IIN 8

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மாட்ரிட் பல்கலைகழகத்தில் உளவியல் ஆய்வு மாணவியான அன்னா சான்ஸ் கார்சியா தனது சகமாணவர்களோடு இணைந்து பதினோராயிரம் நபர்களை வைத்து உளப்பிறழ்வுக் குறைபாடு பற்றிய பகுப்பாய்வு ஒன்றை 2021ல் மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் பெண்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களிடமும் உளப்பிறழ்வுக் குறைபாடான சைக்கோபதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதை வலியுறுத்தியிருந்தார் அன்னா சான்ஸ் கார்சியா. பிபிசிக்கு அவர் கொடுத்த பேட்டியில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களை விட குறைவாகவே வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். இருப்பினும் அக்குறைபாடு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் உறவுகளையும் பாதித்ததற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன என்றார் அன்னா சான்ஸ் கார்சியா.

         -An article from BBC

பொன்மலை…

இனியாவின் மரணத்துக்குப் பிறகு யாரும் காட்டுப்பாதைக்குப் போகவே பயந்தார்கள். சும்மாவே காட்டுப்பாதை பக்கம் தான் ரோஷணின் கல்ட் குழுவினரின் கூட்டம் நடைபெறும் என்ற வதந்தி பரவியிருந்ததால் பகலில் அந்தப் பக்கம் போகிறவர்கள் கூட இரவில் செல்லத் தயங்குவார்கள்.

இனியாவின் மரணம் பகலில் கூட அங்கே யாரையும் போகவிடாமல் செய்துவிட்டது. போதாக்குறைக்கு சடலத்தை அங்கிருந்து கைப்பற்றிய நாளிலிருந்து காவல்துறையினர் மோப்பநாயை வைத்துக்கொண்டு அங்கே ஏதேனும் ஆதாரம் சிக்குமா என தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டதும் ஒரு காரணம்.

குறிப்பிடும்படி எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மோப்பநாய்களுடன் காட்டுக்குள் போய் பார்க்கலாமா என்ற விவாதமும் காவல்துறையில் நடைபெறாமல் இல்லை.

அந்தக் காட்டுக்குள் நரி, ஓநாய் போன்ற விலங்குகள் பகலிலேயே நடமாடும் என்றார்கள் ஊரார். முதலில் உதவி ஆணையர் கமலேஷ் அதை நம்பாமல் மோப்பநாயாடு ஒரு குழுவை அனுப்பிவைத்தார்.

சிறிது நேரத்தில் நாய் மட்டும் பயந்து ஊருக்குள் வந்தது. அதை அழைத்துச் சென்ற குழுவினரில் ஒருவரைக் படுகாயத்தோடு சில மணி நேரம் கழித்து தூக்கி வந்தார்கள் ஏனையவர்கள்.

“நரியும் ஓநாயும் நடமாடுற காட்டுக்குள்ள போகாதிங்கனு சொன்னமே சார்… உங்க கிட்ட பொய் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப்போகுது?” என பாதிரியார் பவுல் அங்கலாய்க்க அந்த காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் குழுவினர்.

இவ்வளவு ஆபத்தான மிருகங்கள் இருக்கும் காட்டிற்குள் கொலைகாரன் போயிருக்க வாய்ப்பில்லை, அதோடு தாங்கள் தேடியவரைக்கும் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என மோப்பநாய் குழு கூறிவிட்டது.

இருப்பினும் மார்த்தாண்டன் மனம் கேட்காமல் மூன்று நாட்கள் தொடர்ந்து காட்டுப்பாதையில் ஏதேனும் ஆதாரம் சிக்குமா என அலசிப் பார்க்க வைத்தார். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

அதோடு மோப்பநாய் குழுவினர் போய்விட்டாலும் மக்களுக்குக் காட்டைப் பற்றிய பயம் மனதில் நிரந்தரமாக உறைந்துவிட்டது.

காட்டுப்பாதைக்கு அருகே சக்கரவர்த்தி தேயிலை தோட்டம் இருப்பதால் அங்கும் இப்போதெல்லாம் வேலைநேரத்தை சூரியன் மறைந்த பிறகு நீட்டிக்காமல் சுருக்கிவிட்டார்கள்.

