும் நபரைப் பற்றி கலிங்கராஜனிடம் கூறாதே என்று சோபியாவை அவள் எச்சரித்திருக்க போகிறாள்.                                                                                                                  எஜமானரிடம் விசுவாசம் இல்லை! யாரோ ஒரு நபரைப் பற்றிய இரகசியம் எஜமானருக்குத் தெரிந்துவிடக்கூடாதென்ற எண்ணம்! அப்படி என்றால் அந்த யாரோ ஒருவர் தான் சாத்தான் என இந்தக் கும்பலை ஏமாற்றி மூளைச்சலவை செய்திருக்கவேண்டும்.

“சோபி! உன் அப்பாக்கு அடிக்கடி கால் பண்ணுற ஆள் யாருனு உனக்குத் தெரியுமா?”

சோபியா தெரியாதென தலையசைத்தாள். ஏமாற்றமாக உணர்ந்தாள் இதன்யா. இருப்பினும் அச்சிறுபெண்ணை வற்புறுத்தும் எண்ணமில்லை.

“நீ சொன்ன தகவலுக்கு தேங்க்ஸ் சோபி… யார் உன்னை இனிமே மிரட்டுனாலும் பயப்படக்கூடாது… உன் அப்பா தப்பானவர் இல்ல.. நீ பயந்தனா உன் அப்பா மோசமான ஆளுனு நீயே ஒத்துக்கிறதா அர்த்தம்… யார் உன்னை புல்லி பண்ணுறாங்களோ அவங்களை தைரியமா ஃபேஸ் பண்ணனும்… சரியா? உனக்கு எதுவும் பிரச்சனைனா யோசிக்காம மதர் கிட்ட சொல்லணும்… நான் கிளம்புறேன்” என்று சொல்லி அவளிடமிருந்து விடைபெறப்போனாள்.

சோபியா சரியென தலையாட்டியவள் “நவநீதம் ஆன்ட்டி ஏன் என்னைப் பாக்க வரலனு தெரியல..அவங்களை இந்த வாரம் விசிட்டர்ஸ் டேக்கு வரச் சொல்லுவிங்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

இதன்யாவின் இதயத்தில் பாரம் ஏறியது. குழந்தைகளின் பாசத்தை உணராமல் வெறும் உயிரற்ற பொருட்கள் மீது பேராசை கொண்ட பெற்றோரால் அவர்கள் எந்தளவுக்குப் பாதிப்புக்குள்ளாகிறார்கள்? செலுத்த ஆளின்றி நிராகரிப்படும் அன்பு ஒரு கட்டத்தில் வெறுப்பாக மாறிவிடுமே!

“சரிம்மா… அவங்களை வரச் சொல்லுறேன்” சோபியாவிடம் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பியவள் நேரே மதர் சுப்பீரியரிடம் சோபியாவுக்கு ஹாஸ்டலில் நடக்கும் புல்லியிங் பற்றி மறைக்காமல் கூறிவிட்டாள்.

“அந்தப் பொண்ணோட பாதுகாப்பு இனிமே என் பொறுப்பு… அவளை யாரும் தொந்தரவு பண்ணுனாங்கனா விளைவுகள் மோசமா இருக்கும் மதர்… இதுக்கு மேல என்ன சொல்லணும்னு எனக்குத் தெரியல” என்று இறுகிய குரலில் பேசிவிட்டு வெளியேறினாள்.

சோபியாவிடம் பேசியதில் நிகழ்ந்த ஒரு நன்மை அந்தச் சந்தேகத்துக்குரிய சாத்தான் நபர் கலிங்கராஜன் இல்லை என்ற தகவல் ஊர்ஜிதமானதே!

அப்படி என்றால் அந்நபரைப் பற்றி அறிந்தவர்கள் பட்டியலில் அடுத்து இருப்பவர்கள் ஜானும் முத்துவும்.

முத்து சித்தம் கலங்கியவனைப்  போல பிதற்றுவான் என்பதால் ஜானிடமே அந்நபர் யாரென கேட்டறியும் எண்ணம் கொண்டாள் இதன்யா.

அவசரமாக பாளையங்கோட்டை சிறைச்சாலை அதிகாரியின் எண்ணுக்கு அழைத்து ஜானைச் சந்திக்க ஏற்பாடு செய்து உதவும்படி கேட்டுக்கொண்டாள் அவள்.

வழக்கின் தீவிரம் கருதி அவரும் உதவ முன்வந்தார். அடுத்த சில மணி நேரங்களில் இதன்யாவின் முன்னே அமர வைக்கப்பட்டார் ஜான். போன முறை வந்தபோது அவரிடம் தென்பட்ட அலட்சியமான உடல்மொழி இப்போது இல்லை.

இதன்யா அங்கே வரும்போதே எப்படியாவது ஜானின் வாயிலிருந்து உண்மையை பிடுங்கிவிடவேண்டும் என்ற முடிவோடு தான் வந்தாள்.

