IIN 62

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் மற்றும் MAOI போன்றவை தீவிரமான பக்க விளைவுகளை உருவாக்கும். ஆனால் தீவிரமான மனப்பிறழ்வு குறைபாடு கொண்டவர்களுக்கு அவையே சரியான மருந்துகளாகும்.

                       -From the website of National Institute of Mental Health

ஏகலைவனின் தோட்டத்தில் கடுப்போடு நுழைந்த இதன்யாவின் பார்வை அவன் ஆசையாக வளர்க்கும் ராமபாண கொடியின் மீது படிந்தது. மனித உயிர்களின் மதிப்பறியாதவனுக்கு அந்தக் கொடி மீது மட்டும் அப்படி என்ன அபிமானம்?

வந்த கோபத்திற்கு விறுவிறுவென கொடியின் அருகே போனவள் “மேடம் என்ன பண்ணுறிங்க?” என்று கோபால் ஓடி வருவதற்கு முன்னர் தன் கைகளால் செழுமையாகப் படர்ந்து மொக்குகளும், மொட்டுகளுமாக பசும் இலைகளோடு வளர்ந்திருந்த ராமபாண கொடியைப் பிய்த்தெறியத் தொடங்கினாள்.

தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற தாவரவியல் உண்மை எல்லாம் அப்போது அவளது மூளைக்கு உறைக்கவில்லை.

முதலில் என் உயிருக்கு உலை வைத்தவன், எனக்கு உதவிய குடும்பத்தைக் கொல்லப் பார்த்தானே என்ற கோபம் தான் அவளைச் செயலாற்ற வைத்தது.

அவளால் சிதைக்கப்பட்ட கொடியின் இலைகள் புல்தரையெங்கும் சிதறிக் கிடக்க இன்னும் அடித்தண்டு மிச்சமிருக்கும் கோபம் அவளுக்கு. சுற்றி முற்றி பார்த்தவள் சீரின்றி வளர்ந்திருக்கும் புதர்களை வெட்டி ஒழுங்குபடுத்தும் பெரிய கத்தரிக்கோல் புல்தரையில் கிடக்கவும் அதை எடுத்துக்கொண்டாள்.

கோபால் அவளைத் தடுக்க எடுத்த முயற்சிகள் யாவும் வீணாகிவிட இதன்யாவோ கடுங்கோபத்தோடு ராமபாண கொடி இருந்த சுவடு இல்லாமல் அழிக்கும் வெறியோடு அதன் அடித்தண்டை வெட்ட ஆரம்பித்தாள்.

அவளுக்கு இருக்கும் கோபத்திற்கு தடுக்க முயன்றால் கத்தரிக்கோல் கொடியின் அடித்தண்டுக்குப் பதிலாக தனது கழுத்தில் பாயும் என பயந்த கோபால் வேறு வழியின்றி ஏகலைவனை அழைக்க பங்களாவை நோக்கி ஓடினார்.

அவர் போய் சில நொடிகளில் உள்ளே இருந்து கடுங்கோபத்தோடு வந்தான் ஏகலைவன். தனது பிரியத்துக்குரிய ராமபாண கொடியை அழித்துக்கொண்டிருப்பவளை வெறியோடு நெருங்கியவன் “ஏய்” என்று கர்ஜித்தபடி அவளைப் பிடித்து இழுத்தான்.

அவனது உடல்பலத்திற்கு முன்னால் இதன்யாவால் சமாளிக்க முடியாமல் போக அவளும் தடுமாறினாள்.

ஏகலைவன் அவள் கையிலிருந்த கத்தரிக்கோலைப் பிடுங்கி புல்தரையில் எரிந்தவன் அங்கே சிதறிக் கிடந்த இலைகளையும், இதன்யாவின் புண்ணியத்தால் குற்றியிராகி நின்ற ராமபாண கொடியின் அடித்தண்டையும் இரத்தக்கண்ணீரோடு பார்த்தான்.

கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, அவனது கரமோ முஷ்டியாய் இறுகிப்போனது. கீழே குனிந்து இலைகளை அள்ளியவன் நிமிர்ந்த போது அவனது கலங்கிய கண்களில் செவ்வரி ஓடியது.