இரவு ஷிப்டில் சி.சி.டி.வி கண்ட்ரோல் அறைக்குச் செல்லும் ராக்கி அதனால் சீக்கிரம் வேலைக்குக் கிளம்ப ஆயத்தமானான்.

அண்ணன் கைதாகி சிறையில் இருக்கிறான் என கவலைப்பட்டுக்கொண்டு மூலையில் முடங்கிவிட்டால் படிப்புச்செலவுக்கு என்ன செய்வதென நிதர்சனத்தை யோசித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டான் அவன்.

அன்றும் அப்படி போகும்போது நிஷாந்த் எதிர்பட்டான். அவனைப் பார்த்ததும் ராக்கி பேச முற்பட நிஷாந்தோ வெறுப்போடு அவனைக் கடந்து போனான்.

“நிஷாந்த் நில்லுடா”

பின்னால் ஓடிப்போய் அவனை நிறுத்தினான் ராக்கி.

“எதுக்கு என் பின்னாடி ஓடி வர்ற?” எதிரியைப் பார்ப்பது போன்ற பாவனை அவனது முகத்தில். அதைக் கண்டதும் ராக்கியின் சோர்ந்து போனான்.

“எனக்கு இனியாவோட கொலையில எந்தச் சம்பந்தமும் இல்லடா… நீயாச்சும் நம்பு”

சக்கரவர்த்தி தேயிலை தோட்டத்திலிருந்து மார்த்தாண்டன் ராக்கியைக் காவல் வாகனத்தில் இழுத்துச் சென்ற தினத்திலிருந்து ஊருக்குள் சிலர் இனியாவைக் கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடித்திருக்கிறான் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

பாதிரியார் பவுலின் வேண்டுகோள் காரணமாக ஏகலைவன் அவனை வேலையிலிருந்து துரத்தவில்லை. நிஷாந்தோடு ராக்கி நன்றாகப் பழகுவான்.

முருகன் கோவிலுக்குத் தைப்பூச திருவிழா வரும்போது ஊர்க்கார இளைஞர்களோடு சேர்ந்து பொறுப்பாக எல்லா வேலைகளையும் கவனிப்பார்கள் இருவரும். போதாக்குறைக்கு ஒரே கல்லூரி, ஒரே படிப்பு வேறு.

ராக்கி மீது நிஷாந்துக்கு எப்போதுமே பரிதாப உணர்வு உண்டு. எனவே நண்பனின் அண்ணனுக்காக மாமாவிடம் பேசி வேலை வாங்கிக் கொடுத்திருந்தான். அண்ணன் வழிமாறி சாத்தானிசத்தைப் பொன்மலையில் நிறுவத் துடித்தபோது மனம் நொந்து நிஷாந்திடம் ஏகத்திற்கும் புலம்பியிருக்கிறான் ராக்கி.

இருப்பினும் அவனுக்கென இருக்கும் ஒரே ஒரு இரத்தச்சொந்தம் ரோஷண் தானே! ஒரேயடியாக வெட்டிவிடமுடியாமல் தவிப்போடு அண்ணனின் மூடத்தனத்தைச் சகித்துக்கொண்டான் ராக்கி.

நிஷாந்துக்கு ராக்கியிடம் பேசத் தோன்றவில்லை. காரணம் இனியாவது புத்தியோடு பிழைத்துக்கொள் என ஏகலைவன் கொடுத்த அறிவுரை.

“உன்னை நான் நம்பலனா உனக்கு என்ன இழப்புடா? தயவு பண்ணி என்னை உன் ஃப்ரெண்டுனு வெளிய சொல்லாத… உன்னை மாதிரி என்னால போலீஸ் கேஸ்னு அலைய முடியாது ராக்கி… உன் கூட பழகுனா என்னையும் போலீஸ் சந்தேகப்படுவாங்க… எங்கம்மாக்கு என்னை விட்டா வேற யாருமில்ல… ப்ளீஸ் இனிமே என்னைப் பாத்தாலும் யாரோ மாதிரி போயிடு”

முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்த நிஷாந்தை தவிப்போடு பார்த்தபடி நின்றான் ராக்கி.