“எப்பிடி இருக்கிங்க ஜான்?” நலம் விசாரிப்பது போல மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.

“ஏதோ இருக்கேன் மேடம்… நவநீதம் பத்தி ஜெயிலர் சார் சொன்னதுலாம் உண்மையா?” என்று பதிலுக்குக் கேட்டார் ஜான்.

இதன்யா நேரடியாகப் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.

“உண்மைய ரொம்ப நாள் மறைச்சு வைக்க முடியாதுல்ல ஜான்… நீ, முத்து, நவநீதம் எல்லாரும் மறைச்ச உண்மை கடைசில வெளிய வந்துடுச்சு… இன்னும் ரெண்டு நாள்ல இனியா கேஸோட உண்மையான குற்றவாளி அரெஸ்ட் ஆகப்போறான்.. கிளாரா ரிலீஸ் ஆகப்போறாங்க… நவநீதம் உனக்குத் துணையா ஜெயிலுக்கு வந்துடுவா… பட் உனக்கு சோபியா பத்தி கவலை வேண்டாம்… அவளை நான் பாத்துக்குறேன்… எவ்ளோ பெரிய உண்மைய சொல்லி இந்தக் கேஸை முடிக்க ஹெல்ப் பண்ணிருக்கா உன் பொண்ணு… அவளுக்காக நான் இதை கூட செய்யலனா எப்பிடி?”

மகள் ஏதோ உண்மையைக் கூறிவிட்டாள் என்றதும் ஜானின் முகத்தில் பயம் பரவியது. கண்கள் கலங்க நாசி விடைக்க உடல் நடுங்கியது ஜூரம் வந்தவனைப் போல.

“என் மக… உண்மைய சொல்லிட்டா…ளா? அவ… நிஜமா..வே சொல்லிட்டாளா?” பயத்தில் நடுங்கிய குரலில் கேட்டார் ஜான்.

இதன்யா ஆம் என்றாள்.

உடனே ஓவென அழுதபடி நெடுஞ்சாண்கிடையாக இதன்யாவின் காலில் விழுந்தார் ஜான்.

“ஏய் என்ன பண்ணுற?” என இதன்யா பதற அவரோ அவளது காலை விடவில்லை.

“உண்மை வெளிய வந்துச்சுனா என் மகளைக் கொன்னுடுவேன்னு அவன் சொல்லிருக்கான் மேடம்… என் மகளைக் காப்பாத்துங்க… உங்களுக்கு உதவுனவளைக் கைவிட்டுடாதிங்க மேடம்… என் மகளைக் காப்பாத்துங்க… நான், நவநீதம், முத்து மூனு பேரும் அவன் ஆட்டிவச்ச மாதிரி ஆடுனதுக்குலாம் காரணம் சோபியா உயிரோட இருக்கணும்னு தான்… இப்ப அவளே அவ உயிருக்கு உலை வச்சிட்டாளே… என் மகளைக் காப்பாத்துங்க”

காலைப் பிடித்து கதறினார் ஜான்.

“யார் கிட்ட இருந்து காப்பாத்தணும்?”

“ஏகலைவன் கிட்ட இருந்து… அந்த சாத்தான் ஏகலைவன் என் பொண்ணு உயிரைக் குடிச்சிடுவான்… இனியா உயிரைக் குடிச்ச மாதிரி… என் மகளைக் காப்பாத்துங்க மேடம்”

ஜான் இங்கே கதறியபோது பொன்மலையில் மார்த்தாண்டன் தடயவியல் சோதனை ஆய்வாளர் சொன்ன செய்தியை விசாரணை குழுவினரிடம் முழுவதுமாகச் சொல்லியிருந்தார். அங்கிருந்த யாரும் அச்செய்தியைக் கேட்டு அதிரவில்லை.

விசாரணை ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஏகலவைன் தன்னை ‘பெர்ஃபெக்ஷனிஸ்டாக’ காட்ட முயன்றது விசாரணை குழுவினரை ஒருவித சந்தேகத்தில் ஆழ்த்தியிருந்தது தானே!

இதோ இப்போது ஆதாரமே கிடைத்துவிட்டது!

“க்ளவுசஸ் ரெண்டு இருந்துச்சுல்ல, அதுல ரெண்டு விதமான ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கிடைச்சிருக்கு… அதுல ஒன்னு ரோஷணோடது… இன்னொன்னு மிஸ்டர் ஏகலைவனோடது”

அதிகாரி சொன்னது மீண்டும் மீண்டும் ஒலித்தது மார்த்தாண்டனின் செவிகளில்.

முரளிதரனின் தொண்டை செருமல் அனைவரது கவனத்தையும் கலைத்தது.