கடுஞ்சினத்தோடு இதன்யாவை நெருங்கியவன் அவளது கழுத்தில் கை வைத்து நெறிக்கப் போக அதற்குள் அவள் சுதாரித்து அவனது கையை அதிவேகத்தில் தட்டிவிட்டாள்.

“கோவம் வருதா உனக்கு? மனுச உயிரை அல்பமா நினைச்சு எடுக்கத் துணிஞ்சப்ப சந்தோசமா இருந்துச்சுல்ல? ஆப்டர் ஆல் ஒரு கொடியை பிய்ச்சு எறிஞ்சதுக்கு உனக்கு இவ்ளோ வலிக்குது, என்னை ஹாஸ்பிட்டல் பெட்ல பாத்தப்ப என் பேரண்ட்சுக்கு இப்பிடி தானே வலிச்சிருக்கும்? இன்னைக்கு ரசூல் பாயோட ஃபேமிலிக்கும் இப்பிடி தானே வலிச்சிருக்கும்? வலினா உனக்கு மட்டும் சொந்தமான உணர்வுனு எண்ணமா? மத்த எல்லாரும் ஜடமா? யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட் ஏகலைவன் சக்கரவர்த்தி… அண்ட் யூ சேலஞ்ச்ட் மீ பை யுவர் கவர்ட்டிஷ் அசாசினேசன் அட்டெம்ட்ஸ்”

ஏகலைவன் பதிலளிக்காமல் அதீத கோபத்தோடு அவளை உறுத்து விழித்தான்.

“வெறும் கொடிய அழிச்சதுக்கு இவ்ளோ கோவமும் வெறுப்பும் வருது உனக்கு… இதே கோவமும் வெறுப்பும் தானே நீ கொலை பண்ணுன கொல்லணும்னு நினைச்சவங்களோட குடும்பத்து ஆளுங்களுக்கும் இருக்கும்? உன்னை நான் ரொம்ப குறைச்சு எடை போட்டுட்டேன்… இனியா கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறமும் நான் இங்க வந்ததுல உனக்கு ஏதோ பிரச்சனை… நீ என்னைக் கொலை பண்ண எடுத்த முயற்சிக்குப் பின்னாடி கூட வேற ஏதோ காரணம் இருக்கு… அது ஃபெயிலியர் ஆனதும் எனக்கு ஹெல்ப் பண்ணுனவங்களோட சேர்த்து என்னைக் கொல்ல நீ ரெண்டாவது தடவை முயற்சி பண்ணிருக்க… அன்னதான சாப்பாட்டுல விஷம் கலந்து அனுப்பி வைச்சிருக்க… சீ! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்… உன்னோட ஒவ்வொரு செயலும் என் சந்தேகத்தை அதிகமாக்குது… உனக்கும் இனியா மர்டருக்கும் ஏதோ ஸ்ட்ராங்கான கனெக்சன் இருக்கு… அது வெளிய தெரியக்கூடாதுனு நீ ஏகப்பட்ட வேலை செஞ்சிருக்கனு மட்டும் புரியுது… உன்னோட ஒவ்வொரு சீக்ரேட்டையும் உடைச்சு இனியா கேஸ்ல எந்தச் சட்டத்தை நீ ஏமாத்துனியோ அதே சட்டத்துக்கு  முன்னாடி நான் உன்னைக் குற்றவாளியா நிறுத்துவேன்… மார்க் மை வேர்ட்ஸ்”

பழிவெறியோடு சொல்லிவிட்டு கோபம் அடங்காதவளாக ராமபாணிக்கொடியின் அடித்தண்டை எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் இதன்யா.

செல்பவளையே பார்த்தபடி நின்றான் ஏகலைவன். அவனுக்கு இதன்யா மீதிருக்கும் வெறுப்புக்கு அவளைத் தான் இரையாக்க நினைத்தானே தவிர ரசூல் பாய் குடும்பத்துக்கு விஷம் வைக்கும் எண்ணமெல்லாம் அவனுக்குக் கிடையாது.