அதே நேரம் காவல் நிலையத்தில் அவனது அண்ணன் ரோஷணை மார்த்தாண்டன் உண்மையைக் கண்டறியும் சோதனைக்குச் செல்ல தயாராகச் சொன்னார்.

முந்தைய தினம் சூப்பிரண்ட் ஆப் போலீஸ் உண்மை கண்டறியும் சோதனைக்கான அனுமதியைக் கொடுத்திருந்தார்.

அந்தச் சோதனைக்காக ‘சென்ட்ரல் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபரட்டரியிலிருந்து’ அதிகாரிகள் வந்திருந்தார்கள். மாஜிஸ்திரேட்டின் முன்னே இச்சோதனை நடைபெறவிருக்கிறது.

ரோஷண் மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடுபவன். ராக்கியிடம் அந்த மாத்திரையைக் கொண்டு வரச் சொல்லும்படி கான்ஸ்டபிளிடம் சொல்லியிருந்தான். ராக்கி அன்றிரவு கொண்டு வருவதாகக் கூறியிருந்தான்.

சோதனையை முடித்துக்கொண்டு வந்ததும் மாத்திரை உன் கையிலிருக்கும் என்று சொல்லி அவனைக் கிளப்பினார் மார்த்தாண்டன்.

காவலர்கள் பாதுகாப்போடு ஜீப்பில் ஏற்றப்பட்டவன் சோதனை நடைபெறும் இடத்தில் மாஜிஸ்திரேட் முன்னே ஆஜர் படுத்தப்பட்டான்.

சோதனை ஆரம்பிக்கும் முன்னர் அவன் ஒப்புதல் கையொப்பமிட வேண்டும். மகேந்திரன் அதை வாங்கிக்கொள்ள உண்மை கண்டறியும் சோதனையில் முதல் சோதனையான ‘பாலிகிராஃபிக் டெஸ்ட்’ செய்வதற்கான கருவி பொருத்தப்பட்ட இருக்கையில் ரோஷண் அமர வைக்கப்பட்டான்.

அவன் உடலில் சில சென்சார்கள் பொருத்தப்பட்டன.

பாலிகிராஃபிக் டெஸ்டில் குற்றவாளியிடம் நூறு கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் சாதாரணமாக இருப்பதை விட பொய் சொல்லும்போது உடலில் நிகழும் மாற்றத்தை பாலிகிராஃபிக் கருவி பதிவு செய்யும்.

அந்த மாற்றங்கள் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, வியர்வை, அவர்கள் பேசும் போது உடலில் ஏற்படும் அசைவுகளை வைத்து கணக்கிடப்படும். ஒரு கட்டத்தில் உண்மையை மறைக்க எண்ணினாலும் குற்றவாளி அகப்பட்டுக்கொள்வார்.

ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. மனவலிமை மிக்கவர்களால் கட்டாயம் இச்சோதனையில் எந்தப் பதற்றமும் உடல்ரீதியான மாற்றமும் இன்றி பொய் சொல்ல முடியும்.

மார்த்தாண்டனோ மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடும் ரோஷண் கட்டாயம் மனவலிமைமிக்கவனாக இருக்கமுடியாதென அழுத்தமாக நம்பினார்.

பாலிகிராஃபிக் சோதனையும் ஆரம்பித்தது. ஒன்றன் பின் ஒன்றாக கேள்விகள் கேட்கப்பட்டன. ரோஷணின் குடும்பம், பெற்றோர், தம்பி, சாத்தானிசம் பற்றிய நம்பிக்கை, அவனது குழுவில் யாரெல்லாம் உள்ளார்கள், குழுவின் கூட்டம் எங்கே நடைபெறுமெ என பொதுவான கேள்விகளோடு சில உள்ளர்த்தம் கொண்ட கேள்விகளும் விரவியிருந்தன.

அவன் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல சொல்ல மார்த்தாண்டனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“இனியாவ ஏன் கொலை பண்ணுன?” என்ற கேள்வி வந்ததும் “நான் கொல்லலை” என்றான் அழுத்தமாக.

மார்த்தாண்டனின் முஷ்டி இறுகியது.

“எங்க வச்சு அவளைக் கொலை பண்ணுன?”