“சோ இனியாவைக் கொலை பண்ணுனது ஏகலைவன்… ஆனா நவநீதம், கோபால், ஃபாதர் பவுல் மூனு பேரும் அவனைக் காட்டிக் குடுக்கல… ஃபாதர் பவுல் ஒரு படி மேல போய் ரோஷண் மேல கொலைப்பழி விழுந்துடக்கூடாதுனு ஆதாரங்களை ஒளிச்சு வச்சதாவும், கிளாரா மேல பழி போட்டு வழக்கை திசை திருப்பச் சொன்னதாவும் விசாரணைல பொய் சொல்லிருக்கார்… தன்னை அரெஸ்ட் பண்ணுனா இந்த ஆதாரம் எல்லாம் சிக்கும்னு தெரிஞ்சும் அவர் என் கிட்ட பொய் சொல்லிருக்கார்னா எந்தளவுக்கு ஏகலைவன் இவங்களைப் பயமுறுத்தி வச்சிருக்கான் பாருங்க… இதன்யா மேடம் காட்டுன ரிப்போர்ட்ஸ்படி அவனுக்குச் சின்ன வயசுல சைக்கோபதிங்கிற சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் இருந்திருக்கு… இனியாவை அவன் கொலை பண்ணுனதுக்கான காரணம் என்னனு இவங்க கிட்ட கேட்டாலும் கிளிப்பிள்ளை மாதிரி சொன்ன பொய்யையே திருப்பிச் சொல்லுவாங்க… வீ ஹேவ் டூ அரெஸ்ட் ஹிம் அட் எனி காஸ்ட்… எனக்குத் தெரிஞ்ச கான்ஸ்டபிள் ஒருத்தரை வச்சு புரொபசர் தேவநாதன் வீட்டைக் கண்காணிச்சதுல ஏகலைவன் அங்க இருந்து கிளம்புனதா தகவல் கிடைச்சிருக்கு.. அங்க இருந்து நேரா அவன் ஹோட்டலுக்குப் போனதா கான்ஸ்டபிள் சொன்னார்”

“அப்ப ஹோட்டல் நிர்வாகத்துக்குக் கால் பண்ணுனா ஏகலைவன் இன்னும் எத்தனை நாள் அங்க தங்குவான்னு தெரிஞ்சிடுமே சார்… நம்ம அந்த ஜுரிஸ்டிக்சன்ல உள்ள போலீஸோட ஹெல்பை கேக்கலாமா சார்?” என மார்த்தாண்டன் கூறவும்

“இப்ப ஏகலைவன் அந்த ஹோட்டல்லயும் இல்ல” என பதில் வந்தது முரளிதரனிடமிருந்து.

“என்ன சார் ஒரே குழப்பமா இருக்கு?” மகேந்திரன் சலித்துக்கொள்ளவும்

“ஹோட்டலுக்குப் போன அந்தாளு அடுத்த அரைமணி நேரத்துல ஹோட்டலை வெகேட் பண்ணிட்டு மறுபடி ஏர்போர்ட் போயிருக்கான்… கான்ஸ்டபிள் கடைசியா பாத்தப்ப அவன் டாக்சில இருந்து இறங்கி ஏர்போர்ட்டுக்குள்ள போயிருக்கான்” என்றார் முரளிதரன்.

“ஒருவேளை சிங்கப்பூருக்குப் போன பிரகதியை ஃபாலோ பண்ணி அந்தாளும் போயிருப்பானோ?” மார்த்தாண்டன் தனது சந்தேகத்தை எழுப்ப

“உங்க சந்தேகம் உண்மையா இருந்தா பிரகதியோட உயிருக்கு ஆபத்து… ஏகலைவன் மேல நிஷாந்துக்கே சந்தேகம்னு தெரிஞ்சதும் தான் நான் எனக்கு வேண்டிய ஆளை வச்சு தேவநாதன் வீட்டை கண்காணிக்கச் சொன்னேன்… அதுல நமக்கு உருப்படியா சில தகவல்கள் கிடைச்சிருக்கு… அடுத்து சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டிக்குக் கால் பண்ணி அங்க இருந்து கிளம்புற சிங்கப்பூர் ஃப்ளைட்ஸ் பேசஞ்சர் லிஸ்டுல ஏகலைவன் நேம் இருக்கானு செக் பண்ணச் சொல்லுங்க மார்த்தாண்டன்… ஏகலைவன் சிங்கப்பூர் ரீச் ஆகுறதுக்குள்ள எம்பசி மூலமா சிங்கப்பூர் போலீசை காண்டாக்ட் பண்ணி அவனை ஏர்போர்ட்லயே மடக்கிடலாம்” என்றார் முரளிதரன்.

அந்த வேலையைப் பார்க்க மார்த்தாண்டன் சென்றுவிட இதன்யாவோ சிறைச்சாலையில் ஜானிடம் தகவல்களைக் கேட்டறியும் முயற்சியில் இறங்கியிருந்தாள்.