யாரோ இதன்யாவை வைத்து அவனைப் பழிவாங்க துடிக்கிறார்கள். அது யாராக இருக்குமென அவன் கண்டறிந்தே ஆகவேண்டும்.

ஏகலைவன் இவ்வாறு தீர்மானித்த நேரத்தில் இதன்யாவோ மீண்டும் மருத்துவமனையில் இருந்தாள். ரசூல் பாய்க்கு சிகிச்சை முடிந்திருந்தது. அஸ்மத்திடம் இனி பயப்பட வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அவர் கொஞ்சம் தெளிவாகியிருந்தார். இதன்யாவைக் கண்டதும் மருத்துவர் கூறிய தகவலைப் பகிர்ந்தார்.

இதன்யாவோ அனைத்தையும் தலையாட்டிக் கேட்டுக்கொண்டாளேயொழிய பதில் பேசவில்லை. அவள் இறுகிய முகத்தோடு ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

முதலில் என் கழுத்துக்குக் கத்தி வந்தது. அதில் எப்படியோ பிழைத்துவிட்டேன். இப்போது எனக்கு உதவியவரின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கிறது. ஒருவேளை இது எனக்கு வைக்கப்பட்ட குறியாக இருந்தால்?

அப்படித் தான் இருக்கவேண்டுமென்றது அவளது மனம். இந்தக் கொலைமுயற்சியின் பின்னே இருப்பவன் ஏகலைவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. அவனது கட்டளையன்று விஷம் வைக்கும் அளவுக்கு அவன் முட்டாள் இல்லை. அதே நேரம் தனது தேயிலைத்தோட்டத்திற்கு வரும் லாரியை வைத்தே தன்னைக்  கொல்லத் திட்டமிட்டவனும் அவன் தானே!

உன்னால் என்னை எதுவும் செய்யமுடியாதென்ற அதிகாரவெறியின் அடையாளம் அந்த லாரி கொலை முயற்சி. அதே போல ஏன் இம்முறையும் அவன் செய்திருக்கக்கூடாது?

நான் தான் செய்தேன், உன்னால் என்னை என்ன செய்துவிடமுடியுமென்ற ஆணவம்! அந்த ஆணவத்தை அடித்து நொறுக்கும் கோபம் இதன்யாவுக்குள் ஏறியது.

அதே நேரம் இனியும் தன்னால் ரசூல் பாயின் குடும்பத்தில் எந்தக் கலகமும் வருவதில் அவளுக்கு இஷ்டமில்லை. அவள் தனித்திருப்பதே அவளுக்கும் நல்லது, அவளை நேசிப்பவர்களுக்கும் நல்லது. இதன்யா தனக்குள் இதை ஒரு சங்கல்பமாக எடுத்துக்கொண்டு அடுத்து என்ன செய்யவேண்டுமென சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்.

அன்று மாலையே ரசூல் பாய்க்கு நினைவு திரும்பியது. அஸ்மத் அல்லாவுக்கு நன்று கூறினார். முபீனா தந்தையைக் கண்ணீரோடு பார்த்துவிட்டு இதன்யாவின் அருகே வந்து அமர்ந்தாள்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் அவள் சிலையாய் சமைந்திருப்பதை முபீனா அங்கே வந்ததும் அஸ்மத் கூறினார்.

“எதுக்காக இப்பிடி இருக்கிங்க அக்கா? அப்பாக்குக் கான்சியஸ் வந்தாச்சு… பிரச்சனை சால்வ் ஆகிடுச்சு”

இல்லை என்பது போல தலையசைத்தாள் இதன்யா. முபீனா குழப்பமாகப் பார்த்தாள்.

“இன்னும் எதுவும் சால்வ் ஆகல முபீ… சால்வ் ஆனதா நினைச்சு நம்மளை நாமளே சமாதானப்படுத்திக்கிறோம்… ஏமாத்திக்கிறோம்”

“அக்கா?”

இதன்யா தலையை உலுக்கிக்கொண்டு எழுந்தாள்.

“நான் கலிங்கராஜனை மீட் பண்ணிட்டு வந்துடுறேன் முபீ”

ஏதோ முடிவு செய்தவளாக சாந்திவனத்தை அடைந்தாள்.