“நான் அவளைக் கொல்லலை”

“அவ மேல உனக்கு என்ன விரோதம்?”

“அவ என்னை ஒரு தடவை ரொம்ப அவமானப்படுத்திட்டா”

“அதுக்காக கொலை பண்ணுனியா?”

“நான் அவளைக் கொலை பண்ணலை”

“உனக்கு உடந்தையா இருந்தவன் யாரு?”

“எனக்கு யாரும் உடந்தை இல்லை”

“உன் தம்பி ரக்‌ஷனும் நீயும் சேர்ந்து இனியாவ கொலை பண்ணுனிங்களா?”

“அவன் ஒரு பிள்ளைப்பூச்சி… என் கிட்ட பேசவே பயப்படுவான்… அவனுக்குக் கொலை பண்ணுற அளவுக்குத் தைரியமில்ல”

“கலிங்கராஜனும் அவரோட ஒய்ப் கிளாராவும் உனக்கு உடந்தையா இருந்தாங்களா?”

“என் கல்ட் குரூப்ல இருந்து பாதில விலகுன துரோகிங்க அவங்க”

கேள்விகள் முடிந்தன.

அடுத்து இரண்டாவது சோதனையான ‘நார்கோ அனாலிசிஸ்’ சோதனை ஆரம்பித்தது.

நார்கோ அனாலிசிஸ் சோதனையின் போது குற்றம் செய்தவராகக் கருதப்படும் நபருக்கு மருத்துவர்கள் மயக்க மருந்தைச் செலுத்துவார்கள். அவர் அரைத்தூக்கத்தோடு மயக்கநிலையில் இருக்கும்போது குற்றம் தொடர்பான கேள்வியைக் கேட்பார்கள்.

ரோஷணுக்கும் மருந்து செலுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவனது பார்வை மங்கலாகி அரைத்தூக்கத்திற்குப் போனான்.

இப்போது மீண்டும் இனியாவின் மரணம் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன.

ஏன் இனியாவைக் கொலை செய்தான்? ஏன் பொன்மலையிலிருந்து கொண்டே சென்னையிலிருப்பதாகப் பொய் சொன்னான்? யார் அவனுக்கு உடந்தை? என அதிகாரிகள் துளைத்து துளைத்துக் கேட்டதில் அவன் சொன்ன பதில்கள் மார்த்தாண்டனை மீண்டும் குமுற வைத்தன.

“நான் இனியாவ கொல்லலை…. அவளைக் கொன்னது சாத்தான்… அந்தச் சாத்தானோட பசிக்கு அவ இரையாயிட்டா”

“சாத்தான் தான் என்னைப் பொய் சொல்ல வச்சுது… நான் பொன்மலையில இருக்குறதா சொன்னா என் தம்பி ராக்கியை கொன்னுடுவேன்னு சாத்தான் மிரட்டுனதால நான் பொய் சொன்னேன்”

“நான் கொலை பண்ணல… சாத்தான் தான் கொலை பண்ணுச்சு… அதுக்கு யாரும் உடந்தை இல்ல… அது ரொம்ப சக்திவாய்ந்தது… யாரோட உதவியும் அதுக்குத் தேவைப்படாது”

நார்கோ அனாலிசிஸ் சோதனையும் முடிந்து மருந்தின் வீரியம் இறங்கினாலும் இன்னும் அரைமயக்கத்தில் இருந்தான் ரோஷண்.

இந்த வழக்கின் தீவிரத்தன்மை கருதி ஒரே நாளில் சோதனையின் முடிவுகள் வந்துவிடும் என்றார்கள் அதிகாரிகள்.

ரோஷணை அழைத்துக்கொண்டு மீண்டும் பொன்மலை காவல் நிலையத்துக்குக் கிளம்பினார்கள் மார்த்தாண்டனும் இதர காவலர்களும்.

காவல் நிலையத்திற்கு வந்ததும் அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் ஒரு இளைஞன்.

“யாருய்யா இவன்?”