கலிங்கராஜன் திருவிழாவில் நடந்த கலவரங்களை அறிந்ததும் பாளையங்கோட்டைக்குக் கிளம்ப ஆயத்தமானவர் இதன்யாவைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ஏதோ பேயைப் பார்த்தவர் போல அவர் அச்சம் கொள்வதைக் கண்டு இதன்யாவுக்குள் ஐயம் முகிழ்த்தது.

“வண..க்க்..கம் மேடம்”

“நான் உங்க கிட்ட எந்தத் தகவலும் கேக்க வரல சார்… ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்… நீங்க டென்சன் ஆகவேண்டிய அவசியமில்ல”

கலிங்கராஜன் சற்று நிதானித்தார்.

“நான் உங்களுக்கு என்ன உதவி பண்ணனும் மேடம்?”

“என்னோட சஸ்பென்சன் பீரியட் முடியற வரைக்கும் நான் இந்த ஊருல தங்கி ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தேன்… ரசூல் பாய் வீட்டுலதான் நான் ஸ்டே பண்ணிருக்கேன்… அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்… இன்னைக்கு ரசூல்பாய் வீட்டுக்கு வந்த அன்னதான சாப்பாட்டுல விஷம் கலந்திருந்ததும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்… பாயை காப்பாத்தியாச்சு… ஆனா இனிமே நான் அவங்களோட தங்குறதா இல்ல… அந்த விஷம் கலந்த சாப்பாடு என்னை டார்க்கெட் பண்ணி அனுப்பிவைக்கப்பட்டுச்சு… பாவம், ரசூல் பாய் அதுல மாட்டிக்கிட்டார்… இனிமே என்னால யாரோட உயிருக்கும் ஆபத்து வர்றதுல எனக்கு விருப்பமில்ல சார்… முருகையாவோட வீடு காலியா தானே இருக்கு.. நான் அங்க தங்கிக்கலாம்னு யோசிக்குறேன்”

கலிங்கராஜன் கொஞ்சம் யோசித்தார்.

“யோசிக்காதிங்க.. அங்க தங்குறதுக்கான ரெண்ட் எவ்ளோவோ அதை உங்களுக்கு அனுப்பிடுறேன்” என்றாள் அவள்.

“வாடகை எல்லாம் பிரச்சனை இல்ல மேடம்… இனியாவோட கேஸ் முடிஞ்சுடுச்சு… இன்னும் நீங்க எந்த உண்மைய தெரிஞ்சிக்கணும்னு துடிக்குறிங்க? அதனால உங்களுக்கு என்ன யூஸ்? நீங்க சென்னைக்குத் திரும்பிப் போயிடலாமே மேடம்… ஏன் இங்க இருந்து உங்க உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, உங்களுக்கு உதவுறவங்க லைஃபையும் கேள்விக்குறியாக்குறிங்க?” என படபடத்தார் மனிதர்.

இதன்யா புருவம் சுருக்கி சந்தேகப்பார்வை பார்க்கவும் சட்டென வாயை மூடிக்கொண்டார்.

“முருகையா வீட்டுல நான் தங்க முடியுமா முடியாதா? மிஸ்டர் ஏகலைவன் மாதிரி நீங்களும் நான் இங்க இருந்து போகணும்னு அவசரப்படுற மாதிரியே தோணுதே… நான் இங்க இருக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” அழுத்தமாக வினவினாள் அவள்.

சற்று தடுமாறியவர் “முருகையா வீட்டு சாவி என் கிட்ட தான் இருக்கு மேடம்.. நான் எடுத்துட்டு வர்றேன்” என்று பங்களாவுக்குள் சென்றுவிட்டார்.

இதன்யா சுற்றுமுற்றி பார்த்தவள் சாந்திவனத்தின் வாயில் கேட்டின் அருகே ஒரு பெண்ணின் நிழல் தெரியவும் இகழ்ச்சியாக உதட்டை வளைத்தாள்.

“ஒட்டு கேட்டது போதும் நவநீதம்” உரத்தக் குரலில் அவள் கூறவும் நிழலுக்குச் சொந்தக்காரியான நவநீதம் வாயில் கேட்டின் அருகே வந்து நின்றாள்.

இதன்யாவைக் கண்டதும் விதிர்விதிர்த்துப்போனாள் அவள்.

“இங்க வா” இதன்யா அழைக்கவும் நடுக்கத்தோடு அவளருகே வந்தாள்.

“நீ எப்ப இருந்து ஒற்றர்வேலை பாக்க ஆரம்பிச்ச?” என்று அவள் கேட்கவும் “இல்லங்க மேடம்” என சமாளிக்க வந்தவளின் கன்னத்தில் பளாரென்ற அறை விழுந்தது.

அறைந்தவள் இதன்யாவே தான்.

நவநீதம் அதிர்ந்துபோனாள்.

“உன் முதலாளிக்காக இப்ப தான் வேலை பாக்குறியா? இல்ல முன்னாடி இருந்தே வேலை பாத்துட்டிருக்கியா? இன்னொரு தடவை முந்திரிக்கொட்டைத்தனமா ஏதாச்சும் செஞ்சு என் கிட்ட மாட்டுனனா உன்னை அவ்ளோ ஈசியா விடமாட்டேன்… கிளம்பு இங்க இருந்து”

இதன்யா கொடுத்த அறையும் அவளது எச்சரிக்கையும் நெஞ்சை உறையச் செய்யவும் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டாள் நவநீதம்.

அவள் போய் சில நிமிடங்களில் அங்கே வந்தார் கலிங்கராஜன். அவரது கரங்களில் முருகையா வீட்டின் சாவி இருந்தது. அதை இதன்யாவிடம் கொடுத்தவர்

“உங்களை நான் என்னோட சிஸ்டரா நினைச்சு சொல்லுறேன், முடிஞ்ச எதையும் தோண்டி எடுக்க நினைக்காதிங்க.. அது யாருக்கும் நல்லது இல்ல… லீவை எஞ்சாய் பண்ணிட்டு சஸ்பெண்சன் முடிஞ்சதும் டியூட்டில ஜாயின் பண்ணுங்க… என் மக இறந்துட்டா… அவளைக் கொன்னவங்க யாருனு சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனையும் வாங்கி குடுத்துட்டிங்க… யூ ஹேவ் டு கான்சென்ட்ரேட் ஆன் யுவர் லைஃப் நவ்… இதுக்கு மேல உங்க இஷ்டம்” என அறிவுரை சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினார்.

அவர் போனதும் இதன்யாவும் அங்கிருந்து வெளியேறிவிட ஏகலைவனின் வீட்டுக் காவலாளி வந்து சாந்திவனத்தைப் பூட்டினார்.

அதே நேரம் ஏகலைவனின் முன்னே தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள் நவநீதம். அவளது கன்னங்களில் இதன்யாவின் கைவண்ணம் சிவப்புத்தடமாகப் பதிந்திருந்தது.

“சோ கலிங்கராஜன் அவளுக்கு அட்வைஸ் பண்ணுனார்… ஆனா அவ கேக்குற மாதிரி இல்ல… முருகையாவோட வீட்டுல இனி தங்கப்போறா, அதானே?”

“ஆமா சார்”

“அவ எப்பிடியும் போகட்டும், எங்கயும் தங்கட்டும்… ஆனா இன்னொரு தடவை அவ கால் இந்தப் பங்களா தோட்டத்துக்குள்ள அடியெடுத்து வைக்கக்கூடாது…. அப்பிடி வச்சுதுனா வீட்டுல இருக்குற சர்வெண்ட் யாரையும் நான் சும்மா விடமாட்டேன்… உன்னையும் சேர்த்து”

நவநீதம் அச்சத்துடன் நிற்க கத்தித் தீர்த்த பிறகும் கோபம் அடங்காதவனாக ஏகலைவன் கூண்டுப்புலியாக அந்தப் பங்களாவின் ஹாலில் உலாவினான். தனக்கும் இதன்யாவுக்கும் இடையே பகையை உண்டாக்கும் நபர் யாரென அறியும் வெறி அவனுக்குள்!