“சக்கரவர்த்தி டீ எஸ்டேட் கூலியாள் சார்… ரோஷணோட தம்பி ராக்கிக்கு ஏதோ முக்கியமான வேலை வந்துருச்சாம்… அதான் இவன் கிட்ட மாத்திரையைக் குடுத்து அனுப்பிருக்கான்”

மார்த்தாண்டன்  அந்த இளைஞனை சந்தேகமாகப் பார்த்தார்.

“உன் பேரு என்ன?”

“செங்கோடன் சார்”

“ஏன் ராக்கி வரல?”

“அந்த தம்பி கிளம்புறப்ப மேனேஜர் வந்து கேமரா பத்தி ஏதோ கேட்டாரு சார்… அதான் என் கிட்ட மாத்திரையை குடுத்து விட்டுச்சு”

மாத்திரை அடங்கிய பையைக் கொடுத்தான் அவன்.

ரோஷணை அதை வாங்கும்படி பணித்தவர் வாங்கிக்கொண்டதும் அவனை லாக்கப்பில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.

கவரை நீட்டும் போதே “சாத்தான் உன் நேரம் முடிஞ்சுதுனு சொல்ல சொன்னாரு” என்று கண்கள் நிலைகுத்த சொன்னவனை ரோஷண் அரைமயக்க அதிர்ச்சியோடு பார்த்தான்.

“வரேனுங்க சார்”

செங்கோடன் கிளம்பிவிட ரோஷணோ வியர்வை ஆறாய் பெருக லாக்காப்புக்குள் அடைக்கப்பட்டான்.

“ஏன் உனக்கு வேர்க்குது?” லாக்கப் கதவைப் பூட்டிய கான்ஸ்டபிள் கேட்டார்.

“மா… மாத்திரை போடலனா வேர்க்கும் சார்” என்றான் அவன்.

அவனுக்குத் தண்ணீர் கொடுத்தார் அவர்.

தண்ணீரைக் குடித்து மாத்திரையை விழுங்கியவனுக்குச் சிறிது நேரத்தில் ஏதேதோ ஞாபகங்கள் கண்களுக்குள் வட்டமாக விரிந்தன.

சிறிது நேரத்தில் மாத்திரையின் வீரியத்தில் கண்கள் சொருக அமர்ந்திருந்தவனின் விரல்கள் மாத்திரை கவருக்குள் கட்டைவிரல் நீளத்துக்கு இருந்த வஸ்துவை வருடின.

“சாத்தான் உன் நேரம் முடிஞ்சுதுனு சொன்னாரு”

கண்களை இமைக்காமல் பெரிய குரலில் கத்தினான் செங்கோடன்.

இவன் லாக்கப்புக்குள் எப்படி வந்தான்? கொஞ்சம் கொஞ்சமாக செங்கோடனின் உருவம் மறைந்து அவன் கண்ணுக்கு இனியா தெரிய ஆரம்பித்தாள்.

முகத்திலிருந்த தோல் எல்லாம் உரிந்து முன்தலையிலிருந்த கூந்தலை இழந்து உடலெங்கும் இரத்தம் வழிய கோர ரூபமாக நின்றவள் தன்னைப் பார்த்து சிரிப்பதைப் போல தோன்றியது ரோஷணுக்கு.

“இனியா”

அவன் தன் போக்கில் பேசுவதை புகாரைத் தட்டச்சு செய்துகொண்டிருந்த ரைட்டர் பார்த்தார்.

கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து “என்ன கனகு, அந்த ரோஷண் தன்னந்தனியா புலம்பிக்கிட்டு இருக்கான்… லை டிடக்டிங் டெஸ்டுல மாட்டிப்போம்னு பயத்துல அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சோ?” கிண்டலாகச் சொல்ல

“அவன் டிப்ரசனுக்கு மாத்திரைக்குச் சாப்பிடுறான்… சில மாத்திரை மருந்து எடுத்துக்கிட்டா அப்பிடி தான் யாரோ கூட இருக்குற மாதிரியே தோணும்… அவனுக்கு யார் கூட இருக்குற மாதிரி தோணுதுனு தெரியல” என்றார் கான்ஸ்டபிள். அவர்கள் இருவரும் தன்னைக் கிண்டல் செய்வதைப் பற்றிய அறிவின்றி கண்களில் மருட்சியோடு “இனியா” என்றான் ரோஷண் மீண்டும்.